Thursday, December 22, 2016

சங்க இலக்கியத்தில் புவிவெப்பமாதலும் பருவநிலை மாறுபாடும்

சங்க இலக்கியமென்பது பண்டைத் தமிழ்க்குடி வரலாற்றின் வாழ்வியல் பெட்டகமாகத் திகழ்ந்து வருவது கண்கூடு.சங்க கால மாந்தர்கள் அனைத்து வகையிலும் மேம்பட்டு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கி வந்துள்ளதை அவர்தம் செவ்வியல் பாடல்கள்வழி உய்த்துணர இயலும்.மேலும்,அகமும் புறமும் ஆன அவர்களின் வாழ்வியலானது இயற்கையுடன் இயைந்தும் இசைந்தும் வெறும் வீரமும் காதலும் மட்டுமல்லாமல் அவர்களது அறிவியல் தொலைநோக்குச் சிந்தனைகள் ஆய்விற்குரியனவாகக் காணப்படுகின்றன.காட்டாக,செருப்புடை அடியராகவும் தோல்புதை சிரற்றடி மேற்கொள்பவராகவும் சங்கத் தமிழர்கள் விளங்கியதன் மூலமாக மேனிலையுற்ற நனி நாகரிகத்தை அவர்கள் ஒழுகியவர்களென இப்பேருலகினுக்குப் பறைசாற்றும்.
அத்தகைய பேரறிவுகொண்ட தமிழினம் உலகத்தோருக்கு வழங்கியுள்ள செய்திகள் ஏராளம்.அத்தனையும் அறிவியல் திறம் படைத்தவை.அன்று அவர்தம் கண்ட பகற்கனவுகளும் மிகைக்கற்பனைகளும் இன்று பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளாக மலர்ந்துள்ளன.ஆதலால்,எளிதாக இத்தகைய கருத்துகளையெல்லாம் புறந்தள்ளிவிட முடியாது.
பண்டைத் தமிழன் தாம்வாழும் நிலங்களை ஐவகையாகப் பாகுபடுத்திக் கோலோச்சி     வாழ்ந்திருந்தான்.அக்காலக் கட்டத்தில்,தாம் வாழ்ந்திருந்த நிலங்களின் வளத்தினையும் இடர்களையும் கூர்ந்து உற்றுநோக்கி இலக்கணம் வழுவாது தலைசிறந்த படைப்பாக வெளிப்படுத்துதலைத் தம் சமுதாயக் கடமையாகக் கொண்டிருந்ததன் விளைவே பாட்டும் தொகையும் ஆகும்.
குறிப்பாக,சங்கப் பாடல்களுள் பயின்றுவரும் பாலை நிலக்காட்சிகள் நடப்பு உலகளாவிய புவி வெப்பமடைதல் கருத்தாக்கத்துடன் ஒப்புநோக்கத் தக்கவையாக உள்ளன.தவிர,இன்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிற புவிவெப்பமடைதலும் பருவகால மாறுபாடுகளும் தொன்றுதொட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளதை இப்போது அறிவோம்.
          கதிர் கையாக வாங்கி ஞாயிறு
          பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
          விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம் (அகம் 164:1-3)
என்னும் பாடலில் சூரியனானது தம்முடைய வெம்மைக் கதிர்கள் மூலம் எங்குமுள்ள ஈரப்பசையினை எல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும்படியாகக் காய்ந்ததால் இப்பரந்த பூமியானது வெடிப்புகள் மிகுந்தும் வளம் ஒழிந்தும் காணப்படுவதாக அமையுமென எடுத்துரைக்கப்படுகின்றது.
மேலும்,இக்கதிர்கள் காடுகளின் அழகையெல்லாம் பேரளவு அழிந்துபோகுமாறு தாக்கும் கொடும் வெப்பத்தால் தேக்கு மரங்களின் உயர்ந்த கிளைகளிலிருக்கும் பல யகன்ற இலைகள் ஈரப்பசையற்று வாடிப்போய் ஒல்லென்ற ஓசையுடன் வெம்மைக்காற்றினால் உதிர்ந்துபோகும்.அதன்பின்,அம்மரத்தின் நீண்ட கிளைகளாவன வறுமையுற்றவரைப் போல வளமற்று விளங்கும் என்பதை,



கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
நீடுசினை வறியவாக ஒல்லென
வாடுபல் அகலிகை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கன் மேக்கெழுபு (அகம் 143:1-5)
என்ற பாடல் விளக்குகிறது.இதுதவிர,
பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில் (அகம் 185:8-10)
என்பதில் பசுமையற்றுப்போன வறண்ட பாலை நிலத்தில் வெப்பம் மிகுதி காரணமாக மேகமும் பொழியாது ஒழியும்.அதனால்,உயர்ந்த சிகரங்களில் அருவியும் உருவாகாது விளங்குமெனக் காட்சியாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இத்தகைய வான்உலந்து மழையானது பெய்யும் இடத்தைவிட்டு நீங்கிச் செல்வதால் உண்டாகும் துயரத்தினை,
           உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
           மழைகால் நீங்கிய மாக விசும்பில் (அகம் 141:5-6)
என்று உழவுத்தொழில் மட்டுமல்லாது உலகிலுள்ள மற்ற தொழில்களும் இதனால் கெட்டு மடியுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது எண்ணத்தக்கது.ஏனெனில்,தொழில்களுள் தலையாயது உழவுத்தொழிலாகும்.அவ்வுழவுத் தொழிலுக்கு அடிப்படையானது மழை.அம்மழையானது புவிவெப்பம் காரணமாகவே விட்டு வேறிடம் செல்கிறது.மேலும்,பருவம் மாறி பொழியவும் காரணமாகின்றது.
     ஆக,புவிவெப்பமடைதலும் அதனூடாக நிகழும் பருவகால மாற்றமும் இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் ஏற்படுகின்றன.அன்று இயற்கையானது மனிதனுக்கு எளிதில் வெற்றிக்கொள்ள முடியாததாக இருந்தது.இன்று நிலைமை தலைகீழ்.மனித சமூகம் இயற்கைக்குப் பேரிடராக உள்ளது.இவற்றால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது மனித இனம் என்பதுதான் பெரும் சோகம்.
     இன்றைய நவீன மனிதனிடம் காணப்படும் அதி நுகர்வுத்தன்மை,அறியாமைப்போக்கு,வருங்காலம் குறித்த அக்கறையின்மை முதலியன அக்கால மாந்தர்களிடத்து நிலவாது இருந்தமைக்குச் சான்றே செவ்வியல் இலக்கியமாகும்.சான்றாக,காதல் கருத்தொருமித்த தலைவன்,தலைவியரிடையே இப்பருவகால மாற்றம் தோற்றுவிக்கும் துயர் அளப்பரியது என்பதை,
           வம்பும் பெய்யுமார் மழையே வம்புஅன்று
           கார்இது பருவம் ஆயின்
           வாராரோ நம் காதலோரே (குறுந்.382:4-6)
என்னும் பாடல்வாயிலாக உணரவியலும்.இவையனைத்தும் நிகழ்கால வாழ்வியல் கூறுகளுடன் ஒப்பிட்டு அறியத்தக்கவை.
     ஆகவே,மேற்சுட்டிய பாடல்கள் மூலமாக அவற்றின் காட்சி மற்றும் கருத்தின்பத்தை மட்டும் சுவைக்காது அவற்றின் உள்ளீடாகக் காணப்படும் அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்ச்சியை உணர்வோமேயானால் புவிக்கோளத்தைப் பேரழிவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவியலும்.புவிவெப்பம் மற்றும் பருவகால மாற்றம் குறித்த பழம்சிந்தனையில் பெருமளவு உழல்பவர்களாக இன்று நாம் உள்ளோம்.இதற்கு சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையின்மையே முழுமுதற்காரணமாகும்.இல்லாவிடில்,ஆழ்கடலுக்குள்ளும் மலையுச்சியின் மீதும் உலகின் கவனத்தை ஈர்க்கும் நாடாளும் பேரவைக்கூட்டம் நடத்துவதற்கான அவசியமே எழுந்திருக்காது.தவிர,இந்தத் துயரம் மூத்தோரின் தொலைநோக்குப் பார்வையினை உணராததன் விளைவெனக் கொள்ளலாம்.வளர்ந்த நாடுகளிடையே உண்டாகாத கருத்தொற்றுமையால் டென்மார்க் தலைநகர் கோபன்கேகனில் நடைபெற்ற புவிவெப்பமடைதல் மாநாடு தோல்வியில் முடிந்திருக்க வாய்ப்பில்லை.தமிழிலக்கியங்களில் புதைந்துக் கிடக்கும் அறவியல் செய்திகளோடு அறிவியல் சிந்தனைகளையும் அதற்கான தீர்வுகளையும் உலகினுக்கு எடுத்துக்காட்டிச் செம்மொழியாம் தமிழ்மொழிக்குப் பெருமைச் சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையன்றோ?

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...