ந.முருகேசபாண்டியன்
மொழியின்
அதிகபட்ச சாத்தியங்களைப் படைப்பாக்கும் கவிதையின் வீச்சு நுட்பமானது.
சொற்களைக் குடைந்து, மங்கலான மொழியமைப்பில் வெளிப்படும் நவீனகவிதை
முன்னெப்போதையும்விட அர்த்தத்திலிருந்து விலகியுள்ளது. தனிமனித உணர்வு
சார்ந்தநிலையில், கவிதையானது சொற்களில் இருந்து விலகித் தானாகவே வேறு
ஒன்றாக வடிவெடுக்க முயலுகின்றது. மேலும் நவீன வாழ்க்கையில்
பெருங்கதையாடல்கள் உருவாக்கியுள்ள கசடுகள்மீது கவிதை தனது விசாரணையைத்
தொடங்கியுள்ளது. இதுவரை மரபுரீதியில் உருவாக்கப்பட்ட அளவுகோல்கள்
தகர்க்கப்படும் சூழலில், சுதீர்செந்திலின் கவிதைகள் தனித்து விளங்குகின்றன.
வாழ்வின் நெருக்கடி, சூழலின் இறுக்கம் காரணமாக இருப்பிலிருந்து
அந்நியப்படும் மனதின் வெக்கையானது சுதீரின் கவிதை வரிகளாக
வெளிப்பட்டுள்ளது. ஒன்றுமற்ற ஒன்று (2002) கவிதைத்தொகுப்பு மூலம்
அடியெடுத்து வைத்த செந்தில் குமார் என்ற சுதீர்செந்தில் உயிரில் கசியும்
மரணம்(2008), யாருடைய இரவெனத் தெரியவில்லை(2010), பூப்படைந்த மலர்களைக்
கனியச் செய்கையில்(2011) என அடுத்தடுத்துத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
சுதீர் தனது விரலிடுக்கில் கசியும் வாழ்க்கையைக் கவிதையாக்க
முயலுகின்றாரா? யோசிக்க வேண்டியுள்ளது .
சுதீர் தனது கவிதைகள்மூலம் சித்திரிக்கும் உலகில் எப்பொழுதும்
அவரே உரையாடி கொண்டிருக்கின்றார். அவருக்குச் சக மனிதர்களுக்குச்
சொல்வதற்கு நிரம்ப விஷயங்கள் உள்ளன. அவர் தனக்குள் படிந்துள்ள
யதார்த்தவாழ்வின் வண்டலையும் விசாரிப்புகளையும் கவிதை வரிகளாக்கியுள்ளார்.
மரபுரீதியில் கட்டமைக்கப்பட்டுள்ள புறவுலகின்மீது அவருக்கு நிரம்பக்
கேள்விகள் தோன்றுகின்றன. முடிந்தால் இரண்டு அவுன்ஸ் மார்பீஸ் பிராந்தி
அருந்திவிட்டுச் சுதீருடன் பேச்சைத் தொடங்கலாம். சுழல் ஏணியில் ஏறி உள்
வெளி என்ற போதம் அற்றுச் சுற்றிச்சுழலும் விநோத உலகினுக்குள் பயணித்துப்
பார்க்கலாம். அதற்கான எல்லாச் சாத்தியப்பாடுகளும் சுதீரின் கவிதைகளுக்குள்
பொதிந்துள்ளன. எல்லாமே அலகிலா விளையாட்டுத்தான். ஆதிசிவன் உன்மத்த நிலையில்
ஆடிய ஆட்டம், கவிதை வரிகளாக மாறினால், விளையாட்டைத் தொடங்க வேண்டியதுதான்.
நவீன மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சவால்களும் அளவற்றவை.
புத்திரீதியில் வாழ முயலும் சுதீரின் கெட்டிக்காரத்தனம் நசிவடையும்
சூழலில், கசப்பும் சலிப்பும் கவிதை வரிகளில் பொங்கி வழிகின்றன. வாழ்வின்
கொண்டாட்டங்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சியின் மீதும் நம்பிக்கை இழந்த சுதீர்
ஒன்றுமற்ற உலகில் தனது இருப்பினை அடையாளப்படுத்த முயலுகின்றார். தனது சொந்த
வாழ்வின் பரவசங்கள், சோகங்கள், வெறுப்புகள் இழப்புகள் எனத் தன்னிலை
சார்ந்து விரியும் கவிதைகள் வழியே உருவாக்க விழையும் உலகு
வரையறைக்குட்பட்டது. பெரும்பாலான இளம் கவிஞர்களின் தடத்திலேயே சுதீரின்
தொடக்ககாலக் கவிதைகளும் உள்ளன.
என்
சுவாசப் பையை
என் குழந்தை
எடுத்துக் கொண்டது
என்
கால்களை எரித்து
என் மனைவி
உணவு சமைக்கிறாள்
குடும்பம் என்ற அமைப்புடன் வேறுபடும் ஒற்றையான ஆணின் மன முரண் தன்னுடலே
சிதைக்கப்படுவதாகக் கற்பிதம் செய்கின்றது. உறவினர் வட்டத்தில் இருந்து
தன்னை ஒதுக்கிக்கொண்டு அவதிப்படும் ஆணின், வலியான துயரத்தைப் பதிவு
செய்வது இக்கவிதையில் நிகழ்ந்துள்ளது.
மனித இருப்பின் ஆதாரமான காமம் உடலில் நிகழ்த்துகின்ற விந்தைகள் அளவற்றவை.
ஒரு குறிப்பிட்ட கணத்தில் உடல் வேறு மனம் வேறு என்ற பேதமற்றுக் காமம்
ஏற்படுகின்ற வேதியியல் மாற்றங்கள் நுட்பமானவை. காமம் உடல் சார்ந்து
உருவாக்கும் மனப்பதிவுகள் கவிதையின் வழியே புனைவின் விளையாட்டை
உருவாக்குகின்றன. காமத்தை நூலறுந்த பட்டமாகக் கருதும் சுதீரின் மனம்
ததும்புகின்றது.
எரிக்கப்படாத
காமத்தின் வேர்களில்
இருந்து
எப்படியும் துளிர்த்து விடுகிறது
ஒருபோதும்
மணம் வீசாத பூக்கள்
காமம்
பற்றிய மரபு வழிப்பட்ட போக்கினுக்கு மாற்றாகக் காமத்தின் விளைவு மணம் வீசாத
பூக்கள் என்பது சுயம் சார்ந்த சலிப்பின் வெளிப்பாடு. இரவும் பகலுமற்ற
/காலவெளியில்/நம்முடன்/நாம் கலப்போம் எனக் காத்திருக்கும் சுதீரின் தேடல்
,இன்னொரு முனையில் மரணத்துடன் உறவாடுகின்றது. வேட்கை கவிதையில் பாலியல்
விழைவினை முன்னிறுத்திய நிலை மாறுகின்றது. காமத்தின் உச்சநிலையில் மரணம்
இசைந்திடுவது ஒருவகையில் விநோதமானது.
கண்மூடி
யோசிக்க யோசிக்க
தலைசுற்றித் தலைசாய்க்க
முடிவிலாது அழைக்கும்
மரணம்
காமமும் மரணமும் கையற்று மயங்கும் நிலை, சுதீரின் முதல் தொகுப்பிலேயே வெளிப்பட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டில் வெளியான யாருடைய இரவெனத் தெரியவில்லை கவிதைத்தொகுப்பு,
சுதீரின் கவிதையாக்கத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களைப்
பதிவாக்கியுள்ளது. விழுமியங்கள் அர்த்தமிழந்த நிலையில் எதன்மீது நம்பிக்கை
கொள்வது ? கடந்தகாலம் என்ற வெளியில் நடைபெற்ற சம்பவங்களின் நினைவுத்
தொகுப்பாக இருக்கும் நடப்பு வாழ்க்கையில் எதைச் சார்ந்து இருப்பது? எல்லாக்
கேள்விகளும் அடிவானத்துக்கப்பால் பறந்திடும் பறவைகளாக மிதக்கின்றன .இத்தகு
சூழலில் சுதீரின் கவிதையுலகு வெறுமையாக விரிகின்றது. குடும்ப உறவுகளில்
கசியும் கசப்பின் சுவையைப் பருகியபடி காமம் பற்றிப் பேசும் சுதீருக்கு
மரணத்தின்மீது தீராத பயம். பெரும் காமத்தில் மூழ்கித் தவிக்கும் வேளையில்,
மரித்துப் போனாலும் பெண்ணின் அல்குல் மயிர்க்கால்களில் உயிர்த்திருப்பேன்
என நம்புவது அபத்தமன்றி வேறு என்ன?
பூமியில் பிறப்பு என்ற நிலையில் நுழையும்போது, மரணம் தவிர்க்கவியலாத
தொடர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனம் துயரத்தினால் வாடுகின்றது.
காலந்தோறும் மரணத்தை முன்வைத்துப் புனையப்பட்ட தத்துவங்களுக்கும் இலக்கியப்
படைப்புகளுக்கும் அளவேது? இன்றைய வாழ்க்கைப் பரப்பில் மந்தையிலிருந்து
பிரிந்து வாழ்ந்திடும் சூழலில், தனிமனிதரீதியில் ஏற்படும் பிரச்சினைகள் மன
உளைச்சலுக்குக் காரணமாக அமைகின்றன. மரணத்தைவிட மரணபயம் பெரும்பான்மையினரை
உலுக்குகின்றது. காண்பதற்கு ஒன்றுமில்லாவிடில் விளக்கை அணைப்பதுபோல
பூமியில் இருப்பதற்கு மனம் விரும்பாவிடில் மரணத்தைத் தழுவலாம் என்பது
சிலரின் கருத்து. மரணத்தின் நிழல் தொடர்ந்திடும் வேளையில் என்ன செய்ய
முடியும்? மரணத்தின் வாசம் பரவும் சூழலில் சுதீரின் கவிதை வரிகள்
கவனத்திற்குரியன.
மரணத்தை முத்தமிடுதல் /அத்தனை தித்திப்பானது எனத் தொடங்கும் கவிதை
மரணத்தையும் துரோகத்தையும் ஒருங்கிணைக்கிறது. ருசித்துப் பார்த்தது உண்டா/
மரணத்தின் சுவையை என்ற கேள்வி எளிதில் புறக்கணிக்கக்கூடியது அல்ல. மரணம்/
அத்தனை ருசியாக இருக்கிறது என முடியும் மரணச்சுனை கவிதை அழுத்தமானது.
காலியான பாத்திரத்தில் ததும்பி வழியும் வெறுமையைப் போல உடலில் கசிந்து
கொண்டிருக்கும் மரண வாசத்தின் மீதான ப்ரியம் உயிரோட்டமானது.
மரணத்தின் பிம்பம், உயிர்த்திருக்கும் மரணம், மரணத்தின் ஒத்திகை,
மரணத்தின் நகர்தல், மரணத்தின் கதை எனச் சுதீரின் கவிதைகள் மரணத்தை
முன்வைத்து விரிந்துள்ளன.
தூக்கம் என்பது
உறக்கம் மட்டுமா
அது
மரணத்தின் ஒத்திகை
மரணம் என்பது
தூக்கத்தின் தொடர்ச்சி
மரணம்
பற்றிய கருத்தியலைக் கவிதையாக்க முயன்றது வெறுமனே குறிப்புகளாகத் தேங்கி
விட்டது. என்றாலும் தனக்கும் மரணத்துக்குமான உறவினைச் சுதீர் எளிய வரிகளில்
கவிதையாக்கியுளார்.
ஒவ்வொரு நாளும் முகத்தில்
தரிசிக்கும் மரணத்தை
பவுடர் பூச்சால் மறைத்தபடி
இதழ்களில் புன்னகையை
நெளிய விடுகிறேன்
கண்ணாடியில் தினமும் பார்க்கும் முகத்தில் தெரியும் மரணம் என்பது கவிதையை
வேறு தளத்தினுக்கு மாற்றுகின்றது. கண்ணாடிக்குள் தெரியும் பிரதிபிம்பம்
ஸ்பரிசிக்க இயலாதாததுபோல மரணமும் மறைந்திருக்கின்றது. ஒருவனின் முகம்தான்
அடையாளம் என்ற நிலையில், மாயபிம்பமாக ஒளிர்ந்திடும் முகத்தில் மரணத்தின்
சாயல் படிந்திருப்பதாகக் கவிஞருக்குத் தோன்றுவது விரக்தியின் உச்சம்.
உயிரில் கசியும் மரணம் என்ற தொகுப்பின் தலைப்பு கவனத்திற்குரியது. எனினும்
மரணத்தை முன்வைத்துச் சுதீர் சொல்ல விழைந்தவை பிந்தைய கவிதைகளில்
ஒன்றுமற்றதாக உருமாறுகின்றன. காமம், காதல் ஆகியவற்றுடன் மரணத்தினை
ஒத்திசைந்து தத்துவநோக்கில் ஆராய்கின்றனவாகக் கவிதைகள் மாற்றம் பெற்றுள்ளன.
பாலியல் வேட்கையை முன்னிலைப்படுத்தும் நிலையில் கவிதைகள் புதிய
திசைவழியில் பயணிக்கின்றன. மரணமும் காமமும் ஏதோ ஒரு புள்ளியில்
ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் வேதியியல் மாற்றங்கள் கவனத்திற்குரியன.
வெயில் காயும் கொக்குகள் கவிதை வரிகள், ஆண்-பெண் உறவின்
சாத்தியப்பாட்டினை உடல்ரீதியாக மாற்றுகின்றது. கடந்து செல்லும்
பெண்ணுடலைத் தொடரும் நினைவின் வழியே மனம் புனைந்திடும் உலகு வெளியெங்கும்
மிதகின்றது.
காற்றும் ஒலியும்
` புயலாயும் உணர்வாயும்
மாறியபின்
என் உடல் பொசுங்க
முத்தமிட்டாய்
பூமியின் சுழற்சி
ஒரு கணம் நிற்க
வெடித்த வெடிப்பில்
உன்னுள் புகுந்தேன்
பாலியல் வேட்கையின் விளைவாக வெளிப்பட்டுள்ள வரிகள் அந்தப் பனிக்காலப்
புலர்தலில்/ வெண்கொக்குகள்/ வெளியெங்கும்/ வெயிலில் காய்ந்து கொண்டிருந்தன
என முடிகின்றன. அடக்க முடியாத காமம் உடலில் இருந்து பொங்குவது மன
வதையாகியுள்ளது.
சூரியனும் நிலவும் கவிதையில் எதிரிணையின் வேட்கைக் குறிப்புகள்
பதிவாகியுள்ளன. காதல் அல்லது காமம் எதுவாகினும் மனம் புனைந்திடும்
காட்சிகள் வெளியெங்கும் மிதக்கின்றன. தன்னை மறத்தல் என்பது காலங்காலமாக
யோகிகளின் முயற்சி மட்டுமல்ல. தாந்திரிக வழியில் உடலைப் பூசித்தவர்களின்
நிலையும் அதுதான். ஒருநிலையில் உடலைச் சுமந்து கொண்டிருப்பதாகத்
தோன்றும்போது , உடலை மறந்து வேறு நிலையை அடைவது பேரின்பமாகக் கருதப்பட்டது.
சக உடல்மீது அத்துமீறலின் அதிகாரத்தைக் கட்டமைக்கும் சூழலில்,
எதிர்பாலினரின் உடலை நேசிப்பது மேன்மையானது. சுதீருக்குக் கூடல் என்பது
தன்னை அறிதலாக உள்ளது.
முயக்கத்தில் மயங்கிய
அவன் கண்களில்
ஒரு முலை சூரியனாகவும்
இன்னொன்று நிலவாகவும்
சுடர்ந்து கொண்டிருக்கையில்
அவர்களுக்கு நேர் மேலே
வானத்தின் உச்சிக்கு
நெருப்புக் கோளம் வந்திருந்தது
பெண்னை நிலவாக உருவகிக்கும் தமிழ்மரபில், அவளது பால் அடையாளமான முலைகளைச்
சூரியனாகவும் நிலவாகவும் கருதுவது விந்தையானது. பெண்ணுடலின் வழியே இயற்கையை
தர்சிக்கின்ற மனோபாவம் கவிதையில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. ஒரே
நேரத்தில் வெம்மையும் குளிர்ச்சியையும் தரும் அதியற்புதம் பெண்ணுடலில்
நிகழ்வது, காம விழைவினை உச்சநிலைக்கு இட்டுச் செல்கின்றது.
பொதுவாகக் காதலும் காமமும் பற்றிய சுதீரின் அறிதல் எளிய வரிகளில்
வெளிப்பட்டுள்ளது. ஆயிரம் கால்களோடு/ நகர்ந்து செல்லும்/ மேகத்தில்/
கரையும் காதல்/ கடலாய்த் தளும்புகிறது/ கடல் போல் பெருகும்/ காமத்தில்/
ஊறும் நீர்த் துளிகள்/ பனியாய் மிதக்கின்றன. தண்ணீர் வெப்பத்தினால்
ஆவியாகி, குளிரினால் பனிக்கட்டியாகி, பின்னர் மீண்டும் தண்ணீராகி நடைபெறும்
மாயாஜாலம் போல காதலும் காமமும் சூழலினால் வேறுவேறு நிலைகளை அடைகின்றன. எது
காதல் எது காமம் எனத் துல்லியமாக வரையறுத்துவிட முடியாதபடி வாழ்க்கை
நகர்கின்றது. காதல் மேமையானது போலவும் காமம் கீழானது போலவும் சமூகம்
கட்டமைத்திருப்பது அபத்தமாகின்றது.
காதலென்பது காதல்தான்/ காதலென்பது காதலே இல்லை/ காதல் படும் பாட்டை../
காதல் பார்த்துக் கொண்டிருக்க/ காமம் நீள்துயில் கொண்டிருக்கிறது எனச்
சுதீரின் கவிதை வரிகள் நீள்கின்றன. வேட்கையின் வழியே உடல்களின் அறிதல்
பற்றிய பிரக்ஞையைக் கவிதை நகலெடுத்துள்ளது. மனித வாழ்க்கையின் ஆதாரமான
காமமும் மரணமும் சுதீர் செந்திலின் தேடலில் முக்கிய இடம் வகிக்கின்றன.
வெளிச்சம் ஏற்படுத்தும் உணர்வினுக்கு மாற்றாக இரவு புதிர்களின் தோற்றுவாயாக
உள்ளது. இருள் ,அச்ச உணர்வினை உருவாக்குவதுடன் நினைவுகளை முடக்கிப்
போடுகின்றது. உடம்பின் வாசனையான காமத்தின் வீச்சம் எங்கும் பரவும் வேளையில்
மனித உயிர் உறைகின்றது. உறங்குவதற்கு மட்டுமல்ல இரவு என்ற கருதுகோளின்
வழியே இரவை உடலெங்கும் அள்ளிப் பூசிக்கொள்ளத் தோது உள்ளது. யாருடைய இரவெனத்
தெரியவில்லை எனக் குழம்பும் சுதீரின் மனம் அற்புதமான கவிதை
வரிகளாகியுள்ளது.
யாருடைய இரவெனத் தெரியவில்லை/ அத்தனை வெளிச்சமாக இருக்கிறது/ புளிப்பின்
சுவை போலவும்/ தீர்க்க முடியாத வன்மத்தைப் போலவும்/ கோப்பை மதுவில்/
வழியும் கசப்பைப் போலவும்/ இந்த இரவு சுடர்கின்றது/ இரவின் ஆடையைப்
பறித்துக் கொண்டவனிடம்/ மன்றாடுகிறேன்/ என் இரவைத் திருப்பித் தரும்படி/
வெற்று மதுக் கோப்பைகளில்/ நிரம்பி வழியும்/ இந்த இரவு/ என்னை நீங்கிச்
செல்கிறது/ மதுவின் வாசனையோடு. இரவு குறித்த சுதீரின் விவரணை மங்கலான
நிலையில் ததும்புகின்றது. தனக்கான இரவு என்ற நிலையிலிருந்து விலகி, இரவை
வெளிச்சம் எனவும் சுடர்கின்றது எனவும் அவதானிக்கும்போது இரவு வேறு ஒன்றாக
உருமாறுகின்றது. ஒருபோதும் ஸ்பரிசிக்கவியலாத இருள் பற்றிய மர்மம் சூழ்கின்ற
கணம், விந்தையான மொழியில் கவிதையாகியுள்ளது. இரவுக்கும் தனக்குமான
உறவினைப் போதமற்ற நிலையில் விவரிப்பது சுவராசியமானது.
தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒப்பனை கவிதை நுட்பமான தளத்தில் விரிகின்றது
எவ்வாறு அறிது கொண்டாய் இந்த முகத்தை
அரிதாரம் இல்லாத முகத்தை எனக்குப் பிடிக்காது
நீ சொல்கிறாய்
அரிதாரத்தைக் கலைத்துவிட்டு வாவென
மேலும் நீ கேட்பதைக் கொடுகிறேன் என்றும்
எவ்வாறு என் அரிதாரத்தைக் கலைப்பது
உனக்காகக் கலைக்க முயல்கிறேன்
நீ உன் அரிதாரத்தைக் கலைத்துவிட்டு வா
ஒப்பனை என்ற சொல்லினை முன்வைத்துச் சுதீர் புனைந்திடும் உலகு மனவெளிக்கு
நெருக்கமானது. யதார்த்ததில்அரிதாரம் ஒருபோதும் கலைக்க முடியாத நிலையில்,
வாழ்க்கை கசிந்து கொண்டிருக்கின்றது. இயல்பு எது அரிதாரம் பூசிய முகம் எது
எனப் பகுக்கவியலாமல் நாளும் முகத்தின் பாவனை மாறுகின்ற நெருக்கடியில்
அசலானது எதுவென்ற கேள்வி தோன்றுகின்றது. எல்லாம் துல்லியம் என்ற
பிரக்ஞையின் அபத்தம் குறித்த விசாரணை கவிதை வரிகளாகியுள்ளது. கண்ணாடி
கவிதையும் முழுமை அடைந்த நிலையில் இருப்பினை விசாரிக்கின்றது.
பொதுவாகச் சுதீர், தனது கவிதைகளின் வழியே தன்னைக் கண்டறிவதுடன் சூழலையும்
கேள்விக்குள்ளாக்க முயலுகின்றார் இருப்பின் அபத்தமும். சூழலின் வெக்கையும் ,
உருவாக்கும் தொட்டாச்சிணுங்கி மனநிலையின் வெளிப்பாடான வெறுமையும்
சலிப்பும் சுதீரின் கவிதையாக்கத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.
இரண்டாயிரமாண்டுப் பழமையான தமிழ்க்கவிதைப் பரப்பில் இவைதான் கவித்துவச்
செறிவுடையவை என வரையறுப்பது சிரமம். என்றாலும் ஏதோவொரு அளவுகோலினால்
கவிதையை மதிப்பிடுவது தொடர்கின்றது. கவிதை எழுதுவது வேறு கவிஞனாக இருப்பது
வேறு என்பது நிதர்சனம். அடுத்தடுத்தத் தொகுப்புகளின் வழியே தனக்கான
கவிதையினை அடையாளம் காண்பது ,சுதீருக்குக் கைவரப் பெற்றுள்ளது. பல்வேறு
மனநிலைகளில் கொந்தளிக்கும் மன உணர்வுகளைக் கவிதைகளாக்கும்போது ஏற்றஇறக்கமான
வடிவங்களைச் சுதீர் கையாண்டுள்ளார். சில கவிதைகள் தத்துவத்தின் வாகனமாக
உள்ளன: சில கவிதைகள் காட்சிப் படிமங்களாக வெளிப்பட்டுள்ளன: சில வெறுமனே
சொற்களாகத் தேங்கியுள்ளன. என்றாலும் மொழி ஆளுகையில் சுதீரின் கவித்துவம்
தனித்துவமானது. கவிதைப் பெருவெளியில் இன்னும் செல்ல வேண்டிய பயணம் குறித்த
பிரக்ஞையுடன் சுதீரின் கவிதையாக்க முயற்சி தொடர்கின்றது..
No comments:
Post a Comment