ஒரு முரட்டு மலைப்பாம்பாக அந்த கிராமத்தை இருள் பைய விழுங்கிக்கொண்டிருக்க ஊர் மெல்ல அசமடங்கத் தொடங்கியது.தெரு மின்விளக்குகள் வெளிச்சத்திற்;காக ஒற்றைக்காலில் நெடும் தவமிருப்பது போல் காட்சியளித்தது.ஆந்தைக்கூட்டம் ஒன்று செல்லமாக அலறல் ஒலியெழுப்பி இங்குமங்குமாகப் பறந்து இரை தேட,தலைவிரிக் கோலத்துடன் பார்ப்போரைத் திடுக்கிடச் செய்திடும் ஆலமரம் அல்லோலக் கல்லோலப்பட்டது. ஏழாம் பிறையின் ஒளியானது தூசியாய்ப் பொழிந்துக்கொண்டிருந்த மாசிப் பனியில் எதிரொளித்தவாறு கசிந்தாலும் அவ்வெளிச்சம் நடமாடப் போதுமானதாக யாருக்கும் இருக்கவில்லை.குடியானத் தெருவிலிருந்து வரும் ஒரு பசுமாட்டின் கத்தல் ஒரு தலைப்பிரசவத்தாயின் வலியை ஒத்துக் காணப்பட்டது.கடவுளே கெட்டது எதுவும் நடந்துவிடக் கூடாதென மனத்திற்குள் மருவியபடி நித்யா முகப்பொலிவிழந்து அடிவயிற்றில் வழக்கம்போல் டாண் என வந்துதொலைத்திடும் வலியுடன் அரக்கப்பரக்க ஓடிட ஆயத்தமானாள்.அம்மா அழைத்தபோதே சென்றிருந்தால் இப்போது இந்த அவஸ்தைப்பட வேண்டியிருந்திருக்காது. என்ன செய்வது?அப்படிச் செய்ய் முற்பட்டால் வீண் பொல்லாப்பையல்லவா தோழியர்களிடம் புதிதாகச் சம்பாதிக்க நேரிடும் எனும் கவலை அவளை மின்னல்போல்; தாக்கியது.
சாணிமெழுகிய மண்தரையில் குடித்து முனகிக்கிடந்த அப்பாவிடமிருந்து குப்பென்று வீசியது அரசு டாஸ்மாக் சரக்குவாடை.அவ்வாடை நித்யாவிற்குக் குடலைப் பிறட்டியது.வெறுமனே குமட்டினாள்.குரல்வளையினை இறுக்க வெறுப்புடன் பிடித்துக்கொண்டு உடம்பை விட்டு விலகிக்கிடந்த கைலியினை முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டே,
“இந்த அம்மா இதெல்லாம் பாக்காம அப்படி என்னத்ததான் செஞ்சுத் தொலைக்குதோ? தெரியல.” வென்று ஏசியபடி அதனை இழுத்துவிட்டு வாசலை நோக்கி அவசரமாக ஓட்டம்பிடித்தாள். போகும்போது மூங்கிலாலான சாக்குத்தட்டியின் கொக்கியை வெடுக்கென பற்றிய அவளது வலக்கை அனிச்சையாகக் கொண்டியில் மாட்டிவிடும் வேகத்தில் அவளது பெருவிரலை ஒருபதம் பார்த்துவிட்டது.வலியில் இலேசாகத் துடித்துவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். இரத்தக்காயமில்லை.மெல்லியதான கீறல்தான் என்றாலும் எரிச்சல் இருந்தது.தன் துன்பத்தையெண்ணி ஒரு விநாடி தன்னைத்தானே நொந்துகொண்டாள்.பிறகு,தான் இக்குடும்பத்தில் வந்து பிறக்கக் காரணமான தெய்வத்தைக் கண்டமேனிக்குச் சபிக்கத் தொடங்கிய நேரத்தில் வந்துசேர்ந்தாள் மணிமேகலை.வியர்க்க விறுவிறுக்க.முகத்தில் நித்யாவிடம் காணப்பட்ட அதே பதட்டம் அவளிடமும் தென்பட்டது.மெதுவாக மூச்சிறைத்தாள். மார்பு படபடத்தது.நைட்டி கணுக்காலுக்கு மேலே தொங்கிக் கிடப்பதைப் பார்க்கவே நித்யாவிற்குச் சகிக்கவில்லை.
“இதப் போடாதேன்னு ஓங்கிட்ட எத்தனவாட்டிதான் சொல்றது?பாக்க ஒரே கண்றாவியாருக்கு.”
“அடி இவ ஒருத்தி.எனக்கு மட்டும் என்ன ஆசையா இதப் போட.எங்கப்பனுக்கு தெனமும் மூச்சுமுட்ட குடிக்கக் காசிருக்கு.எனக்கு ஒரு நைட்டி வாங்கத்தான் காசில்ல.என்னப் பண்ணித் தொலைக்க.எல்லாம் நம்மத் தலையெழுத்து.வளவளன்னு வெட்டிப்பேச்சுப் பேசாம வா சட்டுனு.வயிறு ஒரே முட்டுது.சாயங்காலத்துலேர்ந்து ரொம்பநேரமா.”வயிற்று உபாதை மணிமேகலையை ராக்கெட் வேகத்தில் விரைவுபடுத்திக் கொண்டிருந்தது.நடையில் சக்கரம் கட்டிக் கொண்டாள்.நித்யா அந்தக் கும்மிருட்டில் அவளோடு கூட ஓடிக்கொண்டிருந்தாள்.
“அவசரம்னு தெரியுதுல்ல.அப்பவே எங்கியாச்சும் மறைவுல ஒதுங்கியிருக்கலாம்ல.இப்ப ஏன் லொங்குலொங்குன்னு ஓடணும்.”வாயாலும் மூக்காலும் பேசிய நித்யாவின் உச்சந்தலையில் நங்குன்னுப் போடலாமென்றிருந்தது மணிமேகலைக்கு.ஆனால் செய்யவில்லை.
“ஊரு முச்சூடும் எங்குனப் பார்த்தாலும் ஆம்பளைங்க கண்ணுங்களாயிருக்கு.இதுல நான் எங்கேன்னு ஒதுங்குறது சொல்லு?”நல்ல கிடுக்கிப்பிடியான கேள்வி.இந்தத் தொல்லையினை நித்யா ஒருமுறையல்ல,பலமுறை அனுபவித்து பெரும்அல்லலுக்கு ஆளாகியிருக்கின்றாள்.ஒருதடவை தெரியாமல் முதல்நாள் வைத்தக் கோழிக்குழம்பை நாக்கு ருசிக்காகத் தின்றுவிட்டாள்.
அது உடல்சூட்டைக் கிளப்பிவிட்டதில் வயிற்றைக் கடுத்துக்கடுத்து ஒரே சீதபேதி.கொல்லைக்கும் வாசலுக்கும் ஓடியோடி அவள்பட்ட வேதனைகள் காலத்தால் அழிக்கமுடியாத இரத்த சரித்திரம் எனலாம்.அன்று அவள் அழுத அழுகை சொல்லிமாளாதது.குடும்பமே இழவுவீடானது.
அவளது மொடாக்குடிகார அப்பன் அந்தக் குடிபோதையிலும் கண்ணீர் ஆறாகப்பெருக்கெடுக்கத் தேம்பித்தேம்பி அவளையும் அவளது அம்மாவையும் மாறிமாறிக் கட்டிப்பிடித்து துக்கம் விசாரிக்கவந்த ஆளாக அழுததை நித்யா இப்போது நினைத்து உடல் நடுக்கமுற்றாள்.சில்லிட்டுக் கிடக்கும் தளிர்மேனியெங்கிலும் முளைத்துக் கிடந்த பூனைமயிர் சிலிர்த்துக்கொண்டதை அவளால் நன்கு உணரமுடிந்தது.தெருமுக்கில் இவர்களைக் கண்டதும் அங்கே ஏற்கெனவே குழுமியிருந்த தோழியர் கூட்டம் களுக்கென்று வாய்விட்டுச் சிரித்ததை மணிமேகலையால் ரசிக்கமுடியவில்லை.மாறாக,எண்ணெயிலிட்ட கடுகாய்ப் பொரிய ஆரம்பித்தாள்.
“போங்கடீ. வௌஸ்தைக் கெட்ட ஜென்மங்களா. வயித்துவலி ஆளக் கொல்லுது. நவுருங்கடீ. பாதையிலக் குத்துக்கல்லுமாறி நின்னுக்கிட்டு.”கூட்டத்தை இருகைகளாலும் பிளந்துகொண்டு அடிவயிற்றைக் கசக்கிப் பிடித்தவாறு குதிரைப்பாய்ச்சல் பாய நினைத்தவள் இருட்டில் மண்சாலையிலிருந்த குழியில் தடுமாறி விழப்போனவளைத் தாவி அலேக்காகத் தாங்கிப்பிடித்தாள் தாரணி.அதற்குள்,அபி தான் கையோடு எடுத்து வந்திருந்த செல்பேசியிலிருந்து டார்ச்சை ஒளிரச்செய்து கப்பிக்கப்பியாகப் பெயர்ந்துபோன அச்சாலைக்கு உயிரூட்டியிருந்தாள்.மண்புழுதி பனியால் அடங்கிக்கிடந்தது.அப்போது பக்கத்தில் காணப்பட்ட புதரில் ஏதோவொன்று சென்று மறையும் சரசரப்புச் சத்தம் எல்லோருக்கும் சொரசொரப்பை உண்டுபண்ணியிருந்தது.
“அது பாம்புதானே?”சித்ராவின் நடுக்கத்தைப் போக்கும் விதமாகப் பதிலளித்தாள் ஜான்சி.
“தெனசரி நாமப் பாக்குறதுதானே. என்னமோ இன்னக்கி அதிசயமாக் கேக்குற?”சித்ராவிற்கு அவளுடைய அம்மா இதேமாதிரி இருட்டில் கொல்லைக்குப்போய் துரதிர்ஸ்டவசமாக நல்ல பாம்புக் கடிபட்டு யாராலும் உடன் காப்பாற்றமுடியாமல் மாண்டுபோனதிலிருந்து பாம்பென்றால் அதீத பயம். பல சமயங்களில் பகல் நேரத்தில் கூட அறுந்து கீழே கிடக்கும் துண்டுக்கயிற்றைக் கண்டு அலறிப்பயப்படுவதைக் கண்டு அவளுடைய அண்ணன் சுந்தரம் வாய்வலிக்கச் சிரிப்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது. அச்சமயங்களில் அவன்மீது தேளாய்க் கொட்டிடுவாள்.
“பேயி பேயி நான் படுற வேதனை ஒனக்கும் சேர்த்துத்தான்.இதுபுரியாம கொஞ்சங்கூட வெட்கமில்லாம பல்லிளிக்கிற.மனசாட்சியில்லாத மரக்கட்டை,மரக்கட்டை.”
“ஏன்டீ.இப்ப நான் என்ன செஞ்சுப்புட்டேன்.அதுக்கு இந்தக் கொந்தளிப்புக் கொந்தளிக்கிற.நீ செஞ்சது எனக்கு சிரிப்பை மூட்டிட்டு.அவ்ளோதான்.அதுக்கு இம்புட்டுக் கோவப்படுற.”
“பின்னே என்ன.ரம்யா வீட்ல இருக்குற மாறி நம்ம வீட்லயும் ஒரு ஓட்டை டாய்லெட்டு இருந்திருந்தா இன்னேரம் நம்ம அம்மா நம்மகூட உசுரோட இருந்திருக்கும்.அது ஓன் மரமண்டைக்கு எப்போது புரியப் போவுதோ அந்த கருப்பண்ணச்சாமிக்குத்தான் வெளிச்சம்.”
“அதுக்கு என்ன என்னப் பண்ணச் சொல்ற?”
“அப்பாகிட்ட சொல்லி எங்கயாச்சும் கடனஒடன வாங்கி மொதல்ல ஒரு டாய்லெட்டுக் கட்டச்சொல்லு.முடியாட்டா இந்த வீட்ட வித்றச்சொல்லு.”
“நல்லாயிருக்கு ஓங்கதை.நாத்தம்புடிச்ச டாய்லெட்டுக்காக காலங்காலமா நாம வாழ்ற வூட்ட விக்கச்சொல்றது.ஒனக்கென்ன புத்திக்கித்திப் பெசகிப்போச்சா.இப்புடிப் பேசுற.”
“ஒனக்கு நாஞ்சொல்றது எங்கே புரியப்போவுது?ஒன்னமாறி எனக்குக் கண்டகண்ட எடத்துல போகத்தெரியல.அப்படியே போனாலும் இந்த ஊரு என்னைக் கரிச்சுக்கொட்டிடாது.ஒன்னமாறி ஆளுக்கெல்லாம் என்னோட வேதனைப் புரியாது.நீ என்ன மாறி பெண்ணா ஒரு நாள்,ஒரு பொழுது இருந்து அனுபவிச்சாத்தான் அப்பறம் தெரியும்.”
“பெருசா வளரவளர ஓன்நாக்கு ரொம்ப நீண்டுக்கிட்டே போவுது.மொதல்ல அதை அப்பாக்கிட்டச் சொல்லி அடக்கிவைக்கணும்.”
“ஞியாயத்தைச் சொன்னா தப்பு!”
“ஆமா தப்புதான்.”வாமன அவதாரம் எடுத்திருந்த சித்ரா அதுகேட்டதும் சட்டென்று அடங்கிப்போனாள்.எனினும்,நீறுபூத்த நெருப்பாக அவளுடைய கோபம் அவளுக்குள் கனன்று கொண்டிருந்தது.
மணிமேகலை உயிர் மீண்டாள்.காலிடுக்கில் இப்போது திடீரென ஒரே நசநசப்பு.மேலும்,தம்மால் இனி ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாது என்பதை உணர்ந்து அப்படியே அந்த இருட்டில் சாலை சரிவிலிருந்த பனைமரத்து மறைவில் ஒதுங்கிக் கொண்டாள்.இதனை மற்றவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.அதேசமயம் என்ன செய்வதென்றும் அவர்களுக்குத் தோன்றவில்லை.
“என்னடி இப்புடிப் பண்ணிட்ட?” நந்தினி அங்கலாய்ப்பதற்குப் பதிலளிக்கும் நிலைமையில் அவளில்லை.அவள் அந்த இருட்டில் தொலைந்துப் போய் வெகுநேரமாகிவிட்டிருந்தது.அங்கு எப்போதும் கமழும் நொச்சியின் வாசம் மெல்லக் கெடத் தொடங்கியது.
“அவ வலி அவளுக்கு.வுடுங்கடி.புடுச்சா இங்குனேயே போங்க.புடிக்காட்டி இன்னும் காததூரத்துக்கு நடங்க.”நித்யா தன் சக தோழிகளிடம் கறாராகப் பேசினாள்.அப்போது தொலைவில் தெரிந்த வெளிச்சப்புள்ளி அருகேவரவர பெரிதாகி மறைவிடத்தை ஒன்றுமில்லாததாக்கியது.அது அவர்களுக்குக் கூச்சத்தையும் எரிச்சலையும் தோற்றுவிக்க அவசரஅவசரமாக அனைவரும் ஒருசேர கூக்குரலிட்டனர்.
“மணி எந்திருடீ.யாரோ ஆளு வர்றாங்க.”அவள் அதை சட்டை செய்ததாகத் தெரியவில்லை.தவிர,அவளிடமிருந்து எந்த பதில் அசைவுமில்லை.எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.வெட்கம் பிடுங்கித் தின்றது அவர்களை.ஆட்கள் டூவீலரில் வந்தேவிட்டனர்.சிட்டாய்.மட்டுமல்லாமல் அப்பெண்களைக் கடந்து செல்லும்போது பீங்ங்கென ஒலியை வேகமாக எழுப்பியபடி நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே வந்த வேகத்தில் பறக்க,பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் மட்டும் தலையைக் கூடிய மட்டும் திருப்பி ஏதோ காணாதவன் கண்டதுபோல சென்றுகொண்டிருந்தான்.
“கழிச்சல்லப்போறப்பய பொம்பளைங்க டாய்லெட் போறதுல அப்புடி என்னத்தைதான் கண்டானோ தெரியலை.கண்ணுலக் கொள்ளிக்கட்டைய வச்சுத் திணிக்க.”நித்யா படபடவென சரவெடியாக வெடித்துத் தள்ளினாள்.ஒரு நிமிடப் பொழுதிற்குள்.ஏனையோர் வாய்க்குவந்தபடி ஏதேதோ சபித்தவாறே இரண்டு கைகளையும் கோர்த்து பத்துவிரல்களாலும் நெட்டி முறித்தனர்.அப்போது வானில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.சீதளக்காற்று சன்னமாக வீசிக்கொண்டிருந்தது.துப்பட்டாவினால் அவர்கள் தம் தலையினை நன்கு முக்காடிட்டுக் கொள்ள பிஞ்சு உடம்பில் ஒருவித நடுக்கம்.ஓவ்வொருவருக்குள்ளும் இப்போதுதான் விட்டு விடுதலையாகி வந்தது போன்ற உணர்வு மேலிட்டது.பழையபடி எல்லோரும் ஒன்றன்பின் ஒருவராகச் சாலையில் குழுமத் தொடங்கினர்.பின்,ஆளாளுக்கு மனம்விட்டுப் பேச எத்தனித்தனர்.
“என்னக்கித்தான் இதுலேர்ந்து நமக்குச் சொதந்தரம் கெடைக்கப் போவுதோ தெரியலை.”
“இந்த ஜென்மம் நாம எடுத்தத்துக்குப் பேசாம நாய் ஜென்மம் எடுத்துருக்கலாம்.வரவர எனக்கு வாழவே சுத்தமாப் பிடிக்கல”அபி குரலில் தென்பட்ட வருத்தம் மற்றவர்களைப் பதறச் செய்தது.அவர்களது தளர்வான,ஒய்யார நடையில் திடீரென இறுக்கம் கூடியிருந்தது.
“ஏன்டீ திடீர்னு இப்படிச் சொல்ற?ஏன் ஒனக்கு என்னாச்சு?நம்மக் கூட்த்திலேயே நீதான் தைரியமான பொண்ணுன்னு ஊரு பூரா சொல்லி வச்சுருக்கோம்.நீ என்னடான்னா வாழ்ந்து முடிச்சவக்கணக்கா ரொம்ப சலிச்சுக்கிட்டுப் பேசுற?”அடுக்கடுக்கான கேள்விகள்.அபி சற்று நேரத்திற்கெல்லாம் திக்குமுக்காடிப் போய்விட்டாள்.
“நா படுற வேதனை ஒங்களுக்குச் சொன்னாப் புரியாதுடீ”
நா தழுதழுத்தது.கண்ணில் நீர் முட்டியது.வாய்விட்டு ஓவென அழுதால் தேவலாம் போலிருந்தது அவளுக்கு.அந்த மங்கிய நிலவொளியில் அவள் முகம் ஆம்பலாகக் கூம்புவதை உன்னிப்பாக அவர்களால் கவனிக்க முடிந்தது.அபியைப் பார்க்கவே அவர்களுக்குச் சகிக்கவில்லை.பரிதாபமாக இருந்தது.அவள் துக்கத்தை மற்றவர்களும் மௌனமாகப் பகிர்ந்துகொண்டனர்.ஒரே நிசப்தம் அங்கு நிலவியது.அதுவே அவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.நித்யாவால் அதனை எளிதில் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
“ஆமாமா நீ படுற வேதனை எங்க எல்லாருக்கும் எப்படிப் புரியும்.நாங்கல்லாம் அம்பானி பேத்திங்கப் பாரு.அச்சமில்லை அச்சமில்லைனு பாடம் படிச்சா மட்டும் போதாதுடீ.அது போல வாழணும்.வாழ முயற்சிக்கணும்.இ;ங்கு யாருக்குத்தான் பிரச்சனையில்ல.வாழ்க்கையில வர்ற பிரச்சனைக்கெல்லாம் சாகணும்னு ஒவ்வொருத்தரும் முடிவெடுத்துட்டா இந்த பூமியில மனுச இனமே இன்னேரம் அழிஞ்சிப் போயிருக்கும்.வாழ்க்க வாழத்தான் ஒழிய சாக இல்ல.அதை மொதல்ல நீ புரிஞ்சிக்கோ.”நித்யாவின் அந்த தொடர் முழக்கம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.’இவளுக்குள் இத்தனைப் பெரிய மனுசியா’வாயடைத்துப் போய் நிற்கும் கூட்டத்தை தாரணி சுயநினைவிற்கு கொண்டுவந்தாள்.
“ஆமா அவ சொல்றதுலேயும் என்னத் தப்பு?”
“எல்லாம் வாய்கிழியப் பேசலாம்.அனுபவிக்கிற எனக்குத்தான் தெரியும்.அதோட ரணவேதனை”அபியும் அவ்வளவு எளிதில் அவர்களிடம் மசியவில்லை.உடும்புப் பிடியாய் நின்றாள்.மூர்க்கமாக.
“என்னான்னுதான்னு அதைச் சொல்லேன்.நாங்களுந்தான் தெரிஞ்சிக்கிறோம்.”அபியிடமிருந்து தக்க பதிலுக்காக ஜான்சி தன் குரலை உயர்த்திப் புருவம் நெரித்தது அந்த இருட்டிலும் அழகாயிருந்தது.அபி மெல்ல கக்கத் தொடங்கினாள்.
“நம்ம பீட்டி டீச்சர் சொன்னமாறி ஒருத்தர் கண்ணுலேயும்படாம நம்ம அம்மாபோல ராத்திரியிலே கழுவி நெழல்லேயே ஒலர்த்தி வருசம் முச்சூடும் வக்கிற தீட்டுத்துணிக்குப் பதிலா நாப்கின் வாங்கித்தர எனக்கு ஒத்த நாதியில்ல.அப்படியே வெட்கத்தைவிட்டுக் கேட்டாலும் அம்மாலேர்ந்து ஆத்தா வரைக்கும் மொய்மொய்னு மொய்ச்சு என்னோட ஆசைக்கு முட்டுக்கட்டை போடுறதிலேயே முழுமூச்சாயிருக்காங்க.அவுங்க கேக்குறக் கேள்விக்கு என்னால பதில்பேசி மாளலை.”
“அடச்சீ கழுதை.இதுக்குத்தான் இம்புட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுனியா.நாங்க என்னமோ ஏதோன்னு நெனச்சுப் பதறிப் போய்ட்டோம்.”சித்ரா அபியைச் செல்லமாகக் கடிந்துகொண்டாள்.நித்யா பொய்யாய் ஓரடி அவளுக்குக் கொடுத்தே விட்டாள்.ஏனையோரும் அவளை அடிக்க முயற்;சிக்க-
“நல்லா போடுங்கடி.ரெண்டு போடு.ஆசைத்தீர.”என்று மணிமேகலை ஒத்தூதினாள்.
“அடிப்பாவிங்களா உண்மையச் சொன்னா என்ன அடிச்சேக் கொன்னுருவிங்கப் போலிருக்கு.”தப்பியோடினாள்.இங்குமங்கும் அபி.
“பின்னே”மேலும் விரட்டினாள் நித்யா.நைட்டியை ஒருவாறு இழுத்துக்கொண்டே.அங்கே ஒரே கூத்தும் கும்மாளமும் நிறைந்திருப்பதை வேறு யாரேனும் பார்த்திருந்தால்,நீங்க எல்லாம் பொட்டச்சிங்களா இல்ல தடிமாடுங்களாவென்று திட்டித் தீர்த்திருப்பார்கள்.அதற்கு அங்குக் கடுகளவும் வாய்ப்பில்லை என்றுதான் சொல்லவேண்டும்.ஏனெனில்,அக்குமரிகளின் அம்மாக்கள் இவர்கள் செல்லும் திசைக்கு எதிர்திசையில் அல்லவா கூட்டத்தோடு சென்றிருக்கின்றனர்.இது அவர்களாக விரும்பி எடுத்த முடிவல்ல.இவர்கள் அவர்களை விலக்கியதால் வந்த வினை.அவரவரும் அவரவர் தாயோடு போகும்போது அடக்கஒடுக்கத்துடனும் மனதில் படுவதை வெளியில் சொல்லாமலும் சூழல் கருதி அடங்கி நடப்பது சுத்தமாக ஒருவருக்கும் பிடிப்பதில்லை.அது பெற்ற தாய்களுக்கும் மிகுந்த சங்கோஜத்தைக் கொடுக்கவே,அவர்களும் தத்தம் பெண்களை அவர்கள் விரும்பிய வண்ணம் விட்டுவிடத் துணிந்தனர்.அன்றிலிருந்து கொல்லைப்புறத்தை நோக்கிய இருவேறு பெண்களின் இரவு உலாக்கள் வேறுவேறு திசைகளில் பயணப்பட்டன.
மூங்கில்காட்டுக் கொல்லைக்கு முதுபெண்டிரும் நொச்சி,காட்டாமணக்கு,எருக்கு மண்டிய பனந்தோப்பிற்கு வளரிளம் சிட்டுக்கள் என ஆகிப்போனது.இவையனைத்துக்கும் ஒரே தகுதி அப்பெண்கள் கண்டிப்பாக வயதுக்கு வந்திருக்க வேண்டும் என்ற நியதி எழுதப்படாத சட்டமாக அங்கிருந்தது.அத்தகுதிக்குக் குறைவான சிறுமிகளை அவர்கள் அங்கு அழைத்துச் செல்வதில்லை.அப்படியும் அடம்பிடித்துப் போகும் ஆட்களை சகட்டுமேனிக்கு ஆளாளுக்கு அர்ச்சனை செய்து அவர்களை ஒருவழிப் பண்ணிவிடுவதுமுண்டு.அந்தத் திட்டுக்குப் பயந்தே சின்னச்சின்ன வாண்டுகள் தத்தம் சகோதரிகளிடம் கூடச் செல்லாமல் அன்னையரின் முந்தியினைப் பற்றிக்கொண்டே குஞ்சுக்குருவிகளாகச் சென்றுவிடுவர்.ஏனெனில்,அங்குதான் அர்ச்சனைக் கம்மி.
“மத்தவங்களை எல்லாத்துக்கும் நாம அண்டி இருக்குறதை மொதல்லக் கைவிடணும்.நம்மநம்மத்தேவைய நாமலே நெறைவேத்திகிடக் கண்டிப்பா முயற்சிக்கணும்.அப்படிச் செஞ்சுகிட்டம்னா இப்படி அழுது தீக்கணும்கிற அவசியமேயில்ல நமக்கு.”நந்தினி தெளிவாக எடுத்துரைத்தது அங்கிருந்த அனைவருக்கும் மெத்த சரியென்றே பட்டது போலும்.ஜான்சி மெய்சிலிர்த்து உடன் உணர்ச்சி வசப்பட்டவளாகப் பேசத்தொடங்கினாள்.நீலம்பாரித்;த அவளது பூனைக்கண்கள் அந்த அரைநிலவு வெளிச்சத்தில் மின்னி உருண்டது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
“இதைத்தான் நம்ம இங்கிலீஸ் ஸாரு அடிக்கடிச் சொல்வாரு.திங்கக் கெடைக்கிறக் காசை சேமிச்சு வைக்கணும்னு.இப்பப் புரிஞ்சுதா?”அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பதுபோல் அபிக்குள் ஒரு நம்பிக்கைத் துளிர்விட்டது.அப்போது அடிவானத்தில் ஈசான மூலையில் எப்போதும் முளைக்கும் விடிவெள்ளி பளிச்சென தலைக்காட்டிக் கொண்டிருந்தது.அப்போது உர ஆலையிலிருந்து ஓங்கியொலித்துக் கொண்டிருந்த படார் படார் சத்தம் அமிலப்புகையுடன் காற்றை நாசப்படுத்திக் கொண்டிருந்தது.பழந்தின்னி வெளவால்களின் திடீர் பறப்பும் அலைவும் தேவையில்லாத பயத்தை அடிமனம் அவர்களுக்கு உருவாக்க,அரக்கியரக்கி நடக்கும் அவர்களது பொடிநடையில் வேகம் கூடியது.
“வேணுங்கிற அளவுக்குக் கதையடிச்சாச்சா.இல்ல இன்னுமில்லியா?”சின்னஞ்சிருசுகளின் அப்புறக்கணிப்பை எளிதில் எடுத்துக்கொள்ளாதப் புதுக்கல்யாணப் பெண் நிரஞ்சனா தன் ஏமாற்றத்தை வேறுவிதமாக அவர்களிடம் வெளிப்படுத்தினாள்.பெருசுகளிடம் அவள் சிக்கிக்கொள்ள மாட்டாதவளாக இருந்தாள்.அதற்கு அவளுடைய வயதும் ஒரு காரணம்.பிளஸ்டூவை முடிப்பதற்குள்ளாகவே அவளுக்குத் திருமணம் நடந்தேறிவிட்டது.அவசரக் கல்யாணம்.பாவம்.இதற்குக் காரணமான சாகக்கிடந்த பாட்டி இன்னும் சாகாதது அவளுக்கு வெறுப்பையும் வேதனையையும் ஒருபுறம் உண்டுபண்ண,மறுபுறம் தாலிக்கட்டிக் கொண்ட கொடுமைக்காக நடக்கும் இந்த தள்ளிவைப்பு எரியும் கொல்லியில் எண்ணெயை ஊற்றியது.அதில் எல்லோருக்கும் உடன்பாடுமில்லை.அதற்காக அவளைத் தம் கூட்டத்திற்குள் சேர்த்துக் கொள்ளவும் அவர்களால் இயலவில்லை.அது தமக்குப் பெரும் இடைஞ்சலைத் தருமென்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.இது நிரஞ்சனாவிற்குப் பெருத்தத் துன்பத்தைத் தந்து கொண்டிருந்தது.
“நீங்க நெனைக்கிற அளவுக்கு ஒண்ணுல்லக்கா.”பவ்யமாகப் பதிலளித்தாள் நித்யா.
“எப்படியோ நல்லாயிருந்தாச் சரி!”அந்தக் குத்தல் பேச்சு அவர்களுக்குப் புரியாமலில்லை.அதற்காக மல்லுக்கட்டவும் விருப்பமில்லை.மௌனமே அவளுக்குத் தக்கப் பதிலாக,ஏதோ கட்சிப் பொதுக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட கும்பல்போல வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் திரளாக ஊரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர்.மீண்டும் சிறகிழந்து.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து நித்யாவிற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்த வண்ணமிருந்தன.இது அவளே முற்றிலும் எதிர்பாராதது.நல்ல மதிப்பெண் எடுத்து பள்ளியளவில் முதலிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுந்தான் அவளிடம் மேலோங்கியிருந்தது.இன்ப அதிர்ச்சியாக அமைந்த மாவட்ட அளவில் முதன்மையென்பது அவள் கனவிலும் எண்ணிப் பார்க்காதது.பள்ளியாசிரிய,ஆசிரியைகள்,சக மாணவ,மாணவிகள்,கல்வி அதிகாரிகள்,பெற்றோர்கள்,ஊர் பெரியவர்கள்,பொதுமக்கள் என நித்யா திக்குமுக்காடிப் போய்விட்டாள்.
“ஊரு கண்ணு ஒலகத்துக்கண்ணு எல்லாக் கண்ணும் பச்சப்புள்ள மேலதான்.பொழுதுவிடிஞ்சதுலேர்ந்து.மொதல்ல புள்ளைய வூட்டுக்குள்ள கூப்ட்டு திஸ்டிச் சுத்திப் போடு அலமேலு.”
காலையிலிருந்து தம் மருமகளைப் பார்த்துக் கூப்பாடுப் போட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி.அது செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் போனது.அலமேலு அதை அசட்டை செய்தாள் என்று கூறமுடியாது.அவளுக்கு அதற்கான நேரம் ஒழியவில்லை.மகளின் அளவு கடந்த சந்தோசத்தில் தாமும் பங்கெடுத்து வருவோர் போவோரை தக்க உபசரிப்புச் செய்து வழியனுப்புவதிலேயே அவள் பெண்டு கழன்றுவிட்டது.ஆனாலும் அந்தப் புதுவலி அவளுக்குப் பிரசவ வேதனையைவிட பன்மடங்கு இனித்ததில் மெத்த மகிழ்ச்சியெனலாம்.இதற்கிடையில் தொலைப்பேசி மணியொலித்தது.அபசுரமாக.
“நித்தி ஒனக்குப் ஃபோனு”அலமேலு ஆந்தையாய் அலறினாள்.மின்விசிறி ஓயாது பனை உத்தரத்தில் சுற்றிக்கொண்டிருந்தாலும் வியர்வை ஆறாக வழிந்தோடியது.
‘யாரும்மா?”
“யாரோ திருச்செங்கோட்லேர்ந்து ஒரு பெரிய ஸ்கூலு பிரின்ஸ்சிபாலா.”அவசரப்படாமல் மெதுவாகச் சென்று அதனை அம்மாவிடமிருந்து வாங்கிக் காதில் பட்டும்படாமலும் வெள்ளிக் குமிழை அழுத்தாதவாறு வைத்து அமைதியாக மறுமுனையின் பேச்சை உற்றுக் கேட்டாள்.அதிகம் உம் கொட்டியவள் இறுதியாக ஸாரி முடியாது கோவிச்சுக்காதீங்க என்று பதிலளித்து தொலைப்பேசியை நிதானமாக அணைத்தது அலமேலுவை இருப்புக் கொள்ள வைக்கவில்லை.முகமெங்கிலும் ஆவலும் பதட்டமும் நிறைந்த ரேகைகள் பற்றிப் படர்ந்துக் காணப்பட்டன.நித்யாவை உற்று நோக்கினாள்.முகத்தில் எள்ளைத் தூவினால் பொரிந்துவிடும் போலிருந்தது.விழிகள் கோவைப்பழமாகச் சிவந்துக் கிடந்தன.வலது மூலையில் அழகான மச்சம் பதிந்து காணப்படும் மேலுதடு கீழுதட்டுடன் கூட்டுச்சேர்ந்து கோபத்தில் துடிக்க ஆரம்பித்தன.
“என்னம்மா.என்னாச்சும்மா?”நித்யாவை ஆதரவாகத் தொட்டுப் பேசினாள் அலமேலு.மிகுந்த கவலையோடும் அக்கறையோடும்.அந்த ஸ்பரிசம் நித்யாவிற்கு ஆறுதலையும் திடத்தையும் அளித்தது.
“நீ அடிக்கடிச் சொல்வியே மரத்தை வச்சு ஆளாக்குறவன் ஒருத்தன்.பழத்தைத் திங்குறவன் வேறொருத்தன்னு.இது நூத்துக்கு நூறு உண்மை.நான் டென்த்துல டிஸ்க்டிக் ஃபர்ஸ்டா வந்ததுக்கு ஒசரம் அவங்க கோடிக்கோடியாக் கொள்ளையடிக்க எனக்கு ஆசைக் காட்டித் தூண்டிப் போட்டாங்க.அதான் நான் அறுத்துப் பேசிச் சுத்தமா முடியாதுன்னுட்டேன்.”அவளது பீடிகை மிக்கப் பேச்சு அலமேலுவிற்கு கொஞ்சங்கூட புரியவில்லை.மலங்க மலங்க விழித்தாள்.இமைகள் படபடத்தன.மாறிமாறி.பாதி திறந்த வாய் மூடவில்லை.
“நீயொரு டியூப் லைட்டும்மா.அடுத்த ரெண்டு வருச என் படிப்புக்குண்டான செலவை நாற்க ஏத்துக்குறோம் வாயேன்னு கேட்டாங்க.நான் வரலைன்னுட்டேன்.போதுமா?”
“ஏன்டீ நல்ல விசயந்தானே.நாம இருக்குற இருப்புக்கு அங்கே போயிப் படிக்குறது அவ்ளோ லேசானதா?அதும் சும்மா!கரும்புத் தின்னக் கூலிக் கெடைக்குது.அதை வேணாங்குறீயே நீ என்னப் புள்ள?”
“அதுக்காக இவ்ளோ காலம் கஸ்டப்பட்டு ஒழைச்சு என்னை இந்த நெலைமைக்கு உருவாக்குன நம்ம வூரு பள்ளிக்கும் ஏணிப்படியாயிருந்து எனக்குப் பாடம் சொல்லிக்குடுத்த ஆசிரியர்களுக்கும் பச்சத்துரோகம் பண்ணிட்டு இன்னைக்கு ஊருபேரு தெரியாத யாரோ கூப்பிடுறாங்கன்னு போகச் சொல்றீயா?”அலமேலுவால் பேச முடியவி;ல்லை.திருதிருவென முழித்தாள்.கைக்குக் கிடைத்தது வாய்க்கு இப்படிக் கிடைக்காமல் போகிறதே என்கிற வருத்தம் வேறு அவளை வாட்டியது.நித்யாவின் பேச்சிலிருந்த நியாயமும் அவளுக்குப் புரிய,அவள் ஏதும்செய்ய வாளாதவளாக இருந்தாள்.
“இதே போல இதே ஊர்ல இதே அரசுப்பள்ளியில மேலப் படிச்சு மறுவாட்டியும் என்னால நல்ல பேர சம்பாரிக்க முடியும்.என்ன நம்பும்மா”இறைஞ்சினாள் நித்யா தாயிடம்.அவள் பேச்சில் தென்பட்ட உறுதி அலமேலுவிற்கு புதுத் தெம்பூட்டியது.
இச்செய்தி காட்டுத்தீ போல மறுநாள் ஊரெங்கும் பரவியது.மாவட்ட ஆட்சியர் ஜெயசாந்தி பத்திரிகை மூலமாகத் தகவலறிந்ததும் ஆவல் மேலோங்க உடன் நித்யாவைச் சந்திக்கும் விருப்பத்தைத் தன் மேலதிகாரிகளிடம் தெரிவித்துப் புறப்பட ஆயத்தமானார்.எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்து.
அன்று விடுமுறையாதலால் பள்ளியில்லை.நித்யா இருந்த வீட்டிற்கே அவர் பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சென்றது அங்கிருந்த அனைவருக்கும் பெரும் வியப்பைத் தந்தது.பறந்த புழதி மண்ணில் அடங்குவதற்குள் அந்தச் சேரி முழுவதும் புற்றீசலாகக் கூட்டம் குழுமிவிட்டது.எங்கிருந்தோ இரவல் வாங்கிவந்த பழைய பிளாஸ்டிக் சேரில் அமராமல் மற்றவர்களைப் போலவே நின்றவாறே நல்ல நிறைந்த மனத்தோடு நித்யாவைப் பார்த்துக் கேட்டார்.தயாளக்குணத்துடன்.
“ஓன் நல்ல மனசுக்கு ஏதாச்சும் செய்யணும்னு எனக்குத் தோணுது.இப்பச் சொல்லு ஒனக்கு என்ன வேணும்?தைரியமாக் கேளு. கூச்சப்படாத.”ஊரே அவளைச் சுற்றி வட்டமடித்தது.பெருமையுடனும் பொறாமையுடனும்.நித்யா சற்றுநெரம் குழம்பினாள்.பேச நா எழவில்லை.மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடியதை அவளால் நன்கு உணர முடிந்தது.நிசப்தம்;.அதை நொறுக்குவதுபோல் ஊராரின் ஒரே முணுமுணுப்புகள்.இதற்கிடையில் நித்யா தன்னை ஒருவாறு சுதாரித்துக்கொண்டு தன் நெடுநாள் விருப்பத்தைத் தெளிவாக வெளிப்படுத்தினாள்.
“நீங்க இவ்ளோ தூரம் கேக்குறதால நானும் என் வெட்கத்தவிட்டுக் கேக்குறேன்.எங்க ஊருப் பொண்ணுங்களுக்கென பொதுவாத் தண்ணீ வசதியோட ஒரு நல்ல லெட்டின் கட்டித்தர முடியுமா?”

என்னால் எழுதப்பட்டு காவியன் இலக்கியப் பரிசுப் போட்டியில் ரூ.10000 பரிசினை வென்ற சிறுகதை இது. இதை எழுதிய என்னுடைய பெயர் மணி.கணேசன் மன்னார்குடி.
ReplyDeleteஎன்னால் எழுதப்பட்டு காவியன் இலக்கியப் பரிசுப் போட்டியில் ரூ.10000 பரிசினை வென்ற சிறுகதை இது. இதை எழுதிய என்னுடைய பெயர் அமுதாராம் என்கிற மணி.கணேசன் மன்னார்குடி.
ReplyDelete