-மீராபாரதி
உளவியல் என்ற புதிய துறைக்கான
அடித்தளத்தை உருவாக்கிய வில்லியம் ஜேம்ஸ் (William James) உளவியலை, பிரக்ஞையின் (state of
consciousness) நிலை தொடர்பான
விபரித்தலும் விளக்கமும் என வரையறுத்தார் (Richard Davidson, 12). இவ்வாறு, உளவியலின் அடிப்படை தத்துவத்தை வகுத்த வில்லியம்
ஜேம்ஸ்சின் (James) ஆய்வில்,
பிரக்ஞையே (consciousness)
அடிப்படையானது (Mishlove,
59> 243). இத்துடன்,
புலன்களுக்கும்
மூளையின் செயற்பாடுகளுக்கும் இடையிலான உறவை விபரிக்கும்
விஞ்ஞானத்தையும் (cognitive science) இது உள்ளடக்கி இருந்தது. ஆனால் பின்பு இவர்
பருப்பொருளையும் பிரக்ஞையையும் தனித்தனியே இருப்பதை மறுத்து அவை
இரண்டும் ஒன்றினைந்தே இருக்கின்றது எனவும் இது ஒரு அனுபவமே என்றார் (Mishlove,
243). இதேவேளை அமெரிக்க
உளவியல் கல்லூரி,
திட்செனர் (E.B.Titchener)
தலைமையில், பிரக்ஞை தொடர்பான அனுபவத்தின் அடிப்படைக் கூறுகளை
அடையாளங் காணுவதில் அக்கறையாக இருந்தனர் (Davidson, 12). ஆனால் இவர்களது ஆய்வு முறைகளிலும்
முடிவுகளிலும் இருந்த குறைபாடு காரணமாகவும்
நம்பகத்தன்மையின்மையாலும் பிரக்ஞை தொடர்பான ஆய்வானது கற்பதற்கான ஒரு துறையல்ல எனக்
கைவிடப்பட்டது.
இதவேளை
உளவியலில் நடத்தைகள் (பழக்கவழக்கங்கள்) (Behaviors) ஆராய்கின்றமை புதிய முறையாக உருவாகிவந்தது. இவ்வாறான
நடத்தைகள் விஞ்ஞானத்தை உருவாக்கியவரான உளவியலாளர் (Behavior
Psychologist) ஜோன் வாஸ்டன் (John
Watson) மற்றும்
பி.எவ்.ஸ்கின்னர் (B.F.Skinner) என்பவர்களைப்
பொறுத்தவரை விஞ்ஞான
உளவியளானது உயிரினங்களின் நடத்தைகளை பரிசோதனைரீதியாக கற்பதன் மூலமே நிறுவவேண்டும்
என்றனர். ஏனனில், மனிதர்கள்
தண்டனைகளும் மற்றும் பரிசுகளும் (Rewards and Punishments) வழங்கப்பட்டு வளர்க்கப்படுகின்ற முறைமைகளினுடாகவே
அவர்களது மனமானது செழுமைப்படுத்தப்படுகின்றது. மற்றும்படி உயிரணுக்களால் (Genetic) அல்ல என்கின்றனர். மேலும், இந்த முறையினுடான பரிசோதனைகள் பார்க்கவும்
அளவிடக்கூடியதாகவும் இருந்தமை முக்கியமானதாக இருந்தது. அதேவேளை, ஜே.பி.வாஸ்டன் (John Watson) பிரக்ஞை என ஒன்று இருப்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதரங்கள்
ஏதுவும் இல்லை எனவும், ஆகவே பிரக்ஞை
என்பது வரையறுக்கவோ அல்லது அளவிடவோ முடியாத ஒன்று என்றார். இதனால் பிரக்ஞை
என ஒன்று இருக்கமுடியாது எனவும் வாதிட்டார் (Lachman, 100; Mishlove, 59). இதேபோல், ஸ்கின்னர் (B.F.Skinner) பிரக்ஞை என ஒன்றில்லை என்றார்
(Gerd Sommerhoff, 3). இவர்கள்,
ஜோன் வாஸ்டன் மற்றும் பி.எவ்.ஸ்கின்னர்,
விஞ்ஞான உளவியல்
என்பது தன்நிலைகளின் உள்நோக்கிய பார்வைகளாலோ (Introspection), தனிப்பட்டவர்களின் உணர்வுகிளின் மதிப்பிடுகளாலோ
உருவாக்க முடியாது என்றனர் (Papineau & Selina, 37). ஆகவே, பிரக்ஞை என்பது “விஞ்ஞான முறை” ஒன்றினுடாக அறிய முடியாது என்பதால் புலமைசார்
உளவியல் துறையில் பிரக்ஞை என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே
நீண்ட காலமாக
இருந்தது (Gerd Sommerhoff 2).
இதன்பின்
இயக்கத்தை (Functionalism) அடிப்படையாகக்
கொண்ட உளவியலானது டேவிட் லுயிஸ் (David Lewis) என்பவரால் உருவாக்கப்பட்டது. இக் கோட்பாட்டின்;
அடிப்படையில்,
மனிதர்களது மனநிலைiயானது (mental states) மனித நடத்தைகளை (Behaviors) பாதிக்கின்றது என்ற கருத்தை டேவிட்
ஆம்ஸ்ரோங் (David Armstrong) முன்வைத்தார்
(Chalamers, 14). மேலும்,
ஒருவரது மனநிலை என்பது
வெளிப்படையாக தெரியாத போதும் யதார்த்தத்தில் உண்மையாக இருக்கின்ற ஒன்று
என்கின்றனர். இவை அணுக்கள், மரபணுக்கள்
போல விஞ்ஞான ரீதியான பார்க்கமுடியாதவைகள் என்கின்றனர் (Papineau &
Selina, 44). இவர்கள் தமது
ஆய்வை, மனித
நடத்தைகளிலிருந்து விலகி மீண்டும் உள்நோக்கி, அதாவது மூளையை நோக்கி, நகர்த்தினர். இவர்கள் பிரக்ஞை என்பது
இருக்கின்றது என ஏற்றுக்கொள்கின்றனர். இதன் அருருவம் அதன் இருப்பை
நிராகரிக்காது எனவும் அவ்வாறு வாதிடவும் முடியாது
என்கின்றனர். ஒரு பக்கம் நாம் பருப் பொருட்களால் ஆனவர்கள். மறுபுறம் ஆன்மா
அல்லது உளவியல் அல்லது மனம் என்கின்றோம். உண்மையில் இதுதான் பிரக்ஞை
என்கின்றனர் (Lachman, 101). ஆகவேதான்,
பிரக்ஞை தொடர்பான
ஆய்விலும் பரிசோதனையிலும் மூன்றாம் நபரின் பார்வை மட்டுமல்ல, பரிசோதனைக்கு உட்பட்டவரின் (Participant)
சுய பார்வையும்
(Self-observation) அதனால்
பெறப்படும் தரவுகளும் முக்கியத்தும் பெற்று வருகின்றன. இந்த அடிப்படையில்தான்
பரிசோதனை (Experimental) உளவியலை உருவாக்கிய
குட்சேவ் தியோடர் பெஞ்சர் (Gutav Theodore Fechner) தனி நபரின் பிரக்ஞைக்கும் பிரபஞ்ச பிரக்ஞைக்கும்
இடையிலான உறவை ஆராய்ந்தார் (Mishlove, 242). இன்று உளவியலின் முக்கியமான ஆய்வும்
பொருளாகவும் பிரதானமானதுமான பாத்திரத்தையும்
பிரக்ஞை மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளது.
மேற்குறிப்பிட்டவற்றின் தொடர்ச்சியாக
ஆனால் நடத்ததைகள் உளவியல் கோட்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்து உருவானது,
மூளை புலன்கள்
மற்றும் மனம் என்பவற்றுக்கு
இடையிலான செயற்பாடுகள் (cognitive) தொடர்பான
உளவியல் என்பது. இது 1980களில்
மூளை, புலன்கள் மற்றும்
மனம் என்பவற்றுடன் மூளையின் நரம்பியல் செயற்பாட்டையும் உள்ளடக்கி (cognitive
neuroscience) மிகப் பெரிய மாற்றத்தைக்
உளவியல் துறையில் உருவாக்கியது. இதை உளவியல் வரலாற்றில் நடைபெற்றப் புரட்சிகர மாற்றம் எனவும்
கூறுகின்றனர் (Thompson, 95). இதே வேளை
மனித உள்ளுணர்வுகளுக்கு முக்கியத்துவமளிக்கின்ற (phenomenology) என்கின்ற கோட்பாடு எட்மன் ஹெசேரல் (Edmund
Husserl) என்பவரால் நீண்ட காலத்திற்கு
முன்பு முன்வைக்கப்பட்டபோதும்> இன்று
மீண்டும் முக்கியத்துவம்
பெற்றுவருகின்றது. இது இந்திய அல்லது கீழக்கின் ஆய்வு முறைகளுக்கே மேற்குலக விஞ்ஞானம்
இறுதியாக வந்தடைகின்றதோ என்பதற்கான எதிர்வு கூறலாகவும் பார்க்கலாம். இதன்
தொடர்ச்சியாக 1990 களில்
பிரான்சிக்கோ வீரெலா
(Francisco Varela) பிரக்ஞையின்
விஞ்ஞானம் என்பதை அடிப்படையாகக் கொண்டு Neurophenomenology
என்ற புதிய ஆய்வை
முன்மொழிகின்றார் (Thompson, 140). இது
பிரக்ஞை தொடர்பான ஆய்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும் என
நம்புகின்றனர். ஏனனில் இது பயிற்றுவிக்கப்பட்ட பங்களிப்பாளர் (Participant)
ஒருவரை பரிசோதனை
ஆய்வுக்கு உட்படுத்தி அவரது அனுபவத்தின் மூலம் கிடைக்கின்ற தரவுகளையும்
பெறுகின்றமை வழமையான பரிசோதனைகளிலிருந்து வேறுபட்டதும் முக்கியமானதுமாகும்.
இதைவிட வழமையான மூன்றாவது நபராக இருந்து ஆய்வு செய்து பெறுகின்ற தரவுகளையும்
மற்றும் மூளையின் நரம்பியல் தரவுகளையும் உள்ளடக்கி உள்ளமை
குறிப்பிடத்தக்கது (Thompson, 140). ஆகவே இது மூளையின் பன்முக ஆற்றல்களை அடையாளங்
கண்டுள்ளதுடன் அவற்றுக்கும் பிரக்ஞைக்குமான உறவு குறித்தும்
பலவிதமான கருத்துக்களையும் ஆய்வுகளையும் முன்வைக்கின்றது.
இன்றைய
பிரக்ஞை தொடர்பான ஆய்வு மிகவும் ஆழமானதும் வித்தியாசமானது. பிரக்ஞை (Awareness) என்பது நாம் பிரக்ஞையுடன் (Consciousness)
பார்ப்பவை, அனுபவிப்பவை என அனைத்தையும்
உட்கொண்டுள்ளது. இவை உயர் தரம் வாய்ந்தவையாக இருந்தபோதும் சிக்கலானவையாகவும்
பன்முகத்தன்மையானதாகவும் இருப்பதால் பலவிதங்களில் வரையறைக்கு உட்படுத்தலாம்
என்கின்றது (Velmans, 293). ஊதாரணமாக
வெளி உலகத்திலிருந்து நாம் தொடுபவை, மணப்பவை, சுவைப்பவை,
கேட்பவை, பார்ப்பவை. மற்றும் உடலில் ஏற்படும்
அனுபவம், நோ
(Pain) மற்றும் சுகம்
(இன்பம்) (Pleasure)
உணர்வுகள். இதைவிட
உள்ளார்ந்து அனுபவங்களான எண்ணங்கள், ஞாபகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதாவது
பிரக்ஞை (Awareness) என்பது
பார்ப்பவருக்கும் பார்க்கப்படும் பொருளுக்கும் அப்பாற்பட்டது. வெறுமனே ஒருவர் ஒன்றைப்
பார்ப்பதல்ல பிரக்ஞை (Awareness) என்பது.
ஒரு பொருளை ஒருவர் பார்க்காதபோதும் பார்த்துக்கொண்டிருப்பது.
அதாவது நாம்
பார்க்கின்ற பிரக்ஞையும்(Consciousness), பார்க்கின்ற செயற்பாடை மேற்கொள்கின்ற பிரக்ஞையும் (Awareness)
ஒன்றல்ல என்கின்றார்
கரி லோச்மான்
(Lachman, 34).
மேற்குலகின்
விஞ்ஞானப் பார்வையில் மிக முக்கியமான ஒரு மாற்றமானது பிரக்ஞைக்கும் (Awareness) பிரக்ஞைக்கும் (Consciousness) இடையிலான வேறுபாட்டை சில ஆய்வாளர்களால் என்றாலும்
புரிந்துகொண்டது. இது பிரக்ஞை தொடர்பான அறிதலிலும் புரிதலிலும்
குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையே குறிக்கின்றது.இதன் காரணமாகத்தான் நமது
மூளை, நமக்குத் தருகின்ற
அறிவும், நமது
பிரக்ஞை (Awareness) நமக்குத்
தருகின்ற அறிவுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளதாக
கூறுகின்றனர். மேலும் பிரக்ஞையால் பெறப்படுகின்ற அறிவானது மிகவும்
உயர்தரம் வாய்ந்தது எனவும் கூறுகின்றனர் (Thompson, 4). ஏனனில் இந்த அறிவானது இருநிலை (Dualism)
தத்துவ பார்வைக்கு அப்பாற்பட்டதாக
இருக்கின்றது. இதன் அர்த்தம் பன்முக பார்வை கொண்டதல்ல. மாறாக திசை அற்றது என்கின்றனர் (Timalsina,
5). அதாவது, இது ஒரு சுய ஓளி எனவும் எப்பொழுதும் அனையாது எரிகின்ற
விளக்கு எனவும் கொள்ளலாம் என்கின்றார் (Timalsina, 20). இவ்வாறன, பிரக்ஞையை சாட்சியாக (Witness) இருந்தே அறிந்து புரிந்து உணர்ந்து விளங்கிக் கொள்ளலாம்.
இது பார்ப்பதற்கு, கேட்பதற்கு,
மணப்பதற்கு, பேசுவதற்கு ருசிப்பதற்கான ஆற்றல்களைக்
கொண்டுள்ளது என்கின்றார் திமாலஸினா (Timalsina, 18). பிரக்ஞையின் இவ்வாறான தன்மை அல்லது
பரிமாணம் தான்
அது தொடர்பாக விளக்குவதும் கலந்துரையாடுவது மிகவும் கஸ்டமானதாக இருப்பதற்கு
காரணமாகும்.
இறுதியாக
பிளாட்டோ, டேஸ்காட்ஸ்,
மற்று ஏக்கல்ஸ்
என்பவர்கள் பிரக்ஞை, மனம்,
ஆன்மா என்பவற்றுக்கு
இடையிலான வேறுபாட்டை தெளிவாக முன்வைக்கவில்லை. இருப்பினும் நவீன அறிவியலின்
புரிதலின்படி இவற்றுக்கு புதிய விளக்கங்கள் அர்த்தங்கள் உள்ளன என்கின்றார்
வெல்மான்ஸ் (Velmans 23). பிரக்ஞை
தொடர்பாக ஆய்வு
செய்பவர்களில், சுமார்
மூன்றில் ஒரு பகுதியினர் மனதை பருப்பொருளின் ஒரு வடிவமாகவே பார்க்கின்றனர். ஆனால்
இன்னும் புரிந்து கொள்ளப்படாதது என்கின்றர். இன்னுமொரு மூன்றில் ஒரு
பகுதியினர் மனமும் பருப் பொருளும் வேறு வேறானவை என்கின்றனர். இன்னுமொரு
மூன்றில் ஒரு பகுதியினர் பிரக்ஞையும் பருப்பொருளும் சேர்ந்த வித்தியாசமான ஒரு
கூறு என்கின்றனர் (unified substance -Chalmers) (Papineau & Selina,
54). ஆனால் இதன் தன்மை இன்னும்
அறியப்படவில்லை என்கின்றனர். இதைவிட இந்த மூன்று நிலைப்பாடுகளும் ஒன்றுடன்
ஒன்று உருவாக்குகின்ற கருத்துக்களினால் உருவான வேறுபல புதிய கருத்துக்களும் உண்டு (Rita
Carter 58). இதேவேளை, இன்றைய மேற்குலகின் தத்துவ
மற்றறு விஞ்ஞான புலமைசார் எழுத்துக்களில் பிரக்ஞை தொடர்பாக பிரதானமாக பத்து வகையான கோட்பாடுகள்
முன்வைக்கப்பட்டுள்ளன (Evan Thompson 134-5). (இது கண்சிமிட்டு ஒரு கணத்தில் 21
வகையான பிரக்ஞை
நிலைகள் அதாவது கவனிக்கும் ஆற்றல் கௌதம சித்தாத்தருக்கு இருக்கின்றன என முன்பு குறிப்பிட்டதுடன்
கவனிக்கத்தக்கது). இவை
இன்று பிரக்ஞையின் முக்கியத்துவம் எந்தளவிற்கு விஞ்ஞான உலகிலும்
காணப்படுகின்றது என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது.
மேற்குறிப்பிட்டதன்
படி மேற்குலகின் தத்துவ, விஞ்ஞான,
பௌதிக, உளவியல் மற்றும் நரம்பியல் போன்ற புலமைசார்
துறைகளில் உள்ள பெரும்பான்மையானவர்கள் பிரக்ஞை என்பது இருக்கின்றது என்பதை
ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அதை எவ்வாறு வறையறுப்பது அடையாளப்படுத்துவது
என்பதில் தான் வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே என்னைப் பொறுத்தவரை
பிரக்ஞை என்பது இருக்கின்றது என்பதே எனது நிலைப்பாடும். அது பொருளுடன்
இருக்கின்றதா இல்லையா
என்பதோ அல்லது தனித்து இருக்கின்றதா இல்லையா என்பதோ எனது பிரச்சனையல்ல. முக்கியமாக, பிரக்ஞை என்பது இல்லை எனில் பிரச்சனை
இல்லை. ஆனால்
அப்படி ஒன்று இருக்கின்றது உண்மையாயின் அதை நாம் புறக்கணிப்பதன் மூலம்
நமது வாழ்வில் மாபெரும் தவறை மீண்டும் மீண்டும் இழைக்க முடியாது. ஆகவே
பிரக்ஞை என்பது இருக்கின்றது என நம்பாது ஆனால் ஒரு எடுகோளாக கொண்டு அதை
அறிவதற்கு மட்டுமல்ல எவ்வாறு அதை நம்மில் வளர்ப்பது உருவாக்குவது என்பதையும்
செயற்படுத்துவது அவசியமானதாகும். இதுவே மனித பரிணமா வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு மனிதர்களை
கொண்டு செல்லும்.
பிரக்ஞை
என்பது ஒருவர் இக் கணத்தில் இருக்கின்றா அல்லது இல்லை என்பதைக் குறிக்கும்.
அதாவது குறிப்பிட்ட ஒன்றைப்பற்றி பிரக்ஞையுடன் இருக்கின்றாரா
இல்லையா என்பதாகும்.
கை கால்களுக்கும் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் போன்றதே
உடலுக்கும் மனதிற்கும் அல்லது மூளைக்கும் பிரக்ஞைக்குமான வித்தியாசம். இதனால்தான்
மூளையும் உடலும் பிரக்ஞையும் மனமும் ஒன்றுடன் ஒன்றும் உறவாக
இருக்கும் அதேவேளை ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தையும் நிகழ்த்துகின்றது. ஒரு
பொருள் பார்ப்பவரின் அனுபவத்தைப் பாதிக்கின்றது. இதேபோல் பார்கின்றவரின்
பிரக்ஞையின் நிலை அல்லது தெரிவும் ஒரு பொருளைப் பாதிக்கின்றது ( Velmans;
22). ஆனால் பிரக்ஞை என்பது
மனமோ, ஆன்மாவோ அல்ல (Velmans;>
22). பிரக்ஞை
இருக்கின்றாதா இல்லையா எனவும் ஒரு செயற்பாடு பிரக்ஞையுடன் மேற்கொள்ளப்பட்டதான
இல்லையா என்பதை பரிசோதனை மூலம் கூற முடியும் என்கின்றனர். இதேவேளை,
மனம் என்பது
உளவியலுடன் தொடர்புடையது. இது பிரக்ஞையுடன் உறவை கொண்டதாகவோ
அல்லது கொள்ளாததாகவோ இருக்கலாம். ஆனால் பிரக்ஞையற்ற மனம் (Unconscious
Mind) தொடர்பாக பல
சான்றுகள் இருக்கின்றன (Velmans 23). ஏனனில் இது நமது நாளாந்த வாழ்வில் நாம் தினமும் சந்திக்கின்ற அனுபவிக்கின்ற
கவனிக்கின்ற ஒன்று என்றால் மிகையல்ல.ஆகவே இனிவரும் பகுதியில் தனி மனித பிரக்ஞையின்மை (unconsciousness)
மற்றும் கூட்டுப்பிரக்ஞையின்மை
(collective unconsciousness) ஆகியவற்றின் நன்மை தீமைகள் தொடர்பாகவும் இறுதியாக பிரக்ஞை
என்பது என்ன அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பது
தொடர்பாகவும் பார்ப்போம்.
2000ம்
ஆண்டுக்கு முதல், பிரக்ஞை
என்ற சொல்லை “உயிர்ப்பு”
சஞ்சிகை மூலம் முதன்
முதலில் அறிந்து கொண்டேன். அவர்களைப் பொருத்தவரை ஒரு விடயத்தை எழுந்தமானமாக
அல்லாது, தர்க்க
பூர்வமாக தெரிவு செய்வதே பிரக்ஞை ஆகும். ஆனால் இதே ஆண்டு ஓசோவை வாசித்ததன் மூலம்
பிரக்ஞையின் புதிய பரிணமானம் ஒன்றை அறிந்து கொண்டேன். ஆதாவது, இவ்வாறான தாக்கபூர்வமான முடிவானது நமது
பழைய மனதிலிருந்தே
வெளிவருகின்றது என்பதை நாம் அறியாது இருக்கின்றோம். மேலும் இந்த பழைய மனமானது பிரக்ஞையின்மையாலும்
கூட்டுப் பிரக்ஞையின்மையாலும் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒன்று
என்பதையும் அறியாது இருந்ககின்றோம். அதுவரை நான் பங்குற்றிய கட்சி, அரசியல், நாடகம், பத்திரிகை போன்ற குழுக்களில் ஏற்பட்ட
பல்வேறு தனிமனித மற்றும் குழு வாதப் பிரச்சனைகளுக்கு நமது பிரக்ஞையின்மை மற்றும் கூட்டு
பிரக்ஞையின்மை ஆகியவற்றின் பாதிப்பு முக்கியமான காரணம் என்பது விளங்கியது.
நண்பர்களின் செயற்பாடுகளும் சிந்தனைகளும் மட்டுமல்ல எனது
செயற்பாடுகளும் சிந்தனைகளும் இதற்கு ஆதாரமாக விளங்கின. இதிலிருந்து மீள்வதற்கு,
விடுபடுவதற்கு
பிரக்ஞையை நம் செய்ற்பாடுகளில் சிந்தனைகளின் ஒருங்கினைந்து இருப்பதற்கு ஏற்றவாறு அதை நம்முள்
வளர்ப்பதே சரியான பாதையாகும் என்பதை அறிந்து கொண்டேன். இதுதான் ‘உயிர்ப்பு” சஞ்சிகை குழுவினரது பிரக்ஞை தொடர்பான
விளக்கத்திற்கும் நான் புரிந்து கொண்டதற்கு அடிப்படை
வித்தியாசமாகும். ஆகவே அரசியலில் இருந்து ஓதிங்கிக் கொள்வதற்கு இதுவும் ஒரு
காரணமாகியது. இவ்வாறு அரசியலில் இருந்து ஒதிங்கியது, “நான், எனது குடும்பம்” எனக் குறுகிக் கொண்டு, படித்து ஒரு வேலை எடுத்துக் கொண்டு வாழ்வதற்காக
அல்ல. மாறாக நான் என்னை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டதன் அடிப்படையில், எனது பிரக்ஞையை
வளர்ப்பதற்காக தியானப் பயிற்சியில் முழுமையாக ஈடுபடலானேன். கடந்த 10 வருடங்களாக இந்த முயற்சில் ஈடுபட்டேன்.
இறுதியாக கடந்த மூன்றான்டுகளாக பிரக்ஞை தொடர்பான விஞ்ஞான ரீதியான அறிவை
வளர்ப்பதற்காக உளவியல் துறையைத் தேர்வு செய்து மீண்டும் ஒரு
பட்டப்படிப்பு கற்கலானேன். இதைப் படித்து வேலை எங்கே கிடைக்கும் ஏதாவது ஒரு
தொழில்நூட்ப துறையில் படி என்ற பலரது விமர்சனங்கள் அறிவுரைகளுக்கும் அப்பால்
எனது நோக்கத்தில் உறுதியாக இருந்தேன். ஆனால் நான்கு வருட உளவியல்
பட்டப் படிப்பில் பிரக்ஞையைப் பற்றி படித்தது ஒரு வகுப்பில் மட்டுமே.
அதுவும் மிகவும் மேலோட்டமாக. இதனால் அவநம்பிக்கை ஏற்பட்டபோதும்
பட்டப்படிப்பை முடித்த உடன் சுயமாக பிரக்ஞை தொடர்பாக தேடலானேன். இதன்
பாதிப்புத்தான் நீங்கள் இதுவரை வாசித்த (வாசித்திருந்தால்) பிரக்ஞையின் வரலாறு தொடர்பான குறிப்புகள்..
No comments:
Post a Comment