Wednesday, January 18, 2017

மதுராந்தகி...




ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... ஒரு நாளில் நிஜமாகும்' நிரூபித்திருக்கிறார் மதுராந்தகி.
               
'மாநில குடிமைப் பணிகள்' என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்1 தேர்வில் மாநிலத்திலேயே முதலாவது இடத்தை பிடித்து சாதனை செய்திருக்கும் இவர் திண்டுக்கல் மாவட்டம்இ ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகாம்பட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

முதல் முயற்சியிலேயே முதல் இடத்தை பிடித்து கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) பணிக்கான அரசு ஆணையையும் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசியபோது... ''எங்க அப்பா சதாசிவம்இ கரூர் வணிகவரித்துறை டெபுடி கமிஷனரா இருக்கார். அம்மா அம்சவள்ளி தம்பி ஆதவன்னு சின்ன குடும்பம்.
'படிப்பால எதையும் சாதிக்க முடியும்னு சின்ன வயசுல இருந்தே அப்பா சொல்லிட்டு இருப்பாரு. அந்த வார்த்தை என மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. நல்லா படிச்சு அரசு பணிக்குப் போறதுதான் லட்சியம்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே இருந்தேன்.
உடுமலைப்பேட்டையில பள்ளிப் படிப்பையும் கோயம்புத்தூர்ல காலேஜையும் முடிச்சேன். சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சுட்டு சென்னையில ஒரு கம்பெனியில கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். ஆனா மனசு முழுக்க அரசுப் பணியில சேரணும்ங்கிற யோசனையிலேயே இருந்ததால நான் பார்த்துகிட்டு இருந்த வேலையை உதறிட்டு படிக்க வந்துட்டேன். டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுக்கு தயாராக ஆரம்பிச்சேன்'' என்ற மதுராந்தகி அந்தத் தேர்வுக்கு தயாரான விதம் பற்றி அழகாகப் பேசினார்.
''பலர் எதைப் படிக்கிறது எதை விடுறதுனு தெரியாம எல்லாத்தையும் படிப்பாங்க. நான் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து படிச்சேன். அந்த வகையில எனக்கு ரொம்ப உதவியா இருந்தது 'மனிதநேய அறக்கட்டளைதான். அவங்களோட ஆலோசனையும் வழிகாட்டுதலும்தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கு.
என்னை முழுமையா தயார்படுத்திகிட்டதும் நான் எழுதுன முதல் தேர்வுலயே முதல் இடம் கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கு முன்ன மதிப்பெண் அடிப்படையிலதான் பதவிகளை ஒதுக்குவாங்க. ஆனா முதல் முறையா கவுன்சலிங் நடத்தி அவங்கவங்க விருப்பப்படி பதவிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுத்தாங்க. நான் ஆர்.டி.ஓ. பதவியை தேர்ந்தெடுத்தேன்'' எனும் மதுராந்தகிக்கு அரசுப் பணி குறித்த ஆர்வமும் இலக்கும் நிறையவே இருக்கிறது.

''நேரடியா மக்களிடம் பழக வாய்ப்பு கிடைக்கும் அவங்களோட பல பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியும்ங்கிற எண்ணத்துலதான் ஆர்.டி.ஓ பதவியை தேர்ந்தெடுத்தேன். மக்கள்கிட்ட வாங்குற மனுக்கள் மேல எவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை எடுக்க முடியுமோ எடுத்து அவங்களுக்கு உதவி பண்ணணும்னு நினைச்சுகிட்டுஇருக்கேன்.

அரசாங்க அதிகாரிகள்னு சொன்னாலே மக்கள்கிட்ட மோசமான ஒரு பிம்பம்தான் படிஞ்சுருக்கு. அதை மாத்தி 'அரசு அதிகாரிகள் நல்லவங்கனு மக்கள் வாயால சொல்ல வைக்கணும்ங்கிற ஆசை எனக்குள்ள இருந்துகிட்டே இருக்கு.

நல்ல அதிகாரி கிடைச்சா தலையில தூக்கி வெச்சு கொண்டாட தயாரா இருக்காங்க மக்கள். அதனால இதை ஒரு வேலையா நினைக்காம கடமையா செய்யப் போறேன்'' என்றவர்

''தெளிவான லட்சியமும் முறையான திட்டங்களும் விடாமுயற்சியும் இருந்தா போதும்.. யாராலயும் இந்த இடத்துக்கு வரமுடியும்!''

- நம்பிக்கை கொடுத்து முடித்தார் மதுராந்தகி!

- ஆர்.குமரேசன்

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...