Monday, January 02, 2017

ஆர்.சூடாமணியின் சிறுகதைகள் தரும் அனுபவம் - தேன்மொழி




பசிய இலைகளை வரையும் உணர்வுகள்:
ஆர்.சூடாமணியின் சிறுகதைகள் தரும் அனுபவம்
- தேன்மொழி

             பெருவெளிப் பயணத்தில் ஒவ்வொரு உயிரும் சிறு துளிகள். சிறு துளிகள் எல்லாம் இப்பெருவெளியின் அங்கம். உயிர்த்துப் பிழைத்து இறந்து ஒட்டமும் நடையுமாக, ஒரு பௌதீகக் குறீயீடாக, பெருவெளிப் பயணத்தில் கடப்பவர்களாகிய நாம் உணர்வின் செயல்பாட்டை மறந்துவிடுகிறோம். மனிதர்களாகிய நாம் உணர்வுகளால் இயக்கப்படும் வெற்று இயந்திரம் என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கிறோம். உடல் என்பது மாயை என்று ஒஉபுறம் சொல்லிக்கொண்டு அதேவேளை நிரந்தரமான, ஆன்மாவை அலைக்கழிக்கும் உணர்வுகளை வசப்படுத்தும் சித்தர்களைத் தெய்வீக நிலையில் வைத்துப் போற்றக் கற்பிக்கப்பட்டுள்ளோம். அறிவென்பது உணர்வுகளை அடக்கி ஆள்பவர்களாகவும்,  அதை அதிகாரம் செய்பவர்களாகவும் நம்மை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆசை, துன்பம் என்பவை உணர்வுகள் என்று கொண்டோமானால், ஆசையைத் துறந்து துன்பங்களை அகற்றி வாழ கட்டுபாட்டுணர்வு அவசியமாகிறது. உணர்வுகள் புறவெளிப்பாட்டுத் தோற்றத்தால் நமக்குப் புலனாகும் என்ற போதும். உண்மையில் அது அகம் நிகழ்த்தும் செயல்பாடு. எதிர் உரையாடலற்ற ஆயினும் உள்நோக்கிப் பேசும் உரையாடல் மொழி அது. அது மென்மையானது போலவே நிரம்பக் கடினமானது. மேலோட்டமாகத் தோன்றும் அதன் ஆழம் அனாந்தரமானது. எதார்த்த புறச் செயல்பாடுகளால் இயங்கிக் கொண்டிருக்கும் கதாபாத்திரங்களை உள்நோக்கி உரையாட வைப்பதன் வழியாக வாழ்வின் ஆழ்தளத்தில் பதுங்கிக்கிடக்கும் உணர்வுகளை எழுத்து வழியாக இச்சமூகத்தின்முன் வைக்கிறது. ஆர்.சூடாமணியின் நாகலிங்கமரம் தொகுப்பு.

 முழுவதுமாய் வெளிப்படக்கூடிய எதார்தத்துக்கும், ஒலிக்காத அகமன மொழிக்கும்,  மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளன என்பதை நிரூபிக்கின்றன சூடாமணியின் படைப்புகள். பூமியின் ஆன்மாவுக்குள் வாய்பிளந்து, கால்நீட்டி அமர்ந்து கதை சொல்லும் நிலாப்பாட்டியிடம் கதை கேட்கும் குழந்தைகள் போல, இந்த படைப்புகளிடம் ஒன்றிவிடுகிறோம். அதே வேளை படைப்புக்கும் நமக்கும் இடையே படித்தமாத்திரத்தில் ஒரு இடைவெளியும் தோன்றுகிறது. ஏனெனில் நாம் புற எதார்த்தங்களைக் கடந்துதான் அகம் நோக்கிச் செல்ல சாத்தியப்பட்டவர்கள். அகம் நோக்கிச் செல்லச் செல்ல, நிதர்சனமான அகத்தை, நம்மை நாமே அடையாளம் கண்டு கொள்கிறோம். புரிபடாத, உணர மறுத்த, உணர இயலாத சகஜீவியின் உணர்வுகளைக் கண்டடைகிறோம். வெட்கித் தலைகுனியும்படியான, நம் இறந்தகால செயல்பாடுகளை நினைவுகூற வேண்டிவருகிறது. ஆக சூடாமணியின் படைப்புகள் நம்மை அகம் நோக்கிப் பயணிக்கத் தூண்டுகின்றன. அதே வேளையில் நம்மைச் சுற்றியிருப்பர்களின் அகமன உணர்வுகளை நமக்குக் கற்றுத் தருவதன் வாயிலாக மனிதர்களைக் கையாளுவதற்கான நுட்பங்களையும், அதன் தேவைகளையும் நமக்கு விளங்க வைக்கின்றன.

" மேடுகளின் உச்சியிலுள்ள மரங்களின் இலைப்பின்னல் வெப்பத்தை வடிகட்டி தணித்துத் தரும் மிருதுவான சூரிய ஒளி" (பூமாலை ப. 300)
பெண் நாகலிங்க மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கிளை நுனிகளில் கொத்தாகப் பச்சை காய்கள்  போல் மொட்டுக்கள் தெரிந்தன. வருங்கால மலர்கள் பூக்கர்ப்பங்கள்"         (நாகலிங்க மரம் பக்கம் 139)
 சருகுகள் ஆடி ஆடி உதிர்ந்து கொண்டிருக்கிறபோதே பக்கத்திலேயே பச்சை பச்சையா சின்னச் சின்னதா துளிர்விட்டிருக்கிறதைப் பார்க்க எத்தனை அழகாயிருக்கும் தெரியுமா? என்னமோ பழைய மரத்துகுள்ளேயிருந்த தோல் உரிச்சுண்டு புது மரம் கிளம்புவது போல் இருக்கும்.      (நாகலிங்க மரம் பக்கம் 132)
 ஆர்.சூடாமணியின் மொழியின் வளமைக்கும், எதார்தத்தைக் கற்பனைக்குள் பூட்டும் சாதுர்யத்திற்கும் மேற்சொன்னவை மட்டுமின்றி இன்னும் பல வரிகளைக் கூற முடியும். வருங்கால மலர்கள் பூக்கர்ப்பங்களாக சித்தரிக்கப்படும் நாகலிங்க மலர்களுக்குப் பின்னே திடமான, சமூகத்தின் சலசலப்பால் அசைக்க முடியாத ஒரு பெண்ணை நமக்கு அடையாளம் காட்டுகிறார் சூடாமணி. பச்சிலைகள் படர்ந்து விரித்திருக்கக் கிளைகளில் தொடங்கி மரத்தின் தண்டெங்கும் கொத்துக் கொத்தாக விழுதுகள் போல் கீழ் நோக்கித் தொங்கும் மெல்லிய குச்சிக் கிளைகளில் மலர்ந்திருக்கும் நாகலிங்க பூ ஆச்சர்யம் மட்டுமல்ல, அடிமைத்தனம் மற்றும் வன்முறையில் அழிந்துவிடாத பெண் என்னும் ஆபூர்வம் தான் எனச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது சூடாமணியின் எழுத்து.
 இத் தொகுப்பில் உள்ள " நாலாவது ஆசிரமம்" என்ற கதை மிகச்சிறப்பான உட்பொருளை விவரித்து நிற்கிறது. குறுகிய புத்திக் கொண்ட சமுகத்தின் பொதுக் கேள்விகளுக்கும் சிக்கல்களுக்குமான கயிறுகளை முடிச்சவிழ்க்கிறது. கதையில் வரும் சங்கரி என்ற பெண் மூன்று ஆண்களைத் திருமணம் என்ற பெயரில் கடந்து போகிறாள், ஆகவே அவள்  சமூகத்தின் கண்களுக்கு மரபொழங்கு மீறியவளாகத் தெரிகிறாள். அவள் அகத்தேடல், அவள் அடைய விரும்பும் விடுதலை, அவள் கடந்து செல்லும் மனிதர்கள், வாழ்வின் சுவடுகள், ஆகிய எல்லாவற்றின் வழியாக, அப்பெண்ணின் அகத்தை சமூகத்தின் முன் அவர்களது கணவன்மார்களின் வழியாக பேச வைப்பது மிகச் சிறந்த யுக்தி. அதை படைப்பாளியின் சுய விருப்பம், கருத்து நிலைப்பாடு என்று கூட சொல்லலாம்.  மனிதக் குழாம் கொண்டுள்ள அகமனச் சிக்கல்கள், அதைக் கடந்து செல்லும் அவளின் தர்க்கரீதியான நியாயங்கள் ஆகியவற்றைப் பேசும் நாலாவது ஆசிரமம் இத் தொகுப்பின் மிகச்சிறந்த கதையாகும்.
 அடுத்தாக, கடவுள் தன்னைக் குறித்தே கேள்வி எழுப்புவதாக அமைக்கப்பட்ட நாம வெளி கதை படைப்பாளியின், சமூகக் கட்டுமானங்களின் போலித்தன்மைகளைத் தகர்ப்பதற்கான, தொடர் தேடலின் ஒரு வடிவமாக உள்ளது.
 ஆர்.சூடாமணியின் கதைகளைத் தொகுப்பாக வெளிக் கொணர்ந்திருக்கும் திலீப்குமார் தன் முன்னுரையில் சூடாமணிக் கதைகளின் பிரதான அம்சங்கள் வற்றாத ஈரமும் எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும் தான்........  இவ்வுலகம் ,  நிம்மதியைக் குலைத்து விடும் பேரழகுகளால் மட்டுமல்ல , மனம் விரும்பும் சிறு சிறு சுமாரான அழகுகளாலும் கூடத்தான் நிரம்பியுள்ளது. இந்த எளிய ஆனால் மதிப்பு மிக்க உண்மையைத் தம் எழுத்துக்களின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் பொருள்பட உணர்த்திச் சென்றவர் சூடாமணிஎன்கிறார்.
அம்பை சில சமயம் யதார்தத்தை மீறி இயங்குபவர்களாகத் தோன்றினாலும் தன் கவிதை தோயும் மொழியாலும் அதீத  மென் உணர்வுகளையும் எளிதாக வெளிக் கொணரும்  தேர்ச்சியாலும் அப்பெண்களை பூமியில் கால்களை உறுதியாக ஊன்றி நிற்பவர்களாக்கிக் காட்டியது அவளுக்கே கைவந்த கலைஎன்று சூடாமணியைப் பாராட்டுகிறார்.
ஆர்.சூடாமணியின் பார்வை எதார்த்தமானதில்லை, அவரது படைப்புகள் உணர்வுகளின் அந்தரங்கத்தைத் தேடிப் பயணிக்கின்றன.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...