Friday, December 23, 2016

சங்க இலக்கியத்தில் காதல் தெய்வம்!



     ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதத்தின் தென்கோடி முதல் வடகோடி வரை ஒரே பண்பாடு நிலவிவந்தது. தொல்காப்பியத்திலேயே வேதத்தில் போற்றப்படும் இந்திரன், வருணன், துர்கை ஆகியோரை தமிழர் தெய்வங்களாகப் போற்றுவதையும், தொல்காப்பியரும் மனுதர்ம சாத்திரத்திலுள்ள எண்வகை மணத்தைப் போற்றுவதையும் அவரும் தர்மார்த்த காம மோக்ஷம் ஆகிய வாழ்க்கை மூல்யங்களை பெரும் பண்புகளாகப் (அறம் பொருள் இன்பத்தைப்) போற்றுவதையும் சில கட்டுரைகளில் தந்தேன். மன்மதன் பற்றிய நம்பிக்கையும் அவ்வாறே இருந்துள்ளது!

மன்மதனுடைய கொடி மகரக் கொடி. மகரம் என்னும்  சொல் மீன், டால்பின் மற்றும் முதலையைக் குறிக்கப் பயன்பட்ட சொல். மன்மதனின் மகரக் கொடி பற்றிய குறிப்பு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய அக நானூற்றிலேயே வந்துவிடுகிறது. மேலும் இதைப் பாடிய பார்ப்பனப் புலவன் பரணன், அதே பாட்டில் மன்மதனை எரித்த சிவபெருமானையும் பாடியிருக்கிறார். பட்டினப்பாலையில் மன்மதன் கோவில் குறிப்பிடப்படுகிறது.

            காளிதாசனின் காலம் பல சம்ஸ்கிருத அறிஞர்கள் கூறியது போல கி.மு. இரண்டாம் அல்லது முதலாம் நூற்றாண்டு என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் சங்க இலக்கியம் வாயிலாக நிரூபித்தேன். மன்மதன் பற்றி காளிதாசன் சொன்னதை நம்மவர்களும் சொல்வதிலிருந்து எனது வாதம் மேலும் உறுதிப்படுகிறது.


rathi 1


1.அகநானூறு (பாடல் 181)

நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கைசூழ்ந்த பொழில்மனைமகளிர்
கைசெய்பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகரநெற்றி வாந்தோய் புரிசைச்
சிகரம் தோன்றா சேணுயர் நல் இல்


பொருள்:-
பழமையான நான்கு வேதங்களை அருளிய முக்கண்ணனின் ஆலமுற்றம் என்னும் இடத்திலே, அழகாக அமைந்த பொய்கைகள் சூழ்ந்த பூங்காவில், சிறு வீடுகட்டி விளையாடும் சிறுமியர் செய்த மண்பாவைகள் (பொம்மைகள்) இருக்கும் துறையில் மகரக்கொடியை மதில் உச்சியில் கொண்ட மிக உயர்ந்த மாடங்களை உடைய அரண்மனைகளையுடைய புகார் நகரம்.....

காமன் விழா நடபெறுகையில் கட்டப்படும் மகர தோரணத்தை இது குறிக்கும் என்று  பழைய உரைகள் விளக்கும்.
இந்தக் காமன் பண்டிகை குறித்து வடமொழி பிருஹத் கதாவிலும், அதன் மொழிபெயர்ப்பான பெருங்கதையிலும் உண்டு.
நாடு முழுதும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டதை இது உறுதி செய்யும்.


2.கலித்தொகை, பரிபாடல்

மன்மதன், மகரக் கொடி ஆகியன பற்றி கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டு சங்க இலக்கியங்களிலும் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. ஒரு சில குறிப்புகளைக் காண்போம்:-
காமற்கு வேனில் விருந்தெதிர்கொண்டு (கலி. 92-67/68)

கலித்தொகையில் வரும் மற்ற குறிப்புகள்: கலி. 108-4; 109-19/20; 147-59/60; பரிபாடல்11-123

மேற்கூறிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதச் சொல்லான காமன் வருகிறது. கலி.94-33ல் காமர் என்று இருக்கிறது.
காமவேள்- கலி.27-24, பரி.18-28
மன்மதனின் மற்றொரு சம்ஸ்கிருதப் பெயர் மாரன். இச்சொல் பரிபாடலில் (8-119) கையாளப்படுகிறது.



rathi3

3.ரதியும் காமனும்

உலகிலேயே மிகவும் அழகான பெண் ரதி. அவள் மன்மதனின் மனைவி. இரதிகாமன் என்ற சொல் பரிபாடலில் 19-48/49) பயன்படுத்தப்படுகிறது.
மன்மதன் என்பவன் விஷ்ணுவின் மனதில் பிறந்தவன் என்று சம்ஸ்கிருத புராணங்கள் கூறும். இதை நெடியோன் மகன் என்று கலித்தொகை இயம்பும் (140-89)



4.ஐந்து மலர் அம்பு

மன்மதனின் கரும்புவில்லிலிருந்து மலர் அம்புகளை விடுவான் என்று காளிதாசனும் பிற கவிஞர்களும் பாடுவர். இதை அரிபடு ஐவிரை என்றும் (பரி.10-97), விரைமலர் அம்பினோன்என்றும் (பரி.22-26) பரிபாடலில் காணலாம்.

காமனின் அம்புப் புட்டில் பரி.18-30ல் வருகிறது.
ஓவியக்கூடம் காமனின் சிலம்பக்கூடம் போன்றது என்ற உவமை எழுது எழில் அம்பலம் காமவேள் தொழில் வீற்றிருந்த நகர்- என்ற வரிகளில் பளிச்சிடும் (பரி 18-27)

ஐந்து மலர்கள்:
மன்மதனின் அம்பிலுள்ள ஐந்து மலர்கள்:-தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம்.

5.மீன்கொடி

உலகில் கொடிகளையும், வாகனங்களையும்,சின்னங்களையும் பயன்படுத்திய முதல் நாடு பாரதம் என்று கொடிகள், வாகனங்கள் பற்றிய கட்டுரைகளில் சொன்னேன். இங்கே மீன் கொடி பற்றி கலித்தொகை புலவர்கள், மீனேற்றுக் கொடியோன் (கலி.26-3), காமன் கொடியெழுதி (கலி.84-24) என்ற வரிகளில் விளக்குவர்.


6.காமனின் தம்பி சாமன்

காமனின் தம்பி சாமன் பற்றி சம்ஸ்கிருதத்தில் பல குறிப்புகள் உண்டு. அதையும் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிடத் தவறவில்லை( கலி. 26-4; 94-33/34)

தமிழ் என்சைக்ளோபீடியாவான அபிதான சிந்தாமணியில் மன்மதன் வருணனையை, சிங்காரவேலு முதலியார் தந்துள்ளார்.
(சில புத்தகங்களில் கலித்தொகை பாடல் எண்களில் சிறிய மாற்றம் இருக்கும் ஆகையால் சங்கம் வோர்ட் இண்டெக்ஸ் புத்தகத்திலுள்ள வரிகளையும் தருகிறேன்:- மாரன் பரி. 8-119, காம வேள் கலி.27-24, பரி.18-28;காமற்கு கலி.92-67; காமன் கலி 84-24, 108-4, 109-19, 147-59, பரி. 11-123, 19-48; காமனது கலி.139-22;)


rthi2


7.திருக்குறளில்

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197)

பொருள்:-

காமதேவன், காதலர் இருவர் இடையேயும் இருந்து இயங்காது, ஒருவர் பக்கத்திலேயே இருந்து செயல்படுவதால், அவன் என்னுடைய வருத்தத்தையும் தடுமாற்றத்தையும், உணரமாட்டான் போலும்!


8.மன்மதனுக்கு 19 பெயர்கள்!!!

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமர கோசத்தில், மன்மதனின் 19 சம்ஸ்கிருதப் பெயர்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவையாவன:-
மதன:, மன்மத: (மனதைக் கடைபவன்), மாரன், ப்ரத்யும்னன், மீனகேதன: (மீன் கொடியோன்), கந்தர்ப:, தர்பகன், அனங்க: (உடல் அற்றவன்), காமன், பஞ்சசர: (ஐந்து அம்புடையோன்), ஸ்மர:, சம்பராரி: (அலிகளுக்கு எதிரி), மனசிஜ: (மனதில் பிறந்தோன்), குசுமேஷு (மலர் அம்பன்), அனன்யஜ:, புஷ்ப தன்வா (மலர் வில்லன்), ரதிபதி (ரதியின் கணவன்), மகரத்வஜ; (மீன் கொடியோன்), ஆத்மபூ: (மனதில் தோற்றுவிக்கப்பட்டவன்).
சம்ஸ்கிருத நூல்களில் காமனுக்குப் பல அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன (எனது ஆங்கிலக் கட்டுரையில் நிறைய பெயர்கள் கொடுத்துள்ளேன்; இங்கே அந்தப் பட்டியலை எழுதினால் காமதேவன் அஷ்டோத்திரம் போல ஆகிவிடும்!)


9. கற்பனைக் கதா பாத்திரம்

அனங்கன் என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லுக்கு அங்கம்/ உடல் அற்றவன் எனப் பொருள்; சிவன் மனதில் காம உணர்வை ஏற்படுத்த மன்மதன் முயன்றபோது அவர் நெற்றிக் கண்ணைத் திறக்கவே மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவி ரதி தேவி அழுது புலம்பவே உன் கண்ணுக்கு மட்டும் தெரிவான் என்று சிவன் வரம் கொடுத்ததாக வரலாறு. இது ஒரு தத்துவார்த்த கதை. உடல் ரீதியான கீழ்த்தரக் காமத்தை ஒழித்தால் முகநக நட்பு போய், மனைவியரிடதே அகநக நட்பு மலரும் என்பதே இதில் அடங்கிய தத்துவம்; சுருக்கமாக சிவன் எரித்தது காம வெறியைத் தான். உள்ளன்பு பூர்வமான காமத்தை அன்று.
இதே போல திருமாலின் மனதில் பிறந்தவன் என்ற பெயரும் அடையாள பூர்வ கதையே; எல்லோருக்கும் மனதில் பிறக்கும் காதலே/ காமமே கல்யாணத்திலும், இனப் பெருக்கத்திலும் முடிகிறது.
மன்மதன்= மனதைக் கடைபவன் என்பதும் காரணப் பெயரே. ஒருவருக்கு காதல் வியாதி வந்துவிட்டால், அதௌ மனதைக் கடைந்து படாதபாடு படுத்தும்!

மொத்தத்தில் மன்மதன் என்பது ஒரு எண்ணத்துக்கு (அப்ஸ்ட்ராக்ட் ஐடியா), ஒரு உருவம் கொடுத்த (கான்க்ரீட் ஷேப்) கற்பனைக் கதையே.


rati or who


10.காளிதாசனில்

காளிதாசன் காவியங்களில் வரும் மன்மதன் பற்றிய குறிப்புகள்:--
சாகுந்தலம்:-- காமன் வழிபாடு(6-3), மதன பாண/அம்பு (3), மகரகேது/மீன் கொடி (3-5).

இது தவிர குசுமாயுத (பூ ஆயுதம்), குசுமாஸ்திர (பூ ஆயுதம்).
விக்ரமோர்வசீயம்:--மகர கேது 2-2;
குமாரசம்பவம்:-- 1-41 மகர கேது
ரகுவம்சம்:-- மகர கேது 9-39

ஐந்து மலர் அம்பு பற்றிய குறிப்புகள்:-- குமாரசம்பவம் 7-92; விக்ரம 2-6,11; மாளவிகாக்னிமித்ரம் 4-12 (பஞ்சசார);

குசுமசர, குசுமாயுத என்ற மலர் அம்பு பற்றிய சொற்கள் காளிதாசனின் எல்லா நூல்களிலும் (மேகதூதம் 104, ரகு 9-39, 11-45, குமார சம்பவம் 3-10, 4-40, 45) முதலிய இடங்களில் வருகின்றன.

காளிதாசன் நூல்களில் வரும் உவமைகள் சங்க இலக்கியத்தில் 200க்கும் மேலான இடங்களில் வருவதால், சங்ககாலத்தின் அவன் நூல்கள் கற்ற புலவரிடத்தே பரவியிருந்ததை அறியமுடிகிறது. ரெவரெண்ட் ஜி.யூ.போப்பும் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

11.வேதங்களில்

மன்மதன் அல்லது காமதேவனின் மூலம், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் இருக்கிறது. ஆசையே (காமம்) பிரபஞ்சத்தின் வித்து என்னும் அற்புதமான பாடல் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கிறது. அதன் பிறகு அதர்வ வேதம், காமனை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது. இறைவனின் லீலா விநோதம்தான் இந்த உலகின், மனித இனத்தின் படைப்பு. அவர் மனதில் எழுந்த ஆசையே, விருப்பமே பிரபஞ்சமாக உருவானது. அறிவியலோ மாபெரும் வெடிப்பு – BIG BANG பிக் பாங்- ஏற்பட்டு பிரபஞ்சம் தோன்றியது என்று விளம்பும். ஆனால் அதற்கு முன் என்ன இருந்தது, ஏன் பெர்ம் வெடிப்பு ஏற்பட்டது என்பதற்கு விஞ்ஞானத்தால் விடைகூற முடியவில்லை. பிரஜாபதி பரமேஷ்டின் என்ற ரிஷி உலகின் முதல் விஞ்ஞானி ஆவார். அவர் ரிக்வேதத்தில் சொல்லும் மந்திரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிப் பாடி வியக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு ரிஷி பாடியது உலகின் முதல் நாகரீகம், பாரதத்தில் தோன்றியதை மெய்ப்பிக்கிறது.

ஆரம்பத்தில் காமம் (ஆசை) இருந்தது

மனதின் மூல வித்து அதுவே;

ரிஷிகள் உள்ளத்தில் எழுந்த ஞானத்தால் தேடி,

இல்லாத ஒன்றில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்

--ரிக் வேதம் 10-129

Haridass_1944_film_2


12.திரைப்படத்தில்
12.இறுதியாக முந்தைய தலைமுறையிரிடையே பிரபலமான திரைப்படப் பாடல்:-- 

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
திரைப்படம் : ஹரிதாஸ்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? - உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? - உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
 
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? -
  மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

தற்காலத்தில் வந்த மன்மத லீலை என்ற திரைப்படத்தை அனைவரும் அறிவர்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...