சக்திஜோதி
ஆண்-பெண் உறவு என்பது பிரிவு காலத்திலேயே மிகுந்த வலிமையுடன்
இருக்கிறதை அறியலாம். பிரிவு காலத்தில் தனிமையில் வருந்தும் தலைவி மிகவும்
வாடியிருப்பாள். அவள் வாழும் சூழலின் கருப்பொருட்கள் மூலமாகவும் தலைவனின்
நினைவில் மேலும் துயர் அடைவாள். அது போலவே பிரிந்து சென்றிருக்கும் தலைவன்,
தான் செல்லும் வழியின் கருப்பொருட்கள் மூலமாக தலைவியை நினைவு கொள்வான்.
இவ்விதமாக காணும் பொருள் யாவும் தலைவன் – தலைவி இருவருக்கும் அவர்கள்
ஒருவரை ஒருவர் அன்பு செய்த காலங்களை நினைவில் கொண்டுவந்து சேர்க்கும். இந்த
மனம் சங்க காலத்துக்கானது மட்டும் அல்ல… குறுந்தொகை மனதின் நீட்சியாக
கவிஞர் தேன்மொழி தாஸின் கவிதை இது…
‘வானவில் நீண்டு
பள்ளத்தாக்கை ஊடுருவி
சிகரத்தை சிகரத்தோடு
தைத்துக் கொண்டிருந்தது
மரஅணில்களின் காதலில்
சிதறிய கல்லின் ஓசை
வண்ணத்தில் பாய்ந்து
ஏழு ஸ்வரமானது
நீ தேவதேவன்
என் கண்களின் நிறம் கசக்கி
மேகங்களில் ஏற்றி
ஓட்டிக்கொண்டு போய்விட்டாய்
காட்டுத்தீயாய் பரவுகிறது
பூ மைனாக்கள் பேசி நிறுத்தும்
இடைவெளிகளில்
இடரும் நினைவுகள்…’
இந்தக் கவிதையில் தலைவனைப் பிரிந்து தனிமையிலிருக்கும் தலைவி அவள்
காணும் கருப்பொருட்களின் மூலம் அவனை நினைக்கிறாள் என்று அறிய முடிகிறது.
கருத்தும் செயலும் ஒன்றாக இருக்கும் தலைவன்-தலைவி இருவருக்கும், அவர்கள்
காண்கின்ற எல்லாமும் ஒருவரை ஒருவர் நினைவூட்டுவதாகவே இருக்கும் என்பதை
உணரலாம். பெண்ணின் தனிமை பேசுகிற இக்கவிதையிலிருந்து இந்த தனிமைக்
காலத்தில் ஆணின் நிலையைப் பேசுகிற சங்கப்பாடல் ஒன்றில் மனம் நிலைபெற்றது.
‘உள்ளார் கொல்லோ தோழி’ என்கிற வரியை விட்டு மனதை அகற்றவே இயலவில்லை.
எத்தனை நம்பிக்கை இந்தப் பெண்ணுக்கு. தலைவன் நம்மை நினைக்காமல் இருப்பாரா?
அப்படி அவரால் இருக்க முடியுமா? அவர் செல்லும் வழியிலெல்லாம் அவர் காண்கிற
அத்தனையும் அதன் அதன் தனித்த அர்த்த பரிமாணத்தில் நம்மை
நினைவுபடுத்தும்தானே எனச் சொல்கிற ஊண் பித்தையார் என்கிற பெண்பாற் புலவர்
எழுதியுள்ள பாடல் குறுந்தொகையில்
உள்ளது.
‘உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார்
கொல்லோ
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை
உரற்கா லியானை யொடித்துண்
டெஞ்சிய
யாஅ வரிநிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே…’
மிகப் பெரிய சோலைகளைக் கடந்து, பொருள் தேடிச் சென்றிருக்கும் தலைவர்
நம்மை நினைக்காமல் இருப்பாரா? நம்மை நினைத்திருப்பார் என்ற போதும் தாம்
மேற்கொண்ட வினை முற்றுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாததால் நம்மைத் தேடி அவர்
வரவில்லை. உரல் போன்ற கால்களையுடைய யானை
‘யா’ மரத்தின் கிளைகளை ஒடித்து உண்டுவிட்டு சென்றிருக்கிறது. அங்கே
மீதமிருக்கும் அடர்வு குறைந்த கிளைகளின் வழியாக வெயில் புள்ளிகளாக விழுகிற
அந்த மரத்தின் நிழலில் ‘மரல்’ என்கிற கொடியை தேவையான அளவுக்கு உண்ட
ஆண்மான் படுத்திருக்கிறது. அந்தக் காட்சியை மலைகளைக் கடந்து செல்லும்
தலைவர் பார்க்கிறார். இந்தக் காட்சியைப் பார்க்கும் தலைவர் தலைவியை
நினைக்காமல் எப்படி இருக்க முடியும் என தோழி, தலைவியிடம் சொல்லி அவளைத்
தேற்றுகிறாள். இந்தக் காட்சி எவ்விதம் தலைவியை நினைவுபடுத்துகிறது என வேறு
சில சங்கப் பாடல்களுடன் ஒப்பீடு செய்வது அவசியமாகிறது.
யானை ஒன்று மரத்தின் கிளையை ஒடித்து உணவு உண்டு செல்லுதல் போன்ற
காட்சி, ஆலந்தூர் கிழார் எழுதிய குறுந்தொகைப் பாடலில் (112) வருகிறது.
‘கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம்
படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்ட
என் நலனே…’
இந்த வரிகளை இங்கே இணைத்துப் பார்க்கலாம். மரத்தின் கிளையை பெரிய யானை
வளைத்து முறித்து உண்கிறது. ஒடிந்த கிளையானது முழுமையும் முறிந்து
நிலத்தில் விழாமல், நார் மிகுந்து வழியும் நீருடன், மரத்திலிருந்து
துண்டிக்கப்படாமல் இருக்கிறது. முற்றிலும் ஒடிந்து வாடி உலராமல்,
நீர்ப்பற்றுள்ள நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் தன்மையுடன்
இருக்கிறது. இதைப் போல தலைவியின் நலன் தலைவனால் முற்றிலும் உண்ணப்
படாமலும் பழைய நிலைக்குத் திரும்ப இயலாமலும் தழைத்து துளிர்க்கும் காதலுடன்
இருக்கிறாள் என்பதை இந்தப் பாடல் குறிப்புணர்த்துகிறது. ஊராரின்
தூற்றுதலுக்கு அஞ்சினால் தலைவன் மேலுள்ள காமத்தை விடவேண்டும். காமத்தை விட
வேண்டும் என்றால் தலைவியிடம் எஞ்சியிருக்கும் நாணத்தை விட வேண்டும்.
நாணத்தையும் விட இயலாமல் காமத்தையும் விட இயலாமல் இருக்கும் தலைவியின்
நிலையைச் சொல்கிறது இந்தக் காட்சி.
மற்றொன்று, பாலை பாடிய பெருங்
கடுங்கோவின் பாடல்…
‘நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே…’
தலைவன் விரைவில் திரும்பி வந்துவிடுவான் என்று கூறித் தலைவியை
ஆற்றுவிக்கும் தோழி கூறும் செய்தி இது. ‘இவன் சென்ற வழியில் ஆண் யானை ஒன்று
தன் பெண் யானையின் பசியைப் போக்க ‘யா’ என்னும் மரத்தின் பட்டையை
உடைத்து, உரித்து அதிலுள்ள ஈரத்தைப் பருகச் செய்யும். இந்த அன்பு தலைவன்
நெஞ்சைத் தொடும். அவன் உன் மீது பெருங்காதல் கொண்டவனாதலின் திரும்பி
வருவான்…’ யானையின் செயலை உவமையாகக் கூறாமல் குறிப்பாகக் கூறி, இறைச்சிப்
பொருளில் அமைந்திருக்கிறது இப்பாடல்.
சங்க காலம் என்பது இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பதை சங்கப் பாடல்களின்
வழியாக அறிய இயலுகிறது. முதற்பொருளான நிலமும் காலமும் சங்க கால வாழ்வியலைக்
கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. போலவே நிலத்தில் காலத்தால்
தோன்றுகிற கருப்பொருட்களான தெய்வம், மனிதர், பறவை, விலங்கு, ஊர், நீர்,
மரம், பூ, உணவு, இசை, தொழில் போன்றவை அந்தந்த நிலத்தின் அக ஒழுக்கங்களைக்
கட்டமைக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள பாடல்களில் வருகிற ‘யா’ மரம்
தொடர்ந்து மேலும் பல சங்கப் பாடல்களில் வருகிறது என்பதால், இந்த மரத்தைத்
தொடர எனக்குத் தோன்றியது. பாலை நிலத்திலுள்ள இந்த ‘யா’மரம் யாஅம், விளாம்,
மரா, சாலம், குங்கிலியம், ஆச்சா எனவும் அறியப்படுகிறது. இம்மரத்தின் பட்டை
நீர்ப்பசை மிக்கதென்று தெரிகிறது.
பவுத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் சாலம் மரம் எனவும், இந்த மரம்
சிற்பம் செய்யப் பயன்படுகையில் ஆச்சா எனவும், மருத்துவக் குறிப்புகளில்
குங்கிலியம் எனவும் வேறு வேறு பெயர்களில் வழங்கப்படுகிற ‘யா’மரம் சங்க
இலக்கியத்தில், தம் பெண்ணிடத்து அன்பு வைத்து காக்கிற ஆணின் மனதைச்
சொல்கிறதாகவும் இருக்கிறது. ஒரே மரம் அதன் பயன்பாட்டின் அடிப்படையில்
நிலத்தின் தன்மையில் வேறுவேறு பெயர் கொண்டு அறியப்படுவது போலவே பெண்ணும்
அவளுடைய தனித்த தன்மையை அவள் வாழும் நிலத்தின் பண்பே நிர்ணயிக்கிறது
என்றும் உணர முடிகிறது.
மரத்தின் கிளையை உடைத்து இலைகளைப் பறித்து உண்ணுகிற யானை தனக்கு
போதுமான அளவே உண்ணுகிறது என்கிற ஆலந்தூர் கிழாரின் பாடலில் தலைவியின்
தவிப்பினை அதன் கசிந்து வழியும் ஈரத்துடன் மறைபொருளாக தலைவனுக்கு
உணர்த்துகிறாள் தலைவி. பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடலில் தலைவியின்
தவித்து தகித்திருக்கும் நிலையை தணிப்பது தலைவனின் கடமையென
உணர்த்தப்படுகிறது. இந்த இரண்டு ஆண்பாற் புலவர்களின் பாடல் வழியாகச்
சொல்லப்பட்ட பொருளில் உடன்பட்டும் சற்று மாறுபட்டும் தலைவியின் நிலையை
தோழியின் குரல் வழியாக ஊண் பித்தையார் பேசுகிறார்.
‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்கிற சொல்லாடலை பெண் மதிக்கிறாள். அந்தச் சொல்லின் பொருளை ஆண் உணரும்படி அவளே தூண்டுகிறாள்.
ஓர் ஆணுக்கு செய்து முடிக்க வேண்டிய கடமைகளாக அவனுடைய செயலைப் பற்றிய
கவனக் குவிதலை அவனுக்குத் தூண்டுதல் செய்து, உள்ளிருந்து இயக்குவதும்
உடனிருந்து வழிப்படுத்துவதும் அவனுடைய பெண்ணின் செயல்பாடாக இருக்கிறது
என்பதை இவரின் பாடல் பேசுகிறது. அதனாலேயே தலைவன் மேற்கொண்டிருக்கும் வேலை
முடியாமல் அவர் திரும்ப மாட்டார் என்று தனக்குச் சொல்வது போல அவனுக்கும்
உணர்த்துகிறாள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்
என்கிற சொல்லாடலின் பின்பு ஒரு பெண்ணின் தனித்திறன் அடக்கப்படுவதான
எண்ணம் பரவலாக உள்ளது. உண்மையில் ஓர் ஆணை செயலூக்கம் மிக்கவனாக உருவாக்க
பெண்ணின் முழுமனமும் உடலும் அவனுடனே கூட இருந்து செயல்படுகின்றன.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பக்திக்கதைகள், மாயாஜால மந்திரக் கதைகள்
காலம் கடந்து பொதுமக்களின் கதைவெளிக்குள் பேசப்பட்ட அநேகமான திரைப்படங்கள்
எந்த விதமான கதைகளை பேசி வெற்றி பெற்றன என்று ஒரு புள்ளிவிவரம் எடுத்துப்
பார்க்கலாம். கதாநாயகனாக காட்டப்
படுபவர்கள் தத்தியாக, கோழையாக, கல்வியறிவு குறைவு பட்டவனாக, வெற்றி பெற இயலாதவனாக, தொடர்ந்த தோல்வியில் தளர்வுற்றவனாக,
தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக, எதிர்மறை எண்ணங்கள் கொண்டவனாக, ஊனமுற்றவனாக
அல்லது மனப் பிறழ்வு ஏற்பட்டவனாக, ஊதாரியாக, குடிகாரனாக, பெண் பித்தனாக,
அகம் பாவம் கொண்டவனாக… இப்படியான எதிர்மறை குணம் உள்ள ஆண்களைச்
சொல்லிக்கொண்டே போகலாம். இந்த ஆண்
களை காதல் செய்து அல்லது திருமணம் செய்து நல்வழிப்படுத்தி அவர்களை
சமூகத்தின் முக்கிய நிலைக்கு உயர்த்தி ஒரு பெண் செயல்படுவதான கதைகளே
இன்றளவும் வெற்றி பெறுகின்றன.
இவ்வகையான கதைகள் சரியா தவறா அல்லது உண்மையைத்தான் சொல்கின்றனவா என்பன
போன்ற வாதங்களை எல்லாம் கடந்து, நிகழ் வாழ்விலும் இவ்வகையான மனிதர்களை நாம்
காணத்தான் செய்கிறோம். காமத்தை விட இயலா மலும் நாணத்தை விட இயலாமலும்
தவித்திருக்கும் பெண்ணின் தயக்கத்தின் மீதே ஆணின் வாழ்வு கட்டப்படுகிறது.
அவள் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே அந்த ஆண் இயக்கம் மிக்கவனாக
மாறுகிறான். தொடங்கிய காரியம் முழுமையும் நிறைவடையாமல் தலைவியைத் தேட
மாட்டார் என்று திரும்பத் திரும்ப ஒரு பெண்ணே கூறுவதன் மூலம் ஆணின் செயலை
முழுமையும் முடிப்பதில்தான் பெண்ணின் கவனமும் இருக்கிறது என்று அறிய
முடிகிறது. ‘யா’மரம் போல பெண் தனக்குள் நீர்மையையும் வைத்திருக்கிறாள்…
உறுதிமிக்க சிற்பமாகவும் இருக்கிறாள்… செயலூக்கம் மிக்கவனாக நாம் காண்கிற
ஒவ்வொரு ஆணின் உள்ளிருந்தும் ஒரு பெண் இயக்குகிறாள்.
மிகப் பெரிய சோலைகளைக் கடந்து, பொருள் தேடிச் சென்றிருக்கும் தலைவர்
நம்மை நினைக்காமல் இருப்பாரா? நம்மை நினைத்திருப்பார் என்ற போதும் தாம்
மேற்கொண்ட வினை முற்றுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாததால் நம்மைத் தேடி அவர் வரவில்லை.
ஊண் பித்தையார்
இவரது பெயர் காரணம் தெரியவில்லை. ‘ஊண் பித்தி’ என்றும் சிலர்
குறிப்பிடுகிறார்கள். வேறு சிலர் இவர் பெண்பாற் புலவர் இல்லை என்றும்
சொல்கின்றனர். ‘உண்’ என்ற சொல்லின் நீட்டம் ‘ஊண்’. அதனால் ‘உணவு’ என்று
பொருள் கொள்ளலாம். ஆனால், ‘பித்தை’ என்கிற சொல்லுக்கு ‘தலைமயிர்’ என்று
பொருள் வருகிறது எனவும், உணவு, தலைமயிர் என்பதை இணைத்து தொடர்புகொள்ள
இயலவில்லை என தாயம்மாள் அறவாணன் குறிப்பிடுகிறார். என்றபோதிலும் ஊண்
பித்தையாரின் பாடல் அகப்பாடலாகவும் பெண் கூற்றாகவும் இருப்பதைக் கணக்கில்
கொண்டு, இவர் பெண்பாற் புலவராகவே அறியப்படுகிறார். இவர் பாடிய பாடல்
குறுந்தொகையில் ஒன்று மட்டும் கிடைத்துள்ளது. பாடல் எண்: 232
No comments:
Post a Comment