இயக்குநர் உஷா கிருஷ்ணன் இயக்கத்தில் கலையரசன், ஷாலின், காளி, வைஷாலி, பால சரவணன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே
படத்தின் வெற்றிக்கு சப்தமில்லாமல் உழைத்திருக்கிறது. அந்த சீக்ரெட்டை
அறிந்துகொள்ள ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம்.
நமது ஸ்டூடியோவுக்குள் டீம் நுழைந்ததுமே,
அரட்டைக் கச்சேரி
ஆரம்பமாகிவிட்டது. சரி, நேர்காணலை
தொடங்கலாம் என்றதும், பாய்ந்து வந்து
மைக்கை பிடித்துக்கொண்டு காம்பயரிங் செய்ய ஆரம்பித்துவிட்டார் படத்தில்
‘மகா’வாக அனைவரையும் மயக்கிய வைஷாலி. பிரபல
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவருக்கு, ‘ராஜா மந்திரி’ படம் பெரிய ஜாக்பாட். வைஷு எடுத்த எடுப்பிலேயே,
தனது வழக்கமான பாணியில் பேசிக்கொண்டே...
நகைச்சுவையில் பின்னி பெடலெடுக்கும் பாலாவிடம் முதலில் மைக்கை நீட்டினார்.
“இந்தப் படத்துல கலையரசனுக்கு நண்பனா நடிச்சிருக்கேன்.
செம காமெடியா என்னோட கேரக்டர் வந்திருக்கு. காமெடின்னா, வழக்கமா என்கிட்ட இருக்குற கவுன்ட்டர்
எல்லாம் இருக்காது. கதையை ஒட்டிதான் என்னோட நகைச்சுவை இருக்கும். ஒன்றரை
வருஷத்துக்கு முன்னாடியே என்னோட கேரக்டர் பற்றி டைரக்டர் உஷா கிருஷ்ணன்
சொல்லிட்டாங்க. அதனால அப்போதிருந்தே அந்தப் பாத்திரத்துக்காக என்னை
மெருகேத்திக்கிட்டேன். இந்தப் படத்துல என்னோட கதாபாத்திரம் மட்டுமில்லை,
என்கூட
நடிச்சிருக்கிற காளி உள்ளிட்டவங்களோட கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில
பேசப்படுறதுக்குக் காரணம், டைரக்டரோட
அர்ப்பணிப்புதான். இந்தப் படத்தோட ஸ்பெஷாலிட்டியே வலுவான கேரக்டர்ஸ்தான்!” என்றவரை இடைமறித்தார் வைஷாலி.
“படத்தோட ஆடியோ ரிலீஸின்போது, ‘இந்தக் கதை என்னோடது, அதை திருடிட்டாங்க’னு சொன்னீங்களே..?’’
“இந்தப் படத்துல கலையரசனோட அண்ணன் கேரக்டர் எனக்கு. இது
திருட்டுக் கதையில்ல, ஆனா
என் கேரக்டர் அப்படியே என் வாழ்க்கையில இருந்து திருடப்பட்ட மாதிரி இருக்கும்னு
சொல்றேன். டைரக்டர் உஷா என்கிட்ட கதையை சொன்னப்போ, அப்படியே ஒவ்வொரு சீனும் என்னோட
வாழ்க்கையில இருந்து எப்படி எனக்கே தெரியாம எடுத்தாங்கன்னுதான் யோசிச்சேன்.
அப்புறம்தான் தெரிஞ்சது இது ஒருத்தரோட வாழ்க்கையில மட்டுமில்லை,
பலரோட வாழ்க்கையில
நடந்த சம்பவம்னு. அதுமட்டுமில்ல, டைரக்டர் உஷா
கிருஷ்ணன் அப்பாவோட வாழ்க்கையிலேயும் அது நடந்திருக்கு. அதைத்தான் திரைக்கதையா
கோத்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ‘ராஜா மந்திரி’யோட கிளைமாக்ஸ்
காட்சி மட்டும்தான் இன்னும் நிஜத்துல நடக்கல. உண்மையிலேயே இந்தப் படம் 30 வயதைத் தாண்டியும் திருமணமாகாத
இளைஞர்களுக்கு சமர்ப்பணம்’’ என்று
பாலா சொல்ல, “கவலையே
வேண்டாம்... கூடிய சீக்கிரமே கல்யாணம் நடந்துடும்” என்று வைஷாலி சொன்னபோது, காளியின் முகத்தில் வெட்க ரேகைகள்.
கலையரசன் பக்கம் திரும்பிய வைஷாலி, ‘‘இவரை படங்கள்ல அன்புக்கு இலக்கணமா பார்த்திருப்போம். ‘உறுமீன்’ படத்துல பயங்கரமான வில்லனா காட்டியிருப்பாங்க.
ஆனா, முதன் முறையா இந்தப்
படத்துல காமெடியில கலக்கியிருக்காரு நம்ம கலை” என்று பேசிக்கொண்டே அவர் தோளில் தட்டி,
“சொல்லுங்க... இந்த
மாதிரியான ஒரு கதையில் நீங்க ஃபிட்டாவீங்கன்னு நினைச்சீங்களா?” என்றார்.
“மெட்ராஸ்’ படத்துக்கு
அப்புறம் நான் கமிட்டான படம் இது. கதையை கேட்கும்போது
பயமாத்தான் இருந்துச்சு. ஏன்னா, ஒருத்தர் நகைச்சுவையா
பேசுறதைப் பார்த்து நூற்றுக்கணக்கான பேரு சிரிக்கிறது சாதாரண
விஷயமில்ல. ரசிகர்களை
சந்தோஷப்படுத்தறது சுலபம் இல்ல. உஷா மேடம் நம்பிக்கை கொடுத்ததால, பாத்திரத்தை உள்வாங்கிக்கிட்டு நடிக்க
முடிஞ்சுது. என்னோட நடிச்ச காளியும், பாலாவும் ரொம்ப சப்போர்ட்டிவா இருந்ததால படம் சிறப்பா வந்திருக்கு.
ஒரு கிராமத்துக்குப் போய் கேமராவை ஒளிச்சுவெச்சு படம்
பிடிச்சா எப்படியிருக்குமோ, அப்படி
பல பேரோட எதார்த்தமான நடிப்பு, திரையில
பவர்ஃபுல்லா வந்திருக்கு. தியேட்டருக்கு வாங்க, நிச்சயமா சந்தோஷமா
திரும்பிப் போவீங்க”
என்று கலையரசன்
படத்துக்கு யு சர்டிஃபிகேட் கொடுக்க, “கடவுளே... உண்மையை உலகத்துக்குச் சொல்லிட்டீங்க...” என்று சிரித்தவாறே தன் அனுபவங்களைப்
பகிர்ந்துகொண்டார் வைஷு.
“ராஜா மந்திரி’ படத்துல
நாங்க எல்லோரும் ஆர்ட்டிஸ்ட்ஸ், கேரக்டர்ஸ்
என்பதைத் தாண்டி ஒரு குடும்பமாவே மாறி வாழ்ந்துட்டோம். மலையாளத்துல இருந்து
தமிழுக்கு வந்திருக்கிற ஷாலின்கூட, அப்படியே
எங்க டீம்ல மெர்ஜாயிட்டாங்க. பாலாவும் காளியும் மலையாளியாவே மாறிட்டாங்கன்னா பார்த்துக்கங்க...”
என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
மலையாளப் பாடல்களை
ராகம்போட்டு காளி, பாலா
கூட்டணி பாட, அந்த
இடமே கலகலப்பால்
நிறைந்தது.
“இப்படியே போனா கூடிய சீக்கிரமே ரெண்டு பேரும் மலையாளத்துல
பிஎச்.டி வாங்கிடுவீங்க. அப்புறம் அதை ‘ஷாலின் எஃபெக்ட்’டுனு ஊரே பேச ஆரம்பிக்கப்போகுது” என்று கலாய்த்த வைஷூ, படத்தின் நாயகி ஷாலினிடம், “இந்தப் படத்தோட கதையை கேட்கும்போது என்ன
நினைச்சீங்க? மலையாளத்துல
நிறைய படங்கள்ல நீங்க நடிச்சிருக்கீங்க. ஏன், ஷார்ட் ஃபிலிம்கூட டைரக்ட் பண்ணியிருக்கீங்க.
தமிழ் சினிமாவை எப்படி பார்க்கிறீங்க?’’ என்று கேள்விகளை அடுக்க, தமிழ் கலந்த மலையாளத்தில் பேசினார்
ஷாலின்.
“தமிழ் ஃபிலிம் இன்டஸ்ட்ரியில வொர்க் பண்ணணும்கிறது என்னோட
ஆசை. மலையாளத்துல நடிக்கும்போது அங்கிருக்கிற என் ஃபிரெண்ட்ஸ் எல்லோருமே,
‘தமிழ்ல
நடிக்கணும்கிறது ஒரு லைஃப் டைம் அச்சீவ்மென்ட்’னு சொல்லுவாங்க. அப்படியிருக்கும்போதுதான்
டைரக்டர் உஷா மேடம் கொச்சினுக்கு வந்து என்கிட்ட கதையைச் சொன்னாங்க.
கொஞ்சம்கூட நான் யோசிக்கல, உடனே,
ஓ.கே சொல்லிட்டேன்.
அதற்குக் காரணம், அவங்க
தன்னோட ஸ்கிரிப்ட்ல ரொம்பத் தெளிவா இருந்தாங்க. உஷாகிட்ட மட்டுமில்ல,
கோலிவுட்
டைரக்டர்ஸ்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் அவங்களோட இந்த
டெடிக்கேஷன்தான்” என்று
வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கோத்துக்கொண்டிருக்கும்போதே, குறுக்கிட்டு பிரேக் போட்டார்
வைஷாலி.
“நிச்சயமா.
உங்களுக்கு தமிழ் சினிமாவுல நிறைய படம் கிடைக்கும். பொதுவா நாங்க மலையாளத்துல
இருந்து நிறைய ஹீரோயின்ஸ் புடிப்போம். அதுதான் எங்களோட குல
வழக்கம்” என்று
கும்மிடியடித்தவர், மீண்டும்
காளியிடம் மைக்கை திருப்பி, ‘‘எதுக்காக
‘ராஜா மந்திரி’
படத்தை பார்க்கணும்னு
சொல்லுங்க?’’ என்றார்.
“படத்துல
வர்ற ‘மகா’ கேரக்டருக்காகவே எல்லோரும் தியேட்டருக்கு
வரணும்...” என்று
சொல்லி, வைஷுவை
அவர் கைகாட்ட, அவர் வெட்கத்தில்
நெளிய, தொடர்ந்தார் காளி. “ச்சும்மால்லாம் சொல்லலை. ஷுட்டிங் ஆரம்பிக்கும்போது
‘மகா’ கேரக்டர் யாருன்னே தெரியாம இருந்துச்சு.
அது ரொம்ப க்யூட்டான
பொண்ணு, எல்லாத்தையுமே
ரொம்ப அழகா, நீட்டா
செய்யுற ஆளு, தன்னோட மனசுல
இருக்குற விஷயத்தை பெருசா வெளியில காட்டாத பொண்ணும்கூடனு எல்லாம் சொல்லி,
இப்படி பெரிய பேக்
ஸ்டோரி இருக்கும்போது, இந்த
ரோல்ல யாரு நடிக்கப்போறாங்கன்னு
பெரிய எதிர்பார்ப்புல இருந்தேன். ஏன்னா, எனக்கு படத்துல ‘மகா’தான் ஜோடி.
கடைசி
நிமிஷம் வரைக்கும் ‘மகா’
பாத்திரத்துக்கு ஆள் கிடைக்கவேயில்ல.
‘மகா’வோட போர்ஷனை நாளைக்கு ஷுட் பண்ணப்
போறோம்னு சொல்லிட்டாங்க.
ஆனா, யாருன்னு
தெரியவேயில்ல. திடீர்னு காலையில வந்து, ‘ ‘மகா’ வந்துட்டாங்க...
‘மகா’ வந்துட்டாங்க...’னு ஷுட்டிங் ஸ்பாட்டுல ஒரே பேச்சு.
எங்கடா நம்ம ஜோடின்னு ஓடிப்போய் பார்த்தா, ஃப்ரீ ஹேர் விட்டுக்கிட்டு டீ&ஷர்ட், ஜீன்ஸ் சகிதமா வந்து வைஷாலி
நிக்கிறாங்க. அவங்களைப்
பார்த்து அப்படியே ஷாக்காகிட்டேன்...” என்ற காளியை, “அவங்க
அழகுல மயங்கிட்டீங்களாக்கும்...”
என பாலா சைடுகோல் போட,
அவரை
முறைத்துவிட்டுத் தொடர்ந்தார் காளி.
“ ‘மகா’
பாத்திரத்தை
எப்படியெல்லாம் மனசுல கோட்டை கட்டி வெச்சிருந்தோம்? இப்படி டைரக்டர் ஒரே டேக்குல
எல்லாத்தையும் உடைச்சுப்புட்டாங்களேனு வருத்தமாயிட்டேன். என்னடா இப்படி
ஆயிடுச்சேன்னு, மெல்ல
கேமராமேன்கிட்ட பேச்சு கொடுத்தேன். அவருதான், ‘காளி... 10 நிமிஷம் அமைதியா இரு. உங்க ‘மகா’ உங்களுக்குக் கிடைப்பா’னு சொன்னாரு.
அவர்
சொன்னமாதிரி 10 நிமிஷத்துல
அசல் மகாவாகவே மாறி வந்து ஸ்பாட்டுல நின்னாங்க வைஷு. நான் சார்ஜ்போட்ட செல்ஃபோன்
மாதிரி அப்படியே
பிரைட் ஆயிட்டேன்!’’ - காளி
சொல்ல, மொத்தக்
கூட்டமும் வெடித்துச் சிரிக்க, அந்த இடமே சந்தோஷக் காடானது!
No comments:
Post a Comment