பழமொழிகள் பற்றி மேலை அறிஞர் கென்னத் பர்க் (Kenneth
Burke) தமது ‘வாழத்துணை செய்யும் கருவியாக இலக்கியம்’
[Literature as Equipment for Living] எனும் கட்டுரையில் கூறும் கருத்துகள் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியவை. கலை
நுட்பம் கொண்ட பேரிலக்கியங்களைப் பழமொழிகளின் விரிவாக்கங்களாகக் [provermbs
writ large] கருதலாம்
என்றும்,
பழமொழிகள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை நாம்
எதிர்கொள்ளத்துணை செய்யும் கருவிகள். ஒரு சமுதாயக் கட்டமைப்பில் சிலவகைச் சூழல்கள்
மீண்டும் மீண்டும் தோன்றும் போது மக்கள் அவற்றை அடையாளம் கண்டு அவற்றிற்கு உரிய
பெயர் அளித்து அவற்றைக் கையாளுவதற்கான உத்திகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
(பர்க். 944).
என்றும் எடுத்துரைப்பார். பல ஆங்கிலப் பழமொழிகளைச்
சான்றுகளாகக் காட்டி, அவையெல்லாம் முற்றும் இலக்கிய நயத்திற்காகவோ,
யதார்த்தத்தை யதார்த்தமாகத் தருவதற்கு மட்டுமோ,
படைக்கப்பட்டவையல்ல என்ற கருத்தை அவர் நிலைநாட்டக் காணலாம்.
அவற்றில் உள்ள கலை அழகு, முருகியல் இன்பம் தருவது உண்மையேயாயினும் அவற்றைத் தூய
இலக்கியம் [pure literature] என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அவை
வாழ்க்கைக்குப் பயன்படும் அரிய உண்மைகளைக் கூறுபவை. வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளவாறு
படம் பிடித்துக் காட்டுபவை ஆயினும், அவை அந்நோக்கில் மட்டும், (realism
for its own sake) உண்டாக்கப்பட்டவை
என்று முடிவெடுப்பதும் தவறாகும். இது அவற்றின் இலக்கியத் தரத்தைப்
புறக்கணிப்பதாகும்.
அன்னார் பழமொழிகளை அவற்றின் பயன்பாடு கருதி ஐந்தாறு
வகைகளாகப் பிரித்தும் காட்டுவார்.
ஒவ்வொரு பழமொழியும் ஒரு மருந்தை ஒத்தது. ஆறுதல் கூறுதல்,
பழிக்குப் பழிவாங்கல் பற்றிப் பேசுதல்,
தவறுகளை இடித்துரைத்தல், செயல் மேற்கொள்ள ஊக்கம் அளித்தல்,
எதிர்வருவது உரைத்தல், (Consolation,
vengeance, admonition, exhortation, foretelling) ஆகியவை அவை செய்யும் பணிகள். இவை அல்லாமல் அவை வாழ்க்கையில்
சில வகைகளில் அடங்கக் கூடிய, மீண்டும் மீண்டும் விளையும் நிகழ்வுகளை (typical,
recurrent situations) அடையாளம்
காட்டி அவற்றிற்குப் பெயரிடும் பணியையும் செய்கின்றன. எனவே பழமொழிகளில் யதார்த்தம்
என்பது உறுதி அளிக்கவும், கடிந்துரைக்கவும், ஆறுதல் கூறவும், எதிர்த்தாக்குதல் நடத்தவும், வருங்காலம் உரைக்கவும், திட்டமிடவும் பயன்படுத்திக்கொள்ளப் பெறுகிறது. மேலும்
இச்செயல்களெல்லாம் எந்த அளவுக்கு வாழ்க்கை நலத்திற்குத் தேவை யென்பதால் பழமொழி
உருவாக்கப் பின்னணியில் இடம்பெறுகிறது. (பர்க் 943-44).
பழமொழிகளைப் பற்றிய இத்தகைய பார்வை இலக்கியம்,
இலக்கியத் திறனாய்வு ஆகிய இரண்டும் பற்றிய சில புதிய
முடிவுகளுக்கு வரத் துணை செய்கிறது. இலக்கியத்தையே வாழ்க்கைச் சூழல்கள்,
அறைகூவல்கள், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான உத்திகள் ஆகியவற்றை எடுத்துச்
சொல்லுவனவாகப் பார்க்கலாம். நண்பர்களையும், பகைவர்களையும் இனம் கண்டு கொள்வது,
இழப்புகளைப் பொதுமைப் படுத்துவது,
கண்ணேறு படலைத் தவிர்ப்பது, தூய்மைப்படுத்துவது, புனிதப்படுத்துவது, ஆறுதல் கூறுவது, எதிர்த்தாக்குதல் நடத்துவது, பழித்துப் பேசுவது, ஊக்கமூட்டுவது, கட்டளை இடுவது, செயல்பட வழிமுறைகள் சொல்வது ஆகியவற்றையெல்லாம் கணக்கில்
கொண்டு இலக்கியங்களை அணுகலாம். துன்பியல் நாடகம், இன்பியல் நாடகம், பழிகரப்பு அங்கதம் போன்ற இலக்கிய வகைகளையெல்லாம் நல்வாழ்வு
வாழத்துணை செய்யும் சாதனங்களாகக் காணலாம். எனவே சமுதாயவியல் திறனாய்வு இத்தகைய
அணுகுமுறையை மேற்கொண்டு, கலைஞர்கள் வாழ்க்கைச் சிக்கல்களை நீக்கத் தேவையான உத்திகளை
எவ்வாறெல்லாம் வகைப்படுத்திப் பெயரிட்டிருக்கிறார்கள் என்பதைத்
தெளிவுபடுத்தவேண்டும் என்பார் பர்க். அவருடைய திறானாய்வு அணுகுமுறை மார்க்சீயக்
கோட்பாடுகளையும் தொன்மம், சடங்கு பற்றிய மானுடவியல் கோட்பாடுகளையும் உள்ளடக்கிக்
கலையை ஒரு சமுதாய நிகழ்வாகக் கருதுவதோடு மட்டுமல்லாமல் முருகியல் நோக்கைப்
புறக்கணிக்கவில்லையென்பதையும் நாம் அறியவேண்டும்.
தமிழினம் உலகின் தொன்மையான இனங்களில் ஒன்றென்பதால்,
அது பெற்றிருக்கும் பழமொழிக் கருவூலம் அளவாலும் தரத்தாலும்
பெரும் பெயர்க்கு உரியது. தமிழ்ப்பழமொழிகள் வாழ்வின் எல்லாக் கூறுகளைப் பற்றியும்
பேசுபவை. அவை பேசாத வாழ்க்கை அனுபவம் ஏதுமில்லையென்றே சொல்லலாம்.
பெரும்பேதையிலிருந்து பேரறிஞன் வரை,
எல்லாவகை மாந்தர்களும் தமிழ்ப் பழமொழிகளிலிருந்து நற்பயன்
பெறலாம்;
பாடம் கற்றுக்கொள்ளலாம். எப்படிச் செயல்படுவது என்று
திண்டாடுகின்ற நிலையேற்படின், கை கொடுக்கும் பழமொழிகள் பலவுண்டு. அடிப்படைத் தேவைகளான
உணவு,
உறைவிடம், உறக்கம் பற்றி மட்டுமல்லாமல் மீயுயர் வாழ்க்கைத் தத்துவங்கள்
பற்றிச் சொல்கின்ற பழமொழிகளும் அடிமட்டப் புலனின்பங்கள் பற்றி மட்டுமல்லாமல்
நுட்பமான ஆன்மிகம் பற்றிப் பேசும் பழமொழிகளும் ஏராளம். அவையெல்லாம் கருத்துகளைக்
கலையழகோடு சொல்வதையும் கற்றவர்க்கும் பாமரர்க்கும் ஒருசேரப் பயன்படுவதையும்
சொல்லத் தேவையில்லை. தமிழினத்தின் தொன்மையையும், தமிழ்ப்பண்பாட்டின் பெருமையையும் அவை பிரதிபலிக்கின்றன.
தமிழ்ப் பழமொழிகளையும் பர்க் காட்டிய வழியில் வகைப்படுத்தலாம்.
ஆறுதல் கூற அமைந்தவை:
‘யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.’
‘முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை;
முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.’
‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை.’
‘எளியோரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.’
ழிக்குப் பழி பற்றியவை:
‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.’
‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்;
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.’
‘அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.’
வருங்காலம் பற்றியவை:
‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.’
‘உழைக்கின்ற காலத்தில் ஊர்வழிபோனவன் அறுவடைக்காலத்தில் ஆள்
தேடவேண்டா.’
‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.’
‘எறும்பு ஊரக் கல் தேயும்.’
நாம் மீண்டும் மீண்டும் காணும் சிலவகைச் சூழல்கள்:
‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்.’
முள்ளை முள்ளால் எடு.’
‘எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்.’
‘பாம்பின் கால் பாம்பு அறியும்.’
நுணலும் தன் வாயால் கெடும்.
‘நாய் வாலை நிமிர்த்த முடியாது.’
கொல்லன் தெருவில் ஊசி விற்பாரில்லை.’
‘பூவோடு நார் சேர்ந்தாற்போல்’.
‘கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகாது.’
இப்பழமொழிகளிலெல்லாம் நேரடி வாழ்க்கை அனுபவத்தின் விளைவாக
அறிவுரை கலைநயத்தோடு சொல்லப் படுகிறது.
முரண்பட்ட முடிவுகளைக் கூறும் பழமொழிகள் இருக்கின்றனவே
என்று வினவுவார்க்கும் பர்க் தக்க விடை தருகிறார். அவை வாழ்க்கை நோக்கிலுள்ள
வேறுபாடுகள் காரணமாக வேறுபட்ட உத்திகளைச் சொல்பவை என்பதை அறிய வேண்டும். தமிழ்ப்
பழமொழிகளுக்கும் இது பொருந்தும். “அவன் அன்றி ஓரணுவும் அசையாது.”
“தன் கையே தனக்கு உதவி”
என்ற பழமொழிகளில் முதலது முயன்று தோற்றவனுக்கு ஆறுதலாகச்
சொல்வது;
இரண்டாவது
செயலற்றிருப்பவனைச் செயல்படத்தூண்டுவது. “எல்லாம் தலைவிதி.” “விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழிகளும் இத்தகையவே.
தலை சிறந்த வாழ்வு நூலான திருக்குறளில் உள்ள
முரண்பட்டவையாகத் தோன்றும் குறள்களுக்கும் இந்த விளக்கம் விடைதரும்.
ஊழில் பெருவலியாவுள? மற்று ஒன்று
சூழினும் தான் முந்து உறும். (380)
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர். (620)
வகுத்தான் வகுத்தவகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (377)
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
பகை நட்பு ஆம் காலம் வருகால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇ விடல் (830)
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும். (293)
இக்குறள்களையெல்லாம் வேறுபட்ட சூழல்களுக்கு உரிய
அறிவுரைகளாகக் கொள்ளும்போது அவற்றின் முரண்பாடு நீங்கக் காணலாம்.
பழமொழிகளெல்லாம் நோய் நீக்கும் மருந்தை ஒத்தவை என்று பர்க்
சொல்லும்போது, அற நூல்களுக்கு நம் முன்னோர் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்றேல்லாம் பெயரிட்ட சிறப்பு விளங்கும். பழமொழியின்
இலக்கியத் தன்மையையும் தமிழினம் உணர்ந்திருந்தது. இலக்கிய வகைகளுக்கான பட்டியலில்
தொல்காப்பியர் பழமொழிக்கும் இடம் தருகிறார்.
பாட்டு,
உரை, நூலே, வாய்மொழி, பிசியே
அங்கதம், முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர். (தொல்: 1336)
பழமொழி உரைநடையில் இருக்குமாயினும் கவிதைக்குரிய பண்புகள்
யாவும் அதில் இடம்பெற்றிருப்பதையும் தொல்காப்பியர் சுட்டுவார்.
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
ஒண்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப. (தொல்: 1443)
பொருட்செறிவும் சொற்சிக்கனமும் கொண்ட கவிதைகளை எழுதிய
சங்கச் சான்றோர் பழமொழிகளை இடையிடையே இணைக்கத் தயங்கவில்லை.
அம்ம வாழி தோழி இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்
தொன்று படு மொழி இன்று பொய்த்தன்று கொல் (அகநானூறு 101
1-3)
எனும் அகநானூற்றுப் பாடல் தன் கருத்தை வலியுறுத்த ஒரு
பழமொழியைக் கூறி அது தொன்று தோன்றிய முதுமொழியாயினும் இன்று பொய்யாய்ப் போய்விடாது
என்றும் தெரிவிக்கிறது.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த முன்றுறை அரையனார்
வழக்கிலிருந்த நானூறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பழமொழியையும் ஒரு
பாடலில் பொதிந்து வைத்து ஓர் அறவுரையைத் தெளிவுபடுத்தப் பயன்படுத்திக்கொண்டதென்பதே
வியப்புக்குரிய செய்தியாகும். பழமொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் சமுதாயத்திற்கு
அவற்றின் பயன்பாடு பற்றியும் அவர் நுட்பமாக நோக்கி உணர்ந்திருந்தார் என்பதற்கு இது
ஒன்றே போதுமான சான்றாகும். இத்தகைய உத்தியைக் கையாளும் இலக்கியம் வேறு
எம்மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. பழமொழி நானூற்றில் சில பழமொழிகள்
கூறப்படும் கருத்திற்கு விளக்கங்களாகின்றன; சில பொருளை விளக்கும் சான்றுகளைத் தருகின்றன. சில பொருள்
பொதிந்த உவமைகளாகப் பயன்படுகின்றன. பழமொழி எத்தகையதாயினும் கவிதையின் இன்றியமையாக்
கூறாகி,
அதன் பொருளை உடனடியாக உணர வழி செய்கிறது. ஒன்றுக்கொன்று
முரண்பட்ட கருத்தைத் தரும் பழமொழிகளும் உண்டு; ஆனால் அவை தக்க விளக்கங்களோடு கூறப்படுகின்றன. செல்வகேசவராய
முதலியார் கூறுவது போல் “பல முனிவர் இயற்றிய நாலடியாரிற் போல இந்நூலில் கூறியது
கூறல்,
மாறுகொளக் கூறல் இல்லை” என்றே சொல்லலாம்.
ஒரு பழமொழி, “அறிவாற்றலுக்குப் பெயர் பெற்ற ஒருவனும் தவறுகள் செய்யலாம்;
ஏனெனில் அவன் மதியை விதி கெடுத்துவிடும்.”
என்று கூறும்.
அறிவினை ஊழே அடும் (பழ 203)
மற்றொன்று, ஊழிற்கு அஞ்சி அரிய செயல்களைச் செய்ய முயலாதவன் பேதை என்று
கண்டிக்கும்.
உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறு கண்மை ஆகாதாம் பேதை—தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால் பூணாதென் றெண்ணி
அறிவச்சம் ஆற்றப் பெரிது. (பழமொழி 220)
“அறிவினை ஊழே அடும்” “அறிவச்சம் ஆற்றப் பெரிது” ஆகிய இரண்டு பழமொழிகளும் சரியான விளக்கங்கள் தரப்படுவதால்
அவற்றிற்கிடையே உள்ள முரண் களையப்படுகிறது.
ஒரு பழமொழி ஊழ் துணை செய்யும்போது செல்வம் சேர்க்க
முயற்சியும் தேவையில்லை என்றும் ஊழ் துணை செய்யாது ஊறு விளைவிக்கும்போது எல்லா
முயற்சிகளும் வீணாகும் என்றும் கருத்தறிவிக்கிறது.
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயமின்றே
ஏகல் மலைநாட! என் செய்தாங்கு என் பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல். (பழமொழி 127)
இன்னொன்று யாரும் துணையில்லையே யென்று மனம் தளரவேண்டாம்
என்றும் தொடர்ந்து கடின உழைப்பை மேற்கொண்டால் பலன் பெறுதல் உறுதியென்றும்
எடுத்துரைக்கின்றது.
இனியாரும் இல்லாதார் எம்மில் பிறர்யார்
தனியேம் யாம் என்றொருவர் தாமடியல் வேண்டா.
முனிவிலராகி முயல்க முனிவில்லார்
முன்னிய தெய்தாமை இல். (பழமொழி 161)
இப்பழமொழிச் செய்யுள்களைப்பார்க்கும்போது வள்ளுவர் தம் ‘ஊழ்’ எனும் அதிகாரத்தில் கூறும் கருத்துகள் இப்பழமொழிகளுக்குக்
கடன்பட்டவையென்பது தெளிவாகும். பழமொழி நானூறு எனும் நூல் திருக்குறளுக்குக்
காலத்தால் பிற்பட்டதாயினும் இப்பழமொழிகள் வள்ளுவர் காலத்திலேயே வழக்கில்
இருந்திருக்க வேண்டும். அவற்றின் பொருள் ஆழம் கருதி அவற்றைச் சிறப்பான கவிதைகளாக
வள்ளுவர் மாற்றி விடுகின்றார் என்பதற்கு ‘ஊழ்’ என்னும் அதிகாரத்திலேயே பல சான்றுகள் உள்ளன.
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. (குறள் 371)
பேதைப்படுக்கும் இழவு ஊழ் அறிவகற்றும்
ஆகல் ஊழ் உற்றக் கடை. (குறள் 372)
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும். (குறள் 373)
புரியினும் ஆகாவாம் பால் அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. (குறள் 376)
பழமொழிகளிலிருந்து ஊழ் பற்றி வள்ளுவர் பெற்ற கருத்துகளின்
முத்தாய்ப்பாக, அவரது வாழ்க்கை நோக்கை அறிவுறுத்துவதாக ஒரு பாடல் வருகிறது.
நன்றாம் கால் நல்லவாக் காண்பவர் அன்று ஆம்கால்
அல்லற்படுவது எவன்??
(திருக்குறளுக்கு நாட்டார் வழக்கு ஒரு மூலமாய் அமைந்ததற்குப்
பல சான்றுகள் தரலாம்.)
‘கற்றொறுந் தான் கல்லாதவாறு’ (பழ. 332)
என்னும் பழமொழி
“அறிதோறறியாமை கண்டற்றால்” என்றும்,
“கெட்டார்க்கு நட்டார் இல்” (பழ. 59)
என்னும் பழமொழி
“கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர் பின் செலல்” என்றும்,
“உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்” (பழ. 41)
என்னும் பழமொழி,
“அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்” என்றும்
“அரங்கினுள் வட்டுக்கரையிருந்தார்கெளியபோர்” (பழ. 86)
என்னும் பழமொழி
“அரங்கின்றி வட்டாடியற்றே” என்ரும்
“பறைக்கண் கடிப்பிடு மாறு” (பழ. 180)
என்னும் பழமொழி
“அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்குய்த்துரைக்க லான்” என்றும்,
“இன்சொல் இடர்ப்படுதல்”(பழ.277)
என்னும் பழமொழி
“இன்சொல் இனி தீன்றல் காண்பான் எவன் கொலோ
வன் சொல் வழங்குவது” என்றும்
“தீயன ஆவதே போன்று கெடும்” (பழ. 173)
என்னும் பழமொழி,
“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்” என்றும்,
“முதலிலார்க்கு ஊதியமில்” (பழ.232)
என்னும் பழமொழி
“முதலிலார்க் கூதியமில்லை” என்றும்,
“ஓரறையுள் பாம்போடு உடனுறையும் ஆறு” (349) என்னும் பழமொழி
“உடம்பாடிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந்தற்று.” என்றும்
“அஞ்சுவார்க் கில்லை அரண்” (பழ.254)
என்னும் பழமொழி
“அச்சமுடையார்க் கரணில்லை” என்றும்,
“யாப்பினுள் அட்டிய நீர்” (பழ. 311)
என்னும் பழமொழி
“நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்; அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.” என்றும்,
“மனைமர மாய மருந்து (பழ. 350) என்னும் பழமொழி,
“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகையான் கட் படின்.” என்றும்
“இறைத்தோறும் ஊறும் கிணறு” (பழ.378)
என்னும் பழமொழி
“இறைப்பவர்க்கு ஊற்று நீர்போல மிகும் (குறள் 1161) என்றும்
கூற்றம் குதித்து உய்ந்தறிவார் இல் (பழ. 391) என்னும் பழமொழி
கூற்றம் குதித்தலும் கை கூடும் என்றும்
திருக்குறளில் இடம் பெறுகின்றன. வள்ளுவர் பழமொழிகளின்
சொல்லையும் பொருளையும் எடுத்தாள்வது பழமொழிகளை உருவாக்கிய நாட்டார்
கவிஞர்களுக்குப் பட்டறிவில் ஈடு கொடுக்கக் கூடியவர் என்பதைப் புலப்படுத்தும்.
வள்ளுவர் மட்டுமல்லாமல் அவருக்குப் பின் வந்த
பெருந்தமிழ்ப்புலவர்கள் பலரும் பழமொழிகளின் கருத்தாற்றலையும் கவிதைச் சிறப்பையும்
உணர்ந்து பயன்பெற்றனர். வாழ்க்கையில் நாம் நாளும் எதிர்கொள்ளும் நிகழ்ச்சி பற்றிய
பழமொழி ஒன்று பழங்காலச் சமுதாயத்தில் வழக்கில் இருந்தது. யாரும் இறப்பை விரும்பி
வேண்டி அழைக்க மாட்டார்கள் என்ற கருத்துடைய பழமொழி இது;
“கூற்றம் கொம்மை கொட்டினார்
இல்”
சான்றோர்களூடைய சினத்திற்கு ஆளாகி யாரும் துன்புற வேண்டாம்
என்று எச்சரிக்க முன்றுறை அரையனார் இப்பழமொழியைப் பயன்படுத்திக்கொள்கிறார்.
பெரியோரிடம் முரண்பட்டு அவர் முனிவிற்குக் காரணமாகி மாண்ட அரக்கனின் வாழ்க்கையை
நாம் பாடமாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லும்போது இதனைக் கையாளுகிறார் அரையனார்.
ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க
போற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்
நோற்ற பெருமை உடையாரும் கூற்றம்
புறம் கொம்மை கொட்டினாரில். (பழமொழி 126)
“கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.” என்பது குறள்.
திருத்தக்க தேவர் முன்னோர் மொழிகளையும் சங்கச் சான்றோர் செய்யுட்களையும்
தக்கவாறு தமது பாடல்களில் பெய்து கொள்ளும் நுண்ணறிவு உடையவர். “கூற்றம் கொம்மை கொட்டினாரில்” எனும் பழமொழிக்கு ஒரு புதிய பரிணாமம் தரும் வகையில் ஒரு பாடலில் கொண்டு வந்து
அவல உணர்வையும் அறச்சினத்தையும் மிகுதிப்படுத்துகிறார்.
நோற்றிலர் மகளிர் என்பார் நோங்கண்டீர் தோள்களென்பார் கூற்றத்தைக்
கொம்மை கொட்டிக் குலத்தோடு முடியுமென்பார். (சீவக சிந்தாமணி 1109)
சீவகன் சிறைப்பட்டபோது உள்ளம் உடைந்த பெண்டிர் தங்கள்
துயரத்தை வெளிப்படுத்துவதை ஓவியமாகத் தர இப்பழமொழி புலவருக்குப் பயன்படுகிறது.
“முள்ளினால் முள் களைதல்” (54) என்னும் பழமொழியைச் சீவக சிந்தாமணி விமலையாரிலம்பகத்தில் “மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் பேது செய்து”
என்று திருத்தக்க தேவர் மாற்றுகிறார்.
நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்களும் தம் உரை
விளக்கங்களில் பழமொழிகளைச் சேர்க்கத் தயங்கவில்லை. சீவகசிந்தாமணியில் பூமகள்
இலபகத்தில் “மைத்துன நீண்ட வாட்கட்டடங் கண்ணார்” என்னும் தொடருக்கு ‘வாள் மைத்து உன்ன நீண்ட கண். ‘வாள் ஒளி மழுங்கி நினைக்கும்படி நீண்ட கண்’
என்று பொருள் தந்து நச்சினார்க்கினியர் ‘மைத்தல்-ஒளி கெடுதல்: “மைம்மைப்பின் நன்று குருடு’ என்றாற்போல என்பார். தெரிவதும் தெரியாததுமாகும் கண்ணின்
தன்மையைக் காட்டிலும் குருட்டுக்கண்ணின் தன்மையே நன்று என்று பொருள் தருவது
இப்பழமொழி (பழ.188).
பழமொழி நானூற்றின் ஆசிரியர் பொருளைப் புலப்படுத்துவதோடு
அணியாகி இன்பம் பயக்கும் உவமைகள் வேண்டிய வழியும் பழமொழிகளை நாடுகிறார். ‘அணியெலாம் ஆடையின் பின்’ என்னும் பழமொழி எல்லாவகைச் செல்வங்களினும் அறிவு பேணிப்
போற்றத் தக்கது என்ற கருத்தை வலியுறுத்த வருகிறது.
அறிவினால் மாட்சியொன்றில்லா ஒருவன்
பிறிதினால் மாண்ட தெவனாம்?-பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின். (பழமொழி.271)
தொன்மையான தமிழ்ச் சமுதாயம் ஏராளமான பழமொழிகளைக்
கொண்டிருந்ததால், சில பாடல்களில் இரண்டு பழமொழிகளை உவமைகளாக்கவும் அரையனார்
தயங்கவில்லை. “சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை; “மரம்போக்கிக் கூலி கொண்டார் இல்லை”
எனும் இரண்டு பழமொழிகளும் பாதையைக் கடந்த பின் கடக்கத்துணை
செய்தவன் கூலி பெறுதல் அரிது என்ற கருத்தைச் சொல்வன. இளமையில் கல்லாதவன்,
முதுமையில் அதனைச் செய்தல் அரிது என்ற கருத்தை அரண் செய்ய
இப்பழமொழிகளை இணைக்கிறார்.
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின் கண்
போற்று மெனவும் புணருமோ? –ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே; இல்லை
மரம்போக்கிக் கூலி கொண்டார். (பழமொழி 60)
மன்னன் எவ்வாறு வரி வசூலிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தக்
காளிதாசன் போன்ற கவிஞர்கள் மலர்களிலிருந்து வண்டுகள் தேனை எடுத்துக்கொள்வதுபோல்
துன்பம் தராது இரு சாரார்க்கும் பயன் விளையும் வகையில் செயல்படவேண்டும் என்று சொல்வர்.
பல நூறாண்டுகளுக்கு முன்னமேயே வழக்கிலிருந்த தமிழ்ப்பழமொழி ஒன்று இதைச் சொல்கிறது.
பொருத்தம் அழியாத பூந்தண்தார் மன்னர்
அருத்தம் அடிநிழலாரை வருத்தாது
கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ
வண்டு தாதுண்டு விடல். (பழமொழி 242)
பழமொழிகளில் பளிச்சிடுகின்ற நாட்டார் அறிவும் பண்பாடும்
அறிஞர்களையும் கவிஞர்களையும் மட்டுமல்லாமல் தத்துவ விற்பன்னர்களையும் அறிவியல்
வல்லாரையும் நாணமுறச் செய்வன. பறையொலி கேட்கும் ஒருவன் அவன் மனத்தில் கொண்டுள்ள
சொற்களையே அது எதிரொலிப்பதாக எண்ணுவான். இக்கருத்தைச் சொல்லும் பழமொழி ஒன்றுண்டு.
அரையனார்,
பெருங்கல்வியாளர்களும் மூடன் ஒருவன் அழுத்தமாகக்
கொண்டிருக்கும் தவறான கருத்துகளைப் போக்க முடியாது என்பதைச் சொல்ல இப்பழமொழியைச்
சுட்டுவார்.
நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க் காயினும்
ஓர்த்தது இசைக்கும் பறை. (பழமொழி 195)
உளவியல் அறிஞர் ஃபிராய்டு கூறும் கருத்துருக் கோட்பாட்டி (projection
theory)ற்கு இது நல்ல
சான்றாகும். அவ்வுளவியல் அறிஞரே இதனை எண்ணிப் பார்த்திருப்பாரா என்பது
ஐயத்திற்குரியதே.
பக்தி இயக்கம் தமிழ்க்கவிதை பெருவளர்ச்சி பெறத் துணை செய்த ஒரு வரலாற்று
நிகழ்ச்சியாகும். அவ்வியக்கத்தைச் சார்ந்த சம்பந்தர்,
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற புலவர்களுக்கு நாட்டார் வழக்காறு ஒரு
பொற்சுரங்கமாகியது. நான்காம் திருமுறையில் அப்பர் பழமொழிப் பதிகம் என்ற
தலைப்பிலேயே பத்துப் பழமொழிகளை அரிய உவமைகளைச் சொல்ல நினைவூட்டுகிறார். சைவ
சமயத்தைச் சாருமுன் சமணனாக இருந்தது பற்றி வருந்துகின்ற அவர் மனநிலையைப் படம்
பிடித்துக் காட்டும் பாடல்கள் இவை.
வாழ்க்கைத் தளையிலிருந்து விடுபடுதற்குச் சைவத்தை விட்டுச்
சமணனாக மாறியமை, “கனியிருப்பக் காய் கவர்தல்” ஆகும். எளிதில் பின்பற்றக் கூடிய சைவமிருக்கக் கொடிய
வழியாகிய சமணத்தை மேற்கொண்டமை “முயல் விட்டுக் காக்கைப் பின் போதலா”கும். அடைக்கலம் தருதற்குச் சிவன் காத்திருக்கும்போது
அருகனை நாடியமை, “அறமிருக்க மறம் விலைக்குக் கொள்ளல் ஆகும்”. விடுதலை பெறுதற்குச் சமணத்தை நம்பியமை “பனி நீரால் பாவை செயப் பாவித்தல்”
ஆகும். ஈசனுக்குத் தன் உடலில் இடம் கொடாமல் தீயோர் நட்பில்
திளைத்தது “ஏதன் போர்க்கு ஆதன் அகப்படல்” ஆகும். உண்மையான இறைவனை நினையாது பொய்யான சமய நூல்களைக்
கற்றது “இருட்டறையில் மலடு கறத்தல்” ஆகும். பலர் நகையாடுமாறு, நாணத்தகுந்த வாழ்க்கையை நாடியது “விளக்கிருக்க மின்மினி தீக்காய்தல் “ஆகும். உய்தலுக்கு வழி செய்யாத சமணத்து றவியின் ஏமாற்று
வாழ்க்கை,
“பாழூரில் பயிக்கம் புகல்”
(பாலை நிலத்தில் பிச்சை
எடுத்தல்) ஆகும். தீமையை அழிக்கும் இறைவனை அணுகாதிருத்தல்,
“தவமிருக்க அவம் செய்தல்”
ஆகும். தேவர்களைக் காக்க நஞ்சை அருந்திய சிவனை மறந்து வேறு
தெய்வத்தை வழிபடல், ‘கரும்பிருக்க இரும்பு கடித்தல்’
ஆகும்.
முன்றுறை அரையனார், அப்பர் போன்ற கவிஞர்கள் இத்தகைய பாடல்களை
இயற்றிருக்கவில்லையானால் பல பழமொழிகளை நாம் இழந்திருப்போம். அவர்களுடைய கவிதைகள்
நாட்டாரின் அனுபவ முதிர்ச்சி கொண்ட அறிவைப் போற்றும் ஓர் அரிய இலக்கியச் செயல்பாடு
என்பதில் ஐயமில்லை.
துணை நூல்கள்
v Burke,
Kenneth, 1871. “Literature as Equipment for Living.” Critical Theory Since
Plato. Ed. Hazard Adams, New York: IIBJ, 943-47
v The
Sacred Kurral. 1886. Tr. G.U. Pope. New Delhi. Asian Educational Services, AES
Reprint: 1980
v சீவக சிந்தாமணி. 1969. உ.வே.சாமிநாதையர் உரையுடன் தஞ்சாவூர் : தமிழ்ப்
பல்கலைக்கழகம்.
v பழமொழி நானூறு. 1989, பதி, புலியூர்க்கேசிகன், சென்னை: முல்லை நிலையம்
v தேவாரம், நாலாம் திருமுறை 1957, தருமபுரம்: தருமபுர ஆதீனம்.
No comments:
Post a Comment