பெண்களுக்கான பிரத்யேகமான பிரச்சனைகளே இன்றைய பெண்
கவிஞர்களின் முக்கிய பாடுபொருட்களாக உள்ளன. நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த
பெண்கள் விழிப்புணர்வு பெற்றுத்
தங்களுக்கான மொழியைக் கட்டமைத்து வருகின்றனர். மொழி வழியே கவிதையினுள்
செயல்படுகையில் தங்களின் எல்லை விரிவடைவதாக உணர்கிறார்கள். தங்கள் வலிகளை, வேதனைகளை, அறைகூவல்களை, ஏக்கங்களை பதிவு செய்யும் ஊடகமாகக் கவிதையைக்
கையாள்கின்றனர்.
நவீன தமிழ்க் கவிதை வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு
பதிவாகியிருப்பது 60 களுக்குப் பின்னர்தான் என்றாலும் , சமகாலப் பிரச்சனைகளைப் பெண் உணர்வுடன் அணுகவும்
வெளிப்படுத்தவும் இதன் வழி ஒரு பெரும் வாய்ப்பு கொடைக்கப் பெற்றுள்ளது. கலாச்சார மனதைப் பெரும் அதிர்வுகளுடன்
ஆக்கிரமித்து புதிய விளைவுகளை ஏற்படுத்தி
வருகின்றது பெண் கவிதைகள்.
பெண்கள் தங்கள் உணர்வுகளை படைப்பாக வெளிப்படுத்தும்
உரிமையும் பல இடங்களில் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றது. எழுதுதல் தவறானதாகச்
சுற்றியுள்ளவர்களால் கற்பிக்கப்படுகின்றது ,அதிலும் உடல் சாந்த விஷயங்களை எழுதும்போது அவர்கள் இழிவான பார்வைக்கு
ஆளாகின்றார்கள். இத்தகைய பல தடைகளைக் கடந்துதான் பெண் படைப்புக்களை வெளிப்படுத்த
நேர்கின்றது.
பெண் தன்னைச் சார்ந்த விஷயங்களை வெளிப்படுத்துவது அவசியம்.
இதை ஹெலன் சிஸ்சூர் என்ற பெண்ணியச்
சிந்தனையாளர் பின்வருமாறு கூறுகின்றார்:‘உன்னையே நீ எழுது. உன் உடம்பின்
குரல்களுக்கு செவிசாய். அப்பொழுதுதான் வகுத்துரைக்க முடியாத உனது நனவிலி
மனத்திலுள்ள மூலவளங்கள் எல்லாம் பொங்கிப் புறப்பட்டு வரும். தன்னைத்;தானே தணிக்கை செய்வதிலிருந்து கட்டாயமாக விடுதலை பெற
வேண்டும்’
.
மேலை நாட்டில்
ஏற்பட்ட இத்தாக்கம் நம் இலக்கியப் பரப்பிலும் கால்கொண்டது. இதன் விளைவாக 90 களுக்குப் பிறகு பெண்கள் சிலர் இத்துறையில் தடம் பதிக்கத் தொடங்கினர்.
ஆர்.மீனாட்சி,
தேவமகள், திரிசடை, ரோகினி ஆகியோர் இதற்கு முன்னோடிகளாக விளங்கினர். இவர்களின்
தொடர்ச்சியாய் மாலதி மைத்திரி, சுகந்தி
சுப்ரமணியம்,
குட்டிரேவதி, சல்மா,
சுகிர்தராணி, லீனா மணிமேகலை,
உமா மகேஸ்வரி, கனிமொழி,
இளம்பிறை போன்ற பலரைக் குறிப்பிட்டுக் கூறலாம்.ஈழத்துப்
பெண் கவிஞர்கள் ஊர்வசி,
ஒளவை, அனார் றஞ்சினி, மைத்திரேயி, மைதிலி,
சிவரமணி, சுல்பிகா, சாரங்கா, மாதுமை, மதனி போன்ற இன்னும் பல
கவிஞர்களையும் குறிப்பிட்டுக் கூறலாம்.
இத்தகைய கவிஞர்களின் பின்னணியில்; சுகிர்தராணியின் ‘இப்படிக்கு ஏவாள்’
என்ற கவிதைத் தொகுப்பை ஒருவித உரத்த குரலையும் , பெண் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பாக என்னால் அவதானிக்
முடிகின்றது. 70 பக்கங்கள் அடங்கிய இத்தொகுப்பில் 58 கவிதைகள் அடங்கியுள்ளன.
தீண்டப்படாத முத்தம், காமத்திப்பூ, அவளை மொழிபெயர்த்தல், இரவு மிருகம்,
போன்ற நான்கு கவிதைத்தொகுப்புகளை இவர் ஏலவே
வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் அவருடைய ஐந்தாவது கவிதைத்தொகுப்பாகும்.அத்துடன்
ஊடறு வெளியிட்ட மை என்ற கவிதைத் தொகுப்பிலும்; ‘இயற்கையின் பேரூற்று’
என்ற சுகிர்தராணியின் பெண்ணியக் கவிதையைப் படிக்க முடிந்தது.
சுகிர்தராணி கவிதை எழுதுவதில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிக்
கூறுவது பற்றி இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பெண் என்பது ஒருவகைப் பின்னடைவு என்றால் தலித்பெண் என்பது இரட்டைச்சுமை. எழுதுவது என்பது
குடும்பப் பெண்ணுக்கான இலக்கணம் இல்லை என்று எனக்குத் தொடர்ந்து
வலியுறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் எழுதாமல் இருந்துவிடலாமா என்றுகூடத்
தோன்றியது. ஆனால் அதை எதிர்கொண்டு உடைத்ததினால்தான் என் எழுத்து உயிர்ப்புடன்
இருக்கிறது”என்கிறார் சுகிர்தராணி.
பெண்வெளி, உடல் அரசியல், பெண்ணியம், தலித்தியம்
என்று பலவற்றையும் வலிமையான வார்த்தைகளின் வழி பதிவு செய்திருக்கிறார் இவர். உடல்
அரசியல் என்பது உடல்உறவு குறித்தது என்ற தவறான பார்வைதான் பலருக்கும் இருக்கிறது
என்றும் அவர் குறிப்பிடுகிறார்.இன்றைய சூழலில் பெண்ணுக்கு கல்வி தன்னம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளது. சுயமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். அடிமைத்தனவேர்களை களைய
முற்பட்டுள்ளனர். தனது பலம் உணரத் தொடங்கிவிட்டனர். விழிப்புணர்வு பெற்ற பெண்ணின்
குரலாய் சுகிர்தராணியின் கவிதைகளை என்னால் பார்க்க முடிகிறது.
பெண்ணியம் என்ற
வார்த்தையானது மிகவும் அண்மைக் காலத்தில் இருந்துதான் தோன்றி வளர்ந்து வருகின்றது.
பெண்ணியத்தை வரம்புமீறிய சுதந்திரம் என்று வரையறுத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு
குறைவு. பெண் அவளுடைய சுயத்தையும், தனிமையையும்,
மரியாதையையும் மதித்து ஆணுக்குச் சமமாக முன்னேறிச்
செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும்.
பெண்ணின் வேதனையை எழுதும்போதும் ,பறவையின் வேதனையை
எழுதும்போதும் அதற்கிணக்கமான மொழி தானாகவே வரும். அதனைச் சுகிர்தராணியின்
கவிதைகளில் அதிகமாகவே பார்க்க முடிகிறது. ‘ஆன்மாவும் சரீரமும் வெவ்வேறானவை’
(37 கவிதையில் )
முட்டையிடாத பறவையின்
கொஞ்சலையொத்த ஆதி மொழி…
எனத் தொடர்கிறார். இங்குதான் அவரது பெண் சார்ந்த கலை எழுத்து ஆழம் பெறுகிறது. இந்த வகை
மொழி அவருக்கு நன்கு கைவரப்பெற்றுள்ளது.
தலித்துப் பெண்களை மிகவும் கொடுமைப்படுத்தும் பாங்கினை ‘கொலையும் செய்வாள் பறச்சி’ என்ற கவிதையில் அப்பட்டமாக கவிதையில் சொட்டுகிறார் சுகிர்தராணி. (31 ஆம் பக்கத்தில்) நீங்களே அந்த கவிமொழியை வாசித்தால் தான் அதன் சுமை புரியும்.
நூற்றாண்டுகளின் ஒற்றைக் கேள்வி என்ற கவிதையில்
தலைசாய்த்து நீரருந்தும்
சிறு பட்சியைப் போல
வீட்டின் முற்றத்தில்
அமர்ந்திருந்த அப்பாவிடம் கேட்கிறேன்
நீர்நாயின் நனையாத தோலென
மினுமினுக்கின்றன அவர் கண்கள்
உள்ளுக்குள் உடைப்பெடுத்தாலும்
காட்டிக்கொள்ளாமல் நிற்கின்றேன்
உடலின் குப்பியில் விஷத்தை இட்டாற்போல்
வலி பெருகுகிறது
உள்ளங்கையை முறமாக்கி
சலித்தெடுத்த மண்ணை
ருசிபார்த்த காலந்தொட்டே
கேட்டுக் கொண்டிருக்கிறேன்
பதில் சொல்வாரில்லை.
ஒட்டுப்போட்ட சக்கரமென
தும்பியைப் பிடித்துக் களித்த பருவத்திற்கு
உருண்டோடுகிறது அவர் மனம்
வலி பிசகாமல்
அவரும் அவரப்பாவிடம் கேட்டது
நினைவிலாடும் போலிருக்கிறது
அப்பாவும் அழுகிறார் நானும் அழுகிறேன்
இதயத்தின் ஒற்றைக் கப்பியில் கட்டப்பட்ட
கேள்வியின் ஊஞ்சல்
காலத்தின் இருபுறமும் சென்று வருகிறது
பதிலின்றி பதில் சொல்வார் எவருமின்றி
சற்று தொலைவில் சொப்பு வைத்து
தனியே விளையாடும் என் மகள்
உதட்டின் விளிம்புக்குள் துக்கத்தை மடித்து
அதே கேள்வியைக் கேட்கிறாள் என்னிடம்
சேரி ஊராகாதா அம்மா?
இப்படிக்கு ஏவாள், தலித் மக்களின் மீதான சமூக ஒடுக்குமுறையை
மிகவும் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்
சுகிர்தராணி. பாலியில் உணர்வினையும் வெளிப்படையாக எழுதுகின்ற துணிவு
சுகிர்தராணியிடம் அதிகமாகவே காணப்படுகின்றது.
ஈழத்துப் பெண் கவிதைகளின் தாக்கம் தமிழகத்து பெண்
கவிதை இலக்கிய எழுத்தில் மாற்றத்தை
ஏற்படுத்தியது என்ற பரவலான கருத்துண்டு.
உள்ளடக்கம்,
வெளிப்பாட்டு முறைகள், தமிழகப் பெண் கவிஞர்களிடம்
நேரிடையாகவும்,
மறைமுகமாகவும் பல்வேறு தளங்களில், பெண் படைப்பாளர்களின் சிந்தனைகளையும் படைப்புக்களையும்
பாதித்திருக்கின்றன.
சுகிர்தராணி இப்படிக்கு ஏவாள் என்ற இந்தத் தொகுப்பில், என் கண்மணியே இசைப்பிரியா என்ற கவிதையையும் –
என் கண்மணியே இசைப்பிரியா
ஓயாத கடலின் அலைகள்
இடைவிடாது என்னுடலில் மோதியபடி
மடிந்து சரிகின்ற வேளையில்
ஆழமாய் வேர்பரப்பி
விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல
என்னை இழுத்துச் செல்கின்றாய்
என் காலடியிலிருந்து
ஒழுகி வழியும் நீர்த்துளிகள்
உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய்
வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும்
வனத்தில் தனித்துத் திரியும்
மிருகத்தின் வெறிகொண்டு
என்னை வல்லுறவு செய்கின்றாய்
சதையை ஊடுருவிய உன்னால்
என் நிலத்தின் நிணநீர் ஓடும்
எலும்புகளை என்ன செய்ய முடியும்
மார்பகங்களை அரிந்த உனக்கு
அதன் அடியிலிருக்கும் நெருப்பின் சூடு
உறைக்கவில்லையா
வெகுகாலமில்லை வெகுதூரமுமில்லை
நீ ஏந்திய ஆயுதக் கருவியும்
பாய்ச்சிய உடற்குறியும்
இனி எழுச்சியின் அமிலத்தில்
கரைந்துபோகும்
என் இரத்தத்தில் பூத்திருக்கும்
செங்காந்தள் மலர்களே
என் நிலமெல்லாம் இனி செழித்திருக்கும்.
அடுத்து, வீட்டுப்பணிப்பெண்ணாகப்
பணியாற்றிய வேளை சௌதி அரேபியா அரசால் தலை துண்டிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த
ரிசானா நஃபீக் நினைவாக ‘இரக்கமற்ற பெருங்கருணையின் சட்டம்’ என்ற தலைப்பில் கவிதையை வடித்துள்ளார். இந்த இரு கவிதைகளும்
முக்கியமாக நோக்கப்படவேண்டிய கவிதைகளாகும் .
கசப்பு மருந்து குடித்த
குமட்டல்காரர்களைப்போல
அந்த மைதானம் முழுவதும்
நிரம்பியிருக்கிறீர்கள்…. என்று
தொடங்குகின்றார் சுகிர்தராணி ( 58 பக்கம்)
இத்தகைய சுகிர்தராணியின் கவிதைகள் எமது வாழ்வையும் உள்ளடக்கிச் செல்கிறது.
பெண்ணியச் சிந்தனை பற்றியும் நவீன கவிதைகள் பற்றியும் பேசும் எவராலும்
சுகிர்தராணியின் கவிதைகளைப் புறந்தள்ள முடியாது .
No comments:
Post a Comment