Monday, February 06, 2017

ஒரு பெண்ணின் எழில் தனித்தலைகிறது



அமராவதி, தான் சந்திக்கிற பெண்களுக்கு, முகம்பார்க்கும் கண்ணாடியைப் பரிசளிக்கும் பழக்கத்தை உடையவள். அந்தக்கண்ணாடி, பெண்கள் தங்களுடைய கைப்பையில் வைத்துக்கொள்ளுமளவு மிகச்சிறியது. பெண்களுக்குப் பரிசளிப்பாள் என்று சொல்வதைவிட அம்மாக்களுக்கு என்று சொல்லலாம். அமராவதிக்கு கண்ணாடியைப் பரிசளிக்கிற இப்படியொரு வினோதமான பழக்கம் எப்படி வந்தது என்றால், அவளுடைய அம்மாவிடமிருந்து என்று சொல்கிறாள். அமராவதியின் அம்மா மிக அழகானவர். அமராவதி, அம்மாவுடைய கருப்புவெள்ளைப் புகைப்படங்களைப் பார்த்து எப்போதும் ரசிப்பதுண்டு. காதில் ஜிமிக்கியும், தோள்வரை வழியவிடுகிற மல்லிகைச் சரமும், கண்களில் தீற்றியிருக்கும் மையும் என அம்மாவின் அழகு அமராவதிக்கு ஈர்ப்புடையதாகவே இப்போதும் இருக்கிறது. அம்மாவின் இடுப்பில் தானிருக்கும் புகைப்படங்களில் அம்மாதான் பேரழகியென நினைத்துக்கொள்பவள்.  தன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் அம்மாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வரிசைபடுத்திப் பார்ப்பது என்பது இவளுக்கு ஒரு பொழுதுபோக்கு. உண்மையில் அந்த கணங்களில், பொழுதினை இவள் போக்குவதில்லை. சேகரிக்கிறாள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அவளையும் அம்மாவையும் காலத்தையும் ஒப்பீடு செய்துகொண்டிருப்பாள். காலம், இருவரின் உடலிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களுக்கு உட்பட்டு அம்மாவின் ஆடையும் அலங்காரங்களும் மாறியிருப்பதை அளவிடுவாள். அமராவதியின் தாவணிப்பருவம் வரையில் அம்மாவின் அகன்ற தோள்களில் புரண்டுகொண்டிருந்த மல்லிகைச்சரம் அதன்பின்பு காணாமல் போயிருந்தது. தழையத்தழையப் பின்னலிட்டிருந்த கூந்தலும் அதன்பிறகு  கொண்டையாக மாறியிருந்ததை உணரமுடிந்தது. நீளமான நெற்றித்திலகம் வட்டமான குங்குமமாக மாறியிருந்தது. மகள் பூப்பெய்தவுடன் தன்னுடைய கால்கொலுசுகளைக்கூட கழற்றி வைத்து விட்டதாக அம்மாவைப் பற்றி அறிந்திருக்கிறாள். அலங்கரித்துக்கொள்கிற தன்னுடைய விருப்பம் ஒவ்வொன்றாக மகளின் வளர்ச்சியில் கரைத்து விடுகிற காலகட்டத்தைச் சேர்ந்த அம்மா அவள்.
            அம்மாவிடமிருந்து விடைபெற்றுகொண்ட சில பழக்கங்களும் உண்டு. அதில் முதலாவதாக இடம்பிடிப்பது, கண்ணாடி பார்க்கிற பழக்கம். திருமணம் ஆனவுடன் அம்மாவுக்காக அப்பா வாங்கிய முதல் பொருளே ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிதான். தேக்குமரச் சட்டத்தினால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அந்தக் கண்ணாடியை அம்மா நடமாடும் இடத்தில் அம்மாவின் முழுஉருவத்தையும் பார்க்கும்படியாக சுவற்றில் மாட்டிவைத்திருப்பார். இப்போதும்கூட அந்தக் கண்ணாடி, அதேவீட்டில் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அம்மா அந்தக்கண்ணாடியைப் பார்ப்பதேயில்லை.
            நினைவு தெரிந்த நாள் முதலாகவே அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்ப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகப்பிடித்த பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. குழந்தைகள் வளரவளர ஆண்களும் பெண்களுமாக ஆகி, கண்ணாடி பார்ப்பதில் கூட வேறுபாடு ஏற்படுகிறது. இளம்பருவத்தில் அடிக்கடி கண்ணாடி பார்க்கிற பழக்கம் எல்லோருக்குமே இருக்கும். என்றபோதிலும் பெண்களிடம் சற்றுக் கூடுதலான செயலாக இருக்கும். பொதுவாக திருமணமாகி குழந்தைகள் பெற்றுக்கொண்டு தங்கள் கவனத்தையெல்லாம் குழந்தைகளிடத்திலும் கணவனிடத்திலும் செலுத்தத் தொடங்கியபிறகு அடிக்கடி கண்ணாடி பார்க்கிற பழக்கம் பெண்களிடமிருந்து தானாகவே மெல்ல மெல்ல விடைபெறத் தொடங்கி விடுகிறது. ஒரு காலகட்டத்தில் ஒருநாளில் ஒரே ஒருமுறை கண்ணாடி பார்ப்பது என்பதே கூட அரிதாகிவிடுகிறது. அப்படித்தான் அமராவதியின் அம்மாவும் இப்போதெல்லாம் கண்ணாடி பார்க்கிறாரா என்பது கூட தெரியாத அளவுக்கு தன்னுடைய புறத்தோற்றத்தில் கவனம் செலுத்தாதவர் ஆகிவிட்டார். இத்தனை பெரிய மாற்றத்தை அம்மாவிடம் கவனித்த அமராவதி, தான் சந்திக்கும் பெண்களுக்கு சிறிய முகம்பார்க்கும் கண்ணாடியைப் பரிசளிக்கத் தொடங்கினார். குறைந்தபட்சம் தான் பரிசளித்த கணத்திலாவது முகம் “பார்க்கிற உணர்வில்கண்ணாடி பார்ப்பார்கள் என அமராவதி நம்புகிறாள். ஏனெனில் இந்த நவீனயுகத்திலும் கூட கண்ணாடி பார்க்கிற பழக்கத்தைத் தொலைத்துவிட்ட பெண்களைக் காணமுடிகிறது.

எழிலரசியின் கவிதை ஒன்று,
என் வீட்டுக்குக் கண்ணாடியில்தான்
என் உயரம் எனக்கே தெரியும்
எகிறிக் குதித்துப் பார்த்த நாட்கள்
தலைமட்டும் தெரிந்த நாட்கள்
புருவத்தோடு தெரிந்த நாட்கள்
வாய்வரைத் தெரிந்த நாட்கள்
திருப்தி அடையாத மனம்
தாவணிப்பருவத்தில்
உருவம் முழுக்க எதிர்பார்த்தபோது
அதட்டிய அம்மாவின் திட்டுக்கள்
சேலைக் கொசுவம்வரை
தெரிந்தபோது
கண்ணாடிமீது மிகப் பிரியமிருந்தது
இப்போது நினைவில் இருப்பதில்லை
கண்ணாடி பார்க்கும் தருணங்கள்.”
            திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் புறத்தோற்றத்தைப் பராமரிப்பதை படிப்படியாகக் கைவிடுகிறார்கள். அதைவிடவும் தங்கள் உணவினைக் கூட குடும்பஉறுப்பினர்களுக்காக மாற்றிகொள்வார்கள். குழந்தைகளுக்காக பத்தியம் இருந்தது போக, அவர்களுக்காக பிடித்தமான உணவை விட்டுக்கொடுப்பார்கள். சமயத்தில் எல்லோரும் சாப்பிட்டு மிச்சமிருப்பதை, கீழே போட மனமின்றி அதிகமாகச் சாப்பிடுகிற பெண்களும்  உண்டு. இவ்வாறெல்லாம் தங்களை மற்றவர்களுக்காகக் கலைத்துக் கொள்கிற பெண்கள், தங்களை  அழகுபடுத்திக்கொள்வது என்பது தங்களுக்கானது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
            கண்ணாடி பார்ப்பது என்பது தங்களுடைய பூவையும் போட்டியும் சிறிதளவு திருத்திக்கொள்ள என்பதாக மாறியபிறகு, கண்ணாடியில் தங்களை இரசிக்கும் கணங்களை பெண்கள் முற்றிலுமாகத் தொலைத்திருப்பார்கள். தங்களுடைய அழகு தங்களுக்கானது அல்ல என பெண்மனம் வழிபடுத்தப்பட்டுள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் அவளுடைய எழில் என்பது ஆணுக்கானது என்பதாக அவளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. தன்னை அவள் அழகு செய்து கொள்வதே கணவனாக வருகிற ஆணிடம் கையளிக்க என்பதாக அவளும் ஏற்றுகொண்டிருக்கிறாள். அதனால்தான் இன்றும் கூட கணவன் வீட்டில் இல்லையென்றால் நல்லதாக உடுத்திக்கொள்வதைத் தவிர்க்கிற பெண்கள் பலரும் உண்டு.
இம்மாதிரியான பெண்ணின் மனம் இன்றைக்கானது மட்டுமல்ல. இந்த உணர்வின் வேர் சங்கஇலக்கியத்தில் தொடங்கியது. “தன்னுடைய எழில் என்பது தனக்கானது அல்லஎன சங்கஇலக்கியம் முழுமையுமே “பெண்சொல்லிக்கொண்டிருக்கிறாள். ஆண்பாற்புலவர்களின் பாடலானாலும், பெண்பாற்புலவரின் பாடலானாலும் பெண்ணின் அழகும், இளமையும் அவளுக்கானது அல்ல என்பதாகத் திரும்பத் திரும்ப பாடப்பட்டுள்ளது. தலைவனைப் பிரிந்து துயரடையும் பொழுது தன்னுடைய அழகை தலைவி தொலைப்பதும், பசலைபடர உடல் மெலிவதுமாக இருக்கிறாள். தலைவன் கூற்றாக வெளிப்படுகிற பாடலில் கூட தலைவியைப் பிரிந்து, ஆண் மெலிவதாகவோ, அவனுடைய உடல் தோற்றம் கெடுகிறது என்றோ எங்கும் பாடப்படவில்லை. தன்னைப் பிரிந்திருக்கும் தலைவி வருந்துவாளே, உடல் மெலிந்திருப்பாளே என்பதாகத்தான் தலைவன் சொல்கிறான்.
            சங்கப்பெண்பாற்புலவர் வெண்பூதியாரின் குறுந்தொகைப் பாடல்,
யானே ஈண்டை யேனே; என் நலனே
ஆனா நோயோடு கான லஃதே
துறைவன் தம்ஊ ரானே;
மறைஅலர் ஆகி மன்ற தஃதே.”
            மிகச்சிறிய இந்தபாடலில் தலைவி தோழியிடம்,” நான் இங்கே தனியாக இருக்கிறேன். தலைவன் என்னைப் பிரிந்து சென்றதால் தந்துவிட்டுச் சென்ற ஆறாத துயரத்துடன் இருக்கிறேன். தலைவனை எனக்குத் தந்த என்னுடைய நலன் இப்போது என்னிடம் இல்லை. அவனைத் தேடியவாறு என்னை விட்டுச்சென்று, தலைவனுடனிருந்த கடற்கரைச் சோலையிடத்தே தனித்தலைகிறது. அவனோ, தன்னுடைய பெற்றோருடன் ஊரில் இருக்கிறான். எங்களுடைய களவுஉறவு பலரறிய வெளிப்பட்டு, ஊரலராகிப் பொதுவிடத்தில் இருக்கிறதுஎன்கிறாள்.
            வெண்பூதியார், மூன்று குறுந்தொகைப் பாடல்களை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இந்த மூன்று பாடலும் பேசுகிற பொருள் ஒன்றுதான். தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். ஒருபாடலில் பெற்றோருடன் இருக்கிறான். ஊர் அலராகி தலைவி தனித்துத் தவிக்கிறாள். இரண்டாம் பாடலில் பொருள்தான் பெரிதென்று பிரிந்து சென்றிருக்கிறான். இதுவும் கூட திருமணத்திற்கு முன்பான பிரிவு என்றுதான் குறிப்பால் உணரமுடிகிறது.  பாடலில் ‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடிஎன்றொரு வரி வருகிறது. தலைவன் செல்கிற பாலைநிலத்தில் முள்ளையுடைய கள்ளிக்காய் வெடிக்கும். அப்போது எழுகிற பேரொலியில்  மெல்லிய சிறகையுடைய ஆணும் பெண்ணுமாக இணைந்துள்ள புறாக்கள் பறந்து வெளியேறும். அத்தகைய கொடிய பாதை என்று இந்தபாடல் சொல்கிறது. தலைவன் தன்னைப் பிரிந்து சென்றால் வெளியாகும் அலரின் ஓசை பற்றியே தலைவி அச்சப்படுகிறாள்.
            திருமணத்திற்கு முன்பாக தீரத்தீரக் காதல்செய்துவிட்டு, வேலையைக் காரணம்காட்டி அல்லது வேறு ஏதோ சொல்லி காதல் செய்த பெண்ணைக் கைவிட்டுவிடுகிற ஆண்கள் பலரையும் இன்றுவரையில் காணமுடிகிறது. ஆண்  என்பவன் வெட்டியாக ஊர் சுற்றும் பொழுதோ அல்லது சாதாரண வேலையில் இருக்கும் பொழுதோ பெண்ணின் வசதியோ அல்லது வேறு எதுவும் மனதில் பதிவதில்லை. அவனுக்குப் பிடித்துவிட்டால் போதும், கணப்பொழுதும் விடாமல் பெண்ணை விரட்டிவந்து , காலில் விழுந்துகூட காதல் செய்வான். அவனுக்கு வெளிநாட்டு வேலையோ அல்லது அரசு உயர்பதவியோ கிடைத்துவிட்டால், காதல் செய்த பெண்ணிடம் இல்லாத குறையெல்லாம் அவனுடைய கண்ணில் தெரியும். ஆனால் இவர்கள் உறவு தெரிந்த ஊரில் அலராகப் பரவியிருக்கிற செய்தியினை ஒன்றும் செய்யவியலாமல் தன்னுடல் வெளிறி, மெலிந்து தீராத துயருடன் வீட்டில் பார்க்கிற வேறு ஒரு ஆணைத் திருமணம் செய்து கொண்டு பெயருக்கு “வாழ்கிறபெண்கள் சிலரை காணமுடிகிறது.
            வெண்பூதியாரின் மூன்றாம் பாடலும் பெண்ணுடலின் நிரந்தரப் பசலையைப் பற்றியே பேசுகிறது. அடக்கமும் அவளைவிட்டு நீங்கிவிட்டதாகவும், அறிவு மட்டும் தலைவனை நோக்கி செல்க “ என்று சொல்வதாகவும் அமைந்துள்ளது. தன்னுடைய தனித்த துயரினை நீக்குவதற்கு இதுதான் தருணம் என்று தலைவன் உணரவேண்டும் எனத் தலைவி இந்தப்பாடலில் சொல்கிறாள்.
            அவள் உடலுக்கு உரியதாக ஆகிவிட்ட பசலையைப் போக்க தலைவன் வரமாட்டான் எனில் இந்தப் பெண் என்னாவாள்? என்பதுதான் இந்த மூன்று பாடல்களின் முடிவிலும் மனதில் தோன்றுகிறது. தலைவன் வராமல் போயிருந்தால் அந்தப் பெண் என்னாகியிருப்பாள், எளிமையாகச் சொல்லிவிடலாம் அப்போதும் பசலை படர்ந்த மேனியுடன் தற்கொலை செய்துகொண்டிருப்பாள். ஆனால் அப்படியொரு பதிவு சங்கப்பாடல்களில் இல்லை. இல்லை என்பதால் நிகழ்ந்திருக்காது என்பதில்லை. அல்லது வெளிறிய உடலுடன் பெற்றோர் விருப்பத்தில் வேறு ஒருவரை மணம் முடித்து வாழ்ந்திருப்பாள். அதுவும் சங்க இலக்கிய பதிவில் இல்லை. சிலநிகழ்வுகள் பதிவுகளாக இல்லை என்றாலும் இருந்திருப்பதை உணரமுடிகிறது.  
            திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் பெண்ணின் எழில் என்பது அவளுக்கானது அல்ல என்பதாகவே பெண்ணின் வாழ்வு எந்தக்காலத்திலும் அமைந்திருக்கிறது.

வெண்பூதியார் :
            வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியாரும், வெண்பூதியார் என்பவரும் ஒருவரே. வெள்ளூர் கிழார் மகனார் என்று வருவதால் இவர் ஆண்பாற்புலவர் என்கிற உ.வே.சாமிநாதையர் கருத்து ஏற்புடையதன்று என டாக்டர் தாயம்மாள் அறவாணன் குறிப்பிடுகிறார். பூதன், பூதனார், பூதன் தேவனார், பூதம் புல்லன், பூதத்தேவன் போன்ற ஆண்பாற் பெயர்கள் இருப்பதால் பூதி என்பது பெண்பாற்பெயர் என்கிறார்.   குறுந்தொகை : 97,174,219

வெண்பூதியார் சொல்லும் உயிரியல் செய்தி
            சங்க இலக்கியம் முழுமையுமே இயற்கையோடு இணைந்தது. இயற்கையின் சிறிய அசைவையும் பதிந்து வைத்திருக்கிறது. இந்தப்பாடலில் கள்ளிச்செடியின் இயல்பினைச் சொல்லியுள்ளார். கள்ளிச் செடியின் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும்.  ‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடிவெண்பூதியார்: குறுந்தொகை:174:2

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...