தமிழக
அரசியலில் கிட்டத்தட்ட 34
ஆண்டுகாலம் செல்வாக்கு செலுத்திய ஒரு நபரை தனிநபராகசெல்வி
ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. ஏதோ வாழ்ந்தார் மறைந்தார் என்று ஒவ்வொரு
தனிநபரைப் பற்றி கூறுவதுபோல் செல்வி ஜெயலலிதாவைக் கூறமுடியாது. பெரும் மக்கள்
திரளின் உள்ளங்களில் வாழந்துவந்த செல்வி ஜெயலலிதா ஒரு வரலாற்றுப் மனிதர். வரலாற்று
மனிதர்கள் தோன்றுவது எல்லாம் ஒரு சமூகப் போக்கின் விளைவே. ஆகவே செல்வி ஜெயலலிதா
என்பது ஒரு சமூகப் போக்கு என்றே நான் கருதுகிறேன்.
செல்வி
ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காது என்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
என்னைப்போல் பலருக்கு செல்வி ஜெயலலிதாவைப் பிடிக்காது. பிடிக்காத தன்மையை வைத்து
செல்வி ஜெயலலிதாவை மதிப்பீடு செய்தால் அந்த மதிப்பீடு முழுமையாக இருக்காது.
இன்றையதினம் அவரைப் பற்றி வெளிவரும் மதிப்பீடுகளில் இக்குறையை நம்மால்
காணமுடியும். இன்னொருபுறம் செல்வி ஜெயலலிதாவின் எல்லா நடவடிக்கைகளும்
பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அத்துடன் வெறியுடன் அவரைப் பின்தொடந்தவர்களும்
இருக்கிறார்கள். எனவே பிடித்தல்-பிடிக்காதிருத்தல் அல்லது அதீதமோகம் – எதிர்ப்பு வெறி என்ற இருமுனைகளுக்கு நடுவிலேதான் அவர் நின்று
கொண்டிருந்தார். அந்த இடத்தை அடையாளம் காணுவதே உண்மையான மதிப்பீடாக இருக்க
முடியும்.
அவர்
நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் அவரது தொண்டர்கள் மண்சோறு சாப்பிடுவதும், அலகு குத்தி காவடி எடுப்பதும், அங்கப்
பிரதட்சனம் செய்வதும் நடைபெற்றது. இதில் பெரும்பாலானவை லாபம் கருதி
செய்யப்பட்டாலும் அனைத்தும் லாபம் கருதி செய்யப்பட்டவை என்று கூறமுடியாது. அதேபோல்
இவை அனைத்தையும் மூட நம்பிக்கையின் வெளிப்பாடு என்று எளிதில் புறந்தள்ளவும்
முடியாது. ஒரு விஷயம் மக்களின் மனதைக் கவ்விப் பிடித்தால் அது ஒரு பௌதீக சக்தியாக
மாறும் என்று மார்க்ஸ் கூறியதை நினைவில் கொண்டால் செல்வி ஜெயலலிதா ஒரு பௌதீக சக்தியாக
திகழ்ந்தார். மக்களை முட்டாளாக்கி குளிர் காய்ந்து வந்தார்கள் என்றும் என்னால்
புறந்தள்ளவும் முடியவில்லை. ஆணவம், அகங்காரம், கர்வம், குரூரமனப்பான்மை, எதேச்சதிகார மனப்பான்மை, மற்றவர்களை துச்சமாக
மதித்தல் போன்ற குணாம்சங்களின் ஆளுருவமாக செல்வி ஜெயலலிதா திகழ்ந்தார் என்று அவரது
எதிர்ப்பாளர்கள் கூறுவதைவும் எளிதில் புறந்தள்ள முடியாது. அவர்கள் வரையறுக்கும்
குணாம்சங்கள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்த செல்வி ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை
பலவற்றை உதாரணம் கூறமுடியும். வெளிப்படையாக திகழ்ந்த இந்த குணாம்சங்கள் கண்கூடாகத்
தெரிந்தாலும் ஒரு பெரிய கூட்டம் அவரை ஏற்றுக் கொண்டது எப்படி? லாபநோக்கில் ஏற்றுக் கொண்டவர்களைத் தவிர்த்து பார்த்தாலும் மனதளவில்
ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அவர் இறந்து நான்கு நாட்களாகியும் அவரது சமாதிக்கு
வெள்ளமென மக்கள் வருவது திரட்டப்பட்ட கூட்டமல்ல. அவர்களில் பலர் தங்கள் சொந்த
தாயார் இறந்தது போல் மொட்டை போடுவது என்பது நகைக்கத்தக்க விஷயமல்ல. இதெல்லாம்
இயல்பாக நடைபெற்றுவரும் விஷயங்கள். இவை இட்டுக்கட்டியவை யாரோ சதி செய்து
திட்டமிட்டு நடத்திவரும் நாடகங்கள் என்று என்னால் கூற முடியவில்லை. இதன்
நீட்சியாகவே கடந்தகாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிளின் வாயிலாக ஏற்பட்ட செல்வி
ஜெயல்லிதாவின் எழுச்சியை முற்றிலுமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று
கூறுவதையும் நான் நிராகரிக்கிறேன். வெறுக்கத்தக்க குணாம்சங்களையுடைய ஒருவர் எப்படி
மதிக்கத்தக்கவராகிறார்? யாராலும் இதுதான் காரணம் என்று
நிச்சயமாக பதில் சொல்ல முடியாத கேள்வி இது. வெறுக்கத்தக்கவரை
மதிக்கத்தக்கவராக்கும் இந்த செப்பிடு வித்தையை புரிந்து கொள்ள வேண்டுமானால்
மார்க்சிய அணுகுமுறையே அவசியம் என்று கருதுகிறேன்.
உற்பத்தியமைப்புமுறையே
ஒரு சமூகத்தின் அடிக்கட்டுமானம். பண்பாடு, அரசியல்
உள்ளிட்ட மற்ற அனைத்து அம்சங்களும் மேல்கட்டுமானம் என்கிறது மார்க்சியம். இதை
அப்படியே யாந்திரீகமாக பொருத்திப் பார்க்கக் கூடாது என்ற எச்சரிக்கையும்
மார்க்சியம் செய்கிறது. ஃபாயர்பார்க் மீதான கோட்பாடு என்ற மார்க்சின் இரண்டு பக்க
கட்டுரையைப் படித்தாலே யாந்திரீகப் பார்வை என்றால் என்ன என்று புரிந்துவிடும்.
வரலாற்றுப் பாத்திரம் வகித்த தனிநபர்கள் ஒரு சமூகப் போக்கின் விளைவாக உருவானவர்கள்
என்று கூறினேன் இதற்கு ஏராளமான உதாரணம் கூறமுடியும். மார்க்ஸ் என்ற நபரையே
எடுத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நபர் ஏன் 14ம்
நூற்றாண்டில் தோன்றவில்லை? ஏன் 19ம் நூற்றாண்டில் தோன்றினார்? வரலாற்று
வளர்ச்சிப் போக்கே இக்கேள்விக்கான பதிலாக அமையும். முதலாளித்துவ உற்பத்தியமைப்பு
முறையை தோலுரித்துக் காட்டும் நபர் முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்பு எப்படித்
தோன்ற முடியும்?
இம்மாதிரி
வரலாற்று மனிதர்கள் வரவின் இன்றியமையாத தன்மையை எனக்குத் தெரிந்து முதன் முதலில்
விளக்கியவர் சோவியத் இயற்பியல் விஞ்ஞானி போரிஸ் ஹெசன். 1931ம் ஆண்டு நடைபெற்ற விஞ்ஞான வரலாற்றிற்கான இரண்டாவது சர்வதேச மாநாட்டில்
அவர சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான The Social and economic Routes of
Newton’s Principia” அந்த மாநாட்டை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. நியூட்டனின்
கோட்பாடுகள் 17-18ம் நூற்றாண்டில் தோன்றுவதற்கான அடிப்படை
சமூக பொருளாதாரக் காரணிகள் என்ன அதன் இன்றியமையாத் தன்மையானது நியூட்டன் என்பவர்
வாயிலாக தற்செயலாக வெளிப்பட்டது என்ற ஆணித்தரமான வாதங்களடங்கிய அந்த 50 பக்க கட்டுரை அம்மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகளின் பார்வையை மார்க்சியத்தை
நோக்கி திரும்ப வைத்த்து.
பிடல்
காஸ்ட்ரோவை எடுத்துக் கொள்வோம். 1902ம் ஆண்டு ஸ்பெயினிலிருந்து
விடுதலையடைந்த கியூபாவால் அம்மக்களின் நலன் பேணுவதற்காக சுயமாக ஜனநாயகமுறையில்
தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசை ஐம்பத்தைந்து ஆண்டுகளாக அம்மக்களால் நிறுவ
முடியவில்லை. பலமுறை குப்புற விழும் ஒரு குழந்தை ஒரு கட்டத்தில் நடக்க கற்றுக்
கொள்வதுபோல் கியூபப் புரட்சி நடைபெற்றது, அச்மூகத்தின்
வரலாற்று வளர்ச்சிப் போக்கில் கியூபப் புரட்சி என்பது தவிர்க்க இயலாதது அல்லது
இன்றியமையாதது. கியூபப் புரட்சி எப்படி தவிர்க்க முடியாததோ அதேபோல் அதை
முன்னெடுத்துச் செல்லும் நபரின் தோற்றமும் தவிர்க்க முடியாதது. அது காஸ்ட்ரோ
என்பது தற்செயலானது ஆனால் அது இன்றியமையாத சூழ்நிலையின் வாயிலாக தன்னை
வெளிப்படுத்திக் கொண்ட ஒரு தற்செயல்.
இயக்கவியலின்
முதலாவது விதியின் துணைவிதிகளில் ஒன்றான “தற்செயலும் இன்றியமையாததும்“
வரலாற்றுப் பாத்திரங்கள் அனைத்துக்கும் பொருந்தும். ஒரு இன்றியமையாத
சூழல் தற்செயல் வாயிலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பலூனை ஊதிக்கொண்டே
சென்றால் அது வெடிப்பது இன்றியமையாதது. ஊதப்பட்ட பலூன் ஒரு குறிப்பிட்ட இடத்தில்
வெடிப்பது தற்செயலானது. எதிரெதிர் நிலைகளின் ஒத்திசைவே இயக்கம் என்கிறது
முதல்விதி. ஒன்று மற்றொன்றுக்கு எதிரானது ஆனால் அந்த ஒன்றை மற்றொன்றிலிருந்து
பிரிக்க முடியாது. இப்படித்தான் முரண்பாடுகள் தோன்றுகின்றன. இவற்றின் அளவு நிலை
மாற மாற பண்புநிலை மாறி முற்றுகின்றன. முற்றிய முரண்பாடுகள் ஒரு கட்டத்தில்
முந்தைய நிலையை மறுதலிக்கின்றன. இப்படித்தான் இயக்கம் நடைபெறுகிறது. வரலாற்றுப் பாத்திரங்கள்
அனைத்திற்கும் இந்த இயக்கவியல்விதி பொருந்தும் என்று நான் கூறுவதை மார்க்ஸையும்,
காஸ்ட்ரோவையும் அவர்களின் ஞானத்தையும், தியாகத்தையும்.
செயலாற்றலையும் குறைந்து மதிப்பிட்டுவிட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த
அடிப்படையை வைத்தே நாம் செல்வி ஜெயலலிதாவை மதிப்பிட வேண்டும். செல்வி ஜெயலலிதா
என்ற தற்செயல் எந்த இன்றியமையாததின் வெளிப்பாடு? தமிழகத்தின்
பொருளாதார-அரசியல்-சமூகச் சூழலைப் பற்றி ஆழமான புரிதல் இல்லாவிட்டால்
இக்கேள்விக்கு விடையளிக்க முடியாது. உடைந்த பலூனின் கிழிந்த பகுதியைமட்டும்
பார்த்து எவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்தாலும் முழுமையை எட்டமுடியாதோ அதைப்
போன்றதே இந்த அணுகுமுறையைத் தவிர்த்து செய்யப்படும் மதிப்பீடுகள் எல்லாம்.
தமிழக
வரலாற்றுச் சூழலில் திராவிட இயக்கத்தின் தோற்றத்தையும் அதன் இன்றியமையாத
தன்மையையும் ஆய்வு செய்யாமல் அதற்குள் முரண்பாடு தோன்றி முற்றி அதன் அடிப்படை
விஷயங்களை மறுதலித்து அது அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றதை மதிப்பீடு செய்ய
முடியாது. அதன் ஒரு கட்டமான ஜெயலலிதாவையும மதிப்பிட முடியாது. இருபதாம்
நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய தென்னிந்தியர் நலஉரிமை சங்கமானது
நீதிக்கட்சியாக மாறியதை இந்த இயக்கவியல் விதிகளின் வாயிலாக விளக்க முடியும்.
நீதிக் கட்சியானது திராவிடர் கழகமாக மாறியதை இந்த இயக்கவியல் விதிகளின் வாயிலாக
விளக்க முடியும். திராவிடர் கழகமானது திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியதையும் இந்த
இயக்கவியல் விதிகள் கொண்டு விளக்க முடியும். திராவிட முன்னேற்றக் கழகம் உடைந்து
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியதையும் இந்த இயக்கவியல் விதிகள் கொண்டு
விளக்க முடியும். அஇஅதிமுக-விற்குள் எற்பட்ட ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தலைமை மாற்றங்களையும்
இயக்கவியல் விதி கொண்டு விளக்க முடியும். இப்படியெல்லாம் சொல்கிறபொழுது எதுவுமே
தற்செயலாக நடக்கவில்லையா அல்லது ஏதோ ஒரு விதியின் அடிப்படையில் நடந்தேறுகின்றனவா
என்கிற கேள்வி எழுகிறது. ஆம் அனைத்தும் தற்செயலாக நடைபெற்றவைதான் அந்த தற்செயல்கள்
இன்றியமையாததின் வெளிப்பாடுகளே. முரண்பாடுகள் முற்றியே இன்றியமையாதவைகள்
தோன்றுகின்றன. முரண்பாடுகள் கண்ணுக்குத் தெரிவதில்லை அவை முற்றுவதும் கண்ணுக்குத்
தெரிவதில்லை அது தோற்றுவிக்கும் இன்றியமையாத சூழலும் கண்ணுக்குத் தெரிவதில்லை அது
தற்செயலாக வெளிப்படுவது மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. கண்ணுக்குத் தெரிவதை
மட்டும் நாம் எடுத்துக் கொண்டு முடிவெடுத்தால் அது தவறு.
இந்தியாவில்
முதலாளித்துவம் அடியெடுத்து வைத்ததையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் பிரித்துப்
பார்க்க முடியாது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உறவுகளை புரட்டிப் போடும்
வேலையை முதலாளித்துவம் செய்யும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. அப்படிப்
புரட்டிப் போடும் வேலையை செய்யும் ஏஜெண்டுகளாக சமூகமட்டத்தில் ஒரு கூட்டம் மெல்ல
மெல்ல உருவாக வேண்டும். அக்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பலம் பெற்று பழைய சமூக
உறவுகளுக்கு எதிராக போராடும். இந்த நிகழ்வு போக்குகள் 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் தமிழகத்தில் நடைபெற்றது. பிரிட்டிஷ்
வந்தது வெளிப்படையாக தெரிகிறது. அவர்கள் தொழிற்சாலைகளை அமைத்ததும் அதற்காக
அடித்தளமிட்டதும் வெளிப்படையாக தெரிகிறது. தொழிற்சாலை அமைப்புகள் என்பது
முதலாளித்துவ உற்பத்திமுறையின் அடிப்படை அங்கம் என்பது அனைவருக்கும் தெரியும். அதே
நேரத்தில் தென்னிந்திய நலஉரிமை சங்கம் தோன்றியதும் வெளிப்படையாக தெரிகிறது. அது
பிராமணர் அல்லாதவர்களுக்கு சமூக நிறுவனங்களில் உரியஇடம் கோரியதும் வெளிப்படையாக தெரிகிறது.
அதன் கோரிக்கைகளை வலுவடைவதும் வெளிப்படையாக தெரிகிறது. தென்னிந்தியர் நலஉரிமை என்ற
பெயரிலிருந்து நீதிக்கட்சி என்ற பெயர் மாற்றம் நடைபெற்றதும் வெளிப்படையாக
தெரிகிறது. சமத்துவம் என்ற கோஷத்திற்கு தோதான பெயராக நீதிக்கட்சி என்பது
விளங்குகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். பிராமணர் அல்லாதவர்கள் எந்த சமூக
நிறுவனங்களிலும் இடம்பெறாத நிலைமை என்பது முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி
முறையில் விளைந்த பண்பாடு என்பதும் தெரிகிறது. இப்பண்பாடு மாற்றப்பட வேண்டும் என்ற
கோரிக்கையை அதாவது சமத்துவம் என்ற கோட்பாடு உள்ளடக்கம் பெற்ற கோரிக்கையை
நீதிக்கட்சி முன் வைத்தது. இந்த இரண்டு நிகழ்வுப் போக்குகளும் ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லதாவை
அவை தனித்தனியே தற்செயலாக நடைபெற்றவை என்று கூறுவதில்தான் சிரமம் உள்ளது.
சமத்துவம்
என்ற கோட்பாடு முதலாளித்துவ கோட்பாடு. இது தொழிலாளர்களை சமமாக சுரண்டும் உரிமை
என்ற உள்ளடக்கத்துடன் கூடிய “அனைவரும் சமம்“ என்ற முற்போக்கான உருவமுடையது. இங்கு உருவமும் உள்ளடக்கமும் என்ற
எதிரெதிர் அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. இதுவும் இயக்கவியல்
விதிதான். உள்ளடக்கத்தைப் பார்க்காமல் உருவத்தை மட்டும் பார்த்தால் அனைவரும்
ஏற்றுக் கொள்ளக்கூடிய கோட்பாடுதான் முதலாளித்துவ சமத்துவக் கோட்பாடு. நான்
இப்படிச் சொல்லும் பொழுது தொழிற்சாலைகள் அமைவதையோ, முதலாளித்துவம்
என்ற பேரரக்கன் வராமல் அதற்கு முந்தைய நிலப்பிரத்துவம் என்ற அரக்கன் இருக்கட்டும்
என்றோ கூறிவிட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலாளித்துவ கோஷமான
சமத்துவத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உருவம்-உள்ளடக்கம் என்ற முரண்பாட்டில்
உருவம் எனக்கு ஏற்புடையதாக இருந்தாலும் உள்ளடக்கமான சமமாக சுரண்டும் உரிமையை
கோரும் மூலதனத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக நான் சமத்துவத்தை நிராகரிக்கிறேன்
என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
முதலாளித்துவ
நிறுவனங்கள் தோன்றுவதும் அது நிலைபெறுவதும் அது முன்னோக்கிச் செல்வதும் இயக்கவியல்
விதிகளின்படிதான் நடந்தேறுகிறது. முரண்பட்ட இருஅம்சங்களை கையாளும் முதல்விதியில்
எதிரும் புதிருமான இரண்டு விஷயங்களில் ஒன்று வெகுமக்களுக்கோ தொழிலாளர்
வர்க்கத்திற்கோ நல்லதைப் பேசினால் மற்றொன்று அதற்கு நேர் எதிரானதாக இருக்கும்.
இவையிரண்டும் பிரிக்க முடியாதது. தொழிலாளி வர்க்க நலன் என்ற அம்சத்தில
நங்கூரமிட்டு அது தொழிலாளி வர்க்கத்திற்கு கேடுவிளைவிக்கும் விஷயத்தை
முன்னெடுத்துச் செல்கிறது. தொழிலாளி வர்க்கமும் அதற்கு நலம் பயக்கும் விஷயத்தில் நங்கூரமிட்டு
அதற்கு எதிரான விஷயத்தை அல்லது முதலாளித்துவத்திற்கு எதிரான விஷயத்தை
முன்னெடுத்துச் செல்லும். இந்த தள்ளுமுள்ளு எப்பொழுதுமே அடிநீரோட்டமாக நடந்து
வருகிறது.
தமிழக
பொருளாதார-சமூக-அரசியல் வளர்ச்சிப் போக்கின் இயக்குனராக முதலாளித்துவ உற்பத்திமுறை
தற்பொழுது இருந்து வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்குள் நடைபெறும்
மாற்றங்களே மேல்மட்டத்தில் பொருளாதார-சமூக-அரசியல் வளர்ச்சிப் போக்கில் மாற்றத்தை
ஏற்படுத்தும். இப்படிக் கூறுவதால் மற்ற உற்பத்தி முறைகள் தமிழகத்தில் இல்லை என்று கூறுவதாக
எடுத்துக் கொள்ளக்கூடாது. முதலாளித்துவ உற்பத்தி முறையே சமூக உற்பத்தியில்
ஆதிக்கம் செலுத்தும் உற்பத்திமுறையாக இருப்பதாலும், நாட்டில்
நடைபெறும் சமூக உற்பத்தியில் கணிசமான அளவு முதலாளித்துவ உற்பத்திமுறையின் வாயிலாகவே
நடைபெறுகிறது என்பதாலும் நமது நாட்டில் நடைபெறும் பொருளாதார-சமூக-அரசியல்
வளர்ச்சிப் போக்கை தீர்மானிப்பது முதலாளித்துவம் என்கிறேன்.
விடுதலைப்
போராட்ட காலத்திலும் விடுதலைக்குப் பிறகு வந்த காலத்திலும் தமிழகத்தின் அரசியலில்
ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பிடுவதற்குமுன் தமிழகத்தின் சமூக உற்பத்தி முறையில்
ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பிட வேண்டும். 19ம் நூற்றாண்டின்
மையப்பகுதிவரை ஒருமுழுமையான நிலப்பிரபுத்துவ சமூகமாக இந்திய சமூகம் இருந்தது.
இதில் தமிழகமும் விதிவிலக்கல்ல. பிரிட்டிஷ் ஆட்சி கொணர்ந்த தொழில் முனைவு
தமிழகத்திற்குள்ளும் வந்தது. இலாபத்திற்காக உற்பத்தி, உபரி
உற்பத்தி, மீண்டும் மீண்டும் உற்பத்தி, உழைப்பு சக்தியை விலைக்கு வாங்கிவந்து நடைபெற்ற உற்பத்தி என்று
முதலாளித்துவ உற்பத்திமுறை இங்கும் அங்குமாக ஏற்பட்டது. ஐரோப்பாவில் ஏற்பட்டது
போன்று கைவினைஞர்கள் சிறு தொழிலுக்குள் உள்வாங்கப்படுவது, அது பட்டறைத் தொழிலாக மாறுவது, பட்டறைத்
தொழில் ஆலைத்தொழிலாக மாறுவது, ஆலைத்தொழில் நவீன
தொழிற்சாலையாக மாறுவது என்ற படிநிலை வளர்ச்சிப் போக்கிற்கு இந்தியாவில் அவசியம்
இல்லை. அதற்காக இந்த அனைத்து கட்டங்களும் முற்றிலுமாக இங்கே இருக்க வேண்டிய அவசியமில்லை
என்று கூறமுடியாது. ஆங்காங்கே திரட்டப்பட்ட மூலதனத்திற்கு ஏதுவாகவும்
உருவாக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்திற்கு ஏதுவாகவும் இக்கட்டங்கள் ஆங்காங்கே
இருக்கத்தான் செய்தது. ஆனரல் இது ஒன்றன்பின் ஒன்றாக வளர்ச்சிபெற்று நவீன
ஆலைத்தொழிலாக பரிணமிக்கவில்லை. நவீன ஆலைத் தொழில் முதல், பட்டறைத்
தொழில்வரை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் இங்கே பார்க்க முடியும். ஐரோப்பா மாதிரி
ஒன்று அழிந்து மற்றொன்று உருவாவது போல் இங்கு முதலாளித்துவ உற்பத்தியமைப்பு
வளர்ச்சி பெறவில்லை.அதேபோல் முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவத்தின் அழிவின் மேல்
கட்டப்பட்டதல்ல. முரண்பட்டிருந்தாலும் இரண்டும் அருகருகே இருக்கத்தான் செய்தன.
பூகோளத்தின் ஒரு துணுக்கில் உருவாளாலும் அது கிளைபரப்பி ஒட்டுமொத்த பூகோள உருண்டை
முழுவதும் வியாபிக்குத் தன்மையுள்ளது முதலாளித்தவம் என்று ஏங்கெல்ஸ் கூறியதை மறந்துவிடக்
கூடாது. வில்லும் அம்புகளுடன் உள்ள மிகப் பெரும் சேனைக்குள் தானியங்கி
துப்பாக்கியுடன் செல்லும் ஒரே ஒரு போர்வீரன் போன்றது முதலாளித்துவம்.
முதலாளித்துவ
வளர்ச்சிப் போக்கில் அதாவது மூலதன திரட்டல் போக்கில் உற்பத்தியமைப்பு முறையானது
நவீன ஆலைத்தொழிலை நோக்கி செல்வது என்பது தவிர்க்க முடியாதது. முதலாளித்துவ
வளரச்சியில் வளர்ச்சியடைந்த உலகில் பெரும்பகுதி நவீன ஆலைத்தொழில் வடிவத்தில்தான்
இப்பொழுது இருக்கிறது. ஒரு வளர்ச்சிப் போக்கின் விளைவாக அங்கே வந்தது என்றால், அதே வளர்ச்சிப் போக்கின் விளைவாக இங்கேயும் வரவேண்டும் என்ற அவசியம்
இல்லை. அந்த நவீன ஆலைத்தொழில் உற்பத்தி செய்த உபரியின் வாயிலாகவே இந்தியாவிற்குள் முதலாளித்துவம்
வர ஆரம்பித்தது. முதலாளித்துவம் இந்தியாவிற்குள் இப்படி பரவ ஆரம்பித்தது ஒரு சீராக
இல்லை. இருக்கவும் முடியாது. இதுபொதுவான விதிதான். வடகிழக்கு பருவக்காற்று என்பது
மழை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும், ஒரு
குறிப்பிட்ட இடத்தில் மழைபொழிவது அதற்கான பிரத்யேகக் காரணங்கள் உண்டு. மூன்று
மாதம் ஈரப்பதம் உள்ள காற்றுவீசி மேகங்களைத் திரட்டினாலும் அது தமிழகப் பரப்பு
முழுவதும் சமச்சீராக இருக்க முடியாது. முதலாளித்துவமும் அப்படி இருக்கமுடியாது.
அது திட்டமிட்டு சமச்சீராக இருக்கவில்லை என்று முதலாளித்துவத்தை குற்றம் சாட்ட
முடியாது. ஈரப்பதக் காற்று பரவுவதையும் மேகத்திரட்சி ஏற்படுவதையும் வெப்ப
இயங்கியல் விதிகள் தீர்மானிப்பது போல் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கை
முதலாளித்துவ இயக்க விதிகள்தான் தீர்மானிக்கின்றன.
தமிழக
நிலப்பரப்பில் சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில் நிலப்பிரபுத்துவமும் ஆரம்பகட்ட
முதலாளித்துவமும் அருகருகே இருந்தது. இரண்டுக்கும் முரண்பட்ட பண்பாடுகளின் மோதலும்
நடைபெற்றது. தொழிலாளி வர்க்கத்தினர் தங்களின் வர்க்க எதிரியாக பிரிட்டிஷ் ஆட்சியை
அடையாளம் கண்டபொழுது இதர வர்க்கங்கள் அப்படி அடையாளம் காணவேண்டிய அவசியம் இல்லை. சமத்துவம்
பேசிய முதலாளித்துவத்தின் பின்னால் இதர வர்க்கங்கள் அணிதிரள்வதில் ஆச்சரியமொன்றும்
இல்லை. இதுவே இங்கே நீதிக்கட்சியானது அரசியலில் மையத்திற்கு வருவதற்கு வழிகோலியது.
தொழில்
வளர்ச்சியடைய அடைய தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கையும் பெருக ஆரம்பித்தது. இந்த
வர்க்கமானது பண்ணையடிமைகளிலிருநது தோன்றிய வர்க்கமாகும் ஆகவே பண்ணையடிமைகளில்
புதிய பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தியது. சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக்
கொண்டிருக்கையில் முதலாளித்துவம் முன்னகர்த்திய சமத்துவத்திற்கான போராட்டம் வேரூன்ற
ஆரம்பித்தது. தொழிலாளி வர்க்கத்தின் கணிசமானபேர் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான
அரசியல் போராட்டமாக சுதந்திரப் போராட்டத்தைப் பார்த்து அதனுடன் இணைகையில் மக்கள்
திரளில் கணிசமான பிரிவினர் சமத்துவத்திற்கான போராட்டத்தை மட்டும பிரதானப்படுத்திய நீதிக்கட்சி
அரசியல் பின்னால் சென்றனர்.
நீதிக்கட்சி
சமத்துவம் பேசினாலும் அது முதலாளித்துவ பண்பாட்டு அம்சங்களை முன்னெடுத்துச்
செல்வதாகக் தென்பட்டாலும் அதன் தலைமை என்பது நிலப்பிரபுத்துவத் தலைமையாகும்.
நிலப்பிரபுத்துவப்
பண்பாட்டிற்கு எதிரான விஷயத்திற்கு நிலப்பிரபுத்துவத் தலைமையா? கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. வரலாற்றில் இதுபோன்ற ஆச்சரியங்கள்
நிறையவே நடைபெற்றுள்ளன. ஒரு சமுகத்தில் இருக்கும் வெவ்வேறு வர்க்கங்கள்
ஒன்றுக்குள் ஒன்று முட்டிமோதிக் கொண்டு முரண்பாடுகளை தீர்க்க முயலும் போது அந்தந்த
வர்க்கங்கள் அந்தந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பண்பாட்டிலிருந்து
விலகும் நிலைமையும் ஏற்படும். அப்படி விலகினாலும் அதுநிரந்தரமாக இருக்க முடியாது.
அதுவே ஒரு முரண்பாடாக வளரும். இங்கிலாந்தில தொழிற்சாலைச் சட்டத்தை வலுக்கட்டாயமாக
கொண்டுவந்தபின் சிறுமுதலாளிகளின் பட்டறைகளில் தொழிலாளிகள் கடுமையாக சுரண்டப்படுவதை
எதிர்ப்பதாகவும் அங்கும் தொழிற்சாலை சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்று தொழிலாளி
வர்க்க நலனுக்காக “கண்ணீர் வடித்த“ பெருமுதலாளிகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆகவே நீதிக்கட்சியின்
உள்முரண்பாடு இதுவே. இந்த முரண்பாடு முற்றியதன் விளைவே அது திராவிடர் கழகம் என்ற
பெயர் மாற்றலுக்குள்ளாயிற்று இது வெறும் பெயர் மாற்றல் மட்டுமல்ல அதாவது
உருவமாற்றமல்ல அதன் உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டது. ஆம் நீதிகட்சிக்குள்ளேயே
நடந்த அமைதிப் புரட்சியின் வாயிலாக நிலப்பிரபுத்துவ தலைமை செல்வாக்கிழந்தது. சாதிய
எதிர்ப்புப் போர் முழக்கம் சமத்துவத்திற்கான போராட்டம் என்று வீறு கொண்டு
இயங்கிவந்த திராவிடர் கழகத்தின் தலைமையானது கண்டிப்பாக நிலப்பிரபுத்துவத் தலைமையாக
இருக்க முடியாது.
அப்படியென்றால்
அதன் தலைமை எந்த வர்க்கத்தின் கைக்குச் சென்றது என்ற கேள்வி எழுகிறது. அதற்குமுன், இந்த மாற்றம் நடைபெற்ற காலகட்டத்தில் தமிழகப் பரப்பில
முதலாளித்துவத்தின் வளர்ச்சி எந்த கட்டத்தை எட்டியிருந்தது என்று பார்க்க
வேண்டும். இந்தக் கட்டத்தில் தமிழகப்பரப்பில் நடைபெற்றுவந்த சமூக உற்பத்தியில்
முதலாளித்துவ உற்பத்திமுறையின் பங்கு கணிசமாக கூடியிருக்கும் என்று மட்டும்
கூறமுடியும். அதாவது தமிழகப் பரப்பு பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தின்
செல்வாக்கு வேகமாக வளர்ந்து வந்ததாக கூறலாம். இன்னொருபுறம் முதலாளித்துவ
உற்பத்திமுறை என்றதுமே பொதுவாக மூலதனத்தின் சுற்றோட்டம் அதிகரித்து அதுபெருத்து
வருகிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால் மூலதனச் சுற்றோட்டம் என்று பொதுவாக
பேசினாதும் அது தனிப்பட்ட மூலதனங்களின் சுற்றோட்டமே ஆகும். அந்த தனிப்பட்ட
மூலதனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மத்தியில் மூலதனச் சுற்றோட்டம் வளர்ச்சி
பெறும். அந்த முரண்பாடுகள் போட்டியின் வாயிலாக வெளிப்படும். அப்போட்டிகள்
சமூக-அரசியல்தளத்திலும் வெளிப்படும். ஏற்றத்தாழ்வான
முதலாளித்துவ வளர்ச்சியில் பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகள் முக்கியமானது. அதுவும்
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பூகோளப்பகுதியில் இம்மாதிரியான ஏற்றத்தாழவுகள்
ஆச்சரியமானதல்ல. ஆகவே முதலாளித்துவ முரண்பாடுகளில் பிரதேச முதலாளிகளுக்கிடையிலான
முரண்பாடுகள் முக்கியமானவை. நீதிக்கட்சியின் தலைமையில் நிலப்பிரத்துவ செல்வாக்கு மங்கியவுடன்
அந்த இடத்தை பிரதேச முதலாளிகளின் நலன் ஆக்கிரமித்தது.
நிலப்பிரத்துவ
அமைப்பு உருவாக்கிய ஒரு ஆழமான பண்பாட்டுச் சூழலில் குறிப்பாக பிராமணியப்
பண்பாட்டுச் சூழலை உடைப்பதை அடிநோக்கமாக கொண்டதே திராவிடர் கழகம். இதேபோன்று
இந்தியாவின் பிற இடங்களில் ஏன் நடைபெறவில்லை?
மிகவும்
பின்தங்கிய முதலாளித்துவ வளர்ச்சியும் நிலப்பிரபுத்துவத்தின் கைஓங்கிய நிலையும்
இருக்கும் இடங்களில் இதுபோன்ற இயக்கங்களை எதிர்பார்க்க முடியாது. முதலாளித்துவ
வளர்ச்சி ஓங்கியும் நிலப்பிரத்துவமானது முதலாளித்துவத்தின் கட்டுக்குள் வந்த
இடங்களிலும் இதுபோன்ற இயக்கங்களை எதிர்பார்க்க முடியாது. உதாரணத்திற்கு நாட்டின்
வடமேற்கு பகுதியானது இப்படிப்பட்ட இடமாகும். அங்கே அசுரவேக மூலதனத் திரட்டல்
நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் நிலப்பிரபுத்துவப் பண்பாடும் ஆழமாக வேரூன்றியிருந்தது.
அங்கே தொழில் முனைவுக்கு இடைஞ்சலில்லாத நிலப்பிரத்துவப் பண்பாடுகள் எல்லாம்
சிரமமின்றி நீடித்தன. அதே நேரத்தில் தொழில் முனைவுக்கு எதிராக இருக்கும்
நிலப்பிரத்துவப் பண்பாடுகள் மறையத் துவங்கின. மொத்தத்தில் சமூக சீர்திருத்த
இயக்கத்திற்கான தேவை மட்டுப்பட்டது.
முதலாளித்துவ
வளர்ச்சியில் ஒப்பீட்டளவில் நடுவாந்தரமாகவும் நிலப்பிரத்துவ ஆதிக்கமும்
ஒப்பீட்டளவில் நடுவாந்தரமாகவும் இருக்கும் இடங்களில் வளர்ந்துவரும் பிரதேச சமூக
மூலதனமானது ஒட்டுமொத்த இந்திய மூலதனத்தில் தனது வளர்ச்சியை துரிதப்படுத்தும்
கோரிக்கை வைக்கவே செய்யும்.
அது மற்ற
பகுதி மூலதனம் இங்கே வந்து செயல்படுவதை எதிர்த்து கோஷமிட்டு அதன் மூலம் பேரம் பேசி
சமரசம் செய்து கொள்ளும். அப்படிப்பட்ட எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல
பயன்படும் கோஷமே பிராந்திய நலன். இப்படிச் சொல்வதால் இந்திய நாட்டிற்குள்
இருக்கும் தேசிய இனங்களின் அபிலாஷைகளைப் பற்றியோ, இதர பிற
அம்சங்களை புறக்கணிப்பதாகவோ எடுத்துக் கொள்ள கூடாது. இவைகள் எல்லாம் மிகவும்
சாமர்த்தியமாக பிரதேச முதலாளிகளின் நலன் என்பதற்குள் உள் வாங்கப்படும் நடைமுறை
உத்தியை கண்டுபிடித்து கையாளும்பொழுதுதான் அது வெற்றிபெறும். இந்த விஷயத்தைச்
மிகச்சரியாக செய்தது பிரதேச மூலதனம். ஆம் தேசிய இன அபிலாஷையைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தேசிய இன
அடையாளத்துடன் உருவெடுத்த தொழிலாளி வர்க்கத்தை தன்பின்னால் இருத்திக் கொள்ள
முடிந்தது. முற்போக்கு கோஷங்களை முன்வைத்தன் மூலம் தொழிலாளி வர்க்கமாக மாறவேண்டிய
மக்கள் திரளை தன் பின்னால் இருத்திக் கொள்ள முடிந்தது. இதன் மூலம் பெற்ற பலத்தை
வைத்து இந்தியப்பகுதியின் இதர மூலதனத்துடன் பேரம் பேச முடிந்தது. இதன் அரசியல் வெளிப்பாடாகவே
திராவிடர் கழகம் தனது சமூக சீர்திருத்த ஒப்பனையிலிருந்து பிரதேச நலன் பேசும்
ஒப்பனையைச் செய்து கொண்ட அரசியல் இயக்கமுமாகவும் பிரிந்து நின்றது. இந்த இரண்டில்
பின்னது வேகமாக முன்னேற முன்னது சுருங்கிய தளத்துடன் நடைபோட்டு வந்தது.
இரண்டாம்
உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் முதல் இருபத்தைந்து ஆண்டுகள்
முதலாளித்துவத்தின் ஏற்றகாலம் (Boom Period) என்று மதிப்பிடப்படுகிறது.
அதாவது சுணங்காமல் முதலாளித்துவம் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த காலம் என்று
வரையறுக்கப்படுகிறது. இது இந்தியாவிற்கும் பொருந்தும் தமிழகத்திற்கும் பொருந்தும்.
ஏற்றமிகு
காலங்களில் முதலாளித்துவ உள்முரண்பாடுகள் மட்டுப்பட ஆரம்பிக்கும். இது
ஒருபுறமிருக்க,
இந்தியாவில் மூலதனத் திரட்டல் என்பது வலுவான அரசு தலையீட்டின்
பேரில் நடைபெற்றுவந்த காலமுமாகும் இது. ஆகவே பிரதேச முதலாளிகள் தங்கள் பங்கை
வலுவாக கோரிவந்த காலமும் இது. சுதந்திரம் அடைந்து பெருமுதலாளிகள் கைகளில் இந்திய
அரசு அமைப்பு வீழ்ந்த பிறகு பிரதேச முதலாளிகளின் அபிலாஷைகளை
பிரதிநிதித்துவப்படுத்திய ஒருஅமைப்பு வெறும் சமுக அமைப்பாக மட்டும் இருக்க
முடியாது. அது அரசியல் அதிகாரத்தில் பங்கைகோரும் நிலையை உண்டாக்கும். இதுவே
திராவிடர் கழகமானது திராவிட முன்னேற்றக் கழகமாக பரிணமித்ததின் இன்றியமையாத நிலை.
அது பெரியாரின் திருமணம் என்ற தற்செயல் வாயிலாக வெளிப்பட்டிருக்கலாம். ஆக, பிரதேச முதலாளித்துவத்தின் செய்கையால அரசியல் தளத்தில் வெளிப்பட்ட
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தோற்றமானது ஏற்றகாலத்திற்குள் அடியெடுத்து வைத்த
இந்திய முதலாளித்துவத்தின் வயிற்றில் கட்டிய பிள்ளைப் பூச்சியாய் அமைந்தது.
ஏற்றகாலம்
முழுவதும் இந்தியப் பெருமூலதனம் பீடுநடைபோட்டு முன்னேற அதன் ஒரு பகுதியான பிரதேச
மூலதனம் அதனுடன் மல்லுக்கட்டிக் கொண்டே வளர்ந்தது. இதற்கு தோதான முதலாளி வர்க்க
அரசியலே திராவிட முன்னேற்றக் கழகம். அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த இந்திய
பெருமூலதனத்தை காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தினால் பிரதேச அளவில் உள்ளுர்
மூலதனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிட முன்னேற்றக் கழகம்.
இவைகளுக்கிடையிலான முரண்பாட்டின் உச்சகட்டமே தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சிமாற்றம்.
பெருமுதலாளித்துவம்
பீடுநடைபோட்டு முன்னேறுகிறது என்று சொல்லும் பொழுது மூலதனத் திரட்டல்
தங்குதடையின்றி பாய்ச்சல் வேகத்தில் நடைபெறுகிறது என்று அர்த்தம். இதற்குள்ளே
சென்று பார்த்தால் தொழிலாளி வர்க்கத்தின் உபரி உழைப்யைக் கைக்கொள்ளும் மூலதனத்தின்
உக்கிரம் அதிகரித்திருக்கிறது என்பதும் அதன் விளைவாக தொழிலாளி வர்க்கம்
சிரமத்திற்குள்ளாகிறது என்பது ஒரு புறமும் இதர முதலாளித்துவமல்லாத உற்பத்தி
முறைகள் நசுக்கப்படுகிறது என்பதும் அதைச் சார்ந்து வாழும் மக்கள் பிரிவினரிடம் அது
ஏற்படுத்தும் துயரமும் அதிகரித்திருக்கிறது என்பது மறுபுறமும் நடந்து வந்தது
என்பது தெரியவரும். இது வெகுமக்கள் திரளிடம் கோபமாக வடிவெடுப்பதும் அது நேரடியாக
அரசியல் மாற்றத்திற்கு அடிக்கோலுவதும் நடைபெறும். சுதந்திரத்திற்குப் பின்பு ஏற்பட்ட
இருபதாண்டுகால முதலாளித்துவ வளர்ச்சியானது அரசியல் மட்டத்தில் ஒரு மாற்றத்திற்கான
இன்றியமையாத தன்மையைத் தோற்றுவித்தது. இந்த இன்றியமையாத்தன்மையை ஆங்காங்கே
செயல்பட்டுக் கொண்டிருந்த அரசியல் இயக்கங்கள் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை
கையிலெடுக்க முயற்சித்து வந்தது. இந்த அரசியல் மாற்றத்தின் இன்றியமையாத்தன்மை
என்பது முதலாளித்துவச் சட்டகத்துக்குள் நடைபெற வேண்டிய மாற்றம் என்பதை புரிந்து
கொள்ள வேண்டும் ஏனென்றால் அதன் முரண்பாட்டின் அளவு நிலை வளர்ச்சியானது பண்புநிலை
வளர்ச்சி என்ற கட்டத்திற்கு வரவில்லை ஆகவே அது முதலாளித்துவ அரசியலை மறுதலிக்கும் நிலைக்கும்
வரவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த அரசியல் மாற்றம் 1967ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பிரதிபலித்தது. ஒன்பது உள்ளூர் அரசாங்கங்கள்
மாற்றப்பட்டன. தமிழகத்திலும் இது நடைபெற்றது. திமுக ஆட்சியைப் பிடித்தது. ஒவ்வொரு
மாநிலங்களிலும் நடைபெற்ற மாற்றங்களை ஆய்வு செய்தால் அதற்கேயுரித்தான பிரத்யேக
சூழநிலையின் வாயிலாக அவை ஏற்பட்டிருக்கும்.
முதலாளித்துவ
நிறுவனங்கள் தோன்றுவதும் அது நிலைபெறுவதும் அது முன்னோக்கிச் செல்வதும் இயக்கவியல்
விதிகளின்படிதான் நடந்தேறுகிறது. முரண்பட்ட இருஅமசங்களை கையாளும் முதல்விதியில்
எதிரும்
புதிருமான இரண்டு
விஷயங்களில் ஒன்று வெகுமக்களுக்கோ தொழிலாளர் வர்க்கத்திற்கோ நல்லதைப் பேசினால்
மற்றொன்று அதற்கு நேர் எதிரானதாக இருக்கும். இவையிரண்டும் பிரிக்க முடியாதது.
தொழிலாளி வர்க்க நலன் என்ற அம்சத்தில நங்கூரமிட்டு அது தொழிலாளிவர்க்கத்திற்கு
கேடுவிளைவிக்கும் விஷயத்தை முன்னெடுத்துச் செல்கிறது. தொழிலாளி வர்க்கமும் அதற்கு
நலம் பயக்கும் விஷயத்தில் நங்கூரமிட்டு அதற்கு எதிரான விஷயத்தை அல்லது முதலாளித்துவத்திற்கு
எதிரான விஷயத்தை முன்னெடுத்துச் செல்லும். இந்த தள்ளுமுள்ளு எப்பொழுதுமே
அடிநீரோட்டமாக நடந்து வருகிறது. என்று எனது
முந்தைய பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
மார்க்ஸ்-ஏங்கெல்ஸால்
1848ம்ஆண்டு வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையானது “கம்யூனிஸ்ட்களுக்கு ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்க நலன்களைத் தவிர வேறு
தனிப்பட்ட நலன்கள் கிடையாது“ என்று தெள்ளத் தெளிவாக
கூறுகிறது. அதே அறிக்கையில் “கம்யூனிஸ்ட்கள் தங்கள்
கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாக கருதுகின்றனர். இன்றுள்ள
சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்க்ளை
அடைய முடியும் என்று அறிவிக்கின்றனர்“ என்றும்
கூறப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்டத்தின் உத்தியானது
அங்குள்ள முதலாளித்துவத்தின் வளர்ச்சி கட்டத்தைப் பொருத்து இருக்கிறது. தொழிலாளி
வர்க்கத்தின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் என்று வெளிப்படையாக
அறிவித்துக் கொண்டு களத்தில் இயங்கிய அரசியல் இயக்கமான கம்யூனிஸ்ட் இயக்கத்தை
தொழிலாளி வர்க்கமானது அதனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு முழுவதுமாக பயன்படுத்தும்
உத்தியைக் கடைப்பிடிக்கவில்லை. எதிரிவர்க்கத்தின் அரசியல் இயக்கத்திற்குள்ளேயே
தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தன்னுடைய நலனை முன்னெடுத்துச் செல்லும் உத்தியே
இக்காலகட்டத்திற்கு பொருத்தமானது என்று தொழிலாளி வர்க்கம் நம்பியது. சமூகத்திரளில்
பெரும்பான்மையாக வளராத ஒரு வர்க்கமானது இப்படி ஒரு உத்தியை தெரிவு செய்வதில்
ஆச்சரியமொன்றும் இல்லை. இதை நாம் இன்றும் கூட வெளிப்படையாகக் காணலாம்.
கம்யூனிஸ்ட்கள் மீது நல்ல மரியாதை இருக்கிறது. ஆனால் நெருங்கி பேசினால் உங்களால்
காரியத்தை சாதிக்க முடியாது ஆகவே அவர்கள் இருக்கட்டும் என்பார்கள். அதே நேரத்தில் தொழிற்சங்கம்
என்று வந்துவிட்டால் அங்கே கம்யூனிஸ்ட்களே அவர்களுக்கு சிறந்த தெரிவு. இந்த
நிலைப்பாட்டை நாணயமற்ற நிலைப்பாடு என்றோ சந்தர்ப்பவாத நிலைப்பாடு என்றோ கூற
முடியாது. உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தில் ஒரு
குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் அதற்கு பொருத்தமான உத்தி என்றே நாம் புரிந்து
கொள்ள வேண்டும். ஒரு பின்தங்கிய நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சி காலத்தில்
நடைபெற்று வந்த வர்க்கப் போராட்டத்தை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.
அளவு நிலை மாறமால் பண்புநிலை மாறாது. பண்புநிலை மாற்றத்திற்கு ஆசைப்படுபவர்கள்
அளவுநிலை மாற்றத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும். இதை லெனின் கூறிய தொழிலாளி வர்க்க
மேட்டிமைத்தனம் (Laour Aristocracy) என்றும் கூறமுடியாது.
காரணம் தொழிலாளி வர்க்க மேட்டிமைத்தனம் என்ற வியாதியானது தொழிலாளி வர்க்கத்தில்
மேலாடை போல் உள்ள மிகுந்த சௌகரியங்களுடன் இருக்கும் தொழிலாளி வர்க்கப்
பிரிவினருக்கு மட்டும் தொற்றும். தமிழகத்தில் திராவிட
இயக்கத்தின் பின்னால் நிற்கும் தொழிலாளி வர்க்கப் பிரிவினர் மேட்டிமைப் பிரிவினர்
அல்ல. தமிழகத்தின் தொழிலாளி வர்க்கமானது திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பின்னால்
அணிதிரண்டதன் பின்னணியை இந்த அம்சத்தை வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உற்பத்தியமைப்பு
அடிக்கட்டுமானமாக இருக்கையில் அரசியல் அமைப்பு மற்ற விஷயங்கள் மேல் கட்டுமானம்
என்கிறது மார்க்சியம். இந்த இரண்டுக்குமான உறவு என்பது இயக்கவியல் உறவு. அதாவது
உற்பத்தியமைப்பு முறையே ஆட்சியமைப்பை தீர்மானிக்கிறது ஆனால் ஆட்சியமைப்புமுறை
உற்பத்தியைமைப்பில் செல்வாக்கு செலுத்துகிறது. முன்னது பின்னதை தீர்மானிக்கிறது.
பின்னதோ முன்னதன் மேல் செல்வாக்கு மட்டும் செலுத்துகிறது. அதாவது அதன்
முரண்பாடுகளால் அதற்குள் ஏற்படும் மாற்றங்களில் செல்வாக்கு செலுத்துகிறது. ஆகவே
மேல்கட்டுமானம் என்பது அடிக்கட்டுமானத்திற்கு கட்டுப்பட்டு அதன் சொல்படி அப்படியே இயங்குகிறது
என்று எடுத்துக் கொள்ள முடியாது. இதர முரண்பாடுகள் செலுத்தும் செல்வாக்கின்
அடிப்படையில் மேல்கட்டுமானத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் இறுதியாக அதனை
தீர்மானிப்பது அடிக்கட்டுமானமே. இன்னொருபுறம் அடிக்கட்டுமானமானது மேல்
கட்டுமானத்தின் தாக்கமில்லாமல் சுயேட்சையானது என்று யாந்த்ரீகமாக புரிந்து கொள்ளக்
கூடாது. அடிக்கட்டுமானத்திற்குள் உள்ள உள்முரண்பாடுகளின் மோதலுக்குள்
மேல்கட்டுமானம் செல்வாக்கு செலுத்தும். ஆகவேதான் அரசியல் மாற்றங்களை பொதுவாக
வர்க்கப் பேராட்டத்தின் அடிப்படையில் விளக்க முடிந்தாலும் குறிப்பிட்ட கட்டத்தில்
ஏற்பட்ட குறிப்பிட்ட மாற்றத்தை விளக்குவதற்கு மேல்கட்டுமானத்தில் ஏற்படும்
மாற்றங்களை கணக்கிலெடுக்காமல் விளக்க முடியாது.
தமிழகத்தில்
சமூக உற்பத்தியமைப்புமுறையில் ஏற்பட்ட மாற்றங்களானவை, முதலாளித்துவப் போட்டியில் உள்ளூர் முதலாளிகளின் அபிலாஷைகளை
முன்னெடுத்துச் செல்லும் பாதையில் பயணித்தன் விளைவாகவே அதற்கு தோதாக திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான உள்ளூர் அரசு அமைந்தது. திராவிட முன்னேற்றக்
கழகமானது அடிப்படையில் உள்ளூர் முதலாளிகளின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தினாலும்
மேல்மட்டத்தில் அது தமிழ் தேசிய இனத்தின் பிரதிநிதியாகவும் பிற்படுத்தப்பட்டோரின்
நலனை முன்னெடுத்துச் செல்வதாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஆகவே அதன்
தலைமையில் அமையும் அரசானது வெறும் உள்ளூர் முதலாளிகளின் அபிலாஷைகளை முன்னெடுத்துச்
செல்வது மட்டும் அதன் பணியாக இருந்துவிட முடியாது. அதன் அடிப்படைய அடையாளமாகிய
தேசிய இனத்தின் சுயாட்சி உரிமையையும பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காகவும் செயல்பட வேண்டும்.
இதில் பிற்படுத்தப்பட்டோரின் நலன் என்பது முதலாளித்துவத்தின் நலனுக்கு எதிரானது கிடையாது.
இது முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கையான அனைவரையும் சமமாக சுரண்டும்
உரிமைக்கு எதிரானது கிடையாது. ஆகவே மேல்கட்டுமான திமுக அரசுக்கும்
அடிக்கட்டுமானமான முதலாளித்துவ உற்பத்திமுறைக்கும் இந்த அம்சத்தில் மோதல்
கிடையாது.
தேசிய இன
சுயாட்சி என்பது பிரதேச முதலாளிகளுக்கு மற்ற முதலாளிகளுடன் பேரம் பேசும் கோஷமாக
மட்டுமே இருக்க முடியும். பேரம் படிந்து சமசரம் ஏற்பட்டுவிட்டால் இக்கோஷத்தை
மேலும் வலுவாக்கி மோதலுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிரதேச
முதலாளிகளுக்கும் இதர பகுதியில் தங்கள் சுரண்டலை கொண்டு செல்லும் உரிமையும்
வாய்ப்பும் ஏற்பட்டால் எதற்காக தேசிய இன அடையாளத்தைப் பற்றி பேச வேண்டும்.
இந்த ஒரு அம்சத்தில் அடிக்கட்டுமானத்திற்கும் மேல்கட்டுமானத்திற்கும் ஒரு லேசான
முரண்பாடு இருந்து வந்தது. அதே நேரத்தில் பேரம் படிந்தாலும் பிரதேச முதலாளி வர்க்கமானது
தேசிய இன அடையாள அரசியலை முற்றிலும் கைவிட்டுவிடவும் முடியாது. காரணம் அதனுடைய பேரத்தின் விளைவாக ஏற்பட்ட சமரசத்திற்கான அடிப்படையிலிருந்து
விலகுவதாக அது காட்டிக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு போக வேண்டியதிருக்கும்.
எனவே அது திமுகவை அருகில் வைத்துக் கொள்ளவும் முடியாது முற்றிலுமாக
தூக்கியெறியவும் முடியாது. எதிரும் புதிருமான இந்த இரண்டு நிலைகள் செயல்படும்
முரண்பாட்டுக்குள் பிரதேச முதலாளித்துவம் சிக்கிக் கொண்டது. அதற்கு தற்காலிகத்
தீர்வே உள்ளூர் தேசிய இனஅடையாளத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே அகில இந்திய
தேசியத்துடன் இணக்கமாகும் ஏற்பாடு தேவைப்பட்டது. இந்த முரண்பாடு உருவாக்கிய
இன்றியமையாத சூழலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிளவுக்கு வித்திட்டது. அது
எம்ஜிஆர் என்ற மனிதர் வாயிலாகவும் அவர் தலைமைக் கழகத்திடம் கணக்கு வழக்குகளை
கேட்பது என்ற தற்செயல் நிகழ்வுகள் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. எம்ஜிஆர்
என்பதை தற்செயல் என்று கூறுவதை எளிமையான விஷயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது
இதற்குள் உள்ள மற்ற இன்றியமையதாத தன்மையை பின்னர் விவாதிக்கலாம்.
இந்த
நிகழ்வு நடக்கும் நேரமானது உலக முதலாளித்துவத்தின் ஏற்றகாலத்தின் முடிவையும்
அதனைத் தொடர்ந்து ஏற்படும் முதலாளித்துவ சுணக்கத்தின் துவக்கத்திலும் ஏற்பட்டது
தற்செயலான நிகழ்வு அல்ல. பிரதேச முதலாளித்துவமும் காலூன்றி கோவை உள்ளிட்ட
நகரங்களில் தொழில் நடத்திய உள்ளூர் முதலாளிகளுக்கு அகில இந்திய சந்தை
கிடைப்பதையும் அகில இந்திய பெருமுதலாளிகளின் மன்றத்திற்குள் உள்ளூர் முதலாளிகள்
நுழைவதுமான வளர்ச்சிப் போக்கு முற்றிய நிலையில் இப்பிளவு நடைபெற்றது என்பதையும்
நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment