Friday, January 29, 2016

அரசனின் மமதையைப் போக்கிய பெண் புலவரின் சாமர்த்தியம்!!!

அலை வீசும் கடலோரம் மக்கள் கடல் காற்றைச் சுவாசித்தவாறு ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள். சிலர், கடலோரம் இங்கும் அங்குமாக நடக்கின்றனர். சிறுவர்கள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

டுக்கடலில் ஆர்ப்பரித்து எழுந்த அலை, உருண்டு திரண்டு புரண்டெழுந்து கடலின் கரையைச் சலார்.... எனத் தொடுகிறது. கரையோரத்தில் உலாவியவர்களின் காற் பாதங்களை அலை நீர் நனைக்கிறது.

கடற் கரையோரத்திலே இருவர் எதையெதையோ சிந்தித்தவர்களாகச் செல்கிறார்கள். அவர்களிள் பாதங்களையும் கடலலை நனைக்கிறது. கடலோரம் காற்று வாங்கிச் செல்லும் இந்த இருவரில் ஒருவர் ஆண். மற்றவர் பெண். இருவரும் இளமையைத் தாண்டியவர்கள். திறமைகள் வாய்ந்த அனுபவசாலிகள். முதுமையின் எல்லைக்கு வந்திட்ட முக்கியஸ்தர்கள்.

பொழுதுபோக்கிற்காகக் கடலோரம் காற்று வாங்கிக்கொண்டிருக்கும் அந்த ஆண், ஓர் அரசன், அந்த அரசனுக்கு மனதிலே ஓர் ஏக்கம். எப்போதும் என் அரண்மனைக்கு வந்து, அரச சபையிலே தத்தம் புலமைகளைக் காட்டி பரிசில்கள் பெற்றுச் செல்கிறார்களே, இவர்களுக்கு மட்டுந்தானா புலமைகள் உள்ளன? எனது திறமையையும் காட்டி, ஒருவரையாவது மட்டந்தட்டி தன் புத்தி கூர்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆதங்கப்பட்டான்.

அரசனின் இந்த எண்ணத்திற்கு ஏற்ற விதத்திலே வந்து வாய்த்தவர் ஒரு புலவர்; அதுவும் ஒரு பெண் புலவர். பெண் புலவர் என்றால், எல்லோரின் மனதிலும் முன் வந்து நிழலாகும். ஒரேயொரு பெண் புலவர் ஒளவையார்தான். ஆம், அந்த ஒளவையார்தான் இந்த அரசனுடன் சொல்லாட வந்து வாய்த்தார்.

அரசனும் ஒளவைப் புலவரும் கடற்கரையோரத்திலே உலாவிக்கொண்டிருக்கிறார்கள். கடலலை கரையில் மோதுகிறது. கரையோரம் காற்று வாங்கிய அரசனின் பாதத்தை மட்டுமல்ல ஒளவையாரின் பாதத்தையும் கடல் நீர் நனைத்து விடுகிறது.

இதுதான் சந்தர்ப்பம் என்று அரசன் நினைத்தான். ஒளவையாரை திக்கு முக்காடச் செய்யலாம் என்று எண்ணினான்.

தன் புலமையை வெளிப்படுத்த விரும்பினான். ‘நீர் வந்து காலில் விழலாமா’ என்று கேட்டு ஒளவைப் பிராட்டியாரைப் பார்க்கிறான். அவனுடைய முகத்திலே பரிகாசம் தென்படுகிறது. சிலேடையாகக் கேள்வி கேட்டுவிட்டேன். ஒளவையார் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று பெருமிதத்தோடு அரசன் புன்னகைக்கிறான். நகைக்கிறான்.

ஒளவையாருக்கு பழைய ஞாபகம் வருகிறது. ஒரு தடவை ஒரு புலவன் ஒளவையாரைப் பார்த்து ‘ஒரு காலில் நாலிலைப் பந்தலடி’ என்றான்.

பந்தல் என்றால் நாலு தூண்கள் அல்லது ஐந்து தூண்கள் இருக்கும். ஆனால் புலவன் கண்டதோ, நாலு பந்தலுக்கு ஒரு தூண். அதனாலேயே அப்புலவன், ‘ஒரு காலில் நாலு இலைப் பந்தலடி’ என்றான்.

அது மட்டுமா? ‘அடி’ என்னும் சொல்லையும் சேர்த்ததால், ‘அடியே’(ய்) என்னும் கருத்தையும் கொடுத்தது.

வயல் வரம்பிலே நடந்து செல்கையில், ஒளவையாரை ‘அடி(யே)’ என்று கேட்ட புலவனை, ஒளவையார் என்ன விட்டு வைத்தாரா! இல்லையே! சூட்டோடு சூடாக ‘டா’ என்று பதில் சொன்னார். ‘ஆரையடா சொன்னாய்!’ என்றார்.

யாரை அடா சொன்னாய்? என்னைப் பார்த்தா ‘அடி(யே) என்று கேட்டாய் என்று இங்கு பொருளாகிறது. அதே நேரம், புலவனின் கேள்விக்கும் பதிலாகிறது. ஆரை என்னும் ஆரங் கீரை ஒரு தண்டிலேதான் காணப்படும். மேலே நாலு இலை இருக்கும்.

ஒரு தண்டு ஒரு காலாக இருக்க, மேலே உள்ள நாலு இலைகளும், நாலு பந்தலாக இருக்கிறது.

இந்த ஆரங் கீரையைத்தான் அடா சொன்னாய்? என்று விடை கூறினாள் ஒளவை மூதாட்டி. சிலேடையாகப் பதில் கூறி, அந்தப் புலவனை மடக்கிய ஒளவையாருக்கு இந்த அரசன் எம்மாத்திரம்? இந்த மன்னனையா மடக்க முடியாது என்று எண்ணியவளாக, ‘நீர் வந்து காலில் விழலாமா?’ என அரசன் கேட்ட கேள்விக்கு, ‘நீரே வந்து காலில் விழுந்தால், நான் என்ன செய்ய?’ என்று சொன்னாளே பார்க்கலாம். அரசன் மெளனித்து நின்றான்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...