-சக்தி ஜோதி
ஒரு பெண்ணுக்கு
பால் அறியாத பருவத்திலேயே அப்பாவாகவும் சகோதரனாகவும் ஆண் அறிமுகம் ஆகிவிடுகிறான். அப்போது
அவளுக்கு அவர்களை ஆண்கள் என்று உணரவே தெரியாது. பெண் குழந்தை வளர்ந்து வரும்பொழுது
உடைகளின் வழியாக ஓரளவு தன்னைப் பெண் என்று உணர்ந்து கொள்கிறது. ஆனால், விளையாட்டுகளின்
வழியாகவே தன்னைப் பெண் என்று முழுமையாக அறிந்து
கொள்கிறது. அவளுக்கு மட்டும் விலக்கப்படும் விளையாட்டுகளும், அண்ணனுக்கோ தம்பிக்கோ
அனுமதிக்கப்படும் விளையாட்டுகளும், அவர்கள் விளையாடும் வெளிகளும் ஆண் என்றும் பெண்
என்றும் பால் வேறுபாடுகளை நிலைப்படுத்தத் தொடங்குகிறது.
குறிப்பிட்ட
சில விளையாட்டுகள் மட்டுமே விளையாட பெண்களுக்கு இன்றுவரையில் அனுமதிக்கப்படுகின்றன.
அதற்கு உடலியல் ரீதியாகக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், பெண் என்று உணர்கிற இடங்களாக
விளையாட்டுத் தளங்களே அமைந்துள்ளன. விளையாட்டுகளின் வழியாகவே அல்லது விளையாட அனுமதிக்கப்படும்
இடங்களின் வழியாகவே ஒரு பெண்ணுக்கு பாலின வேறுபாடு முற்றிலுமாக அறிவுறுத்தப்படுகிறது.
சங்க
காலத்தில் ‘ஓரை’ என்று ஒரு விளையாட்டை பெண்கள் விளையாடினர்.
கடலலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பப்பட்ட
மணலிலும் இந்த விளையாட்டு விளையாடப்பட்டதை சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன. இந்த விளையாட்டுக்கு முன்பாகவோ பின்பாகவோ வண்டல் விளையாட்டு, பாவை விளையாட்டு,
அலவன் ஆட்டல் போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுவது உண்டு.
ஓரை
விளையாடும்போது மகளிர் தம் காற்சிலம்பு ஒலிக்க ஓடுவர். கடல் அலை மணலில் விளையாடும்போது
மகளிரின் கூந்தல் நனைந்து நீர் சொட்டும். ஆற்றில் ஓரை விளையாடும் மகளிரோடு இளைஞர் சேர்ந்து
கொள்வதும் உண்டு. என்றாலும், ஆண்களுடன் இணைந்து ஓரை விளையாடினால் அடக்கமின்மை என்றும்
கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பெண்களை உடலியல் ரீதியாக வேறுபடுத்திப் பார்ப்பது விளையாட்டுகளே.
போலவே,
காதல் வயப்பட்டவுடன் பெண் முதலில் விளையாட்டுகளையே கைவிடுகிறாள். பல நேரங்களில் அம்மா
கண்டித்தாலும் காதல் வயப்படாத வரையில் பெண் குழந்தைகள் ஆண்களுடன் இணைந்து விளையாடுவதை
நிறுத்துவதில்லை. ஆனால், காதல் உணர்வு தோன்றியவுடன் பெண்களுடனே கூட விளையாடாமல் தனிமைக்குள்
ஒடுங்கிவிடுகிறார்கள்.
‘தாதின் செய்த
தண் பனிப்பாவை
காலை வருந்துங் கையாறோம்பு என
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க அன்ன
நசை ஆகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே...’
சங்கப்
பெண்பாற் புலவர் பூங்கணுத்திரையாரின் குறுந்தொகைப் பாடலில் ‘பூந்தாதுக்களினால் செய்யப்பட்ட
குளிர்ச்சியான விளையாட்டுப் பாவை, தலைவி தன்னை எடுத்து விளையாடவில்லையே என வருந்துகிறது.
இந்தப் பூம்பாவையைக் காப்பாயாக எனத் தலைவியிடம் ஓரை விளையாடும் தோழியற் கூட்டம் சொல்லக்
கேட்டும், தலைவி விளையாட்டில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருக்கும்
தலைவியினுடைய பசலை நீங்குமாறு அவளுக்கு விருப்பமான ஒரு சொல்லைத் தலைவன் வந்து சொல்ல
இயலாதா’ எனத் தோழி கேட்கிறாள். தலைவனுடைய ஒரே ஒரு சொல்லுக்கு ஏங்குகிறவளாக தலைவி
இருக்கிறாள்.
அந்தச்
சொல் அவளுக்கு விருப்பமான சொல்லாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறாள். அவளுக்கு
ஆண் உடல் பரிச்சயம் ஆகும் முன்பாக அவனுடைய சொற்களினால் வசப்படுகிறவளாக இருக்கிறாள்.
அதனாலேயே சொற்களுக்குள் சிக்கிக்கொண்டு தடுமாறுகிறவளாகவும் இருக்கிறாள். பெண்ணுடலை
தன்வசப்படுத்துகிற சொற்கள் எப்பொழுதும் ஆணுக்கு ஆதரவானதாகவே இருக்கின்றன. ஆனால், அந்தச்
சொற்களின் வழியாகவே தன்னை உயிர்ப்பித்துக்கொண்டிருப்பதாக பெண் நினைத்துக் கொள்கிறாள்.
அவளுக்கு
விருப்பமான சொற்களை தலைவன் கூறத் தொடங்கியவுடன், அதுவரையிலான அவளுடைய வாழ்வில், அவளை
ஆட்கொண்டிருந்த பல்வேறு செயல்பாடுகள் அத்தனையும் உதிர்ந்து அவனைச் சுற்றியே அவளுடைய மனதை இயக்குகிறவள் ஆகிறாள். பெண்களுக்கு ஆண்கள்
மீதான நேசிப்புத் தொடங்குகிற காலம் என்பதையும்
அவர்கள் விரும்புகிற நபர்களையும் அந்தப் பெண்கள் வாழுகின்ற சூழலே தீர்மானிக்கிறது.
எனினும், பெண்களின் நேசிப்பு என்பது அவர்களின் மனத்திலிருந்து தொடங்குவதாக இருக்கிறது.
சங்க
இலக்கியத்தில், பொதுவாக தினைப்புனம் காக்கச் சென்ற இடங்களில் காதல் தொடங்கியதாக காட்சிகள்
அமைக்கப்பட்டுள்ளன. தலைவன் வேறு நிலத்தைச் சேர்ந்தவனாக இருப்பான். அவனைப் பற்றிய நேரடியான
எந்தத் தகவலும் இல்லாமலேயே தலைவி தன்னுடைய கண்களால் கண்டவுடன் காதல் கொள்கிறாள். பின்னர்
ஒருகால கட்டத்தில் திரைப்படங்களையும் நாடகங்களையும் பார்த்து, அந்த கலைஞர்களின் மீது
அன்பினை வளர்த்துக்கொண்ட பெண்கள் பலரும் உண்டு.
அதைப்போலவே
பெண்கள் படிக்க ஆரம்பித்து, கதைகள் வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் கல்கியின் வந்தியத்தேவனையும்,
ஜெயகாந்தனின் சாரங்கனையும், நா.பார்த்தசாரதியின் அரவிந்தனையும் நேசித்த பெண்களும் உண்டு.
‘கதை படிக்கிற பெண் குடும்பத்துக்கு ஆகமாட்டாள்’ என்கிற கருத்துக்கூட
ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் நிலவியது.ஒருவகையான மாய உலகத்திற்குள் பெண் தன்னை
இருத்திக் கொண்டிருந்தாள். இம்மாதிரியான அன்பு எந்தவிதமான வாழ்வியல் செயல்பாட்டிற்கும்
உதவாது என்று அவளுக்குத் தெரிந்தாலும், அதன் பின்னால் செல்கிறவளாக இருந்திருக்கிறாள்.
கதைகளின்
நாயகர்களைத் தொடர்வது போலவே சொந்த வாழ்விலும், நேரில் சந்திக்க வாய்க்கும் ஆணிடம் கற்பனையான
ஒரு காதலை கட்டமைத்திருக்கிறாள். பெண்களின் காதல் என்பது மிக முற்றிலுமாக மனம் மட்டுமே
இயக்குவதாக இருந்தது. இம்மாதிரியான காதல் நிறைவேறாமல் போகும் பொழுது பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.
சங்க காலத்தில் மடலேறிக் காதலைத் தெரிவிப்பது என்பது ஆணுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது போலவே இன்று வரையிலான சமூக அமைப்பு காதலைச் சொல்வதில்
ஆணுக்குக் கொடுத்திருக்கும் சுதந்திரம் அதிகம்.
அதைப்போலவே, திருமணத்திற்கு முன்பாக ஓர் ஆண் எதற்காக தற்கொலை
செய்து கொண்டாலும், ‘அது காதல் தோல்வி’ என்றோ, ‘ஒரு பெண் ஏமாற்றி
விட்டாள்’ என்றோதான் சொல்லப்படுகிறது. இன்று வரையிலும் பெரும்பாலும்
காதல் தோல்வியினால் பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று செய்தி வெளிவருவதில்லை. பெண்களின்
இம்மாதிரியான மரணங்கள் தீராத வயிற்றுவலி என்கிற ஒற்றைச் சொல்லில் மூடி மறைக்கப்படும்.
இந்த நிலையிலிருந்து இன்றைய பெண் சற்றே
நகர்ந்திருக்கிறாள்.
பெண்களுக்கு
ஆணுடைய தோற்றமும் தூரத்துச் செயல்களும் அவனைப் பற்றிய செய்திகளும் மட்டுமே அறிமுகம்
ஆன காலத்தில், மனம் மட்டுமே இயங்கும் நிலையில் பெண் இருந்தாள். இக்காலத்தில் திருமணத்திற்கு
முன்பாக ஆணுடைய உடலும் அவளுக்கு அறிமுகம் ஆகிறது. சங்க காலத்தில் அனுமதிக்கப்பட்ட இயற்கைப்
புணர்ச்சி, தற்காலத்தில் வேறு வடிவம் எடுத்திருக்கிறது.
சங்க
இலக்கிய இயற்கைப் புணர்ச்சிக்கு இடமும் கால வரையறையும் இருந்தது. களவு வாழ்வில் மெய்யுறு
புணர்ச்சியில் ஈடுபட்ட ஆணை, திருமண வாழ்வுக்குள் நெறிப்படுத்த தோழி, செவிலி போன்ற மனிதர்கள் இருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு
காதலைத் தொடங்கவும் முடித்துக் கொள்ளவும் ஒரு குறுஞ்செய்தி போதுமானதாக இருக்கிறது.
மேலும், சங்க இலக்கியங்களில் காதல் தோல்வியினால் தற்கொலைகள் நிகழ்ந்ததாகக் குறிப்பு
கள் இல்லை. ஆனால், அப்படி நிகழாமல் இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றுதான் சொல்ல
வேண்டும்.
பெண்களின்
நிறைவேறாது போகும் காதல் என்பது அவர்களின் மனத்தின் அடியில் அமிழ்த்து கொண்டிருக்கும்.
ஆனால், மனதில் அமிழ்த்தியிருக்கும் காதலுடன் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ள பெண் தயாராகும் நிலை என்பது இயல்பாக இன்று அமைந்திருக்கிறது
போலத் தோன்றுகிறது. இதை ஒருவிதமான மாயை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்விதமாக வேறு ஒரு
வாழ்வுக்குள் தன்னைப் புகுத்திக்கொள்ள நேர்கிற பெண்ணின் நிலையைப் பற்றி இ.எஸ்.லலிதாமதியின்
கவிதை ஒன்று...
‘நாதஸ்வரத்தில்
வழியும் இசை அழகுதான்
அதில் இல்லை நீ...
கழுத்தில் இடப்பட்ட மாலையில்
இல்லை உன் வாசம்...
சூழ நின்று வாழ்த்துபவர்களின்
வாழ்த்தில் இல்லை
என் வாழ்க்கை...
என் தலை மீது விழும்
ஒவ்வோர் அரிசியிலும்
இருக்கிறாய் நீ!’
சமீபத்தில்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு மாணவி தன்னுடைய அம்மா ஒரு குறிப்பிட்ட
பாடலை அவ்வப்போது பாடுவதைக் கேட்டிருப்பதாகவும், அப்பா வீட்டிலிருக்கும் நேரங்களில்
ஒருபோதும் பாட மாட்டார் என்றும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அந்தப் பாடலின் பொருளும்
அம்மாவின் குரலும் அம்மாவின் இளமைக்காலம் பற்றிய எதையோ ஒன்றை தனக்கு உணர்த்துவதாகச்
சொன்னார். ஒருவகையில் பெண் என்பவள் அவளுடைய
மனதின் ஆழத்தில் அமிழ்த்தியிருக்கும் ஆணுடன் தனக்குள் பேசுகிறவளாக இருக்கிறாள்.
குறிப்பாக
பாடல்களில் அவனை அடையாளம் காணுகிறவளாக இருக்கிறாள்.
பெற்றோரின் விருப்பத்திற்கு உட்பட்டு காதல்
செய்தவனை விட்டு விலகி வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள பெண் ஒப்புக் கொள்கிறாள்.
காலப்போக்கில் யதார்த்தத்தில் அவனை மறந்துவிட்டது
போலத் தோன்றும். ஆனால், அவளின் முக்கியத் தருணங்களில் அவளுக்கு வேராகவும் நீராகவும்
அவனுடைய நினைவு இருப்பதாக, கலை இலக்கியா ஒரு கவிதையில் சொல்கிறார்.
‘நாம் சந்திக்கவே
முடியாது போகலாம்
வாழ்க்கைச் சிக்கலின் நடுவே
கடக்கும் பாடலாய்
நமது நேசம் சிறுத்துப்போகலாம்
காலம் பதியமிடும் புதரில்
நீ இருக்குமிடம்
மறைந்தும் போகலாம்
உன்னைக்காட்டிலும்
யாரையேனும் நேசிக்கச் சூழல் நேரலாம்
அப்போதும்
என் பேனா வழி வரும்
வார்த்தைக்கும் வரிக்கும்
நீதான் வேரும் நீரும்...’
ஒரு
பெண் தான் விரும்பிய காதலனை திருமணம் செய்ய விடாமல் பெற்றோர் விருப்பத்துக்கு கட்டாயத்
திருமணம் நிகழ்த்தப்படும் போது, தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் கேட்டு காதுக்குள்
புளிப்பேறிப் போய்விட்டதாகத் தோன்றுகிற வசனம் ஒன்று... ‘அவன் என்னுடைய பிணத்துக்குத்தான்
தாலி கட்டுவான்’ என கதாநாயகி சொல்வாள். இது அப்படியே ‘பிணம்’ என்று பொருள் கொள்ள வேண்டியது இல்லை. பெண்ணுடைய மனம் என்பது காதலனிடம்
இருக்க, உடல் மட்டுமே வேறு ஒருவருக்குச் சொந்தமாகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
உண்மையில்
இந்த மாதிரியான சொல்லாடல் இந்தத் தமிழ் திரைப்படங்கள் உருவாக்கியது அல்ல. சங்கப் பெண்பாற்
புலவர் பூங்கணுத்திரையாரின் மற்றுமொரு குறுந்தொகைப் பாடலில், தோழியிடம் தலைவி சொல்வதாக
அமைந்துள்ளது. இந்தப் பாடலில், தலைவியை அயலவர் பெண் கேட்டு வருகின்றனர். பக்கத்து ஊரில்
பெய்த பெருமழையினால் பெரும் சேதம் விளைந்து விலங்குகள் ஆற்றில் அடித்து வந்து கொண்டிருக்கிறது.
இது தெரியாமல், ஆழமான குளத்தில் மீன் பிடிப்பதற்கு வலை இடப்பட்டிருக்கிறது. அந்த வலையில் மீன் கிடைப்பதற்குப் பதிலாக செத்துப்போன விலங்குகள்தான்
சிக்கும். அது போல அயலவரின் இந்தத் திருமண முயற்சியும் நிகழும். அவர்களுக்குக் கிடைக்கப்
போவது உயிர்த்துடிப்புள்ள மீன் அல்ல, செத்துப்போன விலங்கின் சதைப்பொருள் மட்டுமே என்பதாக
பொருள்பட பாடியுள்ளார்.
‘காணினி வாழி
தோழி யாணர்க்
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட
மீன்வலை மாப்பட் டாஅங்
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே...’
காதல் வசப்பட்ட பெண்ணுக்கு அவளுடைய மனம்
மட்டுமே
முழுமையாக அவளின் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. பெண்கள் கல்வி கற்று, விழிப்புணர்வு
அடைந்திருக்கும் இந்தக் காலத்தில் காதல் தோல்வியினால்
ஏற்படுகிற தற்கொலைகளின் சதவிகிதம் சற்று குறைந்திருக்கிறது போலத் தோன்றுகிறது. ஆனால்,
பெண் மனம் எத்தனை காலமானாலும் அதன் அடியாழத்தில் ஒரே விதமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.அவள் விரும்பியகாதலை காலம்
முழுக்க தன்னுடைய மனதின்
அடியாழத்தில் அமிழ்த்தியிருக்கிறாள்.
பூங்கணுத்திரையார்...
சங்க
காலப் பெண்பாற்புலவர்களில் ஒருவர். இவரது பெயரைப் பூங்கண் உத்திரையார் எனவும் குறிப்பிடுகின்றனர்.
ஆதிரை என்பது போல உத்திரை என்பதும் ஒரு பெயர். உத்திரை நாள்மீன் என்பது 27 நாள்மீன்
வரிசையில் 12வது மீன். உத்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் உத்திரை என்று பெயரிட்டனர்.
புலவர் என்பதால் ‘உத்திரையார்’ என்னும் சிறப்புப் பெயரால்
அழைத்தனர். இவரது கண்ணில் பூ விழுந்திருந்தது.
அதனால்
இவரை பூங்கண் உத்திரையார் எனச் சொல்வதாகவும் குறிப்பு உள்ளது. பூங்கண் என்பது காவிரியின்
வடகரையிலுள்ள தோரூர் என கல்வெட்டுகளால் (M.E.R. No. 153 of 1932) அறியப்படுகிறது. எனவே,
பூங்கண் ஊரைச் சேர்ந்தவராகவும் உத்திரை இயற்பெயர் கொண்டவராகவும் சொல்லலாம். சங்க இலக்கியத்தில் இவர் எழுதியதாக மூன்று பாடல்கள்
தொகுக்கப்பட்டுள்ளன. குறுந்தொகை 48, 171, புறநானூறு.
ஓரை
விளையாடுதலின் காட்சிகள்...
தோழியருடன்
தொகுதி வாய்ந்த பரல்கள் ஒலிக்க ஓரை விளையாடும் தலைவியைக் கண்டபடியிருக்கும் செவிலித்
தாய். (அகம் 49-16)
ஓரை
விளையாடும் பெண்கள் சேற்றினைக் கிளறி ஆம்பல் கிழங்கோடு ஆமை முட்டையை எடுப்பார்கள்.
(புறநானூறு 176)
மகளிர்
ஆற்று வெள்ளத்தில் இளையரோடு ஆடுவர். இப்படி ஆடாவிட்டால் மகளிரின் உடல்வளம் தேயும்.
(நற்றிணை 68)
மைந்தர்
மகளிரோடு கூடி ஓரையாடுதல் அவர்களது அடக்கமின்மையைக் காட்டும். (கலித்தொகை 82-9)
சங்கச்
செய்தி...
‘ஓரை’ என்பது சங்க கால மகளிரில்
இளையோர் விளையாடிய விளையாட்டு களில் ஒன்று. ஓரை என்னும் சொல்லை விளையாட்டைக் குறிக்கும்
பொதுச்சொல்லாகவே கொள்ள வேண்டியுள்ளது. ‘ஓரை ஒலித்தல்’ தொழிலைக்
குறிக்கும். அனேகமாக ஓடிப் பிடித்து விளையாடுதல் போன்று ஆரவாரம் எழுமாறு ஆடப்படும்
ஆட்டங்களைக் குறித்தது. ‘கடலா கரையா’ என்று ஓடிப் பிடித்து
விளையாடும் விளையாட்டு என்றும் சொல்லலாம்.
No comments:
Post a Comment