-நா.முத்துகுமார்
ஆரம்ப பாடசாலையில்
அம்மாவுடன் படித்தவரை
நேற்று ஒரு திருமணத்தில்
சந்திக்க நேர்ந்தது.
முப்பது வருடத்திற்குப் பிறகு
சென்னைக்கு வருகிறாராம்.
கப்பலில் வேலையாம்
பர்மா மலேசியா சிங்கப்பூரென்று
கோபால் பல்பொடியைப் போல்
சென்று வந்த நாடுகளை
சிலாகித்துக்கொண்டிருந்தார்.
கடலோடிய களைப்பு
முன் வழுக்கையில் தெரிந்தது
அவரது பால்யத்தில் ஒளிந்திருந்த
அம்மாவின் பால்யத்தை
ஆர்வமுடன் விசாரித்தேன்
சிறுசிறு சண்டையில் தொடங்கி
பேனா முள்ளாய்
அம்மா கிழித்துவரை
சிரித்தபடி சொன்னார்.
அம்மாவின் கோபம்
அவரது வலது கையில்
தழும்பாக இருந்தது.
அம்மாவின் கையெழுத்து
அழகாக இருக்குமாம்
அவரது மூத்த மகளும்
அம்மாவைப் போலவே
அழகாக எழுதுவாளாம்
அவருக்கும்
அம்மாவுக்கும்தான்
படிப்பில் போட்டியாம்.
கடிகாரங்கள் திருடிவிட்ட
ஐம்பது வருடங்களை
திரும்பவும் கொண்டு வந்து
கண்முன் கொண்டுவந்தவர்
கிளம்புமுன் கேட்டார்.
அம்மா வரலையா
தம்பி.
வழக்கம்போல் அழாமல்
வார்த்தைகள் சேகரித்து
மென்மையாகச் சொன்னேன்
எனக்கு ஐந்து வயது
இருக்கும்போதே
அம்மா இறந்துட்டாங்க
ஒலித்துகள் மூர்ச்சையாகி
மெளனம் எங்களை சூழ்ந்த பிறகு
ஆரம்ப பாடசாலையில்
அவரை அமர வைத்துவிட்டு
நான் வெளியேறினேன்.
No comments:
Post a Comment