|
|
நான் தமிழ் இலக்கிய மாணவன் என்றாலும் எழுத்து
காலத்திலிருந்தே தொடர்ந்து சிற்றிதழ்களோடு
உறவுகொண்டிருந்தேன். செல்லப்பாவோடு நடத்திய உரையாடல்கள் மூலம் புதுக்கவிதை, இலக்கியம், திறனாய்வு
குறித்த புதுப் பார்வைகளும் எனக்குள் இடம்பெறத் தொடங்கின.
கசடதபற தொடங்கிப் படிகள், பிரக்ஞைவரையில் எல்லா
இதழ்களையும் தொடர்ந்து வாசித்ததோடு
கோவையில் இவை குறித்து இலக்கிய அரங்குகளில் நண்பர்கள்கூடி விவாதித்தோம்.
கசடதபற மூலம் நவீன ஓவியம், நவீன
நாடகம் பற்றிய பார்வைகளையும் செரித்துக்கொண்டோம்.
இலக்கியம் என்ற தளம் கலாச்சாரம் முதலிய தளங்களோடும் நெருக்கமான உறவு கொண்டது. நவீன இலக்கியம்
குறித்த விவாதங்கள் எங்கள் பார்வையை விரிவுபடுத்தின. க.நா.சு., கு.ப.ரா., மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, நகுலன், அசோகமித்திரன், பிரமிள், ஞானக்கூத்தன், இந்திரா
பார்த்தசாரதி போன்றோரது எழுத்துக்களை
மிகுந்த கவனத்தோடு படித்து விவாதித்தோம்.
புதிய தலைமுறை (1968-70) காலம்
முதற்கொண்டே கட்சி மார்க்சியரோடு நாங்கள் முரண்பட்டதோடு
மாவோவின் நெறியில் மார்க்சியத்தை வளமாகப் பயின்றோம். தோழர் எஸ். என். நாகராஜன் முன்வைத்த
மார்க்சியம் எங்களுக்குள் ஆழமாகப் பதிந்தது. எழுத்து, கசடதபற போன்ற சிற்றிதழ்கள்
மார்க்சியம், திராவிட இயக்கம்
ஆகியவற்றுக்கு எதிரான பார்வைகளையே கொண்டிருந்தன.
கட்சி மார்க்சியரோடு கூர்மையாக முரண்பட்டபடியே தமிழ் இலக்கியம் மற்றும் நவீனத்துவப்
பார்வைகளை நாங்கள் கற்றுக்கொண்டிருந்தோம். கசடதபற போன்ற இதழ்களில்
இடம்பெற்ற மேற்கத்தியச் சார்பையும் நாங்கள் மறுத்தோம். ஞானக்கூத்தனின் எட்டு கவிதைகளில் உள்ளோட்டமாக
இருக்கும் அந்நியமாதலை மார்க்சிய நண்பர்களும் கண்டுகொள்ளவில்லை.
மார்க்சின் கையெழுத்துப் படிகளில் இடம்பெற்றிருந்த அந்நியமாதல் குறித்து எஸ். என். நாகராஜன்
எங்களுக்கு ஏற்கெனவே கற்பித்திருந்தார்.
1970களின் இறுதியிலும்
எண்பதுகளின் தொடக்கத்திலும் இலக்கிய வெளிவட்டம், படிகள்
ஆகிய இதழ்களின் நண்பர்கள்
எங்களுக்கு நெருக்கமாயினர். நடராசன், ராஜ்கௌதமன், ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன், தமிழவன், ஜி. கே.
இராமசாமி ஆகியவர்களோடும் நிஜ நாடக இயக்கம் மு. இராமசாமி, திருச்சியில்
திரைப்படச் சங்க நண்பர்கள் மற்றும் மதுரை, சென்னை
முதலிய நகரங்களில் இருந்த நண்பர்கள்
பலரும் கூடி இலக்கு என்னும் கலாச்சார இயக்கத்தைத் தோற்றுவித்தோம்.
குறைந்தது ஐந்தாண்டுகள் மிகச் சிறப்பாக நடைபெற்ற இலக்கு சந்திப்புகள்
எங்கள் புரிதலை விரிவுபடுத்தின. சிற்றிதழ் இயக்கம் என்பது அடிப்படையில்
வணிகக் கலாச்சாரத்திற்கு எதிராக, மக்கள்
மத்தியில் ஆரோக்கியமான கலாச்சாரத்தை
வளர்த்தெடுக்கிற இயக்கமாகத்தான் இருக்க முடியும். இந்த இயக்கம் இலக்கியத்தோடு மட்டும்
உறவுகொண்டதாக இல்லாமல் நவீன ஓவியம், நவீன
நாடகம், புதிய வகைத்
திறனாய்வு முறை முதலியவை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். முதலாளியத் திற்குச் சேவைசெய்வதாக இந்த
இயக்கம் இருக்க முடியாது என்பன போன்ற உணர்வுகள் எங்களுக்குள்
உருவாகத் தொடங்கின.
புதிய தலைமுறை , வானம்படிகள்
அடுத்து பரிமாணம் ஆகிய இதழ்கள், இயக்கங்களோடு
உறவு கொண்டிருந்ததன் பின்னர்
கோவையிலிருந்த நண்பர்கள் சிலரோடு இணைந்து 1983இல் நிகழ் இதழைத் தொடங்கினோம்.
ஏழுவரையிலான இதழ்களில் கூடுதலாக இலக்கியத்திற்கே இடமளித்தோம். தொடக்கத்தில் சுகுமாரன்
ஆசிரியராக இருந்தார். அடுத்து நண்பர் க. ரத்தினம். கவிதைகள், சிறுகதைகள்
ஆகியவற்றோடு திறனாய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றன. சுந்தர ராமசாமியின்
ஜே. ஜே. சில கவிதைகள் நாவல் குறித்துப் பல்வேறு இதழ் களில் வெளிவந்த மதிப்பீடுகளைத் தொகுத்து, இவற்றிற்கு
எதிர்வினை என்ற முறையில் நிகழ் நண்பர்கள் விரிவான
உரையாடலை நடத்தி, எங்கள் கருத்துரைகளைத்
தொகுத்து வெளியிட்டதைச் சிறப்பாகக் குறிப்பிட
வேண்டும். வானம்பாடி இயக்கம் நின்றுவிட்ட நிலையில், அந்த
இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமானவர்களில்
ஒருவரான நண்பர் அக்னிபுத்திரனின் உரையாடலை வெளியிட்டோம்.
தெரிகள் இதழுக்காக சுந்தர ராமசாமி, என்னிடம்
கேட்டுப் பெற்றிருந்த டி. எஸ்.
எலியட்டின் இலக்கியக் கொள்கை என்ற எனது விரிவான கட்டுரை நிகழில் இடம் பெற்றது. சு.ரா.
இக்கட்டுரையைத் திருப்பி அனுப்பியிருந்ததையும் இக்கட்டுரையின் தகுதி பற்றி நம்பிக்கையோடு
சுகுமாரன் இந்தக் கட்டுரையை வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தி
வெளியிட்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
கன்னட மொழியிலிருந்து நண்பர் அரசு மொழிபெயர்த்த சிறந்த
கவிதைகள் பலவற்றைத் தொடர்ந்து
வெளியிட்டோம். விமலாதித்த மாமல்லன், கோணங்கி
ஆகியவர்களின் சிறுகதைகளும் நிகழில்
வெளிவந்தன. 7ஆம் இதழோடு நிகழை
நிறுத்தினோம். 16, 24 பக்கங்கள் என்ற அளவில் மட்டும் இதுவரையிலான நிகழ்
இதழ்கள் அமைந்தன.
1988இல் கண்பார்வை பழுதுபட்டதும்
பள்ளிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற நிலையில், இலக்கியத்தோடும்
மார்க்சியத்தோடும் விரிந்த அளவில் நண்பர்கள், இலக்கியவாதிகளோடும்
நான் அதுவரை கொண்டிருந்த உறவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ள இயலாத நிலையில் சில
நண்பர்களின் ஒத்துழைப்போடு நிகழை மீண்டும் தொடங்கினேன். எண்பதுகளின்
இறுதியில் உலக அளவில் அரசியல், பொருளியல்
முதலிய எல்லாக் களங்களிலும் மாபெரும்
அதிர்வுகள், மாறுதல்கள்
நிகழ்ந்துகொண்டிருந்தன. குறிப்பாகக் கிழக்கு ஐரோப்பாவில்
சோசலிசத் தகர்வு. 1975இல் நெருக்கடி நிலையால்
இந்திய அரசின் அணுகுமுறையிலும் பெரும்
மாற்றங்கள் நிகழ்ந்தன. இலக்கியவாதிகள் முதற்கொண்டு இனி எவரும்
பழைய உலகத்தோடு வாழ முடியாது என்றானது. உலக அளவிலான அதிர்வுகளை உள்வாங்கிக்கொண்டு அவற்றிற்கு
எதிர் வினையாற்றுவது அவசியமானதாக மாறியது. தமிழகத்தில்
நிறப்பிரிகை முதலிய இதழ்கள் முற்றிலும் நவீனமான பார்வையை முன்வைத்துச் செயல்பட்டன. அமைப்பியல் போன்ற
புதிய அணுகுமுறைகள் தமிழ் இலக்கிய உலகில் எதிரும் புதிருமான
ஆய்வுகள் மற்றும் விமர்சனங்களைத் தோற்றுவித்தன. எம். டி. முத்துக்குமாரசுவாமி, நாகார்ஜுனன்
தொடங்கி, வேறு சிலரும் அமைப்பியல், மொழியியல், நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம்
என்றெல்லாம் பெருமளவில் பேசத் தொடங்கினர்.
இத்தகைய சிக்கலான சூழலை எதிர்கொள்ளும் முறையில் நிகழ் செயல்பட்டது. 88இல்
தொடங்கி 96வரை 25 இதழ்களை
நண்பர்கள் ஒத்துழைப்போடு நான் வெளியிட்டேன். 48, 52, 64, 80,1 00 எனப்
பக்கங்கள் கூடிக்கொண்டிருந்தன. நூல் மதிப்புரைகளை நிறைய வெளியிட்டோம்.
அவ்வப்போது சிறுகதைகளும் நிகழில் இடம்பெற்றன. புதிய நண்பர்கள் பலர் நிகழில் எழுதினர்.
நிகழின் முக்கியப் பணிகள் சிலவற்றை இங்கே
சுருக்கமாகவேனும் நான் பதிவுசெய்ய வேண்டும்.
முதன்மையாக சோவியத் ஒன்றியத்தில் தொடங்கிய சோசலிசத் தகர்வுக்கு எங்கள் எதிர்வினைகள் என்னவாக இருந்தன
என்பதைச் சொல்ல வேண்டும். உலகில் இனி மார்க்சியத்திற்கு
வாழ்வில்லை. சோசலிசம் பொய்யாய், பழங்கனவாய்ப்
போய்விட்டது. இனி சோசலிசத்தைப்
புதுப்பிக்க முடியாது. இத்தகைய கருத்துகளை முதலாளியர் மட்டும்தான் தீவிரமாகப் பரப்பினர்
என்பதில்லை. மார்க்சியர் என்று தம்மை நம்பிக்கொண்டிருந்த கட்சி சார்ந்தவர்க்குள்ளும்
இத்தகைய அவநம்பிக்கைகள் எழுந்தன. 1965 முதல்
எங்களை நெறிப்படுத்திய தோழர் எஸ்.
என். நாகராஜன் அவர்களைப் பொறுத்தவரை நாம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து
இருந்ததுதான் இப்பொழுது நடந்திருக்கிறது. மார்க்சியம் மீண்டும் தன்னைப்
புதுப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் இப்பொழுது கிடைத்திருக்கின்றன என்று உறுதியாகப் பேசினார்.
இம்முறையில் எஸ். என். நாகராஜன் முன்வைத்த ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை நிகழ் தொடர்ந்து
வெளியிட்டது. இப்பார்வையை ஒத்த நண்பர்கள் சிலரும் தொடர்ந்து
எழுதினர்.
உற்பத்திச் சக்திகளுக்கு முதன்மை தருகிற மேற்கத்திய
மார்க்சியத்தை ஆணியம் என்றும் உற்பத்தி
உறவுகளுக்கு முதன்மை தருகிற கீழை மார்க்சியத்தைப் பெண்ணியம் என்றும் நாகராஜன் பெயரிடுகிறார்.
இதிலிருந்து மார்க்சியத்தின் உட்கூறுகளான சூழலியம், பெண்ணியம், தலித்தியம்
முதலான விளக்கங்களை நாம் பெற முடியும். சூழலியம், பெண்ணியம், தலித்தியம்
போன்ற கருத்தியல்களில் நிகழ் ஆர்வத்தோடு பலரிடமிருந்தும் கட்டுரைகளைப் பெற்று வெளியிட்டது. உலகளவில்
மேற்கத்தியரின் ஆதிக்கம் தொடக்கத்தில் டங்கல் திட்டம் பிறகு பொது
வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக உலக வணிக நிறுவனம் என்ற பெயர்களில் முன் வைக்கப்படுகிற மேற்குலகின்
அரசியல், மற்றும் பொருளியல் ஆதிக்கம்
குறித்த கட்டுரைகளை நிகழ்
பெருமளவில் வெளியிட்டது. இரவி சீனிவாஸ் எழுதிய கட்டுரைகள் இம்முறையில் குறிப்பிடத்தக்கவை. பசுமைப்
புரட்சி என்ற பெயரில் உழவர்களின் வாழ்வையும் நிலங்கள், நீர்நிலைகள்
முதலியவற்றையும் நாசமாக்கும் போக்குக்கெதிராக இயற்கை வேளாண்மை குறித்த கட்டுரைகள் நிகழில்
வெளியிடப்பட்டுள்ளன. இன்று இந்திய அளவில் பேசப்படுகிற அறிஞர் நம்மாழ்வாரின் கட்டுரைகளை
நிகழ்தான் முதலில் வெளியிட்டது. சோவியத் ஒன்றியம் தகர்ந்த நிலையில்
கியூபா தனக்கான வேளாண்மை முறை இயற்கை வேளாண்மையாகத்தான் இருக்கும் என்பதைக் கண்டுகொண்டதைக்
குறித்தும் நிகழில் கட்டுரைகள் வெளியாகின.
நிகழின் கருத்தியல் வளமான மார்க்சியம் என்பதை
உறுதிபடுத்தும் வகையில் பல துறை சார்ந்த
கட்டுரைகள் நிகழில் தொடர்ந்து வெளியாயின. கட்சி மார்க்சியரைப் பொறுத்தவரை உளவியல் அறிஞர் பிராய்டைத்
தொடர்ந்து சாடிக்கொண்டிருக்கும் நிலையில் எரிக் ப்ராம், மாஸ்லோ, விக்டர்
ப்ராங்கள் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகளையும் நிகழ் வெளியிட்டது.
பிராய்டையும் மார்க்ஸையும் இணைத்துப் பார்க்கும் மனிதநேய உளவியலாளர் எரிக் ப்ராமைப் பின்பற்றி
நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களுக்குள் ஆதிக்கம் எவ்வாறு
உள்ளிருந்து செயல்படுகிறது என்பது குறித்து இரவி சீனிவாஸ§ம் பூரணச் சந்திரனும் விரிவாக
எழுதினார்கள். நவீன கால இயற்பியலும் இந்திய ஆன்மிகமும் இணைய முடியும் என்ற முறையில்
ப்ரிட்ஜ் ஆப் காப்ரா எழுதியதை மேற்கோள்காட்டி சுஜாதா எழுதினார்.
விஞ்ஞானமும் விபூதிப் பட்டையும் என்று பெயரிட்டு சுஜாதாவைச் சாடி பிரமிள் எழுதினார். ஸ்டீபன்
ஹாக்கிங்ஸ் குறித்து ஆழமான முறையில் விமர்சித்து ஜீவ ஒளி
எழுதினார். ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி
முதலிய துறைகளில் நிகழ்ந்த மாபெரும் சாதனைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிஞர் தரம்பாலும்
வேறு சிலரும் நூல்கள் வெளியிட்டுள்ளனர். தரம்பாலின் ஆய்வுகளைத்
தொகுத்து ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் கட்டுரை எழுதினார். இந்தியாவின் அரசியல், பொருளியல், வரலாறு, முதலிய
அனைத்தினுள்ளும் இந்துத்துவம் எவ்வாறு செயல்பட்டது, செயல்படுகிறது
என்று இந்து, இந்தி, இந்தியா
என்று எஸ். வி. ராஜதுரை எழுதிய
நூலை விமர்சித்து ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் எழுதினார். நிகழ் அவருக்கு அரியணையிட்டு ராஜ
மரியாதைசெய்தது என்று தலைப்பிட்டு எஸ். வி. ஆர் மறுப்புரை தந்தார்.
காந்தியாரின் சத்தியாகிரகம் என்ற போர்முறையை கிராம்சி
மறுத்தார் என்றும் ஏற்றுக்கொண்டார்
என்றும் விவாதக் கட்டுரைகள் நிகழில் வந்தன. மேற்கத்திய மார்க்சியம் குறித்து இதைப் போலவே
மாறுபட்ட மதிப்பீடுகளைத் தரும் கட்டுரைகளும் இடம்பெற்றன. ஜெரோமி
ரிப்சின்சி என்பவரின் அர்ஜென் என்ற உலகளவில் புகழ் பெற்ற நூல் குறித்து, சிங்கராயர்
விரிவாக எழுதினார். டார்வினின் வாழ்க்கை ஒருவகையில் அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கை. இர்விங் ஸ்டோன்
எழுதிய நூலை அழகிய நடையில் சிங்கராயர் தமிழில் தந்தார். இவ்வகையான
கட்டுரைகளை மரபான, வைதீக மார்க்சியர்
கண்டுகொள்ளவேமாட்டார்கள். மார்க்சியம்
தன்னளவில் முற்ற முடிந்த ஒரே மெய்யியல் என்றுதான் இவர்கள் உரத்துப் பேசுவார்கள். மார்க்சியம்
தன்னளவில் விரிந்துகொடுத்து உலகளவில் வளர்ந்துவரும் அறிவுத்
துறை முதலியவற்றின் ஆக்கங்களைத் தனக்குள் செரித்துக்கொள்ள முடியும் என்னும் நோக்கத் தோடுதான், பூகோ, ஐவான்
எலிச் முதலியவர்கள் பற்றிய கட்டுரைகளையும் நிகழ் வெளியிட்டது.
உலகளவிலான தலைசிறந்த இலக்கியப் படைப்புகள் குறித்த விரிவான கட்டுரைகளும்
இந்நோக்கில்தான் வெளியிடப்பட்டன. டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி, டி. எஸ். எலியட், கிரகாம்கிரின், சால்பெல்லோ
முதலியவர்கள் குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றன.
ஏசுநாதரைப் புரட்சியாளர் எனச் சில விடுதலை இறையியலாளர்கள்
காண்கின்றனர். இந்தியாவிலும் இக்குரல்
எழுகிறது என்ற முறையில் நிகழ் சில கட்டுரைகளை வெளியிட்டது. கிறிஸ்துவத்திற்குள்
இந்தியாவில் இவ்வகையில் முதல் குரலை எழுப்பியவர் காப்பன் பாதிரியார்.
இவரது கருத்துகளைச் சா. தா. செல்வராசு தொகுத்து எழுதினார். விடுதலை இறையியல் குறித்து இன்னொரு
கட்டுரை தந்தவர் அருள்திரு அல் போன்சு. விடுதலை இறையியலுக்குள்
மக்களுக்கான இறையியல் குரல் இல்லை என்று மறுத்து டேவிட் சித்தையா எழுதினார். இவருக்கு
அல்போன்சு பதில் தந்தார்.
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படுகின்ற மார்க்சிய அறிஞர்
தேவி பிரசாத். இவரது உலகாயுதம்
என்ற புகழ்பெற்ற நூலின் ஒரு முக்கியமான ஒரு கட்டுரையைச் சிங்கராயர் தொகுத்துத் தந்தார். ஜெயமோகன், தேவி பிரசாத்தின்
பொருள் முதல்வாத எல்லைகள் குறித்து எழுதினார்.
இந்திய மெய்யியல் குறித்துக் கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதிய விரிவான கட்டுரையும் நிகழில்
இடம்பெற்றது.
போலந்தில், சீனாவில், 90களிலும்
மார்க்சியம் மக்கள் மத்தியில் எத்தகைய எதிர்வினையைச்
சந்திக்கிறது என்பது குறித்த கட்டுரைகள் வெளியாயின. ஹங்கேரி பற்றி யமுனா ராஜேந்திரன், போலந்தில்
தன் அனுபவம் குறித்து இந்திரா பார்த்தசாரதி, சீனாவில் மார்க்சியம் இனி என்னவாக
இருக்கும் என்பது பற்றி சச்சிதானந்தம், ரஷ்யாவில்
தான் கண்டது என்ன என்பது பற்றி
ஜீவானந்தம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் வெளிவந்தன.
1968இல் வசந்தத்தின் இடி முழக்கம்
என இந்தியாவில் வெடித்த நக்சல் பாரி இயக்கம் கேரளாவில்
ஏன் தோற்றது என்பது பற்றிய தீவிரமான அக்கறையோடு பாஷா போஷினி என்ற மலையாள இதழில் மிகச் சிறந்த ஆய்வுக்
கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 5 முக்கியமான
கட்டுரைகளைத் தமிழில் தந்தார் இளைஞர் மனோகரன். தமிழகத்திலும் நக்சல்பாரி இயக்கம் அரசின் கடுமையான
தாக்குதல்களுக்குள்ளாகிச் சிதைந்தது. இது பற்றிய கட்டுரைகளை
எவ்வளவு முயன்றாலும் பெற முடியவில்லை.
இனி, நிகழின்
இலக்கியப் பார்வை குறித்து: தலித்தியம் பற்றிய விவாதங்களை நிகழ் ஊக்குவித்தது. தலித்தியம், பெண்ணியம்
நோக்கிலான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் முதலியவற்றை நிகழ்
வெளியிட்டது. திராவிட இயக்கத்தின் பார்வை, எல்லைகள்
குறித்துக் கட்டுரைகள் வெளிவந்தன. அரசு, அதிகாரம், முதலாளியம்
ஆகியவற்றுக்கு இடம் தரும்போது எவ்வகை
இயக்கமும் தத்துவமும் தமக்குள் சிதைவடையும். கட்சி மார்க்சியத்திற்கு மட்டுமல்லாமல் திராவிட
இயக்கத்திற்கும் நேர்ந்திருப்பது இதுதான் என்பதை இக்கட்டுரைகள்
சுட்டிக்காட்டின. பின்நவீனத்துவம் குறித்த கட்டுரைகளும் நிகழில் இடம்பெற்றன. முத்துக்
குமாரசுவாமி, நாகார்ஜுனன், நோயல்
இருதயராஜ் முதலியோர் எழுதினர்.
நிகழில் வெளிவந்த கவிதை, சிறுகதைகள்
முதலிய படைப்புகள் குறித்து இங்கே தொகுத்துச் சொல்லலாம்.
காலச்சுவடு இதழால் மறுக்கப்பட்ட ஜெயமோகனின் 'படுகை' சிறுகதை
நிகழில்தான் வெளிவந்தது (கேரளாவில்
பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டபொழுது ஆதிவாசிகளின் அவலம் குறித்து
ஜெயமோகன் எழுதிய அருமையான கதை இது. அணைக்கட்டு முதலிய அறிவியல் ஆக்கங்களை மறுக்கக் கூடாது என்பது சு.
ராவின் பார்வையாக இருந்தி ருக்கலாம். அணைக்கட்டு முதலிய நவீன
ஆக்கங்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் அவலம் குறித்தது ஜெய மோகனின் பார்வை. இதில் எனக்கும் உடன்பாடு.
நிகழில் இக்கதை வெளியானதை ஜெயமோகன் குறிப்பிட்டபொழுது ஞானிக்கு
இலக்கியம் தெரியாது என்று சு. ரா கூறினாராம். ஞானிக்கு இலக்கியம் தெரியாது, ஜெயமோகனுக்கும்
தெரியாது. சு. ராவுக்கு மட்டுமே தெரியும்.) ஜெயமோகனின் போதி என்ற
சிறுகதையும் நிகழில் வெளியாயிற்று. ஒரிசாவில் ஏவுகணை ஆய்வுக்கான தளங்களுக்காக மக்களிடமிருந்து
நிலம் அபகரிக்கப்பட்டபோது மக்கள் போராடினர். இந்தப் போராட்டம்
குறித்து, கே. சி. லட்சுமி நாராயணன்
மலையாளத்தில் எழுதிய கட்டுரையைத் தமிழில்
ஜெயமோகன் நிகழுக்குத் தந்தார். இந்தியாவின் நீதி சாஸ்திரம் பற்றிய ஆனந்தின் ஆய்வையும் இதழுக்குத்
தந்தார். இம்முறையில் ஜெயமோகன் நிகழுக்குப் பெரிதும் ஒத்துழைத்தார்.
நிகழில் ஜெயமோகன் தவிர காவேரி, தேவிபாரதி, நாஞ்சில்
நாடன், சுப்ரபாரதிமணியன் முதலியவர்களின் சிறுகதைகளும்
வெளியிடப்பட்டன. தருமராஜ் மிகச் சிறந்த தலித் சிறுகதை ஒன்றை
எழுதினார். ஜெயமோகன் தவிர தேவதேவன், மனுஷ்ய
புத்திரன், பாப்லோ அறிவுக்குயில், அண்ணாத்துரை
கரிகாலன், அறிவன், எஸ்தர், எட்வர்டு
என்று தொடங்கி ஒரு நூறு கவிஞர்களின்
300 கவிதைகளையாவது நிகழ்
வெளியிட்டிருக்கும். நூல் மதிப்புரைக்கெனப் புதிய நூல்களை
அனுப்பிய பெரும் பாலானவர்களின் நூல்களுக்குச் சிறப்பான மதிப்புரைகள் எழுதப்பட்டன. 250 நூல்களுக்கு
இவ்வாறு மதிப்புரைகள் எழுதப்பட்டன. சிட்டி, அசோகமித்திரன், இந்திரா
பார்த்த சாரதி, பிரமிள் முதலிய மூத்த
தமிழறிஞர்களும் நிகழில் எழுதினர். எஸ்.என்.
நாகராஜனின் மார்க்சியம் கிழக்கும் மேற்கும் என்னும் நூல்
குறித்து விரிவான விவாதங்கள் வெளியிடப்பட்டன. நாகராஜனின் நெறிப்படுத்தலோடு மக்கள் அறிவியக்கம் என்ற
அமைப்பினைக் கோவை மற்றும் மதுரைத் தோழர்கள் இணைந்து உருவாக்கினோம்.
மக்கள் அறிவியல் என்ற புதிய பார்வையோடு கூடிய கட்டுரையை துரை மடங்கன் எழுதினார்.
நிகழோடு ஒத்துழைத்த நண்பர்கள் குறித்துச்
சுருக்கமாகவேனும் சொல்ல வேண்டும். அறிவன், தாமரை
ஆறுமுகம், அன்பு வசந்த குமார், கணகுறிஞ்சி
ரத்தினம், பொன். சந்திரன், க. பூரணச்சந்திரன், சிங்கராயர், இரவி
சீனிவாஸ், ஜீவ ஒளி, ஜி. எஸ்.
ஆர். கிருஷ்ணன் இப்படி இன்னும் சிலரையேனும்
குறிப்பிட வேண்டும். 96இல் நிகழை நிறுத்த வேண்டிய
நிலை ஏற்பட்டது. பொருள் வசதிக்
குறைவு என்பது ஒரு முக்கியமான காரணம். எனினும், நினைத்துப்
பார்க்கிறபோது, நிகழின் சாதனை தமிழகச்
சூழலில் மிக முக்கியமானது எனத் தோன்றுகிறது.
எந்த ஒரு சூழலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் கருத்தியல்கள் இல்லாமல், தனி
இயக்கமென எதையும் செய்ய முடியாது. வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர
ராமசாமி, எஸ்.வி. ராஜதுரை, தமிழவன், அ.
மார்க்ஸ், எம். டி. முத்துக்குமார சுவாமி இவர்கள் ஒவ்வொருவரும்
தமிழகச் சூழல்களில் தமக்கான கருத்தியலோடு, இயக்கத்தோடு தீவிரமாகச் செயல்பட்டவர்கள்.
இவர்களோடுதான் எஸ்.என். நாகராஜனையும் என்னையும் சேர்த்துக்கொள்கிறேன்.
இவர்களும் தமிழகச் சூழலை நிறைத்தவர்கள் அல்ல. இவர்களோடு க. நா. சு., முத்துசாமி, செல்லப்பா, அசோகமித்திரன், மு.
இராமசாமி என எத்தனையோ பேரைச் சொல்ல
முடியும். இவர்களுக்குள்ளும் பின்நிலையிலும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளும் பல கலை, இலக்கியம்
நாடகம், ஓவியம், வேளாண்மை
என்றும் பல இயக்கங்கள், அரசியல் சூழல், இவற்றையெல்லாம்
உள்ளடக்கிய இந்தியா மற்றும் உலகச் சூழல்.
நிகழில் வெளிவந்த கட்டுரைகளை வகைப்படுத்தி, தொகுத்து
இதுவரை கீழ்வரும் 5 நூல்கள் வெளியிட்டேன்.
1. இந்தியாவில் தத்துவம்
கலாச்சாரம், 2. அறிவியல், அதிகாரம், ஆன்மீகம், 3. மார்க்சியம்:தேடலும்
திறனாய்வும், 4. படைப்பியல்: சில சிகரங்களும் வழித் தடங்களும், 5. நிகழ்
மதிப்புரைகள் 100. நிகழ் உண்மையில் தமிழகத்தில்
ஒரு மாபெரும் கலாச்சார
இயக்கத்தில் ஒரு பகுதியாக இருந்து தீவிரமாகவும் உண்மையாகவும் செயல்பட்டது. வளமான
மார்க்சியத்தைக் காப்பாற் றியது நிகழின் ஒரு சாதனை. எஸ். என். நாகராஜன் தமிழகச் சூழலில்
தீவிரமாகச் செயல்பட நிகழ் ஒரு கருவியாக இருந்தது. நாகராஜனோடு
ஒத்துழைத்த நண்பர்கள் மரியாதைக்குரியவர்கள். இவர்கள் மத்தியில் என் வாழ்வுக்கும் நிறைவு
ஏற்பட்டது.
|
Wednesday, January 06, 2016
நிகழ் என் அனுபவம்...
Subscribe to:
Post Comments (Atom)
கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?
கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...
-
இமையம் மொழி என்ற தொடர்பு சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க ...
-
பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா 149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ் சுண்டப்பாளையம்(அ) கோயம்புத்தூர் - 641 007 பேச:098438 74545. பண்பாடும் மொழ...
-
தமிழிலக்கியச் சூழலில் இன்று உரக்க ஒலிக்கும் விவாதங்களிலொன்று பெண்கள் எழுதும் கவிதைகளைப் பற்றியது. எல்லா விவாதங்களையும் போல இதிலும் ம...
No comments:
Post a Comment