மூன்று விதமான அப்பாக்கள். தங்களது பிள்ளைகளின் வளர்ப்பு, கல்வியை எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் கதை. சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணன் ஆகியோருக்கு ஒரே சமயத்தில் குழந்தை பிறக்கிறது. அதற்கும் முன்னும் பின்னுமான சம்பவங்களின் உணர்ச்சிக் கோர்வைதான் படம்.
தகுதி, தராதரம், மரியாதை என இன்ன பிற மேம்போக்கு அம்சங்கள் பார்த்துப் பிள்ளையை வளர்க்க ஆசைப்படும் தன் மனைவியின் பேச்சை மீறி, தனியார் பள்ளியிலிருந்து தன் மகனை தடம் மாற்றி அவனது இயல்பிலேயே வளர்த்து தனி மனிதனாக உயர்த்துகிறார் சமுத்திரக்கனி.
வயிற்றில் வளரும் உங்கள் குழந்தை என்னவாக வரவேண்டும்? என்கிற மருத்துவரின் கேள்விக்கு, அந்த பிள்ளையின் கடைசி காலம் வரை பட்டியல் வாசிக்கும் அப்பா தம்பி ராமையா. குறித்த தேதியில் அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பிறப்பு வைத்தால் அது நடக்கும் என்று சோதிடர் சொல்ல, அவர் சொன்ன நேரத்தில் பிரசவம் நடக்கிறது.
""நாலு பேருக்குத் தெரியாம இருந்துட்டு போயிடுணும்டா...'' என்று சொல்லி சொல்லியே மகனை வளர்க்கிற இன்னொரு அப்பா நமோ நாராயணன்.
இப்படி வளரும் குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, கனவு... அவர்களுக்கான உலகம் எல்லாம் என்ன ஆனது, அதன் பின் அவர்களுக்கு நடந்தது என்ன என்பதைச் சொல்லுவதுதான் படம்.
குழந்தை பிறப்பு முதல் வளர்க்கிற வரை எப்படியெல்லாம் பெற்றோர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதை அவர்களுக்கே தெரியாமல் பின் தொடர்ந்து சென்று எடுத்தது போலக் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
மூன்று தம்பதிகளை வைத்துக் கொண்டு நடுத்தர மக்களின் அன்றாட நடைமுறை, அவர்களின் ஆசை ஆகியவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தம்பி ராமையாவுக்கு இருக்கும் குணாதிசயங்கள் அவ்வப்போது வாய்விட்டுச் சிரிக்கவைக்கப் பயன்படுகிறது. "பெரிய காக்கா முட்டை' விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேபிரில்லா, நசத் என்று படத்தில் நடித்திருக்கும் ஐவரும் மனம் கவர்கிறார்கள்.
அந்த குட்டிப் பையன் நசத் மூலம் சொல்லப்படுகிற கதை மிக உன்னதம். வளர்ந்தும், வளராத அவன் தனது கவிதை வெளியீட்டு விழா மேடையில் நிற்கிற தருணம் மிக உயரம். கண்ணீர் கசிகின்றன நசத்!
படத்துக்கு பெரும் பலம் சமுத்திரக்கனியின் வசனங்கள். அதே சமயத்தில் வசனகர்த்தாவின் புத்திசாலித் தனங்களை காட்டாமல் ஒரு பாத்திரத்தின் வார்த்தைகளாகவே ஏற்றி விட்டிருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
குழந்தைகளின் உலகமும், பெற்றோர்களின் உலகமும் அப்படியே பதிவாகியிருக்கின்றன. ""நீயெல்லாம் நாட்டுக் கோழி மாதிரிடா...'' என ஆழ்ந்து நோக்க வைத்து, ""பெண் என்பவள் எதிர் பாலினம், அவளுக்கும் உன்ன மாதிரிதான்; அடிச்சா வலிக்கும்...'' என நெகிழ வைத்து ""மனுஷங்க மேல நான் வெச்ச நம்பிக்கை வீண் போகல...'' என சிலிர்க்க வைக்கின்றன வசனங்கள்!
தனியார் பள்ளிகளின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை நறுக் சுருக்காகச் சொல்லியிருக்கிறார்கள். பல படங்களில் செய்தது மாதிரிதான் இந்தப் படத்திலும் தம்பி ராமைய்யா. ஆனால் கடைசியில் கதறி நிற்கிற அப்பாவாக தவறை உணர்கிற இடம் நெகிழ்வு.
வசனங்களே இல்லாமல் நீளூம் பல இடங்களில் தன் இசையால் உயிர் கொடுக்கிறார் இளையராஜா. கிளைமாக்ஸ் காட்சி திகில் நிமிடங்களின் பின்னணி இசை இன்னும் மனதில் கேட்கிறது. "அங்காடித் தெரு' படத்துக்குப் பின் ரிச்சர்ட் எம்.நாதனின் கேமரா வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறது.
கல்வி முறை, குழந்தை வளர்ப்பு என எத்தனை படங்கள் வந்திருந்தாலும் அதிலிருந்து தனித்து தெரிகிறார் இந்த "அப்பா.'
படத்தில் ஆங்காங்கே இடம்பெறும் சில "லாஜிக்' மீறல்கள், வயதுக்கு மீறிய அனுபவத்துடன் சிறுவர்கள் பேசும் வசனங்கள் போன்றவற்றை படத்தின் சில குறைபாடுகளாகக் குறிப்பிடலாம் என்றாலும் அவற்றையும் கூட கண்ணில் தெறித்த பன்னீர்துளிகளாகக் கருதி படக்குழுவினரைக் கைகுலுக்கலாம்!
No comments:
Post a Comment