கனிமொழி கைது செய்யப்பட்டது, அவர்
இழைத்த குற்றத்திற்கானதாக ஒரு புறம் இருந்தாலும், எனக்கு அதனுடன் பிணைந்த
வேறு பல விஷய முடிச்சுகளையும் உடன் இழுத்து வருகிறது.
அரசியல் நோக்கிய நகர்வைப் பெண்கள்
எளிதாக எடுத்து வைக்கமுடிவதில்லை. குடும்பம், தான் சார்ந்துள்ள சமூகம்
போன்ற வெளிகளைத் தாண்டி, அல்லது அந்த வெளிகளைத் தனக்கான அளவில்
சமாதானப்படுத்திவிட்டு, நிறைவு பெறச் செய்து விட்டுத்தான் அரசியல் என்ற
ஆண்களுக்கு மட்டுமே என இருந்த வெளியை எட்டிப் பிடிக்க முடிந்தது. இன்று
அது, தன் தந்தை, சகோதரர், கணவர் என்று யார் மூலமாகத் தனக்குச்
சாத்தியப்பட்டாலும், அது இன்னும் ஆண்களின் வெளியாகவே இருப்பதைத்தான்
உணர்த்துகிறது.
அந்த
இடத்தின் மையம் வரை செல்ல முடிந்த பெண்கள், தங்கள் அணுகுமுறைகளிலும்
செயல்பாடுகளிலும் ஆண்களைப் போலவே நடந்து கொள்வது சமூகத்தில் தன்னிருப்பு
அல்லது தன்னையொத்த பெண்களின் நிலைமை குறித்த அவர்களின் அறியாமையையும்
மடமையையும் தான் உணர்த்துகிறது.
சமூகத்தில், அரசியல் என்னும் மனித
உரிமைகளைச் சட்டப்பூர்வமாகச் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கக்
கூடிய இடத்திற்கு சென்று சேரும் வாய்ப்புக் கிட்டிய பெண்கள் இப்படி
தங்களின் செயல்களுக்கே இரையாகிப்போவது மற்ற பெண்களுக்குச் சோர்வையும்,
அவர்களின் நடத்தைகளில் இடர்ப்பாட்டையும் தரும். தன் தலையில் தானே மண்ணை
வாரித் தூற்றிக் கொண்டது போல.
ஒரு பெண்ணியலாளர் இவ்வாறு
கூறினார். “அரசியலுக்குச் செல்ல முடிந்த பெண்கள், இரு மடங்கு
பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஒன்று, தனக்கான
ஆளுமையைக் கட்டியெழுப்பிப் பேணுவதன் வழியாக, தன் சுயமரியாதையை நிலைநாட்டிக்
கொள்வது. இன்னொன்று, தன்னையொத்த பெண்களின் உரிமைகளுக்கான பிரதிநிதியாகி
நின்று போராடுவது”.
கனிமொழி, மற்ற பெண்களுக்கான
பிரதிநிதியாகத் தன்னை நியாயப்படுத்தவும் இல்லை. தன் சுயமரியாதையையும்
திடப்படுத்திக் கொள்ளவும் இல்லை. இது, பிற ஆணாதிக்க அரசியல்வாதிகள் விரித்த
வலையாகவும் இருக்கலாம். அதில், கனிமொழி இரையாக மாட்டிக்கொண்டார் என்றும்
சொல்லலாம். என்றாலும் அத்தகையதோர் அறியாமையைத் தனக்குள்ளே ஊட்டமளித்து
வளர்த்து வந்தது யார் குற்றம்?
கனிமொழி, பெண்களின் வரலாற்றில்
ஒரு தவறான அரசியல் குறியீடு ஆகிறார். அவர் ஏற்படுத்திய அலை, அரசியலை நோக்கி
நகர முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் தாக்கும், வீழ்த்தும். ஆதிக்க
சாதியல்லாத ஒரு சமூகத்திலிருந்து அரசியல் பிரதிநிதியாக விரும்பும் ஒவ்வொரு
பெண்ணும் இனி முதல் அடியிலிருந்து தான் தன் பயணத்தைத்
தொடங்கவேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்தை அளிக்கும். இது பொது மனித உளவியலை
ஒரு நோயைப்போல தொடர்ந்து ஆட்கொள்ளும்.
அரசியலின் நீதி மன்றத்தில்,
“அவர் பெண்!” என்றாலும், “அவர் ஒரு குழந்தைக்குத் தாய்!” என்றாலும்
அச்சொற்கள் அர்த்தம் பெறாது. எதிரொலிக்காது. ஏனெனில், ஏற்கெனவே, தன்
குடும்பம், சமூகம் இரண்டையும் கடந்து தான், அதன் ஆழிகளைக் கடக்க
முடிந்ததால் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். இனி, அவர் எல்லா வகையிலும்
ஒரு தனி மனுஷி!
“படித்தவன் சூதும் வாதும்
பண்ணினால் போவான் போவான்! ஐயோவென்று போவான்”. கவிஞன் பாரதி சொன்னது.
கனிமொழியின் இந்நிலைமை வேதனையை அளிக்கிறது!
No comments:
Post a Comment