1. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் குடும்ப, கல்விப் பின்னணி உள்ளிட்டு எமது
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
என்னுடைய முழுப்பெயர் லறீனா
அப்துல் ஹக். பிறப்பிடம் மாத்தளை. என்னுடைய தாயார் பௌசுல் ஹினாயா.
மாத்தளை ஃபர்வீன் என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில்
பல தொடர்கதைகளை எழுதியுள்ளார். 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியில்
பங்குபற்றி எப்போதும் முதல் பரிசைத் தட்டிக்கொண்டு
வருவார். நல்ல இனிய குரல்வளம் அவருக்கு. அவரைப் பின்பற்றி, என்னுடைய 9 வயதில் பிரபல
அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் தயாரித்தளித்த 'பாட்டுக்குப்
பாட்டு' போட்டியில் நானும் பங்குபற்றி இரண்டாம் பரிசு பெற்றமை ஓர் இனிய ஞாபகம்தான்.
என்னுடைய தந்தை கலகெதர எம்.
எம். ஏ. ஹக் பயிற்சிபெற்ற ஆங்கில ஆசிரியராகவும் பின்னர்
அதிபராகவும் கடமையாற்றினாலும், சிங்கள சினிமாத்துறையின் பிரபல
இசையமைப்பாளராயும் இருந்தவர். 'சுஜீவா', 'சுனேத்ரா', 'சூகிரி கெல்ல', 'கீதா', 'ஒபய் மமய்' என்பன அவர்
இசையமைத்த திரைப்படங்கள். ஜோதிபாலவின் விருதுபெற்ற பிரபல பாடலான
'சந்தன எல்லென் நாலா' பாடல்
என்னுடைய தந்தையின் இசையமைப்பில் உருவானதே! என்னுடைய தாயாரின் தந்தை ஓர் இந்தியர். திருநெல்வேலிக்காரர். சித்த
வைத்தியராய் இருந்த அவர், கர்நாடக சங்கீதத்தில்
குறிப்பிடத்தக்க பயிற்சி உடையவராய் இருந்தவர். அவருடைய கம்பீரக்
குரலில், 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, செல்வக்களஞ்சியமே!' என்ற பாரதி
பாடலைக் கேட்டு அனுபவிப்பது ஒரு சுகானுபவம்தான்.
இந்தப் பின்னணிதான் என்னை எழுத்து மற்றும் கலைத்துறைகளில் ஈடுபடுத்தியது
எனலாம்.
என்னுடைய ஆரம்பகால எழுத்து
மற்றும் கலை முயற்சிகளில் பத்தனையூர் வே. தினகரன் அண்ணா, மாத்தளைக்
கமால் ஆகியோரின் காத்திரமான விமர்சனங்கள், உதவிகள்
முறையே என்னுடைய எழுத்துக்களைக் கூர்மைப்படுத்தவும், கலைத்
திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் பெரிதும் உதவியுள்ளன
என்பதையும் நன்றியோடு நினைவுகூர்கின்றேன்.
என்னுடைய கல்விவாழ்வைப் பொறுத்தவரையில், நான் மாத்தளை
ஆமினா மகளிர் தேசியக் கல்லூரியில் பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரை
கல்வி கற்றேன். என்னுடைய திறமைகளை வளர்த்தெடுத்த அன்னை, ஆமினா மகளிர் கல்லூரியே என்பதை நெகிழ்ச்சியோடு
நினைவுகூர்கின்றேன். 2002 பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
பி.ஏ. தமிழ் சிறப்புப் பட்டதாரியானதோடு, 2004 வரை
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், 2007 வரை
மொழிபெயர்ப்புக் கற்கைகளிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.
அண்மையில் சிங்கள-தமிழ் ஆக்க இலக்கிய
மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் தொடர்பாக முதுதத்துவமாணிப்பட்ட (MPhil) ஆய்வுக்
கட்டுரையை எழுதிச் சமர்ப்பித்துவிட்டேன். தற்போது கலாநிதிப்
பட்டப் படிப்பைத் தொடங்கும் பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.
எனக்குத் திருமணமாகிவிட்டது.
கணவர் முஹம்மத் ஃபிர்தௌஸ். ஒரு மகன், ஒரு மகள் என
இரண்டு குழந்தைகள். மிகுந்த புரிந்துணர்வும்
கல்விப் பின்புலமும் உள்ள கணவரின் குடும்பத்தினர் என் உயர்கல்விக்கும், கலை இலக்கிய
முயற்சிகளுக்கும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்குகின்றமை
அல்லாஹ்வின் பேரருள் என்றே எண்ணுகின்றேன்.
2. எந்த மாதிரியான விஷயங்கள் உங்களை தொடர்ந்து எழுதத் தூண்டின?
சமூகத்தில் அன்றாடம் காணும், மனதைப் பாதிக்கும் விடயங்களே என்னை எழுதத் தூண்டின எனலாம்.
ஆரம்பத்தில் வெறுமனே காதல் கவிதைகளையும் கதைகளையும்
எழுதிக்கொண்டிருந்த என்னை, சமூகப் பிரச்சினைகள்
குறித்து எழுதத் தூண்டியவர் சகோதரி ஜென்னத் நிஸாம் அவர்கள். எழுத்து ஓர்
அருட்கொடை/ ஓர் அமானிதம். அதனைச் சரியான விதத்தில், சமூகத்துக்குப்
பயன்தரும் விதத்தில் பயன்படுத்துவது நம் கடமை என்று அவர் அடிக்கடி
நினைவூட்டுவார்.
3. உங்களுடைய கவிதைகளில் எதனைப் பதிவு செய்திருக்கிறீர்கள்?
பொதுவாக சமூக அவலங்களையும், குறிப்பாகப் பெண்ணின் அகம் சார்ந்த உணர்வுகள், அவர்கள்
எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்பவற்றையுமே
என்னுடைய கவிதைகளிலும் சிறுகதைகளிலும் பதிவுசெய்ய முயன்றுவருகின்றேன்.
தவிர, மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும்
ஈடுபட்டு வருகின்றேன்.
4. பொதுவாகவே பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களைத் தொடர்ந்து விமர்சிக்கும் போக்கு
இருக்கிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதற்குக் காரணம் நமது சமூக
மனநிலைதான் என்று தோன்றுகின்றது. ஆண்கள் எழுதும்போது சாதாரண
விடயமாகக் கருதப்படும் ஒரு விடயத்தை ஒரு
பெண் எழுதும்போது அது சர்ச்சைக்குரியதாகக் கருதப்படுகின்றது. இதனைப் 'பெண்' சார்ந்த சமூக
மதிப்பீட்டில் உள்ள குறைபாடென்றும் கொள்ளலாம். அதாவது, பெண்ணின் 'பொருள்வெளி'யை
நிர்ணயிக்கும் உரிமையை ஆண் மேலாதிக்க சமூகம்
தன்வயப்படுத்திக்கொள்ள விழைவதன் எதிரொலியாகவே நான் இதனைப் பார்க்கின்றேன்.
மாறாக, ஆணோ பெண்ணோ தனது கருத்தை, தான்
சரியென்று நம்பும் ஒன்றை வெளிப்படுத்தப் பூரண சுதந்திரம் உண்டு என்ற
புரிதல் பரவலாக வேண்டும்.
இதில், குறிப்பிட்ட
ஒரு கருத்து சமூக நீதியை, அதன்
விழுமியங்களைப் பாதிக்கும் என்று கருதப்படுமிடத்து, அதற்கான மாற்றுக் கருத்து இங்கிதமான, கண்ணியமான
முறையில் முன்வைக்கப்படல் வேண்டும். ஆனால், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளம்
போன்ற நாடுகளில் அப்படியான கருத்துக்கள், குறிப்பாகப்
பெண்களின் கருத்துக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன
என்பதை நாமறிவோம். கருத்துக்கான எதிர்வினை மற்றொரு கருத்து என்ற
நிலையைத் தாண்டி, தனிநபர் தாக்குதலாகவோ, அவதூறாகவோ, உயிர் அச்சுறுத்தலாகவோ திசைமாறி விடுகின்றது. இத்தகைய
நேர்மையற்ற நடைமுறைகள், ஒரு குறித்த
கருத்தைச் சர்ச்சைக்குரியதாகவும் மிகுந்த பிரபலம் உடையதாகவும் பூதாகாரப்படுத்துகின்றது. அதை எதிர்ப்போர், தூக்கிப்
பிடிப்போர் எனக் கட்சிகள் கிளம்பி, அக்கருத்தே
ஓர் அரசியலாக்கப்பட்டு விடுகின்றது. இது ஆரோக்கியமானதல்ல.
கருத்தொன்றை எதிர்கொள்ளுதல்
என்ற விடயத்தில் நம்மில் அனேகர் மிக மோசமான
சர்வாதிகாரிகளாய், ஜனநாயக விரோதிகளாய்
இருப்பது துரதிருஷ்டவசமானதே!
5. இன்றைய புதிய எழுத்தாளர்கள், கவிஞர்களின் வருகை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்ல விஷயம்தான். புதிய ரத்தம், புதிய விஷயங்கள், புதிய
பரிசோதனை முயற்சிகள், புதிய போக்குகள் என்பன இலக்கியத்தை வளப்படுத்துவது வரவேற்கத்தக்கதுதான், இல்லையா?
6.
இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கியப் போக்கு பற்றி நீங்கள்
யாது கூறுவீர்கள்?
ஆரோக்கியமான நிலையில்
இருப்பதாகவே கருதுகின்றேன். என்றாலும் தொடர்ச்சியான
பங்குபற்றுதலும் அனேகர் நின்று நிலைப்பதும்
இன்னுமின்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய அவா. ஆரம்ப
காலங்களில் நன்றாக எழுதிவரும் பலர் திருமணம், குடும்பப்பொறுப்பு என்று வந்ததும் படிப்படியாகப் பின்வாங்கி மறைந்து
போவது மிகுந்த வருத்தம்தரும் கசப்பான யதார்த்தம். தவிர, இலங்கையின்
பெண் எழுத்தாளர்களின் முயற்சிகளும் பணிகளும் ஒரே
இடத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை ஆகும்.
ஊடறு, பெண்ணியம் முதலான தளங்களின் பணி
இதுதொடர்பில் விதந்துரைக்கத்தக்கது. இன்ஷா அல்லாஹ், என்னுடைய ‘நிலாப்பெண்’
இணைய தளத்திலும் இந்த ஆவணப்படுத்தும் பணியைத் தொடர்ந்து செய்ய
உத்தேசித்துள்ளேன்.
7.
இலக்கியப் பணியினூடாக எதனைச் சாதிக்க வேண்டும் என்று
விரும்புகிறீர்கள்?
சாதனை போன்ற பெரிய வார்த்தையைப்
பேசும் அளவுக்கு நான் இன்னும் எதுவும் செய்துவிடவில்லை.
என்றாலும், இலங்கை போன்றதொரு பன்மைத்துவ
சமூக ஒழுங்கில் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்பும்
வகையிலான சமூக மாற்றத்தில் ஒரு துளியளவேனும் பங்குகொள்ள முடியுமானால், அதுவே நான்
செய்த பெருந்தவம் எனக் கொள்வேன், இன்ஷா அல்லாஹ். எனக்கு மொழிபெயர்ப்புத் துறையில் அதிக ஈடுபாடு
வருவதற்கு இந்த எண்ணம் மிக முக்கியமான
ஒரு காரணமாகும்.
8. சிறுவர் இலக்கியத்திற்காகவும் பங்களிப்புக்களைச் செய்துள்ளீர்கள். அதுபற்றிக்
குறிப்பிடுவீர்களா?
ஆரம்ப காலத்தில் அகில இலங்கை
இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட வருடாந்த
பரிசளிப்புப் போட்டிகளுக்காக சிறுவர் இலக்கியப்
படைப்புக்களை ஆக்கத் தொடங்கினேன். அந்த வகையில், சிறுவர் கதை, சிறுவர் பாடல், குறள் தரும்
கதை என ஓவியங்கள் வரைந்து வர்ணந்தீட்டிய இலக்கியப்
பிரதிகளைத் தயாரித்ததுண்டு. இன்ஷா அல்லாஹ் அவற்றைப் பதிப்பிக்கும்
எண்ணமும் உண்டு.
இதுதவிர, 'ஒரு
தீப்பிழம்பும் சில அரும்புகளும்' என்ற
என்னுடைய குறுநாவல், சிறுவர் இலக்கியமாக இல்லாவிட்டாலும், சிறுவர்களின்
பலதரப்பட்ட பிரச்சினைகளை உள்ளடக்கி எழுதப்பட்டதாகும்.
9.
இதுவரை நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக்
குறிப்பிடுங்கள். எதிர்காலத்தில் வேறு புத்தகங்கள் வெளியிடும் எண்ணம் உண்டா?
எனது நூல்கள்:
1. எருமை மாடும்
துளசிச்செடியும் (சிறுகதைத் தொகுதி) – 2003
2. வீசுக புயலே! (கவிதைத் தொகுதி) – 2003
3. தமிழ்மொழியும் இலக்கியமும்: சில சிந்தனைகள் (ஆய்வுக்கட்டுரைத் தொகுதி) 2003
4. ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் (நாவல்) 2004
5. செ. கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (ஆய்வுநூல்) – 2004
6. மௌனத்தின் ஓசைகள் - மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி 2008
7. வார்த்தைகளின் வலி தெரியாமல்... - சமூகவியல் கட்டுரைகள் 2012
8. 'பொருள் வெளி' ஆய்வுக் கட்டுரைத் தொகுதி 2012
2. வீசுக புயலே! (கவிதைத் தொகுதி) – 2003
3. தமிழ்மொழியும் இலக்கியமும்: சில சிந்தனைகள் (ஆய்வுக்கட்டுரைத் தொகுதி) 2003
4. ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் (நாவல்) 2004
5. செ. கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (ஆய்வுநூல்) – 2004
6. மௌனத்தின் ஓசைகள் - மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி 2008
7. வார்த்தைகளின் வலி தெரியாமல்... - சமூகவியல் கட்டுரைகள் 2012
8. 'பொருள் வெளி' ஆய்வுக் கட்டுரைத் தொகுதி 2012
இவை தவிர, 'நம்
அயலவர்கள்' எனும் சிறுகதைத்
தொகுதிக்காக 5 சிங்களச் சிறுகதைகளைத்
தமிழிலும், 'அசல் வெசி அப்பி' எனும்
சிங்களச் சிறுகதைத் தொகுதிக்காக எஸ். ரஞ்சகுமாரின் 'கோளறு பதிகம்' சிறுகதையை
(தம்மிக்க ஜயசிங்ஹ என்பாருடன் இணைந்து) சிங்கள மொழியிலும் மொழியாக்கம்
செய்துள்ளேன்.
மேலும், ஆங்கிலத்திலிருந்து
தமிழில் உரைகள், கட்டுரைகளை
மொழிமாற்றம் செய்துள்ளேன். 'சிங்கள மொழியில் தமிழ்மொழியின் செல்வாக்கு' எனும் எனது
மொழிபெயர்ப்பு நூலை வெளியிடும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளேன். பிரபல சிங்கள எழுத்தாளர் மஞ்சுள வெடிவர்தனவின் 'பத்தலங்குண்டுவ' நாவல்
மொழிபெயர்ப்பினைத் தற்போது ஆரம்பித்துள்ளேன். அத்துடன், 'தென்றலிலே' எனும்
பெயரில் என்னுடைய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு ஒன்றை
வெளியிடும் உத்தேசம் உண்டு. அந்த இசைத்தட்டில் இடம்பெறவுள்ள, நான் இயற்றி, மெட்டமைத்து, இசையமைத்துப்
பாடிய இரண்டு பாடல்கள் http://www.nilapenn.com/ தளத்தில்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
10. தற்போது வலைப்பூக்கள், இணையத்தளங்கள், முகநூல் போன்றவை இளைய சமூகத்தினரிடம் பெரும் செல்வாக்கு செலுத்துவதைக் காணக் கூடியதாக உள்ளது. இது தொடர்பில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இணையம் என்பது மிகப் பெரியதொரு வரப்பிரசாதம். சமூக வலைதளங்கள் என்பன
கருத்துருவாக்கம், கலந்துரையாடல்கள் என்பவற்றுக்கான மிகப்பெரிய வெளியாகக் காணப்படுகின்றன.
என்றாலும், இவற்றின் பயன்பாடு
தொடர்பிலான காத்திரத்தன்மை இன்னும் அதிகரிக்கப்படல் வேண்டும் என்பதே என்னுடைய
அவதானமாகும். குறிப்பாக, அக்கப்போர்களும் தனிநபர் தாக்குதல்களும் அங்கேயும் இருக்கத்தான் செய்கின்றன.
அவை தவிர்க்கப்படல் வேண்டும்.
நமது பெண்கள் கவிதை, கதை
முதலானவற்றைத் தத்தமது வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர். தமக்கான
களத்தைத் தாமே உருவாக்கிக்கொள்ளுதல் என்ற வகையில், இது ஒரு
முன்னேற்றகரமான நிலையே! ஆனால், பெண்களில் அனேகர் முகநூலிலும்
தமது வலைதளங்களிலும் அழகழகான புகைப்படங்கள், தையல்
பின்னல் வேலைப்பாடுகள், அழகு-ஆரோக்கிய-சமையல்
குறிப்புகளை அதிகம் பதிவேற்றுகிறார்கள்/ பகிர்ந்து
கொள்கின்றார்கள். இவற்றைப் பதிவேற்றுவது தவறு
என்பதற்கில்லை. என்றாலும், நவீன காலப் பெண்கள்
இவற்றுக்குள் மட்டுமாய்த் தம்மைக் குறுக்கிக் கொள்ளாமல், சற்று
வெளியிலும் வரவேண்டும். சமூகச் செயற்பாடுகள் தொடர்பிலான
தமது அக்கறையை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
குறிப்பாக, சமூக விமர்சனம், அரசியல்
துறைகளில் மிகவும் அரிதான எண்ணிக்கையிலான பெண்களே பங்குகொள்வது மிகவும்
வருந்தத்தக்க நிலையாகும். இந்நிலை மாறவேண்டும்.
11.
இலக்கியப் படைப்புகளுக்குக் கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள்
கருத்து யாது?
அவை இளம் எழுத்தாளர்கள் தம்மை
வளர்த்துக் கொள்ளவும், அவர்களின்
முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் அமைந்திருப்பதால்
வரவேற்கத்தக்கதே! என்றாலும், விருதுகள்தாம் 'எல்லாம்' அல்லது 'முழுமை' அல்ல என்ற
விழிப்புணர்வும் நம்மிடம் வரவேண்டும்.
12.
பல்கலைக்கழக வாழ்வில் உங்களுக்கு மறக்க இயலாத
சம்பவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?
பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
முதலாம் வருட மாணவியாய் இருந்தபோது, பீடங்களுக்கு
இடையிலான நாடகப் போட்டிக்காகச் சகோதரர்
சீ.எம் மன்சூரால் நெறியாள்கை செய்யப்பட்ட 'இதுவரை
இவர்கள்' நாடகத்தில் நடித்து, நினைவில்
நின்ற நடிகைக்கான சுழற்கேடய விருது பெற்றமை மறக்க முடியாத
நிகழ்வு.
அவ்வாறே, தமிழ்த்துறை
விரிவுரையாளராகப் பணியாற்றியபோது, கலைப்பீட
மும்மொழித் துறைகளும் இணைந்து ஒழுங்குசெய்யப்பட்டு, கனடா
மொன்ட்ரியேல் மற்றும் இந்திய ஐதராபாத் பல்கலைக்கழகப்
பேராசிரியர் குழுவினால் வழிநடத்தப்பட்ட ஐந்து வார மொழிபெயர்ப்பியல்
பயிலரங்கில் பங்குபற்றி, இறுதிப் பரீட்சையில் சிறப்பாகத் தேறியதை நான் பெற்ற பாக்கியமாகக் கருதுகின்றேன்.
மிகவும் வித்தியாசமான, சுவாரஷ்யமான கல்வியனுபவமாக அது
அமைந்திருந்தது. அதற்கு வாய்ப்பளித்த பேராசிரியர்
கலாகீர்த்தி சி. தில்லைநாதன், பேராசிரியர் எம்.ஏ. நுஃமான், கலாநிதி
சுமதி சிவமோகன் ஆகியோர் என்றும் என் நன்றிக்கு உரியவர்கள்.
13. முஸ்லிம் பெண்கள் அடக்கி ஒடுக்கப்படுவதான குற்றச்சாட்டு மேற்குலகிலும் முஸ்லிம் அல்லாதோர் மத்தியிலும் அடிக்கடி முன்வைக்கப்பட்டு வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இப்படியான குற்றச்சாட்டுக்களை, நம்மைப் பற்றிய மீளாய்வை ஊக்குவிக்கும் உந்துசக்திகளாகவே
கொள்ளவேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இஸ்லாத்தில்
பெண்ணுரிமைகள் மிகச் சிறப்பாக வலியுறுத்தப்பட்டு
உள்ளன. பெண் சிசு உயிரோடு புதைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில்
முதன்முதல் பெண்ணுக்கு முக்கியத்துவமும் சொத்துரிமை முதலான அனைத்து
உரிமைகளும் வழங்கிச் சமத்துவம் அளித்தது, இஸ்லாம்தான்.
இது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இன்றைய
முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாம் வழங்கியுள்ள அனைத்து
உரிமைகளையும் எந்தவிதப் பாரபட்சங்களும் இன்றி எல்லா முஸ்லிம் பெண்களும்
அனுபவிக்கிறார்களா என்ற கேள்வி மிக முக்கியமானது. என்னைக் கேட்டால், இதன் பதில் 'இல்லை' என்பதாகவே
இருக்கும். இஸ்லாத்தில் உள்ளதுதான் என்றாலும், முஸ்லிம்களிடையே
நடைமுறையில் அவை முழுமையான அளவில் இல்லை என்பதே
கசப்பான யதார்த்தம்.
இஸ்லாத்தில், குறிப்பாக
அல்குர்ஆனில் பெண்களின் நிலை குறித்த வாசிப்பு அதன் கூர்மையான
அர்த்தத்தில் ஆழமாகப் புரிந்துகொள்ளப்படுதல்
ஊக்குவிக்கப்படவும் பரவலாக்கப்படவும் வேண்டும். அஷ்ஷேய்க்
முஹம்மத் அல் கஸ்ஸாலியின் 'ஸுன்னா அந்நபவிய்யாஹ் பயான் அஹ்லில் ஃபிக்ஹி வ பயான் அஹ்லில் ஹதீஸ்' என்ற நூல்
தொடர்பில் எழுந்த விமர்சனங்கள் குறித்த
ஃபாத்திமா மெர்னிஸ்ஸியின் நூல், முனைவர் தாஹா ஜாபிர் அல்
அல்வானீ, முனைவர் அப்துல் ஹமீத் அபூ
சுலைமான் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகளின் தமிழாக்கம் ('இஸ்லாமியச்
சட்டவியலில் பெண்கள்'), நவீன இஸ்லாமிய அறிஞர் பேராசிரியர் தாரிக் ரமழானின் உரைகள் மற்றும் எழுத்துக்களைத்
தரிசிக்கும் வரையில், 'முஸ்லிம்
பெண் தலைமைத்துவம்', 'தனக்குக் கட்டுப்படாத மனைவியை அடிக்குமாறு அல்குர்ஆன் அனுமதி கொடுக்கிறதா?', 'பெண்ணுக்கான
சொத்துப் பங்கீடு' குறித்த
விடயங்கள் தொடர்பில் நானும் பாரம்பரியச் சிந்தனை உடையவளாகவும், அதேநேரம், மனதில் பல கேள்விகளைச்
சுமந்தவளாகவும்தான் இருந்தேன்.
அல்ஹம்துலில்லாஹ்! தொடர்ச்சியான
தேடலும் வாசிப்பும், என்
கணவருடனான தீவிரமான கலந்துரையாடல்களும், இஸ்லாத்தில் பெண்ணுடைய சமத்துவ நிலை குறித்துப் பெரும் மனநிறைவைப்
பெறும் வகையில், மிகவும் சுதந்திரமாய் உணரும்
நிலையில் என்னை மாற்றின. என்றாலும், சகோதர சமூகத்தவர் எப்படிப் போனாலும், முஸ்லிம்கள்
மத்தியில்கூட பெண்ணின் சமத்துவ நிலை
தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு ஆழமாகவோ அதன் முழுமையான அர்த்தத்திலோ உள்வாங்கப்படவில்லை என்பது மிகவும்
கவலைக்குரியதாகும். இந்தநிலை மாறும்வரை குற்றச்சாட்டுக்களுக்கு
நம் சமூகம் முகங்கொடுத்தே ஆகவேண்டும்.
இக்குற்றச்சாட்டுகள் எப்படிப்
போனாலும், முஸ்லிம் பெண்களின் சமூகப்
பங்களிப்பு இப்போது உள்ளதை விட அதிகரிக்கப்படாத பட்சத்தில்
சமூக மாற்றம் இன்னும் தாமதப்படும் என்பதே உண்மை. இலங்கைப் பல்கலைக்கழகங்களில்
அதிகளவான முஸ்லிம் பெண்கள் கல்விகற்று வெளியேறுகிறார்கள்.
அவர்களின் சமூகப் பங்களிப்பு என்பது வெறுமனே குறிப்பிட்ட
ஒரு சாராரின் தொழிற்துறைப் பங்களிப்போடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு
விடுகின்றது. திருமணத்தின்பின் சிலபோது அதுகூட இடைநிறுத்தப்பட்டு
விடுகின்றது. இதற்குப் பெண்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்பதையும்
சுட்டிக்காட்ட விழைகின்றேன். காரணம், தம்மை
மேன்மேலும் வளர்த்துக்கொள்ள பெண்களும் முன்வரவேண்டும். குறிப்பாக, உயர்கல்வியைத் தொடர்வது குறித்து உறுதியான நிலைப்பாட்டுடன்
தொடர்ந்து முயற்சிசெய்ய வேண்டும்.
14. உங்களுடைய பி.ஏ. பட்டப்படிப்புக்கான ஆய்வைப் பெண்ணியத்துடன் தொடர்புபடுத்திச் செய்துள்ளீர்கள். ஆக, பெண்ணியச் சிந்தனை குறித்த
உங்கள் மனப்பதிவு என்ன?
பெண்ணியம், பெண்ணிலைவாதம்
என்பன குறித்து நமது சமூகத்தில் ஒருவகைத் தட்டையான புரிதல் பரவலாகி
இருப்பது வருந்தத்தக்கதே! அதனை இஸ்லாத்துக்கு எதிரான ஒன்றாக, மேற்கில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீரழிவுக் கலாசாரக் கூறாக
நோக்கும் போக்கு இன்றுவரை தொடர்கின்றது.
பொதுத்தளத்தில் வெளிப்படையாகத் தன் கருத்துக்களை முன்வைக்கும்
ஒரு பெண்ணை ஓரங்கட்டவும், தாக்கவும்கூட இந்தக் கருத்தாக்கத்தைப் பலர் மிக மோசமாகக் கையாள்வது
விசனத்துக்குரியதாகும்.
உண்மையில், பெண்ணிலைவாதம்
என்பது சோஷலிசப் பெண்ணிலைவாதம், மார்க்ஸியப்
பெண்ணிலைவாதம், தீவிரப் பெண்ணிலைவாதம் முதலான பல்வேறு வகைப்பட்டதாகும். என்னைப் பொறுத்த வரையில், ஆணும்
பெண்ணும் இணைந்த சமூக அமைப்பில், இரு
தரப்பாருக்கும் சிறப்பியல்புகள், தனித்தன்மைகள் உள்ளன. அவை பரஸ்பரம் புரிந்துகொள்ளப்படவும்
மதிக்கப்படவும் வேண்டும்;. வீட்டுப் பணியிலும் சரி, சமூகப்
பணியிலும் சரி, ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்துழைப்போடும் பணியாற்ற முன்வர
வேண்டும். இதில் 'ஈகோ' பார்க்க எதுவும் இல்லை என்பதே
என்னுடைய நிலைப்பாடாகும். 'ஆணும் பெண்ணும் நிகரெனக்
கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்' என்ற
பாரதியின் வரிகள் எனக்கு மிகவும் விருப்பமானவை.
மேலும், விளம்பரம், கலை, இலக்கியம் (சினிமா, பாடல் உட்பட)
என்பவற்றில், பெண் ஒரு பாலியல் பண்டமாக, வெற்று உடலாகப் பார்க்கப்படும் மனப்பாங்கு கண்டிப்பாக
மாற்றப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின்
நலனுக்காக, பெண்ணின் உடல் ஒரு வர்த்தகப் பண்டமாக்கப்படுவதையும், அழகிப்போட்டி, 'ஃபேஷன் ஷோ' என்ற பெயரில்
அவளது உடல் ஒரு 'பாலியல்
அல்லது வியாபாரப் பண்டமாக' ஆக்கப்படுவதையும் தடுத்து
நிறுத்த வேண்டுமானால், 'தன்னுடைய
உடல் அழகால் ஆண்கள் கவரப்படுவதே தனக்குப் பெருமைதருவது' என்று எண்ணி
அழகுச் சாதனங்களின் பின்னால் அலைந்து திரியும் அடிமை
மனப்பான்மையைப் பெண்கள் வெற்றிகொள்ள வேண்டும்.
ஆம்! இது முதலில் தனக்குள் நிகழ்த்தப்
பட வேண்டிய போராட்டம். அதன் பிறகே, பெண்ணின்
ஒடுக்குமுறைக்கு எதிரான அடுத்தகட்டப் போராட்டம்
முனைப்புப்பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். குறிப்பாக, இணையப் பாவனை
இருந்தும்கூட எப்போது பார்த்தாலும் சமையல் குறிப்பு, அழகுக்குறிப்பு
என்பவற்றையே தேடிச் செல்லும் கிணற்றுத்
தவளைகளாக இருக்காமல், அந்நிலையை மாற்றி, நாட்டு
நடப்பு, உலக நடப்பு என்பன
குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளப் பெண்கள் முன்வர வேண்டும். சமூக அக்கறை, மானிட நலன்
என்பனவற்றை நாடும் வகையில் அறிவையும் மனதையும் விசாலப்படுத்திக்கொள்ள
முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறே, ஒரு பெண்ணின் வெற்றியும் சிறப்பும் அவளின் அறிவிலும் ஆற்றலிலும்
ஆளுமையிலுமே தங்கியுள்ளன என்ற தன்னம்பிக்கையும்
நிமிர்வும் தன்மானமுள்ள ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய
பண்புகளாகும். பாரதி இதனையே, 'நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச் செருக்கும்' என்று
குறிப்பிட்டுள்ளான். அத்தகைய புதுமைப் பெண்களே உருவாகவும்
உருவாக்கப்படவும் வேண்டும்.
குடும்ப அமைப்பைப்
பொறுத்தவரையில், ஆண் குழந்தைகள்
மத்தியில் பெண் பற்றிய சாதகமான மனப்பதிவை ஏற்படுத்துவது தொடர்பில்
பெற்றோரின், குறிப்பாகத் தாயாரின்
பங்களிப்பு மகத்தானதாய் அமைய முடியும்.
ஆண்-பெண் குழந்தைகளைச் சமத்துவமாக உணரச் செய்வது முதல், உடல் சார்ந்த வேறுபாடுகள் தொடர்பில் வயது வளர வளர
பக்குவமாகவும் தெளிவாகவும் அறிவுறுத்த
முனைவது வரை கட்டங்கட்டமாக சாதகமான மனப்பதிவைக் கட்டியெழுப்ப வேண்டும்.
சிலர் குழந்தைப் பேறு குறித்துத் தம் பிள்ளைகளிடம், 'ஆஸ்பத்திரியில்
வாங்கி வந்தேன்' என்று கூறுவதைக்
கேட்டிருப்பீர்கள். பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுவது
தொடர்பான எந்த அறிவூட்டலையும் வழங்காமல், ஆண்
குழந்தைகளிடையே அதுபற்றி முற்றாக மறைத்துவிடுவதைக் கண்டிருப்பீர்கள். இது தவறு என்பதே என்னுடைய கருத்து.
'உன்னை
நான்தான், என் வயிற்றில் கஷ்டங்களோடு சுமந்து, மிகுந்த
வலியோடு பெற்றெடுத்தேன்' என்று கூறி வளர்க்கப்படும் ஓர் குழந்தை, தாயையும்
பெண்ணையும் அதிகம் மதிக்கக் கற்றுக் கொள்கின்றது.
'உன்னுடைய சகோதரிக்கும், உலகில் உள்ள
எல்லாப் பெண்களுக்கும் மாதம் ஒருமுறை உதிரப்போக்கு
ஏற்படுகின்றது. அவள் மாதந்தோறும் மிகுந்த கஷ்டத்தையும்
வேதனைகளையும் அனுபவிக்கிறாள்' என்ற பக்குவமான அறிவூட்டலின் மூலம் பெண்ணின் உடலை அழகுடன், கிளர்ச்சியுடன்
மட்டும் தொடர்புபடுத்திப் பார்க்கும்
மனநிலை மாற்றப்பட்டு, பரிவோடும் புரிந்துணர்வோடும்
பெண்ணை அணுகும் மனப்பாங்கு கட்டமைக்கப்பட முடியும் என்பது
என்னுடைய ஆழமான நம்பிக்கை. (பள்ளிக்கூட இஸ்லாம் மற்றும் விஞ்ஞானப்
பாடப் புத்தகங்களில் குளிப்பு தொடர்பான கடமைகள்
மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான உயிரியல் பாடம் கற்பிக்கப்படுவதற்குச்
சமாந்திரமாய், வீட்டில் இதுபற்றிய அறிவூட்டலை நிகழ்த்த முடியும் என்பதைக் கவனத்திற் கொள்க).
15. பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒரு பங்களிப்புச் சமூகமாக வாழ்வது குறித்து என்ன கூறவிழைகின்றீர்கள்?
நல்ல கேள்வி. இலங்கை
முஸ்லிம்கள் வெறுமனே ஒரு நுகர்வுச் சமூகம் என்ற
பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருவதை நாமறிவோம். இது மிகத்
தவறானதே! என்றாலும்கூட, அத்தகைய ஒரு குற்றச்சாட்டைத்
திடமாக மறுப்பதானால் நாம் ஒரு பங்களிப்புச் சமூகம் என்பது
நம்முடைய செயற்பாடுகள் மூலமே நிரூபிக்கப்படல்
வேண்டும். ஆரம்ப கட்டமாக சகோதர சமூகத்தவரோடு இணைந்து வறுமையொழிப்பு, சுற்றுச்சூழல்
பாதுகாப்பு, டெங்கு முதலான நோய்கள் ஒழிப்பு, மது ஒழிப்பு
முதலான பல்வேறு பணிகள் தத்தமது ஊரளவிலாவது முன்னெடுக்கப்பட முடியும்.
சர்வமத, சர்வசமூக ஒன்றுகூடல்களை
ஏற்படுத்தி ஊர் முன்னேற்றம் தொடர்பான
பொதுக் கலந்துரையாடல்கள், விளையாட்டுப் போட்டிகள், சிரமதான வேலைத்திட்டங்கள், புத்தக
மற்றும் ஓவிய, கைப்பணிக் கண்காட்சிகள், கலை கலாசார ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் என்பவற்றை
ஒழுங்குபடுத்தலாம். பள்ளிவாயில்கள், சமூக
ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இவற்றை முன்னெடுக்கலாம்.
16. நீங்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி உள்ளீர்கள். அந்த அடிப்படையில் பொதுவாக, சமூக மாற்றத்தில் பல்கலைக்கழகங்கள் எத்தகைய பங்களிப்பை நல்க முடியும் என நினைக்கிறீர்கள்?
சமூக மாற்றத்தில்
அறிவுஜீவிகளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். குறிப்பாக, சிந்தனை
மாற்றத்தின் மையப் புள்ளியாய் பல்கலைக்கழகங்கள் செயற்பட முடியும்
என்பதற்கு வரலாற்றில் இருந்தும் நாம் உதாரணம் காட்ட
முடியும். ஸ்பெயினின் கொரடோபா பல்கலைக்கழகத்தினதும்
நூலகத்தினதும் அறிவியல் மற்றும் சமூக மாற்றப் பங்களிப்பு
இதற்கான நல்ல உதாரணம் எனலாம்.
இன்றும்கூட பல்கலைக்கழக சமூகம்
மனம் வைத்தால் நமது நாட்டைப் பல்வேறு துறைகளிலும் மேம்படச்
செய்யலாம் என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை. பலஸ்தீன்
பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அம் மண்ணுக்கேற்ற பல்துறை
சார்ந்த ஆய்வுகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதைச்
சிலவருடங்களுக்கு முன் தற்செயலாகக் கண்டதில்
இருந்து, இந்தக் கருத்து என் மனதில்
வேரூன்றி விட்டது. நாலாபுறமும் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட ஒரு தேசத்து
மாணவர்கள், பல்கலைக்கழக மட்டத்திலான தமது ஆய்வுகளைத் தமது மண்ணை
வளப்படுத்தும் வகையில் அமைத்துச் செய்திருந்த
சமூகப் பங்களிப்பு என்னை வியக்க வைத்தது. அதனடியாக, நமது நாட்டுக்கு ஏற்ற வகையில் துறைசார் நிபுணத்துவத்தைக்
கட்டமைக்கும் வாய்ப்பு பல்கலைக்கழகத்துக்கே அதிகம்
உண்டு என்ற உறுதியான எண்ணம் நிலைகொண்டுவிட்டது.
இலங்கை அடிப்படையில் ஒரு விவசாய
நாடு. எனவே, நம்நாட்டுப்
பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஆய்வுகளும் பங்களிப்புகளும்
இன்னும் தீவிரமாக அமையுமானால், உணவுப் பொருட்களுக்குப் பெரிதும் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலையை
மாற்றலாம். அவ்வாறே, ஏனைய சமூகவியல்
துறைகளிலும் நமது சமூகக் கலாசார பொருளாதார அரசியல் துறைசார்ந்து மாணவர்களைக் காத்திரமான ஆய்வுகளில் ஈடுபடுத்துவதன்
மூலம் இளம் சந்ததியின் சமூகப் பங்களிப்பைத்
தீவிரப்படுத்த முடியும் என்றே நம்புகின்றேன்.
உதாரணமாக, வரலாற்றுத்துறை
மாணவர்களைக் கொண்டு பன்மைத்துவக் கருத்தியலை அடியொட்டி, வரலாற்றெழுதியலில்
உள்ள இனவாத அரசியலைக் கட்டவிழ்ப்புச் செய்வதைக் குறிப்பிட
முடியும். அதாவது, பண்டைய அரசர்களின்
படையெடுப்புக்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகளை எடுத்துக்கொண்டால், துட்டுகெமுனு
மன்னனின் படையெடுப்பு தேசவிடுதலைப் போராகவும்
ஆங்கிலேயரின் கண்டி இராச்சியப் படையெடுப்பு ஆங்கிலப் படையெடுப்பாகவும்
பதியப்பட்டுள்ள அதேவேளை, சோழர்களின் படையெடுப்பு தமிழர் ஆக்கிரமிப்பு என்று கட்டமைக்கப்பட்டுள்ளதன் பின்னுள்ள
அரசியல், இன்று தீவிர வலதுசாரிக் குழுக்களால் சமூகங்களுக்கு இடையிலான
முரண்பாட்டைக் கூர்மைப்படுத்துவதில் மிகச் சிறந்த ஓர் ஆயுதமாகப்
பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். இந்த நிலையில், இலங்கையின்
மொழி, சமூக, கலாசார, அரசியல், பொருளாதாரத்
துறைகளை வளப்படுத்துவதிலும், பன்மைத்தன்மையின் ஊடான செழுமையிலும் இலங்கையின் சகல இனங்களினதும் பங்களிப்பு
எப்படி இருந்தது என்ற ரீதியில் வரலாறுகள் அணுகப்படும்
போக்கை ஊக்குவிப்பது அதிக பலன் தரும் என நினைக்கின்றேன்.
அண்மையில் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தமது முகநூல் பக்கத்தில்
இடம்பெற்ற ஒரு பதிவிலும் இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நமது
நாட்டின் மொத்த மாணவர் தொகையில் ஏறத்தாழ 1% வீதமானவர்களுக்கே
பல்கலைக்கழகக் கல்வி வாய்க்கிறது (பார்க்க:
http://www.dailymirror.lk/opinion/172-opinion/22865-the-myth-of-free-education).
இந்நிலைமை மாறவேண்டும். தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கத்தக்கதாக நமது நாட்டின்
கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும். இதுகுறித்து அரசியல்வாதிகள்
மட்டுமின்றி நாட்டின் கல்வியியலாளர்களும் அதிகக்
கரிசனை எடுக்க வேண்டும். இவ்விடத்தில், சிலி நாட்டின் இளம்
புரட்சி வீராங்கனை கமிலா வெலேஜோவின் பணி
நினைவிற்கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டில் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து
அந்நாட்டு அரசுக்கே பெரும் சவாலாய்த்
திகழ்ந்தவர், அவர். நம்முடைய நாட்டில் 'அனைவர்க்கும் பல்கலைக்கழக உயர்கல்வி' என்ற
தொனிப்பொருள் குறித்த பரந்துபட்ட கலந்துரையாடல்கள்
முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
17. இலங்கையில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் பல்கலைக்கழகங்கள் காத்திரமான பங்காற்ற முடியும் என நீங்கள் நம்புகின்றீர்களா?
ஆம், நிச்சயமாக!
இப்போது பேராதனைப்
பல்கலைக்கழகத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ்-இந்துக் கலாசாரத்துறை, அரபு-இஸ்லாமிய நாகரிகத்துறை, பாளி-பௌத்த
நாகரிகத்துறை என மூன்று வெவ்வேறு துறைகள் (Departments) காணப்படுகின்றன.
இது எப்படி இருக்கின்றது என்றால், ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த சகோதரர்கள் கதவுகளை அடைத்துக்கொண்டு தனித்தனி அறைகளுக்குள்
முடங்கிப் போய் இருப்பதைப்போல் இருக்கின்றது. பரஸ்பரக் கொடுக்கல்
வாங்கல்கள், உரையாடல்கள் எதுவுமே இல்லை.
எப்போதேனும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேர்கையில், ஒரு
புன்னகையோடு சிலபோது அதுகூட இல்லாமல் ஒருவர் மற்றவரைக்
கடந்துபோய் விடுகின்றோம். இனி, நமக்குள் நல்லுறவும் நல்லிணக்கமும் எப்படி வளரும்?
நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள்
சிலர் வெளிநாடுகளுக்குப் போய்த்தான் சமய ஒப்பீட்டுத்
துறையில் (Comperative Religion) முதுகலைமாணி, முதுதத்துவமாணிப்
படிப்பை மேற்கொள்கின்றனர். இதற்கு மாறாக, மேற்படி
நான்கு சமயத் துறைகளோடு தத்துவத் (Philosophy) துறையும் ஒருங்கிணைக்கப்பட்டு தனிப்பீடமாக அமைக்கப்படுமானால், இலங்கையின் படித்தவர்கள் மத்தியில் சமய நல்லிணக்கத்தையும்
பரஸ்பரப் புரிதலையும் வளர்க்கக்கூடியதாய் இருக்கும்.
நம்முடைய சமயம் பற்றி நாமே கற்று நாமே மெச்சிக்
கொள்ளும் நிலை மாறி, எந்தச் சமயத்தைச் சேர்ந்த
மாணவரும் அடுத்த சமயத்தையும் கற்று, அது குறித்து
உரையாடக்கூடிய வகையில் பல்கலைக்கழகக் களம் விரிவடைய
வேண்டும் என்பதே என்னுடைய அவா.
வெளிநாட்டுப்
பல்கலைக்கழகங்களில் சமய ஒப்பீட்டாய்வுத் துறையில் உள்ள
பரந்துவிரிந்த வெளி, இலங்கைப் பல்கலைக்கழகச் சூழலிலும் சாத்தியப்பட வேண்டும். அதன் மூலம், சமூகங்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் உள்ள தனித்துவங்கள் பற்றிய
பரஸ்பர மரியாதை உணர்வு மேலோங்குவதோடு, தமக்கிடையில்
உள்ள ஒத்த தன்மைகள் குவிமையப்படுத்தப்படுவதன் மூலம், இணைந்து
பணியாற்றுவதில் உள்ள மனத்தடைகள் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது
எனவும் நம்புகின்றேன்.
18. பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களுக்கு நீங்கள் ஏதாவது கூறவிரும்புகிறீர்களா?
ஆம். அனைத்துப் பல்கலைக்கழக
முஸ்லிம் மாணவர் சம்மேளனத்துக்கு (AUMSA) ஒரு
வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன். தம்முடைய சமுதாயத்தின் இருப்பையும் சிறப்பையும் நிலைநிறுத்தும்
வகையிலும், சமூகப் பங்களிப்பில் தமது
எல்லைக்குட்பட்ட வகையில் தமது பங்குப் பணியைச் செய்யும்
வகையிலும் அவர்கள் இரண்டு விதங்களில் தமது கவனத்தைக் குவிமையப்படுத்த
முன்வரவேண்டும்.
1) இலங்கை
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முன்னோடிகளான
சேர் ராஸிக் ஃபரீத், அறிஞர் அஸீஸ், அறிஞர்
சித்திலெப்பை, அறிஞர் ஓ.எல். எம். இப்ராஹீம், அறிஞர்
அப்துல் காதிர் லெப்பை முதலான முன்னோடிகளின்
சமூகப் பணிகள், சிந்தனைகள் என்பவற்றை
மீள்வாசிப்புச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு
எடுத்துச் செல்லும் வகையிலும், அந்த முன்னோடிகளின்
பணிகளையும் சிந்தனைகளையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும்
விதத்திலும் அகில இலங்கை ரீதியில் அமைந்த, பல்வேறு
தனித்தனி அமர்வுகள், அரங்குகளைக்
கொண்ட மாபெரும் கல்வியியல் கருத்தரங்கு (Academic symposium) ஒன்றினை
குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது ஏற்பாடு
செய்யலாம். அது சாத்தியமாகவும் வெற்றிகரமாகவும் அமையும் பட்சத்தில், ஏனைய சமூக
முன்னோடிகள், அவர்தம் பணிகள், சிந்தனைகள்
குறித்த பரஸ்பர உரையாடலைப் பரந்த தளத்தில் ஏற்படுத்தும் வகையில்
தமது முன்னெடுப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம்.
2) நம்
மத்தியில் பல்வேறு துறைசார்ந்த பல்கலைக்கழகக்
கல்வியியலாளர்கள் பலர் உள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில்
தத்துவவியல், முஸ்லிம் நுண்கலைகள் போன்ற
துறைகளில் தேர்ச்சிபெற்ற பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ், மொழியியல், மொழிபெயர்ப்பியல்
துறைகளில் தேர்ச்சியும் இனப்பிரச்சினை தொடர்பான வரலாறு குறித்த
ஆழமான புரிதலும் உள்ள பேராசிரியர் எம். ஏ. நுஃமான், இடப்பெயர்வுகள், அகதிகள்
பிரச்சினைகள் தொடர்பிலான ஆய்வு முயற்சிகளில் நீண்டகால
அனுபவங்களைப் பெற்றுள்ள கலாநிதி ஹஸ்புல்லாஹ், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முறையியல் சார்ந்த
நிபுணத்துவம் பெற்ற கலாநிதி ஃபர்ஸானா, தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் மொழியியல், மொழிபெயர்ப்பியல் துறைகளில் சிறந்த பங்காற்றக்கூடிய கலாநிதி ரமீஸ்
அப்துல்லாஹ், கலாநிதி அஷ்ரஃப்
ஆகியோர் அவர்களுள் சிலராவர். இவர்களைக் கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள்
பெறக்கூடிய உச்ச பயன்களைப் பற்றி ஆராயவும், அவர்களின்
துறைசார் நிபுணத்துவத்தை ஒருமுகப்படுத்தும் முன்முயற்சிகளை
மேற்கொள்ளவும் அகில இலங்கை முஸ்லிம் மாணவர்
சம்மேளனம் முன்வர வேண்டும்.
பேராசிரியர் அனஸ் அவர்களின் 'தற்கால இஸ்லாமிய சிந்தனை' என்ற நூல்
பற்றிய ஆய்வரங்குகள், கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதன் மூலம்கூட இதனை
ஆரம்பித்துவைக்கலாம் என்று நினைக்கின்றேன்.
காரணம், பாடசாலை உயர்தர இஸ்லாமியக்
கற்கை முதல், பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கை
வரை பாடநூலாகப் பரிந்துரைக்கத்தக்க மிக முக்கியமான
நூல், அது. நவீன இஸ்லாமியச்
சிந்தனையாளரான பேராசிரியர் தாரிக் ரமழான்
போன்றோர் பேசும் கருத்துக்களைப் பல வருடங்களுக்கு முன்பே அவர் தம்முடைய நூலில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே, கவிஞரும் சிந்தனையாளருமான
அப்துல் காதிர் லெப்பை அவர்களின் 'போராட்டச்
சிந்தனைகள்', 'பூரணவாழ்வு' என்னும் இரு
நூல்களும் சிந்தனை மாற்றத்தைத் தூண்டி நிற்கும் மிக
முக்கியமான நூல்களாகும். இவை போன்ற நூல்களின் வாசிப்பும், அந்நூல்கள் குறித்த பரந்துபட்ட கலந்துரையாடலும் பல்கலைக்கழக மாணவ
சமூகத்தின் மத்தியில் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்கள் மனம் வைத்தால் இது
ஒன்றும் சிரமமான காரியமல்ல.
19. நமது நாட்டில் இஸ்லாமிய மத்ரஸாக்கள் பல இயங்கி வருகின்றன. சமூக மாற்றத்தில் அவற்றின் பங்களிப்பு எத்தகையது எனக் கருதுகின்றீர்கள்?
இலங்கையில் உள்ள இஸ்லாமிய
மத்ரஸாக்கள் பெரும்பாலும் உதிரியாகவே இயங்கி வருகின்றன.
அவற்றுக்கு இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட தரமான
பாடத்திட்டம் ஒன்று இல்லை. இலங்கையின் பிரபல அரபு மத்ரஸாக்களில்
5-7 வருடக் கல்வியைப்
பூர்த்திசெய்துவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு
வெறும் டிப்ளோமா தரச் சான்றிதழே வழங்கப்படுகின்றது. எனவே, இத்தகைய
மத்ரஸாக்களின் மாணவர்கள் தமது கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், மத்ரஸா
பாடங்களுக்குப் புறம்பாக அரச பல்கலைக்கழகங்களில் வெளிவாரிப்
பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்நிலை கண்டிப்பாக
மாற்றப்பட வேண்டும். இம்மத்ரஸாக்கள் இலங்கை அரச பல்கலைக்கழகங்களுடனோ
சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களுடனோ இணைக்கப்பட்டு (affiliate)
பட்டப்படிப்பு நிலைக்குத் தரமுயர்த்தப்பட வேண்டும் (சில மத்ரஸாக்களில்
அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகச் சில சகோதரர்கள் என்னிடம்
குறிப்பிட்டார்கள்). அதன்பின் அவற்றில் இருந்து துறைசார் நிபுணத்துவ
உருவாக்கத்தின் மூலமான சமூகப் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கலாம் என்று நம்புகின்றேன்.
பேட்டி கண்டவர்: கிண்ணியா
ஃபாயிஸா அலி
No comments:
Post a Comment