''கல்தோன்றி
மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த
குடி''
என்று
புறப்பொருள் வெண்பாமாலையில் புலவர் அய்யனாரிதனார் பாடுகின்றார். அவ்வாறு கல்தோன்றி
மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியென்று சொல்லப்படுவது நமது தமிழ்க்குடி.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகின்ற பண்பட்ட மொழி நமது தமிழ் மொழி.
அத்தகைய தமிழ்மொழி இந்த அகிலத்திலே ஒரு காலத்தில் இருந்த இடமே தெரியாமல்
அழிந்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது என்று சொன்னால் அது அழிந்துவிடவேண்டும் என்று
நாம் ஆசைப்படுகின்றோம் என்று கருதிவிடக்கூடாது. காலத்தால் அழிந்துவிடக்கூடிய
கட்டாயம் நம் கன்னித்தழிழுக்கு ஏற்படப்போகின்றது என்று நாம் சொல்கின்றோமென்றால்
அதற்குக் காரணம் அந்த அழிவிலிருந்து நம் செந்தமிழ்மொழியைக் காப்பாற்றவேண்டும்
என்கின்ற அதீதமான அக்கறைதான். அதற்காகத் தமிழினம் ஆவனசெய்யவேண்டுமே என்கின்ற
அங்கலாய்ப்புத்தான். உலகத்தமிழினத்தை விழித்தெழச் செய்வதற்காக ஊதப்படுகின்ற அபாயச்சங்குதான்
இந்தக் கருத்துரை.
இன்னும் நூறு
வருடங்களிலே தமிழ் மொழி அழிந்துவிடும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் இன்னும்
நூறு வருடங்களுக்குப் பின்னர் இந்த உலகிலே வாழப்போகின்ற மொழிகளின் பட்டியலிலே
தமிழ் இல்லை. அதாவது பாரிஸ் நகரத்திலே உலகத்து மொழிகள் சம்பந்தமாகச் செய்யப்பட்ட
ஆய்வு ஒன்றின் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலே அடுத்த நூறு வருடங்களின்
பின்னரும் நிலைத்து வாழப்போகின்ற மொழிகளின் பட்டியல் ஒன்றை
வெளியிட்டிருந்தார்களாம். அந்தப் பட்டியலில் தமிழ் மொழி இல்லையாம். அப்படியானால்
இன்னும் நூறு வருடங்களில் தமிழ் மொழி இல்லாமல் போய்விடும் என்பதுதானே அந்த ஆய்வு
நமக்குத் தந்திருக்கும் முடிவு?
அந்த முடிவை
அக்கறையோடு நோக்கவேண்டியது செந்தமிழ்மொழிபேசும் ஒவ்வொருவரதும் தவிக்கமுடியாத
கடமையாகும். அந்தக் கடமையைக் கருத்தில் கொண்டு ஆவனசெய்யவேண்டியது இன்றைய
காலகட்டத்தில் நம்தமிழ் மொழிக்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய பணியாகும். அதை
விடுத்து தமிழ்மொழியின் மீதுகொண்ட தணியாத பற்றினால், மிகையான பாசத்தினால் எங்கள் தமிழ்மொழி என்றுமே
அழியாது என்று உரத்துப் பேசுவதால் எதுவுமே ஆகப்போவதில்லை.
தமிழ் மொழியின்
வரலாற்றை, தமிழ் இனத்தின்
வரலாற்றை சிறிது நேரம் நமது சிந்தனைக்கு எடுத்து சீர்தூக்கிப் பார்த்தோமென்றால்
இந்தக் கருத்திலே இருக்கக்கூடிய எச்சரிக்கையை நாம் உணரமுடியும்.
வரலாற்றுக்கு
முந்திய காலம்
விரிந்த
உலகெல்லாம் தமிழினம் பரந்து வாழத் தலைப்பட்டமை இன்று நேற்று இடம்பெற்ற சம்பவமல்ல.
இனப்பிரச்சினையால் இலங்கைத் தீவைவிட்டு இலட்சக்கணக்கில் தமிழ்மக்கள் வெளியேறியமை
அண்மைக்காலத்திலே நடைபெற்ற இடப்பெயர்ச்சி. இது அரசியலால் ஏற்பட்டது.
ஆனால்
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் தமிழன்
இடம்பெயர்ந்தான். கடல்கடந்து வணிகம் செய்தபோது தமிழன் இடம் பெயர்ந்தான். போர்களிலே
ஈடுபட்டுப் புதுஇடங்களுக்குச் சென்றதால் தமிழன் இடம்பெயர்ந்தான். மனித இனத்தின்
வாழ்வியலின் ஒருபகுதியாக இடம்பெயர்தலும் இருந்த காலத்தில் எத்தனையோ நாடுகளுக்கு
தமிழன் இடம்பெயர்ந்தான்.
அவ்வாறு சென்ற
தமிழினம் உலகின் வௌ;வேறு பகுதிகளில்
வாய்ப்புக்கும் வசதிக்கும் ஏற்றபடி வாழத்தலைப்பட்டது.
சென்ற இடங்களிலே
சீவித்துக் கொண்டிருந்த தமிழினம் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதிருந்தது. அதனால்
அவர்கள் பேசிய செந்தமிழ்மொழி அந்தந்த இடத்திற்கேற்றவாறு திரிந்தது. மெல்லமெல்ல
புதுப்புது வடிவத்தை அடைந்தது. வௌ;வேறு மொழிகளாகப்
பிரிந்தது. அதனால் தமிழர்களாய் உலகெங்கும் தமிழ்மொழிபேசி
வாழ்ந்திருக்கவேண்டியவர்களின் தொகை குறைந்தது.
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் பரந்துவாழத் தொடங்கிவிட்ட தமிழ்மக்களின் மொழியில்
அவ்வாறு மாற்றம் ஏற்பட்டமை வியத்தகு நிக்ழ்ச்சியல்ல. அவையெல்லாம் வௌ;வேறு மொழிகளாக உருமாற்றம்பெற்றமை
ஆச்சரியப்பட்ததக்கதல்ல.
அறிவியல்
மலர்ச்சியாலும், தொலைத்தொடர்பு
வளர்ச்சியாலும் இன்றைக்கு அகிலமே சுருங்கிவிட்டது.
ஆனாலும்
மட்டக்களப்புத் தமிழுக்கும் யாழ்ப்பாணத் தமிழுக்கும் இடையே மாற்றம் தெரிகிறது.
மதுரைத் தமிழுக்கும்,
கோவைத் தமிழுக்கும் இடையே
வேற்றுமை விரிகிறது.
இந்தியத்
தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்கும் இடையே அந்நியம் விரிகிறது.
சென்னைத் தமிழ்
யாருக்குப்புரிகிறது? அந்த அளவுக்குச்
சிங்காரச் சென்னையிலே தமிழ்மொழி சிதைந்துவிட்டது.
இவ்வாறு, ஊருக்கு ஊர், மாவட்டத்திற்கு மாவட்டம், மநிலத்திற்கு மாநிலம், நாட்டுக்கு நாடு வழங்குகின்ற தமிழ் மொழி
வேறுபட்டு விளங்குகினறபோது வரலாற்றுக்கு முற்பட்டகாலத்தில் தொடர்பற்றுப்போன
நிலையில் தொலைதூரங்களில் வாழ்ந்த மக்களிடையே பேசப்பட்ட தமிழ்மொழி தேசத்திற்குத்
தேசம் திரிபடைந்துபோனதிலும், வௌ;வேறு மொழியானதிலும் ஆச்சரியப்படுவதற்கு
இடமேயில்லை.
ஆட்சிமொழியாக
அமைந்த தமிழ்
ஒரு காலத்திலே
தமிழ்மொழி அகிலத்தின் பல பாகங்களிலும் ஆட்சி மொழியாகவும் கோலோச்சியிருக்கிறது
என்பது வரலாறு கூறும் உண்மை. தென்னிந்தியாவில் மட்டுமன்றி கங்கம், கலிங்கம், வங்காளம், இலங்கை, மலேசியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகளில் ஒரு காலத்தில்
ஆட்சிமொழியாக இருந்தது தமிழே. கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை ஆயிரக்கணக்கான
வருடங்கள் தமிழகத்தின் ஆட்சிமொழியாகத் தமிழ் இருந்திருக்கிறது.
கடந்த எட்டு
நூற்றாண்டுகளுக்கு முன்புவரை கேரளத்தில் ஆட்சிமொழியாக இருந்தது தமிழே. அங்கே
கலைகள் வளர்ந்ததும் தமிழிலேயே.
வரலாற்றுக்கு
முற்பட்ட காலத்திலிருந்து மாவீரன் எல்லாளன் வீழ்ச்சி அடையும்வரை இலங்கைத்தீவு
முழுவதுமே அரசமொழியாகவும், ஆட்சி
மொழியாகவும் இருந்தது தமிழே.
ஆங்கிலேயரின்
ஆட்சிக்காலம்வரை இலங்கையின் வடக்கும் கிழக்கும் ஆட்சிமொழியாக அரியணைகளில்
வீற்றிருந்தது தமிழே.
கண்டிய அரசன்
ஸ்ரீவிக்கிரமசாசசிங்கன் என்கின்ற கண்ணுச்சாமியின் காலம்வரை, அதாவது, 1815 இலே ஆங்கிலேயர் கண்டியைப் பிடித்து
ஆட்சிசெய்யும்வரை அங்கே அரசமொழியாக இருந்தது தமிழே.
ஆனால் இன்றைய
நிலை என்ன? 1796 ஆம் ஆண்டிலிருந்து
ஆங்கிலத்திற்குத் தமிழன் அடிமைப்படுகின்றான். 1956 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள மொழிக்கு தமிழன்
அடிமைப் படுத்தப் படுகின்றான். தமிழ்மொழியும் அரச மொழியாக்கப்பட்டது. ஆனால்
நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. சிங்களத் திணிப்பு மேலும்
தீவிரப்படுத்தப்படுகின்றது. ஆங்கிலேயர் நாட்டைவிட்டுச் சென்று விட்டார்கள். ஆனால்
ஆங்கில மோகம் நீங்கிவிடவில்லை. மென்மேலும் ஓங்கி வளர்ந்துகொண்டிருக்கின்றது.
இந்தியாவில்
இந்தியாவில்
நடந்தது என்ன?
1100
ஆண்டுகளுக்குமுன்னர்-அதாவது கி.பி. 9 ஆம் நூற்றாண்டுவரை கன்னடமொழி தமிழாகவே இருந்தது. கன்னடர்கள் தமிழர்களாகவே
இருந்தனர்.
900
ஆண்டுகளுக்குமுன்னர்-அதாவது கி.பி. 11 ஆம் நூற்றாண்டுவரை தெலுங்கு மொழி தமிழாகவே இருந்தது. தெலுங்கர்கள்
தமிழர்களாகவே இருந்தனர்.
700 ஆண்டுகளுக்குமுன்னர்-
அதாவது 13 ஆம்
நூற்றாண்டவரை மலையாளம் தமிழாகவே இருந்தது. மலையாளிகள் என்றோர் இனமில்லை எல்லாரும்
தமிழர்களாகவே இருந்தனர்.
கடந்த 1100 ஆண்டுகளில் தென்னிந்தியாவிற்குள்ளே மட்டும்
எத்தகைய மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். தமிழ்
மொழி பேசிய மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இன்றைக்குத் தமிழர்களாக இல்லை.
தமிழ் நிலத்தின் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பகுதி இன்றைக்குத் தமிழர்களின்
கைவசமில்லை. தென்னாடு முழுவதும் நம்நாடாயிருந்தது. தமிழ் நாடு என்ற அளவுக்குச்
சுருங்கிவிட்டது.
இன்றைக்கு தமிழ்
நாட்டிலே வாழ்கின்ற தமிழ்மக்களின் தொகை ஆறு கோடி.
கன்னடமொழிபேசுவோர்
நாலுகோடி. தெலுங்கு மொழிபேசுவோர் 9 கோடி. மலையாளம்
பேசுவோர் இரண்டு கோடி.
கன்னடமும்,
தெலுங்கும், மலையாளமும் தமிழிலிருந்து தோன்றாமல்
விட்டிருந்தால் இன்றைக்கு இந்தியாவிலே இருந்திருக்கக்கூடிய தமிழனின் தொகை 21 கோடி. தென்னிந்தியாவில் தமிழ்மொழி
திரிபடைந்ததினால் மட்டும் இந்த நிலையென்றால், அகில உலகத்திலும் தமிழ்மொழி திரிந்ததனால்,
தமிழில் மாற்றம்
நடந்ததனால் ஏற்பட்டிருக்கக்கூடிய விளைவுகளை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். இதில்
வியப்பில்லை. திகைப்பில்லை. என்ன செய்வது தமிழனுக்கு அமைப்பில்லை.
இந்தியாவில்
தமிழினம் ஆறுகோடியாகச் சுருங்கி, தமிழ்நாட்டுக்குள்
முடங்கிக்கொண்டுவிட்டது. அத்துடன் நின்றுவிட்டதா? தமிழ் நாட்டில் இன்றைக்குத் தமிழ்மொழியின்
நிலைமை என்ன?
தமிழ்நாட்டில்
இந்தியாவையும்
அடிமைப்படுத்தி தொடர்ந்து நூற்று ஐம்பது ஆண்டுகள் ஆட்சிசெய்த ஆங்கிலேயரால்
ஆங்கிலத்தைத் தமிழர்களிடையே திணிக்க முடியவில்லை ஆனால் முப்பத்தி ஐந்து ஆண்டுகளில்
தமிழ் நாட்டை ஆட்சிசெய்த தமிழ்த் தலைவர்கள் தமிழர்களை ஆங்கிலத்தை ஏற்குமாறு
செய்துவிட்டார்களே என்று விசனப்படுகின்றார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.
திருமாவளவன் அவர்கள்.
தமிழ் நாட்டில்
தமிழ்மொழியை ஆட்சிமொழியாகப் பயன்படுத்தும் சட்டம் 1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்றுவரை
அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்திக்கு
எதிராகப் போராடியவர்கள் ஆங்கிலத்தை அரியாசனத்தில் இருத்திவிட்டார்கள்
தமிழ் நாட்டில்
ஆட்சிமொழியாகத் தமிழ் இல்லை கல்வி மொழியாகத் தமிழ் இல்லை. நிர்வாகத்தில் தமிழ்
இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வர்த்தக நிறுவனங்களில் தமிழ் இல்லை..
ஆலயங்களில் தமிழ் இல்லை. அடுத்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறையினர் தமிழை எழுதப்
படிக்கத் தெரியாதவர்களாக இருந்தால் அதில் ஆச்சரியமில்லை. இன்னும் ஐம்பது
வருடங்களில் தமிழ்நாட்டிலேயே தமிழ் பயன்பாட்டில் இல்லை என்று ஆகிவிடக்கூடிய
அபாயத்திலே இன்றைக்குத் தமிழ்மொழியின் நிலை இருக்கிறது.
தமிழ்நாட்டிலே
தமிழ்மொழியில் தந்தி அனுப்புகின்ற வசதியை சில வருடங்களுக்கு முன்னர்
தபால்தந்தித்துறை நிறுத்திவிட்டதாக அறிகிறோம். 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வசதிக்கு
மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது. இதற்கு அரசு கூறுகின்ற காரணம் தமிழிலே யாரும்
தந்திகளை அனுப்புவதில்லை, அவ்வாறு
அனுப்பினாலும் மிகவும் குறைந்த வீதத்தினரே அனுப்புகிறார்கள் என்பதுதான்.
இதிலிருந்து தமிழ் மக்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தவதைத் தவிர்த்துக்கொண்டு
வருகிறார்கள் என்பது தெளிவாகின்றது.
பேச்சுவழக்கிலே
பிணமாகிப் போய்விட்ட வடமொழியை தன் மூச்சு நின்றபிறகும் பயன்படுத்துகிறான் தமிழன்.
இறந்தபிறகு நடக்கும் இறுதிக் கிரியைகளில்கூட தாய்மொழிக்கு இடங்கொடுக்காதவன் நம்
தமிழன். பிள்ளைக்குப் பெயர்சூட்டுவிழாவிலே, புதுவீடு புகும் விழாவிலே, திருமணத்திலே, ஆண்டவனை வணங்குவதிலே எல்லாவற்றிலுமே
தாய்மொழியைப் புறக்கணித்து அந்த இறந்துபோன மொழியை இன்னமும் பாராயணம் செய்யும்
நிலைமையிலே தமிழன் இருக்கும்வரை தமிழ்வளர்ச்சியில் தடங்கல் இருந்தே தீரும்.
தாய்மொழியையும்
அதிலுள்ள இலக்கியங்களையும் மதிக்காமல் வேற்றுமொழிகளுக்குத் தம்மை
அடிமையாக்கிக்கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற அளவுக்கு வேறு நாட்டில் இல்லை
என்று மகாகவி தாகூர் அவர்கள் கூறினார்கள். அது எவ்வளவு உண்மையான கணிப்பு!
வரலாற்றுக்கு
முற்பட்ட காலத்தை விட்டுத் தள்ளுவோம். வரலாற்றுக்கு உட்பட்ட காலத்தை மட்டுமே
கருத்தில்கொள்ளுவோம். அப்படிப் பார்த்தாலும் இன்றைக்கு அகில உலகத்திலும்
வாழ்ந்திருக்கக்கூடிய தமிழ் மக்களின் தொகை 24 கோடி. ஆனால் வாழுகின்ற தமிழ் மக்களின் தொகையோ
எட்டுக்கோடி.
பதினாறு கோடித்
தமிழ்மக்கள் மொழிமாறிப் போனார்கள். வேறு மொழியாகிப் போனார்கள். தனித்தனி இனமாகிப்
போனார்கள். இருபத்துநாலுகோடி மக்கள் பேசிக்கொண்டிருக்க வேண்டிய தமிழ் மொழியை
இன்றைக்கு எட்டுக்கோடிப்பேரே பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் தமிழ் மொழி
அழிந்துகொண்டிருக்கிறது என்பதுதானே வரலாறு நமக்கு வழங்குகின்ற செய்தி?
உலக நாடுகளில்
தமிழ்
இன்றைக்கு உலக
நாடுகளிலே தமிழ்மொழி எப்படியிருக்கிறது?.
பிஜித் தீவுகளிலே
தமிழர்கள் இருந்தார்கள் தமிழும் இருந்தது.
இன்றைக்கு அங்கே
தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமிழர்களாக இல்லை. தமிழும் அங்கே இல்லை.
மொரீசியஸ்
நாட்டிலே தமிழர்கள் இருந்தார்கள். தமிழும் இருந்தது. இன்று அங்கே இருக்கின்ற
தமிழர்களுக்குத் தாங்கள் தமிழர்கள் என்று தெரியவில்லை. தமிழும் அங்கே இல்லை.
தென்னாபிரிக்காவிலே
இன்றைய கணக்குப்படி ஆறரை இலட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். சில ஆயிரம்
மூத்தகுடிமக்கள் மட்டும் தமிழ் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அடுத்த
பரம்பரையில் தமிழ் மொழிபேசுவோர் அடியோடு எவருமே இல்லாமல் போய்விடுவார்கள்.
மிகவும்
செழுமையாகத் தமிழ் மொழி வளர்ந்து வருகின்ற சிங்கப்பூரிலும், மலேசியாவிலும்கூட அடுத்த தலைமுறை
ஆங்கிலத்துக்கே தம்மை அர்ப்பணிக்கப்போகின்ற நிலைமை தெரிகிறது. அங்கெல்லாம்
தமிழ்மொழியின் பயன்பாடு குறைந்துகொண்டு வருகின்றது. அதாவது தமிழ்மொழி
அழிந்துகொண்டு வருகின்றது.
இவற்றைவிட
இன்றைக்கு மேலைநாடுகளிலே வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழ் மொழிக்கு என்ன
நடந்துகொண்டிருக்கிறது? ஈழத்திலேயிருந்து
புலம்பெயர்ந்து மேலைநாடுகளிலே வாழ்கின்ற தமிழ்மக்களின் எதிர்காலச் சந்ததிகள்
பேசப்போகின்ற தமிழ்மொழி இடத்திற்கிடம் வேறுபட்டு, நாட்டுக்கு நாடு மாறுபட்டுத்தானே
விளங்கப்போகின்றது.
இங்கிலாந்திலே
வாழப்போகின்ற நம் எதிர்காலச்சந்ததிகளின் தமிழுக்கும், சுவிச்சர்லாந்திலே, கனடாவிலே, நோர்வேயிலே, ஜேர்மனியிலே, அவுஸ்திரேலியாவிலே, அமெரிக்காவிலே வழங்கப்போகின்ற தமிழுக்கும்
இடையே வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். அந்தந்த நாடுகளிலே வழங்குகின்ற
மொழிகளின் சாயலிலே பல்வேறு வடிவங்களில்தான் தமிழ்மொழி வாழப்போகின்றது.
அந்தந்த
நாடுகளின் ஆட்சிமொழிகளிலும், கல்வி
மொழிகளிலும் தேர்ச்சிபெறவேண்டிய தேவை புலம்பெயர்ந்த தமிழனுக்கு இருக்கிறது. அந்த
மொழிகளே நமது சந்ததிகளின் வாழ்வுமொழிகளாகின்ற சூழ்நிலையின் அவசியம் இருக்கிறது.
அதனால் தாய்மொழி என்று சொல்லப்படும் தமிழ்மொழியில் வாழுகின்ற நாட்டில் வழங்குகின்ற
மொழியின் வண்ணம் கலக்கும். தமிழ்மொழி தன் தனித் தன்மையை இழக்கும். புதிய
மொழியொன்று பிறக்க வாய்பில்லாத அளவுக்கு ஆங்கிலமும், அந்தந்த நாடுகளின் ஆட்சிமொழிகளும்
தமிழ்மக்களின் வாழ்வுமொழியாகிவிடும்.
அதனால் தமிழன்
புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் காலப்போக்கிலே தமிழ்மொழி காணாமல் போய்விடும்.
ஏறத்தாழ எட்டு இலட்சம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் எத்தனையோ இலட்சம் எதிர்காலச்
சந்ததிகள் காலப்போக்கில் தமிழ் மொழியை மறந்துவிடுவார்கள், முற்றாகத் துறந்துவிடுவார்கள். தமிழன்; நாடுவிட்டு நாடு சென்றதால், அல்லது செல்லவேண்டி ஏற்பட்டதால் வந்தது
இந்தக்கேடு. ஆனால் இதைவிடப் பெரிய தீமை தமிழ்மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் இப்போது வந்திருக்கிறது.
தமிழ் மக்களின்
தாயகங்களிலே வீடுதேடிப்புகுந்து தமிழ் மொழி சிதைக்கப்படுகிறது. தமிழ் மொழி அழிக்கப்படுகின்றது.
தமிழினம் குறைக்கப்படுகின்றது.
இலங்கையிலே
சிங்கள அரசினர் திட்டமிட்டுத் தமிழ்மொழியை அழித்தார்கள், தமிழினத்தைக் கொன்று குவித்தார்கள், தமிழ்நிலத்தை குறைத்தார்கள் என்று நாம்
வரலாற்றை தூக்கிக்காட்டுகின்றோம்.
ஆனால் சிங்கள
அரசினர் அழித்ததை விட திட்டமிட்டுத் தமிழினத்தை அழித்தவர்கள், இன்னும் அழித்துக்கொண்டிருப்பவர்கள் யார்?
வேண்டுமென்றே தமிழைச்
சிதைத்து, வேறு மொழிகளோடு
குழைத்து தொலைக்காட்சியினூடாக ஒவ்வொரு வீட்டுக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறார்களே
அவர்கள் யார்?
அற்ப
பதவிகளுக்காகவும், அதிகாரச் சுகங்களுக்காகவும்
தமிழின எதிர்ப்பாளர்களுக்கு ஆலவட்டம் வீசிப்பிழைக்கின்ற தமிழர்கள் நடாத்துகின்ற
தொலைக்காட்சிகள் கூட இன்றைக்குத் தமிழ்மொழியை கொச்சைப்படுத்துகின்றன. குத்திக்
கிழிக்கின்றன.
தமிழ்மொழியை
அழிப்பதுவே தங்கள் தலையாய பணி என்பதுபோலச் சில தமிழ்த் தொலைக்காட்சிகள்
நிகழ்ச்சிகளை நடாத்துகின்றன. பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ஒரு வசனத்தில்கூட முற்று
முழுதாகத் தமிழை உபயோகப் படுத்தாத அளவுக்குத் தமிழ்மொழி தமிழ் நிகழ்ச்சிகளில்
தவிர்க்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த் தொலைக்காட்சிகள்
புகுந்துவிட்டன. அங்கெல்லாம் தமிழ்மொழி அழிகின்ற வேகத்தை அதிகரிப்பதில் அவை
முதன்மை வகிக்கினறன.
ஆனானப்பட்ட
திரைப்பட நிறுவனங்களையும் படமாளிகைகளையும் மூடவைத்து திரைப்படத் தொழிலையே
விழுங்கிக்கொண்டிருக்கின்ற தமிழ்த் தொலைக்காட்சிகள் வீட்டுக்குவீடு நுழைந்து
அசுரவேகத்துடன் தமிழர்களிடமிருந்து தமிழ்மொழியை அழித்துக்கொண்டிருக்கின்றன.
இதுதான் இன்று
தமிழ்மொழியை எதிர்நோக்கியுள்ள, தமிழினத்தை
எதிர்நோக்கியுள்ள அபாயம். இதை நீக்குவதற்கு என்ன உபாயம் தமிழனுக்கென்று ஒருநாடு
இல்லை. தமிழனுக்கென்றெரு அரசு இல்லை. எனவே தமிழின் அழிவைத் தடுக்க முடியவில்லை.
தமிழினம் சுருங்கவதைத் தடுக்க முடியவில்லை. தமிழ்மொழி மேலும் பரந்து தழைக்க
முடியவில்லை.
தமிழறிஞர்
பேராசிரியர் மு.வரதராசன் அவர்கள் தமது மொழிப்பற்று என்ற நூலிலே பின்வறுமாறு
குறிப்பிடுகின்றார்
' உண்மை இதுதான்.
இதை யாரும் மறைத்துப் பயனில்லை. தமிழ் பலவளம் படைத்துப் பல மொழிக்கும் தாயாகும்
பெருமையும் பெற்றுத் தொன்மைச் சிறப்புடையதாய் விளங்குவதாகப் பெருமை கொள்ளலாம்.
ஆதனால் அது வாழ முடியாது. மொழியின் உயிர் புலவரிடம் இல்லை. பொதுமக்களின்
உள்ளத்தில்தான் உள்ளது.மக்களின் வாழ்க்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால்
எந்த மொழி அரசியல் மொழியாக விளங்குமோ அந்த மொழிதான் மக்கள் மொழியாக விளங்கும்.
நேற்றுத் தோன்றிய கொச்சை மொழியாக இருந்தாலும் அரசியல் மொழியானால் அது ஓங்கி வளர
முடியும். உலகம் தோன்றிய நாளில் தோன்றிய பண்பட்ட மொழியாக இருந்தாலும் அரசியல்
மொழியாக விளங்கவில்லையானால் வாழ வழி இல்லை. ஆகவே தமிழ் நாட்டின் ஆட்சி தமிழில்
நடைபெற்றால்தான் தமிழர் தமிழைக் கற்றுப் போற்றுவார்கள், தமிழ் வாழ வழி உண்டு, இல்லையானால் இல்லை.' என்று 1960 ஆம் ஆண்டுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்
மு.வ.
சிறிய நாடுதான்
சிறீலங்கா. ஒருகோடிப்பேர்தான் இன்றைக்குச் சிங்கள மொழி பேசுகின்றார்கள். சிறீலங்கா
ஒன்றுதான் சிங்கள மொழி வாழ்கின்ற நாடு. ஆனால் சிங்களம் சிறீலங்காவில் ஆட்சிமொழி
மட்டுமல்ல. ஆள்கின்ற மொழியும் அதுதான். எனவே அந்த மொழிக்கு ஆயுட்காலம் அதிகம்.
இன்றைக்கு எட்டுக்கோடிப்பேர் பேசுகின்ற தமிழ் மொழி அழிந்தாலும், ஒரு கோடிப்பேர் பேசுகின்ற சிங்களமொழி அழிவதற்கு
வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்த மொழிக்கு ஓர் அரசு இருக்கிறது. அந்த மொழிக்கென்றொரு
நாடு இருக்கிறது. அந்த நாட்டின் ஆட்சி மொழியாக அந்த மொழி கோலோச்சுகின்றது.
ஆக, தமிழர் தாயகங்கள் சுருங்கி வருகின்றன.
சுருங்கிவரும் தாயகங்களிலும் தமிழ்மொழி அழிந்துவருகிறது. புலம்பெயர்ந்த நாடுகளில்
தமிழ் மொழி மறைந்து வருகின்றது. இப்படியே தொடருமானால் இன்னும் ஒரு
நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ்மொழி இந்த உலகில் இல்லாமல் போய்விடும் என்ற கருத்தை
எளிதாக நாம் புறந்தள்ள முடியாது.
No comments:
Post a Comment