இமையம்
சமூகச் சூழலும் வாழ்க்கைமுறையும்தாம் ஓர் இலக்கியப் படைப்பின் அடிப்படை ஆதாரங்கள்.
வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டதல்ல இலக்கியம். ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட
காலகட்ட இயக்கத்தையும் வாழ்க்கை முறையையும் இலக்கியப் படைப்பாக மாற்றுவது என்பது
சமூகச் செயல்பாடு. பல்வேறு சமூகங்களின் பல்வேறு காலகட்ட நடப்பியல்களையும் வாழ்க்கை
முறைகளையும் இலக்கியங்கள்தாம் பதிவுசெய்கின்றன. பிறகு அவை வரலாறுகளாக மாற்றம்
பெறுகின்றன. அப்படி உருவாக்கப்படும் இலக்கிய வரலாறுகளின் நம்பகத்தன்மையைக்
குறிப்பிட்ட படைப்பாளிகளின் சமூக அக்கறை, சமூக ஈடுபாடு, வாழ்வனுபவம், சமூகத்தைப்
பார்த்த விதம், பதிவுசெய்த விதம் ஆகியவற்றோடு படைப்பாளியின் படிப்பு, மொழி குறித்த
அறிவு, எழுத்துப் பயிற்சி என்று பலவும் சேர்ந்து உருவாக்குகின்றன. இவைகளே ஒரு
படைப்பு, காலம் கடந்து வாழ்வதற்கும் உருவான வேகத்திலேயே உயிரை விடுவதற்குமான
காரணங்களாகவும் இருக்கின்றன.தமிழில் தலித் இலக்கியம் உருவாக ஆரம்பித்த 1985-1992 காலகட்டத்தில், தலித் இலக்கியம் என்று ஒன்று உண்டா, தனியாக தலித் இலக்கியம் என்று ஒன்று தேவையா, தலித் இலக்கியத்தின் வரையறைகள் என்ன, தலித் இலக்கியத்தின் அடிப்படையான கருதுகோள்கள் எவையெவை, தலித் இலக்கியத்தை யாரெல்லாம் எழுதுவது, பிறப்பால் தலித்தாக இல்லாதவர்கள் தலித் வாழ்வை இலக்கியப் படைப்பாக எழுதினால் அந்தப் படைப்புக்குப் பெயர் என்ன, அரசியல் களத்தில் சாதிரீதியாகத் தமிழ்ச் சமூகம் சிதறுண்டு கிடக்கும் நிலையில் இலக்கியத்திலும் அந்நிலை வேண்டுமா என்று கேட்கப்பட்ட நூற்றுக்கணக்கான கேள்விகள் இன்றைக்குச் சாரமிழந்து போய்விட்டன. அதற்குக் காரணம் இன்றைய சமூகச் சூழல்தான்.
இன்றைய சூழலில் தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகளில் மட்டுமல்ல, உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைமுறைகள் இலக்கியமாக்கப்படுகின்றன. இவ்வகை இலக்கியங்களுக்குப் போதிய கவனமும் வரவேற்பும் கிடைக்கவே செய்கின்றன. அதே நேரத்தில் உலகெங்கும் ஒரே பண்பாடு, பொருளாதாரம், சந்தை, வாழ்க்கைமுறை என்ற வன்முறைக் கலாச்சாரத்தால் உலகெங்குமுள்ள சிறுசிறு இனக் குழுக்கள் தங்கள் பண்பாடு, அடையாளம், பூர்வ கலாச்சாரங்கள் ஆகியவை அழிக்கப்படுவதற்கு எதிராகக் குரலெழுப்பத் தொடங்கியுள்ள நிலையில் ஒடுக்கப்பட்டவர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைமுறைகள் இலக்கியப் படைப்புகளாக மாறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
தலித் வாழ்க்கை என்பதும் தலித் இலக்கியம் என்பதும் நவீனத்துவம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடோ தத்துவமோ அல்ல; தலித் இலக்கியம் என்பது ஒரு மனிதனின், ஒரு குடும்பத்தின் வாழ்க்கை அல்ல, கதை அல்ல; பெரும் திரளான ஓர் இனத்தின் பண்பாடு, ஒழுக்க நெறிகள், வரலாறு, மொழி, குறியீடு, அடையாளம் எனலாம். அதன் அடிப்படைக் கலாச்சார மீறல், கலக வெளிப்பாடு, சமூக, புராணிக மதிப்பீடுகளின் மீதான, சமூகக் கட்டுமானங்களின் மீதான எதிர்ப்பு எனலாம். தலித் இலக்கியம் என்பது அடிப் படையில் ஒரு வாழ்க்கை - வாழ்க்கை முறை.
தலித்துகளின் வாழ்க்கை, நிலம் சார்ந்தது; உழைப்புச் சார்ந்தது; கலைகள் சார்ந்தது. இன்றைக்கு உயிரோட்டமான மொழியைக் கொண்டிருப்பவர்கள் தலித்துகளே. நிகழ்த்துகலைகளின் பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் தலித்துகளே. தலித்துகளின் மொழி கலைக் குரிய மொழி. தங்களுடைய பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் நிலம் சார்ந்தும் நிலத்தோடு சேர்ந்த சூழல் சார்ந்தும் உருவாக்கியவர்கள். நிலத்தோடு வாழ்ந்து, அறிவும் நாகரிகமும் சாகசமும்செய்து வாழும் இனம் தலித் இனம். இந்த வாழ்க்கைமுறையிலிருந்துதான் தலித் இலக்கியம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்ந்தது வேறு.
எழுத்தாளனின், குறிப்பாக தலித் எழுத்தாளனின் கம்பீரம் எது, பலம் எது, பலவீனம் எது, கற்றுக்கொள்ள வேண்டியது எது, நிராகரிக்க வேண்டியது எது என்று அறிவித்துச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை இன்றைய சூழல் உருவாக்கியுள்ளது. இது எழுத்தாளனுக்குச் சூழல் தந்திருக்கும் சவால். இந்தச் சவாலைக் குறிப்பாக தலித் எழுத்தாளர்கள் எப்படி எதிர்கொண்டார்கள், எதிர்கொள்வார்கள்? இதுவரை தமிழில் வந்துள்ள படைப்புகளைப் பார்க்கும்போது எந்தச் சவாலையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் படைப்பு ரீதியான சவாலைக்கூட அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகும். இருபது, இருபத்தி ஐந்து ஆண்டுக் காலம் கடந்துவிட்ட நிலையில் சிறந்த தலித் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என்று பெரிய எண்ணிக்கையில் வராததே இதற்குச் சான்றாகும். தலித் வாழ்க்கையை ஆவணப்படுத்துவது மட்டுமே இலக்கியப் படைப்பாகாது. ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு பல கோட்பாடுகளை உருவாக்கலாம். ஆனால், எந்த ஒரு கோட்பாடும் சிறந்த ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்க முடியாது. சூழலுக்கேற்ப, சூழலைப் பயன்படுத்திக்கொள்ள எழுதப் படும் படைப்புகள், படைப்பாளிக்கு முன்னரே உயிரை விட்டுவிடும். இதுதான் தமிழில் நடந்துகொண்டிருக்கிறது. தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் மட்டுமே அது தலித் படைப்பாகிவிடுமா? தலித்துகள் பயன்படுத்தக்கூடிய வழக்குகளை ஒரு படைப்பில் ஆங்காங்கே பயன்படுத்தினால் அது தலித் படைப்பாகி விடுமா? தலித்தின் ஊளையும் முரட்டுத்தனமான கோபமும் மட்டுமே தலித் படைப்பா?
பொதுவாக மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொடுப்பவன் வியாபாரி; எழுத்தாளன் அல்ல - முக்கியமாக தலித் எழுத்தாளன் அல்ல. இன்று தமிழ்ச் சூழலில் மட்டுமின்றி இந்திய, உலகச் சூழலில் இலக்கியச் சந்தையில் விலைபோகக்கூடியதாக இருப்பது ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களே. நவீன இயந்திரத்தின் தேவைகளும் வியாபார நோக்கத்தின் தந்திரங்களும் இலக்கியப் புத்தக வெளியீட்டைப் பரவலாக்கியிருக்கின்றன. உலகச் சந்தையும் வியாபாரப் போட்டியும்தாம் இதற்கு முக்கியக் காரணங்கள். தலித் எழுத்தாளருக்கு வாய்ப்புகள் தேடிவருகின்றன. தலித் படைப்புகளை வெளியிடுவதில் போட்டியும் இருக்கிறது - தற்குறித்தனமாக, படைப்புக்குரிய ஒழுங்கோ அழகியலோ இல்லாமல் எழுதினால்கூட. இதற்குக் காரணம் தலித் இலக்கியத்தை வியாபாரப் பொருளாக மாற்றும் நுண் அரசியல்தான். இந்த அரசியலைப் புரிந்து கொள்ளாமல், எழுதப்பட்ட வேகத்திலேயே நூலாக்கம் பெறுவது தவறா, வாய்ப்புகளை தலித் எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு என்று கேட்பது சரியல்ல. தலித் எழுத்தாளர்கள் நிறைய எழுதலாம், அவை உடனுக்குடன் புத்தகமாகவும் வரலாம், விற்கவும் செய்யலாம். ஆனால், அதற்கு மேல் என்ன? தலித்துகளின் எழுத்துக்கள்மீது அறிவுபூர்வமான விவாதங்கள், செயல்பாடுகள், பயிற்சிகள் இதுவரை தமிழில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா? தலித் படைப்புகள் உணர்ந்து படிக்கப்பட்டிருக்கின்றனவா? அவ்வாறு இல்லையெனில், தலித்துகளின் புத்தகங்கள் விற்பதால் என்ன பயன்? யாருக்கு லாபம்?
தலித்துகளின் வாழ்க்கை வெளிப்பாடு என்பது வலியும் ரணமும் கண்ணீரும் நிறைந்தது. இதைத்தான் இன்றைய சந்தைச் சூழல் கோருகிறது. தலித்துகளின் ஏக்கங்களை, இழிவுகளை, சில்லறைத்தனங்களை, காயத்தை, அசிங்கமான பகுதிகளை மட்டுமே இன்றைய சந்தை கோருவதேன்? தலித்துகளின் இப்படியான பகுதிகளை மட்டுமே தலித் எழுத்தாளர்கள் ஏன் உற்பத்திசெய்கிறார்கள்? இதுதான் அரிய வாய்ப்பு என்கிறார்களா? இதைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் தலித் எழுத்தாளர்கள் துடிக்கிறார்களா? வாழ்வின் சகல விஷயங்களையும் தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பது என்பது நோய்க்கூறு கொண்ட மனத்தின் செயல்பாடன்றி வேறென்ன? தேய்ந்துபோன பொது மொழியை, படிப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற சாரமற்ற மொழியை, ஊடகங்களின் செத்துப்போன மொழியை தலித்துகளின் மொழியாகக் கட்டமைப்பதும் மேட்டிமையோடும் மறுபுறம் இறைஞ்சும் தோரணையிலும் எழுதுவதும் தமிழில் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமா?
தலித்துகளின் படைப்புகளை வெளியிடுவதும் அதற்காகப் போட்டியிடுவதும் வெறும் வியாபாரத் தந்திரம் மட்டுமல்ல; நவீன இயந்திரத்தின் தேவை மட்டுமல்ல. தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமற்ற சமூகத்தின், படித்தவர் படிக்காதவர் என்ற வித்தியாசமற்ற சமூகத்தின், சிக்கலான முடிச்சுகளைக் கொண்ட உழைப்புச் சுரண்டலை, பொருளாதாரச் சுரண்டலைச் செய்கிற சமூகத்தின், தொழிலால் வாழிடத்தால், உணவுப் பழக்கத்தால் ஒதுக்கிவைத்த, ஒதுக்கிவைக்கும் நம் சமூகத்தின் இன்னொரு முகம் இது. இதற்குப் போட்டி போட்டுக்கொண்டு போவது என்பது தலித் எழுத்தாளர்கள் செய்யும் வரலாற்றுக் குற்றமாகும்.
தலித்துகளின் வாழ்க்கை என்பது கையேந்துதல், கூப்பாடு, ஒப்பாரி, அழுகை, அசிங்கம் மட்டும்தானா? தலித்துகளின் வாழ்க்கையில் சிரிப்பு, சந்தோஷம், விளையாட்டு, கலைகள் இல்லையா? தலித்துகளுக்கென்று பண்பாடு, வரலாறு, மொழி, ஒழுக்க நெறிகள், கூட்டு வாழ்வு எனச் செழுமையான பகுதிகளே இல்லையா? இப்பகுதிகளைத் தலித் எழுத்தாளர்கள் ஏன் எழுதுவதில்லை? இவற்றை ஏன் இன்றைய சந்தை கோருவதில்லை?
ஓர் இனத்தின் அடையாளம் அந்த இனத்தின் கலாச்சாரம்தான் என்றால், தலித் எழுத்தாளர்களின் நோக்கம் தலித் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதாகவும் அதன் செறிவான பகுதிகளை, கூறுகளைப் பூரணமாக உள்வாங்கி, அவற்றை இலக்கியப் படைப்பின் மூலம் அடுத்தடுத்த காலகட்டத்துக்குக் கடத்துவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் உலகத் தரத்துக்கு மட்டுமல்ல, இந்திய, தமிழ்த் தரத்துக்குக்கூடத் தலித் இலக்கியம் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதும் ஊளையையும் கோஷத்தையும் கோபத்தையும் பதிவுசெய்வதும் தமிழில் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவாது.
No comments:
Post a Comment