Wednesday, July 06, 2016

அகிலாவின் கவிதைகளில் பெண் மௌனமும் மழை அதிர்வுகளும்


பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா
149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர் - 641 007
பேச:098438 74545.

எழுத்து அனைவருக்கும் பொதுவானது எனினும் பெண்ணின் பார்வையில் பார்க்கும் போது பெண் எழுத்து தனித்துவமானது. தமிழிலக்கியச் சூழலில் இன்று உரக்க ஒலிக்கும் விவாதங்களிலொன்று பெண்கள் எழுதும் கவிதைகளைப் பற்றியது. எல்லா விவாதங்களையும் போல இதிலும் முன்னெடுத்துச் செல்வதற்கான கருத்துக்கள் குறைவு ஆரவாரங்கள் அதிகம். இது இயல்பானது என்று இலக்கிய வரலாற்றைப் பார்க்கும் போது தெளிவாகிறது. தமிழில் புதுக் கவிதையின் வருகை இது போன்ற விவாதங்களை உருவாக்கியது. இத்தகைய போக்கினால் அகிலாவின் கவிதை மொழி தனித்துவமானது. மக்கள் தங்கள் ஆற்றலின் வலிமையும், சிறப்பையும் நன்குணர்ந்து போராட்டக் களத்தில் இறங்குவர். எத்தகைய போராட்டமாயினும். புரட்சித்தன்மையில் வெடிப்பனவே சீர்திருத்தங்கள் தோன்றியதை இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த வகையில் கவிஞர்கள் இப்போராட்ட உணர்வடைய மக்களின் எழுச்சியைப் பாடும்பொழுது, தற்காலச் சமூக போக்குகளிலிருந்து திரண்டெழும் அனுபவ மூலங்களைக் கவிதை ஆக்குவர் மேலும் மக்களையும், மக்கள் சார்ந்த நிகழ்வுகளையும் அகிலா கவிதைகளில் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
    தமிழ்க் கவிதையில் பெண் விடுதலை பேசிய பாரதிக்கும், பாரதிதாசனுக்குப் பிறகு சுயமான பெண் விழிப்பை உணர்த்தியக் கவிஞராக விளங்குகிறார். பழைய சமூக அமைப்பில் தீண்டாதவர் என ஒதுக்கப்பட்டது போலவே, பெண்கள் பின்புத்தி உள்ளவர்கள் என ஒதுக்கிய காலம் மாறி இன்று எல்லாமே பெண்கள் என ஆனபோது போராட்டங்கள் ஏராளம். இந்த வகையில் அகிலா கவிதைகளில் பெண் மௌனத்தையும், அதன் அதிர்வையும் காணலாம்.
        “மச்சிவீட்டில் அமர்ந்த மதப்பில்
        மதிலின்மேல் கொட்டாங்குச்சி
        மழைநீரை அதிகமாய் குடித்து
        எட்டிப்பார்த்த நிலவைப் பிடித்து
        சட்டென உள்ளே அடைத்தது
        கெஞ்சிய நிலவை
        போதையில் கொஞ்சியது
        போரட்டமும் தள்ளாட்டமும்
        மதிலின் விளிம்பில்
        சற்றுபிடி தளர்ந்த பொழுது
        நீர் மண்ணுக்கும்
        நிலவு விண்ணுக்குமாய்
        மதிலின்மேல் தனித்து
        மீண்டும் மழைக்காய் கொட்டாங்குச்சி. (ப.13)       
இன்று பெண் எழுதும் கவிதைகளைப் பற்றியும் இதுபோன்ற கற்பனைகளை உரக்க ஒலிக்கின்றன. இங்கு பேசப்படும் பொருள் பெண்களின் படைப்பாக்கத்தை முன்னிருத்தியது என்பதனால் இது குறித்தக் கருத்துக்களை மட்டுமே கவனப்படுத்த படுகின்றன.
 இலக்கியத்தில் நிலவும் பாகுபாடுகள் அடிப்படையில் அதை அணுகுவதற்கும் உதவும் கருவிகள் என்று மட்டுமே நம்புகிறேன். எனினும் காலமும் சூழலும் பெண்ணெழுத்து என்ற பாகுபாட்டை எதார்த்தமாக்கி இருக்கின்றன. ஆண் மையச் சிந்தனைகளே மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் அமைப்பில் இந்தப் பாகுபாடு இயல்பானதும் கூட. தமிழ்க் கவிதைக்கு நீண்ட மரபு உண்டெனினும் பெண்ணெழுத்து தற்கால நிகழ்வு. பெண்கள் இதுவரை நடைமுறையிலிருந்த கவிதை மரபை மறு உருவாக்கம் செய்வதோடு தங்களது மொழியையும் படைக்க வேண்டியிருக்கிறது. இந்தப் புத்துருவாக்கம்தான் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எழுப்புகிறது. இலக்கியம் என்ற பரந்த வெளியை ஆண்களே அடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் பெண் தனக்கான இடத்தை நிறுவிக்கொள்ளும் இயல்பான செயலாகவே பெண்ணெழுத்து மதிப்பிடப்பட வேண்டும்.
    “கோபத்தின் கடும் வாசமொன்று
    காற்றில்
    திரும்பிய திசையில்
    இளம் தம்பதியர்
    கைபிடிக்க
    அவளின் பிரயத்தனம்
    உதறி விலகி
    அவனின் மூர்க்கம்
    இணைக்கோடுகளாய் நடக்க
    தடுமாற்றம்
    பலமாய் வீசிய காற்றில்
    ஆடை விலகலில்
    ஆவன் அவளை மூடிநிற்க
    அங்குலவியது சிறு மௌனம்
    தொடர்ந்த நடையில்
    காற்றில் மிஞ்சியிருந்தது
    இம் மண்ணின் வாசம்”    (ப.16)
    ஒரு புதிய போக்கை ஏற்றுக்கொள்ள முடியாத மனப்பாங்கு இலக்கியத்தை அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கிச் செலுத்த இயலாது என்ற விதியை ஒப்புக்கொண்டால் இந்தக் கருத்துக்களின் வெறுமையை நாம் உணர முடியும். இந்த விதியைச் சார்ந்தே இலக்கியம் புதிய களங்களைக் கண்டிருக்கிறது.
    கவிதை அனுபவமும் கருத்தும் ஒருங்கிணைந்த படிமம் என்ற கருத்தை கவிதையியலின் ஆதாரமாகக் கருதுதமுடிகிறது. இதுவரை நாம் கவிதையின் பரப்பில் கண்டவை ஆணின் உலகம் சார்ந்த அனுபவங்கள். தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பெண்ணின் துணையின்றி ஆணின் இருப்பு சாத்தியமில்லை. அப்படியானால் பெண்ணுக்கும் அனுபவங்களும் அவற்றையொட்டிய கருத்தாடல்களும் நிகழுமில்லையா? அவை ஏன் இலக்கிய மதிப்புப் பெறவில்லை அப்படி மதிப்புப் பெறாமல் போவது ஒரு சமூகத்தின் அரைகுறையான வரலாற்றை, முழுமையற்ற கலாச்சாரத்தை, நிறைவு பெறாத படைப்பாற்றலையல்லவா அடையாளப்படுத்தும் இந்தக் கேள்விகள்தாம் பெண்ணெழுத்து முன்வைப்பவை.
    அனுபவம் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானது. என்னுடைய கவிதை என்னுடையதாக அமைய இந்த அனுபவம்தான் அடிப்படை. இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத்தான் நான் முற்படுகிறேன். இதே விழைவு பெண்ணுக்கும் உண்டு. இதே பிரத்தியேகத்தன்மை பெண் அனுபவத்துக்கும் உண்டு.
    இந்த அனுபவங்கள் பின் தள்ளப்பட்டு விடும்போது வாழ்க்கையின் கேள்விகளை வெளிப்படுத்துவதற்கான என்னுடைய முனைப்பும் தேவையும் ஊனம் அடைகின்றன என்று கருதுகிறேன். இந்தக் கேள்விகளிலிருந்துதான் வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் உயிர் கொள்ளுகின்றன. இது நிகழாமற்போனால் வாழ்க்கையோட்டம் நிலைத்து விடும். பெண் கவிதைகள் அண்மைக்காலமாகத்தான் இந்தக் கேள்விகளை முன் எறிகின்றன. இந்தக் கேள்விகளை எதிர்கொள்ள ஆண் மனம் பதறுவதில்தான் எதிரான விமர்சனங்கள் எழுகின்றன. அந்தப் பதற்றம்தான் பொய்யான இலக்கிய விலக்குகளை உருவாக்குகிறது. உண்மையில் இலக்கியத்தில் விலக்கப்படக் கூடியதாக எதுவுமில்லை.
        “மழை முடிந்து
        வானம் வெளிச்சமாயிற்று
        இலை நிறைந்த மரங்கள்
        வேர் நுழைந்த்தன மண்ணுக்குள்
        தலைதுவட்ட மறந்த புலுனிகள்
        மழையின் மௌனத்தை
        அங்கலாய்க்கத் தொடங்கின
        வட்டமிட்டுத் தேய்கிறது
        மழையற்ற விடியலில்
        நிலவு மட்டுமாய்
        இரவைத் தேடி”     (ப.80)   
    பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று அகிலா குறிப்பிடுகிறார். இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது. இதுவரை தன் உடல்மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்திரிப்பை உதறும் மறுப்பு. தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம். இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும் போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன. அகிலாவின் கவிதை மொழி வீரியம் மிக்கது. சில இடங்களில் நீர்த்துப் போய், கூறியது கூறலாக இருப்பினும் கவிதை மொழியில் பாசாங்கு எதுவுமில்லை. அழகியலரீதியில் புதிய வகைப்பட்ட மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள கவிதைகள், கருத்தியலுக்கு முதன் மையிடம் தந்திருப்பதனால் வடிவம், வெளிப்பாடு குறித்துப் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை.
நூறாண்டுகள் கடந்த நிலையிலும் பெண்கள் மீதான வன்முறை குறித்தும், பெண்ணுடல் அரசியல் குறித்தும் எழுத வேண்டியிருப்பது, நம் சமூகத்தில் பெண்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஆனால் அடக்குமுறை எதற்கும் அடங்காமல் நிமிர்ந்தே எரிகிற நெருப்புபோலச் சுடர்விட்டு எரியும் பெண் எழுத்து, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...