குறிஞ்சித்திணை என்பது மலையும் மலை சார்ந்த பூமியும் என்று
அனேகமாக எல்லா வாசகர்களுக்கும் தெரிந்திருக்கும். நவீன காலத்துக் கவிதைகளும்
கவிதைத் தொகுப்புகளும் திணை பற்றிய உணர்வு கொள்ளத் தொடங்கியது அண்மைக் காலத்தில்
என்றுதான் கூற வேண்டும். ஆனால் சங்க இலக்கியம் வெளியான காலத்திலிருந்து அது
படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்துக்கொண்டுதான் வந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
சங்க இலக்கியங்கள் வெளியான காலத்தில் அகத்திணை பற்றிய கருத்துகள் விவாதத்திற்கு
உரியனவாக இருந்தன. உதாரணமாக ‘களவு’ என்ற கருத்தமைவு. பெண் திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணைக்
காதலித்து அவனுடன் உறவும் கொண்டிருந்தாள் என்பதையும், தன் பெற்றோருக்குத் தெரியாமல் இதைச் செய்ததோடு அல்லாமல், காதலித்தவனுடன் ஓடிப்போகவும் செய்தாள் என்பதையும் சில
அறிஞர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைப் போலவே, ஔவையார் மது அருந்தினார் என்பதையும் பலரால் ஏற்க முடியவில்லை. இதையெல்லாம்
சங்க இலக்கியம் கூறியதே என்றும் கவலைப்பட்டவர்கள் உண்டு. சங்க இலக்கியம் ஒரு
பண்பாட்டுச் சுவடியாகப் பார்க்கப்பட்டதில் பிற்காலத்தவர்க்கு ஏற்பட்ட சிக்கல்.
சங்க இலக்கியத்து மனிதர்கள் பலர் குடித்ததோடு மாமிசமும் சாப்பிட்டார்கள் என்றறிய
கூடுதலான அதிர்ச்சி.
ஆனால் இன்று சங்க இலக்கியம் இப்படிப் பார்க்கப்படவில்லை
என்றே சொல்ல வேண்டும். சங்கப் புலவர்களைச் சான்றோர்கள் என்று அழைப்பதிலிருந்து
யாரும் வழுவிவிடவில்லை என்றாலும் சங்க இலக்கியம் என்றால் ஒரு வகை தொல் இலக்கியம்
என்றும் சங்க இலக்கியப் புலவர்கள் படைப்பாளிகள் என்றும் பார்க்கும் நிலை இன்று
உள்ளது. சங்க இலக்கியம் தமிழர்கள் பெருமைப்படத் தகுந்த கவிதைக் களஞ்சியம்
என்பதிலிருந்து அது நவீனக் கவிதைக்குப் பயன்படும் உருவகமாகவும்
மாறிவிட்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டு முழுவதும் தமிழர்களின் எல்லாப் பிரிவினரும்
இதற்குக் கண் விழித்துப் பாடுபட்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்தச்
சூழ்நிலையில்தான் தேன்மொழியின் “தினைப் புனம்” கவிதைகள் சாத்தியமாகி உள்ளன.
‘தினைப் புனம்’
கவிதைகளில் சங்க இலக்கியக் கவிதைகளைப் பிரதி செய்கிறார்
தேன்மொழி என்று சொல்ல முடியாது. எந்தக் கவிஞருக்கும் எந்தக் காலத்துக் கவிதையும்
பிரதிசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு சமுதாயம் உருவாக்கும் பிரதிகள் கால
தேசம் கடந்து ஒன்றை ஒன்று ஒத்து சாயல் பெற்றிருப்பது சாத்தியம்தான்.
இந்திரஜித்தின் குரல் அவனது சிற்றப்பன் விபீஷணனின் குரலைப் போன்றே இருந்தது என்று
ராமாயணம் கூறுகிறது. இராமனும் பரதனும் உருவம் ஒத்திருந்தார்களாம். இப்படிப்பட்ட குடும்ப
ஒற்றுமை –
சாயல் – இலக்கியப்
பிரதிகளுக்கும் உண்டென்பது சிலருடைய கொள்கை. இந்தக் கருத்து 1200 ஆண்டுகட்கு முன்னர் காஷ்மீரில் வாழ்ந்த அநாத வந்தனர்
எழுதிய ‘த்வன்யா லோகம்’ என்ற நூலுக்கு உரை எழுதிய அபிநவ குப்தரால் சொல்லப்பட்டு பிறகு வேறு சிலராலும்
பின்பற்றப்பட்டது. தேன்மொழி தன் தொகுப்புக்குத் தினைப் புனம் என்று பெயரிட்ட
காரணத்தாலேயே இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தினைப் புனம் என்ற தொன்மையான விளைநிலப்
பெயரை நினைவூட்டி சில சலனங்களை ஏற்படுத்துகின்றன.
தினைப் புனம் என்றால்
என்ன?
குறிஞ்சி நிலத்தில் ஒரு பகுதி. அதாவது மலையை அடுத்து
விளைநிலமாகப் பயன்படும் ஒரு பகுதி. அந்தப் பகுதியில் சிறிய தானியமான தினையைப்
பயிர் செய்தார்கள் குறிஞ்சி நிலத்து மக்கள். தினைப் புனத்தை எரியூட்டிப் பிறகு
பயிர் செய்யும் முறையைப் பின்பற்றினர் அவர்கள். தினை வளர்ந்த பிறகு அவற்றைக்
கிளிகள் கொய்து நாசம் செய்துவிடும். அவற்றை விரட்டுவதற்குப் பெரியவர்கள் சிறுமிகளை
அனுப்புவார்கள். பெரியவர்கள் பார்வையில்தான் அவர்கள் சிறுமிகள். மற்றபடி
மற்றபடிதான். தினைப் புனத்தில் பயிர்கள் வளரத் தொடங்கியதிலிருந்து அந்தச்
சிறுமிகளுக்கு ஓர் உலகத் தொடர்பு உண்டாகிறது. தினைப் புனத்துப் பரணில் கிளி விரட்ட
ஏறிய சிறுமி அப்புறம் சிறுமியாக இருப்பதில்லை. ‘பெருமி’யாகிவிடுகிறாள். தினை முற்றி அறுவடை செய்யப்பட்டதும்
அவளுடைய வருகை நின்றுவிடுகிறது.
தினைப் புனம் விளைநிலமாக்க அது முதலில் எரியூட்டப்படுவதை
அகநானூனு (288)
எரிதின் கொல்லை என்றும் சூடுறு வியன் புனம் (அகம் 368) என்றும் கூறுகிறது. இந்த வெப்பம் தணிந்த பின் தினை
விதைக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் காதல் வாழ்க்கை தினைப் பயிர் முற்றியதிலிருந்து
அறுபடும் வரை இணையாக நடைபெறுகிறது. எத்தனை மாதங்கள் காதலன்-காதலியின் காதல்
உருவாகி வளர்ந்து ஒரு நிலைக்கு வரும் என்றால் நான்கு மாதங்கள் என்று சொல்லலாம்.
குறிஞ்சி
உதிர் யாமம் என்மனார் புலவர்
என்கிறது தொல்காப்பியம். ஐப்பசி மற்றும் கார்த்திகை
மாதங்கள் கூதிர்காலமாகும். இத்துடன்,
பனி எதிர் பருவமும் உரித்தென மொழிம
என்றும் சேர்த்துச் சொல்கிறது தொல்காப்பியம். பனி எதிர் பருவம் என்றால்
மார்கழியும் தையும் அடங்கும். ஆகக் குறிஞ்சித் தினையின் காலம் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி,
மற்றும் தை ஆகிய மாதங்களும் சேர்த்து நான்கு மாதங்களாகிறது.
ஓராண்டில் மூன்றில் ஒரு கூறு குறிஞ்சித்திணை. எனவே, தினைப் புனம் நான்கு மாதங்கள் ஈரப்பதம் உடையவை. தேன்மொழியின் தினைப் புனத்துக்
கவிதைகள் மழை மற்றும் பனியின் குளிரை உடையவை. குறிஞ்சித் திணையின் அடையாளங்கள்
தேன்மொழியின் கவிதைகளில் தூவிக் கிடக்கின்றன.
தொலைவிலிருக்கும் வானம்
மிதக்கும் மேக இன்பம்
வளரும் பறவைக் கனா
விளையாடும் விருட்ச மொழி
நெளியும் நதி மோகம்
பட்டாம்பூச்சிகளின் பிடிபடாக் காம வண்ணம்
மாறாத நிலத்தின்
தீராத காதல்
நிலம், நீரும் பேரூற்றுக் கவிதை
மறுக்கப்பட்ட கனி புசிக்கும்
வன யட்சியை
தீண்டும் என் இச்சை விரல்
இனி
பேரண்டம் எங்கும் சிதறும்
ஒரு துளி வண்ணம் நான்.
தொகுப்பின் முதல் கவிதையே தொகுப்புக்கு முகமன் சொன்னது போல
அமைந்துள்ளது. முதலில் வானம், அப்புறம்
மேகம்,
பின்பு விளையாட்டு, மோகம்,
காம வண்ணம், காதல்,
கனி,
இச்சை மற்றும் சிதறும் ஒரு வண்ணத்துளி. இக்கவிதையில் நான்கு
சொற்களான மேகம்,
நதி,
ஊற்று, துளி என்பவை
கவிதையில் தண்ணீர்மையை நிறுவுகின்றன. மிதத்தல், கனா,
நெளிதல், பிடிபடாமை, நிலம் கீறுதல் என்பதையும் குறிக்கிறது. குறிஞ்சித்திணை
விஷயமான காதல் உணர்வையே குறிக்கிறது. ‘மிதக்கும் மேகம்’
என்ற தொடர் களிப்பு நிலையைக் காட்டுகிறது. ஆக, குறிஞ்சித்திணையின் களமான தினைப் புனம் காதல் உறவுக்கான
இடமெனக் குறிக்கப்படுகிறது. “மறுக்கப்பட்ட
கனி புசிக்கும் வன யட்சி”
என்ற வாக்கியம் திணைக்குப் புறம்பான ஒரு செய்தியை உள்ளே
விடுகிறது. ‘மறுக்கப்பட்ட கனி புசிக்கும் வன யட்சி’ என்ற கதை உள்நாட்டு விஷயமாகப் பரிணாமம் கொள்கிறது. வன
யட்சியைத் தொடர்ந்து மற்ற கவிதைகளிலும் அமானுஷ்யப் பெண் வடிவங்கள் தேன்மொழியின்
கவிதைகளில் பதிவு பெறுகின்றன. உ-ம், தேவதை (2),
யட்சி (15), வனநீலி
(16),
வெள்ளை ஆடை தேவதை (37), தேவ கன்னிகைகள் (58).
பெண்களும் பல இடங்களில் சிறுமிகளாகவே காட்டப்படுகின்றனர்.
திணை விஷயத்தில் மட்டுமல்ல, கவிதைப் பிரதியை உருவாக்குவதிலும் சங்க இலக்கியப் பிரதியாக்கத்தையே
பின்பற்றுகிறார் தேன்மொழி. சங்க இலக்கியப் புலவர்கள் விலங்கு, பறவை இவற்றைக் குறிப்பிடும்போது அவற்றின் உறுப்புகளில்
ஒன்றைக் கவனத்துக்கு உரியதாக்கியே பிரதியை அமைப்பார்.
கருங்கால் குருகு (நற்றிணை 211)
சிறுகண் யானை (அகம்
179,
277)
செவ்வாய்ப் பைங்கிளி (நற்றிணை 147)
வளைவாய்ச் சிறுகிளி (குறுந் 141)
என்பவை உதாரணங்களில் சில. தேன்மொழியும்
செங்கால் குருகுகள்
என்றும்
சிவந்த மூக்குக் கிளிகள்
என்றும் எழுதுகிறார். இதைத் தவிர வேறு சில திணைக்குறிகளும்
உண்டு. கார் காலத்தைக் குறிக்கும் நண்டுகள், தவளைகள்,
நத்தை, நாகப் பாம்பு, கோழி, நாய், தட்டான்கள் முதலியன கவிதைகளை அனுபவபூர்வமாக உணரச்
செய்கின்றன. குறிப்பாக,
மழைக்குப் பின் ஊரும்
சிவப்புப் பூச்சிகள்
பற்றிக் குறிப்பிடத் தோன்றுகிறது. இப்பூச்சிகள் சங்க
இலக்கியத்தில் ‘மூதாய்’ என்றும்
இடைக்காலத்தில் ‘தம்பலப்பூச்சி’ என்று் அறியப்பட்டன. புராண இலக்கியங்களில் இதை ‘இந்திர கோபம்’
என்பார்கள். தொகுப்பின் முதல் கவிதையில்
குறிப்பிடப்பட்ட
பேரண்டமெங்கும் சிதறும்
ஒரு துளி வண்ணம் நான்
என்பதில் துளி வண்ணம் என்பதுடன் தம்பலப்பூச்சியை
இணைத்துப்பார்க்கத் தோன்றுகிறது. நகரும் சிவப்புப் பூச்சியைத் தாம்பூலம் துப்பியது
போல் இருந்ததாகக் கூறினாலும் அது குறிஞ்சித்திணையில் சொல்லப்படுவதகால்
இடக்கரடக்கலாகவும் கொள்ள வேண்டுமோ என்னவோ! தேன்மொழியின் கவிதைகள் தொல் பிரதிகளுடன்
கொள்ளும் உறவு வியப்பைத் தருகிறது.
மழைக்கால மேகமாய்த் தொங்கும்
குழலையும் பற்றி
ஆகாயத்தில் ஏறுவோம்
என்று வரும் பகுதி கம்பராமாயணத்தில் சூர்ப்பனகையின்
கூற்றில் வரும் ஓர் உண்மையை நினைவூட்டுகிறது. இராமனது முடி மேகத்தைப் போல்
இருந்ததென்று சூர்ப்பனகை கூறுகிறாள்.
தொடை அமை நெடுமழைத் தொங்கல் ஆம் என என்று அவள்
வர்ணிக்கிறாள். பழைய தமிழில் மழை என்பது மேகத்தைக் குறித்தது. தினைப் புனம் சங்க
காலத்தில் வறுமையைக் காட்டியதில்லை. குறிஞ்சிக்குப் பெயர் போன கபிலர் மலை வளத்தை
அழகாகப் பாடிவைத்திருக்கிறார். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் மலை வாழ்க்கை வறுமையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. மலை
வெளிகள் செல்வந்தர்களின் உல்லாச வெளியாகிவிட்டன. இன்றும் மலை வெளிகளில் பெண்கள்
தலைச்சுமையாக விறகுக் கட்டுகள் சுமந்துபோவதைப் பார்க்கலாம். தேன்மொழியின் 13ம் எண்ணுள்ள கவிதையில் ஒரு தாய் வருணிக்கப்படுகிறாள்.
ஒவ்வொரு பிடியாய்த் திருடிக்கொண்டும்
ஒற்றை விளக்கின் ஒளி தேடிய
நடு வீட்டில்
அம்மா
தானியக் குதிரென
இருள் சூழ்ந்து கிடப்பாள்
கங்குகள் கனன்றெரியும்
இரட்டை விறகடுப்புக்கும் ஒற்றைக் கொடியடுப்புக்கும்
முன்னால் அமர்ந்து
வாழ்வின்
எரியாத சித்திரங்களைப் பின்னிக்
கொண்டிருப்பாள்.
அகநானூறு 141ம் பாட்டில்
நக்கீரர்,
புதுமனை மகடூஉ கையினில் கடிநகர்ப்
பல கோட்டு அடுப்பில் பால் உலை இன்றி
என்கிறார். சங்கப் பாடல் கூறிய அதே அடுப்பு இன்றும்
இருந்துவருகிறது. இந்தியாவின் கிராமப்புறங்கள் எங்கும் இந்த அடுப்பு, களிமண்ணால் மக்கள் தாங்களாகவே செய்துகொள்ளும் அடுப்பு
இன்றும் நீடித்துவருகிறது.
ஜெட் யுகம், கணினி யுகம்,
மடிக்கணினி யுகம், கைபேசி யுகம் எல்லாம் அவர்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. நல்ல வேளை, தேன்மொழி போன்ற கவிஞர்கள் அவர்களை மறந்துவிடவில்லை.
தேன்மொழியின் கவிதை என்றென்றைக்கும் மாறப்போகாத அந்த அடிப்படை இயற்கை உலகை
நேசிக்கிறது.
காற்றின் தவிப்பை
இளம் மஞ்சள் பூக்கள்
மகரந்தமாய்ப் பூசிக்கொண்டும்
கானகத்தில்
பூக்கொய்யும் மகளிர்
பறம்பு மலையிலிருந்து இறங்கி வர
கூடையிலிருந்து சிதறும்
கபிலனின் சொற்களைக்
கவ்விச் செல்கின்றன
வெட்டுக் கிளிகள்
என்ற கவிதைப் பகுதியில் பறம்பு மலையிலிருந்து பூக்கூடையுடன்
இறங்கி வரும் ஒரு பெண்ணைக் குறிப்பிடுகிறார். கிளி விரட்டும் பெண், பூக்கொய்யும் பெண், வயலில் பயிர் மேய வந்த நாரைகளை விரட்டும் பெண் என்று அகத்திணைப் பாடல்கள்
பெண்களை வரைகின்றன. ஆனால்,
நமது ஓவியக்கலை இவர்களை மறந்துவிட்டது. இப்பகுதியில் கபிலரை
நினைவுகூர்கிறார் கவிஞர். கபிலர் இன்றளவும் விரும்பப்பட்ட கவிஞராக விளங்குகிறார்.
கபிலர் என்ற பெயரில் இடைக்காலத்திலும் ஒருவர் வாழ்்நதார். சங்கப் புலவரான கபிலர்
வைதீக மரபுக்குத் தெரிந்த கபிலரின் வழி வந்தவரா என்று தெரியவில்லை. அந்தக் கபிலர்
ஒரு முனிவர்.
ஸித்தானாம் கபிலோ முனிஹி
என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் சொல்கிறார். ‘சித்தர்களில் நான் கபில முனிவனாக இருக்கிறேன்’ என்பது பொருள். புறம் 106ம் பாட்டில் கபிலர்,
நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா
என்று
கூறுகிறார். இதே தொனி பகவத்கீதையில்
கேட்கக் கிடைக்கிறது.
இலை,
பூ,
பழம், தண்ணீர்
இவற்றை அன்புடன் அளித்தால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். விரிவான வேள்விகள், கொண்டாட்டங்களுக்கு மாறாக ஒரு இலை, பூ,
பழம் இவற்றை அன்புடன் கொடுத்தால் அதுவே எனக்குப் போதும்
என்ற கண்ணன் கருத்தைப் போன்றுள்ளது கபிலரின் கருத்து. கூவி விற்கப்படாததும் நாறும்
தன்மை உடையதுமான எருக்கம்பூவைக் கொடுத்தால்கூடக் கடவுள் அதை வேண்டாம் என்று சொல்ல
மாட்டார் என்கிறார் கபிலர். இந்தக் கருத்து புரட்சிகரமானது. குறிஞ்சி நிலத்தில் ஆட்டுக்
குட்டிகளைப் பலி கொடுப்பது சாதாரண விஷயம். குட்டி ஆடுகளின் இறைச்சிக்கு
ஆசைப்பட்டுப் பெண்ணுக்கு வேலனுடைய தோஷம் வந்திருக்கிறது என்று பொய் சொல்லும்
பூசாரிகளைப் பற்றிக் கேலிசெய்த தலைவிகள் குறிஞ்சிப் பாடல்களில் உண்டு. கபிலர்
கடவுள் வழிபாட்டு விஷயத்தில் மட்டுமல்ல, மகளிர் விஷயத்திலும் புரட்சிகரமான மனம் படைத்தவர். பாரியின் பெண்களை
அழைத்துக்கொண்டு அவர் அலைந்த அலைச்சல், பேகன் மனைவிக்காக அவனிடம் சொன்னது பல நூறு ஆண்டுகள் கழிந்த பின்னும் வாசகனை
நெகிழவைக்கும். பேகனிடம் அவர் சொன்ன பாட்டு இருக்கிறதே, அதைப் படிக்கும்போது ‘கபிலரே,
அனந்த கோடி நமஸ்காரம்’ என்று சொல்லத் தோன்றுகி்றது. பூக்கொய்யும் பெண்களின் கடையில் கபிலனின் சொற்களை
வைத்து நிரப்பியிருக்கிறார் தேன்மொழி.
திணைகளுக்குத் திருமால், இந்திரன்,
வருணன், சேயோன் என்று
தனித்தனி தேவதைகள் இருந்தாலும், தேன்மொழி
எல்லாத் திணைகளின் பொறுப்பையும் கொற்றவையிடம் ஒப்படைத்துள்ளார். கவிதை எண் 54ல் கொற்றவையின் பாடல் நன்றாகக் கேட்கிறது.
No comments:
Post a Comment