Friday, December 17, 2021

பாரதி…தீ…தீ…தீ!

முனைவர் பூ.மு.அன்புசிவா

தமிழ்த்துறைத்தலைவர்

சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நேரு நகர், காளப்பட்டி சாலை

கோயம்புத்தூர்-641 014.

பேச:9842495241.

பாரதி

உன் கடைசி கவிதையை 

நீட்டினால் தீ

அதனால் தான் என்னமோ

உன் கணல் கவிதைகள் எங்கும் தீ…!

பாரத தேசம்

உன் ஒற்றைப் பார்வையால்

பாரதி தேசமானது…!

பூனூல் போட்ட

மேல் தடடு மக்களுக்கு மத்தியில்

தமிழ்ப் பெண்களுக்காக

பாநூல் பாடிய பாவலன் நீ…!

குடியிருந்த தாய் வீட்டிற்கு

வெள்ளை அடிக்கவில்லை நீ

ஆனால்!

தன் தாய் நாட்டிற்காக

வெள்ளையனையே விரட்டி அடித்தவன் நீ…!

சேதுவை மேம்படுத்தி

சமுத்திரத்தில் வழி கண்டாய்

பெண் சமூக மேம்பாட்டிற்காக

உன் பாட்டால் விழி கண்டாய்…!

அன்று

இந்தியா என்னும் இதழின்

ஆசிரியாரும் நீ தான்

இன்று

இந்தியாவின் ஆச்சரியமும் நீதான்.

 


Thursday, June 03, 2021

காதல் காட்சி

சங்க இலக்கியப் பாடல்கள் என்றாலே கற்றோர் மத்தியிலேயே ஒரு பயம் தெரியும். சரியான முறையிலும், எளிமையான விதத்திலும் மக்களுக்கு அவை வழங்கப் பட்டால் இப்பாடல்கள் பற்றிய பயம் அறவே நீங்கிவிடும். இரசிகத்தன்மையைப் போல் பயத்தையும், தயக்கத்தையும் போக்க வேறு எதனாலும் முடியாது. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் இலக்கியங்கள் பலவும் செய்யுள்களால் ஆக்கப்பட்டன. அவற்றுள் சில தனிப்பாடல்கள் இன்றைய சிறுகதைக்குச் சொல்லப்படும் இலக்கண வரம்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை உணர்த்துவதாக, சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாக இருக்க வேண்டும் என்ற என்ற சிறுகதை வரம்புக்கு அமைவாக எழுதப்பட்ட ஒரு கழக இலக்கியச் சிறுகதை இது.

முன்றில் முஞ்சையொடு முகண்டை பம்பி்ப்     

பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்              

கைம்மான் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப்  

பார்வை மடப்பிணை தழீயிப் பிறிதேர்          

தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட  

இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்        

கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே            

பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்          

இல்வழங்  காமையிற் கல்லென ஒலித்து        

மானதள் பெய்த உணங்குதினை வல்சி            

கானக் கோழியோ டிதல்கவர்ந் துண்டென!  புறநாநூறு 320                                                

அது ஒரு காட்டிடையே அமைந்துள்ள குடிசை. அக்குடிசையின் முற்றத்தில் முஞ்சைமரம் ஒன்று பசுமைப் பந்தல் வேய்ந்தாற்போல் அடர்ந்து, படர்ந்து நிழலையும் குளிர்ச்சியையும் அளித்துக் கொண்டிருந்தது. அலைந்து திரிந்து வேட்டையாடிக் களைத்துப் போய் வந்த வேடுவன் அந்த மரத்தின் கீழே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். வீட்டின் உள்ளே, அடுப்புக் கருமங்களில் ஈடுபட்டிருந்தாள் வேடுவச்சி. குடிசையின் வாசலில் உரலில் இட்டு இடித்த தினை அரிசி ஒரு மான்தோலின் மேல் உலர்வதற்காகப் பரப்பட்டிருந்தது.

சில காட்டுக் கோழிகளும், குருவிகளும் உலர்வதற்காகப் பரப்பப்பட்டிருந்த தினையரிசியைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. சுற்றியிருந்த புல்வெளியில் ஒரு கலைமானும், பிணையும் புல் மேய்ந்து கொண்டிருந்தன.

ஏதோ கருமமாக வாசலுக்கு வந்த வேடுவச்சி மரநிழலில் தன் கணவன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருப்பதையும், பறவைகள் தினையைக் கொத்தித் தின்று கொண்டிருப்பதையும் கண்டாள். அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

பறவைகளை விரட்டத் தன் கைகளை ஓங்கித் தட்ட நினைத்தவளுக்கு, ஒரு எண்ணம் வந்ததால் தட்ட நினைத்த கைகள் தயங்கின. அவள் மனதில் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த அந்த எண்ணம்தான் என்ன? அவள் கைகளைத் தடை செய்த உணர்வு எது?

அவளுக்கு வலது புறத்திலும், இடது புறத்திலும் அமைதி ஒன்றிலேயே நிகழ முடிந்த இரண்டு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. பறவைகளை விரட்ட அவள் கைகளால் ஓசை எழுப்புவாளானால் இந்த இரண்டு நிகழ்வுகளும் கலைந்து போவதை அவள் விரும்பவில்லை. ஒன்று வலப்பக்கம் மேய்ந்து கொண்டிருந்த மான்கள் அன்பு என்ற உணர்வு காதலாகி, காதல் என்ற உணர்வு இன்பமாகி உடலும் உள்ளமும் ஒன்றித்திருக்கும் நிலை.

இடப்பக்கம் ஒரு சில அம்புகளைக் கொண்டே யானையை வேட்டையாடிவிடக் கூடிய  வலிமை உடைய அவள் கணவன் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்.     

உலர்த்தியிருந்த தினை முழுவதையும் பறவைகள் தின்று விட்டாலும் அவளுக்குக் கவலையில்லை. அந்த மான்கள் துணுக்குற்று பிரிந்து விடக் கூடாது. ஆழ்ந்து உறங்கும் தன் கணவனின் உறக்கம் கலைந்து விடக் கூடாது. அது போதும் அவளுக்கு.

பேசாமல் உள்ளே மெதுவாக நடந்து சென்றாள் வேடுவச்சி. மான்தோலினை விரித்து அதன் மேல் உலர்ந்திருந்த தினையை கோழிகளும், குருவிகளும் தின்று தீர்த்துக் கொண்டிருந்தன.

வேடனின் உறக்கமும், மான்களின் இன்பமும், பறவைகளின் வயிறும் நிறைந்து கொண்டே இருந்தன. மான் தோலில் உலர்த்தியிருந்த தினை மட்டுமே குறைந்து கொண்டே இருந்தது.

மீண்டும் அவள் வெளியே வந்தபோது அவள் கணவன் உறங்கி எழுந்திருந்தான். மான்கள் பழைய நிலையிலிருந்து திரும்பித் தனித்தனியே மேய்ந்து கொண்டிருந்தன. தினை உலர்த்தியிருந்த மான்தோலைப் பார்க்கிறாள். அதில் ஒன்றுமே இல்லை. அது வெறுமையாக இருந்தது. ஆனாலும் அவள் மனம் நிறைந்திருந்தது. அவள் அரிவாளை எடுத்துக் கொண்டு மீண்டும் புறப்பட்டாள் தினை அறுக்க.

இந்த புறநாநூற்றுப்பாடலையும், அதன் விளக்கத்தையும், ரசித்து அதன் மூலம் இன்னும் சில பாடல்களை படிக்க வேண்டுமேன்ற ஆவலைத் தூண்டுமாயின், அது எமது நோக்கத்தைத் தூண்டினால் போன்று அமையும்.

காதல் காட்சி

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் உள்ள கலித்தொகையில் அற்புதமான சில காதல் காட்சிகள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. இக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. அதில் ஒரு பாடலைப் பார்ப்போம். அற்புதமான காதல் காட்சி நம் கண்முன்னே தோன்றும்.

சுடர் தொடீஇ! கேளாய் – தெருவில் நாம் ஆடும் – மணல்

சிற்றில் காலின் சிதையா, அடைச்சியகோதை பரிந்து,

வரிப் பந்து கொண்டு ஓடி ,

நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே!

உண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு, அன்னை

அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!

உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்; என, யானும்

தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை

வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,

அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!’ என்றேனா,

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,

உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்

கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்

செய்தான், அக் கள்வன் மகன்!

தலைவி தன் தோழியிடம் கூறுவது போல் அமைந்த பாடல் இது. சரி பாடல் காட்டும் காட்சியின்பம் என்னோ? தற்காலத் திரைப்படங்களிலும், வெளிவரவுள்ள படங்களிலும் நீங்கள் பார்க்கலாம். இந்தச் சிந்தனை இரண்டாயிம் ஆண்டுகளுக்கு முன்பு முகிழ்ந்த ஒன்று என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா!

சிறு வயது முதல் ஒன்றாகப் பழகி விளையாடிய அவள், பருவ வயதில் காதல் கொண்ட இளைஞன் ஒருவன் நீண்ட நாட்களாகத் தன் அன்புக்குரியவளைச் சந்திக்க முடியாத நிலையில் மீண்டும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. தன் உள்ளம் கவர்ந்த தாரகையைக் காண அவள் இல்லம் நோக்கி செல்லுகிறான்.

சிறு வயது முதல் ஒன்றாகப் பழகி விளையாடிய அவள் மீது தன் காதல் உள்ளத்தை இன்று எப்படியும் அவளிடம் கூறிவிட வேண்டும் என்ற துடிப்புடன் சென்ற அவனுக்குப் பெரும் ஏமாற்றம். அங்கே வீட்டின் புறத்தே அன்பிற்குரியவளும் அவளுடைய அன்னையும் இருப்பதைக் காண்கிறான். உடனே சூழலைப்புரிந்து கொண்டு தாகமாக இருக்கிறது.. தாகத்துக்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்’ என்று கேட்கிறான்.

அன்னையும் தன் மகளிடம் தண்ணீர் தரும்படி கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விடுகிறாள். அழகிய பொற்கிண்ணத்தில் தண்ணீர் தருகிறாள் தலைவி. தண்ணீரைப் பெறுவதுபோல் அவளின் அழகிய வளையல் அணிந்த கரத்தையும் பற்றி விடுகிறான் தலைவன்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவள் தன்னை மறந்த நிலையில், ‘அம்மா! இங்கே வந்து பாரும்மா… இவன் செயலை’ என்று அலறிவிடுகிறாள்.

உள்ளே இருந்து அம்மா அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வருகிறாள். சட்டென்று தன் நிலையை உணர்ந்த தலைவி, “தண்ணீர் குடிக்கும் போது அவருக்கு விக்கல் வந்துவிட்ட தம்மா, அதுதான் உங்களைக் கூப்பிட்டேன்” என்று கூறி உண்மை நிலையை மறைத்து விடுகிறாள். இதற்குப்போய் இப்படிக் கத்தலாமா? என்று கேட்டுக்கொண்டே விக்கலை நீக்க, தலைவனின் தலையையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விடுகிறாள். அந்தச் சமயத்தில் தலைவன் கடைக் கண்ணாலே தலைவியைப் பார்த்துப் புன்னகை பூக்கின்றான். கண்கள் அங்கே மனதைக் கொள்ளையடித்தன.

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். அழகான ஒரு காதல் காட்சியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைத்துக் காட்டிய ஒப்பற்ற திரைப்படக் கலைஞனாகக் கபிலர் நமக்குத் தெரிவார். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட ஒரு கற்பனை வளமா? சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம் மனதைக் கவரும்படி மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன.

தலைவி தன் தோழியிடம் கூறுவது போல் அமைந்த பாடல் இது. சரி பாடல் காட்டும் காட்சியின்பம் என்னோ? தற்காலத் திரைப்படங்களிலும், வெளிவரவுள்ள படங்களிலும் நீங்கள் பார்க்கலாம். இந்தச் சிந்தனை இரண்டாயிம் ஆண்டுகளுக்கு முன்பு முகிழ்ந்த ஒன்று என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா!


திருக்குறள்

வாய்மைத் திரு வள்ளுவனார்

வகுத்து வைத்த பாதையிது

நான்மறை வேதம் இது

வாழ்வு நெறிப் போதமிது!

மேன்மையுற மாந்தர் பெற

மேதையவர் தந்த மொழி;

ஆனவரை பொருள் அறிந்த

அனுபவமே குறள் அமுதம்;

மூழ்கிவரும் வேளையில் நான்

முத்தடுக்கத் துணிந்த துண்மை;

வாழந்திருக்கும் நாளுக்குள் யான்

வந்தவரை உரைப்பன் குறள்;

மேதினியில் வாழ்ந்த வகை

மீதம் இது அவ்வளவே!

மேவுவது வாழ்வா சாவா?

யாதுமவன் இட்ட பணி

ஆய்ந்து தமிழ் அறிந்து

அரும் பொருள் உரைக்க

ஆதிசிவன் தாழ் பணிந்தேன்

அமுத மழை பொழிகவே

Wednesday, June 02, 2021

இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி சுவாமி விவேகானந்தர்

நாட்டுக்கு இன்றைய இளைய தலைமுறையினர் ஆற்ற வேண்டிய நற்பணிகள் குறித்து இளைஞர்கள் கூடி சிந்திக்க வேண்டும் . அவரது தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை இளைய தலைமுறை பின்பற்றினால் இந்தியா வல்லரசாகும்..

இனி... 

விவேகானந்தர் வாழ்வு, அவரது பணி, அறிவுரைகள் பற்றி பார்ப்போம்....

விவேகானந்தர் யார்?

கொல்கட்டாவில் வக்கீல் விசுவநாத் தத்தர்-புனவேஸ்வரி அம்மையார் தம்பதியருக்கு 1863 ஜன., 12ல் விவேகானந்தர் பிறந்தார். நரேந்திரநாதர் என்பது இளமை பருவ பெயர். அளவு கடந்த உடல், அறிவு மற்றும் மனச்சக்தி மிக்கவர். குழந்தை பருவத்திலேயே ஈகை குணமும், தலைமை பண்பும் கொண்டிருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம், ""நீங்கள் இறைவனை பார்த்திருக்கிறீர்களா? நான் பார்க்க முடியுமா?'' என கேள்வி எழுப்பினார் நரேந்திரநாதர். ""இறைவனை நானும் கண்டுள்ளேன். உனக்கும் காட்டுவேன்'' என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஆறாண்டுகள் அவரிடம் பயின்ற நரேனிடம், ""மக்கள் சேவையே மகேசன் சேவை'' என ராமகிருஷ்ணர் உபதேசித்தார். 1886ல் ராமகிருஷ்ணர் உடலை நீத்தபின், ஆறு ஆண்டுகள் பாரத நாட்டை சுற்றி வந்தார் நரேன். மன்னர்களுடன் பேசி, மக்களுக்கு தொண்டு செய்யுங்கள் என வற்புறுத்தினார்.1892ல் டிச., 25, 26, 27 தேதிகளில் குமரியில் பாறையில் அமர்ந்து தவம் செய்தார்.அவர் கண்டது என்ன? விவேகானந்தருக்கு பாரத ரிஷி முனிவர்களும் காட்சி தந்தனர். இப்படைப்பு முழுவதும் பரம்பொருள் மயம். பரம்பொருள் ஒன்று. அதன் பெயர்கள் பல. அதை அடையும் வழிகள் பல. மனிதனுள் தெய்வ சக்தி இருக்கிறது. இதுவே பாரதம் கண்ட ஆன்மிக நெறி. யமன் நசிகேதனை தட்டி எழுப்பி, எழுமின் விழிமின் என உசுப்பியதை போல, பாரத மக்களை விழிப்புற செய்வதே தன் கடமை என்று உணர்ந்தார் நரேந்திரர். சிகாகோவில் 1893ல் நடந்த சர்வமத மாநாட்டுக்கு அவர் செல்ல வேண்டும் என ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியும், ராஜஸ்தான் கேத்ரி மன்னர் அஜித் சிங்கும் வற்புறுத்தினர். கேத்ரி மன்னர், அவருக்கு சுவாமி விவேகானந்தர் என்ற பெயரையும் சூட்டினார்.1893ல் மே மாதம் மும்பையில் இருந்து புறப்பட்டு சிகாகோ சென்றார் விவேகானந்தர். அங்கு 1893 செப்., 11ல் துவங்கிய சர்வமத மாநாட்டில், ""சகோதர, சகோதரிகளே'' என துவங்கி அவர் ஆற்றிய உரை, அனைத்து மக்களையும் ஆரவாரிக்க செய்தது.

பாரதத்தை பாம்பாட்டிகளின் நாடு என நினைத்து கொண்டிருந்த மேற்கு நாட்டவர், சிலருக்கு விவேகானந்தர் உரைகள் வியப்பூட்டின. மூன்றரை ஆண்டுகள் 1897 ஜனவரி வரை, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற தேசங்களில் பயணம் செய்து அறவுரைகள் ஆற்றினார் விவேகானந்தர். குட்வின் என்ற ஆங்கில சுருக்கெழுத்தாளர், விவேகானந்தரின் அறஉரைகளை, எழுச்சி உரைகளை எழுதி வைத்து, மனித குலத்திற்கு பெரும் தொண்டாற்றினார். பல மேலை நாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் விவேகானந்தரின் சீடராகி, அவர் பணி தொடர வழிவகுத்தனர். மார்க்கெரட் நோபல் என்ற ஐரிஷ் பெண்மணி, அவரது மாணவியாகி சகோதரி நிவேதிதை என பெயர் சூட்டப்பட்டு, பாரதம் வந்து, தன் கடைசி மூச்சு வரை தொண்டு புரிந்தார்.விவேகானந்தர் 1897 ஜனவரியில் இலங்கை வழியாக தாயகம் திரும்பினார். பானகர சேதுபதி ஆண்ட ராமநாதபுரம் சமஸ்தானத்தில் முதலடி எடுத்து வைக்க வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார்.

1897 ஜன., 26 ராமநாதபுரம் அருகே குந்துகாலில் விவேகானந்தர் கப்பலில் வந்து இறங்கினார். பாஸ்கர சேதுபதி தலைமையில் மக்கள் அவரை வரவேற்றனர். விவேகானந்தர் ஏறி வந்த சாரட்டு வண்டியின் குதிரைகளை அவிழ்த்து விட்டு தானே அதை இழுத்து மரியாதை செலுத்தினார். ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, குடந்தை வழியாக சென்னைக்கு ரயிலில் சென்றார் விவேகானந்தர். பாரதத்தின் எதிர்காலம், அதன் கடந்த காலத்தை விடஒளிமயமாக இருக்கும் என பேசினார். சென்னையில் இன்று விவேகானந்தர் இல்லம் என்று புகழ்பெற்ற, ஐஸ் ஹவுஸில் ஒன்பது நாட்கள் தங்கி வீர உரைகளை அவர் ஆற்றினார். 1897பிப்., கொல்கட்டா புறப்பட்டார். அவரது உரைகள், "இந்திய பிரசங்கங்கள்' என பெயரில் புகழ்பெற்றன. 1897ல் தொண்டும் துறவும் என்ற மைய சிந்தனையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்ற ஆன்மிக தொண்டு நிறுவனம், சுவாமி விவேகானந்தரால் துவங்கப்பட்டது.

பஞ்சம், பிளேக் நேரத்தில் நிவாரண பணிகளையும் ஆற்றினார் விவேகானந்தர். இறுதி மூச்சு வரை தெய்வ பணி, மனித நேய பணி செய்து, 1902 ஜூலை 4ல் உடலை விட்டு சென்றார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது உபதேசங்களை படித்து, தேச விடுதலை பணியில் ஈடுபடுகின்றனர். கல்வி, மருத்துவம், நிவாரண பணி மூலம் இறை வழிபாடு, தொண்டு மூலம் தேசபக்தி, தேசத்தை மறுமலர்ச்சி பெற செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

நற்பணி செய்யும் விவேகானந்த கேந்திரம் :

சுவாமி விவேகானந்தர் தவம் செய்த புனித பாறை கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது. அதை விவேகானந்தர் பாறை என்றே அழைக்கின்றனர். 1963ல் ஏக்நாத் ரானடே என்பவர், நன்கொடை பெற்று, காரைக்குடி எஸ்.கே.ஆச்சாரி தலைமையில் இந்த நினைவுச் சின்னத்திற்கான பணி நடந்தது. 1970ல் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் தலைவர், ஜனாதிபதி நினைவுச் சின்னத்தை தேசத்திற்கு அர்ப்பணித்தனர். சுவாமி விவேகானந்திற்கு உண்மையான நினைவுச் சின்னம் எதுவாக இருக்க முடியும்? அவரின் அறவுரைகளை நெஞ்சில் நிறுத்தி, மக்கள் பணிசெய்வதே அது. எனவே ஏக்நாத் ரானடே விவேகானந்த கேந்திரம் அமைப்பை நிறுவினார். அது கன்னியாகுமரியை தலைநகராகக் கொண்டு நாடு முழுவதும் நற்பணி செய்கிறது. பட்டதாரி இளைஞர்கள் ஆயுள்கால தொண்டர்களாக சேர்த்து செயல்படுகின்றனர்.

அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், அந்தமானில் 57 பள்ளிகளை நடத்துகிறது. மருத்துவமனைகள், கிராம முன்னேற்ற திட்டங்கள், இயற்கை வளஅபிவிருத்தி திட்டம், அஸ்ஸாமில் பண்பாட்டு வளர்ச்சி மையம், டில்லியில் பன்னாட்டு விவேகானந்த பவுண்டேஷன், கேரளா, கொடுங்கல்லூரில் வேத தரிசன மையம், காஷ்மீரில் ஒரு மையம், தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா,அசாம், அருணாச்சல மாநிலங்களில் கிராம முன்னேற்ற பணிகள் நடக்கின்றன. நம் பண்பாட்டை மையமாக கொண்ட வளர்ச்சி என்பதே விவேகானந்த கேந்திரத்தின் முக்கியப் பணி. இதன் 210 கிளைகள் இந்தியாவின் 18 மாநிலங்களில் பணியாற்றுகின்றன. இளையோர் நன்னூல் விவாதக்குழு, யோகா வகுப்பு, பஜனை வகுப்பு நடத்தப்படுகிறது. நன்னூல் விற்பனையும் கேந்திரத்தின் பணிகளில் ஒன்று. கேந்திர பத்திரிகை, யுவபாரதி ஆங்கில இதழ்கள், விவேகவாணி தமிழ் இதழ், சென்னை வெளியீடு, மராத்தி, குஜராத்தி, இந்தி, அஸ்ஸாம், மலையாள பத்திரிகைகள் வெளியாகின்றன. இப்பணிகள் பொதுமக்களின் பொருளாதார ஆதரவுடன் நடக்கின்றன.

தமிழகத்தில் விவேகானந்த கேந்திரம்:

கன்னியாகுமரி விவேகானந்தபுர வளாகத்தில் உள்ள பயிற்சி மையம், ஆயுட்கால, முழுநேர தொண்டர்கள், பல்திறன் படைத்த செயல்வீரர்கள், சமூக தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. அலையும் துறவி, சுவாமி விவேகானந்தர், ஏக்நாத்ஜி வாழ்க்கை வரலாறு, கிராமோதயம் பற்றிய கண்காட்சிகள் உண்டு. விடுதி வசதிகள், உணவுக் கூடம், மருத்துவமனை, வங்கி, அரங்கங்கள் தலைமையகத்தில் உள்ளன. ஆண்டுக்கு எட்டு முறை உடனுறை யோகப்பயிற்சி முகாம்கள் நடக்கிறது. சென்னை, மதுரை, கோவை பகுதிகளில் கிளை மையங்கள் உள்ளன. குறைந்த விலை வீடுகட்டுதல், தண்ணீர் சேமிப்பு, பயோகாஸ், சமையலறை கழிவு எரிவாயு உற்பத்தி, நீலப்பச்சை பாசி மூலம் பால்வளம் பெருக்குதல், ஆளுமை வளர்ச்சி முகாம்கள் இத்துறையின் சிறப்பு பணிகள். இதற்கு உலகத்தர அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் விவேகானந்த கேந்திரத்தின் கிராம முன்னேற்ற திட்டம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படுகிறது. சத்துணவு, பாலர் பள்ளிகள், மருந்தகங்கள், முதியோரை தத்தெடுத்தல், கண்முகாம்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் திருவிளக்குப் பூஜைகள், நூற்றுக் கணக்கில் கல்லூரி, பள்ளிகள் கலந்து கொள்ளும் பண்பாட்டு பயிற்சியும் இத்துறையின் பணிகள் .

விவேகானந்தர் பற்றி இவர்கள் :

ராஜாஜி : விவேகானந்தர் இந்து மதத்தை காப்பாற்றினார். அவர் இல்லாவிட்டால் நாம் நமது மதத்தை இழந்திருப்போம். சுதந்திரத்தை பெற்றிருக்க மாட்டோம். ஆகையால் நாம் சுவாமி விவேகானந்தருக்கு ஒவ்வொரு வகையிலும் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை : ஒருநூறு வருடங்கள் முன்னமே - செல்லஅமெரிக்கா சிகாகோ தன்னிலேநம்பெரும் இந்திய நாட்டவர் - கண்டஞானப் பெருமையைக் காட்டினான்.சத்திய வாழ்க்கையைப் பேசினான் - அருள்சாந்த தவக்கனல் வீசினான்யுத்தக் கொடுமையைச் சிந்திப்போம் - அந்தஉத்தமன் சொன்னதை வந்திப்போம்.

சுவாமி விபுலானந்தர் : "சீர்மருவு காசினியில் ஞானவொளி பரப்பத்தேயத்துட் பாரதமே சிறந்ததென விசைப்பஈரிருபா னாண்டுறைந்தா யெமதுதவக் குறையோஇளவயதி லெமைவிடுத்தா யளவிலருட் கடலே!.'

சுவாமி சித்பவானந்தர் : மானுடப் பிறவியின் முக்கிய நோக்கம் பரமனை அடைதல் என்னும் உயர்ந்த செய்தியை உலகிற்கு விவேகானந்தர் வழங்கினார். சண்முகனிடத்திருக்கின்ற ஷட் ஆதாரங்கள், ஷட் மகிமைகள், ஷட்தர்சனங்கள் இக்காலத்திற்கு ஏற்றவாறு விவேகானந்தர் வாயிலாக வெளியாகியிருக்கின்றன. அதனால் விவேகானந்தரை வேலவனது வரப்பிரசாதம் என மொழிவது முற்றிலும் பொருந்தும்.

பாரதியார் : 1893ம் ஆண்டில் விவேகானந்தர் யாரோ ஒரு சாதாரண சன்னியாசியாக வந்து தென்மாநிலங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய மகிமையை கண்டுபிடித்து, நாட்டிற்கெல்லாம் பெருமை தேடித் தந்தவர் அழகிய சிங்கப் பெருமாளே. இவருடைய முயற்சிகளாலே விவேகானந்தர் அமெரிக்காவுக்கு போய், ஆரிய தர்மத்தை அந்நாட்டில் பிரகாசப்படுத்தும்படி ஏற்பட்டது.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை : சீர்பெருகு வங்கநிலம் சிறக்க வந்தோன்,ஸ்ரீராம கிருஷ்ணபதம் சிரமேற் கொண்டோன்;பார்புகழும் வேதாந்தப் பயிர்வ ளர்த்தோன்,  பாரதத்தின் பெருமையெங்கும் பரவச் செய்தோன்;வேர் பறிய எதிர்வாதம் விரித்துக் கூறிதார்புனைந்த தவயோகி விவேகா னந்தன்தாள்பணிந்து வாழ்வோமித் தரணி மீதே!.

குன்றக்குடி அடிகள் : வீறு புகழார் விவேகானந்தர்இமயம் போன்ற எழிலார் தோற்றமும்ஞானப் பேரொளி தவழ்திரு முகமும்தண்ணரு ளார்ந்த நெஞ்சமும், மன்னுயிர்மனத்திருள் போக்கும் ஞானச் செஞ்சொலும்பிணத்தையும் பேச வைத்தன; உயிர்களின்சோர்வினை யகற்றிச் சுறுசுறுப்பினைத்தந்தன; இதயத் தாமரை விரித்தன;சுதந்திரத்தின் சுவையை யூட்டின;ஞான மும்பர மோனமும் நல்கின;

முதல்வர் கருணாநிதி : ஒரு காலத்தில் சொல்லப்பட்டு, இடையிலே மறைந்து விட்ட "சத்தியமேவ ஜயதே' வாய்மையே வெல்லும் என்கிற இந்த வாசகத்தை முதல் முதல் மறுமுறை ஞாபகத்திற்கு கொண்டு வந்தவர், பாஸ்கர சேதுபதி மன்னர் என்றால் அது மிகையாகாது. அதற்கு காரணமாக இருந்தவர் விவேகானந்தர்.

கி.வா.ஜகன்னாதன் : விவேகானந்தரின் உபதேசங்களில் வீணையின் மெல்லிசை இல்லை. வீரமுரசே ஒலிக்கிறது. வில்லின் நாண் ஒலியைக் கேட்கிறோம். தூங்குகிறவர்களை எழுப்ப வந்தவர் அவர். பழைய உபநிடதங்களுக்குப் புதிய மெருகிட்டவர் அவர். பழைய முனிவர்களின் வழியைப் புதிய முறையில் எடுத்துக் காட்டியவர் அவர். அவரால் உலகமே இந்து மதத்தின் பெருமையை உணர்ந்தது.

ப.ஜீவானந்தம் : பாருலகை குலுக்கிய பாரதத் துறவி. துறவிகளிலும் தனக்கு நிகர் தானேயான அரசியல் துறவி. பாரத மணித்திருநாடே தான் என உருவகித்து வாழ்ந்த பரிபூரண தேசபக்தத் துறவி. நவீன இந்தியாவின் ஞானாசிரியர். பாரதீய ஆன்மிக ஞானமும் மேற்கத்திய விஞ்ஞானமும் சேம்மானம் பிசகாது கலந்து உறவாடி ஒளிவிட்ட கூட்டு மேதை.

சுப்பிரமணிய சிவம் : விவேகானந்தரை நினைக்கும் நேரமெல்லாம் எனக்கு புதிதுபுதிதாக ஊக்கமும், உற்சாகமும் உண்டாகிறது. எங்கிருந்தோ எனக்கு தெரியாமல் ஒரு சக்தியை அடைகிறேன். அறிவுப் பாலூட்டும் அன்னையாய், கொள்கைகளுக்கெல்லாம் ஆதாரமாய் என் புறத்தே நின்று கொண்டு, ஜீவிதத்துக்கொரு தூண்டுகோலாய் உள்ளது. அவருடைய சக்தி இருந்து வருகிறாரென்று திடமானதொரு எண்ணம் என் மனதில் பதிந்து கிடக்கிறது.

கவியோகி சுத்தானந்த பாரதியார் : பணியாலும் நினைப்பாலுந் தவத்தாலுங் குருவினிடம் பயின்ற ஞானம்அணியாக நிலவுலகிற் கருளாளுந் துணைவர்தமை யருகு சேர்த்தேதுணிவாகப் பயிற்றுவித்துத் துறவாகச் சுற்றுவழிதுன்னிச் சென்னைதனியாக, அறிவோர்கள் அனுப்பிடவே சம்வமதச்சங்கஞ் சென்றான்.

சவுந்தர கைலாசம் : வயிறதே உணவில் லாமல்வாடிடும் போது ஞானப்பயிரதோ வேர்பி டிக்கும்?பசியிலே வெற்று வாகும்உயிரது தழைக்க எண்ணிஉழைத்திடு முதலில்; தானேதுயரறும் எனவு ரைத்ததுறவிதாள் போற்றி! போற்றி! 

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்

1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.

1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.

1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.

1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.

1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.

1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.

1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.

1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.

1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.

1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.

1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.

1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.

1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.

1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.

1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோ ர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.

1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்.

1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.

1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.

1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.

1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.

(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)

1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)

1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.

1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.

1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".

1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.

1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.

1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.

1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.

1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.

1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.

1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.

1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.

1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.

1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.

1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.

1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.

1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.

1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.

1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.

1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.

1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.

1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.

1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.

1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.

1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.

1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. 1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.

"பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.

1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.

1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.

1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.

1970, சனவரி - இரமணி மறைவு.

1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.

1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.

1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.

(நன்றி: புரட்சிப் பாவலரின் "சிரிக்கும் சிந்தனைகள்" நூலிலிருந்து) 

Monday, May 31, 2021

முயற்சி திருவினையாக்கும்

முன்னுரை

தளர்ச்சி இல்லா முயற்சி ஒரு பயிற்சி. முயன்றால் முடியாதது இவ்வுலகில் ஒன்றுமில்லை. வாழ்வில் சுவை கூட்டுவது இந்த முயற்சியே. பூமி சுழல்வது இந்த முயற்சியால் தான்.

தோல்வி எனும் தடையைத் தாண்டி வெற்றிக் கனியை பறிக்க முயற்சியே முதல் ஆயுதம் ஆகும். முயற்சி உடையவன் தன்னுடைய குறிக்கோளை நோக்கிய பாதையில் எவ்வாறான இடர்கள் வந்தாலும் அதிலிருந்து விலக மாட்டான்.

முயற்சிகள் தவறலாம் ஆனால் ஒருபோதும் முயற்சி செய்யத் தவறக் கூடாது. எனவே தான் எமது முன்னோர் முயற்சியின் அவசியம் பற்றி நாம் அறிவதற்காக

“முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என பல பொன்மொழிகளை தந்து சென்றுள்ளனர்.

மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்து முன்னேறி நாகரீகத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருப்பது வரை முயற்சியின் விளைவுகளே.

முயற்சியின்றி தேங்கிக் கிடக்கும் நீர் சாக்கடையாக மாறுகிறது. முயற்சி செய்து பல தடைகளை உடைத்து முன்னேறி பாயும் நதியே இறுதியில் கடலை சேர்ந்து தனக்கான நிரந்தர இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக் கொள்கின்றது.

முயற்சி எவ்வாறு திருவினையாக்கும் என்பது தொடர்பாக இக்கட்டுரையில் காண்போம்.

முயற்சியின் இன்றியமையாமை

முயற்சியினுடைய இன்றியமையாமை தொடர்பாக நம் பொய்யாமொழிப் புலவர் தனது உலகப்பொதுமறையில் “ஆள்வினையுடைமை” எனும் அதிகாரத்தில் பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளார்.

விதியின் காரணமாக ஒருவன் தோல்வி கண்டாலும் விடா முயற்சியின் பலனாக விதியையும் மதியால் வெல்ல முடியும்.

இந்த கருத்துக்கு பலம் சேர்க்க உலகையே இருளில் இருந்து விடுவித்து ஒளி மிகுந்ததாய் மாற்றியமைத்த தாமஸ் அல்வா எடிசனுடைய வரலாற்றினை கூறலாம்.

ஏனெனில் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கை கண்டுபிடிப்பதற்காக ஆயிரம் தடவைக்கு மேலாக முயன்றும் தோல்வியை மட்டுமே கண்டிருந்தார்.

ஆனால் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்தும் முயற்சி செய்த காரணத்தினாலேயே இறுதியில் மின் விளக்கினை கண்டுபிடித்து உலகிற்கு ஒளியூட்டினார்.

அவர் செய்த முயற்சியினாலேயே இன்று வரை அனைவரது மனதிலும் இடம் பிடித்த விஞ்ஞானியாக திகழ்கின்றார் இதனாலேயே முயற்சி மனிதனின் உயிர் மூச்சு என கூறப்படுகின்றது.

முயற்சி தந்த வினைகள்

தங்களது தோல்விக்கு விதியை காரணம் காட்டி தங்கள் குறிக்கோளில் இருந்து விலகிச் செல்லாது முயற்சி செய்து மதியால் விதியை வென்றவர்களுக்கு உதாரணமாக பின்வருவோரினை குறிப்பிடலாம்.

போரில் ஆறு தடவை தோற்ற ராபர்ட் புரூஸ் எனும் மன்னன் குகையில் ஒளிந்திருக்கையில் சிலந்தியின் விடா முயற்சியினை கண்டு அதைப் போலவே தானும் முயற்சி செய்வதாக உறுதி பூண்டு ஏழாவது தடவையாக படை எடுத்த போது தனது நாட்டினை எதிரிகளிடமிருந்து மீட்டுக் கொண்டான்.

இதைப்போலவே கஜினி முகமது 16 முறை தொடர்ச்சியாக முயன்றதனாலேயே சோமநாதபுர ஆலயத்தை தன்வசப்படுத்த கூடியதாக இருந்தது.

தனது வறுமையை காரணம் காட்டாது தன் முயற்சியினால் தெரு விளக்கின் கீழ் உட்கார்ந்து படித்து உயர் கல்வியில் தேறினார் முத்துசாமி அய்யர்.

தாழ்ந்த குலத்தில் பிறந்து தனது விடாமுயற்சியால் சட்ட மேதையான டாக்டர் அண்ணல் அம்பேத்கர்.

செருப்பு தைப்பவரின் மகனாகப் பிறந்து தனது விடாமுயற்சியால் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியானார் ஆபிரகாம் லிங்கன்.

பல ஆண்டுகள் ஓய்வின்றி ஓடி ஓடி உழைத்து ரேடியத்தை கண்டுபிடித்து சாதித்தார் கியூரி அம்மையார்.

முயற்சியின் சிறப்பு

உழவரின் முயற்சியால் உணவும், நெசவாளரின் முயற்சியால் சிலையும், புலவரின் முயற்சியால் காவியமும் உருவாகுகின்றன.

எறும்புகள் தம் முயற்சியினாலேயே மழைக்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ உணவை சேமிக்கின்றன.

தேனீக்கள் தேன் கூடு கட்டுவது சிலந்தி வலை பின்னுவது குருவிகள் கூடு கட்டுவதும் முயற்சியின் சிறப்புக்களை மனிதராகிய நமக்கு கூறும் சிறந்த முன்னுதாரணங்கள் ஆகும்.

முயற்சி தரும் படிப்பினைகள்

முயற்சி தரும் படிப்பினைகள் பல உள்ளன. தொடங்குவது மட்டுமல்ல வாழ்க்கை தொடர்வதில் தான் இருக்கிறது வாழ்க்கை.

அச்சத்தை களைந்தால் தான் எமது குறிக்கோளின் உச்சத்தை தொடலாம். விசிறியை அசைக்காமல் காற்று வராது வியர்வையை சிந்தாமல் என்றும் உயர்வு வராது. முயற்சி செய்தால் மாத்திரமே உலகம் நம்மை உயர்ந்த இடத்தில் வைத்து நோக்கும்.

இதனால்தான் தாமஸ் அல்வா எடிசன் “முயற்சி என்னை கைவிட்டதுண்டு ஆனால் முயற்சியை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை” என்று கூறியுள்ளார்.

இவரைப்போலவே சாதனையாளர்களின் வாழ்க்கை நமக்கு கூறுகின்ற படிப்பினை முயற்சி செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

முடிவுரை

மனிதன் தனது பெரும் முயற்சியினால் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பல விடயங்களை சாதித்து வருகின்றான்.

நாம் ஒவ்வொருவரும் நம் குறிக்கோள்களை அடைந்து கொள்ள விடாமுயற்சி செய்து நமது இலக்கினை அடைந்து வெற்றி பெறுவோம்.

அறம் செய்ய விரும்பு

முன்னுரை

மனித வாழ்வில் அறம் செய்வது பெரும் பாக்கியமாகும். அறம் செய்ய விரும்புதல் எனும் கருத்தியல் அடுத்தவர்க்கு கொடுத்தல் மற்றும் நல்ல விடயங்களில் ஈடுபடுதல் என்பது பொருள் ஆகும்.

நாம் இப்பிறவியில் ஆற்றும் அறச்செயல்கள் எமக்கு மறுமையில் துணைநிற்கும் என்பது இறை நம்பிக்கை. இதனை திருவள்ளுவர் அறத்துப்பாலில் “ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்” என்று பாடுகிறார்.

அறம் செய்ய விரும்புபவர்கள் இவ்வுலகில் கொடுப்பதனால் கிடைக்கும் இன்பத்தை அடைவார்கள். மற்றையவர்கள் அச்செல்வத்தை இழந்து துன்பம் அடைவார்கள் என்பது பொருள்.

இக்கட்டுரையில் அறம் எனப்படுவது, தர்மம் தலைகாக்கும், அதர்மம் தலைதூக்கும் தற்காலம் அழிவே அதன் விளைவு ஆகிய விடயங்கள் நோக்கப்படுகின்றன.

அறம் எனப்படுவது

அறம் எனப்படுவது யாதெனில் “அறு” என்ற வினா அடியில் இருந்து தோன்றியதே அறம் ஆகும். மனிதனொருவன் தனக்கென வரையறுத்து கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுப்பே அறம் எனப்படுகிறது.

பிறவியில் மனிதனை தொற்றி கொண்ட தீவினைகளை அறுத்தெறிவதே அறம் எனவும் கூறலாம்.

அறம் என்பதற்கு திருவள்ளுவர் வரைவிலக்கண படுத்துகையில் “அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்கிறார்.

அதாவது அடுத்தவர்களை துன்பமடைய செய்யும் துஷ்ட எண்ணம், பேராசை, அவச்சொல் பேசுதல் இவைபோன்ற தீய குணங்களை ஒழிப்பது தான் அறம் என்கிறார்.

அறத்தினை எம்மால் செய்யமுடியாது போனாலும் அறம் செய்ய விரும்ப வேண்டும் என்பதனையே ஒளவையார் “அறம் செய்ய விரும்பு” என்று ஆத்தி சூடியில் தெரிவித்துள்ளார்.

மனதில் எழும் தீய எண்ணங்களை இல்லாது ஒழிக்க ஒருவன் முயல்வானே ஆனால் அதுவே அற வாழ்வு எனலாம்.

தர்மம் தலைகாக்கும்

நாம் செய்கின்ற புண்ணிய செயல்களுக்கு ஏற்ப எமது வாழ்வில் உயர்வு வரும் என்பது உண்மை இதனால் தான் “இட்டு கெட்டவர் யாரும் இல்லை” என்று ஒரு பழமொழி தமிழில் வழங்கப்படுகிறது.

“கொடுத்தார்க்கு குறையில்லை” என்பது போல் நன்னீர் ஊற்றுள்ள ஒரு கிணறு எவ்வாறு நீரை அள்ள அள்ள குளிர்ச்சியும் தெளிவும் பெறுகிறதோ அது போல நாம் அறம் செய்ய தலைப்படுவதனாலே நம் வாழ்வும் அர்த்தப்படும்.

மகாபாரதத்திலே கர்ணன் கொடைக்கு இலக்கணமானவன் இரப்பவர்ற்கு தன்னுயிரையும் தானமாய் அழிக்கம் தாராள மனம் கொண்டவனாகையால் தான் என்றைக்கும் மங்காத புகழ் கொண்டவனாய் விளங்குகிறான்.

“கெட்டாலும் வள்ளல் கரம் எப்போதும் வீழாதே” எனும் அளவிற்கு அறம் செய்தல் இம்மைக்கும் மறுமைக்கும் புகழ் சேர்ப்பதாய் அமையும்.

அதர்மம் தலைதூக்கும் காலம்

இன்று மனிதர்கள் அறம் செய்ய விரும்புவதில்லை நல்வழியில் நடப்பவர்கள் சமூகத்தில் குறைந்துள்ளதோடு அதர்மமும் தீமைகளும் அநியாயமும் இன்று அதிகரித்துள்ளது.

நேர்மையாக வாழ்பவர்களை ஏளனமாகவும் வாழ தெரியாதவர்கள் எனும் பார்வையில் சமூகம் பார்க்கும் விசித்திரம் இன்றைக்கு இருக்கிறது.

தவறுகளை செய்தும் தவறான வழிகளில் தான் இன்றைக்கு உழைத்து பலரும் சதிபடைத்தவர்களாய் வாழ்கின்றனர். இது பலபேரின் கண்ணீருக்கும் இறப்புக்கும் காரணமாக அமைகிறது.

இந்த நிலையை தட்டி கேட்பவர்களும் போராடுபவர்களும் மேலும் மேலும் துன்பமடைய செய்யப்பட்டு தோல்வியடைய செய்யபடுகின்றனர்.

ஏனென்றால் இன்று அறம் செய்பவர்களை விட அநியாயம் செய்பவர்கள் அதிகரித்து விட்டனர் என்பது வேதனைக்குரிய உண்மையாகும்.

முடிவுரை

கொடுக்கின்றதும் பிறரை வாழவைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் பலமாக இருந்தால் அது அவர்கள் இறந்த பின்னும் நிலைநின்று நிறைவேறும்.

எனவே இன்னா செய்வாரை பொறுத்து நாமாவது அறம் செய்ய தலைப்படுவோம். நடப்பவை நடக்கட்டும் என்றேனும் இந்த உண்மையை உலகம் புரிந்துகொள்ளும்.

தவறான செயல்கள் அழிவை உண்டாக்குவது நிச்சயம். உண்மை பேசுதல் நெறியாக வாழ்தல் அடுத்தவருக்கும் கொடுத்தல் ஆகிய எல்லாம் அடங்கிய ஓரே வார்த்தையான அறத்தை செய்வோம் இன்புற்று வாழ்வோம்.


அம்பேத்கர்...

முன்னுரை

இந்தியா எனும் நாட்டில் காலம் காலமாக இருந்து வந்த மூடநம்பிக்கைகள், தீண்டாமை மற்றும் அடக்குமுறைகள் இவற்றையெல்லாம் உடைத்தெறிந்த அம்பேத்கரின் வரலாறு ஆகச்சிறந்ததாகும்.

பல அவமானங்களை தாங்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக போராடிய மிகச்சிறந்த மாமேதை இவராவார். இந்தியாவில் அதிகம் அவமானப்படுத்தப்பட்ட சிலை அம்பேத்கரின் சிலையே ஆகும்

சாதிய ஒடுக்கு முறையினால் பாடசாலையில் இருந்து விரட்டப்பட்ட 5 வயது சிறுவன் பின்னாளில் 50 வயதில் உலகின் அதிக பக்கங்களை உடைய இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அறிஞர் அம்பேத்கர் எனும் அழியாத புகழ் பெற்றார்.

இவர் வாழ்வில் சந்தித்த வலிகள் புறக்கணிப்புக்கள் கொஞ்சமல்ல. இவரது வாழ்க்கை வரலாறுகள், சாதனைகள் இவர் ஆற்றிய பணிகள் என்பனவற்றை இக்கட்டுரை காண்கிறது.

பிறப்பும் வாழ்க்கையும்

இந்தியாவின் மத்திய மாநிலத்தில் உள்ள “மகோ” கிராமத்தில் பிறந்த இவரது இயற்பெயர் “பீம் ராவ் அம்பேத்கர்” ஆகும்.

இவரது தந்தையின் பெயர் “ராம் ஜீ மகோ” ராணுவ முகாமில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.

அம்பேத்கர் பிறந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தனது வேலையை விட்டு மராட்டியத்தின் ரத்னகிரி மாவட்டத்தின் தபோலி கிராமத்திற்கு இடம்பெயர்ந்தார். அங்கு சாதிய அடக்குமுறைகள் மிகவும் உயர்வாக இருந்தது.

இதனால் அங்கு தனது பிள்ளைகள் கல்வி கற்பது சிரமம் என கருதி மும்பைக்கு இடம் பெயர்ந்தனர்.

பள்ளியில் அமர சாக்கு துணி ஒன்றினை கொண்டு செல்ல வேண்டும் எனவும் தரையில் தாழ்ந்த சாதியினர் அமர்வதால் தீட்டு ஏற்படும் எனும் முட்டாள்தனமான அடக்குமுறைகள் அவருக்கு நிகழ்ந்தன.

மற்றைய மாணவர்கள் போல உணவு, நீர் என்பனவற்றை கூட வழங்க மறுத்து அவரது மனதை நோகடித்தார்கள்.

இவற்றையெல்லாம் தாங்கி கொண்டு வெறி கொண்டு கல்வி கற்றார் கல்வியினால் தான் இந்த அடக்குமுறைகளை ஒழிக்கலாம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

பிறப்பினை அடிப்படையாக கொண்டே இந்தியாவில் உரிமைகள் தீர்மானிக்கப்படுகிறது என்பதனை கண்டு கொதித்தார். அந்த கோபத்தை தனது கல்வி வளர்ச்சியில் வெளிப்படுத்தினார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்க கூடாது என்ற நிலை இந்தியாவில் இருந்தது. இந்நிலையில் அம்பேத்கரின் கல்வி வளர்ச்சி சாதனையாக பார்க்கப்படுகிறது.

தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புக்களையும் பயன்படுத்தி வெளிநாடுகளிற்கு சென்று உயர்கல்வி கற்றுதேர்ந்து கல்வியில் பெரும் சாதனைகளை இவர் படைத்தார்.

அமெரிக்கா சென்று கற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் அடக்கு முறைகளுக்கெதிராய் கல்வி ஆயுதம் கொண்டு போராடிய மிகச்சிறந்த தலைவர் இவராவார்.

கல்வி சாதனைகள்

இந்த உலக வரலாற்றில் அதி உயர் கல்வி சாதனைகளை இவர் செய்திருந்தார். பிறப்பினால் ஒருவனை அடக்கி, கல்வியை கூட பறித்த ஒரு சமூகத்தில் கல்வியில் யாரும் அடைந்து விடமுடியாத உச்சத்தை இவர் தொட்டார்.

இவர் 50 ற்கும் மேற்பட்ட பட்டங்களை பெற்றிருந்தார். சட்டத்துறையில் “பாரிஸ்டர்” பட்டத்தை இங்கிலாந்தில் பெற்றிருந்தார். பொருளியல், அரசியல், சட்டம், மெய்யியல், தத்துவம் போன்ற துறைகளில் மாமேதையாக இவர் திகழ்ந்தார்.

இரண்டு கைகளாலும் எழுதும் திறன் கொண்ட ஒரு கல்விமான் என்று உலகமே வியந்தது. இவர் வாழ்ந்த காலத்தில் அதிக நூல்களை கற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இவர் தனது வாழ்விடத்தை சிறந்த படிப்பகங்களின் அருகே இருக்க வேண்டும் என விரும்புவாராம்.

இவ்வாறு கல்வி மூலமே அனைத்து விடயங்களையும் சீர் செய்ய முடியும் என தனது வாழ்வில் வாழ்ந்து காட்டி இன்று பலருக்கு முன்னுதாரணமாகவும் உந்து சக்தியாகவும் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.

அரசியல் அமைப்பின் தந்தை ஆன கதை

சமூகத்தின் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்து வந்து இந்திய குடியரசின் அரசியலமைப்பை எழுதும் அளவிற்கு வளர்ந்த கதை ஆச்சரியங்கள் நிறைந்தது.

அடிப்படை அரசியல் மாற்றம் உருவாக நாட்டின் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதனை அறிந்து இந்தியாவின் சட்டத்துறை அமைச்சரானார்.

அடிநிலை மக்கள் எதிர்கொள்ளும் அடக்கு முறைகள், கல்வி, சுதந்திரம், அனைத்து மக்களுக்குமான சம உரிமைகள், தொழிலாளர் நலன்கள், பெண்கள் உரிமைகள் தொடர்பாக சமூகத்தில் இருந்த தவறான நடை முறைகளை உடைத்து

உலகின் மிகச்சிறந்த பெரிய 300 பக்கங்களை உடைய அரசியலமைப்பு சட்டத்தை தனி மனிதனாக பாடுபட்டு செதுக்கிய சிற்பி இவராவார்.

ஒரு சிறுவனை அன்று கல்வி கற்கவே அனுமதிக்காது அவமானப்படுத்திய இந்த சமூகத்தில் அன்றைக்கு ஒரு பாராளுமன்றமே இவரின் வரவிற்காய் காத்திருந்தது மிக உயர் அங்கீகாரம் எனலாம்.

இனி வரும் சமுதாயம் சமத்துவமாய் உருவாக விதை போட்டவர் இவரே.

இவரது பணிகள்

இவர் தனது வாழ்நாள் முழுவதும் அடக்கு முறைகளுக்கு எதிராக சட்ட ரீதியாக போராடி பல வெற்றிகளை கண்டார்.

பிரிவினைகளையும் வேற்றுமைகளையும் தூண்டிய பல அரசியல் தலைவர்களை இவர் கடுமையாக எதிர்த்தார். கல்வி ஆயுதத்ததை அனைவரும் கையிலெடுக்க நாடு தானாக முன்னேறும் எனவும் இவர் வலியுறுத்தினார்.

“The Problem Of Rubee” என்ற நூலை எழுதி பிற்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிறுவனம் ஆன “Reseve Bank Of India” உருவாக காரணமாய் இருந்தார்.

பெண்கள் உரிமைகள் தொடர்பான சட்டம். சுரங்க தொழிலில் பெண்களை ஈடுபடுத்த கூடாது எனும் சட்டம்.

பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை சம்பளத்தோடு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் . மருத்துவ காப்ப்பீட்டு திட்டம் என மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை இவர் உருவாக்கினார்.

முடிவுரை

தான் வாழ்ந்த காலத்தில் பிறப்புரிமையாலும் வசதி வாய்ப்புக்களாலும்

புறக்கணிக்கப்படும் கல்வி தங்கு தடையின்றி எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் செய்வேன் என வேட்கை கொண்டு இறப்பதற்குள் அதனை செயற்படுத்திய இவரது பணிகள் இன்றைக்கும் மெய் சிலிர்க்க வைக்கும்.

சுதந்திர இந்தியாவில் பல தலைவர்கள் இன்றும் இவரையே முன்னுதாரணமாக கொண்டு பணியாற்றும் அளவிற்கு இவரது வாழ்க்கை பலரையும் தாக்கம் பெற செய்துள்ளது.

இன்றைக்கு பல வசதிகள் கிடைத்தும் கல்வியை உதாசீனம் செய்யும் பலருக்கு மத்தியில் அன்றைய காலத்தில் பல இடர்கள் மத்தியில் பல அவமானங்களையும் பிரச்சனைகளையும் தாங்கி கொண்டு பெரும் கல்விமானாக உயர்ந்து

இந்தியாவின் வளமான எதிர்காலத்தையும் ஆக பெரும் அரசியல் மாற்றத்தையும் உண்டாக்கிய இவரின் வாழ்க்கை பெரும் சாதனை என்றால் மிகையல்ல.

Saturday, May 22, 2021

தமிழலக்கியத்தில் நீர் மேலாண்மை

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

“இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்

புpழையாவிளையுள் பெருவளம் சுரப்ப

மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்” (வரி.26-28)

இப்பாடலடியில், “மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

“நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவன் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே” (புறம்-18,28-30)

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார். இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

 “அறையும் பொறையும் மணந்த தலைய

 எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்

 தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ” (புறம்.118)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

“வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்

 தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்

 கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்

 நல்குரவு சேரப்பட்டார்” (83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை, "யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்' என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது. கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

“பெருங்குளக் காவலன் போல

 அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே” (25)

  என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள். சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற “கலிங்கு” என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான “அறவணர் தொழுத காதை” என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

“பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி

இரும்பெரு நீத்தம் புகுவது போல

அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்

 உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்” (1384-87)

என்கிறார். “சுருங்கை” என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே “குமிழித்தூம்பு” என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் “குமிழித்தூம்பு” அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை “கற்சிறை” எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், “பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது” (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது.
























புறநானூற்றில் நீர்நிலைச் சிறப்புகள்

முன்னுரை

புறம் என்ற சொல்லாட்சிக்குத் தமிழ் இலக்கிய உலகில் சிறப்புப் பொருளுண்டு. புறம் – இடம், ஏழாம் வேற்றுமை உருபு, சுற்று, பக்கம், பின்புறம், மதில், முதுகு, வீரம் வெளிவளம் எனுமாறு பொருள் விளக்கங்களைத் தமிழ் மொழி அகராதி கூறுகின்றது. குறிப்பாக வீரம் என்ற பொருளிள் சங்கப் பாடல்களில் நானூறு பாடல்கள் புறநானூறு என அடையாளமிட்டு வழங்கப்படுகின்றன. 1894 இல் உ.வே.சா முயற்சியால் வெளிக்கொணரப்பட்ட தமிழர் வாழ்வியல் விளக்கம் புறநானூறு ஆகும். போருக்கு நிகராக வள்ளண்மை, நட்பு, தமிழர் தம் உயரிய கொள்ளை எனப் பலவும் சிறப்பாகப் பதியன் பெற்றுள்ளன. அவ்வகையில் புறநானூற்றில் காணலாகும் நீர் நிலைகள் குறித்த சிறப்புச் செய்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

வாழ்வியலில் நீர் நிலைகள்

பொதுவாக, உயிரிகளின் உணவுத் தேவைக்கும் உடல் பராமரிப்பிற்கும் அடிப்படையாக நீர் நிலைகள் அமைகின்றன. அகப்பாடல்களில் களவுப் புணர்ச்சி நிகழ்தலுக்குரிய களமாகவும் இன்புறுவதற்குரிய நிலையங்களாகவும் நீர் நிலைகள் இலக்கியங்களில் காட்டப்படுகின்றன. வளமை உணர்த்தும் வாக்கிலும் அவைகள் சுட்டப்படுகின்றன. புற உலகம் அரசியல் உந்துதல்களால் இயக்கமாகும் தம்மையுடையதாகும். எனவே, புற உலகில் நீர் நிலைகளுக்கான அடையாளம் வேறு வடிவினத்ததாய் கையாளப்பட்டு உள்ளது.

புறநானூற்றில் நீர்  நிலைகள்

புறத்தில் நீர் நிலைகளின் இன்றியமையாமை, போர்க்காலங்களில் நீர் நிலைகட்க உண்டாகும் நிலைகள், நீரக மேலாண்மை, நீர்நிலைப் பாதுகாப்பு, நீரின் ஆற்றல் எனப் பல்வேறு கோணங்களில் நீர் நிலைகள் ஆராய்ந்து அணுகப்பெற்றுள்ளது.

நீர்நிலைகளின் இன்றியமையாமை

ஒரு பொருள் குறித்த மீஎண்ணங்கள் அப்பொருள் இல்லாதபோதே இருக்கும். இவ்வகையிலே, வறட்சியான இடம் குறித்த கருத்துக்கள் வருமாறெல்லாம் நீரின் இன்றியமையாமை அழுத்தமுறப் புறநானூற்றில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. அதனை,

‘‘ஊரி இல்ல, உயவு அரிய

நீர் இல்ல, நீள் இடைய’’ - புறம்., 3, 17 – 18

எனும் வரிகளால் அறியலாம். பாலைநில வழியானது எவ்வித ஊர்களும் இடையில் இல்லாது வழியில் தாகம் தீர்க்க நீர்நிலைகளும் அற்ற தன்மையில் இருக்கும் என இப்பாடல் குறிப்பிடுகின்றது. குடியிருப்புகள் அவ்வழியில் இல்லாமைக்கு நீரின்மை இன்றியமையாமைக் காரணமாகக் கருதவும் இடமுண்டு. உயிர் வாழ அடிப்படையான நீர் இல்லாத இடத்தில் வாழ்வவு நடைபெற வாய்ப்பு இராது. நீர் வாழிடக் காரணியாகப் புலவர்கள் உணர்ந்ததால் இவ்வாறான வறண்ட நிலம் பற்றிய கூற்று நீர் நிலைகள் குறித்த புலப்பாடுகள் மேலோங்குகின்றன.

நீர்நிலை - எல்லைகள்

ஆட்சிப்பரப்பில் நில எல்லை, நீர் எல்லை என இருவேறு எல்லைகள் இருந்தன. பரந்துபட்ட நீர் எல்லைகள் மிக அதிகமான அளவில் பராமரிப்பிற்குரியவைகளாகச் சங்க காலத்தில் திகழ்ந்துள்ளன. கடற்போர், கடம்பர்கள் எனும் இனத்தவர் கடல் கொள்ளையில் ஈடுபட்டமை குறித்த பல்வேறு செய்திகளை நம் இலக்கியங்களில் இருந்து அறியலாம். கடல்போர்ச் சிறப்பினால் ‘கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்’ என வேந்தன் ஒருவன் புகழப்பட்டதன் அடிப்படையிலும் கடல் எல்லைகளின் முக்கியத்துவத்திலும் அறியலாம். இதனைப் புறநானூற்றின்,

‘‘ஒவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை

நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற’’ புறம்., 3,  1 – 2

எனும் வரிகளால் அறியலாம். ‘நிலவுக்கடல்’ என்னும் சொல் நிலைத்த கடல் பரப்பை குறிக்கிறது. நில எல்லைகளைப் பாழ்படுத்தலாம். கடல், கடல் எல்லை என்பன வலியவைகள் ஆகும். எனவே, இவ்விடத்தில் ‘நிலவூக்கடல்’ என்ற சொல்லாட்சி கடலின் சிறப்புத் தன்மையோடு குறிப்பிடப்படுகின்றது. பண்டைத் தமிழகமும் ‘வடவேங்கம் தென்குமரி ஆயிடைநல் தமிழ்கூறு நல்லுலகத்து’ எனுமாறு தொல்காப்பியத்தில் கடல் எல்லையால் சுட்டப்பெற்றிருக்கும்.

இவ்வுலகமே கடலினை எல்லைப்பரப்பாகக் கொண்டது என்று புறநானூறு சுட்டுகின்றது. அதனை, 

‘‘…………………இமிழ்திரைப்

பௌவம் உடுத்த இப்பயம்கெழு மாநிலம்’’ புறம்.,58, 20 – 21

எனும் அடிகளில் வழித் தெளிய உணரலாம். புறநானூற்றின் பல இடங்களில் இக்கருத்தினை ஒத்த பாடல் அடிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கடல் தெய்வத்திற்கு விழா எடுத்தமை குறித்து (புறம் - 9) பேசுகின்றது.

நீரின் ஆற்றல்

பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கூறப்படும் நீரானது நிலம் என்னும் கூறுடன் இணைவுற்ற தன்மையில் உள்ளது. நீரின் தன்மை தண்மை ஆகும். எனினும் அதன் வலிமை மிகவும் பெரிய ஒன்றாகும். வெள்ளப்பெருக்குக் காலங்களில் அதன் வலிமையைக் கண்கூடாகப் பார்த்திருப்போம். அவ்வடிப்படையில், நீர்ப்பெருக்கு மிகுமானால் அதனை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது என்பதை,

‘‘நீரிமிகின் சிறையும் இல்லை’’  புறம்.,51, 1

என்ற ஐயூர் முடவனாரின் அடியின் வழி உணரலாம். 

நீர் நிலைகள் பழக்கமில்லாதவர்க்கு ஆபத்து நிறைந்ததாகும். அவற்றைக் கடப்பதற்குத் திறனும் துணிவும் இன்றியமையாமை ஆகும். அத்தகு ஆபத்துத் தன்மையுடைய நீர்த்துறை, வேந்தனது வீரத்திற்கு இணையாக நக்கண்ணையாரால் பேசப்பட்டதை,

‘‘ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு

உமணர் வெரூஉம் துறையன்னன்னே’’ புறம்.,84, 4 – 5

என்ற அடிகளால் அறியலாம். உப்பு வாணிகம் செய்யும் உமணர்க்கு அச்சம் தரும் நீர்த்துறையானது இவ்விடத்தில் தலைவனுக்கு உவமையாக வந்துள்ளது.

நீர் மருந்து

பசியினைப் பிணி என்று மணிமேகலை பகரும். அப்பிணி தீர்க்கும் அரு மருந்தாக நீர் அமைகின்றது. நீரினையும் உணவினையும் ‘இரு மருந்து’ என்று சங்க காலத்திலிருந்து குறிப்பிட்டுள்ளமையை இக்கருத்தோடு பொருத்திப்பார்க்கலாம். தற்போது உடல் பிணி போக்கும் மருந்திற்கு நிகரான தன்மை உண்டு என மேலை நாட்டு மருத்துவமுறைகள் குறிப்பிடுகின்றன. மேலும், சர்.சி.வி.இராமன், ~~றுயவநச ளை வாந நடiஒசை ழக டகைந||  என்ற கட்டுரையில் நீரின் தன்மைகளைக் கூறி வியப்பார்.  பழங்காலத்தில் இருந்தே நீரானது மருந்தாக மதிக்கப்பெற்றதை,

‘‘அடுதீ அல்லது சுடுதீ அறியாது

இருமருந்து விளைக்கும் நல்நாட்டுப் பொருநன்” -புறம்., 70, 8 – 9

என்ற அடிகளால் அறியலாம். சோழன் கிள்ளி வளவனது நாடானது உணவிற்காக ஏற்படுத்தப்படும் நெருப்பினைத் தவிர வேறு நெருப்பினை அறியாதது, தண்ணீரும் உணவுமாகிய இரு மருந்துகளைப் பசிப்பிணிக்குத் தரும் தலைவன் என்று நீர்க்கொடையால் சோழன் புகழப்படுவதும் இங்கு சிறப்புடையதாகும்.

போர்க்காலத்தில் நீர்நிலை

         நீர்நிலைகள் நாட்டின் வளத்தினை முடிவு செய்யும் காரணியாக இருப்பதால் போர்க்காலங்களில் மிகுதியான ஆபத்துக்களைச் சந்தித்தன.

புறப்பொருள்வெண்பாமாலையில், ‘மழபுலவஞ்சி’ எனும் துறையில் எதிரி நாட்டை அழிக்கும் பொருட்டு  நீர் நிலைகளை அழிப்பது குறிப்பாகக் காட்டப்படும்.

          போர்க்காலத்தில் நீர்நிலைகள் யானைகளால் அழிக்கப்பட்டமை குறித்து,

‘‘ஒளிறு மருப்பின் களிறு அவர

காப்பு உடைய கயம் படியினை’’-புறம்., 15, 9 – 10

என்ற அடிகளால் அறியலாம். இப்போர்க்கால நிகழ்வே ‘மழபுல வஞ்சி’ என்ற துறையினுள் பிற்காலத்தில் இடம்பெற்றமையை அறியலாம்.

நீர்நிலைப் பாதுகாப்பு

புற அரசியலில் எல்லைகளாகக் கருதப்பட்ட நீர்நிலைகளைப் பராமரிக்கக் காவலர்கள் பணியமார்த்தப்பட்டிருந்தனர். அகநானூற்றில், ஓரிடத்தில் இரவுக்குறிக்குத் தடையாகத் துயிலாது இருக்கும் அன்னையைத் தலைவி, ‘குளக் காவலன்’ போன்று உறங்காதிருக்கிறாள் என்று கூறுவாள்.

குளங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் கரை உடைப்பு போன்றவற்றைச் சரிசெய்ய  காவலர்கள் நியமிக்கப்பெற்று நீல்நிலைகள் பராமரிக்கப்பட்டதை,

‘‘எண்நாள் திங்கள் அனையக் கொடுங்கரைத்

தெளிநீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ’’-புறம்., 118, 2 – 3

என்ற அடிகளால் அறியலாம். ஊர்களில் நீர்த்தேவைக்காகக் கிணறுகள் வெட்டப்பட்டமையை (புறம் - 132) பாடலின் வழி அறியலாம்.

முடிவுரை

நீர்நிலைகளானது மனிதனின் அகம், புறம் என்ற இருவேறுபட்ட வாழ்விலும் இன்றியமையாத பங்கு வகித்தமை, அவற்றைப் பராமரித்தமை, புலவர்கள் தம் கூர்த்த சிந்தை மற்றும் வெளிப்பாட்டினால் அவற்றை நுட்பமாகக் குறிப்பிட்டமை குறித்து இக்கட்டுரை வழி அறியமுடிகிறது. 


கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...