Wednesday, January 18, 2017

பெருமாள் முருகனின் ஆலவாயன்...

“ போரிலிருந்து சோளத்தட்டு உருவிக் கட்டிக்கொண்டு வந்து போட்ட கயிறு முதுகில் அழுந்தியது. மேலே பார்த்தான். பூவரசங்கிளைகள் வானில் விரிந்து பரவியிருந்தன “ என்ற வரிகளுடன் முடிந்திருக்கும் பெருமாள் முருகனின் மாதொருபாகன், காளியின்  தற்கொலை மனவோட்டத்தைக் காட்டுவதாய் முடிந்திருந்தது.

காளி தற்கொலை செய்து கொண்டானா ? இல்லையா ? பொன்னாவின் நிலை என்ன?  என்ற கேள்விகளைப் படிப்போரின் யூகத்திற்கு விட்டபடி நாவலை முடித்திருப்பார் பெருமாள் முருகன். சிறு வயதில் கதைகளைப் படிக்கும்போதும் பின்பு சிறுபிள்ளைத்தனமான கதைகளை எழுதியபோதும் கதை உணர்த்தும் நீதி என்ன என்பதைச் சொல்ல  வேண்டியிருந்தது. வாசிப்பின் பரப்பு விரிவடைந்த போது  நீதி போதனை, பிரச்சாரம் இவற்றைச் செய்வற்காக ஆக்கப்பட்டவை புனைவுகள் இல்லை என்பது புரிந்தது.

எழுத்தாளன் உருவாக்கும் ஒரு அனுபவத்தை  எழுத்தின் வாயிலாக வாசகனுக்குக் கடத்துகிறான். அது வாசகனின் அனுபவத்தைத் தொட்டுவிடும் போது படைப்பு  பேசப்படுகிறது.

மாதொருபாகனின் முடிவு காளி தற்கொலை செய்து கொண்டானா இல்லையா என இருவேறு கேள்விகளை முன்வைக்கத் திரு. பெருமாள்முருகன் அதன் இரு வேறு பாதைகளிலும் வாசகனைத் திருப்பி ஆலவாயனையும், அர்த்தநாரியையும் படைத்திருக்கிறார்.

மாதொருபாகனால் உருவான சர்ச்சைகளை எதிர்கொண்ட பெருமாள் முருகன் அவர்கள் ஆலவாயன், அர்த்தநாரி என்னும் இரு நாவல்களின் முன்னுரையிலேயே கொடுத்திருக்கும்

“அய்யா சாமிகளே, தங்கள் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம். இந்த நாவல் என்றல்ல; என்படைப்புகள், எழுத்துகள் எல்லாவற்றின் களமும் தமிழகத்தில் உள்ள ஊர்கள் கிடையாது. ஏன, இந்த உலகத்தைப் பற்றியே நான் எழுதவில்லை.  நான் எழுதுவது எல்லாம் அசுரலோகத்தைப் பற்றித்தான். என் எழுத்தில் வரும் மாந்தர்கள் எல்லோரும் அசுரர்கள். அவர்கள் எல்லாரும் அசுர சாதிப் பிரிவினர். அவர்கள் பேசுவது அசுரமொழி. இந்த லோகத்தில் வசிக்கும் யாரையாவது  குறிப்பதாகவோ எந்தச் சாதியையாவது எந்த இடத்தையாவது சுட்டுவதாகவோ தோன்றினால் அது மாயை. ஆகவே தயவு செய்து அந்த மாயையில் இருந்து மீண்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.“

என்ற தன்னிலை விளக்கம் வேதனையின் பகடி என்பதை விளக்கத் தேவையில்லை. மாதொருபாகனுக்கு வந்த எதிர்ப்புக்குரலின் சாரம் எம் மண்ணை எம் சாதியை இழிவுபடுத்தி விட்டார்.  இல்லா ஊரையோ இனத்தையோ அவர் இப்படிச் சொல்லியிருந்தால் நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம் என்று முன் வைத்த வாதத்திற்கு ஆசிரியரின் மறுமொழிதான் இது.

இலக்கணத்திற்கு வருவதற்கும் ‘எதற்கெடுத்தாலும் தொல்காப்பியம் சங்ககாலம் என்று  பழமைவாதம் பேசுகிறானே‘ என்னும் நினைப்பினை ஏற்படுத்துவதற்கும் வருந்துகிறேன்.

படைப்பாக்கம் குறித்துப்பேசும் நம் இலக்கணங்கள் நான்கு வழி முறைகளைச் சொல்கின்றன.

உள்ளதை வைத்து உள்ளதைச் சொல்வது, ( நடந்த சம்பவம் )

உள்ளதை வைத்து இல்லாததைச் சொல்வது, ( நடந்த கதை )

இல்லாததை வைத்து உள்ளதைச் சொல்வது, ( புராண வரலாறு ? )

இல்லாததை வைத்து இல்லாததைச் சொல்வது. ( கட்டுக்கதை ) ( தொல்.பொருள். 53. நச்.)

இங்குப் பெருமாள் முருகனின்  மாதொரு பாகன் என்னும் நாவல் இரண்டாம் வகையில் எப்படி அமையலாம் என்று எழுந்த எதிர்ப்புக் குரலால்  ஆலவாயன் அர்த்தநாரி ஆகிய இரு நாவல்களையும் நான்காம் வகைக்கு மாற்றி விட்டதாகப் பிரகடனம் செய்வதாக எனக்குத் தோன்றியது. அந்த உரிமைகூட நூலை எழுதிய ஆசிரியருக்கு இல்லையா என்ன?

சரி கதைக்கு வருவோம்.

“ஆலவாயன்“ எனும் நாவல் காளி அந்தப் பூவரச மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் என்ற முடிவைத் தேர்ந்து அதன் வழியில் பயணிக்கிறது.

தான் மிக விரும்பிய மனைவி தன்னை ஏமாற்றியதைத் தாள இயலாமல் அவளுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியே காளி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான்.

அவனது தற்கொலைக்கு முன்பான மனநிலையை  நாவல் இப்படிப் பதிவு செய்கிறது.

“பொன்னா அந்த இரவில் இன்னொருவனோடு இருக்கப் போனாள் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்தவள். அவள் உடலில் தன்வாசம் தவிர இன்னொரு வாசம் ஏறுவதை அவன் ஒப்பவேயில்லை. அவனோடு கலந்த உடம்பு. அவன் வாசத்தைப் பன்னிரண்டு ஆண்டுகளாகச் சேர்த்துக் கொண்டிருக்கும் உடம்பு. அதன் ஒவ்வொருதுளியும் தனக்கே சொந்தம் என்று நினைத்தான். தன் உடலைவிடப் பொன்னாவின் உடலையே அவன் நன்கு அறிவான். வாயில் பன்னீர் வாசம் என்பான். கிச்சத்தில் சோற்றுக் கற்றாழை நாற்றம். மாரில் ஆட்டுப்பால் மொச்சை. உயிர்நிலையில்ஆவாரம் பூ மணம். அவள் உடலை வாசனைகளின் கூட்டு என்று அறிந்து வைத்திருந்தான். ‘சரி பேச்சு?‘ என்பாள். ‘ரத்த வீச்சம்‘ என்பான். உடனே அவளுக்குக்குக்  கோபம் வரும். ‘எல்லாரும் சொல்றாப்பல நீயும்சொல்ற அப்படியா கத்திக்  கொதர்றாப்பலயா பேசறன் நான்?‘ என்று அழுவாள். ‘ஆட்டு ரத்தத்தைப் பொரிச்சுப் பாரு. அப்பபடி வாசம் இருக்கும். அதச் சொன்னேன்‘ என்று சமாதானத்திற்கு வருவான். அவள் உடலின் ஒவ்வொரு மணத்திலும் தன் மணத்தையே கலந்து இரண்டு உடல்களையும் ஒரே வாசனையின் பிரதிகளாய் மாற்றிவிட முயன்று கொண்டிருந்தவன் அவன். இன்னொரு வாசம் அதிலேறினால் களங்கம். எதனாலும் போக்கிவிட முடியாத களங்கம். களங்கத்தின் மேல் தன் கை பாடாது என்று மனதில் உறுதியாகச் சொல்லிக் கொண்டான்.
…….
அவளுக்குக் காலமெல்லாம் நினைத்திருக்கும்படி தண்டனை தரவேண்டும்.  தன் சாவு அவளுக்கு நிரந்தரத் தண்டனையாக இருக்கும் என நினைத்தான். ஒவ்வொரு நாளும் தன்னை நினைத்து அவள் அழ வேண்டும். இப்படிச் செய்தது தப்பு என்று உணர்ந்தபடியே இருக்க வேண்டும்.“


காலையில் தொண்டுப்பட்டிக்கு வரும் மாராயிதான் பூவரசில் தொங்கும் காளியின் உடலைக் காண்கிறாள். அவளது அலறலுக்கு அருகில் உள்ள சிலர் சேர்கின்றனர். காளியின் பிணம் இறக்கப்படுவதை இப்படிக் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.

“ கண்ணான் மரத்தில் ஏறினான். கயிறை வாதோடு சேர்த்து வெட்டினான்.  அவனுக்குத் தெரிந்து விட்டது. ஆள் உயிரோடு இல்லை. அவிழ்ந்த குடுமி புறங்கழுத்தில் விரிந்து கயிற்றுச் சுருக்கை மறைத்திருந்தது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்தாலும் அவசரமாக வெட்டினான். வடக்கயிறு. பெரிய பெரிய பிணிகள் சேர்ந்து இரண்டு கைக்கும் அடங்காத மொத்தம். அரிவாள் கூரில்லை. சோளத்தட்டு வெட்டி மழுங்கிப் போயிருந்தது. வாதின் இருபக்கமும் கால்களைப் போட்டு உட்கார்ந்தது கொண்டு அரிவாளைப் பலமாக ஓங்கிக் கயிற்றில் போட்டான். அவனுககும் பதற்றமாக இருந்தது. கயிறு இளக இளகக் காளி கீழே இறங்கினான். கீழே நின்றிருந்த ராசானும் செல்லனும் காலைப்பிடித்து மெல்லக் கீழே விட்டார்கள். பெரும் பாரத்தைத் தாங்கி இறக்குவது போலிருந்தது. இறங்க இறங்க ஒரே நாற்றம். அப்போது அதைக் கவனிக்கவில்லை. இறக்கிப் போட்டு அழுந்திக் கிடந்த கழுத்துக் கயிற்றை இழுத்துத் தளர்த்தி மூக்கில் கை வைத்துப் பார்த்தார்கள். ஒன்றும் இல்லை. நெஞ்சுக் கூட்டில் கொஞ்சம் வெதுவெதுப்பு இருந்தது.      “ இப்பத்தான் ஆளு முடிஞ்சிருக்கறான்“ என்றான் செல்லன்.

“ …….செல்லன் மேலும் ராசான் மேலும் பீ நாற்றம். உயிர் போகத் துடித்த துடிப்பில் பீ வெளித்தள்ளியிருந்தது. மாணி பெருத்து வேட்டிக்கு மேல் முட்டிக் கொண்டு நின்றது. இருவரும் ஓடித் தாழியில் கிடந்த தண்ணீரில் கழுவிக் கொண்டார்கள். குடத்தில் இருந்த தண்ணீரைக் கொண்டுவந்து காளியின் மேல் ஊற்றிக் கழுவித் தூக்கில் கிடந்த வெறொரு வேட்டியை எடுத்துச் சுற்றினார்கள். என்றாலும் விறைத்திருந்த மாணியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதன் மேல் துணிகளைப் போட்டுத்தான் மூட முடிந்தது. கிட்டித்த பற்களை விடுவித்து நாக்கை உள்ளே தள்ளவும் விழிகளை மூடவும் இயலவில்லை. ‘நாணுகிட்டவன் பொணத்தப் பாக்கற  கொடும மாதிரி ஒலகத்துல எதும் கெடையாதுடா சாமீ. ஆருக்கும் மூஞ்சியக் காட்ட வேண்டாம் முழுசா மூடிருங்கடா‘ என்று பெரியசாமி சொன்ன பிறகுதான் அதைச் செய்தார்கள்.“

பொன்னா வருவதற்குள் காளியின் பிணத்தை இறக்கிவிட்டார்கள். அவள் நேசித்தவனின் அதுவரை கண்டறியாத கோர முகம் காணச் சகியாமல் மயக்கம் அடைகிறாள் பொன்னா.

தன்னை ஏமாற்றிய தன் உறவுகள் மேல் கோபம் கொள்கிறாள்.

தனது மடமையை எண்ணித் தன்னைத் தானே நோகிறாள்.
.
காளியின் மரணத்திற்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பாத  பொன்னாவையும் இழந்துவிடக் கூடாது என்பதற்காக பொன்னாவின் தாய் நல்லாயியும், காளியின் தாய் மாராயியும் அவளை மாற்றி மாற்றிக் காவல் காக்கின்றனர்.

காளியின் மரணம் பற்றிக் கேட்பவரிடத்துச் சொல்ல மாராயி ஒரு கதையை உருவாக்குகிறாள்.

மாமியார் வீட்டுகுக் சென்ற காளி பழைய சேக்காளிகளைச் சந்தித்த போது ஒருவன் “ பிள்ள பெக்க சமுத்தில்லாதவன் எல்லாம் வாயத்தொறந்து பேசக்கூடாது“ என்று சொன்னதாகவும் அதற்கு ரோஷப்பட்டுத் தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகிறாள்.

பொன்னாவுக்கு வேறு நபருடன்  தொடர்பு என்பதை அறிந்துதான் காளி தற்கொலை செய்து கொண்டான் என ஊர் பேசுகிறது.

காளியின் தற்கொலையை அடுத்து வெட்டப்பட இருந்த அந்தப் பூவரசமரத்தை வெட்டக் கூடாது என்று தடுக்கிறாள் பொன்னா. அதன் ஒரு வாது மட்டும் வெட்டப்படுகிறது. அது பொன்னாவால் தொண்டுப்பட்டியிலேயே நடப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

பூவரச மரம் இம்மூன்று நாவல்களிலும் முக்கிய இடம் பெறுகிறது.

பொன்னாவிற்குக் காளியின் நினைவுகளே காணுமிடம் எங்கும் தென்படுகின்றன.  தன் கண்பார்க்கும் ஒவ்வொன்றிலும் அவனது ஆதிக்கம் தெரிகிறது. தன் மேலும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மேலும் வன்மம் கொள்கிறாள் அவள்.

அவன் கைபட்டுப் பொலிந்த காடு காய்ந்து கிடப்பதைக் காணச் சகியாது ஒரு கட்டத்தில்  காட்டில் இறங்கி மிகக் கடுமையாக வேலை செய்ய ஆரம்பிக்கிறாள்.

பூவரச மரம் காளியின் ஆவி உறையும் இடமாகவும் இரவு அதிலிருந்து அவன் ஒவ்வொரு மரமாக அலைவதாகவும் ஊராரால் நம்பப்படுகிறது. ஒரு நாள் இரவு பூவரச மரத்திலிருந்து காளி இறங்கிப் பொன்னாவிடம் வருகிறான்.

பொன்னாவைப் பார்க்கிறான். பொன்னா அவனோடு பேசுகிறாள். தன்னுடைய செயலுக்காக அவன் வருந்துகிறான். இனி அவளைவிட்டுப் போகப் போவதில்லை  என்று உறுதி கூறுகிறான்.

‘ அவன் முகம் புதைத்துக் கொண்டான். இப்போது அவனுக்குக் கட்டிலில் தனியிடம் வேண்டியிருக்கவில்லை. வெகுநேரம் அவன் இருந்தான்…….
காளி எவ்வளவு நேரம் இருந்தான் , எப்போது போனான் என்று எதுவும் தெரியவில்லை பொன்னாவுக்கு.‘

அன்று வெகுநேரம் கழித்து எழும் பொன்னாவிற்கு வரும் ஓங்கரிப்பு அவள் கருவுற்றிருப்பதைக் காட்டுகிறது.

இரவில் தன் கனவில் வந்த காளி தந்த குழந்தை எனவே நம்புகிறாள் பொன்னா. ஊர் அவள் கர்ப்பம் குறித்தும்  பலவாறு பேசுகிறது.       கணவன் இறந்த சில மாதங்களில் ஒரு பெண் கருவுற்றால் பலரறிய ஊர் கூடி அக்குழந்தை தன் கணவனுக்குத் தரித்ததுதான் என்று அறிவித்து அதை அனைவரும் ஏற்றால் தான் அது முறையான வழியில் பிறந்த குழந்தை என ஏற்று அங்கீகரிக்கப்படும் எனும் ( அசுர ? ) வழக்கு அங்கிருக்கிறது. அதன் படி ஊர் கூடிப்  பொன்னா காளிக்கே கருத்தரித்திருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

பொன்னாவிற்குக் குழந்தை பிறக்கிறது.

காளியின் சாயலில் அக்குழந்தை இருக்கிறது என்று பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்.

அவள் தன் குழந்தையைப் பார்க்கிறாள்.

வாய்திறந்து குழந்தை சிரிக்கிறது. அப்போது “ எனக்கு ஆல  வாயா ? “ என்ற குரல் அவளுக்குக் கேட்கிறது.

அது பதினான்காம் நாள் திருவிழாவில் அவளைக் கூட்டிச் சென்ற அவனது குரல்.

மாதொருபாகனில் சொல்லப்படாத அந்தக் காட்சிகள் விரிகின்றன.

அவன் அவளை மலைப்பகுதி போன்ற ஒரு இடத்திற்குக் கூட்டிச் செல்கிறான்.

“கொழந்தை வேணுமின்னு வந்தயா?
அவள் ஒன்றும் சொல்லாமல் அவன்மார்பில் முகத்தை வைத்துக் கொண்டாள். ‘கெடச்சிரும்‘ என்றான். அவள் இதழ்களைத் தடவினான். ‘பேச மாட்டயா? ‘ அவள் கைகளே பேசின.

‘கொழந்தைக்கு எம்பேரு வைப்பியா?‘ அவள் மெல்ல அவன் காதில் ‘ம்‘ என்றாள். பையன் பொறந்தாலும் பிள்ள பொறந்தாலும் வெக்கோணும் ‘ம்‘ என்று அவள் ஆமோதிப்பை எதிர்பார்த்துக் கேட்டான். அவள் தலையசைத்தது அவன் மார்புக்குத் தெரிந்தது. ‘எம்பேரு மணி‘ என்றான். ‘எங்க எம்பேரச் சொல்லு‘ என்றான். அவள் முன்போலவே காதோரமாய் மணி என்று கிசுகிசுத்தாள். ‘ அந்த நெலா காதுக்குள்ள பாயறாப்பல இருக்குது‘ என்றான்.

அவள் முகத்தைத் தன் முகத்ததுக்கு நேராகத் தூக்கி நிமிர்த்தி ‘எனக்கு இன்னொரு பேரும் இருக்குது என்று சிரி்ததான். பாரு சிரிக்கறப்ப எம் வாயி பெரிசாத் தெரீதா ? நான் ஆலவாயனா பார்த்துச் சொல்லு “ வாயைத் திறந்து அகட்டிக் காட்டினான் பெரிய வாய்தான். எப்படிச் சொல்வது,? அவள் லேசாகச் சிரித்ததை அவன் அறிந்தான்.

‘பெரிய வாய்தான? அதனாலதான் எனக்கு ஊர்ல பட்டப் பேரு ஆலவாயன். எனக்கு ஆல வாயா? எங்க நீ சொல்லு. நான்ஆலவாயனா?.
பையனாப் பொறந்தா ஆலவாயன்னு வெய்யி, பொண்ணாப் பொறந்தா ஆலவாய்ச்சி. என்ன சரியா?‘

‘……. அடுத்த வருசமும் வரோனும். குழந்தய எழுத்துகிட்டு வரோனும் . உன்னய எதிர்பாத்துக்கிட்டு நிப்பன். செரியா. வருவ நீ. எனக்குத் தெரியும். என்னய மறக்க மாட்ட‘

என்று அன்று சொன்னது அவள் நினைவுக்கு வருகிறது.

மாராயி குழந்தைக்கு அர்த்தநாரி என்று பெயரிட விரும்புகிறாள்.

ஆலவாயன் இப்படி முடிகிறது.

“அர்த்தநாரி ……….அர்த்தநாரி……. அர்த்தநாரியா உம்பேரு? செரி, உன்னய மணின்னு கூப்பிடுவனாம். மணிக்குட்டி, மணிச்செல்லம் . ….‘ குழந்தை வாயை அகட்டி நீளமாகச் சிரித்தது.
‘ இங்க பாரு … உனக்கு இன்னொரு பேரு வைக்கிறன். ஆருகிட்டயும் சொல்லக் கூடாது. என்ன.. ஆலவாயா….. டேய் ஆலவாயா..‘ என்று ரகசியக் குரலில் கூப்பிட்டுக் குழந்தையை ஒட்டிப்படுத்து நெஞ்சொடு அணைத்துக் கொண்டாள்.
அந்த அணைப்பு பெரும் இன்பமாக இருந்தது பொன்னாவுக்கு.

(மைனர்)நல்லுப்பையன் மாமாவும் நாவலின் சுவாரசியத்திற்கு அவ்வப்போது வந்து போகிறார். நல்லுப்பையனின் தம்பி, தன் மனைவியைச் சொத்திற்காக நல்லுப்பையனுடன் அனுப்புவதும் அவளோ அவருடனேயே இருக்க விரும்பித் தன் கணவனை மறப்பதும், சொத்தே வேண்டாம் தன் மனைவி தன்னுடன் வந்தால் போதும் எனத் தம்பியின் குடும்பம் அங்கலாய்ப்பதும், அவளது மகன்கள் நல்லுப்பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவதும் அவர் ஓடி ஒளிவதும், இன்னும் அவர் கூறும் சேஷ்டைக் கதைகளும் கதைக்குத் தொடர்பில்லாமல் சுவாரஸ்யத்திற்காய் ஆசிரியர் சேர்த்தவை எனவே எனக்குத்  தோன்றுகின்றது. நாவல் என்பதற்காக இது போன்ற கிளைகளை அனுமதிக்கவும் வேண்டியிருக்கிறது


ஜெயகாந்தன் அக்கினிப்பிரவேசம் என்னும் சிறுகதைக்கு வந்த எதிர்வினைகளை ஒட்டி அக்கதையின் முடிவினை மாற்றிச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்‘ என்றொரு கதையை எழுதி இருக்கிறார்.

இங்குப் பெருமாள் முருகன்  மாதொருபாகனின் படைப்பாளி என்கிற உரிமையில் காளிக்கு என்ன ஆனதோ என்கிற வாசகனின் யூகத்திற்கான இருவிடைகளுள் காளியை இறப்பித்து ஆலவாயனை உருவாக்கி இருக்கிறார்.

மாதொருபாகனின்  தொடர்ச்சி என்பதை விட இம்மூன்று நாவல்களையும் தனித்தனியே வாசிக்க வைக்க வேண்டும் என்னும் ஆசிரியரின் முயற்சியால், மூன்றையும் படிப்பவர்க்குக் கூறியது கூறலாக ஒரு நாவலில் சொல்லப்படும்  அதே நிகழ்ச்சியை மீண்டும் இன்னொரு இடத்தில் படிக்கும்போது அது ஏற்படுத்தும் அலுப்பைத் தவிர்க்க முடியவில்லை.

நாட்டார் வழக்காற்றியல், கணவனை இழந்த பெண் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், காட்சிப்படுத்தலின் துல்லியம்  இவற்றிற்காய் இந்நாவலை வாசிக்கலாம்.

இப்படிச் சொல்லி இருக்கலாம் இப்படிச் சொல்லியே இருக்கக் கூடாது என்ற விமர்சகர்களுக்குத் தமிழ்ப்படைப்பாளியின் மற்றுமொரு விருந்து    “ ஆலவாயன் “

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...