Sunday, January 03, 2016

கலில் கிப்ரான் கவிதை


என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
என் ஆத்மாவே ! நீ
ஏன் அழுகிறாய் ?
என் பலவீனத்தை நீ
அறியாயோ ?
உன் கண்ணீரின் கூர்மை
காயப் படுத்தும்
என்னை ஊடுருவி !
காரணம்
என்பிழை தெரியா தெனக்கு !
எதுவரை நீடிக்கும்
உன் அழுகை ?
நின் கனவுகள், ஆசைகள்,
அறிவுரைகள்
எவற்றையும் கலைக்க என்னிடம்
எதுவு மில்லை
மனித வார்த்தைகள் தவிர !
என் மீது கண்ணோக்கு
என் ஆத்மாவே !
உன் உபதேசங்களைக்
கவன மாய் நான்
பின்பற்றி
இரை யானது
என் வாழ்வு முழுவதும் !
எப்படி நோகிறது பார்
என் இதயம் ?
களைத்துப் போனது
என் வாழ்க்கை
பின்பற்றி உன்னை !
உன்னதம் பெற்றது
என் இதயம்
உன் ஆசன பீடத்தில் !
அடிமை யானது உன்னிடம்
இப்போது
பிணைத்துக் கொண்டு ! எனக்குத்
துணைவனாய் இருந்த
என் பொறுமை
இப்போது எனக் கெதிராய்ப்
போட்டி போடுது
பகைவனாய் !
வாலிப வயதெனக்கு
வழங்கியது
வாழ்வில் ஓர் நம்பிக்கை !
கண்டிக்கும் அது என்னை
இப்போது
கவனக் குறைவால்
பேணிப் பாராததால் !
எப்போதும் ஏன் என்னை
வற்புறுத் துகிறாய்
என் ஆத்மாவே ?
எனது இன்பங்களை எல்லாம்
புறக்க ணித்தேன் !
உன் அறிவுரைக் குடன்பட்டு
என்மீது புகுத்திய
உன் நியதியைப் பின்பற்றி
வாழ்வின் பூரிப்பைத்
துறந்தேன் !
நீதி வழங்கு நீ எனக்கு !
அல்லது
கொடு மரணத்தை
விடுவிக்க என்னை
நியாயமே உனது உன்னத
நெறியான தால் !
என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
என் மீது அன்பை
ஏற்றி இருக்கிறாய்
என்னால்
சுமக்க முடியாப் பளுவாய் !
நீயும் அன்பும்
இணை பிரியா வல்லினம் !
ஆனால்
நானும் செல்வமும்
இணை பிரியா பலவீனம் !
எப்போ தாவது
போராட்டம் நின்று விடுமா
வல்லினத் துக்கும்
மெல்லினத் துக்கும் இடையே ?
என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
என் பிடிக்கு அகப்படாத
அதிர்ஷ்டத்தை
எனக்கு அளித்தி ருக்கிறாய் !
நீயும் அதிர்ஷ்டமும்
உச்சி மலையில் மீது
உட்கார்ந் திருக்கிறீர் ! ஆனால்
நானும் இடர்களும்
பள்ளத்தில்
தள்ளப் பட்டுள்ளோம்
ஒன்றாக !
எப்போ தாவது கூடி
ஐக்கிய மாகுமா
மலையும் பள்ளமும் ?
என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
எழில் மயத்தை காட்டினாய்
எனக்கு ! ஆனால்
ஏனோ அதை ஒளித்து வைத்தாய் !
நீயும் எழிலும்
ஒளிச்சுடராய் வாழ்கிறீர் !
ஆனால்
நானும் அறியாமையும்
இருள் வெளியில்
சிறைப் பட்டோம் !
எப்போ தாவது
படையெடுத்து வெல்லுமா
ஒளி யானது
இருளின் மீது ?
முற்றுப் பெறுவதில் தான்
உந்தன் பூரிப்பு
வந்தடையும் உனக்கு ! அதை
எதிர்பார்த்து நீ
இன்பம் அடைகிறாய்
இப்போது !
ஆயினும் இந்த உடல்
வாழ்க்கையில் துன்புறுகிறது
வாழ்ந்திடும் போது !
இதுதான் என்னைக் குழப்பும்
என் ஆத்மாவே !
முடிவற்ற நீடிப்பை நோக்கி
துரிதமாய்ப் போகிறாய் நீ !
ஆயினும் இந்த உடல்
மெதுவாகச் செல்லுது
மரணத்தை நோக்கி !
காத்து நிற்ப தில்லை நீ
அவனுக்கு !
விரைவில் அவனும்
மறைவ தில்லை !
இது சோக மளிக்கும் எனக்கு
என் ஆத்மாவே !
சொர்க்க புரி உன்னை
ஈர்ப்பதால் நீ
உயரத்தில் ஏறுகிறாய் !
ஆயினும் இந்த உடல்
கீழே வீழ்கிறது
பூமியின் ஈர்ப்பால் !
ஆறுதல் அளித்திடாய் நீ
கடவுளுக்கு !
அவரும் உனைப்
பாராட்டுவ தில்லை !
இதுதான் என் அவலநிலை
என் ஆத்மாவே !
மெய்ஞானக் களஞ்சியம் நீ
ஆயினும் இந்த உடல்
அறிவைப் புரிவதில்
பரம ஏழைதான் !
விட்டுக் கொடாதவன் நீ !
கீழ்ப்படி யாதவன்
அவனும் !
இதுதான் எனக்கு வேதனை
என் ஆத்மாவே !
இரவின் மௌன வேளையில்
தேவனைக் காணச் சென்று
இனித்திடும்
தெரிசனம் பெறுவாய் !
ஆயினும் இந்த உடல் என்றும்
முடங்கிக் கிடக்கும்
பிரிவிலும்
நம்பிக்கை இழப்பிலும்
கசப்ப டைந்து !
இதுதான் எனக்குச் சித்திரவதை
என் ஆத்மாவே !
பரிவு காட்டு என்மீது
என் ஆத்மாவே !

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...