Thursday, December 22, 2016

நல்லதோர் வீணை நலம் கேடலாமா?

 தமிழகத்தில் கேட்க நாதியின்றி,மாற்றானுக்கு இன்னமும் அடிமையாக,குரலற்றவர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் குரல் வேறு யாரடையதுமல்ல.தொடக்கக் கல்வியில் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்துவரும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுடையதுதான்.வலுவான இயக்கங்கள் இருந்தும் என்ன பயன்?பணியிழப்பு,பதவியிழப்பு,பதவியுயர்வு இழப்பு,நியாயமாகப் பெறவேண்டிய ஊதிய இழப்பு என எத்தனை இழப்புகளைத்தான் இவர்கள் சந்திக்க வேண்டும்.இதுபோன்றதொரு அவலநிலை வேறு யாருக்கும் இதுநாள்வரை நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஊதியத்தைத் தவிர வேறெந்த வரும்படிக்கும் வழியில்லாத ஓர் ஆசிரியரின் இயல்பான,நேர்மையான,உண்மையான,சீரான வளர்ச்சியினைக் காணப் பொறுக்காத இச்சமூகம் அவர்கள்மேல் வீண் பொறாமைகொண்டு பழிசுமத்துவதை பெருவழக்காக்கிக் கொண்டுள்ளது ஒரு கொடும்சாபக்கேடு எனலாம்.
தொடக்கக்கல்வியின் ஓர் அங்கமாக விளங்கும் நடுநிலைப்பள்ளிகளில் இருந்த பல்லாயிரம் இடைநிலையாசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக்கப்பட்டுக் காலிசெய்யப்பட்டன.இது ஆரோக்கியமான செயல்தான் என்று தோன்றினாலும் அதில் உண்மையில்லை.ஏனெனில்,ஈராண்டுகள் பயிலும் இடைநிலையாசிரியர் பட்டய வகுப்பில் ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்குப் பாடம் கற்பிப்பதற்கான வழிமுறைகளும் தேர்வுமுறைகளும் அவர்களுக்கு வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுவதை இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த முரண்பாடு ஏன்?ஐந்து வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க மட்டும்தான் இடைநிலையாசிரியர் பயிற்சி என்றால் ஆறு,ஏழு,எட்டு வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள்; பயிற்றுவிப்பு முறைகள், மதிப்பீட்டுத் திட்டங்கள் போன்றவை குறித்து தேசிய,மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அவசர அவசியம் கருதி முடிவெடுத்தல் காலத்தின் கட்டாயமாகும்.அன்று தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பலர் தம் கூடுதல் உயர்கல்வியினைப் பரவலாகப் பெருக்கிக்கொள்ள போதிய வாய்ப்பில்லாமல் கிடந்தனர்.அவ்வுயர்கல்வியால் பணப்பலனாக இரு ஊக்கஊதிய உயர்வுகள் அவர்களுக்குக் கிடைத்ததேயல்லாமல் வேறில்லை.எந்த உயர் பதவிக்கும் அது ஓர் ஊட்டாக உதவவில்லை.விடுப்பு எடுப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் அதில் நிறைந்திருந்தன.இன்று நீக்கமறக் காணப்படும் அஞசல்வழியில் பயிலும் தொலைநிலைக்கல்வித் திட்டங்கள் அப்போது மிகக்குறைவு.இத்தகைய காரணங்களால் அது அவர்களைக் கவராமல் போனது.எனினும்,தம் அறிவைப் பெருக்கி விசாலப்படுத்திக்கொள்ளும் முனைப்பில் சிலர் துணிந்து அதற்காகப் பல இழப்புகளைச் சந்தித்து வெற்றிக்கொடி நாட்டினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆதலால்,இத்தகைய ஆசிரியர் பெருமக்களின் பணியினை மேற்பார்வை புரிந்து நிர்வகிக்க பள்ளிக்கல்வித்துறையின் கீழுள்ள உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரிகளும் தலைமையாசிரியர்களும் பதவியுயர்வுப் பெற்று முறையே பள்ளித்துணை ஆய்வாளர்கள்,உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள்,மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள்,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,துணை,இணை இயக்குநர்கள்,இயக்குநர்கள் என பல்வேறு படிநிலைகளில் அமர்ந்தும் உயர்ந்தும் பணியாற்றி வந்தனர்.இச்சூழலில் இயக்கங்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின்னர்,இன்று தொடக்கக்கல்வித்துறை தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் அக்கல்வித்துறை முழுக்கமுழுக்க தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கைவசம் ஒப்படைக்கப்படாதது ஒரு மறுக்கப்படும் அநீதியாகவே இன்றளவும் விளங்கி வருகின்றதை வருத்தத்தோடு பகிரவேண்டியிருக்கிறது.யானைப்பசிக்கு இடப்படும் சோளப்பொறியாக மேற்குறிப்பிட்ட பதவிகளில் முதலிரண்டை மட்டும் வழங்கித் தம் தாய்த்துறையான பள்ளிக்கல்வித்துறையையும் கூடுதல் துறையாகத் தொடக்கக்கல்வித்துறையையும் பழையபடியே நிர்வகிக்கும் போக்குகள் தற்போதும் நிலவி வருவது ஒரு துர்பாக்கிய நிலையாகும்.
வளர்ந்துவரும் காலச்சூழலுக்கேற்ப,தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் தம் நிலையினை மாற்றிக்கொள்ள முனையாமல் தம்மிடையே இருக்கும் எல்லாவகையிலும் தகுதிபடைத்த இளந்தலைமுறை ஆசிரியர்களின் மேன்மைக்கும் உயர்வுக்கும் பாராமுகம் காட்டுவது வேதனையளிக்கக்கூடிய சேதியாகும்.போதிய,அதற்கும் மேலான கல்வித்தகுதிகள்,பணியனுபவங்கள்,பதவியுயர்விற்கான அடிப்படைத் துறைத்தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி,நிர்வாகத்திறன் போன்றவற்றில் பிறருக்குச் சளைக்காமல் அடைவுபெற்று விளங்கும் இவர்களுக்குத் தமக்குள்ள உரிமைகளில் எள்முனையளவும் விட்டுத்தராமல் நீதியை நிலைநாட்டி நல்வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதென்பது இவ்வியக்கங்களின் தலையாயக் கடமையும் பொறுப்பும் ஆகும்.
மேலும்,இவ்வியக்கங்கள் தம்மிலிருந்து விடுபட்டு பதவியுயர்வில்லாத மாற்றுப்பணியில் பணியமர்த்தப்பட்டவர்களிடம் காணப்படும் மிக நுண்ணிய அளவிலான குறைகளையே பூதாகரமாக்கிப் பிற பெரிய வாய்ப்புகளைத் தட்டிக்கழித்து முட்டுக்கட்டைப் போட நினைக்காமல் தொடக்கக்கல்வித்துறை அந்நியருக்கல்லாமல் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கே என ஒற்றை உரிமை மீட்புப் போராட்டத்தை அரசிடம் முன்வைத்து அதனை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்ற முயலுவதென்பதில் இனியும் காலதாமதம் செய்யவேண்டியதில்லை.அப்படித் தவறும்பட்சத்தில் பல்வேறு நிலைகளிலும் படிப்பால் முன்னுக்குவரத் துடிக்கும் உத்வேகமுள்ள அவ் இளையசமுதாயத்தினரின் தீராப்பழிக்கு ஆளாக நேரிடும் என்பதையும் மறக்கலாகாது.
இதை இப்படிக் கூறினால் புரியுமென்று நினைக்கிறேன்.எந்தவகையிலும் வேறுபடாத இரு நண்பர்கள் ஒரே சமயத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சியை நிறைவு செய்கிறார்கள்.சந்தர்ப்பவசத்தால் ஒருவர் பள்ளிக்கல்வித்துறையிலும் மற்றவர் தொடக்கக்கல்வித்துறையிலும் பணியமர்த்தப்படுகின்றனர்.முதலாமவருக்குத் திறந்துக்கிடப்பதோ தேசிய நெடுஞ்சாலை.தகுதியைத் தேவைக்கேற்ப உயர்த்திக்கொண்டு சென்றுகொண்டே இருக்கலாம்.ஆம்.அடிப்படைநிலையிலிருந்து மேலெழும்பி பட்டதாரி,முதுநிலைப் பட்டதாரி,வட்டார வளமைய மேற்பார்வையாளர்,உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்,மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்,மாவட்டக் கல்வி,மாவட்டத் தொடக்கக்கல்வி,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,துணை,இணை இயக்குநர்கள்,பள்ளிக்கல்வி,தொடக்கக்கல்வி,தேர்வுத்துறை,மெட்ரிக் பள்ளிகள் முதலானவற்றின் இயக்குநர்கள் போன்ற உயர்பதவிகளில் சென்று பணியாற்ற போதிய படிப்பும் வயதும் மட்டுமே அவருக்கிருந்தால் போதும்.
மற்றவரின் நிலை மிகவும் பரிதாபகரமானது.தொடக்க,நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்,பட்டதாரி ஆசிரியர் என பதவியுயர்வு அடைந்து மிக அதிகபட்சமாக எந்தவொரு பணப்பலனும் ஊக்கஊதியமும் இல்லாத வேண்டியபோது மீள வந்திடும் மாற்றுப்பணியான உதவி,கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை மட்டுமே அவரால் அடையமுடியும்.தகுதிக்கு மேலாக பிற வாய்ப்புகள் அவருக்கிருந்தும் அவரால் அவ்விடத்தைவிட்டு மேலேறவியலாது.குறுகிய சந்தில் கட்டப்பட்டிருக்கும் பெரிய தடுப்புச்சுவற்றில் மோதிக்கொண்டு நிற்பதுபோலாகி விடும் அவரின் அப்பாவிநிலை.இப்போது சொல்லுங்கள் இதில் யார் மீது தவறுள்ளது?பாழுங்கிணற்றில் கூட்டிக்கொண்டு பகலில் தள்ளிவிடுவது என்று என்பது இதுதானோ?இத்தகைய அவலநிலைக்கு மனச்சாட்சியுடன் முற்றுப்புள்ளி வைப்பதுதானே முறை.அப்போதுதான் பணியில் சமவாய்ப்பும் சமநீதியும் எல்லோருக்கும் கிடைத்ததாகக் கருதமுடியும்.காலங்காலமாகச் சுட்டப்படும் கல்வித்தகுதியையும் நிர்வாகத் திறனையும் இதற்கு இங்கு இப்போதும் சுட்டிக்காட்ட நினைப்பது பேதைமைச் செயலாகும்.தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பலர் பகுதிநேரமாக முனைவர் பட்டம் தேர்ச்சிப் பெற்று வேறுவழியின்றி ஒன்றாம் வகுப்பிற்கு இன்றும் பாடங்கற்பித்து வருகின்றனர்.வாய்ப்புகள் வெளியுலகிற்கு விரிந்து பரந்து காணப்பட்டாலும் இத்தகையோரின் நிலை பெரும்புல்வெளியில் சிறுகயிற்றினால் நன்கு ஊன்றப்பட்ட முளைக்குச்சியில் இழுத்துக்கட்டி மேய விடப்பட்ட அடங்காப் பெரும்பசிமாட்டின் நிலையொத்தது.
சரி இவர்கள் தம் தகுதிக்கேற்ப தாய்த்துறையின் பணியிலிருந்து தடையின்மைச்சான்று பெற்று அத்துறைமூலமாகப் பணிக்காலம்,ஓய்வூதியம் முதலிய பணிப்பாதுகாப்புடன் பிற துறையினர்போல விடுபட்டு கல்லூரிகளிலோ,பல்கலைக்கழகங்களிலோ உதவிப் பேராசிரியர் பதவிகளில் பணிபுரிந்திட விதிக்கப்பட்டுள்ள அனைத்துவகைக் கல்வித்தகுதிகளில் தேர்ச்சிப்பெற்று சிறந்துவிளங்கினாலும் கல்லூரிப் பணியனுபவம் அவர்களுக்குப் பெருந்தடைக்கல்லாக உள்ளது.சட்டத்திற்குப் புறம்பாக அதைப் பெறுவதென்பது இயலாதவொன்று.அதற்காக கல்லூரி உதவிப்பேராசிரியர் பணிக்கான எல்லாவகைத் திறமையிருந்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தினரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பணியனுபவத்தை மட்டுமே ஒரே தகுதியாகக் கொண்டு விளங்கிடும் நபர்களைக்காட்டிலும் மேம்பட்டவர்களாகயிருந்தும் அவர்களைப் புறந்தள்ளுதல் நன்மைப் பயக்காது.இவர்களிடம் காணப்படும் இளையோர் உளவியலை நேர்த்தியாகக் கையாளும் கூடுதல் கல்வித்தகுதியான இளங்கலைக் கல்வியியல் பட்டப்படிப்பின் தகுதியினைக் கவனத்தில் கொள்ளுதல் நல்லது.
அதுபோக,பணியனுபவம் என்பதில் தொடக்க,பள்ளிக்கல்வித் துறைகளில் பணியாற்றும் பாடம்சார்ந்த அனைத்துவகை ஆசிரியர்களின் பணியனுபவத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக முன்வரவேண்டும்.கல்லூரிப் பணிக்காலத்திற்கு ஓராண்டிற்கு இரண்டு வீதம் அதிகபட்சமாக வழங்கப்படும்    பதினைந்து மதிப்பெண்களில் அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியருக்கு இதில் பாதியாவது அளிக்க அரசு தக்க உறுதியான நடவடிக்கையெடுத்து உதவிடுதல் நல்லது.இதன் வாயிலாக இத்தகையோரின் பணித்திறமைக்கு நல்ல தீனி போடமுடியும்.
இதுதவிர,இடைநிலையாசிரியர்கள் மட்டும் மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஆறாவது ஊதியக்குழுப் பரிந்துரைத்த ஊதியவிகிதத்தை மத்திய அரசுக்கு இணையாகப் பெறாமல் பல்வேறு காரணங்களைக்காட்டி இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர்.அரசின் கவனத்தை எட்டிய இவர்களின் இவ்வூதிய முரண்பாட்டுக் கோரிக்கைக் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்று அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவும் இவர்கள் அல்லாத இதே குறைசார்ந்த சுமார் 37துறைகளைச் சார்ந்தோருக்கு மட்டும் களைந்து வாழ்வளித்தது.   இந்நிலையில்,ஒவ்வொரு இடைநிலையாசிரியரும் மாதந்தோறும் சுமார் ஐந்தாயிரம் வரை ஊதிய இழப்படைந்து அரசிடமிருந்து விரைவில் நல்ல பதில்வரும் என்ற நம்பிக்கையுடன் மிகுந்த எதிர்பார்ப்போடு ஒவ்வொருநாளும் வாழ்ந்துவருகின்றனர் என்றால் மிகையாகா.
இவ்வாறு பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வாடிப்போகாமல் அரசு அவ்வப்போது கல்வியில் பெரிய மாற்றத்தை எதிர்நோக்கிச் செயல்படுத்தம் செயல்வழிக்கற்றல்,எளிய படைப்பாற்றல்வழிக்கல்வி,படைப்பாற்றல் கல்வி போன்றவற்றை உள்ளடக்கிய சமச்சீர் கல்விமுறையையும் தொடர் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறையையும் தீவிரமாகச் செயல்படுத்தி தேசிய அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.அதுபோல,அரசின் பல்வேறு விலையில்லாப் பொருள்கள்,உதவித்தொகைகள்,நலத்திட்டங்கள் போன்றவற்றை பிரதிபலன் எதிர்நோக்காமல் தன்சொந்தப் பொறுப்பில் பெற்றுவந்து நிறைவுடன் வழங்கி அரசுக்கு நல்ல பெயர்வாங்கித் தருகின்றனர்.மனித ஆற்றலைக் கல்விமூலம் மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆணிவேராகத் திகழும் தொடக்கக்கல்வி ஆசிரியர் இனத்தைக் காப்பதும் போற்றுவதும் தேசத்தின் மிக முக்கியக் கடமையாகும்.அப்போதுதான் நல்லதோர்வீணை நலங்கெடாமல் காப்பாற்றப்படும்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...