நா.இளங்கோ
மனித உயிரியல் மற்றும் இயற்பியல் இயங்கு விதிகளுக்குக்
கட்டுப்படாத சில அதீத நம்பிக்கைகளில் பேய், பிசாசுகள்
குறித்த நம்பிக்கையும் ஒன்று. பேய், பிசாசுகள்
குறித்த நம்பிக்கைகளுக்கும் மதங்களுக்கும் இடையறாத தொடர்பு உண்டு. ஆன்மா, பாவம், புண்ணியம், மறுபிறப்பு
முதலான கருத்தாக்கங்களின் பின்னணியிலேயே
பேய் நம்பிக்கை உயிர் வாழ்கிறது. இறந்தவர்களின் ஆன்மாவே ஆவி. அகால
மரணத்தால் உடலைவிட்டு நீங்கிய உயிரே ஆவியாக உலவுகிறது. இத்தகு ஆவிகளே பேய்கள். இறந்தவர்கள் தமது வாழுங்காலத்தில் நிறைவேறாத
ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள ஆவியுருவில் அலைந்து
திரிவர் என்ற நம்பிக்கை மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
பழங்குடி மனிதர்கள் தொடங்கி, நாட்டுப்புற, நகர்ப்புற மனிதர்கள் வரையிலும் இத்தகு பேய் நம்பிக்கைகள் நீட்சி
பெற்றுள்ளன. உலகப் பழங்குடியின மக்களின் கதைகளில் வேர்விட்ட பேய்
நம்பிக்கைகள் நாட்டுப்புறக் கதைகளில்
கிளைத்து வளரத் தொடங்கி இன்றைய நகர்ப்புற மனிதர்களின் கதைகள் மற்றும்
ஊடகங்களின் துணையோடு பெருமரமாய்த் தழைத்து நிற்கின்றன. எல்லாக் காலங்களிலும் இத்தகு பேய் நம்பிக்கைகளுக்கு
நீர்பாய்ச்சி ஊட்டம் அளித்து வளர்த்த
பெருமை மதங்களுக்கும் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் உண்டு.
பேய் குறித்த
நம்பிக்கை தமிழ்ச் சமூகத்திலும் தொல்பழங்காலம்தொட்டே இருந்து வந்துள்ளது.
தொடக்கத்தில் பேய்கள் அச்சத்திற்குரியனவாகக் கருதப்பட்டுப் பின்னர்க்
காலப்போக்கில் வணக்கத்திற்குரியனவாக மாறிய நிலையை நமது பழந்தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியங்களில்
பேய் என்பது பேஎய், கழுது, அணங்கு
முதலான பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. பொதுநிலையில் பேய் என்ற சொல்
அச்சம் என்ற பொருளிலும் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்கள்
பேய்களை இடுகாடு மற்றும் சுடுகாடுகளோடும் போர்க் களங்களோடும் தொடர்புபடுத்திப்
பலபடப் பேசுகின்றன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பேய்கள்
குறித்த பதிவுகளைப் பின்வருமாறு பட்டியலிடுவார் ஞா.ஸ்டீபன்:
பேய்கள் நள்ளிரவில்
நடமாடும், கோட்டான்களும் பருந்துகளும்
விரும்பும் இடுகாட்டில் உறைந்திருக்கும், இடுகாட்டில்
நரிகளுடன் சுற்றித் திரியும், பிணம் தின்னும், போர்க்களத்தில்
காயமடைந்த வீரர்களின் உடல்களைத் தேடிவரும், நிணவாடையை
விரும்பும், பலி ஏற்கும், மனித உடலில்
நுழையும், சடங்குகளுக்குக் கட்டுப்படும், வீரர்களின்
இரத்தத்தைக் குடிக்கும் (பண்டைத் தமிழர் சமய மரபுகள், பக்.69-70).
பேய்கள் குறித்த
மேற்குறித்த பதிவுகள் ஒருபுறமிருக்க பேய்மகள் என்றொரு தனிவகைப் பேய்கள் குறித்த செய்திகளும் சங்க இலக்கியத்தில்
விரிவாகப் பேசப்படுகின்றன. இவ்வகைப்
பேய்மகள் குறித்த பதிவுகளைத் தொகுத்துக்கூறும் அ.கா.பெருமாளின் குறிப்புகள் பின்வருமாறு:
பேய்மகள் கள்ளி மிகுந்த கூகைகள் உலாவும்
பிணம் எரியும் சுடுகாட்டில் இருப்பாள். இவள் அகன்ற
வாயையும் கொழுத்த சதையையும் கொழுப்பையும் தின்பதால் புலால் நாறும் தேகத்தை உடையவள்.
குருதியை அளைந்த நகத்தால் பிணத்தின் கண்ணைத் தோண்டுபவள்.
இவள் கழுத்தில் குடல் மாலையைப் போட்டிருப்பாள். சுடுகாட்டுப் பிணம் எரியாமல் அரைகுறையாக
எழுந்து நடனமாடும்போது இவள் கூடவே ஆடுவாள். துணங்கைக்
கூத்தும் குரவைக் கூத்தும் ஆடுவாள். போர் வந்தால் மகிழ்ச்சி யடைவாள் (புறம். 356, 359,
371, மது. 24-28) இவள் போர்க்களத்தில் பகைவரின் தலையால் செய்யப்பட்ட பானையில்
குடலைப் பொங்குவாள். வன்னிமரம் செருகிய மண்டையோட்டு
அகப்பையால் துழாவுவாள். உணவைக் கொற்றவைக்குப் படைப்பாள் (புறம். 7, 71, 82,
89, 372).
(பண்டைத்
தமிழர் சமய மரபுகள், பக்.10-11)
சங்க இலக்கியங்களில்
இடம்பெற்றுள்ள பேய், பேய்மகள் என்ற இருவகைக்
கருத்தாக்கங் களையும் நாம் வேறுபடுத்திப் பார்க்கமுடியும். பேய்
தொடர்பான நம்பிக்கையைப் பழங்குடி இனவாழ்க்கைத்
தொடர்ச்சியின் மிச்சசொச்ச மனப்பதிவுகள் என்று விளங்கிக்கொள்ள
முடியும். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி, பக்தி இலக்கிய, இடைக்காலச்
சிற்றிலக்கியங்கள் வரை நீளும் பேய்மகள் தொடர்பான நம்பிக்கை
என்பது ஒருவகைப் புனைவியல் பாங்கிலானது. இவ்வகைப் புனைவியல் என்பது
ஒருவகை கவிதை மரபாகப் புலவர்களால் ஆக்கிக் கொள்ளப்பட்டது. பேய்மகள் தொடர்பான இத்தகு புனைவுகளும், பேய்கள்
தொடர்பான பழங்குடி இனவாழ்வின் மனப்பதிவுகளிலிருந்தே
கட்டமைக்கப் பட்டுள்ளன. இதனைத் தொல்காப்பியக் கவிதையியல்
கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கமுடியும். அதாவது,
நாடக வழக்கினும் உலகியல்
வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். : அகத். : 53)
பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். : அகத். : 53)
என்ற கோட்பாட்டின்
அடிப்படையில், பேய் நம்பிக்கை என்ற உலகியல்
வழக்கும் பேய்மகள் தொடர்பான அதீதப் புனைவியலும் இணைந்ததாகப்
புலவர்களால் படைத்துக்கொள்ளப் பட்டதோர் புலனெறி வழக்கே சங்க
இலக்கியங்கள் தொடங்கிச் சிற்றிலக்கியங்கள் வரை நீளும்
பேய்மகள் என்ற கருத்தாக்கம்.
மேற்சொன்ன பேய்மகள்
என்ற கருத்தாக்கமும் புலனெறி மரபும் பின்னாளில் மிகவிரிந்த தளத்தில்
பரணி என்பதோர் சிற்றிலக்கிய வகையாக நீட்சிபெற்றுப் புதியதோர் இலக்கிய
வகைமையின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளமையைக் காரைக்கால் அம்மையாரின்
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் துணையோடு விளக்க முற்படுவதே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.
II
காரைக்கால் அம்மையார், இவர்
காரைக்காலைச் சேர்ந்தவர். இவரது காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
என்று நம்பப்படுகிறது. சைவ பக்தி இலக்கிய மரபினைத் தோற்றுவித்தவர்
என்ற பெருமையையும் தமிழிசையின் தாய் என்ற பெருமையையும் பெற்றவர்
என்பதோடு தமிழின் பல புதிய இலக்கிய வடிவங்களையும் யாப்பு வடிவங்களையும்
முதன்முதலில் கையாண்டு தமிழிலக்கிய, இலக்கண
வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் என்றும் போற்றப்படுபவர்
காரைக்கால் அம்மையார். இவரின் இயற்பெயர் தெரிந்திலது.
புனிதவதியார் என்று பெரியபுராணம் இவரைக் குறிப்பிடும்.
காரைக்கால் தலபுராணம் இவரைப் புனிதவதி என்று குறிப்பிடும். அம்மையார்
தமது மூத்த திருப்பதிகத்தின் திருக்கடைக் காப்பிலும் அற்புதத் திருவந்தாதியின் இறுதிப் பாடலிலும் தம்மைக்
காரைக்கால் பேய் என்றே குறிப்பிடுகின்றார். காரைக்கால்
அம்மையாரைச் சைவ அடியார்கள் வரிசையில் இணைத்தவரும்
முதன்முதலில் அம்மையாரை அடையாளம் காட்டியவருமான சுந்தரமூர்த்தி அடிகள், இவரைப்
பேயார் என்றே குறிப்பிடுகின்றார். புனிதவதி என்ற பெயர் அம்மையாரின்
இயற்பெயரன்று. புனிதவதி என்ற பெயரால் அம்மையாரைச் சுட்டும் வழக்கம் சேக்கிழாருக்குப்
பிறகே நிலைபெறலாயிற்று. சேக்கிழார் காரைக்கால் அம்மையாரைப்
பற்றிக் குறிப்பிடும் புராணப்பகுதியில் இடம்பெறும் புனிதவதி, தனதத்தன், பரமதத்தன், நிதிபதி
முதலான பெயர்கள் யாவும் இயற்பெயர்களாய் இல்லாமல்
காரணப் பெயர்களாக அமைந்துள்ளமை கண்கூடு.
பேயார் என்று தம்மை
அடையாளப்படுத்திக் கொண்ட இவரை அம்மையார் என்று அழைக்கும் மரபினை
முதன்முதலில் பதிவு செய்பவர் திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பியே. அவர் காரைக்கால் அம்மையாரைக்
குறிப்பிடும் திருவந்தாதிப் பாடலில்,
செம்பொன் உருவன், என்அம்மை
எனப்பெற்றவள் செழுந்தேன்
கொம்பின் உகுகாரைக் காலினில்
மேய குலதனமே. (திரு. அந்தாதி. 29)
என்று குறிப்பிடுகின்றார்.
இறைவன் அம்மையே என்றழைத்த செய்தியினை முதன்மைப் படுத்தி
அம்மையாரைச் சிறப்பித்த நம்பியின் வாக்கே காரைக்கால் அம்மையார் என்று அவர் பெயர் நின்று நிலைபெறக் காரணமாயிற்று
எனலாம்.
காரைக்கால் அம்மையார் பாடியுள்ள
பாடல்கள் மொத்தம் 143 ஆகும். அவை,
1. அற்புதத்
திருவந்தாதி - 101 பாடல்கள்
2. திரு இரட்டை
மணிமாலை - 20 பாடல்கள்
3. மூத்த
திருப்பதிகம் - 22 பாடல்கள்
தேவாரம் பாடிய
மூவருக்கும் மூத்தவர் என்றாலும் அம்மையார் பாடல்கள் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையிலேதான்
சேர்க்கப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறைத்
தொகுப்பில் உரிய இடம் கிடைக்கவில்லை என்ற போதிலும் அம்மையார்தான்
சைவ பக்தி இலக்கிய மரபினைத் தோற்றுவித்தவர் என்பதில் எவருக்கும்
மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அம்மையார் பாடிய பாடல்கள் 143, உருவாக்கிய
இலக்கியங்கள் மூன்று என்றாலும் அவர் பாடிய நூல்கள் அனைத்துமே
தமிழிலக்கிய வரலாற்றின் முன்னோடி ஆக்கங்கள் என்பது தனிச்சிறப்பிற்குரியன.
தமிழிலக்கியப் புத்தாக்கங்களின்
முன்னோடி அம்மையார்
1. அந்தாதி என்ற
அமைப்பில் (முதல்பாடலின் இறுதியை அடுத்த பாடலின் தொடக்கமாகவைத்துப்
பாடுவது) ஒரு தனி இலக்கியத்தை முதன் முதலில் உருவாக்கியவர்.
2. கட்டளைக் கலித்துறை, வெண்பா என்ற
இரு வேறுபட்ட யாப்பு வடிவங்களைக் கையாண்டு இருபது பாடல்களால்
பாடப்படும் இரட்டை மணிமாலை என்ற சிற்றிலக்கிய வகையை உருவாக்கியவர்.
3. பத்துப்
பாடல்களைக் கொண்ட பதிகம் என்ற இலக்கிய வகையை முதன் முதலில் உருவாக்கிப் பக்தி
இலக்கிய வளர்ச்சிக்கு வழி வகுத்தவர்.
4. பதிகங்களின்
இறுதியில் பாடியவர் பெயரைப் பதிவுசெய்யும் கடைக்காப்பு முறையை முதன்முதலில்
கையாண்டு புதிய மரபினை உருவாக்கியவர்.
5. கட்டளைக்
கலித்துறை என்ற புதிய யாப்பு வடிவத்தினை முதன்முதலில் கையாண்டவர்.
6. நீதிநூல்களுக்கான
வெண்பா வடிவத்தைப் பக்தி இலக்கியங்களுக்குக் கையாண்டு வெற்றிபெற்றவர்.
அம்மையார் முதன்முதலில்
கையாண்ட கட்டளைக் கலித்துறையும், பதிக மரபும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு அளப்பரிய பங்குப் பணிகளை ஆற்றியுள்ளன
என்பதும் அதற்கான பெருமைகள் அனைத்தும் அம்மையாரையே சாரும் என்பதும்
சிறப்பாகக் கவனத்தில் கொள்ளத்தக்கன.
தலங்கள் தோறும்
சென்று பதிகம் பாடி இறைவனை வழிபடும் தேவார வழிபாட்டு முறையை அம்மையாரே
தொடங்கிவைக்கின்றார். அதுமட்டுமன்றி இறைவனை முன்னிலைப்படுத்திப் பாடும் பக்தி இலக்கிய மரபினையும் அம்மையாரே
தமிழிலக்கிய உலகுக்கு முன்னோடியாக வழங்கியுள்ளார்.
அம்மையாரின் மூத்த
திருப்பதிகங்கள்:
பதிகம் என்பது
பத்துப் பாடல்களைக் கொண்டதோர் சிற்றிலக்கிய வடிவம். பத்துப் பத்துப்
பாடல்களாகப் பாடும் மரபு பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு முதலான சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகிறது
என்றாலும். பத்துப் பாடல்களால் அமைந்ததோர்
இலக்கிய வகையைக் காரைக்கால் அம்மையாரே தொடங்கி வைக்கின்றார். அம்மையாரைப்
பின்பற்றியே பதிகம் பாடும் மரபு தேவார மரபாகப் பின்பற்றப்பட்டது.
அம்மையாரின் பதிகமே முன்னோடிப் பதிகம் என்பதனால் அதனை மூத்த
திருப்பதிகம் என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம். மூத்த திருப்பதிகத்தின்
முதல் பதிகம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். இப்பதிகம்
நட்டபாடை என்ற பண்ணில் பாடப்பட்டுள்ளது. இரண்டாம் பதிகம் அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இப்பதிகம் இந்தளம் என்ற பண்ணில் பாடப்பட்டுள்ளது.
அம்மையாரின் மூத்த திருப்பதிகம் திருவாலங்காட்டில் இறைவன் ஆடிய
திருக்கூத்தினை விரிவாக வருணிக்கின்றது. இறைவன் ஆடும்
இடம், ஆடும் முறைமை, ஆலங்காட்டுப்
பேய்களின் கூத்து மற்றும் செயல்கள் இவற்றையெல்லாம் விரிவாக
எடுத்துரைக்கும் இப்பதிகங்கள் திருக்கோயிலைப் பற்றிப் பாடாமல்
சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பேய்களோடு
இறைவன் ஆடும் ஆடலைப் பாடுவதென்பது புதுமையானதே!. அற்புதத் திருவந்தாதியில்
“சுடர் உருவில் என்பறாக் கோலத்து எரியாடும்
எம்மனார்க்கு” என்ற பகுதியில் இறைவன் ஆடும்போது
எரிசுமந்து ஆடுதலையும் எலும்பு மாலையணிந்து
ஆடுதலையும் பாடிய அம்மையார், அத்தகு திருநடனக் காட்சியை எமக்கொருநாள் காட்டுதியோ என்றும் எமக்கதுவே பேராசை
(அந்தாதி.70) என்றும் குறிப்பிடுவதோடு
ஈசனின் திருநடனத்தோடு உடனாடும் பேய்க்கணங்களில் ஒரு பேயாக நான் இருக்க
வேண்டும் (பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம் – அந்தாதி. 86) என்றும் தமது
விழைவினை வெளிப்படுத்துகின்றார்.
அம்மையார் இறைவனின்
திருவாலங்காட்டுத் திருநடனத்தை வியந்து பாடுவதாகவே தமது மூத்த திருப்பதிகத்தினை அமைத்துள்ளார் என்றாலும் இறைவனின்
திருக்கூத்தினை விவரிக்கும் போக்கில் கூத்தரங்காக உள்ள
திருவாலங்காட்டினையும் அக்காட்டில் உறையும்
பேய்மகளிரின் செயல்களையும் விவரிப்பதாகத் திருப்பதிக உள்ளடக்கத்தினை
நீட்டித்துக் கொள்கிறார்.
திருவாலங்காடு எனும் சுடுகாட்டு
வருணனையோடு பேயும் கூளியும் வாத்தியங்கள் முழக்க இறைவன் கூத்தாடும் காட்சி இதோ,
எட்டி இலவம் ஈகை சூரை காரை
படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே (பதிகம் 2:1).
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே (பதிகம் 2:1).
எட்டி மரம், இலவ மரம், இண்டஞ்செடி, காரைச்செடி
எங்கும் பரவிப் படர்ந்திருக்க பிணங்களைச்
சுட்ட ஈமச்சுடலையைச் சூழ்ந்துள்ள கள்ளிக் காட்டில் வெளிப்பட்ட குடல்களைப் பேய், நரி முதலியன
கௌவித் தின்ன, பிணங்கள் செறிந்துள்ள ஈமக்காட்டில் பறைபோன்ற கண்களை உருட்டி விழிக்கும்
பேய்கள் மத்தளம் கொட்டவும் பூதங்கள் பாடவும் இறைவன் திருநடனம்
புரிகின்றான்.
பதிகத்தில் இறைவனின் திருக்கூத்தினை விவரித்துப் பாடுவதில்
அம்மையார் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றாரோ
அதே அளவிற்கு அந்த ஈமப்புறங்காட்டின் பேய்களை வருணிப்பதிலும்
அவற்றின் செயல்களை விவரிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார். பதிகத்தின்
முதல் பாடலே பேய்மகளின் வருணனையோடுதான் தொடங்குகிறது.
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ
யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர்
வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே. (பதிகம் 1:1)
கொங்கைகள் சுருங்கி, நரம்புகள்
வெளிப்பட்டு, ஆழமான கண்களையும் வெள்ளிய
பற்களையும் குழிந்து ஆழ்ந்த வயிற்றையும் கொண்டு செம்பட்டையான
தலைமயிருடன் கோரைப்பற்கள் நீண்டிருக்க
உயர்ந்த புறங்கால்களுடன் பேய்மகள் தங்கியிருந்து அலறிட ஈமக்காட்டில்
தாழ்ந்து தொங்கும் சடையினை எட்டுத்திக்கும் செல்ல வீசித் தனது உடல் குளிர்ந்திடத் தீயின்கண் நின்றாடும் எங்கள்
தந்தையாகிய எம்பெருமானின் இடம்
திருவாலங்காடாகும்.
இம்முதல் பாடலில்
வருணிக்கப்படும் பேய்மகளின் வருணனை, பாடல்கள்தோறும்
தொடர்கின்றது. பேய்மகள் எனப்படும் அப்பேய்கள் சுடுகாட்டில்
வாழ்கின்றன. அங்குக் குழந்தைகளைப் பெற்றுக்
கொள்கின்றன. அவற்றிற்குப் பெயரும் இடுகின்றன. மனிதர்களைப்
போலவே தாய்ப் பாசத்தோடு குழந்தைக்குத் தாய்ப்பாலும் நிணமும் ஊட்டிப் பேணி
வளர்க்கின்றன. குழந்தையின் முகத்தில் உள்ள புழுதியைத் துடைக்கின்றன.
அப்பேய்க் குழந்தை தூங்கும்போது சிறிது நேரம் தாய்ப் பேய் வெளியில்
செல்கிறது. விழித்து எழுந்த குழந்தை தாயைக் காணாது அழுதுவிட்டுப் பின் உறங்குகிறது. பிள்ளைப் பேய்களை இருட் காலத்தில்
தாய்ப் பேய்கள் அன்புடன் தடவிக் கொடுக்கின்றன. அவை குறும்பு செய்யாமல்
இருப்பதற்காகக் ‘கொள்’ என்று
இசைபாடி அவற்றை அச்சுறுத்துகின்றன.
விழுது நிணத்தை விழுங்கி யிட்டு
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத்
தாவளர்த்துப்
புழுதி துடைத்து முலைகொ டுத்துப்
புழுதி துடைத்து முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா
தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே (பதிகம் 1-5)
குண்டை வயிற்றுக் குறிய
குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ்
இண்டு படர்ந்த இருள்சூழ்
மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே (பதிகம் 2-10)
திருவாலங்காட்டுப் பேய்மகளாகிய பேய்கள் மனிதர்களைப் போலவே தம்மை ஒப்பனை
செய்து கொள்வதில் நாட்டம் கொள்கின்றன. கூந்தலைக்
காய வைக்கிறது ஒரு பேய். மற்றொன்று கள்ளி மரத்தின்
கிளைகளிடையே காலை நீட்டிக்கொண்டு ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும் பேய் ஒன்று, (கள்ளிக்
கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை விள்ள
எழுதி… பதிகம் 1-2) எரிந்து
அணைந்த கொள்ளிக் கட்டையை மசிய அரைத்து
உண்டாக்கிய மையைக் கண்ணில் பளிச்சென்று தெரியும்படியாகத் தீட்டிக் கொள்கிறது.
திருவாலங்காட்டுப் பேய்களுக்கும் பலசமயங்களில் உணவுக்குத் திண்டாட்டம்
வந்துவிடுகிறது. ஈமக்காட்டில் பிணமும் நிணமும் கிடைக்காத நாட்களில்
பேய்கள் பட்டினிதான். மனிதர்கள் சுடுகாட்டில்
ஈமக்கடன் ஆற்றிவிட்டுப்போன சோற்றைக் குறுநரி ஒன்று தின்னும்
காட்சியைக் கண்ட பேய்கள், ‘அடடா! முன்பே இச்சோற்றை நாம் பார்க்காமல் போனோமே’ என்று
அங்கலாய்த்துக் கோபத்துடன் கையைத் தட்டிக் கொண்டு
வட்டமாகச் சூழ்ந்து இசை கூட்டித் துணங்கைக் கூத்தினை ஆடுகின்றன.
குண்டில்ஓ மக்குழிச் சோற்றை
வாங்கிக்
குறுநரி தின்ன அதனை முன்னே
கண்டிலோம் என்று கனன்று பேய்கள்
கண்டிலோம் என்று கனன்று பேய்கள்
கையடித் தொ டிடு காட ரங்கா
மண்டலம் நின்றங் குளாளம் இட்டு. . . (பதிகம் 1-4)
மண்டலம் நின்றங் குளாளம் இட்டு. . . (பதிகம் 1-4)
இவ்வகைப் பேய்களைக் கண்டு
மனிதர்கள் அஞ்சுவது ஒருபுறமிருக்க, பேய்கள்
உயிருள்ள மனிதர்களைக் கண்டு அஞ்சுவதாக அம்மையார் படைக்கின்றார்.
செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப்
பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோட (பதிகம்
2-4)
இறந்து கிடக்கும்
ஒரு பிணத்தைப் பிணம் என்று அறியாமல் உயிருள்ள மனிதன் என்று பிறழ உணர்ந்த பேயொன்று அதன் அருகிற் சென்று தனது
சுட்டுவிரலைக் காட்டி, உரக்கக் கத்தி, உறுமி, கொள்ளி ஒன்றை
எடுத்து வீசி அப்பாற் செல்ல, அதனைத் தொடர்ந்து மற்றைப் பேய்களும் அந்தப் பிணத்தைக் கண்டு அஞ்சித்
தங்கள் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு
அவ்விடத்தைவிட்டு ஓடுகின்றன.
அம்மையாரின் மூத்த திருப்பதிகம் விவரிக்கின்ற பேய்கள்
என்றழைக்கப்படும் பேய்மகளிரின் செயல்களில்
பல, பழைய சங்க இலக்கியப்
பேய்மகளிரின் செயல்களை ஒத்திருந்தாலும் பல புதிய
விவரணையும் நுணுக்கமான மனஉணர்வுகளும் கொண்டனவாக இப்பேய்கள் இருப்பன
கண்கூடு. தாய்ப்பாசம் மிக்க பேய்களையும், குழந்தைப்
பேய்களையும், தம்மைப் புனைந்து கொள்ளும்
பேய்களையும், சோற்றுக்குத் திண்டாடி
அல்லாடும் பேய்களையும் மனிதர்களைக் கண்டு அஞ்சி நடுங்கும்
பேய்களையும் அம்மையாரின் பதிகத்தில்தான் நாம்
முதன்முதலாகப் பார்க்கிறோம்.
பக்தி இலக்கியம்
என்பதோர் புத்திலக்கிய வகையைத் தொடங்கிவைத்து இறைவனின் பெருமைகளை
முன்னிலைப்படுத்திப் பதிகம் பாடும் புதிய மரபை உருவாக்கும் அம்மையார்
பேய்கள் குறித்து இவ்வளவு விரிவாக விவரித்துப் பாட நேர்ந்தது ஏன்? அம்மையார்
தம்மைக் ‘காரைக்கால் பேய்’ என்று
விளித்துக் கொண்டமைக்கும் இறையடியார்
கூட்டத்தில் ‘பேயார்’ என்று அவர்
அடையாளம் காட்டப்பட்டமைக்கும் அவரின்
பதிகத்தில் விவரிக்கப்படும் பேய்களுக்குமான தொடர்பு யாது? என்பன போன்ற வினாக்களுக்கு விடைகாண முற்படுவது அவசியம்.
அம்மையாரின் வரலாற்றைப் பெரிய புராணம், காரைக்கால்
தலபுராணம், பிரமாண்ட புராணம் முதலான புராணங்கள் எடுத்துரைக்கின்றன. இவற்றில் பெரிய
புராணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு அடியவர்களின்
கதையை வரலாற்றுக்கு நெருக்கமாகப் புனைந்துரைப்பதில்
சேக்கிழாரே முதன்மையானவர் என்பதால் அவர்கூறும்
அம்மையாரின் வரலாற்றிலிருந்து தொடங்கலாம்.
புனிதவதி என்ற
அம்மையார் அடியவருக்கு அமுதளித்துவிட்ட மாங்கனி தொடர்பான சிக்கலில் இறைவனின் அருளால் இரண்டுமுறை மாங்கனி பெற்ற
அதிசயத்தைக் கண்டு வியந்து அஞ்சிய
அவளின் கணவன் அவரைவிட்டு நீங்கி வேறோர் நகரில் புதிய இல்லறம் அமைத்து
வாழ்ந்து வந்தான். இதனைக் கேள்விப்பட்டு சுற்றத்தாரோடு கணவனைக் காணச்சென்ற அம்மையாரின் காலில் வீழ்ந்து வணங்கி, ‘இவள் தெய்வம்
இவரை எல்லோரும் வணங்குங்கள்’ என
வேண்டினான் அவர் கணவன். கணவன் தம்மை வணங்கித் தொழும்
நிலையில், ‘இனி அவருக்குப் பயன்படாத
இவ்வுடல் வனப்பை நீக்கிப் பேயுரு தருக’ என இறைவனை
வேண்டிப் பேயுரு பெற்றார் அம்மையார்.
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது
இனி இவனுக்கு ஆகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப்
பொதி கழித்து இங்கு உன்பால்
ஆங்கு நின் தாள்கள் போற்றும்
பேய் வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர்
தாள் பரவி நின்றார் (பெ.பு. 1765)
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார்
அருளினாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே
பெறுவார் மெய்யில்
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி
எற்பு உடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம்
வணங்கும் பேய் வடிவம் ஆனார் (பெ.பு. 1766)
மேற்காட்டிய பெரியபுராணப் பாடலில் அம்மையார், ‘பேய்வடிவு
அடியேனுக்குப் பாங்குற வேண்டும்’ என்று
இறைவனிடம் கேட்க, இறைவன், மெய்யில்
ஊன்அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக, பேய் வடிவம்
தந்தார் எனச் சேக்கிழார் எழுதுகின்றார்.
ஆக, அம்மையார்
பெற்ற பேய்வடிவம் என்பது எலும்புரு கொண்ட ஊன் கழிந்த வடிவம். இவ்வடிவமே
அம்மையார் விரும்பிக்கேட்ட பேய்வடிவம் போலும். இக்கோலமே அம்மையாரின்
நிலைத்த கோலம் ஆனதுபோல் பேய் என்ற பெயரே அம்மையாரின் நிலைத்த பெயரும்
ஆயிற்று. அம்மையாரே தமது பாடல்களில் தம்மைக் காரைக்கால் பேய் என்று அடையாளப் படுத்துகின்றார். சுந்தரரும் ‘பேயார்’ என்றே
நாயன்மார்கள் வரிசையில் அம்மையாரை இணைக்கின்றார்.
அம்மையார் கொண்ட
பேயுருவமும் அவர் பாடிய பேய்க்கணங்களும் வேறு வேறானவை என்பது பலரது துணிபு. ஆனால் தமது மூத்த திருப்பதிகத்தின் இரண்டு
கடைக்காப்புப் பாடல்களிலும் தம்மைக் காரைக்கால் பேய் என்று
குறிப்பிடும் இடத்தில் தமது உருவம்
குறித்து சில வருணனைகளை முன்வைக்கின்றார். அவற்றைக் காண்போம்:
செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும்
வல்லார் (பதிகம் 1-11)
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே (பதிகம் 2-11).
மேற்காட்டிய முதல் கடைக்காப்பில் செடிதலை காரைக்கால் பேய்
என்கிறார். செடிதலை என்பது புதர்போல்
மண்டிக்கிடக்கும் ஒழுங்குபடுத்தப்படாத கூந்தலையுடைய என்ற பொருள்தரும்.
இரண்டாம் கடைக்காப்பில் வரும் காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக்கால் பேய் என்பது ஈமக்காட்டில் வசிக்கும்
நெருப்பை உமிழக்கூடிய வாயும் கோரைப்பற்களும் கொண்ட
காரைக்கால் பேய் என்ற பொருளைத் தரும். அம்மையாரின்
வடிவமோ, எலும்புரு கொண்ட ஊன் கழிந்த
வடிவம். பிறகு ஏன் தம்மை அம்மையார் ஈமக்காட்டுப்
பேய்களில் ஒருத்தியாக வருணித்துக் கொண்டார் என்பது சிந்திக்கத்தக்கது.
அம்மையாரின் பேய் குறித்த புனைவுகள் மற்றும் அடையாளங்களை நேரிய
முறையில் விளங்கிக்கொள்ள நமக்குத் துணைபுரிவன அம்மையார்
வாழ்ந்த காலச்சூழல் குறித்த புரிதல்களே!
தமிழ்ச்சூழலில் சங்ககாலம் என்பது சமய நிறுவனங்கள் தோன்றாத காலமாகும்.
களப்பிரர்களின் காலத்தில் வடநாட்டில் தோன்றிய சைவ சமயத்தின் ஒரு பிரிவாகிய லகுளீச பாசுபதம் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப்
பரவத் தொடங்கி யிருந்தது. இந்த லகுளீச பாசுபதத்தினைத்
தோற்றுவித்தவர் லகுளீசர், இவர் குஜராத்
மாநிலம் காரோஹணம் என்ற ஊரைச் சார்ந்தவர். இவர் காலம் கி.பி. இரண்டாம்
நூற்றாண்டு. லகுளீசரே லிங்க வழிபாட்டினைப் புதுப்பித்தவராவார். லகுளீச பாசுபத சமயத்தை லகுளீசரின் பிறந்த ஊரான
காரோஹணம் என்ற பெயராலும் குறிப்பிடுவது வழக்கம்.
தமிழகத்தில் பக்தி இயக்கத்தின் தொடக்க நூற்றாண்டுகளில்
லகுளீச பாசுபத சைவ சமயம் தமிழகத்தின் மூன்று பகுதிகளில் நிலைபெற்றிருந்தது.
அவை 1. நாகைக் காரோஹணம், 2. குடந்தைக்
காரோஹணம், 3. கச்சிக் காரோஹணம் என்பனவாகும்.
சமண, பௌத்த நிறுவனமயப்பட்ட
சமயங்களுக்கு எதிராகப் பக்தி இயக்கத்தைக் கட்டுவதற்கு லகுளீச
பாசுபதம் மற்றும் அதன் உட்பிரிவுகளாகிய காபாலிகம், காளாமுகம்
போன்ற நிறுவனமயப்பட்ட சைவ சமயமே அப்பருக்கும்
சம்பந்தருக்கும் துணைநின்றது என்பதனை ஆ.பத்மாவதி அவர்கள் தமது சைவத்தின் தோற்றம் என்ற நூலில் விரிவாக
எடுத்துரைக்கின்றார் (பக். 59-69).
அப்பர், சம்பந்தருக்கு
ஓரிரு நூற்றாண்டுகள் முன்தோன்றிய அம்மையாருக்கு லகுளீச பாசுபதம்
நாகைக் காரோஹணத்திற்கு அருகில் உள்ள காரைக்காலில் வசித்ததால் நன்கு
அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். அது மட்டுமன்றிப் பேயுரு என்று அம்மையார் குறிப்பிடும் வனப்பிழந்த என்புருவான
நிலையிலிருந்த அம்மையார் அத்தருணத்தில் லகுளீச
பாசுபதத்தினை முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கவும் வாய்ப்புகள்
உண்டு (சிதம்பரம் மயில்வாகனம் (தொ.ஆ.), காரைக்கால்
அம்மையார், ப.126). ஏனெனில் பாசுபதச்
சைவ சமயத்தினரே இறைவன் ஈசனை ஈமக்காட்டோடும் அவரின்
பேய்க் கணங்களோடும் வழிபடும் போக்கினர் என்பதனைக் கவனத்தில் கொண்டால்
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் ஈமக்காட்டு வருணனைகளுக்கும்
பேய்மகள் வருணனைகளுக்கும் உரிய காரணம் எளிதில் புலப்படும்.
தமிழிலக்கிய மரபில் பேய்மகளிர் என்ற புலனெறி வழக்கு அம்மையாருக்கு
முந்தைய இலக்கியங்களில் பரவலாகப் பயின்று வந்துள்ளமையை நன்கு
அறிந்த அம்மையார் தாம் ஏற்றுக் கொண்ட லகுளீச பாசுபத
சைவத் தத்துவங்களின் அடிப்படையில் தமது பக்தி இலக்கியங்களைப்
படைப்பதற்கு மிகவும் ஏந்தாக பேய்மகளிர் தொடர்பான புலனெறி இலக்கிய
வழக்கினைப் பயன்படுத்திக் கொண்டார்.
புலனெறி வழக்காகப்
புனைந்துரைக்கப்பட்ட பேய்மகள் என்ற கருத்தாக்கம் தொடர்ச்சியாகச் சங்க இலக்கியங்களில் பெரிதும் போர்க்களங்களுக்குரிய
புனைவாகவே புனையப்பட்டு வந்தது. முத்தொள்ளாயிரம் போன்ற
நூல்களிலும் இதன் தொடர்ச்சியை நாம்
காணமுடியும்:
உடை தலையும் மூளையும்
ஊன்தடியும் என்பும்
குடருங் கொடுங்குருதி யீர்ப்ப - மிடைபேய்
பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி (முத். 37).
குடருங் கொடுங்குருதி யீர்ப்ப - மிடைபேய்
பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி (முத். 37).
போர்க்களத்திலும் இடுகாடு சுடுகாடுகளிலும் உலவிக் கொண்டிருந்த
பேய்மகளைச் சிவபெருமான் திருக்கூத்தாடும்
ஈமக்காட்டிற்கு அழைத்து வந்தவர் அம்மையாரே.
அம்மையார் தொடங்கிவைத்த
பேய்குறித்த விவரணைகளின் தொடர்ச்சியாகப் பேய்மகள் என்ற புலனெறி
வழக்கின் அடிப்படையில் உருவானதோர் புத்திலக்கியம்தான் பரணி என்ற சிற்றிலக்கியம்.
III
பரணி என்பது போரில் ஆயிரம்
யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய வகை ஆகும்.
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி (இலக்கண விளக்கப் பாட்டியல்)
மான வனுக்கு வகுப்பது பரணி (இலக்கண விளக்கப் பாட்டியல்)
போரிலிருந்து மீண்ட தலைமகன்பால் புலவியுற்ற தலைமகளது ஊடலைத்
தீர்க்கப் புலவர்கள் வாயிலாவதும், புலவியாற்றிய
பின்னர், தலைவன் சென்ற காட்டின்
கொடுமையையும் தலைவனின் வீரத்தையும், அக்காட்டிலுள்ள
பேய்கள் காளிக்குச் சொல்லுவதையும், காளி
பேய்களுக்கு உரைப்பதையும் எடுத்துச்சொல்லும் வகையிலும் பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு சமைத்து உண்டு மகிழ்ந்து
ஆடிப்பாடிக் களித்துப் போரில் வென்ற மன்னரைப் புகழும்
புகழ்ச்சியைக் கூறுவதாகவும் காளிக்குக் கூளிகள்
கூறுவதாகவும் பரணி பாடப்படும். கொற்றவைக்கு உரிய நாள் பரணி நட்சத்திரம்
ஆகும். கொற்றவைக்குரிய பரணி நாளில் அத்தெய்வத்திற்குக் கூழ் சமைத்துக்
கொண்டாடப்படும் போர் வெற்றி விழாவின் சிறப்பினைக் கூறும் இலக்கிய வகையே பரணி ஆகும்.
தமிழில் முதன்
முதலில் எழுந்த பரணி நூல் கலிங்கத்துப் பரணியே ஆகும். இதுவே பிற்காலப்
பரணி நூல்களுக்கு வழிகாட்டியாய் அமைந்த நூலாகும். இது கலித் தாழிசையாற்
பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. கலிங்கத்துப்
பரணியின் காலம் பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி.
பரணி இலக்கியங்கள்
போர் இலக்கியங்கள், போரில் வெற்றி பெற்ற மன்னரின் வீரத்தையும், போரில்
தோல்வியுற்ற மன்னர்களின் அழிவையும் பாடும் நூல் என்றாலும்
போரின் வெற்றி – தோல்வி, ஆக்கம் – அழிவு என்ற
எதிர்மறைகளைப் புனைவதற்குக் கவிஞர்களுக்குத் துணைபுரிவது பேய்மகள்
அல்லது பேய்கள் குறித்த புனைவியல் மரபே. இங்கே பரணி
இலக்கியத்தை வழிநடத்திச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பை
ஏற்பன பேய்களே!. பேய்கள் போர்க்கள வெற்றியை – அழிவைக்
காளிக்குச் சொல்லும் விதத்திலேயே பரணி இலக்கியம்
கட்டமைக்கப்படுகிறது.
பரணி இலக்கியத்தில் இடம்பெறும்
பேய் பாடியது என்ற பகுதி பேய்களின் வகைகள் மற்றும் பேய்களின் கொடூர வடிவழகை
வருணிக்கும் பகுதி.
அட்டம் இட்டநெ டுங்கழை
காணில்என்
அன்னை! அன்னை என்றாலுங் குழவிய
ஒட்ட ஒட்டகங் காணில் என்
பிள்ளையை
ஒக்கும் ஒக்கும் என்று ஒக்கலை
கொள்வன (க. பரணி, பேய் பாடியது. 10).
அம்மையார் பதிகத்தில்
பாடிய தாய்ப் பேய், குட்டிப் பேய் வருணனையின்
தொடர்ச்சிபோல் ஜெயங்கொண்டார் இங்கே தாய்ப்பேயைக் காணாது அழும்
குட்டிப் பேய்களையும், தன் குட்டிப்
பேயைத் தேடிப்பிடித்து இடுப்பில் வைத்துப் பேணும் தாய்ப் பேயையும் வருணிக்கின்றார்.
அடுத்துவரும் இந்திரசாலம் முதுபேய் ஒன்றின் இந்திரஜால மாயத்
தோற்றங்களை வருணிக்கும் பகுதியாகும். தொடர்ந்து
இடம்பெறும் பேய் முறைப்பாடு காளியிடம் பேய்கள், ‘பசியில்
வாடும் எங்களை யார் காப்பார்?’ என முறையிடுவதையும் பேய்களின் பசிக் கொடுமைகளையும் விவரிக்கும் பகுதியாகும்.
காளிக்குக் கூளி கூறியது என்ற பகுதி போருக்கான சூழலை
விவரிக்கும் பகுதியாகும்.
போர் பாடியதை
அடுத்து இடம்பெறும் களம் பாடியது என்ற பகுதி பரணி இலக்கியத்தின் முத்தாய்ப்பான பகுதியாகும். இப்பகுதியில் போரைப்
பற்றிச் சொல்லி முடித்த பேய், காளியைப்
போர்க்களம் காணுமாறு அழைக்க காளி வந்து களத்தைக் கண்டு அக்காட்சிகளைத்
தமது பரிவாரங்களுக்குக் காட்டுமாறு அமைந்துள்ளது. காட்சிகளைக்
காட்டிய பின், நீராடிக் கூழட்டு உண்ணுமாறு
தமது பரிவாரப் பேய்களைப் பணிக்கிறாள் காளி. அங்ஙனமே பேய்கள் பல்
துலக்கி, நீராடி, கூழ் சமைத்து உண்ணும் இயல்பு இப்பகுதியில் கூறப்படுகிறது.
பேய்கள் பாடும் வள்ளைப் பாட்டில் போர் நிகழ்த்திய மன்னனின் புகழ்
பாடப்படுகிறது.
முழுக்க முழுக்கப்
பேய்கள் குறித்த புனைவியலின் அடிப்படையில் உருவான இவ்வகைப் பரணி இலக்கியங்களுக்கு வழியமைத்துக் கொடுத்தவர் காரைக்கால்
அம்மையாரே. கட்டுரையின் இரண்டாம் பகுதியில் குறிப்பிட்ட செய்தியை
இங்கே மீண்டும் நினைவுகூர்வது பொருத்தமாயிருக்கும் எனக் கருதுகிறேன்.
அம்மையாரின் மூத்த திருப்பதிகம் விவரிக்கின்ற பேய்கள்
என்றழைக்கப்படும் பேய்மகளிரின் செயல்களில்
பல பழைய சங்க இலக்கியப் பேய்மகளிரின் செயல்களை ஒத்திருந்தாலும் பல புதிய விவரணையும் நுணுக்கமான மனஉணர்வுகளும்
கொண்டனவாக இப்பேய்கள் இருப்பன கண்கூடு. தாய்ப்பாசம்
மிக்க பேய்களையும், குழந்தைப் பேய்களையும், தம்மைப்
புனைந்து கொள்ளும் பேய்களையும், சோற்றுக்குத் திண்டாடி
அல்லாடும் பேய்களையும் மனிதர்களைக் கண்டு அஞ்சி நடுங்கும் பேய்களையும்
அம்மையாரின் பதிகத்தில்தான் நாம் முதன்முதலாகப் பார்க்கிறோம்.
அம்மையார் தொடங்கி
வைத்த பாதையில்தான் பரணி இலக்கியத்தில் பேய்கள் சித்திரிக்கப் படுகின்றன. பரணியின் இறுதிப் பகுதியாகவரும் கூழ்அடும்
பகுதிகள் ஜெயங்கொண்டார் போன்ற பரணி ஆசிரியர்களின் உச்சகட்டக்
கற்பனையாக இருப்பினும் இவ்வகைக் கூழ்அடுதலின்
தொடக்கத்தைப் புறநானூறு (372), முத்தொள்ளாயிரம் (37) முதலான பழைய
இலக்கியங்களில் காணமுடியும்.
பாண்டியன் தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன் பகைவரை வென்று போர்க்களத்தைத் தனதாகக்கொண்டு அவ்விடத்தே களவேள்வி செய்தான். அப்போது
பகைவருடைய வெட்டுண்ட தலைகளை அடுப்பாக வைத்துக்
கூவிளங் கட்டையை விறகாக இட்டு மண்டையோட்டை அகப்பையாகவும்
வன்னிக்கொம்பை அதிற் செருகிய கொம்பாகவும் கொண்ட அகப்பையைக் கொண்டு, உலையிற்
பெய்த ஊனும் நிணமும் குடரும் பொங்க, வேண்மாள்
கூழாக்க, அதனை வாலுவன் என்ற சமையல்காரன்
தேவர்க்குக் காட்டிக் கலயத்திற் பெய்த நீரை யாவர்க்கும் தெளி்த்து மறக்கள
வேள்வி செய்தான் என்ற செய்தியினை
மறக்கள வேள்வி என்ற துறைப்பாடலாக மாங்குடிக்கிழார் பதிவு
செய்கின்றார்:
பொருந்தாத் தெவ்வர் அருந்தலை
அடுப்பில்
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்க
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறு பிண்டம் வாலுவன் ஏந்த (புறம்.372).
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறு பிண்டம் வாலுவன் ஏந்த (புறம்.372).
மறக்கள வேள்வியில்
ஈனா வேண்மாளைக் கொண்டு சடங்காக நிகழ்த்தப்பெற்ற கொற்றவைக்கான படையலை
அம்மையார் தமது மூத்த திருப்பதிகத்தில் அடையாளங் காட்டி உலவவிட்ட பேய்கள், சமைத்து
உண்பதாகப் பரணி ஆசிரியர்கள் மிக விரிந்த தளத்தில் புலனெறியாக
ஆக்கிக் கொண்டார்கள். பரணி ஆசிரியர்கள் கற்பனையில் உலவவிட்ட பேய்க்
கூட்டங்கள் அனைத்திற்கும் அம்மையாரின் பேய்மகள் குறித்த புனைவுகளே கடைக்கால்கள் என்பதனை அம்மையாரின் பதிகத்தினையும்
பரணி நூல்களையும் கற்றறிந்தோர் எளிதில் உணர்வர்.
துணைநின்ற நூல்கள் :
- இரா.கலைமணி சிவா, காரைக்கால் அம்மையார் வாழ்வும் வாக்கும்,புதுச்சேரி, 2 001.
- சிதம்பரம் மயில்வாகனன் (தொ.ஆ.), காரைக்கால் அம்மையார், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.
- பக்தவச்சல பாரதி (பதி.ஆ), பண்டைத்தமிழர் சமயமரபுகள், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, 2011.
- ஆ.பத்மாவதி, சைவத்தின் தோற்றம், குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை, 2002.
- ஆ.முத்துசிவன் (உ.ஆ.), கலிங்கத்துப் பரணி, புக்ஸ் (இந்தியா) பிரைவேட் லிட், சென்னை, 1958.
- முனைவர் நா.இளங்கோ, தமிழ்த்துறைத்
தலைவர், அவ்வையார் அரசு மகளிர்
கலைக்கல்லூரி, காரைக்கால்
No comments:
Post a Comment