Sunday, January 03, 2016

தேய்பிறைக் கோலம் !

அற்றைத் திங்கள்
அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறா தேன்கடலில்
முத்தெடுத்தோம் !
சுற்றி வந்தோம்
சொர்க்கப் படகில் !
வசந்த காலம் !
வளர்பிறைக் கோலம் !
கட்டினோம் நீள் பாலம்
கடல் அலை மீது !

எமக்குள் இருந்த
ஒற்றுமை வேர்களைப்
பற்றிக் கொண்டு
பழங்கதை பேசினோம் !
பாடினோம் ! ஆடினோம் !
படமெடுத்து நெஞ்சில் சூடினோம் !
விடியும் வரை
கனாக் கண்டோம் !
மண்ணில் கால் படாது,
விண்ணில் மிதந்தோம் !
தாகம் மிகுந்து
மோகத் தேன் குடித்தோம்!

சிப்பிக்குள் முத்துண் டானது !
ஒப்புடன்
விதியின் ஆணையில் முடியும்,
அதிசயத் திருமணம்!
தேனிலவில் குளித்து,
சொர்க்க புரிச் சிகரம் ஏறி
இறங்கும் போது தேனீ கொட்டி
தர்க்க புரியில்
தடம் வைத்தோம் !
முழு நிலவின் கருமை ஒளி
பழுதாக்கும்
கிழித்து எம் நெஞ்சை !

நேற்று மறைந்த
வேற்றுமை விழுதெல்லாம்
மூர்க்க மாய்த் தாக்கின
முறிந்தது பாலம் !
சேயி ழைக்குக் காயம் !
நாயக னுக்குப் பெருங் காயம் !
தேய்பிறை மாயம் !
இற்றைத் திங்கள்
இவ்வெண் ணிலவில்
முற்றுப் புள்ளி  முளைக்கும் !
அத்த மிக்கும் வானில்
தொத்தி எழும்
கரு நிலவு !

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...