Wednesday, February 01, 2017

தன்னை அறிந்து கொண்டால்...



"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்என்பது திரைப்படப் பாடல். நீ உன்னை அறிந்தால் உன்னை முதலில் வெல்லலாம். பிறகு உலகையும் ஆளலாம் என்கிறது உளவியல் நிபுணர் கார்டனரின் தன்னிலை அறியும் திறன் கோட்பாடு. மனதை ஒருமுகப்படுத்தித் தன் திறனைக் கண்டறியும் ஆற்றல் சிலருக்கு இருக்கும். கடந்த கால அனுபவங்களை அலசி, ஆராய்ந்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு எதிர்காலத்தை அவர்கள் திட்டமிடுவார்கள். தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதைச் சரியாகக் கண்டறிந்து இலக்கை நோக்கி இடைவிடாது பயணிப்பார்கள் எனக் கடந்த வாரம் தன்னிலை அறியும் திறன் கொண்டவர்களைப் பற்றிப் பேசினோம்.

ரகசியம் அம்பலம்

v  அத்தனையும் கற்றறிந்த அறிஞர்களும், ஆழ்ந்த சிந்தனை கொண்ட ஞானிகளுக்கும்தான் இத்தகைய திறன் இருக்கும் என இத்தனைக் காலம் நம்பிவந்தோம். ஆனால் கார்டனர் இத்திறன் சிலருக்கு இயல்பாகவே இருக்கும் என்கிறார். இயல்பிலேயே இருக்கும் என்றால் எங்கே இருக்கும்?

v  தன்னிலை அறியும் திறன் குடியிருக்கும் இடம் மூளையின் முன் மடல். மூளையின் முன் மடல் சிறப்பாக இயங்குபவர்கள் தன்னிலை அறியும் திறனில் மட்டுமல்லாமல் மனிதத் தொடர்பு அறிவுத்திறனிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் முன்மாதிரி ஆளுமைகளாகத் திகழ்வார்கள்.

v  அப்படிப்பட்ட மூளையின் முன் மடலில் ஏதேனும் காயம் ஏற்படுமானால் கணித அறிவு, தர்க்க அறிவு, இசை அறிவு, காட்சி ரீதியான அறிவு உள்ளிட்டவைக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் ஒருவருடைய ஆளுமையில் பெருத்த மாற்றத்தை அது ஏற்படுத்தும்.

v  அதாவது மூளையின் முன் மடலில் காயம் ஏற்பட்ட நபருக்கு மந்தநிலை, சிந்தனைச் சிதறல், செய்வதறியாமல் ஸ்தம்பித்து நிற்பது இப்படித் தன்னிலை மறந்து போகும் நிலை உண்டாகும். தன்னிலை அறியும் திறன் என்பது ஏதோ அண்டம் கடந்த ஆன்மிகத்தோடு சம்பந்தப்பட்ட விஷயமல்ல. உடற்கூறுடன் நேரடியாகத் தொடர்புடைய அறிவியல் என்பதை எடுத்துரைக்கத்தான் இந்தத் தகவலை இங்குக் குறிப்பிடுகிறோம்.

நீங்களே வளர்த்துக் கொள்ளலாம்!

ü  நம்பிக்கை ஊட்டும் மற்றொரு விஷயத்தையும் கார்டனர் சொல்கிறார். அதாவது, சிலருக்குத் தன்னிலை அறியும் திறன் இயற்கையிலேயே இருக்கும் என்ற போதிலும் அனைவரும் முயன்றால் இத்திறனை வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

ü  நீங்கள் சென்றடைய வேண்டிய இலக்கைச் சரியாகத் தேர்ந்தெடுத்து, அதை நோக்கித் திட்டமிட உங்களுக்கு இத்திறன் அவசியம் தேவை. வாழ்க்கைச் சூழலோ, வேலைச் சூழலோ இடம் எதுவாகவும் இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்களுடைய நிலையை அறிந்து சரியாகத் திட்டமிட்டால் மட்டுமே அங்கு எதிர்ப்படும் சவால்களை எதிர்கொண்டு தீர்வு காண முடியும்.

ü  அப்படியானால், எல்லோருக்கும் தன்னிலை திறன் அவசியம்தானே! உங்களுக்குள் இருக்கும் தன்னிலை அறியும் திறனைப் பிரகாசமான அறிவு ஜுவாலையாக மாற்ற வேண்டும் எனும் ஆவல் உங்களுக்கு இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியவை:

Ø  டைரி எழுதுதல், வலைப்பூ எழுதுதல் போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது உங்களைச் சுற்றிலும் உள்ள விஷயங்கள் உங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைத் துல்லியமாகக் கவனிக்கத் தொடங்குவீர்கள்.
Ø  குறுகிய காலகட்டத்துக்குச் சில குறிக்கோள்களை வகுத்துக் கொள்ளுங்கள். நெடுங்காலக் குறிக்கோள்களும் வரையறுத்துக் கொள்ளுங்கள்.
Ø   உங்களுடைய இலக்கை நோக்கிய பாதையில் முற்படும் தடை கற்களைக் கண்டுபிடியுங்கள். உதாரணமாக, ஒரு தேர்வுக்கு நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் நேர நிர்வாகம், மன அழுத்த மேலாண்மை, முடிவெடுத்தல் உள்ளிட்ட விஷயங்களில் உங்களுக்குத் தடுமாற்றம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.
Ø  அப்போது ‘ஏன் எனக்கு மட்டும் இதுபோன்ற சிக்கல்கள் உள்ளன?’ என கவலைப்படாமல் ‘இதைக் கையாளுவது எப்படி? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ எனச் சிந்திக்கத் தொடங்குங்கள்.
Ø  உங்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள, தினமும் 10 நிமிடங்கள் அமைதியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து இன்றைய நாள் எப்படிக் கழிந்தது, நிகழ்ந்த சம்பவங்கள் உங்கள் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தின என்பவற்றை ஒரு திரைப்படம் போல ஓட்டிப் பாருங்கள்.
Ø  அருங்காட்சியகம், மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடுங்கள்.
Ø  பெரும் ஆளுமைகள் படைத்த சாதனைகளைப் பற்றிப் படிப்பதைக் காட்டிலும் அவர்கள் வாழ்க்கை அனுபவங்களைப் படிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சுவாரஸ்யத்தைக் கடந்தும் அது வாசிப்பவரின் அக உலகில் பல திறப்புகளை ஏற்படுத்தும்.
Ø  எனவே உலக வரலாற்றில் தடம்பதித்த சிந்தனையாளர்களின் சுயசரிதைகளைப் படித்துப் பாருங்கள். அடுத்தபடியாக, உங்கள் சுயசரிதையை எழுதத் தொடங்குங்கள்.

நான் தனி ஆள் இல்லை!

Ø  தனிமையிலே இனிமை காணும் சுபாவம் உங்களுக்கு இல்லை. ஆனால் தன்னிலை அறியும் திறனை வளர்த்துக் கொள்ளும் ஆவல் உள்ளது என்றால், குழுவாக இணைந்தும்கூட இத்திறனை வளர்த்துக் கொள்ளலாம். அதற்குச் சில திட்டங்கள் தருகிறார் கார்டனர்.
Ø  வாசகர் வட்டம் ஏற்படுத்தி அதில் வாரம் ஒரு முறை கூடி நீங்கள் ரசித்துப் படித்த புத்தகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். அதைத் தொடர்ந்து அந்தப் புத்தகம் தொடர்பான கலந்துரையாடலை நடத்துங்கள். குழுவாக இணைந்து கலந்துரையாடும்போது, வெவ்வேறு நபர்களின் கருத்துகள் அங்குப் பகிரப்படும்.
Ø  அதே போல, குழுவில் இடம்பெறும் ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்தமான புத்தகத்தைப் பற்றி பேசும்போது ஒரே சங்கமத்தில் பல்வேறு துறை சார்ந்த விஷயங்களைச் சிரமமின்றி விளையாட்டாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.
Ø  விவாத அரங்கம் உருவாக்கிப் பல்வேறு விஷயங்களைப் பல்வேறு கோணங்களில் விவாதிக்கலாம்.
Ø   கதைசொல்லி அமர்வுகள் நடத்தலாம். இது அறிவுத்திறனோடு உங்கள் கற்பனைத்திறனையும் வளர்க்க உதவும்.
Ø  இவை மட்டுமல்லாது வரலாற்றுக் கழகம், இசைக் குழு, நாடகக் குழு, கவிதை அரங்கம், புதிர் போட்டி, மாணவர் இலக்கியப் பத்திரிகை என பல விதங்களில் உங்கள் தனித்துவத்தை தனியாக அல்லாமல் குழுவாக இணைந்து உற்சாகமாக மெருகேற்றலாம்.
Ø  பிறரைப் பற்றித் தெரிந்து கொள்வது அறிவு. நம்மையே தெரிந்து கொள்வது ஞானம்என்கிறது சீனத் தத்துவமான தாவோயிசம். தன்னை அறிந்து கொண்டால் ஞானம் வரும் என்றால், ஞானத்திலிருந்து தொடங்கினால் அறிவு கைவசமாவதும் திண்ணம்தானே!

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...