- முனைவர். ச.சீனிவாசன்,
தமிழ் இணைப்பேராசிரியர்,
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி
(தில்லிப்
பல்கலைக்கழகம்),
புது தில்லி-110 021
ஒரு குறிப்பிட்ட கதைத்
தலைவரைப் பற்றிய கதை பல வரலாற்று நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பாடலாகக்
கூறப்படும்போது அது வரலாற்றுக் கதைப்பாடலாகிறது. அந்த வகையில்
கும்பினியரை எதிர்த்துப் போரிட்ட அருந்ததிய இனத்தைச் சேர்ந்த ஒண்டிவீரனின்
(ஒண்டி-தெலுங்குச் சொல். ஒற்றை, தனி, தன்னந்தனி என்பது பொருள்) கதை கும்மி, சிந்து, நாடகம் மற்றும்
வில்லுப்பாட்டு வடிவிலும் கிடைத்துள்ளன. ‘பூலித்தேவன் சிந்து’, ‘பூலித்தேவன் கும்மி’ என்னும் நாட்டுப்பாடல்களில் ஒண்டிவீரன் பற்றிய செய்திகள்
கிளைக்கதையாக இடம்பெற்றுள்ளன.
ஒண்டிவீரன் பற்றி இதுவரை அச்சில் வெளிவராத முழுமையான வரலாற்றுக்
கதைப்பாடல் ஒன்றும் வெளிவந்துள்ளது.
ஒண்டிவீரன் கதைப்பாடல்
செய்திகளுக்கும் ஒண்டிவீரன் பற்றிப்
பிற கதைப்பாடல்களில் உள்ள கிளைக்கதைகள் செய்திகளுக்கும் அடிப்படையில் சில
நுணுக்கமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெற்கட்டான்
செவ்வயல் பாளையம் என்பது
மறவர் (பூலித்தேவன்) பாளையமாக இருந்ததாக எழுதப்பட்ட வரலாறான பூலித்தேவன்
கதைப்பாடல் கூறுகிறது. ஆனால்,நெற்கட்டான் செவ்வயல் பகுதியின் உண்மையான
நிலவுடமையாளர்களாக ஒண்டிவீரனின் முன்னோர்களும், கால மற்றத்தில் அதே பாளையத்தின்
தலைவனாக ஒண்டிவீரனும் திகழ்ந்துள்ளனர். “நெற்கட்டும் செவ்வயல் ஜமீன், அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் வாழ்ந்த அந்த
மண்ணின் மைந்தர்களான
அருந்ததியர்கள், அன்று
நிலவுடமையாளர்களாக இருந்திருக்கிறார்கள்.
இவர்களில் சிறுநில உடமையாளர்களும், பெருநில உடமையாளர்களும் அடங்குவார்கள்” (எழில். இளங்கோவன், மாவீரர் ஒண்டிவீரன் பகடை: 15) எனும் கருத்து இதை
நிரூபிக்கிறது.
இதற்கான கல்வெட்டு, செப்புப்
பட்டயங்கள், இலக்கியங்கள், ஓலைச்சுவடி
ஆவணங்கள் எதுவும் எழுத்தறிவு
மறுக்கப்பட்ட அருந்ததிய மக்களிடம் இல்லாத காரணத்தால் உண்மை வரலாறு
திரிக்கப்பட்டுள்ளது. ஆதிக்க சாதியினர் அருந்ததியர் சமூகத்தினரைத் தம்
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்படி செய்து கொண்ட சதிச் செயலே இது எனலாம்.
பாளையத் தலைமையை நயவஞ்சகமாகப் பறித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல்
உண்மையான அருந்ததியப் பாளையத் தலைவனின் வாரிசைப் பணியாளாக நியமித்து அடிமையாக்கிக் கொண்ட தந்திரமும் ஏற்கனவே
எழுதப்பட்ட பூலித்தேவன் வரலாற்றில்
நிகழ்ந்துள்ளது. பூலித்தேவனின் படைத்தளபதி என்று சொல்லப்படும் ஒண்டிவீரன் வரலாறு
குறித்தும் இதே பெயரில் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்து மடிந்த வேறு சில
ஒண்டிவீரர்களையும் அறிமுகம் செய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
நெற்கட்டான்
செவ்வயல்ஒண்டி வீரன்:
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள
சங்கரன்கோவிலிலிருந்து வடமேற்கில் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர்
தொலைவில், வாசுதேவ
நல்லூரிலிருந்து கிழக்கில் ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர்
தொலைவிலும் உள்ள மேடான பூமியும், பெரிய நீர் நிலையும், கண்ணுக்கெட்டும் தொலைவில் ஊரைச் சுற்றி விளைச்சல் நிலங்களும்
கொண்ட செழிப்பான பூமி
நெற்கட்டான் செவ்வயல்.
18-ஆம் நூற்றாண்டில்
தமிழகத்தில் சில பகுதிகளில் அருந்ததியர்கள் ஜமீன்களாக இருந்தனர். இந்த
நெற்கட்டான் செவ்வயலும் அருந்ததியர் ஜமீனாக இருந்தது. அந்த ஜமீன் பரம்பரையில்
கி.பி.1710-ஆம் ஆண்டு பெத்த வீரன், வீரம்மா
ஆகியோருக்கு மகனாக வீரன்
பிறந்தார். சிறு வயதிலேயே வாள் வீசவும், கம்பு சுத்தவும், குதிரை சவாரி செய்யவும், பறையடிக்கவும், பாட்டுப்பாடவும், ஒயிலாடவும், தமது குலத்தொழிலான தோல்
தொழிலையும் கற்றுத் தேர்ந்தார். தமது ஜமீனில் திசைக் காவல் புரிந்து
வந்த சித்திரபுத்திரத் தேவரின் மகனான காத்தப்பத்துரை என்ற பூலித்தேவனைத் தனது
உற்ற நண்பனாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வீரனுக்குத் தமது முறைப்பெண்
வீரம்மாவுடன் திருமணமும் நடந்து முடிந்தது.
இந் நிலையில் வீரனது
தந்தை மரித்துப்போக, ஜமீன் பொறுப்பை
வீரன் ஏற்றுக்கொண்டார்.
தமது நண்பர் பூலித்தேவனும் உடனிருந்து ஆண்டுவந்தனர். ஜமீன்முறை மாறிப்
பாளையமாக மாற்றம் பெற்ற போது ‘வடக்கத்தான் பூலித்தேவன்’ என்ற சிறப்புக்கேற்ப, ஊரின் வடக்குப் பகுதியைத் திசைக்காவல் புரிந்து வந்த பூலித்தேவன், இருளப்பபிள்ளை
என்பவரின் சூழ்ச்சியாலும், தமிழகத்தில் நிகழ்ந்து வந்த
சாதிய இழிவு நிகழ்வுகளாலும், தமது தேவரின மக்களின் குடிப்பெருக்கத்தாலும்
பாளையப் பொறுப்பைத் தாமேற்றார். வீரனும் பூலித்தேவனும் சேர்ந்தே ஆண்டு வந்தனர். வீரன் படைத்
தளபதியாகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். பகைவருக்கெதிரான போரைத் தாமே
தலைமையேற்று நடத்தி வந்தார்.
இக்கால கட்டத்தில்
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றதால் தமிழகத்தை 72 பாளையங்களாகப்
பிரித்து ஆண்டனர். அதில் தெலுங்குப் பாளையங்கள் ஐம்பத்தி ஆறாகவும் தமிழ்ப்
பாளையங்கள் பதினாறாகவும் இருந்தன.பதினாறு தமிழ்ப் பாளையங்களுக்கும்
தலைமையிடமாக நெற்கட்டான் செவ்வயல் திகழ்ந்தது. இந்நிலையில்
அரசியல் தந்திரம் கொண்ட ஆங்கிலேயர் ஆற்காடு நவாப்பிற்கு இராணுவ உதவி செய்து அதன்
மூலம் பாளையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றனர். ஆங்கிலேயருக்கு ஏன்
வரி கொடுக்க வேண்டுமென்று 1755-ஆம் ஆண்டு வீரனும் பூலித்தேவனும்
எதிர்த்தனர்.
அந்நியருக்கு வரி கொடுக்க
மறுத்ததால் நெற்கட்டான்
செவ்வயல் மீது போர் தொடுக்க ஆங்கிலேயப் படைத் தளபதி ஹெரான் தலைமையில் தென்மலை
என்ற பகுதியில் முகாமிட்டனர். அந்த
முகாமிற்குள் வீரன் தனி ஆளாகச் சென்று, ஆங்கிலேயரின் சபதத்தை முறியடிக்கும் விதமாகப் பட்டத்து வாள், குதிரை, கொடி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு
பீரங்கியை அவர்கள் முகாமை நோக்கித் திருப்பி வைத்துவிட்டு நகராவை முழக்கி
நெற்கட்டான் செவ்வயலை நோக்கி விரைந்து வந்தார். ஒண்டியாகச் (தனி ஆளாக) சென்று
சவாலை வென்று வந்ததால் ஒண்டிவீரன் எனப் பெயர் பெற்றார். பின்னர், ஒண்டிவீரன்
தலைமையில் படைகள் புறப்பட்டுச் சென்று ஹெரான் படையைத் தோற்கடித்தது.
பின்னர், 1756 மற்றும் 1757-ஆம் ஆண்டுகளில்
மீண்டும் ஒரு போர்க் களத்தை
ஒண்டிவீரன் சந்தித்தார்.
அப்போதைய திருநெல்வேலிச்
சீமையில் சுதந்திர உணர்வுக்குக் களங்கம் விளைவிப்பதுபோல் எட்டயபுரம் பாளையம்
உட்பட திருநெல்வேலிச்
சீமையின் தெற்குப் பாளையங்கள் காணப்பட்டன. அப்பாளையங்கள் மீது போர் தொடுத்து
ஒண்டிவீரனும் பூலித்தேவனும் வெற்றி கண்டனர். அங்கு கிடைத்த பெரும் பொருட்களைச்
சூறையாடி நெற்கட்டான் செவ்வயயலுக்குக் கொண்டுவந்தனர். இத்தகைய படையெடுப்புகள்
மூலம் தமிழ்ப் பாளையங்களின் ஆதரவை
வெள்ளையருக்கு எதிராகத் திரட்டினார் ஒண்டிவீரன். இதனை அறிந்து யூசுப்கான்
என்ற மருதநாயகம் பெரும்படையுடன் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த
போது, ஒண்டிவீரனும்
பூலித்தேவனும் பெரும்படையுடன் தமது எல்லைக்கு விரைந்தனர். மருதநாயகம் நெல்லைச் சீமைக்கு
வராமல் கங்கைகொண்டானில்
தங்கினார். அங்கு சென்ற இவர்களது படைகள் கடுமையாக மோதின. அந்த இடமே இரணகளமானது. முடிவில் யாருக்கும் வெற்றி
தோல்வியின்றித் திரும்பிச்
சென்றனர். மருதநாயகம் எஞ்சிய படையுடன் நெல்லைக்குச் சென்றார். ஒண்டிவீரன் தமது
படைகளைப் பலப்படுத்தினார்.
ஆழ்வார்குறிச்சி அழகப்பன்
ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஒண்டிவீரன் தமது படையுடன் சென்று அழகப்பனைத்
தோற்கடித்து சிறைப்பிடித்து வந்தார். இதையறிந்து மருதநாயகம்
ஒண்டிவீரனைத் தாக்க ஆழ்வார்குறிச்சி வந்தபோது ஒண்டிவீரன் தமது தளபதி வெண்ணிக்காலாடி
மூலம் தப்பித்துச் செவ்வயல் வந்தார்.
1759-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் நாள்
மருதநாயகம் பெரும்படையுடன் சென்று ஊத்துமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைக் கைப்பற்றினார். அவைகளை அதே
ஆண்டு நவம்பர் 6-ஆம் நாள் பெரும்படையுடன்
சென்று மீட்டெடுத்தார் ஒண்டிவீரன். கோபம் கொண்ட மருதநாயகம்
தொண்டைமான் படையுடன் சேர்ந்து வாசுதேவநல்லுரைத் தாக்கினார். இருபது நாள்
நடைபெற்ற போரில் சுமார் 3000 படைவீரர்களுடன்
ஒண்டிவீரனும் பூலித்தேவனும் இரு
படைகளாகச் சென்று போரிட்டு வென்றனர். ஒருமுறையாவது வெற்றிபெற எண்ணி 1760-இல் நெற்கட்டான்
செவ்வயல் மீது நேரடியாக மருதநாயகம் போர் தொடுத்தார். அதிலும் தோல்வியையே தழுவினார்.
1767-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள்
ஆங்கிலேயப் படைத் தளபதி டொனால்ட் காம்பெல் தலைமையில் வந்த படை நெற்கட்டான் செவ்வயலைத்
தாக்கியது. நிலைமையை உணர்ந்த பூலித்தேவன் தலைமறைவானார். ஒண்டிவீரன் போர்க்களத்தில்
இருந்தார். இறுதியில் பூலித்தேவன் ஆங்கிலேயருக்குப் பயந்து சங்கரன்கோவில் ஆவுடை
நாச்சியார் கோவிலுக்குச்
சென்று தலைமறைவானவர் வெளியே வரவே இல்லை. இதன் மர்ம முடிச்சு இன்றுவரை
அவிழ்க்கப்படவில்லை.
பூலித்தேவனின் தலைமறைவுக்குப்பின்
மீண்டும் ஒண்டிவீரன் பாளையப் பொறுப்பை ஏற்று பூலித்தேவனின்
பிள்ளைகளைக் காத்து வந்தார். களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிபுத்துர், புதுக்கோட்டை ஆகிய போர்களில் வெற்றிகண்டார். இறுதியாக நடைபெற்ற
தென்மலைப்போரில் மாவீரன் ஒண்டிவீரன் போர்க்களத்தில் மரணமடைந்தார்.
நாளடைவில் பல ஊர்களிலிருந்து
வந்து குடியேறிய தேவரினத்தோர் நெற்கட்டான் செவ்வயலின் பெரும்பான்மையினராகவும், பூர்வீக மக்களான
அருந்ததியரும், பறையரும் பெருமளவில்
போர்க்களத்தில் மாண்டுபோனதால் சிறுபான்மையினராகவும், நிலவுடைமை அற்றவர்களாகவும் மாற்றம் பெற்றனர். பின்னர் அவர்கள்
பஞ்சம் பிழைக்க மூணாறு, கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை எனப் பல
ஊர்களுக்கும் பிரிந்து சென்றனர். எஞ்சியவர்கள் நெற்கட்டான் செவ்வயல் ஊரின்
கிழக்குப் பகுதியில் ‘பச்சேரி’ என்னுமிடத்தில்
குடியமர்த்தப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டனர்.
பூலித்தேவரின் பூர்வீகப் பூமியான
கடலாடியில் தேவரினத்தோர் இன்றும் ஒண்டிவீரனைத் தெய்வமாக வணங்கிவருகின்றனர்.
அருந்ததியர்களும் ஒண்டிவீரனைத் தங்கள் குலதெய்வமாகவும், பசுவந்தனை, குருவிகுளம், பருத்திகுளம் ஆகிய ஊர்களில் சிலையாகவும் வைத்து
வணங்கி வருகின்றனர்.
நிலவுடமையாளராகவும், பாளையத்
தலைவராகவும், மன்னனாகவும் படைத்
தளபதியாகவும் வாழ்ந்த ஒண்டிவீரனைத் தவிர இதே பெயரில் இன்னொருவரும் திருநெல்வேலி
மாவட்டம் குருவிகுளத்தில்
வாழ்ந்ததாக மக்கள் வழக்காறுகள் தெரிவிக்கின்றன. இவர் ஆதிக்க சாதியினரால்
கொலை செய்யப்பட்டு தெய்வமாகியுள்ளார்.
குருவிகுளம்
ஒண்டிவீரன்:
திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள குருவிகுளம் என்ற ஊர். இதே பெயரில் அமைந்த பஞ்சாயத்து
ஒன்றியத்தின் தலைமை இடமும் இதுவேயாகும். இவ்வூரிலுள்ள தெலுங்கு பேசும்
நாயக்கர் சமூக சமீன்தாரிடத்தில் காவல் பணிபுரிந்து வந்தவர்களில்
ஒண்டிவீரனும் ஒருவர். அருந்ததியர் சமூகத்தவரான இவர் முரட்டுக் காளைகளை அடக்கும்
ஆற்றல் பெற்றவர். இவரது வீரத்தாலும் அழகாலும் ஈர்க்கப்பட்டு, இவ்வூரில் வாழ்ந்த
நாயக்கர் சமூகப் பெண்ணான எர்ரம்மாள் இவரைக் காதலித்தாள். இருவருக்குமிடையேயான காதல்
பலருக்கும் தெரிய வந்தது. தம் சாதிப் பெண்ணை அருந்ததிய இளைஞன் ஒருவன்
காதலிப்பதைப் பொறுக்க இயலாத நாயக்கர் சமூககத்தினர் அவர்மீது கோபமுற்றனர்.
அவர் வீரன் என்பதாலும், அரண்மனைக் காவலாளி
என்பதாலும் நேரடியாக அவருடன் மோத விரும்பாத நாயக்கர் சமூகத்தினர் சூழ்ச்சியால் அவரைக்
கொல்ல முடிவு செய்தனர். அதன்படி
முரட்டுக்காளை ஒன்றை வாங்கி வந்து அதற்குச் சாராயம் புகட்டி, பின்னர் அதை
அடக்கிக் காட்டும்படி ஒண்டிவீரனிடம் கூறினர். மாடு சாராயப் போதையில்
இருப்பதை அறியாத ஒண்டிவீரன் மாட்டின் அருகில் சென்ற போது அது ஒண்டிவீரன்
மீது பாய்ந்து குத்தியதுடன், அவரது உடலைத் தனது கொம்பில் சுமந்தவாறு ஓடியது.
கொம்பினால் குத்தப்பட்ட ஒண்டிவீரன் இறந்த பின்னும் அவரது பிணத்தைச்
சுமந்தவாறு ஓடியது மாடு. நீண்ட தூரம் சென்ற பிறகு கொம்பிலிருந்து
நழுவிக் கீழே விழுந்த ஒண்டிவீரனின் பிணத்தை எடுத்து அருந்ததியர்கள்
எரித்தனர். எரியூட்டிவிட்டுத் திரும்பியவுடன் எர்ரம்மாள் ஈம நெருப்பில்
தீப்பாய்ந்து இறந்தாள். இவர்கள் இருவரும் எரியுண்ட இடத்தில் கல் நட்டு
அருந்ததியர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் இருவருக்கும் சிலை வடித்து வணங்கி
வருகின்றனர். ஆண் குழந்தை பிறந்தால் ஒண்டிவீரன் என்றும் பெண் குழந்தை பிறந்தால் எர்ரம்மாள் என்றும் பெயரிடும்
வழக்கமும் உள்ளது. (ஆ.சிவசுப்ரமணியன், 2010. அடித்தள மக்கள்
வரலாறு,31-32)
சூரப்பட்டு
ஒண்டிவீரன்
சென்னைக்கு அருகிலுள்ள
அம்பத்தூரிலிருந்து புழல் செல்லும் வழியில் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள சூரப்பட்டு
என்னும் கிராமத்தில் ஒண்டிவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின்
மாப்பிள்ளை ஒண்டிவீரன். இவனது பூர்வீக ஊரும் பேரும் தெரியவில்லை. பல
ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் ஒரு பெண்ணை மணம் முடித்தான். அவன் மிகவும்
பலசாலி. சிலம்பு, கபடி, மல்யுத்தம் எனப் பல
வீர விளையாட்டுக்களில்
வல்லவன். குடிப்பழக்கம் கொண்ட ஒண்டிவீரன் அடிக்கடி மது அருந்திவிட்டு
பக்கத்துக் கிராமங்களில் உள்ள மக்களிடம் வம்புச் சண்டை செய்வது, வழிப்போக்கர்களிடம்
வழிப்பறி செய்வது, இரவு நேரங்களில்
கிடைகளில் உள்ள ஆடு, மாடுகளை, தானியங்களைக்
கொள்ளை அடிப்பது என மக்களுக்குப் பல துன்பங்களைச் செய்து வந்தான். இவனால் சுற்றுவட்டாரக்
கிராமங்கள் பல இன்னல்களையும்
துன்பங்களையும் சந்தித்து வந்தன.
இவன்மீது பல புகார்களும்
வந்ததால் பொறுமை இழந்த இவனது மைத்துனர்கள் இவனை என்ன செய்யலாம் என்று
யோசித்தனர். ஒண்டிவீரனின் மனைவியிடம் யோசனை கேட்டனர். அவளும் ஒண்டிவீரன்
மீதிருந்த தீராத கோபத்தில் அவனை வெட்டிக் கொன்றுவிடுங்கள் என்று கூற அந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்தி சூரப்பட்டு சகோதரர்களும் சதிகாரர்களும் சேர்ந்து ஒண்டிவீரனைக் கொலை
செய்யத் திட்டம் தீட்டினர்.
பலசாலியான ஒண்டிவீரனிடம் நேருக்கு நேர் சண்டையிட அஞ்சி வஞ்சகமான முறையில்
தீர்த்துக்கட்ட எண்ணினார். ஒருநாள் மாலையில் ஒண்டிவீரனுக்கு அளவுக்கு அதிகமாக
மதுவைக் குடிக்கச் செய்து தள்ளாடவிட்டு அவனைத் துண்டு துண்டாக வெட்டிக்
கொன்றனர்.
ஒண்டிவீரன் இறந்த நாளிலிருந்து
சூரப்பட்டுக் கிராமத்தில் விலங்குகள், ஆடு-மாடுகள் திடீர் திடீரென விழுந்து இறந்தன. மக்கள் மத்தியில்
கடுமையான மர்மக் காய்ச்சல் பரவியது.
ஊரில் யாருக்கும் குழந்தைகள் எதுவும் பிறப்பதே இல்ல. வெளியூரிலிருந்து
கருவுற்ற பெண்கள் இவ்வூர் வந்தால் கூட அவர்களின் கரு கலைந்து விடுகிறது.
நிலைமை பல மாதங்களாக நீடித்ததால் ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு சாமியாரை
வரவழைத்து பூஜை போட்டுப் பார்த்தனர். ஊரில் நடக்கும் அனைத்துத் தீய
சகுனங்களுக்கும் ஒண்டிவீரனே காரணம் என்று சாமியார் சொல்லிச் சென்றார். மறுநாள்
ஊர் மக்கள் கனவில் ஒண்டிவீரன் தோன்றி ‘தனக்கு ஒரு பீடம் எழுப்பி வழிபாட்டு
வந்தால் அனைவரையும் பாதுகாப்பதுடன் கேட்ட வரங்களையும் செய்து தருவேன்
எனக் கூறி’ மறைந்தான்.
அன்றுமுதல் சூரப்பட்டு மக்கள்
ஒன்று கூடி ஒரு பீடம் எழுப்பிப் படையல் போட்டு ஒண்டிவீரனை
வழிபாட்டு வருகின்றனர். தங்களுக்குப் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு
ஒண்டிவீரன் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். ஒண்டிவீரனும் அக்கிராம மக்கள்
மட்டுமின்றி வெளியூர் மக்கள், வழிப்போக்கர்கள் என அனைத்து மக்களின்
கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இருந்து வருகிறான்
ஒண்டிவீரன்.
சூரப்பட்டு ஒண்டிவீரன்
வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. வன்னியர், ரெட்டியார்
சமுதாயத்தினரும் அம்பத்தூரிலிருந்து புழல் செல்லும் நெடுஞ்சாலை வாகன
ஓட்டிகளும் ஒண்டிவீரனை வழிபடுகின்றனர். இக்கோவிலில் ஒண்டிவீரனின்
வாகனமாகக் குதிரை உள்ளது. புதன் கிழமைகளில் மட்டும் ஒண்டிவீரன் கோவிலில் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது.
(தகவலாளி: ஒண்டவீரன் கோவில் பூசாரி, வயது:80,இனம்: வன்னியர், ஊ ர்: சூரப்பட்டு )
கடலாடி மங்களம்
நொண்டிவீரன்:
இராமநாதபுரம்
மாவட்டம் கடலாடி மங்களம் கிராமம் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்
வீரன். இதே ஊரைப்
பூர்வீகமாகக் கொண்டவர்தான் பூலித்தேவன். நெற்கட்டும் செவல் பாளையத்தலைவனாக இருந்த
புலித்தேவன், வெள்ளையரை
எதிர்த்துப் போராட முடிவு செய்தபோது, போதிய படை வலிமை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
தனது பாட்டிமார்கள்
மூலம் பூர்வீக மண்ணான மங்களம் கிராமத்தின் பூர்வாசிரமத்தைத் தெரிந்து கொண்டார்.
சங்கரன்கோவிலில் அடிச்சுரங்கப்பாதை அமைத்துத் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக
வெள்ளையர்களுக்கு ஏய்ப்புக் காட்டிவிட்டு பூர்வீக ஊரான மங்களம் கிராமத்திற்குப் புறப்பட்டார்
பூலித்தேவன். தனது சொந்த மண்ணின் மைந்தர்களிடம் ‘வெள்ளையர்களை
எதிர்த்துப் போராட என்னுடன் வருகிறீர்களா! என வேண்டுகோள்
விடுக்கிறார்.
இதைக் கேட்ட
மாத்திரத்திலேயே மங்களம் கிராமத்து அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த வீரன் இரண்டாயிரம்
காலாட்படை வீரர்களுடனும், வென்னிக்காலாடி
என்ற வென்னிமலை இரண்டாயிரம்
குதிரைப்படை வீரர்களுடனும் பூலித்தேவனுடன் போர்முரசு கொட்டி நெற்கட்டும் செவல்
நோக்கிப் புறப்பட்டனர். போன வேகத்திலேயே நடந்த போரில் வீரனும், வென்னிமலையும்
புலித்தேவனின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுத்து வெள்ளையர்களுடன்
போரிட்டதில் வெள்ளையர்படை நாலாபக்கமும் சிதறி ஓடியது. வீரனையும், வென்னிமலையையும்
தனது பிரதான படைத்தளபதிகளாக நியமித்துக் கொண்டார் பூலித்தேவர். போர்த்திறம் மிக்க இவர்களை இனி
‘வெல்வது கடினம்’ என்பதை உணர்ந்த
வெள்ளையர்கள் அடுத்தகட்டப் போரில் நவீனரகத் துப்பாக்கி மற்றும் பீரங்கி
வகைகளுடன் கனராகத் தாக்குதல் தொடுத்தனர். இப்போரில் பூலித்தேவன்
படைக்கு இழப்பு அதிகம் ஏற்பட்டது. பிரதான படைத்தளபதிகளுள் ஒருவரான வீரன் போரில்
காலை இழந்தான். காலிழந்த நிலையில் வீரன் சொந்த ஊரான மங்களத்திற்கே
திரும்பிவிடுகிறார்.
வீரனாக முரசு கொட்டிப்
போருக்குப் போனவர் ஊனத்தோடு ஊர் திரும்பியதால் அப்போதிருந்து
வீரன், ‘நொண்டிவீரன்’ என
அழைக்கப்பட்டார். எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் தேவர் இனத்தைச் சேர்ந்த
பூலித்தேவன் கூப்பிட்டவுடனேயே
பிறந்த நாட்டுக்காகப் போர் புரியச் சென்ற அருந்ததிய வீரனுக்கு
நன்றிக்கடனாக அவரது இறப்புக்குப் பின் தெய்வமாக நினைத்து வழி பட்டு வருகின்றனர்
மங்களம் கிராமத்துத் தேவரின மக்கள். பின்னாளில் நொண்டிவீரனுக்குக் கோவில் கட்டித் தங்கள் ‘குலசாமியாகவே’ கும்பிட்டு வருகின்றனர்.
அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த
நொண்டிவீரனைக் குலசாமியாகக் கும்பிடுவதை மங்களம் கிராமத்து மக்கள்
பெருமையாகவே கருதுகின்றனர். ‘அப்ப இருந்து இப்பவரை மங்களம் கிராமத்து
ஒட்டுமொத்த மக்களும் நொண்டிவீரன் கோவிலில் போய் நின்னு, ‘கதியைக் கொடுப்பா’ என வேண்டினால்
அதற்குரிய பலன் கிடைக்கவே செய்கிறது’ என்ற நம்பிக்கை அக்கிராமத்து மக்களிடம் இன்னும்
இருக்கிறது. எங்கள் கிராமத்து மக்கள் இன்னைக்கும் ‘ஒரு வேட்டைக்குப்
புறப்படும் போதும் சரி, தேர்தலில்
போட்டியிடும் போதும் போதும் சரி, ஒரு வழக்குத் தொடரப் போனாலும் சரி நொண்டிவீரன்
கோவிலில் போய் கற்பூரத்தை கொளுத்தி வைத்து மண்ணை எடுத்து நெத்தியிலே பூசிச்
சென்றால் வெற்றி நிச்சயம்’ என மங்களம் கிராம
மக்கள் நம்புகிறார்கள். தெய்வமாகிவிட்ட
நொண்டிவீரன் எங்களுக்கு ‘காவல் தெய்வம்’ என்று கூறும் அவ்வூர்ப்
பட்டதாரி இளைஞரான ரவிநாயகம் ‘சாமிக்கும் சாதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது’ என்கிறார் மிகுந்த
நம்பிக்கையோடு. (கிஷோர், நக்கீரன்: 29.01.2002)
No comments:
Post a Comment