சங்ககாலம் தொடங்கி திருமணம் ஒரு பெருமைக்குரிய சடங்காகக்
கருதப்பட்டிருக்கிறது. மேல் வருணத்தார் மூவர்க்கு மட்டுமே உரிமையாக இருந்த
இச்சடங்கை கீழ் வருணத்தாரும் கைப்பற்ற ஒரு காலம் பிடித்தது என்பது தொல்காப்பியம்
தரும் செய்தி.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே”
(தொல் பொருள்- கற்பியல், 3)
தோன்றும் போதே, சமூக உயர்வு தாழ்வு
கற்பித்துப் பிறந்த நிறுவனமாகத் திருமணம் இருக்கிறது. சங்க இலக்கியத்தில் காதலும்
திருமணமும் உணர்வுகளை வென்றெடுக்கும் கருப்பொருள்கள் ஆகிவிட்டன. சங்க காலத்தில்
நடைபெற்ற திருமணங்கள் காதல் திருமணமா? பெற்றோர் ஏற்பாட்டுத்
திருமணமா? என்பது குறித்துப் போதுமான விவாதங்கள்
நடந்துவிட்டன.
தமிழ்ப் பற்றுள்ள அறிஞர்கள் இப்பிரச்சினையைத் தொடும் போதெல்லாம் “சங்க காலத்தில் களவு மணம் பெருவழக்கில் இருந்தது. களவு
வாழ்க்கையின்றித் திருமணம் நடைபெறவில்லை என்று கூடக் கூறலாம்” என்ற உணர்ச்சிவசப்பட்ட முடிவுக்கே வருகின்றனர்.
களவு மணம் வழக்கில் இருந்தது என்பது தெளிவான விஷயம். ஆனால் அதுவே
பெருவழக்காக இருந்தது என்பதற்கு எது ஆதாரம், சங்க இலக்கியக் காதல் பாடல்களா?
அப்படியெனில் கடந்த 50 ஆண்டுத் தமிழ்த்
திரைப்படங்களைப் பார்த்துவிட்டு ஓர் ஆய்வாளர், “தமிழ்ச் சமூகத்தில்
கடந்த 50 ஆண்டுகளாகச் சாதி, மதம்
தாண்டிய புரட்சித் திருமணமே பெருவழக்காக இருந்து வருகிறது என்ற முடிவுக்குப் போவது
பொருத்தமாக இருக்குமா?
காதல் திருமணம் பெரு வழக்காக இருந்த சமூகத்தில் காதல் பாடல்கள் இத்தனை
தவிப்புடனும், தடைகளுடனும் பாடப்பட்டிருக்கக்
கூடுமா? இன்னும் அழியாத கண்ணீர்த் தடங்களுடன் பாடல்கள்
காட்சி தர வேண்டிய அவசியம் என்ன?
சங்க இலக்கியக் காதல் பாடல்களை ஆய்வு செய்து, அக்காலத்தில் பெற்றோர் ஏற்பாட்டு மணமே பெரு வழக்காக இருந்திருக்க முடியும்
என்ற முடிவுக்கு வரும் ஆய்வாளர்களும் உளர் “பெற்றோர் அனுமதி’
திருமணத்தின் மிக ஆதாரமான பிரச்சினையாக இருப்பதை அவர்கள் பல பாடல்களின்
வழி எடுத்துக்காட்டுகின்றனர்.
“உன் தாய் யார்? என் தாய் யார்? என வியக்கும் குறுந்தொகைப் பாடல் கூட
(பாடல் 40) வழக்கமான நடைமுறையில் இருந்து நம் காதல்
விலகியிருக்கிறது பார்! என்ற உணர்வையும் பொருளையும் தானே தருகிறது.
குடும்பம் என்ற சொல் முதலில் திருக்குறளில் தான் இடம்பெறுகிறது. சங்க
இலக்கியங்கள் குடி என்ற சொல்லை ஆள்கின்றன. குடி என்னும் சொல், தொழிலாலும் ஒத்த உறவாலும் நெருக்கமுடைய குடும்பங்களின்
தொகுதியைக் குறிக்கிறது. (26) என்னும் ஆய்வு முடிவுகளை இங்கு
கருதத்தக்கன.
குடி, பெற்றோர் அனுமதி, பொருள் ஆகியவை, சங்ககால திருமணம் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தின.
இயக்கின என்பது வெளிப்படை. ‘பெற்றோர் என்பது கூட நழுவுகிற
பொதுச் சொல்லாக இருக்கிறது. தந்தையே மகள் திருமணம் முடிவு செய்யும் அதிகாரம்
பெற்றிருந்தார். தன்னை முறைப்படி வணங்காதவர்களுக்குத் தன் மகளைத் தந்தை
மணமுடித்துத் தருவதில்லையாம்.
“தன்தக, வணங்கார்க்கு
ஈகுவன் அல்லன்’ (புறநானூறு 338) என்கிறது
ஒரு புறப்பாடல் குடிகளுக்கிடையே அல்லது ஒரு குடிக்குள்ளேயே பெற்றோர் ஏற்பாட்டுடன்
நடந்த ஒரு திருமண அமைப்பின் இறுகிய தளத்தைக் கீறி, குடி,
திணை, ஊர் என்ற எல்லைகளைத் தாண்டிப் ஆண் பெண்ணிடையே
காதல் முளை விடுவதும் அந்தக் காதல் பழைய இறுகிய அமைப்பின் சம்மதம் பெற்றுத்
திருமணம் புரியத் தவிப்பதும் சங்க இலக்கியம் உயிர் துடிப்புடன் முன்வைக்கும்
செய்திகளாக இருக்கின்றன.
“ஒரே பிரதேசத்தைச் சேர்ந்ததாக
இருந்தால் களவு மணம் கற்பு மணமாக மாறுவது இலகுவாக இருந்தது” என்கிறார்
மனோன்மணி சண்முகதாஸ் இவ் ஆய்வு உண்மை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. சூழல்
நுண்ணுணர்வை இந்தியப் பண்பாட்டின் இயல்பாகக் குறிப்பிடுவார் ஏ. கே. ராமானுஜன்
சூழலுக்குக் கட்டுப்படாததாக மேற்கத்திய பண்பாடு இருக்கிறது. சங்க காலத்தில் சூழல்
உணர்வு என்பது திணை சார்ந்தது. பிரதேசம் சார்ந்தது.
பிரதேசத் தனித்துவம் காரணமாகவே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என
நிலங்கள் பிரிக்கப்பபட்டன. ஒவ்வொரு திணையும் கட்டிக்காத்த நுண்ணுணர்வுகள் பிரதேச தனித்துவங்கள்
விரிவான ஆய்வுக்குரியவை காதலை விடக் கூட இந்தப் பிரதேச உணர்வு சில உள்ளங்களில்
ஆழமாக ஊன்றியிருக்கிறது. “நெய்தல் தழையைத் தவிர வேறொன்றை
ஏற்க மாட்டோம்” எனத் தலைவன் தரும் கையுறை (பரிசுப் பொருள்)
மறுத்து நிற்கும் தலைவியின் பிடிவாதம் (ஐங்குறுநூறு 187) நம்மை
வியப்பில் ஆழ்த்துகிறது.
இன்னொரு பக்கம், அதே நெய்தல் நிலத்தின்
‘சுதந்திரவெளி’ பிரதேசக் கட்டுமானங்களைத்
தகர்க்கக் கூடியதாக இருக்கிறது. அது வாணிகம் நடக்கும். கடற்கரையின் சுதந்திரவெளி “நீ என்னைப் பார்க்க வரலாம். தடையில்லை. எங்கள் ஊர்க்காரர்களுக்கே ஒருவரை
இன்னொவருக்குத் தெரியாது. பிறர் வருவது யாருக்குத் தெரியப் போகிறது?” என்ற தலைவி தலைவனுக்கு அழைப்பு விடுவது கடற்கரைப் பிரதேசத்தில் சாத்தியமாக
இருக்கிறது.
“இனிவரின் தவறும் இல்லை,
ஏனையதூ உம்
பிறர்பிறர் அறிதல்
யாவது
தமர் தமர் அறியாச்
சேரியும் உடைத்தே’
(நற்றிணை 331)
அது மட்டுமல்ல. அந்தக் கடற்கரைப் பிரதேசத்தில் மகளைக் கடுங்காவல்
காப்பளாகவும் தாய் இல்லை. எல்லோருக்கும் வெளியே வேலை இருக்கிறது. “சுறாமீன் தாக்கிய புண் ஆறி, தந்தை மீண்டும்
மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்று விட்டான். தாய் உப்பை விற்று நெல்லை வாங்கும்
பொருட்டு உப்பளம் சென்று விட்டாள். இப்பொழுது வந்தாலும் தலைவி பார்ப்பதற்கு எளியவள்
(குறுந் தொகை 269) என்று அனுப்பப்படும் தூதும் நெய்தலின் ‘சுதந்திர வெளிக்குச் சாட்சி.
காளையடக்கித் திருமணம் புரியும் நிகழ்ச்சி முல்லையில் மட்டும் நடப்பது.
முல்லையின் தனித்துவமாக இருக்கிறது. ஒவ்வொரு பிரதேசமும் இத்தகைய தனித்துவத்தைப்
பெற்றிருக்கிறது.
பிற திணைகளில் தெரியாத பரத்தமையொழுக்கம் மருதத்தில் மட்டும் தெரிவதேன்? என்ற வினாவுக்கு ‘செல்வச் செழிப்பு,
பண்புகளில் உண்டாக்கிய குந்தகம்’ என்று
ஏற்கனவே ஆய்வுகளில் விடை சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இப்பிரச்சினையை
வேறொரு கோணத்தில் பார்க்கிறார் மனோன்மணி மலை, கடல், காடு ஆகிய பிரதேசங்களில் குடிகளின் கூட்டு வாழ்க்கை கட்டுக்கோப்பாக இருக்க
வேண்டிய கட்டாயம் இருந்தது.
மருதமோ கூட்டு வாழ்க்கையிலிருந்து குடும்பங்கள் சுதந்திரம் பெற்ற
நிலையாகும்.
“நிலையாக ஓரிடத்தில் இருந்து
பயிர்ச் செய்து வாழ்ந்த அப்பிரதேச மக்களிடையே குடும்பங்கள் தனித்து வாழ்வு
நடத்தக்கூடிய வாய்ப்பிருந்தது என்கிறார் மனோன்மணி. சமூகக் கட்டுக்கோப்பிலிருந்த
குடும்பங்களுக்கு கிடைத்த சுதந்திரம் பரத்தமை ஒழுக்கத்திற்கு கதவு திறக்கிறது.
இந்த ரீதியில் சிந்திக்கும் மனோன்மணி “தமிழர் திருமண நடைமுறைகள் பிரதேச சூழலுக்கேற்ப அமைவதும் சாத்தியமாயிற்று
என்ற முடிவை எட்டுகிறார்.
நிலங்கடந்து மணம் செய்து கொள்ள சங்க காலத்தில்
தடை இல்லை. இருப்பினும் இத்தகைய மணங்கள் பலவாகக் காணப்படவில்லை என்று முனைவர்
கு.வெ. பாலசுப்பிரமணியம் கருதுவதும் குறிப்பிடத்தக்கது. சமூகவியல் நோக்கில், சங்கத் திருமணங்களை நிலப்பரப்பு சார்ந்த அகமணம்(ஹிலீrritorial
ரிnனீogaசீy)என வரையறுப்பது பொருத்தமாகப்படுகிறது.
இந்தக் கருத்துக்கு முரணாக உள்ள பாடல்களும் இருக்கத்தான் செய்கின்றன. சிறு
வயது முதல் சண்டையிட்டு, ஓடிப்பிடித்து விளையாடி ஒன்றாக
வளர்ந்தவர்களும் கூட பெற்றோர் சம்மதம் கிடைக்காமல் உடன் போக்குத் திருமணம்
மேற்கொள்ளும் நிலை (குறுந்தொகை 229) ஏற்படுவதையும்
காண்கிறோம்.
நிலப்பரப்புக்குள் நெருங்கிய உறவுக்குள், நிகழ்ந்த காதலுக்கும் அனுமதி கிட்டவில்லை. திருமண முடிவுகளில்
நிலப்பரப்புக்கும் மேலான முன்னுரிமை பொருளாதாரத்துக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டதை
ஒருவாறு நாம் யூகிக்கலாம். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் திருமணத்தை உறுதி செய்ய
எவ்வாறு தடைகளாக அமைந்து விட்டன என்பதை நற்றிணை 45வது பாடல் விளங்குகிறது.
‘மீன் எறி பரதவர்மகள்”
கடுந்தேர்ச் செல்வன் மகனை மணப்பதில் உள்ள தடைகளை அப்பாடலில் காண்கிறோம்.
புலவு நாற்றம் உள்ள தங்களுடைய சிறுவாழ்க்கையைத் தாழ்வு மனப்பான்மையோடு
தலைவி தலைவனோடு பகிர்ந்து கொள்வது மனதைத் தொடுகிறது.
ஊர், பெற்றோர் ஆகிய
குறுக்கீடுகளுக்குப் பணியாமல் காதலின் சக்தியால் ஆபத்துக்களைத் தாண்டிப்
புறப்படுகிறது. உடன் போக்குத் திருமணம் இன்று சாதி மதங்களைத் தாண்டி நடைபோடுகிற
திருமணங்கள் எடுத்து வைத்த முதல் எட்டாக உடன்போக்குத் திருமணம் திகழ்கிறது.
துணிச்சலின் மறுபக்கமாகப் பெண்ணின் பாதுகாப்பு குறித்த அச்சமும் உடன் போக்கில்
வெளிப்படுகிறது.
“முலை தளர்ந்து கூந்தல் நரைத்து
இவள் முதியவளாகும் போதும் இவளைக் கைவிட்டு விடாதே’ (32) என்று
கைகூப்பி வழியனுப்பும் தோழியின் கூற்று இப்பயத்தைப் பிரதிபலிக்கிறது.
காதலித்தவளைக் கைப்பிடிப்பதற்காக “மடலேறி நடக்கும் திருமணம்
மிரட்டல் திருமணமா? அல்லது காதல் போராட்டமா? என்பது குறித்த முடிவுக்கு வரமுடியவில்லை. இத்தகைய போராட்டம் பெண்ணின்
சம்மதத்துடன் தான் நடக்கிறதா என்றும் அறிய முடியவில்லை.
ஆனால் மடலூர்தல் பெண்ணின் பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்த “பாண்டியனுக்குத் திறை செலுத்துவது போல, மடலூர்ந்தவனுக்கு அவர்கள் பெண்ணைத் தருகிறார்கள் (33) நீராட்டுல், சிலம்பு கழிதல், அலங்காரம்
செய்தல் வெண்ணூல் கட்டுதல், மலர், சூடுதல்,
மண அடுப்பில் பால் காய்ச்சுதல் எனச் சங்ககாலத் திருமணச் சடங்குகள்
எல்லாம் பெண்ணை மையப்படுத்தியவையே வாழந்தும் கூட பெண்ணுக்குத்தான்” கணவன் விரும்பும் மனைவியாக இரு” (34) என்பது தான்
வாழ்த்து.
பெண்ணுக்கு ஒரு விலை தந்து (நறுநுதல் அரிவை விலை, அகம், 90) தண்டூன்றிய கையும் நரைத்த
தலையும் உடைய பெரியோர்களைக் கொண்டு பெண் வீட்டுக்கு வந்து மணம் பேசி, முடிக்கும் வழக்கம் (குறுந், 146) அதாவது பெண்ணைத்
தேடி வரும் வழக்கம் அகப்பாடல்களில் தெரிகிறது. புறப்பாடல்களில் தெரியும்
திருமணங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன.
கபிலர் பாரிமகளிர்க்குத் திருமணம் முடிக்க, பாரி மகளிரோடு அரண்மனைகளில் ஏறி இறங்குகிறார். அரசன், பெண்ணைக் கேட்டுப்பெறாமல், பேரெடுத்துப் பெறும்
வழக்கமும் புறத்தில் தெரிகிறது. (புறம் 341) அகமும் புறமும்
ஒன்றையொன்று எதிரொலிக்கவில்லை. முரண்பாடுகள் பளிச்சிடுகின்றன.
அகத்தோடு புறத்தையும் இணைத்துத்தான் பழந்தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்ள
முடியும். பெண் கேட்கும் வழக்கத்தைத் ‘தூது’ என்ற
சொல்லால் சங்க இலக்கியம் குறிக்கிறது. வீடு வந்து பெண் பார்க்கும் வழக்கத்தை அறிய முடியவில்லை.
பொது இடங்களில் திருவிழாக்களில் பெண் பார்க்கும் வழக்கம் ஒருவேளை இருந்திருக்கலாம்.
விழாவில் துணங்கைக் கூத்தாடும் பெண்களையும்
அவர்களில் தாங்கள் விருப்பப்பட்ட பெண்களைப் பெறப் போர் செய்யும் மள்ளர்களையும் ஒரு
சேரக்காட்டும் குறுந்தொகைப்பாடல் (பாடல் 364) பொது நிகழ்ச்சிகளில் பெண்
தேடும் வழக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது.
இன்றும் கூட சில சமூகத்தார், திருவிழாக்களில் பெண்
பார்க்கும் நிகழ்ச்சியையும் சேர்த்தே நடத்துவது நன்கு அறியப்பட்ட செய்தியே.
திருமணச்சடங்கு பெண்ணுக்கான தேவை என்பது முன்னரே கூறப்பட்டது. சங்க
இலக்கியத்தில் இந்தத் தேவை, அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.
என்னைப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை, என்னை மணந்துகொள்”
(நயவாய் ஆயினும் வரைந்தனை கொண்மோ ஐங்குறுநூறு 276) என்றும் “மனைவி என்ற ஸ்தானத்தைக் கொடு” (பெண்டெனப் படுத்தே ஐங்குறு 276) என்றும் பெண் ஆணிடம்
கெஞ்சிக் கதறுவது.
பெண்ணின் திருமணத் தேவையை உறைக்கும்படி வெளிப்படுத்துகிறது.
திருமணநாள் பெண்ணுக்கு எவ்வளவு இனிய நாள் என்பதை விளக்க வதுவை நாளினும்
இனியனால் நமக்கே” (அகம் 352) என்ற ஒரு வரி போதுமானது.
தனித்திருக்கும் பெண் மீதான சமூகப்பார்வை, பெரும்பாலும் அனுதாபம் போர்த்திய வக்கிரமாகவே இருக்கிறது. திருமணம் ஆகாத
பெண், திருமணம் ஆகிக் கணவனைப் பிரிந்திருக்கும் பெண் ஆகியோர்
மீது சாணி அடிப்பது சமூகத்தின் கைவந்த கலை.
“கெழமானாலும் கெட்டானாலும் கட்டிக்கிட்டவ
பிழைப்பாள்” “பத்து வயசுக்கு மேலே ஒரு றையனுக்காவது தள்ளி
விடணும்”
என்ற சொல்வடைகள் சமூக வக்கிரத்தின் வெளிப்பாடுகள்.
தவறு செய்பவனாக இருந்தாலும், கணவனோடு தான் சேர்ந்து வாழ
வேண்டும். பெண் மட்டும் கைக்குழந்தையோடு தனியே இருந்து உண்டு வாழும் வாழ்க்கையால்
பயன் என்ன? என்று அநானூற்றுப்பாடல் (35) “தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்” எனப்
பெண்ணைச் சார்ந்தோர் கூச்சமின்றி வற்புறுத்தும் வார்த்தைகளும் இப்பாடலில் இடம்
பெறுகின்றன.
குழந்தை பெறாத பெண்ணும், குடும்பத்தின் அங்கீகாரம்
இழப்பது நடைமுறையாக உள்ளது. இதற்குப் பயந்து அவள் கணவனின் மறுமணத்தையும் வரவேற்று
ஏற்கக் கூடிய நிலை உள்ளது. “நின்னினும் சிறந்தனள் எமக்கே”
(ஐங்குறு 292) என்று தலைவனுக்கும் மேலாக அவனது
இரண்டாவது மனைவியை நேசித்து வரவேற்று முதல் மனைவி பேசும் வார்த்தைகளில் வெளிப்படுவது
பெண்ணின் குரல் தானா? என்ற ஐயம் இயல்பாக எழுகிறது.
காலந்தோறும் திருமணங்கள்... சங்க இலக்கியத்துக்குப் பின்னர் வந்த
இலக்கியங்களின் வழி நாம் அறியும் திருமணங்களில் பெரும்பாலானவை செல்வந்தர்கள்.
அரசர்கள், கடவுளர், கடவுளடியார் ஆகியோரின் திருமணங்களே, புதிய
சடங்குகளையும் நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தித் தடபுடலாக நடந்த அந்தத்
திருமணங்களைத் தமிழ்த் திருமணங்களின் மாதிரிகளாகக் கொள்ள இயலாது.
இருப்பினும் அவ் இலக்கியங்களின் வழி சில சந்தேகங்கள் நிவர்த்தி ஆகின்றன.
அத்தை மாமன் வழி உறவுத் திருமணங்கள் சங்க காலத்தில் இருந்தனவா என்ற கேள்விக்கு
விடை சங்க இலக்கியத்தில் இல்லை. மணிமேகலை அத்தகைய உறவுத் திருமணத்தை உறுதி
செய்கிறது. தருமதத்தன் தன் மாமன் மகள் விசாகை யைத் திருமணம் முடிப்பது பற்றிய
செய்தியை மணிமேகலை தருகிறது.
சங்க காலத்தில் தாலி இருந்ததா என்பது குறுத்தும் சந்தேகம் இருந்தது.
பின்னமை நெடுவீழ (நெடுநல்வதடை) “ஈகையறிய இழையணி (புறநானூறு 127)
போன்ற தொடர்கள் தாலியைக் குறிக்கின்றனவா? என்றறிய
ஆய்வுகள் நடந்தன. பின்னர் வந்த பெரியபுராணம், கோதில் மங்கல நூல்
தாலி, (குங்கிலியக்கலைய நாயனார் புராணம்) என்று தெளிவுபடத்
திருமணத்தில் தாலியை நிலை நிறுத்தியது.
சமூகத்தில் மதிப்புமிக்கோர் புரிந்த திருமணங்கள் ஆதலால், விமரிசையுள்ள பொது நிகழ்ச்சிகளாகவே இது நடந்தேறின. கண்ணகி
- கோவலன் திருமண விழாவில் அரச வாழ்த்தும் இடம்பெற்றது. திருமண விழாக்களில்
அரசியலும் இடம்பெற்றது. ஒரு புதிய மரபே.
வீதி ஊர்வலமும் ஒரு புதிய நிகழ்ச்சியாகத் திருமணத்தில் இணைகிறது.
சிலப்பதிகாரத்தில் மங்கல அணிக்கு ஊர்வலம்; சீவக சிந்தாமணியில்
மணப்பெண்ணின் ஊர்வலம் (கோவிந்தையா), பெரிய புராணத்தில்
மாப்பிள்ளை ஊர்வலம் (திருஞானசம்பந்தர்) மங்கல அணி ஊர்வலத்திலும், மணப்பெண் ஊர்வலத்திலும் தோன்றாத வரவேற்பு முறைகள் மாப்பிள்ளை ஊர்வலத்தில்
தோன்றின.
ஊர்வலமாக வரும் மணமகனின் காலைக் கழுவி, மணமகளின் பெற்றோர் மணமண்டபத்துக்குள் வரவேற்பதாக பெரியபுராணம் அம்மி
மிதித்தல், மணமகள் நெற்றியில் குங்குமம், அப்பல் போன்ற புதிய பழக்கங்கள் தமிழர் திருமணத்திற்குள் நுழைந்தமையை
ஆண்டாளின் திருமணக் கனவுப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
மணவறை, வேள்விமன்று திருமண மண்டபம்
போன்ற சொற்களம் இடைக்கால இலக்கியத்தில் புழக்கத்துக்கு வரலாயின. மணவறையில் நீர்
விளக்கு இவற்றோடு அரசிலை, தர்ப்பைப்புல் ஆகியவையும்
இடம்பிடித்தன. சோதிடர்கள் ஆராய்ந்து கூறிய நல்ல நாளில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடக்கும் நேரத்தைப் பழுதில் நற்பொழுது என்கிறது பெரிய புராணம். “குலம் பேசியே திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டன. நிலப்பரப்பு
சார்ந்த மணம், குலம் கோத்திரம் சார்ந்த மணமாக வடிவம்
மாறியது. பெண்ணை தாரை வார்த்துத் தருதலும் தீவலம் வரும் சப்தபதிச் சடங்கும்.
இடைக்காலத்தில் தான் பிரபலம் பெறுகின்றன.
தழைவிலை, அரிவை விலை எனச் சங்க
காலத்தில் பல பெயர்களில் நிலவி வந்த ‘மணப்பெண் பரிசு’
(பரிசம்) படிப்படியாகக் கைவிடப்பட்டு மணமகனுக்கான சீதனமாக மாற்றம் பெறுகிறது.
பரிசம், சீதனம், இரண்டுமே பெண்ணை ஒரு
பொருளாகக் கருதிய நடைமுறைதான்.
முன்னதில் பெண்ணுக்கு ஒரு மரியாதை இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது.
சீதனமோ ஒரு சமூகக் குற்றமாகும். குணமலையின் தந்தை பொன் பொருளோடு இளம் பெண்களையும்
சீவனுக்குச் சீதனமாகத் தந்ததாகச் சீவகசிந்தாமணி பாடுகிறது.
“அருள் இலஞ்சி வேலர் தமக்கொரு பெண்ணைக்
கொடுத்தோம். ஆதீனத்து மலைகளெல்லாம் சீதனமாகக் கொடுத்தோம்”
என்று சீதனம் தந்த பெருமைகளைக் குதூகலித்துப் பாடுகிறது. குற்றாலக்
குறவஞ்சி.
இடைக்காலத்தமிழர் திருமண முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களில் முற்போக்கான
மாற்றம் எதுவுமில்லை என்பது தெளிவு.
புரோகிதர் வைத்து திருமணம் நடத்துவது சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது
ஆகிய இரு நடைமுறைகளை மட்டும் கடுமையாக எதிர்த்து பிற சடங்குகளில் மிகவும் நெளிவு
சுளிவான அணுகுமுறையை மாநாடு கடைப்பிடித்தது. தாலி கட்டல், தீவலம் வருதல்,அம்மி மிதித்தல் எல்லாம்
தமிழர்களுக்கே உரிய சடங்குகள் என்று மறைமலையடிகள் உறுதிபடச் சொன்னார்.
“சடங்குகள் எப்படியாயினும்
இருக்கட்டும்” என்றே பிற அறிஞர்களும் சொன்னார்கள். சாதீயத்
தடைகள், பலதாரமணம் போன்ற சமூகப் பிரச்சினைகளை மாநாடு
கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை” அந்தணப் புரோகிதர்களின்
இடத்தில் சைவப்பெரியோர், வட மொழி மந்திரங்களுக்கு மாறாகத்
தமிழ்ப் பாடல்கள் என்பதே சைவர்கள் உருவாக்கிய தமிழ்த் திருமண முறை (39) என்கிறார் ஆ. இரா. நெடுஞ்செழியன் எனவே முற்போக்காளர் மத்தியில் இத் திருமண
மாநாட்டுக் கருத்துரைகள் தாக்கத்தைஏற்படுத்தவில்லை.
”தமிழில் நடக்கும் திருமணம்
எல்லாம் தமிழர் திருமணம் ஆகிவிடாது (40) என்று மறுக்கும்
நிலையே உருவானது மா. இராசமாணிக்கனார் (தமிழர் திருமண நூல்) சு. வித்தியானந்தன்
(தமிழர் சால்பு) பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார் (தமிழ்த் திருமணம்) ஆகியோர்
எழுதிய நூல்களிலும் சடங்குகளைத் தமிழ்ப்படுத் தும் முயற்சியே முனைப்பாக இருந்தது.
சடங்குகளைக் கைவிடுவது, முற்போக்கான மாற்றங்களைக்
கொண்டுவருவது, திருமணத்தில் கலந்துவிட்ட சமூகக் குற்றங்களைச்
சாடுவது போன்ற சிந்தனைகள் எல்லாம் அக்காலத்திற்குப் புதியன ஒன்றும் அல்ல. ஆனால்
தமிழ்த் திருமணம் குறித்து எழுதப்பட்ட நூல்களில் அக்குரல் ஒலிக்கவில்லை.
தமிழறிஞர்கள் முன்வைத்த பழைய சடங்குகளே நிறைந்த தமிழர் திருமண முறைக்கு
மாற்றாக, திராவிடர் புரட்சித் திருமணம்
என்று ஒரு புதிய வடிவத்தைச் சிந்தித்தார். பாவேந்தர் பாரதிதாசன் தாலிக்குப் பதிலாக
மோதிரம் மாற்றுதலை அறிமுகப்பத்தினார் கவிஞர். அறிஞர் பெருமக்கள் மணமக்களை
வாழ்த்தும் நிகழ்ச்சிகளுக்கும் அவர் முக்கியத்துவம் தந்தார்.
“உள்ளம் ஒப்புவது மணமாம்”
என்ற கருத்தை வலிமையானச் சொன்னவர் பாவேந்தர்.
“கொடியச் சாதிய நாய் குலைக்கு
முன்னே நடந்து வா அன்னமே” என்று அவருடைய பாடலில் தலைவன்
தலைவியை அழைப்பான். தமிழறிஞர்கள் சிந்திக்க மறந்த சமூகப் பிரச்சினைகளை எல்லாம்
சிந்தித்தவர் பாரதிதாசன்.
அவருடைய திருமணத் திட்டத்தில் இருந்த ஒரே குறை மனைத்தக்க மாண்புடையாள் ஆக
வேண்டும். தன்னையும் காத்து தன் கொழுந்தனையும் காக்க வேண்டும் என்று மணவிழா
அறிவுரைகள் எல்லாம் பெண்ணை நோக்கியே இருப்பது “கணவன் விரும்பும் பெண்ணாக இரு”
என்ற சங்க கால வாழ்த்தின் தொடர்ச்சியாகவே பாரதிதாசன் வாழ்த்தும்
அமைந்தது.
No comments:
Post a Comment