சங்க இலக்கியப் பாடல்கள் என்றாலே கற்றோர் மத்தியிலேயே ஒரு பயம் தெரியும். சரியான முறையிலும், எளிமையான விதத்திலும் மக்களுக்கு அவை வழங்கப் பட்டால் இப்பாடல்கள் பற்றிய பயம் அறவே நீங்கிவிடும். இரசிகத்தன்மையைப் போல் பயத்தையும், தயக்கத்தையும் போக்க வேறு எதனாலும் முடியாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் இலக்கியங்கள் பலவும் செய்யுள்களால் ஆக்கப்பட்டன. அவற்றுள் சில தனிப்பாடல்கள் இன்றைய சிறுகதைக்குச் சொல்லப்படும் இலக்கண வரம்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை உணர்த்துவதாக, சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாக இருக்க வேண்டும் என்ற என்ற சிறுகதை வரம்புக்கு அமைவாக எழுதப்பட்ட ஒரு கழக இலக்கியச் சிறுகதை இது.
முன்றில் முஞ்சையொடு முகண்டை பம்பி்ப்
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீயிப் பிறிதேர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
இல்வழங் காமையிற் கல்லென ஒலித்து
மானதள் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியோ டிதல்கவர்ந் துண்டென! புறநாநூறு 320
அது ஒரு காட்டிடையே அமைந்துள்ள குடிசை. அக்குடிசையின் முற்றத்தில் முஞ்சைமரம் ஒன்று பசுமைப் பந்தல் வேய்ந்தாற்போல் அடர்ந்து, படர்ந்து நிழலையும் குளிர்ச்சியையும் அளித்துக் கொண்டிருந்தது. அலைந்து திரிந்து வேட்டையாடிக் களைத்துப் போய் வந்த வேடுவன் அந்த மரத்தின் கீழே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். வீட்டின் உள்ளே, அடுப்புக் கருமங்களில் ஈடுபட்டிருந்தாள் வேடுவச்சி. குடிசையின் வாசலில் உரலில் இட்டு இடித்த தினை அரிசி ஒரு மான்தோலின் மேல் உலர்வதற்காகப் பரப்பட்டிருந்தது.
சில காட்டுக் கோழிகளும், குருவிகளும் உலர்வதற்காகப் பரப்பப்பட்டிருந்த தினையரிசியைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. சுற்றியிருந்த புல்வெளியில் ஒரு கலைமானும், பிணையும் புல் மேய்ந்து கொண்டிருந்தன.
ஏதோ கருமமாக வாசலுக்கு வந்த வேடுவச்சி மரநிழலில் தன் கணவன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருப்பதையும், பறவைகள் தினையைக் கொத்தித் தின்று கொண்டிருப்பதையும் கண்டாள். அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
பறவைகளை விரட்டத் தன் கைகளை ஓங்கித் தட்ட நினைத்தவளுக்கு, ஒரு எண்ணம் வந்ததால் தட்ட நினைத்த கைகள் தயங்கின. அவள் மனதில் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த அந்த எண்ணம்தான் என்ன? அவள் கைகளைத் தடை செய்த உணர்வு எது?
அவளுக்கு வலது புறத்திலும், இடது புறத்திலும் அமைதி ஒன்றிலேயே நிகழ முடிந்த இரண்டு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. பறவைகளை விரட்ட அவள் கைகளால் ஓசை எழுப்புவாளானால் இந்த இரண்டு நிகழ்வுகளும் கலைந்து போவதை அவள் விரும்பவில்லை. ஒன்று வலப்பக்கம் மேய்ந்து கொண்டிருந்த மான்கள் அன்பு என்ற உணர்வு காதலாகி, காதல் என்ற உணர்வு இன்பமாகி உடலும் உள்ளமும் ஒன்றித்திருக்கும் நிலை.
இடப்பக்கம் ஒரு சில அம்புகளைக் கொண்டே யானையை வேட்டையாடிவிடக் கூடிய வலிமை உடைய அவள் கணவன் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்.
உலர்த்தியிருந்த தினை முழுவதையும் பறவைகள் தின்று விட்டாலும் அவளுக்குக் கவலையில்லை. அந்த மான்கள் துணுக்குற்று பிரிந்து விடக் கூடாது. ஆழ்ந்து உறங்கும் தன் கணவனின் உறக்கம் கலைந்து விடக் கூடாது. அது போதும் அவளுக்கு.
பேசாமல் உள்ளே மெதுவாக நடந்து சென்றாள் வேடுவச்சி. மான்தோலினை விரித்து அதன் மேல் உலர்ந்திருந்த தினையை கோழிகளும், குருவிகளும் தின்று தீர்த்துக் கொண்டிருந்தன.
வேடனின் உறக்கமும், மான்களின் இன்பமும், பறவைகளின் வயிறும் நிறைந்து கொண்டே இருந்தன. மான் தோலில் உலர்த்தியிருந்த தினை மட்டுமே குறைந்து கொண்டே இருந்தது.
மீண்டும் அவள் வெளியே வந்தபோது அவள் கணவன் உறங்கி எழுந்திருந்தான். மான்கள் பழைய நிலையிலிருந்து திரும்பித் தனித்தனியே மேய்ந்து கொண்டிருந்தன. தினை உலர்த்தியிருந்த மான்தோலைப் பார்க்கிறாள். அதில் ஒன்றுமே இல்லை. அது வெறுமையாக இருந்தது. ஆனாலும் அவள் மனம் நிறைந்திருந்தது. அவள் அரிவாளை எடுத்துக் கொண்டு மீண்டும் புறப்பட்டாள் தினை அறுக்க.
இந்த புறநாநூற்றுப்பாடலையும், அதன் விளக்கத்தையும், ரசித்து அதன் மூலம் இன்னும் சில பாடல்களை படிக்க வேண்டுமேன்ற ஆவலைத் தூண்டுமாயின், அது எமது நோக்கத்தைத் தூண்டினால் போன்று அமையும்.
காதல் காட்சி
சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் உள்ள கலித்தொகையில் அற்புதமான சில காதல் காட்சிகள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. இக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. அதில் ஒரு பாடலைப் பார்ப்போம். அற்புதமான காதல் காட்சி நம் கண்முன்னே தோன்றும்.
சுடர் தொடீஇ! கேளாய் – தெருவில் நாம் ஆடும் – மணல்
சிற்றில் காலின் சிதையா, அடைச்சியகோதை பரிந்து,
வரிப் பந்து கொண்டு ஓடி ,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு, அன்னை
அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!
தலைவி தன் தோழியிடம் கூறுவது போல் அமைந்த பாடல் இது. சரி பாடல் காட்டும் காட்சியின்பம் என்னோ? தற்காலத் திரைப்படங்களிலும், வெளிவரவுள்ள படங்களிலும் நீங்கள் பார்க்கலாம். இந்தச் சிந்தனை இரண்டாயிம் ஆண்டுகளுக்கு முன்பு முகிழ்ந்த ஒன்று என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா!
சிறு வயது முதல் ஒன்றாகப் பழகி விளையாடிய அவள், பருவ வயதில் காதல் கொண்ட இளைஞன் ஒருவன் நீண்ட நாட்களாகத் தன் அன்புக்குரியவளைச் சந்திக்க முடியாத நிலையில் மீண்டும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. தன் உள்ளம் கவர்ந்த தாரகையைக் காண அவள் இல்லம் நோக்கி செல்லுகிறான்.
சிறு வயது முதல் ஒன்றாகப் பழகி விளையாடிய அவள் மீது தன் காதல் உள்ளத்தை இன்று எப்படியும் அவளிடம் கூறிவிட வேண்டும் என்ற துடிப்புடன் சென்ற அவனுக்குப் பெரும் ஏமாற்றம். அங்கே வீட்டின் புறத்தே அன்பிற்குரியவளும் அவளுடைய அன்னையும் இருப்பதைக் காண்கிறான். உடனே சூழலைப்புரிந்து கொண்டு தாகமாக இருக்கிறது.. தாகத்துக்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்’ என்று கேட்கிறான்.
அன்னையும் தன் மகளிடம் தண்ணீர் தரும்படி கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விடுகிறாள். அழகிய பொற்கிண்ணத்தில் தண்ணீர் தருகிறாள் தலைவி. தண்ணீரைப் பெறுவதுபோல் அவளின் அழகிய வளையல் அணிந்த கரத்தையும் பற்றி விடுகிறான் தலைவன்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவள் தன்னை மறந்த நிலையில், ‘அம்மா! இங்கே வந்து பாரும்மா… இவன் செயலை’ என்று அலறிவிடுகிறாள்.
உள்ளே இருந்து அம்மா அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வருகிறாள். சட்டென்று தன் நிலையை உணர்ந்த தலைவி, “தண்ணீர் குடிக்கும் போது அவருக்கு விக்கல் வந்துவிட்ட தம்மா, அதுதான் உங்களைக் கூப்பிட்டேன்” என்று கூறி உண்மை நிலையை மறைத்து விடுகிறாள். இதற்குப்போய் இப்படிக் கத்தலாமா? என்று கேட்டுக்கொண்டே விக்கலை நீக்க, தலைவனின் தலையையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விடுகிறாள். அந்தச் சமயத்தில் தலைவன் கடைக் கண்ணாலே தலைவியைப் பார்த்துப் புன்னகை பூக்கின்றான். கண்கள் அங்கே மனதைக் கொள்ளையடித்தன.
மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். அழகான ஒரு காதல் காட்சியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைத்துக் காட்டிய ஒப்பற்ற திரைப்படக் கலைஞனாகக் கபிலர் நமக்குத் தெரிவார். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட ஒரு கற்பனை வளமா? சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம் மனதைக் கவரும்படி மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன.
தலைவி தன் தோழியிடம் கூறுவது போல் அமைந்த பாடல் இது. சரி பாடல் காட்டும் காட்சியின்பம் என்னோ? தற்காலத் திரைப்படங்களிலும், வெளிவரவுள்ள படங்களிலும் நீங்கள் பார்க்கலாம். இந்தச் சிந்தனை இரண்டாயிம் ஆண்டுகளுக்கு முன்பு முகிழ்ந்த ஒன்று என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா!
No comments:
Post a Comment