வழக்கமாக பிச்சையா வாத்தியார் ராமநேரி பஸ் ஸ்டாண்டிலேயே தான் இறங்கிக்
கொள்வார்.
அந்த பஸ் ஸ்டாண்டை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பஸ் ஸ்டாண்டை ஒட்டி வாய்க்கால் . நல்ல ஓடுகால் உள்ள ஒன்று அது , தண்ணீர்
பாசிப் பச்சை நிறத்தில் ஓடிக்கொண்டு இருக்கும். பக்கத்து
வயல்களிலிருந்து வடிகிற தண்ணீர் வாய்க்காலில்
கலப்பதால் தண்ணீரில் கொட்டாரஞ் சம்பா நெல் வாடை அடிக்கிறது போல்
நினைத்துக் கொள்வார். .கால் கை அலம்புகிற மாதிரி ஒரு சின்னப் படித்துறை
உண்டு. எண்ணி நான்கைந்து படிகள். மிஞ்சிப்
போனால் நான்கு பேர் சேர்ந்து உட்கார்கிற அகலம்.
கடைசிப் படி ஓரம் தண்ணீர்ப்பாம்பு தலையை உயர்த்திக்கொண்டு
கிடக்கும். நடக்காது என்று தெரியும். இருந்தாலும் என்றைக்காவது
ஒரு நாள் இந்தக் படிக்கல்லில் தண்ணீருக்குள் காலைத் தொங்கப் போட்ட படி
உட்கார்ந்து ராதா பாயும் அவரும் பேசிக்கொண்டு இருக்கவேண்டும் என அவர் இந்தப் பக்கம் வரும் போது எல்லாம்
நினைத்திருக்கிறார். வயதான காலத்தில்
இது எல்லாம் என்ன நினைப்பு என்று அவருக்கு தப்பாகப் பட்டதே கிடையாது.
பழுத்த வேப்பிலை சுற்றிச் சுற்றி மரத்திலிருந்து தரைக்கு இறங்குவதைப்
பார்க்கிறது போல சந்தோஷமாகவே அது இருந்திருக்கிறது அவருக்கு..
அவர் பெருமாள்பட்டியில் வேலை பார்க்கும் போதே இப்படித்தான். வடக்கு கிராமம் திரும்பி கிழக்குப் பக்கம் வரும் போது இரண்டு
எட்டு நடந்தால் தேர் முட்டி . அப்போதே தேர் ஓடாமல்
தான் கிடந்தது. எண்ணெய் மக்கு எல்லாம் போய் புழுதி படிந்து நிற்கும். தேர் நிழலில் உட்கார்ந்து
வெள்ளரிக்காய் விற்கிறதற்காக சாக்கை விரித்து குளத்துப்பேரிக்காரி
நான்கைந்து பேர் இருப்பார்கள். யார் வளர்த்தார்கள் என்று தெரியாது.
ஒரு வெள்ளாட்டுக் கிடா சீத் சீத் என்று செருமிக்
கொண்டு நிற்கும். முன்னால் சினைக்கு நிற்கிற வெள்ளாட்டின்
மேல் காலைப் போடப் போவது போல அடிவயிற்றில் பழுக்கக் காய்ச்சின தாமிரக் கம்பியோடு அது நிற்பதை
பிச்சையா நிறையத் தடவை பார்த்திருக்கிறார். ஒரு
ஜோலியும் இல்லாவிட்டால் கூட, அந்த இடத்தின் வாசனைக்காக தேரடிப் பக்கமாக வடக்கு கிராமத்தின்
வழியாகப் போய் எதிர் சுற்றாகப் பள்ளிக்கூடம் போனது
உண்டு.
இன்றைக்கு பென்ஷன் வாங்க வீட்டை விட்டுப் புறப்படும் போதே சுணங்கி விட்டது. பதினொன்றரை மணி தாமரைச்செல்வி பஸ்ஸில் தான்
புறப்பட முடிந்தது. வேணி ராணி சிற்றுந்து சீக்கிரம்
வந்துவிட்டுப் போய்விட்டது. அது தவிர , இவர்
புறப்படுகிற நேரத்துக்குச் சரியாக சீதையுடைய அப்பா வந்துவிட்டார். மருமகளின் தகப்பனார் என்பதால் மட்டும் அல்ல, இரண்டு
சம்பந்திகளில் இவரை பிச்சையாவுக்கு ரொம்பப்
பிடிக்கும். மில்லில் டைம் கீப்பராக இருந்து நல்ல அந்தஸ்தாக
ரிட்டையர் ஆனவர்தான். பார்க்கப் போனால் இவரை விட ஒரு கை உசத்தி . ஆனால் ‘புலவர்
வீட்டு சம்பந்தம் கிடைக்கணுமே’ என்று அவரே விருப்பப் பட்டுதான் இவருடைய இரண்டாவது மகனுக்குப் பெண்ணைக்
கொடுத்தார்.
புலவர் என்பது பட்டப் பெயர். தமிழ் வாத்தியாராக இருந்த பிச்சையாவை ஊருக்குள் புலவர் வீடு என்றுதான் சொல்கிறார்கள்.
அதுவும் நன்றாகத்தானே இருக்கிறது என்று பிச்சையா
நினைத்துக் கொள்வார். யாராவது பிரியமாக வந்து கேட்டால் திருமண வாழ்த்து எழுதிக்கொடுப்பார்.
அவர்களாகவே வாழ்த்துப் பா இயற்றியவர்
புலவர் பிச்சையா என்று இடது பக்கத்திலும், வாழ்த்துவோர்
என்று வலது பக்கத்திலும் போட்டுக்கொள்வார்கள்/
ராதா பாய் கூட, ஒரு தடவை, ‘புலவர், புலவர் என்று உங்களைச் சொல்லுதாங்களே.
வில்லுப் பாட்டுப் படிப்பீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். பிச்சையா சொல்வது போல் சொன்னால், ராதா பாயை
அவர் என்றோ அவள் என்றோ குறிப்பிட மாட்டார். அது, அது
என்றுதான் சொல்வார். ’அது வாடாமல்லிக் கலர் சேலை கட்டி
இருந்துது’, ’அதுக்கு உடம்புக்குச் சரியில்லை
போல, முகம் சீர் சீர்னு இருந்துது’, ’அது ஊரிலே
கொடை. மகன் வீட்டுக்குப் போயிருக்கும்’. ’அது லைஃப்
சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டுது’. இப்படித்தான் சொல்வார்.
இவர் போலவே பென்ஷன் வாங்க பாங்குக்கு வருகிற ஜெபரத்னம் நாடாருக்கும் ராதா பாயைப் பிடிக்கும். ‘என்னவே உங்க
ஆளைக் காணோம். வந்துட்டுப் போயாச்சா?’ என்பார். ஜெபரத்னம் அப்படிச் சொல்வது பிச்சையாவுக்குப் பிடிக்கும். காட்டிக்கொள்ளாமல், ‘கிழங்
கட்டைகள் ஆயாச்சு. இதிலே உம்ம ஆளு எம்ம ஆளுண்ணு
என்ன இருக்கு. முப்பது வயசுலே பார்த்தமா. நாப்பது வயசுலே பழகுனமா? என்னமோ
பென்ஷன் வாங்க வருகிற இடத்துலே நீ யாரு, நான்
யாருன்னு தெரிஞ்சுக்கிட்டது, அவ்வளவுதான்.
நிக்கிறது ஆம்பிளை பொம்பிளை ஞாபகமே அத்துப் போன
இடம்.. வடக்கே திரும்புறதுக்குப் பதிலா தெக்கே திரும்பினா ஜோலி முடிஞ்சது. உம்ம கூடப் பேசினால் உம்ம ஆளு. எங்கிட்டே
பேசினா ஏம் ஆளு. அவ்வளவுதான்’ என்பார்.
இப்படிச் சொல்லிவிட்டு, கொஞ்சம் வருத்தம் உண்டான முகத்துடன், ‘நானும்
இதுவரை அதைப் பார்க்கலை. கண்ணுல காணுமேண்ணு தான் நினைச்சுக்கிட்டேன்.
அது வாரதும் தெரியாது. போறதும் தெரியாது. பூனை போல வந்துட்டுப்
போயிரும்’ என்றார்.
ஜெபரத்னம் உடனே பிடித்துக் கொள்வார். அவர் பிச்சையாவை ’பீனா’ என்று கூப்பிடுவார். ‘ பூனைக்
குட்டி, மொசக் குட்டி எல்லாம்
இருக்கட்டும். அது என்ன பேரையும் சொல்லாமல் ஊரையும் சொல்லாமல்,, அது இதுண்ணு
சொல்லிக்கிட்டு?’ என்பார். ஜெபரத்னத்துக்கு ராதா
பாய் விஷயத்தில் இவர் மேல் கொஞ்சம் பொறாமை உண்டு.
இவரும் பிச்சையாவும் ஒன்றாக நின்றால் கூட, ராதா பாய்
முகம் பிச்சையாவைப் பார்த்துதான் இருக்கும்.. அவர்
மேற்கொண்டு, விடாமல் பிச்சையாவிடம், ‘பீனா, உமக்கு
இருக்கிற ராசிக்கு, ராதா வந்தா, ராதா போனாள்ன்னு கூடச் சொல்லலாம். லைசன்சு இருக்கு’ என்று
சேர்த்துச் சொல்வார். பிச்சையா அதற்கு நேரடியாக எந்த
பதிலும் சொல்ல மாட்டார். அப்படி ஜெபரத்னம் சொல்வதில்
கொஞ்சம் கோபம் வரும். காட்டிக்கொள்ளாமல், ‘அப்படி
எல்லாம் அனாவசியமா லைசன்ஸ் அது இதுண்ணு பேசப் படாது. அது
முறையில்லை’ என்று முடித்துக்
கொள்வார். கொஞ்ச நேரம் கழித்து பிச்சையாவே
ஜெபரத்னத்திடம் ‘ நம்ம டோக்கனைக் கூப்பிட நேரம்
ஆகும் போல. வெளியே போய் ஒரு போஞ்சி குடிச்சிட்டுவருவமா?’ என்பார்.
ஜெபரத்னமும் மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். ‘ பீனா.
வாரும். ஒரு எட்டு ஸ்னேகா வரை போய்ட்டு வருவோம்’ என்பார்.
சினேகா டீ ஸ்டால் ஒன்றும் தூரமில்லை. சந்தன மாரியம்மன் கோவில் தாண்டி, அரசமரத்துக்கு
அப்புறம் மூன்றாவது கடை . முட்டைக் கோஸ், டீ
இரண்டுக்கும் ஜெபரத்னம் தான் பணம் கொடுப்பார். என்ன, யாரைப்
பார்த்தாலும் பேச ஆரம்பித்துவிடுவார். அதுதான் அவரோடு கஷ்டம். வெற்றிலை
பாக்கு வாங்குகிற பெட்டிக்கடையில், வாழைத் தார்
காம்பு நுனியில் ப்ளாஸ்திரி அகலத்துக்கு சீவி, ஊதாக் கலரில்
ஆர்.கே.ஆர் என்று எழுதியிருப்பது பற்றி விபரம் கேட்க ஆரம்பித்துவிட்டார்
ஒரு தடவை. பிச்சையாவுக்கு கவுண்ட்டரில் பேரைச் சொல்லிக் கூப்பிட்டு
இருப்பார்களோ என்று பதைப்பாக இருக்கும். ராதா பாய் வந்து வழக்கம் போல
கடைசி ஓரத்து பெஞ்சில் உட்கார்ந்து கையில் கொண்டுவந்த கதைப் புத்தகத்தைப்
படித்துக்கொண்டிருப்பாரோ என்று தவிப்பாகவும் இருக்கும்.
இன்றைக்கும் அந்தத் தவிப்பு இருக்கப் போய்த்தான் பஸ் ஸ்டாண்டில் இறங்கி நடந்தால் நேரம் ஆகிவிடும் என்று வண்டிப் பேட்டை
ஸ்டாப் வரை டிக்கட் எடுத்திருந்தார். நான்கு ரூபாய்
சார்ஜ் அதிகம். கண்டக்டரிடம் ‘முடிஞ்சா பாங்க்
பக்கம் இறக்கிவிட்டிருங்கய்யா’ என்று தயவாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சந்தை நாள் என்பதாலோ அல்லது
பேச்சுவாக்கில் மறந்துவிட்டானோ. பரமானந்தம் தியேட்டர் வரை பஸ்
போய்விட்டது. அங்கே இறங்கி, மறுபடியும் பின்னால் நடக்க
வேண்டியது ஆயிற்று.. தியேட்டரில் சிவாஜி தேவிகா இருக்கிற
ஆண்டவன் கட்டளை போஸ்டரை வைத்திருந்தார்கள். பொங்கலுக்குப் புதுப் படம் வருகிறவரை இப்படிப் பழையபடங்கள் போடுகிறது உண்டு
தான். ஆனால் இவ்வளவு பழைய படமாக, அதுவும்
தேவிகா படமாகப் போட்டிருப்பது அவருக்கு சந்தோஷமாக இருந்தது.
தேவிகாவை அவருக்குப் பிடிக்கும். இதற்காகவே அவரை அந்தப் பையன் இங்கே இறக்கிவிட்டிருப்பான் என நினைத்துக்கொண்டார். ‘அமைதியான
நதியினிலே ஓடம்’ பாட்டு முழுவதிலும் வருகிற
தேவிகாவின் அசைவுகள் அவருக்குத் தெரிய ஆரம்பித்தன.
வெட்கப்படுவது போன்ற காட்சிகளில் முகத்தைத் தோள்ப் பக்கம் திருப்பி, வலது கையை
நாடிக்குக் கீழ், மறு கன்னம் வரை வைத்துக் கொண்டு
படபட என்று சிமிட்டுகிற இமைகளோடு தேவிகா ஒரு சிறிது நேரம்
கண்களை மூடிக்கொள்வது அவருக்குப் பிடிக்கும். இவருடன் கல்யாணமாகி வாழ்ந்த ஆரம்பகாலங்களில் ஏதேனும் ஒரு சிறு அசைவில் எப்போதாவது தேவிகாவின் அந்த
சாயல் சாலாட்சியிடம் தட்டுப்படவேண்டும் என்று
பிச்சையா மிகவும் விரும்பியிருக்கிறார்.
மூன்று வருடங்கள் ஆயிற்று அவருடைய மனவி இறந்து. சாலாட்சியின் பருத்த உதடுகளில் திரும்பத் திரும்ப ஈ உட்கார்ந்து கொண்டே
இருந்த முகம் தான் பிச்சையாவுக்கு இப்போது ஞாபகம் வந்தது. சிதையில்
வைப்பதற்கு முன்பு வரை கூட அந்த ஈ மாறி
மாறி அங்கே உட்கார உட்கார, பிச்சையா
புறங்கைகளால் அதை விசிறி விரட்டிக்கொண்டே இருந்தார்.
இந்த நினைவுக்கு அப்புறம் பிச்சையாவுக்கு மேற்கொண்டு நடக்கச் சிரமப் பட்டது. அப்படியே அந்த இடத்தில் நின்றார். பாஸ்
புத்தகம் செக் புத்தகம், நல்லது பொல்லது வாங்கிப் போவதற்காக
வைத்திருந்த துணிப்பை எல்லாவற்றையும் மறுகைக்கு
மாற்றிக்கொண்டார். வாய்க்காலுக்குக் குளிப்பாட்டப் போகிற எருமை மாடுகள் இவரை நடுவில் நிறுத்தி, அதனுடைய
பாதையை வகிர்ந்துகொண்டு தாண்டும் வரை அவர்
நிற்கவேண்டியது ஆயிற்று. தலை கிறுகிறுப்பு வந்துவிடக் கூடாது என்று அவரே
நிதானித்துக் கொண்டு, கடைசி எருமையின் பிட்டியில் கை
வைத்துத் தடவினார். வழுவழு என்று இருந்ததே தவிர, அவர்
வீட்டுத் தொழுவில் நின்ற பசுவைத் தடவிக்கொடுத்த வாசனை
இல்லை. அவர் வீட்டுக்காரிதான் பசுவோடு பசுவாகக்
கிடப்பாள். சாலாட்சிக்கு அந்த வாசனை வந்திருந்ததில் ஆச்சரியம் இல்லை. இப்போது எல்லாம் பி காம்ப்ளெக்ஸ் வாசனைதான். வழக்கமாக மாத்திரை மருந்துச்
சீட்டை எடுத்து வருவார். இன்று அவசரத்தில் எடுத்துவைக்கவில்லை/
மூன்று கால் சைக்கிளில் சிவப்பு சிவப்பாக சிலிண்டர்களை ஏற்றி மிதித்துக்கொண்டு வந்தவர், ’மணி என்ன
ஆச்சு?’ என்று கேட்டார். சத்தம் மட்டும் கேட்டது. முகம் தொப்பி மடிப்பின் நிழலுக்குள்
மறைத்திருந்தது/ பிச்சையா கடிகாரத்தைப் பார்க்கவில்லை. உத்தேசமாக, ‘[பன்னிரண்டரை
பன்னெண்டே முக்கால் இருக்கும்’ என்றார். மணி
கேட்டவரும் இவர் பதிலுக்காக எதிர்பார்க்கவில்லை.
சிலிண்டர் ஒன்றோடு மோதிக்கொள்கிற சப்தம் அவருக்குப் பிடித்திருந்தது.
ரயில் வே கேட் அடைக்கிற நேரமாக இருக்கும் என்று நினைத்தார்.
போஸ்ட் ஆபீஸ் இங்கே இருந்து மாற்றிவிட்டார்கள். இருந்தாலும் அவர் நிறைய தடவைகள் பார்த்திருந்ததால் அந்தக் கட்டிடத்திற்கு
இன்னும் போஸ்ட் ஆபீஸ் களை அப்படியே
இருக்கிற மாதிரி இருந்தது. நடந்து வந்த பத்து நிமிஷத்திற்குள் இரண்டு பழக்கடையையும் மொபைல் கடையையும்
பார்த்துவிட்டார். ராதா பாய் மொபைலில்
பேசுகிற தோற்றம் ஞாபகம் வந்தது பிச்சையாவுக்கு. அவர் உட்கார்ந்துகொண்டு
இருப்பார். அழைப்பு வந்தால் உட்கார்ந்துகொண்டு பேச மாட்டார்.
எழுந்துகொண்டு அடுத்தடுத்து இரண்டு ஹலோ என்பார். கொஞ்சம் தொண்டைகட்டினது
போல குரல் ராதா பாய்க்கு. அதே போல பக்கத்தில் ஆளே இல்லாவிட்டால்
கூட, காதோடு மிக அழுத்திய ஃபோனோடு
சற்று நகர்ந்து தள்ளிப் போய், அந்த வட்டி
விகிதங்கள் எல்லாம் போட்டிருக்கிற நீலப் பலகை முன்னால் போய் நின்று
கொண்டு, ‘சொல்லுப்பா’ என்று பேச
ஆரம்பிப்பார்.
ராதா பாய் நம்பரைக் கூட இவர் வாங்கிக்கொண்டது இல்லை. ஆனால் ஜெபரத்னத்திடம் உண்டு. ‘இதுலே என்ன
பீனா இருக்கு? எல்லாரு நம்பரும் எல்லாருகிட்டேயும் இருக்க வேண்டியதுதானே. இதை
வச்சுக்கிட்டு நான் என்ன எம்.ஜி.யார் சரோஜா தேவின்னு ஹலோ
ஹலோ சுகமாண்ணா உம்ம ஆள்கிட்டே பாட்டுப் படிக்கப்
போறேன்?’ என்று சிரிப்பார். எப்போது
எல்லாம் ஜெபரத்னம் இப்படிக் கிண்டலாகச்
சிரிக்கிறாரோ, அந்த சமயத்தில் எல்லாம்
ஜெபரத்னம் முகம் தபால் பெட்டி எட்டாமல் காகிதத்தைப்
போட நிற்கிற ஒரு பள்ளிக்கூடத்துப் பையன் முகம் மாதிரி
ஆகிவிடும். அப்படி நிலைமையில் பார்த்த தன்னுடைய ஸ்டூடண்ட் ஒருத்தனைக்
கூட பிச்சையா நினைத்துக் கொள்வார். பிச்சையாவுக்கும் சிரிப்பு வரும். ’நல்லா வந்து
சேர்ந்தீரு வே’ என்று ஜெபரத்னத்தின் தோளைத்
தட்டுவார்.
பாங்க் பக்கத்து டீக் கடையில் ஒரே கூட்டமாக இருந்தது. எண்ணெய் துடைத்துக் கசக்கிப் போட்ட தாள்களாகக் கிடந்தது.
குளிர்காலத்தை ஒட்டி நடைபாதையில் பனியன்,ஸ்வெட்டர், சிறு
குழந்தைகள் உள்ளாடைகள் விற்கிற கடை போட்டிருந்தார்கள்.
பஞ்சு மிட்டாய் விற்கிற ஒரு பையனும் நடை பாதை வியாபாரியும்
அவர்கள் பாஷையில் பேசிக்கொண்டு இருந்தார்கள். பேசிக்கொண்டு இருக்கும்
போதும் பஞ்சு மிட்டாய் விற்கிற பையன் அவனுடைய கையில் இருந்த தகர மணியை அடித்துக்கொண்டே இருந்தான். அந்தச் சத்தம் ரத்த
ஓட்டம் போல அவன் உடம்புக்குள் இருந்து வருவது போல இருந்தது. பிச்சையா
அவரை அறியாமல், ‘பாவம்’ என்றார்.
சொர்ணாம்பிகா நகைக் கடை போக்குவரத்துத் தடுப்பு கீழே சாய்ந்து கிடந்தது. அடைசலாக சைக்கிள்களும் மோட்டார் பைக்குகளும் குறுக்கு
மறுக்காக நின்றன. வேப்ப மரத்தடியில் துவங்கி பாங்க் வாசலில்
போட்டிருக்கிற தடுப்புச் சங்கிலி வரை போய்
முட்டிக் கொண்டு இரண்டு மூன்று கார்கள் . ஒரு காரின் கதவு திறந்துகொண்டு
ஒற்றைச் சிறகாக விரிந்து இருக்க, ஜெபரத்னம் கதவுப் பக்கம் நின்றுகொண்டு இருந்தார். வண்டி புறப்படுகிற
ஆயத்தத்திலேயே இருந்தது. கதவைச் சாத்திவிட்டால்
கிளம்பத் தயாராக டிரைவர் பின் சீட் பக்கம் கழுத்தைத் திருப்பி, ஸ்டீரிங்கில்
விரல்களை பரத்திப் பிடித்தபடி.. முன் பக்கத்துக் கதவை
அடைப்பதற்கு வைத்த கையுடன் முப்பது முப்பத்தைந்து வயதில் ஒருத்தர், ஒரு காலை
லேசாக காருக்குள் வைத்தும் வைக்காமலும்.
பிச்சையா ஜெபரத்னம் தோள்ப் பக்கம் கையை வைத்துக்கொண்டே எட்டிப் பார்த்தார். பின் சீட்டில் படுத்திருப்பது ராதா பாய்
போல இருந்தது. போல என்ன. ராதா பாய்தான். பிச்சையா ஜெபரத்னம் தோளை
விலக்கிவிட்டு முன்னால் போனார். ‘என்ன ஆச்சு
அவங்களுக்கு?’ என்றார்..
‘வந்துட்டீரா? உம்மைத் தான்
ஆளைக் காணுமேண்ணு தேடிக்கிட்டே இருந்தேன்’ என்ற
ஜெபரத்னம் ’இது அவங்க பையன்’ என்று முன்
கதவுக்குப் பக்கம் இருந்தவரைக் காட்டினார். ‘கொஞ்சம்
திடீர்னு ரொம்ப முடியலை போல. ஆஸ்பத்திரிலே
சேர்க்கப் போகிற பாதையில பணம் எடுத்துக்கிட்டா நல்லதுண்ணு வந்திருக்காங்க.
உள்ளே கூட வரவேண்டாம்னு இங்கேயே கையெழுத்து வாங்கிட்டு பே பண்ணிட்டாங்க’ என்றார்.
பிச்சையாவுக்கு அவர் சொன்ன விபரம் எல்லாம் முழுதாகக் காதில் விழவே இல்லை. சோர்ந்து கண்ணை மூடி ஒரு பழந்துணி போலக்
கிடக்கிற ராதா பாயையே பார்த்தார். இவரை மாதிரியே
இன்னும் ஏழெட்டுப் பேர் காரைச் சுற்றி நின்றார்கள்.
ஏழெட்டுப் பேரின் சத்தமும் காணாமல் போய் ஏழெட்டுப் பேரின் அமைதியும்
ஒன்றாகத் திரண்டு அந்தக் காரின் மேல் ஒரு குடை போலக் கவிழ்ந்திருந்தது.
‘பெரிய பாளையத்துலே எந்த ஆஸ்பத்திரி?’ என்று
முன்னால் நிற்கிறவரிடம் ராதா பாயைப் பார்த்த முகத்தோடு
இறுக்கமாக பிச்சையா கேட்டார். ராதா பாயின் பையன் , ‘குணசிங்’ என்று
சுருக்கமாகச் சொன்னான். ‘குணசிங் ஹாஸ்பிடல் தானே. நானும்
வாரேன்’ என்று பிச்சையா, புறப்படுகிற
குரலில் வேகமாகச் சொன்னார்.
காரைச் சுற்றி மறு கதவுப் பக்கம் சென்றபடி, ‘போயிட்டு
வந்திருதேன்’’ என்று ஜெபரத்னத்திடம் கையை
அசைத்தார். முன் பக்கம் ஏறிக்கொண்டு அந்தப் பையன் கதவை
அடைக்கிற சத்தத்திற்காகக் காத்திருந்தார்.
எந்தத் தயக்கமும் இன்றி பின் சீட்டில் ஏறி அமர்ந்து ராதா பாயின் தலையை
எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டார்.
No comments:
Post a Comment