" இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சொல்லப்போனால் தமிழ் தலித்
இலக்கியம் கன்னட தலித் இலக்கியத்துக்கு நிறையவே கடன்பட்டிருக்கிறது. இருபது
ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பணியாற்றிக்கொண்டிருந்த பாவண்ணன் எனது
வேண்டுகோளின் அடிப்படையில் சித்தலிங்கையாவின் ஊரும் சேரியும், அரவிந்த
மாளகத்தியின் கவர்ன்மெண்ட் பிராமணன் ஆகிய சுய சரிதைகளையும், இதோ இந்த
அரங்கில் இருக்கிறாரே மொகள்ளி கணேஷ் அவரது பம்பரம் உள்ளிட்ட சிறுகதைகளையும்
தமிழில் மொழிபெயர்த்தார். அவற்றை நான் விடியல் பதிப்பகத்தின்மூலம்
வெளியிடச் செய்தேன். அந்த சிறுகதைத் தொகுப்புக்கு புதைந்த காற்று என
நான்தான் தலைப்பிட்டேன். நானும் இன்னும் சில நண்பர்களுமாக சேர்ந்து
நடத்திய நிறப்பிரிகை இதழின் சார்பாக தலித் இலக்கியச் சிறப்பிதழ் ஒன்றைக்
கொண்டுவந்தேன். அதில் சித்தலிங்கையாவின் நீண்ட பேட்டி இடம்பெற்றது. நான்
நடத்திய தலித் என்ற இலக்கிய இதழில் தேவனூரு மகாதேவாவின் மிக முக்கியமான
படைப்பான குசுமபாலெவின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தொடராக வெளியிட்டேன்.
நஞ்சுண்டன் மொழிபெயர்த்தார்.
மராத்தி தலித்
இலக்கியத்தைவிட கன்னட தலித் இலக்கியம் தான் தமிழ் தலித் எழுத்தாளர்களுக்கு
ஆதர்சமாக இருந்தது. இதை நன்றியோடு கூறிக்கொள்கிறேன்.
கன்னடத்தைப்
போலவே தமிழ் தலித் எழுத்தாளர்கள் பெரும்பாலோர் யதார்த்தவாத
எழுத்துமுறையையே கையாளுகிறார்கள். அவர்களது சித்திரிப்பு, தொனி
போன்றவற்றில்கூட பெரிதாக வேறுபாடு இல்லை.
ஆனால்
தமிழ் தலித் இலக்கியம் வலுவான தத்துவார்த்த பின்னணியைக் கொண்டிருக்கிறது.
அந்த அளவுக்கு கன்னடம், மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் தெளிவு
இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு
முன்னர் தலித் இலக்கியம் தொடர்பான விவாதங்களை முன்னெடுத்த என்
போன்றோருக்கு இருந்த மார்க்சியப் பின்னணி. மார்க்சிய லெனினிய இயக்கத்தில்
செயல்பட்டுக்கொண்டிருந்த நானும் சில தோழர்களும் ரஷ்யாவின் தகர்வுக்குப்
பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு அதுவரை
சோஷலிசம் குறித்து சொல்லப்பட்டுவந்த கோட்பாடுகளைக்
கேள்விக்குட்படுத்தினோம். அந்த சிக்கலை விளங்கிக்கொள்ள மார்க்சிய மைய
நீரோட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட சிந்தனையாளர்களைப் பயின்றோம்.
அந்தப்
பின்புலத்திலிருந்து வந்த நாங்கள்தான் தமிழில் தலித் இலக்கியம் குறித்த
விவாதங்களை முன்னெடுத்தோம் என்பதால் மிஷெல் ஃ பூக்கோ, எட்வர்ட் செய்த்,
பூர்தியூ, முதலானோரின் சிந்தனைகளோடும், ஹெகல், பகூனின் உள்ளிட்ட கார்ல்
மார்க்சுக்கு முந்திய சிந்தனைகளோடும் இணைத்து தலித் கருத்தியலை நாங்கள்
பேசினோம். அரசு குறித்த அம்பேத்கரது பார்வை பகூனினின் கருத்துகளோடு
ஒத்துப்போவதை நான் சுட்டிக் காட்டினேன். இத்தகைய அணுகுமுறை இந்தியாவின் பிற
மொழிகளில் இல்லை. இது தமிழ் தலித் இலக்கியத்துக்கு இருக்கும் சிறப்பு.
கருத்தியல்
தளத்தில் இருக்கும் இந்த அனுகூலம் இன்னும் படைப்புகளில் சரிவர
வெளிப்படவில்லை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் தலித் இலக்கியம்
படைக்கப்படுகிறது. ஆனால் தேவனூரு மகாதேவாவைப் போல ஒரு படைப்பாளி தமிழில்
உருவாகவில்லை. அந்தவிதத்தில் கன்னட தலித் இலக்கியம் தமிழைவிட முன்னே
நிற்கிறது.
No comments:
Post a Comment