Wednesday, March 23, 2016

பெண் விடுதலையும் குடும்பமும்...




மனித சமுதாய வரலாற்றில், சமயம், பண்பாடு, அரசியல் முதலிய காரணங்களால், செயல்படுத்தப்பட்டு வந்துள்ள பல கருத்தாக்கங்களை, இன்றைய சமூகச் சிந்தனைகள் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. மனித இனத்தில் சாதியின் அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் ஆதிக்கச் சமூகத்தினரால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும், புனையப்பட்ட கருத்தமைவுகளையும் புரிந்து கொள்வதற்கு இன்றைய புதிய சிந்தனைகள் அடித்தளமாய் அமைந்துள்ளன. இப்புதிய சிந்தனைகள் வழிப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றே பெண்ணியமாகும். பெண்களுக்குச் சமூகத்தில் உரிய இடம் மறுக்கப்பட்டதை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண் - பெண் இருப்பு சமூகத்தில் எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்பதே பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. இந்தச் சமுதாயம் ஆணை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது? பெண் எங்கு தடை செய்யப்படுகின்றாள்? எங்கு அவள் உரிமை மறுக்கப் படுகிறது? அவளுடைய சுதந்திரம் பறி போகிறது? என்ற கேள்விகளுக்குப் பதில் ஒரு ஆணை மையமாகக் கொண்டே கூற முடிகின்றது. ஏனென்றால் பெண் என்பவள் பல நூற்றாண்டுகளாக ஆணின் பார்வையிலேயே சித்தரிக்கப்பட்டவள்.
தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் பெண்களை, தங்களின் இருப்பை, ஆளுமையை, உணர்ந்தவளாக ஆக்கியிருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு பெண்ணும் தனது ஆளுமையை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைத் தொடரவே செய்கின்றது. அதனால் அவள் தன் இருப்பைத் தீவிரமாக உணர்த்த முயலுகின்றாள.; மாறி வரும் இந்நிலையை ஆண்களும் அறியத் தொடங்கியுள்ளனர். நடைமுறை வாழ்க்கையில் இவ்வறிதல் பெண் விடுதலை பற்றிய உணர்வாகச் சமூக எழுச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. எந்த அழுத்தமும் காலத்தால் விடுபட்டு வெளியேறுவதைப் போல், சமூக மாற்றங்களும், சமுதாய சீர்த்திருத்த இயக்கங்களும், புரட்சியாளர்களும் முன் வைத்த அறைகூவல்கள் பெண்ணுலகை விழித்தெழச் செய்துள்ளன.
பெண் விடுதலை
நிலப்பிரபுத்துவ சமுதாயம் முதல் குறிப்பிட்ட காலகட்டம் வரை மனித இன மறு உற்பத்திக்குள் மட்டும் வரையறுக்கப்பட்டப் பெண், பின்னர் கூடுதலாக புதிய தொழில் மய சமுதாயத்தில் பொருள் உற்பத்தியிலும், மேற்கத்திய கலாச்சாரம் இவற்றின் தாக்கத்தால் பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் முத்திரையை பதிக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக பெண்கள் தங்கள் இருப்பினை உணரத் தொடங்கினர். இந்நிலையில் தாங்கள் அடிமைப்பட்டிருப்பதற்கான காரணங்களையும், தீர்வுகளையும், வழி முறைகளையும் யோசித்த நேரத்தில் பெண் விடுதலை சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. பெண்ணடிமை என்பது சமூகத்தில் பெண்களின் இருப்பைக் குறிக்கும். பெண் விடுதலை என்பது பெண்கள் வாழ்வின் இறுதி நோக்கம். பெண் உரிமை என்பது விடுதலை அடைவதற்கான வழிமுறையாகும். பெண் தனக்கான உரிமையை உணர்ந்து அதன்படிச் செயல்படத் தொடங்கும் போது அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுச் சுதந்திர வாழ்வு மேற்கொள்ள முடியும் என்ற சிந்தனையை உணரத் தொடங்கியுள்ளனர்.
“பெண் விடுதலை என்பது, பெண் கல்வி, பணி வாய்ப்பு முதலானவற்றில் சம உரிமை பெற வேண்டும் என்பது கருத்தில் கொள்ளப்படுகின்றன. குடும்ப, சமூக, தொழில் நிறுவனங்களில் பெண் அடக்குமுறையை அறிந்து, தளைகளிலிருந்து மீட்சி பெறுவதை இச்சொல் அர்த்தப்படுத்துகிறது”1 என்கிறார் அரங்க மல்லிகா. மேலும், “பெண் விடுதலை கோட்பாட்டிற்கு, ஆணுக்கு இருக்கும் அதே சமூக, பொருளாதார, உரிமைகளைப் பெண்ணும் அனுபவிப்பதற்குரிய சுதந்திரம்”2 என்று கமலி சுட்டிக் காட்டியுள்ளார்.
பெண் விடுதலை குறித்து எழுந்த சீர்த்திருத்த இயக்கங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் குறிப்படத்தக்கது. இது பெண் என்பவள், ஆணின் போகப்பொருள் என்பதை மறுத்து, ஆணின் பாதி என்பதை மாற்றி, பெண்ணினம் தன்னை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவி புரிந்தது. பெண்கள் மீதான மரபு ரீதியிலான கருத்தாக்கங்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது பற்றியும், அதிலிருந்து விடுபடும் விடுதலைப்பற்றிய விழிப்புணர்வையும் பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை பெண் விடுதலைச் சிந்தனைகளை முன் வைத்து எழுந்த புரட்சியின் மூலம் உணரலாம். பெண் விடுதலைச் சிந்தனைக்குக் காரணமாக இருந்தவர்கள் இந்திய மரபையும், இந்து மதத்தையும், வேதங்களையும், சாதியத்தையும்,பார்ப்பணியத்தையும் கேள்விக்குள்ளாக்கிய பெரியார், ஜோதிபாபூலே முதலானோர் கற்பு,குடும்பம் முதலான கருத்தாக்கங்களை முதன் முதலாகக் கேள்விக்குட்படுத்தி பெண் விடுதலைக்கு வித்திட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்..
பெண் விடுதலைக்கானத் – தடைக்கற்கள் இன்றைய சமூக அமைப்பில் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு முதன்மையாகப் பயன்படுவது குடும்பம் என்ற அமைப்பு எனப் பெண்ணியவாதிகள் நம்புகின்றனர். குடும்பம் என்பது ஒரு அதிகார உறவுகளின் படிநிலை கொண்ட (தலைவன், தலைவி, குழந்தைகள்) ஆணாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு அமைப்பு முறையாகும். காலம் காலமாகக் குடும்பச் சூழலில் ;சிக்கி வீட்டு வேலைகளில் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும், அதிலிருந்து விடுபட முடியாதபடி பொருளாதார உரிமையின்மை, பெற்றோரைச் சார்ந்து வாழும் படி கட்டமைக்கப்படும் சமூக ஒழுக்கம், பெண்கள் தன்னெழுச்சி பெறுவதை அனுமதிக்காத சாதிய குடும்ப அமைப்பு முதலியவற்றின் காரணமாக, பெண்ணின் சுய அறிவும், இயல்பும் சுதந்திரமானதோர் ஆளுமை பெற்று விடாவண்ணம், கணவனும், புகுந்த இடமும் அடக்குகின்றன. ‘குடும்பம் என்பது விலங்கு. அடிமை நிலையை மட்டுமன்று நிலவுடைமையின் அடிமைத்தளத்தையும், உள்ளடக்கியது. அத்தோடு சமூகத்திலும், அரசியலிலும் பின்னர் ஏற்படப் போகும் பகைமை அனைத்தையும் உள்ளடக்கிய சிறுவடிவம் குடும்பமே’3 என்று காரல் மார்க்ஸின் மேற்கோளைக் சுட்டிக் காட்டி பெண் விடுதலைக்கு குடும்பம் என்ற நிறுவனமே தடையாக இருப்பதாக வாதிடுகின்றார் செ. கணேசலிங்கன்.
பெண் விடுதலைக்குத் தடைக்கல்லாக இருப்பவை ‘குடும்பம்’ என்ற நிறுவனமே எனப் பொதுவாகச் சுட்டப்பட்டாலும், அந்நிறுவனத்தில் காணப்படும் திருமணம் என்ற உறவே அடிப்படைத் தடை என்பர் பெண்ணியலாளர்கள். இதையே, ஜான் ஸ்டூவர்ட் மில் தன் பெண்ணடிமை என்ற நூலில் ‘திருமணம் என்ற நிறுவனம் பெண்ணுக்கு மிகப் பாதகமானது. பெண்ணடிமைத்தனத்திற்கு இத்திருமணமே காரணமாக உள்ளது என்;;;றும் இவற்றைப் போக்கினாலொழிய பெண் விடுதலைக்கு வழியில்லை’ 4என்று குரல் எழுப்பியுள்ளார்.
மேலும் திருமணம் என்ற அமைப்பிற்குள் (வந்த பின்) அவளின் பங்களிப்பு (அ) கடமைகள், குடும்ப அமைப்பு, சொத்து முறைகள். உறவு போன்ற இவை எல்லாம் (வழிவியாக வந்த) மரபு, சட்டம் ஆகியவற்றால் ஆளப்படுகின்றன. குடும்பத்திற்குள்ளேயே அவளின் பாலின வேறுபாடு ளுநஒ னுளைஉசiஅiயெவழைn) காரணமாக எழும் பணி வேறுபாடுகள், வரையறைகள், வௌ;வேறு நிலைகளன்களுக்கு அவள் கோரும் உரிமைகள், விடுதலை, மதிப்பு போன்றவை சமூக விதிமுறைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வாறாக, பெண் என்பவளின் விடுதலைக்குத் தடைக்கல்லாகக் காணப்படுவது குடும்பம் என்னும் நிறுவனமே என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தடைக்கல்லில் இருந்து விடுதலை அடைவதற்கான வழிமுறையையும் ஆராய முனைந்துள்ளனர்.
விடுதலை அடைய ஆண் - பெண் என்ற பாலின வேறுபாடே, பெண் உடல் உழைப்பு மற்றும் அறிவுத் தலைமையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதற்குக் காரணமாக ஆணாதிக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆணாதிக்கம் கட்டமைப்பே குடும்பம் என்ற நிறுவனத்தில் அடித்தளமாக அமைந்துள்ளது. குடும்பம் என்ற நிறுவனத்திலிருந்து பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதை பல சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை கற்பு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் வீட்டுக்குள் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஆண்களின் மேலாதிக்கம் ஒழிக்கப்பட்டு குடும்ப அளவில் இருபாலினரும் சம அந்தஸ்து பெற்றால், பிற சமுதாயத்திலும் அ.ஃது மாற்றத்தையே விளைவிக்கும். வீட்டிற்குள் ஒரு பெண் பெறும் விடுதலையே பெண் விடுதலையின் தொடக்கமாக அமையும்5 என்கிறார் நிர்மலா ராணி.
பெண் விடுதலை குறித்து பெரியார் ஆண்மை அழியாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்று கூறிய பெரியார், பிள்ளைப் பெறுகின்ற பொறுப்பைச் சுமப்பதாலேயே நடைமுறையில் பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க நேர்கிறது என்றார். எனவே கர்ப்ப வாசலை அடையுங்கள் என அவர் பெண்களிடம் கூறினார்.மேலும் விவகாரத்துச் சட்டம் பெண்கள் சமூகத்திற்கு ஒரு இன்றியமையாத பாதுகாப்புக் கருவி என்றும் எடுத்துரைத்துள்ளார். பெண்கள் சாதி சடங்குகளைத் தாண்டி நிற்க வேண்டும் என்றும், அப்படி நின்றாலே விடுதலை சாத்தியமாகும் என்றும் எடுத்துரைத்துள்ளார். மொத்த சமூக அமைப்பும் அடிமைப்படுத்துவதைச் சுட்டிக்காட்டும் பெரியார், ‘இருக்கின்ற சமூக அமைப்பு ஒத்து வராத போது, வாழ்நாள் முழுவதும் அதில் அடங்கி இருந்து அடிமை வாழ்வு வாழத் தேவையில்லை, ஒத்து வராத அமைப்பைத் தூக்கி எறிந்து விட்டு நமக்கு ஒத்து வரும் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்’6 என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலை நாடுகளில் பெண் விடுதலைக் கொள்கையின் அடையாளங்களாக விளங்கிய, ‘ஆண் துணை மறுத்துப் பெண் வாழுதல், மண விலக்கு, கருக்கலைப்பு செய்து கொள்ளுதல் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதா? மறுப்பதா?’ என இந்தியப் பெண்களின் மனதில் ஏற்பட்ட தடுமாற்றத்தையும், அவை குறித்து எழுந்த விவாதங்களையும், பெண்ணியச் சிந்தனையாளர்கள் முன் வைத்துள்ளனர். பெண் விடுதலையானது, குடும்பம்,சமூகம் முதலிய நிறுவனங்கள் பெண்களின் சுயத்தை அடிமைப்படுத்தும் போது, அதிலிருந்து வெளியேறுவதனால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இக் கொள்கையின் அடிப்படையில் உருவான பெண்ணியக் கொள்கையானது தீவிரவாதப் பெண்ணியச் சிந்தனையை முன் வைத்துள்ளது. ஆனாலும் தமிழ்ப் பண்பாட்டில் இப் பெண்ணியக் கொள்கைக்குப் பலவிதமான எதிர்ப்புகள் தோன்றியுள்ளன. தமிழ்க் கலாச்சாரத்தை முன் வைத்து பெண் விடுதலை பற்றிய சிந்தனைகள் பரவத் தொடங்கின.
‘விடுதலை என்பது சுயமானது. யாரும் யாரிடமிருந்தும் பெற வேண்டியதில்லை’7 என்ற அடிப்படையில் பல சிந்தனைகள் தோன்றியுள்ளன. அதனை அடியொற்றியே, ‘விடுதலை என்பது பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானது செய்யலாம் என்பதாகும்’8 என்கிறார் ஹெர்பர்ட் ஸ்பென்ஸா.; ஆனால் தந்தையாண் சமுதாய விதியில் பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார உற்பத்தியில் பங்கு பெற்றாலும், பெண்களின் சுயச் சார்பினைக் கேள்விக்குட்படுத்துகின்றது. பெண்கள் சுய ஆளுமை பெறா வண்ணம் குடும்பம், பணியிடம் சமூகம் போன்ற நிறுவனங்களிலிருந்து பெண்கள் விடுதலை பெற தடுமாறும் நிலையையும், விடுதலைப் பெற்ற பின்னர் சந்திக்கும் சிக்கல்களையும் பெண் படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர். பெண்களின் பிரச்சினைகளைப் பெண் எழுத்தாளர்களில் சிலர் ஆழமாகவும், சிலர் போராட்ட முனைப்புடனும், சிலர் தனக்கானப் பிரச்சினையாகவும் பதிவு செய்துள்ளனர். இப் பெண் எழுத்தாளர்கள் படைப்புகளில் பதிவு செய்துள்ள விதம் எத்தகையது என்பதையே இவ்வியல் ஆய்வு செய்கின்றது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளில், இடம் பெறும் பெண் விடுதலை குறித்த சிந்தனைகளில் குடும்பம் என்னும் நிறுவனம் எவ்வாறு தடைக்கற்களாகச் செயல்படுகின்றன என்பதையும், அதிலிருந்து விடுதலை பெற பெண்கள் போராடும் நிலையையும், விடுதலைப் பெற்ற பெண்கள் சமூகத்தால் பார்க்கப்படும் நிலையையும்., தடைக்கற்களினால் இன்னல்களுக்கு உள்ளான பெண்களின் வாழ்வினையும் பெண் படைப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள முறையினைக் காணலாம்.
குடும்பம்
பொதுவாகக் குடும்பம் பற்றிக் குறிப்பிடும் பொழுது பலவிதமானக் கருத்துக்கள் நிலவுகின்றன. ‘குடும்பம் தலைமுறை தலைமுறையாகப் பண்பாட்டு மரபுரிமையைக் கொண்டு செல்லும் ஒரு செயலி’9 என்று சுட்டுவர். கணவன் - மனைவி உறவில் ஏற்படும் பிரச்சினைகளின் உச்சக்கட்ட முரணாகக் குடும்ப அமைப்பில் சிக்கல் ஏற்படுகின்றன. இம் முரண்பாட்டினை, ‘எல்லாக் குடும்பங்களிலும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது. இஃது எசமானுக்கும் அடிமைக்கும் இடையில் முதலாளிக்கும் தொழிலாளிக்கு இடையில் ஏற்படும் முரண்பாடு போன்றதே’10 என்று செ. கணேசலிங்கன் குறிப்பிடுகின்றார். இவ்வாறாக கருதப்படும் குடும்பம் எனும் நிறுவனத்தில் அடிப்படையாகக் காணப்படும் கணவன் - மனைவி, பெற்றோர் தம் பிள்ளை ஆகிய உறவுகளுக்கு இடையே சிக்கல்கள் தோன்றியுள்ளன. இச்சிக்கல்களினால் ஏற்படும் முரண்பாடான வாழ்வு சிறுகதைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
கணவன் - மனைவி உறவு
குடும்ப நிறுவனத்தில் கணவன் - மனைவி மீது ஆதிக்கம் செலுத்துகின்றான். கணவனின் துன்புறுத்தல்களைப் பெண் எவ்வளவு தான் ஏற்றுக் கொண்டிருப்பினும், ஒரு கட்டத்துக்குப் பிறகு எதிர்த்துப் போராடுவது என்பது இயல்பான ஒன்றாகும். அப்படியான எதிர்த்தாக்குதல்; நிலையினை, வாஸந்தி, திலகவதி அனுராதா, பாமா ஆகிய படைப்பாளர்கள் படைத்துக்காட்டியுள்ளனர்
மனைவியைப் போதைப் பொருளாகவும,; உடைமைப் பொருளாகவும் கருதும் ஆண்களையும் அதில் சிக்கித் தவிக்கும் பெண்களின் மனவுணர்வையும் வாஸந்தி, ‘அனுமானங்கள் நம்பிக்கைகள்’, ‘தேடல்’ ஆகிய இரு சிறுகதைகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாஸந்தியின் ‘அனுமானங்கள் நம்பிக்கைகள்’ கதையில், ராமகிருஷ்ணன்-மாலதி தம்பதியினர். பணத்தையே வாழ்வாகவும்,மனைவியைஉடைமைப் பொருளாகவும் கருதுபவன் ராமகிருஷ்ணன். இயற்கையின் மீது கணவனின் பணத்தாசையை வெறுப்பவள். இவர்களின் மகன் சூர்யா. சூர்யாவின் பள்ளி விடுமுறைக்காக, சூர்யாவைத் தன் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்ல ராமகிருஷ்ணனிடம் தன் சுயத்தை இழந்து, அனுமதி பெறுகின்றாள். கிராமத்து அழகில் மயங்கி சூர்யாவும், மாலதியும் இன்பமாக நாட்களைக் கழிக்கின்றனர். இந்நிலையில் இரவு ஏற்படும் காய்ச்சலால் சூர்யா பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றான். ராமகிருஷ்ணனும், அவனது தாயாரும் மாலதியால் தான் சூர்யா இறந்து விட்டதாகக் கூறி, அவளைக் கொடுமைப் படுத்துகின்றனர். கணவனின் கொடூரச் சொற்களைத் தாங்கமுடியாமல், சூர்யாவின் இழப்பைத் தாங்க முடியாமல், மீண்டும் கிராமத்திற்குத் தன் தாய் வீட்டிற்கே வந்து விடுகின்றாள் மாலதி. அங்கு செல்லும் மாலதி, தான் கர்ப்பமுற்று இருப்பதை அறிந்து, சூர்யாவின் வரவாக எண்ணி மகிழ்கின்றாள்.(வாஸந்தி,வாஸந்தி கதைகள்:2005:பக்.299-323)
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழும் மாலதி, இயந்திர வாழ்வு வாழும் ராமகிருஷ்ணனிடமிருந்து முரண்படுகின்றாள். மகனின் இறப்பு, தற்செயலாக நிகழ, ஆறுதல் அளிக்காமல், தன் மீது குற்றம் சுமத்தும் கணவனை விட்டுப் பிரிகின்றாள். தன்னுடைய கிராமத்திற்கு செல்ல அனுமதி மறுத்த கணவனிடம்,
‘என்னுடைய வேர்கள் சில இன்னும் அங்கே இருக்கிறது. ஒரேயடியாய் என்னால் பிய்த்துக் கொண்டு வரமுடியாது, நீங்க என்னை மனுஷியாகப் பார்க்கவில்லை. வெறும் பண்டமாகப் பார்க்கிறீர்கள். நீங்கள் வாங்கிக் கொண்டு வந்துவிட்ட பண்டம். உங்களுடைய உடைமையாகிப் போன பண்டம். எண்ணங்களும், ஆசைகளும் ஏக்கங்களும் இருக்க லாயக்கற்ற பண்டம்’ (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005: ப.314) என்று குறிப்பிடுகின்றாள். பணத்தையே உயர்வாகக் கருதி, மனைவியின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற விரும்பாமல், சுய நலத்துடன் செயல்படுபவன் ராமகிருஷ்ணன். கணவனின் குணத்தைப் புரிந்து கொண்டு, மகன் சூர்யாவின் வாழ்விற்காக, பொறுமையுடன் வாழும் மாலதி, சூர்யாவின் இறப்பிற்குத் தன்னைக் குற்றம் சுமத்தி, வார்த்தைகளால் சித்ரவதைச் செய்யும் கணவனிடம் இருந்து விலகுகின்றாள்.
இதே நிலையினையே வாஸந்தி மற்றொரு தளத்தில் ‘தேடல்’ கதையில் விளக்கியுள்ளார். ஜனனி கணவனின் ஆதிக்க உணர்வின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றாள். அங்கு ஜனனி மனநலம் சரியான நிலையில்,
‘சத்தியமா உங்க இஷ்டத்திற்க்கு விரோதமா நடக்க மாட்டேன். சத்தியமா கவிதை எழுத மாட்டேன். என்னை அழைச்சிண்டு போயிடுங்கோ பிளீஸ் -எனக்கு வேற போக்கிடமில்லே’(வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005: ப.177) என்று கதற, ஜனனியின் கணவன் அவளை விவகாரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணை மறுமணம் செய்வதாகக் கூறுகின்றான். அன்று இரவு கணவனுக்கு அடங்கிய மனைவியாக இருந்தும், கணவனின் சுயநலத்திற்காக தான் ஒதுக்கப்படுவதை உணரும் ஜனனி, மனநல மருத்துவமனையிலிருந்து தப்பித்து புதிய தேடலுடைய வாழ்வை எதிர் நோக்கிச் செல்லுகின்றாள்.(வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005:பக்.164-178)
மேற்குறிப்பிட்டப்பட்ட கதைகளில் இடம் பெறும் மாலதி, ஜனனி ஆகிய இருவரும் கணவனால் உடைமைப் பொருளாகக் கருதப்படுகின்றனர். கணவனின் சுயநலத்தினை உணர்ந்த பின், கணவனை விட்டுப் பிரிந்து சுதந்திரமான வாழ்வை நோக்கி பயணிக்கின்றனர்.
இதைப் போன்று மற்றொரு தளத்தில்; மனைவி மீது சந்தேகம் கொள்ளும் கணவனின் ஆதிக்க உணர்வினையும், அதனால் மனம் வருந்தும் மனைவியின் மனநிலையினையும் வாஸந்தியின் ‘எல்லைகள்’, ‘வழக்கு’ ஆகிய சிறுகதைகள் பதிவு செய்துள்ளன.
வாஸந்தியின், ‘எல்லைகள்’ கதையில் திருமணமாகி முப்பது வருடமாகியும் ஐம்பது வயதான யசோதாவின் மீது சந்தேகப்படும் கணவன் சர்மா. யசோதா எந்த ஆணுடன் பேசினாலும், சந்தேகப் பார்வையாலும், பேச்சாலும் யசோதவை ரணப்படுத்துபவன். சர்மாவின் சந்தேகம் அதிகமாகிய நிலையில் அவனை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றாள். அங்கு மருத்துவன் யசோதாவின் பொறுமையே சர்மாவைக் குணப்படுத்தும் என்று குறிப்பிடுகின்றான். வீட்டிற்கு வந்த பிறகும் சர்மா பக்கத்து வீட்டு ஆண்களுடன் யசோதாவை இணைத்துப் பேசுகின்றான். இதைக் கண்ட யசோதா,
‘இவருக்கு ஏதும் பிரத்தியேக வியாதி இல்லை. ஆதி மனிதன் காலத்திலிருந்து பிடித்திருக்கும் வியாதி இது. அவள் குனியக் குனிய அதிகமாகக் கூடிய வியாதி ….. இந்த மாதிரி ஒரு ஆணியிடம் அன்புப் பிச்சைக் கேட்பதும், தோழமை வேண்டி நிற்பதும் கூட ஒரு வியாதி தான்’9 (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005: ப.414) என்று உணர்ந்தவாறே யசோதா கையில் பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005: பக்:396-415)
இதே கருவினையே, வாஸந்தி ‘வழக்கு’ கதையில் கிருஷ்ணனின் இரண்டாம் மனைவி கௌரி. கிருஷ்ணன் கௌரி, தன் மூத்த மனைவியின் மகளான மாலினியை சித்திக் கொடுமைக்கு ஆளாக்குபவள் என்று சந்தேகிக்கின்றான். இந்நிலையில் திருமணம் நிச்சயமான மாலினி, காய்ச்சலில் அவதிப்பட்டு, எதிர்பாராத விதமாக இறந்து விடுகின்றாள். வெளியூர் சென்று விட்டு திரும்பும் கிருஷ்ணன், மாலினியின் இறப்புக்கு கௌரியின் மீது குற்றம் சுமத்துகின்றான். இதனால் மனம் நொந்த கௌரி, ‘ஒரு ஜன்மத்தை விரயம் செய்தது போல இருந்தது. இந்த மனிதனின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்று சதா சர்வ காலமும், பட்ட கவலையும், தாங்கிக் கொண்ட அவமானமும் இன்று மாலினியின் உடம்போடு மின்சாரத்தில் பஸ்பமாகி விட்டதாகத் தோன்றிற்று’(வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005: ப.429) என்ற உணர்வுடன் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள் கௌரி. (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005:பக்:416-430)
யசோதா, கௌரி ஆகிய இருவரும் வயதான நிலையிலும் கணவனின் சந்தேக உணர்வுக்கு ஆளாகுகின்றனர். யசோதாவை பிற ஆண்களுடன் இணைத்தும், கௌரி ‘சிற்றன்னை’ என்ற காரணத்திற்காகவும், சந்தேக நிலைக்கும் ஆட்படுகின்றனர். இருந்த போதிலும்; கணவனின் நன்மதிப்பைப் பெற பொறுமையுடன் செயல்படுகின்றனர். இறுதியில் சந்தேக உணர்வு வலுப்பெறும் நிலையில், வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனைவியின் உணர்வினைப் புரிந்து கொள்ளாத கணவனின் ஆதிக்க மனநிலையையும், அதனால் வாழ்நாள் முழுவதும் மனவேதனைக்கு உள்ளாகும் பெண்களின் நிலையையும் வாஸந்தி படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
பெண்களின் கலை உணர்வுகளை லாப நோக்கிற்காகப் பயன்படுத்தும் ஆண்களின் உணர்வினையும், அதிலிருந்து விடுதலை அடையத் துடிக்கும் பெண்களையும் திலகவதியின் ‘கவசம்’, வாஸந்தியின் ‘சதுரங்கம்’ ஆகிய இரு கதைகள் எடுத்துக் காட்டியுள்ளன.
‘சதுரங்கம்’ கதையில் அனுசுயா வேசியின் மகள். அவளை அதிலிருந்து மீட்டெடுத்து மணம் செய்து கொண்டு, பாடகியாக்குகின்றான் மூர்த்தி. இதனால் மூர்த்தியின் கட்டுப்பாட்டில் அனுசியா செயல்படுகின்றாள். அனுசியாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் மூர்த்தி, அவள் வேசியின் மகள் என்பதால் உடல் ரீதியான ஆதிக்கத்தைச் செலுத்துவதில்லை. இந்நிலையில் ‘உனக்கு எந்த அபரிதமான அந்தஸ்தையும் கௌரவத்தையும் கொடுக்க நான் தயாராக இல்லை என்றது பார்வை. நீ என் மனைவியாக இருப்பது எனது சௌகரியத்துக்காக என்றது பேச்சு’ (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005:ப.334)என்ற நிலையில் மூர்த்தியின் செயல்பாடு அமைகின்றது. இந்நிலையில் மூர்த்தியின் நண்பன் ஸ்ரீனிவாஸன் அனுசுயாவின் தனிமையைப் பயன்படுத்தி அவளுடன் உறவாடி ஏமாற்றிவிடுகின்றான். தான் ஏமாற்றுப்பட்டதை உணர்ந்த அனுசுயா, ஸ்ரீனிவாஸனுடனான உறவை துண்டித்துக் கொள்கின்றாள். இதனால் வியாபார ரீதியாக ஏற்படும் இழப்பிற்காக மூர்த்தி அனுசுயாவைத் திட்டுகின்றான். இந்நிலையில் கர்ப்பமுறும் அனுசுயா,
‘இது நாள் வரை என்னை நீ அவமானப் படுத்தியதை நான் தாங்கிக் கொண்டேன். என் சிசுவை நீ அவமானப்படுத்தினால் அதை நான் தாங்க மாட்டேன். இதனால் தான் போகிறேன் மூர்த்தி….. நீ எட்ட முடியாத தொலைவுக்கு….. தன்னிச்சையாய்ப் பறக்கும் அந்தப் பட்சி மாதிரி….’ (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005:ப.342) என்கின்றாள்.
அனுசுயா குரல் வளத்தினை உபயோகித்து, பெரிய பாடகியாக்குகின்றான் மூர்த்தி. மேலும் பாடல் வாய்ப்பிற்காக அனுசுயாவை தவறாகவும் பயன்படுத்த முயற்சி செய்கின்றான். இங்கு அனுசுயா, தன் வாழ்வை வளமாக்கியதற்காக மூர்த்தியிடம் அடிமைப்பட்டு கிடக்க, அனுசுயா ஸ்ரீனிவாசனால் கர்ப்பமுற்ற நிலையில், மூர்த்தியிடம் இருந்து குழந்தையின் வாழ்வுக்காகப் பிரிகின்றாள். (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005:பக்:324-342)
மற்றொரு தளத்தில் திலகவதியின் ‘கவசம்’ சிறுகதையில் வரும் வந்தனா சிறுவயதிலேயே ‘ஆண்ட்டியிடம்’ விற்கப்படுகின்றாள். ஆண்ட்டி என்பவள் பாலியல் தொழிலில் இசை முதலிய கலைப் பயிற்சியளித்து வளர்க்கின்றாள். நாளடைவில் வந்தனா புகழ்பெற்ற சினிமா நடிகையாகின்றாள். இயக்குநர் நம்பியைக் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றாள். இருவரும் சேர்ந்து இயக்கும் புதுப்படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. படத் தோல்விக்குப் பிறகு நம்பி புதுப்படம் எடுக்க முயற்;சி மேற்கொள்கின்றான். புதுப்பட முயற்சிக்கு ‘பொன்வேலு’ என்பவனுக்கு வந்தனாவை விருந்தாகும் படி கூறுகின்றான். இதைக் கேட்ட வந்தனா, ‘என்ன குறை வச்சேன் இவருக்கு? உயிரைத் திரியாக்கி எரிக்கவில்லையா? கேட்ட போதெல்லாம் பணத்தை வாரிக் கொடுக்கவில்லை? எருமைகள் சேற்றுக் குட்டைகளில் சுகம் காணுவது போல, இவர் இரவைக் கழித்த பெண்களுக்குக் கூட பணத்தைக் கொடுத்து அழவில்லையா? இவர் வேண்டாம் என்று நினைத்ததற்காக வயிற்றில் வளர்ந்த இவருடைய பிள்ளையைச் சிதைக்கவில்லையா ….. கடைசியில் அத்தனைக்கும் பதிலாக புருஷன் மனைவிக்குச் செய்கிற கடைசி பட்சக் கொடுமையை செய்யவும் எப்படி அவரால் முடிந்தது’ (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:ப.497) என்று வினாவுடன் இருளில் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள் வந்தனா (திலகவதி, ‘திலகவதிகதைகள்’, 2002: பக்:489-497).தன் தொழிலில் முன்னேற்றுவதற்காகத் தன்னை விற்கத் துணியும் கணவனிடமிருந்து விலகுகின்றாள் வந்தனா. மனைவியின் உணர்வுகளை மதிக்காமல், தன் சுயநலத்திற்காக, கணவன் என்ற ஆதிக்க உணர்வுடன் செயல்படும் உறவு நிலையில், பெண் விடுதலை நோக்கி பயணிக்கின்றனர்.
கட்டிய மனைவியை விட்டுவிட்டு பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண்களின் சுயநலத்தினால், இன்னலுக்கு ஆளாகும் பெண்களின் நிலையை திலகவதியின், ‘அம்பிகா அப்பாவுமான போது’, அனுராதாவின் ‘தொப்புள் கொடி’ சிறுகதைகள் படம் பிடித்துக் காட்டியுள்ளன. திலகவதியின் ‘அம்பிகா அப்பாவுமான போது’ கதையில் கணவன் வாசுதேவனுக்கு சேவை செய்யும் பெண் அம்பிகா. இருந்தாலும் வாசுதேவன் கோகிலா என்னும் பெண்ணுடன் தொடர்பு கொள்கின்றான். ஊர்ப் பஞ்சாயத்தில் அம்பிகாவுடன் வாழ விருப்பமில்லை என்றும், அவளுக்கு ஜீவனாம்சம் தருவதாகவும் கூறுகின்றான். அதற்கு அம்பிகா, ‘என்னால முடியாது. இதுக்கு அப்புறமும் நான் அவரோட சேர்ந்து பொழக்கிறதுண்ணா அது விபச்சாரம் செய்யறாப்பல தான். என்னுடைய தேவைங்களுக்காக, என்னையே விக்கறது மாதிரி தான்.’ (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:ப:61) என்று கூறி விட்டு, கர்ப்பிணிப் பெண்ணாய் ஊரை விட்டு, வெளியேறுகின்றாள். தன் தோழி லட்சுமியின் வீட்டில் அடைக்கலமாகின்றாள். தோழியின் துணையோடு தையல் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, ஆசிரியர் பயிற்சியில் படித்து, பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகின்றாள். தன் மகன் விவேக்கிற்கு தாயும் தந்தையுமாகச் செயல்பட்டு, அவனைக் கலெக்டராக்குகின்றாள். கணவனைப் பிரிந்த அம்பிகா, தன் சுயத்தை உணர்ந்து, உழைத்து முன்னேறி, தன் மகனையும் வெற்றி பெற்ற மனிதனாக்குகின்றாள் (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:பக்.55-76) இந்த கதைக் கருவையே மற்றொரு வார்ப்பில் அனுராதா தொப்புள் கொடி கதையில் உருவாக்கியுள்ளார்.தாமரையை விலக்கி விட்டு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொள்கின்றான் கணேசன். பொறுமையுடன் எவ்வளவு கூறியும் கணேசன் வேறு பெண்ணுடன் கூடிய தொடர்பை விலக்க மறுக்கின்றான். இதனால் தாமரை வீட்டை விட்டுச் செல்ல ஆயத்தமாகின்றாள். கணேசன் ஊரைக் கூட்டி, தாமரைக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாகவும் அதனால் தான் வீட்டை விட்டுச் செல்வதாகவும் கூறுகின்றான். இந்த வார்த்தையின் தாக்குதலால் தாமரை செய்வது அறியாமல் திகைக்கின்றாள்
‘என்னடீ பேய் முழி முழிக்கறே? அடுப்படியே திருப்பதி. ஆம்படையானே குலதெய்வம்னு இருக்கிறது தான்டீ ஒரு குடும்ப பொம்பளைக்கு லட்சணம்…. ஒரு பொட்டச்சி ஒண்ணு வூட்டுக்குப் பயந்துக்கணும். இல்ல ஊருக்குப் பயந்துக்கணும்; சொல்லடி…… பையன் எனக்குப் பொறந்தது உண்மைன்னா பையன வுட்டுட்டுப் போடீ’ .(அனுராதா,மணற்பொதிகள்:2004: பக். 40-53)என்கின்றான் கணேசன். வெற்று வார்த்தைகளால் சிக்கித் தவித்த தாமரை ஊராரின் முன் சந்தேக வார்த்தைகளைத் தெளித்த கணேசனுடன் இனி வாழ முடியாது என்று முடிவு செய்து கொண்டு ,
‘இது இவனுக்குப் பொறந்த குழந்தையில்லை… அதனால குழந்தைய இங்கவிட வேண்டிய அவசியமில்லை’.(அனுராதா,மணற்பொதிகள்: 2004: பக். 40-53) என்று குழந்தையைத் தாண்டி சத்தியம் செய்து வீட்டை விட்டு பையனுடன் வெளியேறி விடுகின்றாள் தாமரை.(அனுராதா,மணற்பொதிகள்:2004: பக். 40-53) தாமரையின் கற்பைச் சந்தேகிக்கும் வார்த்தையைக் கூறினால் அவள் அமைதியாகி விடுவாள் என்று கணேசன் கருதியதற்கு மாறாக வீண் பழி;யை ஏற்கத் துணிகின்றாள் தாமரை.
பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் கணவன் தன் தவற்றை மறைக்க, மனைவி மீது பழி சுமத்த பெண்கள் சுய இருப்பு மற்றும் குழந்தையின் வாழ்வு கருதி கணவனை விட்டுப் பிரிகின்றனர். ‘குடி’ என்னும் போதையின் காரணமாக கணவன் - மனைவி உறவில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. குடியினால் பொறுப்பற்ற நிலையில் செயல்படும் கணவனால் மனைவியே குடும்ப பொறுப்பைச் சுமக்கின்றாள். ஆனால் குடிகாரக் கணவனின் பொறுப்பற்றத் தன்மை எல்லை மீறும் போது மனைவியும் பொறுமை இழக்கின்றாள். இதனை பாமாவின்‘பொன்னுத்தாயி’கதையில் பொன்னுத்தாயி - மூக்காண்டி தம்பதியினர். நான்கு குழந்தைகளைப் பெற்ற நிலையிலும் குடித்துவிட்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதோடு தன் உழைப்பினையும் சுரண்டும் கணவனை விட்டுப் பிரிகின்றாள் பொன்னுத்தாயி. ஊராரி;ன் தவறானப் பேச்சுக்கு ஆளானாலும் எதைப் பற்றியும் பொன்னுத்தாயி கவலைப்படவில்லை. மூக்காண்டியிடம் தன் நான்கு குழந்தைகளையும் விட்டு விட்டு தன் தாய் வீட்டில் வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்துகின்றாள். குழந்தையை வைத்துச் சமாளிக்க முடியாமல் பொன்னுத்தாயியை தன்னுடன் சேர்ந்து வாழுமாறு அழைக்கின்றான் மூக்காண்டி. பொன்னுத்தாயி கணவனுடன் வாழ மறுக்க இருவருக்குமிடையே ஏற்படும் வாக்குவாதத்தில் பொன்னுத்தாயியை அடித்து விடுகின்றான். பொன்னுத்தாயி இரத்தக் காயத்துடன் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றாள். காவல் நிலையத்தில் அவமானப்படும் மூக்காண்டி கோபம் கொண்டு குழந்தைகளைப் ‘பொன்னுத்தாயிடம் விட்டு விட்டு மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றான். இதற்கு பொன்னுத்தாயி, ‘பிள்ளைகளக் கொண்டாந்நு எதுக்கு இங்கு உடனுங்கற? ஓம் பிள்ளைகள நீயே வச்சுக் காப்பாத்து. எனக்கு நீயும் வேண்டாம். ஓன்னால வந்த பிள்ளைகளும் வேண்டாம். பெத்தவ தான் பிள்ளைகள வளக்கணும்னு சட்டமா என்ன? இங்க கூட்டியராத, இனி இந்தப் பக்கமே வராத’.(பாமா,ஒரு தாத்தாவும் எருமையும்’,2003:பக்.67-68) என்று கூறி விடுகின்றாள். மூக்காண்டி கட்டினத் தாலியைக் கழற்றி, அதிலிலுள்ள தங்கத்தைக் கொண்டு வியாபாரத்தைக் தொடங்குகின்றாள் பொன்னுத்தாயி.(பாமா,ஒரு தாத்தாவும் எருமையும்’,2003:பக்.61-68) இந்நிலையிலிருந்து மற்றொரு தளத்தில் குடும்பச் சூழ்நிலையிலிருந்து விலகிய பெண் பிற ஆண்களுடன் பழகுவதை ஒழுக்கக் கேடாகக் கருதும் சமுதாய நிலையை திலகவதி பதிவு செய்துள்ளார். திலகவதியின் ‘விசிறிகள்’ கதையில் சுமதி விவாகரத்துப் பெற்ற மருத்துவர். உடன் பணிபுரியும் ஐம்பது வயதான ராம்குமாருடன் நட்புடன் பழகுபவள். ஆனால் மற்றவர்கள் இருவரது நட்பையும் தவறாகப் பேசுகின்றனர். இவற்றைப் பற்றி சுமதி கவலைப்படவில்லை. இந்நிலையில் சிவாவின் நட்பு கிடைக்கிறது. சிவாவிடம் ராம்குமார் பற்றிய சுமதி சொல்லவும் சிவாவும் இருவருக்கும் உள்ள உறவை தவறாகக் கருதுகின்றான். (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002 பக்:214-322)
‘சுகந்தி யாரோ ஒருவனுக்கு மனைவியாக இருக்கறது தான் ஒரு பொண்ணுக்கு கௌரவத்தையும் சமூக அந்தஸ்தையும் தரும்னு நெனக்கற சனாதனிங்க என்னை வைப்பாட்டின்னு சொல்றதைப் பத்தி நான் கவலைப்படப் போறதில்லை. எனக்கும் ராம்குமாருக்கும் இடையிலே இருக்கிற உறவை அறிவுபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் விளக்க என்னாலே முடியாது’(திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:பக்.317-318) என்று குறிப்பிடுகின்றாள்.‘கல்யாணமானவரோட தொடர்புங்கறது பெண் விடுதலைக்கு விரோதமானதுன்னு ஏன் நெனச்சுக்கறே சுகந்தி? ஆம்பளைங்கறவன் தான் பொம்பளைக்குச் சொத்து. அவன் தான் அவளைப் பாதுகாக்கறவன், சம்பாதிச்சுப் போடறவன்கிற நெனப்பு தானே உன்னை இப்படி பேச வைக்குது. இன்னொருத்தி வந்துட்டா ஏற்கனவே இருக்கறவளுக்கு கெடைச்சு கிட்டிருக்கறதெல்லாம் பாதியாக் குறைஞ்சிடுமேன்னு தானே உன்னை மாதிரி ஆசாமிங்க. கவலைப்படறாங்க. என்னைப் பொறுத்தவரை அந்த மாதிரி பிரச்சனை இல்லையே. இருந்தாலும் பொம்பளை சகலத்துக்கம் ஒர்த்தனை சார்ந்து தான் இருக்கணும்னு நீ ஏன் நெனைக்கறேங்கறது எனக்குப் புரியல’……(திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:ப.319) என்கின்றாள். திலகவதியின் ‘வலைப்பறவை’ கதையில் அலுவலக மேலதிகாரிப் பெண்ணின் கூற்று கதை விளக்கப்பட்டள்ளது. பணிபுரியும் பெண் மீரா. எளிமையும் தைரியமும் உள்ளப் பெண். இந்நிலையில் மீராவின் கணவன் லோகநாதன். மேலதிகாரியைச் சந்தித்து மீராவை காதலித்து திருமணம் செய்து கொண்டதையும் மீரா தன் குடும்பத்திற்காகத் தன்னை நிராகரித்து பிரிந்து வாழ்வதையும் கூறுகின்றான். மேலும் மீராவைத் தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும் கூறுகின்றான். இந்நிலையில் மீரா – லோகநாதனின் கொடுமைக்காகப் பிரிந்ததைக் குறிப்பிடுகின்றாள் (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:பக்.376-381) மேலும்;, ‘அவரைப் பொறுத்;த வரை எது நடந்தாலும் வெற்றி தான். அவர் சொன்னத நம்பி நீங்க என்ன வற்புறுத்தி நான் அத ஏத்துக்கிட்டா கடைசியில என் காலுல தான வந்து விழந்தம்பார். நான் ஒரேயடியாக மறுத்துட்டா. அதுவே எனக்கு எதிரா உங்க மனதில ஒரு கரும் புள்ளியா பதியும்…. வுலைய அறுத்துக்கிட்டு தப்பிச்சிட்ட பறவை சந்தோஷமா இருக்கறது நியாயம் தானே. அந்தப் பறவையோட சந்தோஷமா மாதிரி தான என் சந்தோஷமும், தான் விரிச்ச வலையில அகப்பட்ட பறவை தப்பிச்சுப் போயிடிச்சேங்கற துக்கம் வேடனுக்கு இருக்கறதும் நியாயம். அதே மாதிரி துக்கம் வேடனுக்கு இருக்கறதும் நியாயம். அதே மாதிரி துக்கம் அவருக்கு இருக்கலாம்’ (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:பக்.380-381) என்றாள் மீரா.
தாய் - மகள் உறவு
தாய் - மகள் உறவு நிலையில் தாயின் கடந்த கால வாழ்வினை மகளின் நினைவின் மூலம் அம்பை ‘ பிரசுரிக்கப்படாத கைப்பிரதி’ எனும் சிறுகதையில் பதிவு செய்துள்ளார்.
திருமகளின் மகள் செந்தாமரை. செந்தாமரையை இலக்கியம், பதிப்பகம் முதலியவற்றில் தோழியாக வளர்கின்றாள் திருமகள். செந்தாமரைக்கு தன் தாயின் கைப்பிரதி டைரி கிடைக்கின்றது. அதில் இடம் பெற்றுள்ள தாயின் கடந்த கால வாழ்வினை அறிகின்றாள். மலேயாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து பதிப்பகம் - அச்சகம் தொடங்கும் ராமசாமியின் மகள் திருமகள். புரட்சிச் சிந்தனை உடைய ராமசாமி நூல்களைப் பதிப்பதில் புரட்சிச் சிந்தனையுடைய நூல்களையே பதிப்பிக்கும் கொள்கைக் கொண்டவன்.
‘ஒரு விதவைப் பொண்ணு ஒருத்தனைக் கட்டிக்கிட்டாக. ஆவ வாழ்க்கை நல்லா அமையுங்கறதுல என்னங்க புரட்சி? அவ படிக்கறதுக்கும் வேலை பண்ணுறதுக்கும் உதவி பண்ணனும். யூனிபாரம் போடுறாப்பல அவ பொட்டில்லாம, பூவில்லாம இருக்கக்கூடாதுன்னு சொன்னீங்கன்னா சரி’(அம்பை, ‘காட்டில் ஒரு மான’; 2000:ப.82) என்று புரட்சிச் சிந்தனை உடைய ராமசாமி விதவையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு கல்வி – வேலைவாய்ப்பு வழங்குகின்றான். தந்தையின் இலக்கிய ஆர்வத்தின் தொடர்ச்சியாக திருமகள் ஆங்கிலம் இலக்கியம் கற்கின்றாள். முழு சுதந்திரமாக வளர்க்கப்பட்ட திருமகள் கவிஞன் முத்துக்குமரனைக் காதலிக்க, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றார் ராமசாமி. திருமகள் - கல்லூரி, அச்சகம், பதிப்பகம் என்று அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டு இருந்தாள். முத்துக்குமரன் தன் மனைவி தன்னைக் கவனிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தான். இதனால் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றின. குழந்தை செந்தாமரையின் வரவு, தந்தை ராமசாமியின் இறப்பு நிகழ்கின்றன. முத்துக்குமரன் கவிதையில் வன்முறை இருப்பதால் திருமகள் பதிப்பிக்க மறுப்பு தெரிவிக்க இருவருக்குமிடையே வாக்குவாதம் நடைபெற, ‘அவர் உனக்கு அப்பன்தானா இல்ல….. என்று கூற, திருமகள் ஆவேசத்தில் முத்துக்குமரனை உதைக்க, முத்துக்குமரன் திருமகளைத் தாக்கி, மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றான். அச்சக ஊழியரின் உதவியில் ஆறு மாத கால மன நல மருத்துவமனை அவஸ்தைக்குப் பின் விடுதலையாகும் திருமகள், தன் சொத்துக்களை விற்று, மகளுடன் சென்னைக்குக் குடியேறுகின்றாள். சில வருடங்களுக்கு பிறகு முத்துக்குமரன் இறந்து விட்டதை அறிகின்றாள். முத்துக்குமரன் நினைவுநாள் விழாவில் இலக்கியவாதி என்ற முறையில் கலந்து கொள்ளும் திருமகளின் வாழ்வை எண்ணிப் பார்க்கின்றாள் செந்தாமரை (அம்பை, ‘காட்டில் ஒரு மான’; 2000:பக்74-83)
காதலித்து திருமணம் செய்தவனால், கொடுமைகளுக்கு ஆளான திருமகள், அதில் இருந்து விடுதலையாகி, தன் மகளின் வாழ்வினை சிறப்புடையதாக மாற்றப் போராடி வெற்றியும் காண்கின்றாள். கணவனின் செயல்பாடுகளால் அவனை விட்டுப் பிரியும் பெண், தன் மகளின் வாழ்வினை சிறப்புடையதாக மாற்றியிருக்கின்றாள். தன் பொருட்டு இன்னல்களுக்கு ஆளான தாயின் வாழ்வினை எண்ணி வருந்தி, அவளுக்கு ஆறுதல் அளிக்கின்றாள் மகள் செந்தாமரை. கணவன- மனைவி பிரிவி;ற்குப் பிறகு பெண்களின் வாழ்வு கட்டமைக்கப்படும் நிலையை அம்பை சுட்டிக்காட்டியுள்ளார்.இத் தளத்திலிருந்து மற்றொரு நிலையில் திலகவதியின் ‘நேசத்துக்குரிய எதிராளி’ கதையில் பார்வதியின் நினைவு கதையாக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு – பார்வதி தம்பதியினர். இவர்களது மகள் சுதா. திருநாவுக்கரசின் கொடுமைத் தாங்க முடியாமல் பார்வதி விவகாரத்துப் பெறுகின்றாள். இந்நிலையில் குரியன் தாமஸ் என்பவனுக்கு இரண்டாம் மனைவியாகின்றாள்.முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது பார்வதி இரண்டாம் தாரமாகின்றாள். இரண்டு மனைவிகளுக்கு இடையே ஏற்படும் குடும்பப் பிரச்சினையின் காரணமாக தாமஸ் தற்கொலை செய்து கொள்கின்றாள். இந்நிலையில் வளரும் சுதா தாயின் செயலகளுக்கான சூழ்நிலையை உணர்ந்து கொள்ளாமல் இள வயது முதலே வெறுக்கின்றாள். சுதா கல்லூரிப் படிப்பின் காரணமாக விடுதியில் தங்குகின்றாள். கல்லூரி ஆசிரியை, மணிமேகலை பெண்களின் மண வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளைக் கற்றுத் தருகின்றாள்;. சுதாவின் தனிப்பட்ட வாழ்வை அறிந்த பின்,
‘பொய்யான நிரந்தரத் தன்னையைத தருதுங்கறதுக்காகக் கல்யாணத்தைப் பெரிசா நெனைக்கறோம்.உங்கம்மா அதை புறக்கணிச்சாங்க. இந்த சமூகத்தை உங்கம்மா லட்சியம பண்ணல…….எம் மனசுல பட்டதைச் சொல்றேன்…. சமூகங்கற பேரால அபிப்பிராயங்கள் சொல்றவங்களை சிந்திக்கத் தெரியாத மந்தைங்கன்னு தான் நான் சொல்லுவேன் வரையறுக்கப்பட்டுள்ள வாழ்க்கையைத் தான் மனுஷன் வாழணுமு;ன சொல்லுறவன் முட்டாள்’ ((திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:ப.406) என்று மணிமேகலை குறிப்பிடுகின்றாள்.சுதா தன் தாயின் வாழ்வினையும், மனநிலையையும் புரிந்து கொள்கின்றாள். விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லும் சுதா தன் தாயிடம் தன் செயலுக்கு மனம் வருந்துகின்றாள். மகளின் மன மாற்றத்தினைக் கண்டு மனம் மகிழ்கின்றாள் பார்வதி. (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:பக்.397-408)
முடிவுரை :
குடும்பம், என்னும் அமைப்பு பெண்கள் மீது மரபியல் கருத்தியல்களைத் திணிக்கின்றன. இக் கட்டுப்பாடுகள் எல்லை மீறிய நிலையில், பெண்கள் விடுதலையை நோக்கிப் பயணிக்கின்றனர். விடுதலை பெற்ற நிலையில் வாழ்வில் முன்னேறுகின்ற நிலையையே சிறுகதைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு, பெண் விடுதலைச் சிந்தனையை வாஸந்தி, அம்பை, திலகவதி, பாமா, அனுராதா, ஆகிய பெண் படைப்பாளர்களின் படைப்புக்களிலேயே காணப்பட்டுள்ளன. ஏனெனில் தொடக்கமாக கால நிலையில் பெண் உரிமை, பெண் சமத்துவம் என்பதே குடும்பச் சூழல்களில் பெறுவதே போராட்டமாக – தேவையாகக் கருதப்பட்டன. மேலும் பெண்களுக்கு குடும்பமே கோவிலாகவும் (அ) அடைக்கலமாகவும் கருதப்பட்டன. இந்நிலையில் குடும்பத்தை விட்டு வெளியே வருவது இயலாத ஒன்றாகவும், ஒழுக்கக் கேடாகவும் கருதப்பட்டன. எனவே தொடக்க சிறுகதையாசிரியர்களான ராஐம் கிருஷ்ணன், சூடாமணி, சிறுகதைகளில் பெண் விடுதலைச் சிந்தனைகள் இடம் பெறவில்லை. பின் வந்த சிறுகதையாசிரியர்களிடம் பெண் விடுதலைச் சிந்தனையுடைய சிறுகதைகள் இடம் பெற்றாலும், ‘ குடும்பம் எனும் அமைப்பிலிருந்து ஒரு பெண் தன்னை விடுவித்துக் கொள்வது தமிழ்ப் பண்பாட்டில் மிகச் சிரமமான ஒன்றாகவே இன்றுமுள்ளது’ என்ற கருத்திற்கேற்ப, மிகக் குறைந்த (பதினைந்து) எண்ணிக்கையிலான சிறுகதைகளே இடம் பெற்றுள்ளன என்பது முக்கியமான கருத்தாகும். மேலும் இக் கதைகளில் இடம் பெறும் பெண்கள் குடும்பம், சமூகம் என்னும் நிறுவனத்தை விட்டு வெளியேறி, சுதந்திர வாழ்வைத் தொடங்கும் தொடக்க நிலையிரான பெண் விடுதலைச் சிந்தனையையே முன் வைத்துள்ளனர். மேலும் குடும்பத்தை விட்டு விலகிய பெண்கள் சுய இருப்புடன், தன் குழந்தையின் வாழவை வளமாக்க போராடும் தாய்மை அடிப்படையிலான விடுதலைச் சிந்தனையைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
குறிப்புக்கள்
1. அரங்க மல்லிகா, ‘தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்’ ப.14
2. ஐPன் லாரன்ஸ்,பகவதி (பதி.), ;இந்திய விடுதலைக்குப் பின் தமிழிலக்கியச் செல்நெறிகள்’, ப.177
3. செ.கணேசலிங்கன், ‘பெண்ணடிமைத் தீர’,ப.145
4 அரங்க மல்லிகா, மேலது,ப.22.
5. நிர்மலா ராணி, ‘பெண்ணியத் திறனாய்வு’,ப.10
6 அரங்க மல்லிகா, மு.குநுர்.ப.28
7. நிர்மலா ராணி, ‘தமிழ்ச் சிறுகதைகளில் பாலின வேறுபாடும் பெண்ணடிமைத் தனமும்’ ப.58
8. பிரேமா, ‘பெண் - மரபிலும் இலக்கியத்திலும்’ பக்.84-85
9 அ.குணசேகரன், ‘தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள்’ ப.19
10. செ.கணேசலிங்கன், ‘பெண்ணடிமைத் தீர’,ப.110

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...