– வா.மு.கோமு
சித்ராதேவியை நான் நான்கைந்து வருடங்களாக காதலித்து பின்பாக அவள் சுயபுத்தியை இன்ச் பை இன்ச்சாக தெரிந்த பின்பாகவும் அவளையே கல்யாணம் செய்து கொள்வேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அப்புறம் அவளை அவள் விருப்பம் போல தனியே கழட்டி விட்டு விட்டு, ஒண்டிக்கட்டையாய் நான் என் வீட்டில் கிடப்பேன் என்பதையும் நான் நினைத்தே பார்க்காத வகையில் சேர்த்திக் கொள்ளலாம்.
எல்லோருமே விதம் விதமாய் வாழ்க்கையை வாழ்ந்து கழித்துக் கொண்டிருக்கிறார்கள். சித்ராதேவி வாழும் விதமும் ஏன் நான் வாழும் விதமும் கூட வாழ்க்கையோடு சேர்த்தி தான். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் இதிலெல்லாம் ஒன்றுமே இல்லை தான்.
மனைவியாகப்பட்டவள் தனக்கு மட்டுமே உரியவளாக இருக்க வேணுமென்று ஒவ்வொரு கணவன்மார்களும் நினைத்துக் கொள்கிறார்கள். அழகான மனைவியை பெற்ற கணவர்கள் அவளை பேருந்திலோ, டூ வீலரிலோ, காரிலோ ஏனையோர் வாய் பிளந்து பார்க்கும் விதமாய் அரவணைத்து அழைத்துச் செல்வதில் கவனமாய் இருக்கிறார்கள். கொஞ்சம் ஏமார்ந்தாலும் அல்லது கண்ணயர்ந்தாலும் அருகிலிருப்பவன் அவளை தட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவானோ என்ற கவலை உள் மனதில் ஓட தோளில் கைபோட்டு வைத்துக் கொள்கிறார்கள்.
நானும் அந்த வகையில் சேர்த்தி தான். ஆனால் எல்லோரும் வாய் பிளந்து பார்க்கும் விதமான நிறம் அவளுடையது அல்ல. ஆனால் அவள் என்னுடன் கிளம்புகையில் பயங்கரமான கலரில் ஒரு சுடிதாரும், பயங்கரமாய் முகப்பூச்சும், பயங்கரமாய் உதட்டுச் சாயமும், பிஸ்ஸு பிஸ்ஸு என துணிமீது அடித்துக் கொள்ளும் பயங்கர வாசனையும் என்னை அதீத மிரட்சிக்கு உள்ளாகி விடும்!
அப்போது எனக்கு கொஞ்சம் உலகக் கடுப்பாய் இருக்கும். சாலையில் டூவீலரில் செல்கையில் மற்றோர் என்னை பரிதாபமாக பார்க்க வைத்து விடுவாள் சித்ராதேவி. போக எந்த ஊரிலும் அவளுக்கு நட்பு வட்டம் இருக்கும் போல. ‘டேய் சுரேசு, நீ இங்க என்ன பண்றே? டேய் அரவிந்து.. அப்ப பாத்த மாதிரியே இருக்கீடா இன்னும்’ என்று சாலையில் யாரைப் பார்த்தாலும் வண்டியை நிறுத்தச் சொல்லி கதையடிக்க ஆரம்பித்து விடுவாள்.
கடைசியாக, ’இந்தப் பிள்ளைப்பூச்சி தான் எங்க வீட்டுக்காரரு’ என்று நகம் கொறித்துக் கொண்டிருக்கும் என்னை அறிமுகப்படுத்தி வைப்பாள். போக,’வீட்டுக்கு வாடா ஒரு நாளைக்கி, நாங்க சீனாபுரத்துல தான் இருக்கோம்! என் நெம்பரை நோட் பண்ணிக்கோ!’ என்று வேறு அதையும் அவர்களுக்கு சொல்லி வைப்பாள்.
எனக்கென்னவோ அப்பாவிக் கணவன்மார்களுடைய மனைவிகள் சுறுசுறுப்புக்கு பேர் போனவர்களாகவும், சண்டைக்கு அஞ்சாதவர்களாகவும் இருப்பதாக தோன்றுகிறது. சித்ராதேவியை நல்லபெண் என்று உள்ளூரிலேயே யாரும் சொல்வதில்லை. ஆனால் அவள் உள்ளூரில் ஒன்றிரண்டு பெண்களுடன் தொடர்பில் இருந்தாள். அந்த ஒன்றிரண்டு பெண்களும் கணவன் என்று பெயருக்கு வீட்டில் ஒரு அப்பாவியை வைத்துக் கொண்டு வெளியில் கணவன் என்று கைக்கு ஒரு ஆளை வைத்திருப்பவர்கள். அவர்கள் தறி முதலாளியாகவோ, தோட்டம் காடு வைத்து வட்டிக்கி பணம் கொடுப்பவர்களாகவோ இருந்தார்கள். ஓரளவிற்கு விசயத்தை இந்த நேரம் கிரகித்துக் கொண்டிருப்பீர்கள் என நான் நினைக்கிறேன்.
ஆக இது எந்த ஊர்? என்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும். இப்போதைக்கு அது கிராமம் என்று வைத்துக் கொள்ளுங்கள். திருமணமான கையோடு ஊரில் கேவலம் சில நாட்கள் பேசுவார்கள் என்று தான் சீனாபுரம் வந்து வீடு வாடகைக்கு எடுத்து சட்டி பானை வாங்கி கஞ்சி காய்ச்சி குடித்துக் கொண்டிருந்தோம். இந்த ஊர் வழியாக பெருந்துறைக்கு பலமுறை சித்ராதேவி என் டூவீலரின் பின் இருக்கையில் அமர்ந்திருக்க கடந்து சென்றிருக்கிறேன். அப்போது நான் இங்கே வீடெடுத்து அவளோடு குடும்பம் நடத்துவேன் என்று வழக்கம்போல நினைத்தே பார்க்கவில்லை. அப்போதெல்லாம் சித்ராதேவி எல்லா புதிய திரைப்படங்களையும் வரிசையாக பார்த்து ரசித்தவண்ணமிருந்தாள்.
அதற்காக சித்ரதேவி ஒரு சினிமா பைத்தியமென்று முடிவு செய்து விடாதீர்கள். அவள் சினிமாவிலிருந்து எதையோ கற்றுக் கொள்ள முயற்சிக்கிறாள் என்பதை மட்டும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அது என்ன இழவு? என்று எனக்கு இன்று வரை தெரியாது. போக இப்போது அவள் அவளுடைய கிராமத்தில் அவள் அப்பாவோடு இருக்கிறாள். வீட்டுக்கு ஒத்தைப் பிள்ளை அவள். அவள் அப்பா என்கிறவர் நிதமும் ஏதாவது ஒரு வேலை செய்து மாலையானதும் கொஞ்சமாய் கிறுக்கு வெள்ளம் சாப்பிட்டு கட்டிலில் சாய்ந்து விடுபவர்.
என் காதல் கதையை நான் சொல்லத் துவங்கலாம் என்றால் முன்பாகவே திருமணம், தனித்து வாழ்தல் என்று கப்பலோட்டி விட்டேன். இனி அந்தக்காதலில் என்ன இருக்கப்போகிறது? வெறும் சில முத்தங்களும், தொணதொணப்புகளும், சில சண்டைக்காட்சிகளும், ஒருமுறை கருக்கலைப்பும் என்று சுவாரஸ்யம் மிகுந்தவைகள் தான். கருக்கலைப்பா? என்று வேறு ஆச்சரியம் கொள்ளதீர்கள். அது வேண்டவே வேண்டாமென நான் சித்ராதேவியிடம் காலில் விழா குறையாக கேட்டுக் கொண்டேன். ஆனால் அவள் ஊரில் என்னை கேவலம் பேசுவார்கள்! கலியாணத்துக்கு முந்தி லோடாயிட்டேன்னு வீட்டுக்கு வீடு பேசுவார்கள்! என்றாள். கலியாணம் செய்து கொள்கிறேன் என்று நான் சொன்னதும்.. அதுமட்டும் கேவலமில்லையா? என்று ஒத்தைக்காலில் நின்று கருக்கலைப்பு செய்து கொண்டாள். அந்தச் சமயம் பார்த்து கையில் பத்து பைசா என்னிடமில்லை. கடன் உடன் வாங்கி கிட்டத்தட்ட நான் சரக்கடித்தது போக ஐய்யாயிரம் ரூவாயில் அவளுக்கு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொடுக்க மட்டும் மிச்சப்பட்டது.
பின்பாக ஒருவருடம் கழித்துத்தான் அவள் என்னைக் கட்டிக் கொண்டாள். சொல்ல மறந்து விட்டேன் அந்த ஒருவருடத்தில் கருக்கலைப்புக்கு போகாமலிருக்கும் விதமாய் சில முன்னேற்பாடுகளுடன் பொறுப்பாய் நடந்து கொண்டோம். திருமண நாள் நெருங்குகையில் சித்ராதேவி ஒரு இரவு நேரத்தில் என்னை அழைத்தாள். கொஞ்சம் துணிமணிகளுடன் என் இருசக்கர வாகனத்தில் ஏறியவள் குன்னத்தூர் வரை வண்டியை விடச் சொன்னாள். என்ன ஏது என்று நான் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. வண்டியில் வருகையில் யாரோ ஒருவரிடம், அல்லது ஒருவனிடம் கொஞ்சம் கராறாய் சப்தம் போட்டபடி வந்தாள். கொஞ்சம் கெட்ட வார்த்தைகளும் விழுந்து கொண்டிருந்தது.
விசயத்தை என்ன என்று கூட யூகிக்க முடியவில்லை என்னால். ஒருவேளை அப்படியிருக்குமோ? இப்படியிருக்குமோ? என்று பலவாறு யோசனையில் தான் நான் வாகனத்தை அந்த இரவில் செலுத்திக் கொண்டிருந்தேன். எங்காவது போலீஸ்க்காரர்கள் சாலையில் நின்று கைகாட்டி நிறுத்தி விசாரித்தால் என்ன சொல்வது? என்ற யோசனையில் இருக்க அவள் யாரிடம் பேசிக்கொண்டு வருகிறாள் என்பதில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.
திடீரென அவள் வண்டியை நிப்பாட்டச் சொன்னாள். குன்னத்தூர் நாம போக வேண்டாம் என்றாள். என்ன ஏது? என்றேன் இந்த முறை. ஏன் அதைச் சொல்லியே தான் ஆகணுமா? என்றாள். கடுப்பில் இருப்பாள் போலிருக்கிறது. உன்னோட நண்பர்கள் யாராச்சும் ரூம் எடுத்து தனியா இருக்காங்களா? நான் இனி வீடு போக முடியாது. கூட்டிட்டு போ! காலையில நாம எதொ ஒரு கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்! என்றாள். நான் உன்னைக் கட்டிக்கிறேன்! என்று சொன்னது மாதிரியும் இருந்தது.
கல்யாணம் என்றதும் எனக்கு பயமாக இருந்தது. ஊரே கேளு நாடே கேளு என்று பரவிய விசயம் தான். சொந்தத்தில் பலர் வீடு வந்து அவளை விட்டுத் தொலையடா கண்ணா! என்றார்கள். சொன்னவர்கள் யாரும் பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறேன் என்று சொல்லவில்லை. இன்னாரு பையன் இப்படி இன்னாரு பிள்ளையோட தெருத் தெருவா பைக்கில வச்சுட்டு சுத்துறான் என்று காதில் கேட்டால் தூக்குப் போட்டு சாவலாமென அவர்களுக்கு இருக்கிறதாம். இருக்கட்டும். என்ன இருந்தலும் சித்ரா தேவியை கட்டி அணைத்தால் உலக மகிழ்ச்சிகள் வந்து என்னை அணைத்துக் கொள்கிறது. என்ன இருந்தாலும் சித்ராதேவி என் கீழுதட்டைக் கடித்து சப்பி உறிஞ்சினால் சொய்ய்ங்கென நான் வான் நோக்கி எவ்வுகிறேன். போக அவளின் பின்புறங்களில் என் கைகளை வைத்து அழுத்தினால் .. சொல்லமாட்டேன் வெக்கமா இருக்குது.
யார் கீழுதட்டை கடித்து உறிஞ்சினாலும் சொய்ய்ங்கென நீ வான் நோக்கிச் செல்லலாம் என்று விளக்கம் சொல்ல ஒரு உருப்படியான நண்பன் இல்லாமல் போய் விட்டேன் பாருங்கள்! எல்லா நண்பர்களும் புத்திமதி சொல்வதிலேயே குறியாய் இருந்தார்கள். குறிப்பாக சித்ராதேவி மாதிரியான பெண்ணோடு பழகுவதை விடு! அதை மட்டுமே திரும்பத் திரும்ப போதித்தார்கள். சித்ராதேவி போல ஒருத்தியைக் கைகாட்டி இதைப்பாரு மாப்ள நீ! என்று ஒருவனும் கைகாட்டவில்லை.
சித்ராதேவி நல்லவளா கெட்டவளா? என்பதை பற்றியெல்லாம் திருமணத்திற்கு பின்பாகத்தான் யோசிக்க ஆரம்பித்தேன். கெட்டுது கழுதை! என்கிறீர்களா? முன்பாகவே சொல்லி விட்டேன் நான். வாழ்க்கையை பலர் பலவிதங்களாய் வாழ்ந்து கழிக்கிறார்கள். சித்ராதேவியோடு நான் சரியாய் பதினொரு மாதங்கள் குடும்பம் நடத்தினேன். சித்ராதேவி பணிக்கு என்று எங்கும் கிளம்பிப் போகும் உத்தேசம் ஏதுமின்றி முதல் மூன்று மாதத்தை வீட்டில் ஓட்டினாள். காதல் மனைவிக்கு சம்பாதித்துப் போடும் கணவனாக என்னை நான் உணர்ந்து தறிக்குடோனில் இரவு, பகல் என்று கிடந்தேன்.
சித்ராதேவியை ஒரு நாள் மதியம் வீடு வருகையில் உடலில் துணியில்லாமல் கட்டிலில் பார்த்தேன். முன்பாக ஒருவன் என் வருகையை அறிந்ததும் கீழே கிடந்த துணிமணிகளை அள்ளிக்கொண்டு விரைந்து வெளியேறினான். அவனை இதற்கும் முன்பாக நான் பார்த்ததே இல்லை. கோபம் வந்திருக்க வேண்டும் என்கிறீர்கள். சரிதான். சித்ராதேவி அங்கு எதுவும் நடவாதது போல நிதானமாய் எழுந்து கட்டிலோரத்தில் கிடந்த நைட்டியை எடுத்தாள்.
கொஞ்சம் சிரம்மாய் இருக்கிறது எனக்கு. கல்யாணம் ஆன காலம் முதல் ஒரு இரவு கூட தாலி கட்டிய எனக்கு அவள் தன் முழு உடலை பிறந்த மேனியாய் காட்டியதில்லை. எல்லாமே விளக்கணைத்து இருட்டில் தான். கோபத்தில் அவளை கன்னத்தில் ஒன்று வீசினேன். அடுத்த வீச்சை அவள் தடுத்துக் கொண்டாள்.
‘இந்த அடிக்கற வேலையெல்லாம் வெச்சுக்காதே கண்ணா! அப்புறம் சுத்தப்படாது பாத்துக்க!’
‘ஏண்டி இப்படி பண்ணுறே? இது உனக்கே நல்லா இருக்கா?’ என்றேன்.
‘என்னமோ என்னையப் பத்தி ஒன்னுமே தெரியாதவன் மாதிரி பேசுறே? என்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சுதானே கட்டிக்கிடே! அப்புறமென்ன?’
அப்போ என் நண்பர்கள் சொன்னது அனைத்தும் உண்மைதானா! சித்ராதேவி அவர்கள் சொல்வது போலவெல்லாம் இருக்க மாட்டாள், நல்லவள் என்று நான் தான் நம்பிக்கொண்டு இருந்தேனா? ஒரு நூல் கூட தெரியவில்லையே! யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தாள் என்றால் ஒன்று நண்பன் என்பாள், இல்லை அது எங்க அண்ணன் மாதிரி என்பாள். நம்பித் தொலைத்தவன் நான்.
சரி இதற்கு ஒரே முடிவாய் அவளிடம் அமர்ந்து பேச்சைத் துவங்கினேன். அவளோ தன் வாழ்க்கையே நாசமாப்போச்சு! என அழுதாள். என்ன இருந்தாலும் சித்ராதேவி அழுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேலைக்கு கிளம்புவதாயும் இந்தக்காலத்தில் இருவர் சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியுமென்றும் அவள் பேசிக் கொண்டிருந்தாள். இந்த வாழ்க்கை நானாக தேடிக் கொண்டது. நாளை பிரிந்து வீடு போய் கிடந்தாலும் ‘அப்பவே சொன்னம்ல மாப்ளே!’ என்று எல்லோரும் பேசிச் சாகடிப்பார்கள். ஒருவழியாக சமாதானமாகி மீண்டும் எங்கள் காதல் வாழ்க்கை சீனாபுரத்தில் நகரத் துவங்கியது. அவள் சில சத்தியங்களை எனக்கு செய்து கொடுத்திருந்தாள்.
நான் இந்த மாதிரி வேறொருத்தியோட இப்படி நம்ம வீட்டுல கிடந்திருந்து நீ பாத்திருந்தா என்ன பண்ணியிருப்பே? என்றேன் அவளிடம். கொன்னுபோடுவேன் உன்னை! என்றாள்.
ஆனால் எப்படிக் கட்டிகாத்தும் என் வாழ்க்கை பயங்கர கேனைத்தனம் நிரம்பியதாக மாறி விட்டது. அவளது அலைபேசியில் ஆண்கள் பெயர்களாகவே இருந்தன. வரும் அழைப்புகள் அனைத்தும் சித்ரா இருக்காப்பலைங்களா? என்று என்னைக் கேட்டன. குளிச்சுட்டு இருக்காப்லைங்க! என்றே சொல்ல முடிந்தது என்னால். இல்ல இன்னிக்கி ஈரோடு போலாம்னு சொன்னாப்லைங்க! என்று பேச்சு வர, நானாக கட் செய்து டேபிள் மீது வைத்து விட்டு சுவற்றை வெறித்துக் கொண்டிருப்பேன். நானாக என் வீடு போய் விடுவது அவ்வளவு நல்லதா? இல்லை அவளாக அவள் வீடு போய் விடுவது நல்லதா? ஆக ஒரு முறை இரண்டு நாட்கள் வீடு வராத சித்ராதேவியை அலைபேசியில் அழைத்தேன். ஊட்டியில் கம்பெனி டூர்ல வந்திருக்கேன். நைட்டு கூப்பிடறேன் கண்ணா! என்று சொல்லி விட்டு அணைத்துக் கொண்டாள். நான் திரும்பவும் என் கிராமத்திற்கு வந்து விட்டேன்.
அவளது அழைப்பும் பின்பாக எனக்கு வரவும் இல்லை. ஆயிற்று இப்போது நான்கைந்து மாதம். பெருந்துறையில் வேறொருவன் டூவீலரின் பின் இருக்கையில் அவள் சென்று கொண்டிருப்பதை இன்று மதியம் பார்த்தேன். இப்படியான ஒரு அழகிய வாழ்க்கை திருப்புக் காட்சியாக வரவே அந்த ஞாபகத்தில் அங்கேயே வெகு நேரம் நின்றிருந்தேன். எந்த மாப்பிள்ளைகளும் தேடிவந்து, ‘நான் அப்பவே சொன்னேன் கேட்டியா மாப்ளே!’ என்று என்னிடம் கேட்கவே இல்லை. அவர்கள் என் முகம் கண்டாலே வேறு புறமாக பார்த்துப் போய் விடுகிறார்கள் அல்லது நானே முகத்தை திருப்பிக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment