Thursday, April 11, 2019

தமிழின் செம்மொழித் தகுதிகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, 
கோயம்புத்தூர் - 641035.
பேச : 09842495241.

செம்மொழி என்ற நிலையில் ஒரு மொழி ஏற்கப்பட வேண்டுமானால் அதற்கென்று சில தகுதிப்பாடுகள் தேவைப்படுகின்றன. செம்மொழி என்று ஒரு மொழி அழைக்கப்பட வேண்டுமானால் அம்மொழி தொன்மைச் சிறப்பு வாய்ந்ததாக அதற்கென ஒரு தனித்த பண்பாடு உடையதாக, அந்தப் பண்பாடு எதனோடும் தொடர்பற்றதாக, வளமையான இலக்கியச் செழுமை வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுகிறார் ஜார்ஜ் ஹர்ட். இவ்வளவில் சிறப்பு பெற்ற உலகச் செம்மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், அரபி, சமஸ்கிருதம், சீனம் போன்ற பல மொழிகள் திகழ்ந்து வருகின்றன. இவற்றோடு தற்போது தமிழும் செம்மொழியாக ஏற்கப் பெற்றுள்ளது. தமிழுக்கு எப்போதோ கிடைக்க வேண்டிய இந்தப் பெருமை தற்போதுதான் கிடைக்கப் பெற்றிருக்கிறது.
தகைமைக்குரிய அளவுகோல்கள்
ஒரு மொழி “செம்மொழி” என் அழைக்கப்படுவதற்கு சில அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருக்கவேண்டும்.
அம்மொழி தொன்மை வாய்ந்த மொழியாக இருக்க வேண்டும்
அம்மொழி வேறு மரபிலிருந்து வந்த கிளையாக அல்லாமல் தற்சார்புரிமையுடைய மரபைக்கொண்ட மொழியாக இருக்க வேண்டும்
அம்மொழி ஏராளமான, உச்ச அளவு வளம் பொருந்திய பண்டைய இலக்கியங்களைக் கொண்ட  மொழியாக இருக்க வேண்டும்
என அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் பன்மொழி வல்லுனருமாகிய பேராசியர் ஜோர்ச் எல். ஹாட் குறிப்பிடுகின்றார்.
செம்மொழித்தகுதி என்பதன் பின்னணியில் உள்ள அரசியல், பொருளாதார பின்புலங்கள் இக்காலத்தாழ்விற்கு வகை செய்தன என்ற போதிலும் அவற்றை வென்றுத் தற்போது தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது. இதன் முலமாக இந்திய அரசாங்கம் தமிழ் வளர்ச்சிக்கு என்று தனித்த நிலையில் பொருள் ஒதுக்கீடு செய்து அதனை ஆண்டுதோறும் மேம்படுத்திட வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகின்றது.
தமிழ் தொன்மையானதாக, தனித்த பண்பாடு உடையதாக, இலக்கிய வளம் மிக்கதாக இருப்பதனோடு வாழும் மொழியாகவும் அது திகழ்ந்து வருகின்றது. பெரும்பாலான செம்மொழிகள் வழக்கில் இருந்து நீக்கி விட்டன. மக்களிடம் அவை பேச்சு மொழியாகக் கூட இல்லை. குறிப்பாக சமஸ்கிருதம், பாலி, எகிப்து போன்ற இவ்வகைப்பட்டனவே ஆகும். ஆனால் தமிழின் தொன்மைச் சிறப்பு. மரபு பண்பாடு போன்றன மாறாமல், சிதறாமல் இன்னமும் காக்கப் பெற்று வருகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் தமிழ் என்ற மொழியின் கட்டமைப்பு மட்டுமே ஆகும். தமிழ் என்பதை மன்னர்கள், புலவர்கள், மக்கள் வளர்த்தாலும் அவர்கள் மறைந்தபோதும் மறையாமல் தமிழ் காப்பற்றப்பட்டுக் கொண்டே வந்துள்ளது என்பது சிறப்பிற்கு உரியதாகும். இன்னமும் தமிழ் ஒன்றுதான் தமிழர்களைக் காக்கும். உலகைக் காக்கும். இந்தச் செயல்பாட்டிற்குத் தமிழ்ச் செம்மொழிக்கு ஒதுக்கப்படுகின்ற பொருளாதாரம் தக்க முறையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். மேலும் தமிழின் செம்மொழித் தகுதியை இரண்டாம் தரமானது என்ற விமர்சனமும் உண்டு. அதாவது சமஸ்கிருதம் வளமை பெற இந்திய அரசால் செய்யப்படும் அளவிற்கான பெரும் பொருளாதாரம் தமிழுக்கு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்தக் குற்றச் சாட்டும் நீக்கப் பெற்று தமிழ் தலையாய செம்மொழித்தகுதியைப் பெற்றே ஆகவேண்டும்.
இந்தியா உலகச் செம்மொழிகள் இரண்டினைப் பெற்றுள்ளது என்பதற்குத் தமிழும் சமஸ்கிருதமும் காரணங்களாகின்றன. இதன்முலம் இந்தியாவின் பழமை,மற்றும் பண்பாட்டுச் செழுமை, இலக்கிய வளமை உலக அளவில் நிலைப்படுத்தப் பெற்றுள்ளது என்பது கருதத்தக்கது. அறிவியல், இராணுவம், தொழில் நுட்பம், அரசியல் போன்ற பல நிலைகளில் உயர்வு பெற்றுள்ள பல உலக நாடுகளின் இடையில் பழமை மற்றும் பண்பாட்டுக் கூறு இவற்றின் வழியாக இந்தியா தகுதியான இடத்தைப் பெற்றுவிட்டது என்பதற்கு இவ்விரு மொழிகளும் அவற்றின் இலக்கியங்களும் அவற்றினைப் படைத்த தன்னலமற்ற மொழியறிஞர்களும், படைப்பாளர்களும் காரணம் என்பதை இந்நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பொதுவாக, செம்மொழிக்கு உரிய தகுதிகளாகப் பதினோரு கூறுகளை எடுத்துரைக்கலாம்.
1. தொன்மை 2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்மைப் பண்பு  6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு 7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை  8. இலக்கிய வளம் 9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தனித்தன்மை 11. மொழிக் கோட்பாடு. இப்பதினொன்றும் தமிழுக்கு உண்டு.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று திருக்குறளுக்குக் காலம் வகுக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தமிழ் என்பது தெளிவு. செம்மொழித் தகுதிக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை போதும் என்று முடிவு செய்யப் பெற்றுள்ளது. இதன்முலம் முத்த பழமையான மொழி தமிழ் என்பது உறுதியாகின்றது.
ஆனால் கற்காலம் முதலே தமிழர்தம் நாகரீகம் மொழி பண்பாடு போன்றன தோன்றி வளர்ந்துள்ளன என்று காணும்போது தமிழின் பழமை இன்னும் முற்காலத்ததாக அறியப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கே முன்பே வாளொடு முன் தோன்றி முத்த குடி என்ற தொடரின் உண்மைப் பொருள் இப்போதுதான் தெளிவுபடுகிறது. தமிழர்கள் கற்காலத்திலேயே வீரச் செறிவு மிக்க வாழ்வை வாழ்ந்தவர்கள் என்பதே இத்தொடர் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.
செம்மொழித்தன்மைகள் பதினொன்றுக்கும் உரியதாகத் தமிழின் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இதன் காரணமாக தமிழின் செம்மொழித் தன்மை உடைய இலக்கியங்களாகச் சங்க இலக்கியங்கள் அமைந்துள்ளன என்பது உறுதியாகின்றனது.
தமிழின் செம்மொழித் தன்மையை அறிந்து உணர்த்திய தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர்கள் பரிதிமால் கலைஞர்  பாவாணர் கால்டுவெல் போன்ற பலர் ஆவர். இவர்களின் செம்மொழிப் பற்றிய கருத்துக்கள் பல திறத்தன. இவர்கள் தரும் அனைத்து வரையறைகளும் தமிழுக்கு உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
பரிதிமால் கலைஞர் திருத்திய பண்பும் சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொன்முடிபுகளும் பொருண்முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தௌ;ளிதின் உணர வல்லதாய்ப் பழையன கழிந்து புதியன திருத்தமெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ்மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டு பாஷைக்கு நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற்படுமிடத்துப் பிற பாஷைச் சொற்களின்றித் தன் சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனிச் செம்மொழிக்குப் பொருந்துவனவாகும். ஆகவே தமிழ் தூய் மொழியுமாம். எனவே தமிழ்ச் செம்மொழியென்பது திண்ணம் என்று தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கருதுகின்றார்.
பாவாணர் பதினாறு தன்மைகளால் தமிழ் செம்மொழித் தன்மை பெற்றுள்ளது என்று கருதுகின்றார். 1.தொன்மை 2.முன்மை 3.எண்மை (எளிமை) 4.ஒண்மை (ஒளிமை) 5.இளமை 6.வளமை 7.தாய்மை 8.தூய்மை 9.செம்மை 10.மும்மை 11.இனிமை 12.தனிமை 13.பெருமை 14.திருமை 15.இயன்மை 16.வியன்மை என்ற பதினாறு  தன்மையும் தமிழுக்கு இருப்பதாகப் பாவாணர் கருதுகின்றார். இதன் காரணமாகவும் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது என்பது அறியத்தக்கதாகும்.
கால்டுவெல் தமிழின் தனித்தியங்கும் தன்மை பற்றிப் பேசுகின்றார். " திராவிடம் சமஸ்கிருத்தில் இருந்துப் பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையினராய மொழிநூல் வல்லுநர்க்கு ஏற்புடைத்தாய் விளங்கினும் இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது என்பது இவரின் கருத்தாகும்.
உலக மொழிகளில் செம்மொழிகள் எவை
2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட யுனெஸ்கோ நிறுவன அறிக்கையின்படி இன்று உலகில் 6700 மொழிகள் பேசப்படுகின்றன. இம்மொழிகளிலே எட்டு மொழிகள்தான் “செம்மொழிகள் எனப் பொதுவாக அடையாளம் காணப்பட்டுள்ளன
கிரேக்கம்
இலத்தீன்
எபிரேயம்
பேர்சியன்
வடமொழி
சீனம்
அரபிக்
தமிழ்
என்பவையே அந்த எட்டு மொழிகள்.
இவ்வகையில் பல அறிஞர்கள் தமிழின் செம்மொழித் தன்மையைத் தகுதியை உலகம் உணரும் அளவிற்கு எடுத்துரைத்துள்ளனர். தொடர்ந்த இந்தச் செயல்பாட்டின் வழியாகத் தமிழ் தற்போது செம்மொழித் தகுதியைப் பெற்று விளங்குகிறது.
தமிழின் செம்மொழித் தன்மையைத் தற்போது உலகிற்கு உணர்த்தியவர் உணர்த்தி வருபவர் கலிபோர்னியாவில் வாழும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் ஆவார்.  இவர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் என்பவருக்கு எழுதிய மின்மடலில் தமிழ் செம்மொழியாகும் தன்மையைத் தெளிவுபட எடுத்துரைத்துள்ளார்.
தமிழின் செம்மொழித் தகுதியை நிறுவிய அறிஞர்கள்
உலக மொழிகளில் முதன் முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ் மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை தமிழ்த் தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய “தமிழ் மொழியின் வரலாறு என்னும் நூலில் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினை பாவாணர்” கூடலு என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.
கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ் மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள் கி.பி. 18ஆம் நூற்றாண்டினராகிய மாதவச்சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிர விருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்குட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை, அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது.
தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞானமுனிவர் கருதுதற்கு உரியர். சுவாமி ஞானப்பிரகாசர்அடிகளார், தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார், பன்மொழி அறிஞர் தாவீது அடிகளார் போன்ற பன்மொழிப் புலமைமிக்க, தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ் மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் எழுத்துக்களிலும், ஆய்வு நூல்களில் நிலைநாட்டியுள்ளனர்.
தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருப்பதற்கான காரணங்களாக நான்கினை அவர் முன்னிறுத்துகிறார். தமிழ்மொழி பழமைச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் தனக்கான தனித்த இலக்கிய மரபினை உடையது. தமிழ் மொழியின் செவ்விலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மற்ற செம்மொழிகளின் இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கத்தக்கவை. இந்தியப் பண்பாடு மரபுகளின் தனித்துவம் உடையதாக தமிழ்ச் செவ்விலக்கியங்கள் விளங்குகின்றன.
ஏராளமான, வளமான இலக்கியங்களைக் கொண்ட மொழி மூன்றாவது ஒரு மொழி செம்மொழித்தகுதியைப் பெறுவதற்கு அம்மொழி ஏராளமான, உச்ச அளவு வளம் பொருந்திய பண்டைய இலக்கியங்களைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். தமிழ் இலக்கியங்களின் தரம் அல்லது பண்பு நலமானது. பெரும் இலக்கியங்களான வடமொழி, கிரேக்க, இலத்தீன், சீன, பேர்சிய, அராபிய இலக்கியங்களுக்கு நிகரான இடத்தில் தமிழை வைக்கின்றது. தமிழிலக்கியங்களின் நுணுக்கம், ஆழம் அதன் பரந்த பரப்பெல்லை, உலகளாவிய தன்மை போன்றவை உலகின் உயர்ந்த செழுமைமிக்க செவ்வியல் இலக்கியங்களின் வரிசையில் தமிழை நிமிர்ந்து நிற்கச் செய்கின்றன.
இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகள் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ் மண் வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.
சங்கச் செய்யுள் மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமை பெற்ற வெளிப்பாடாகத் திகழ்கிறது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் பிடியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில் சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும் எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகின்றார்.
அகம்,புறம் என் இலக்கியத்தின் கூறுகளைக் காட்டி, களவியல், கற்பியல் என்ற பிரிவுகளையும் நிலைநாட்டி நிற்பது தமிழ் இலக்கியம். இந்த நான்கு கருத்துக்களை அவர் எடுத்துக் கூறியதோடு மட்டுமில்லாமல் அதற்கான சான்றுகளையும் எடுத்துக் கூறி தமிழின் செம்மொழித் தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டினர். இவரின் மேலான இந்தக் கடிதம் இந்திய அரசின் பார்வைக்குச் சென்று மேலும் வலுவூட்ட அதன் காரணமாகத் தமிழ்ச் செம்மொழி என்று ஏற்கப் பெற்றது.
இந்தியக் குடியரசு தலைவரின் ஆணைப்படி இந்தச் செம்மொழித் தகுதித் தமிழுக்குக் கிடைத்துள்ளது. பழமையான இலக்கிய மரபுகளை இன்னும் தொடர்ந்து உணர்த்தி வரும் உலக மொழிகள் முன்றனுள் ஒன்று தமிழ் என்பதால் அதற்கு இந்நேரத்தில் செம்மொழித் தகுதி வழங்கப்படுகிறது என்று இந்தியக் குடியரசு தலைவரின் அறிக்கை இந்த நேர்வை குறிப்பிடுகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவரின் கருத்து தமிழ் மரபுக் காப்பினை முன்னிலைப் படுத்தியுள்ளது. தொடர்ந்து உலகிற்குத் தமிழ் செய்த பண்பாட்டுச் சேவையைப் போற்றியுள்ளது. மற்றவர்களின் கருத்தைத் தழுவியும் அதே நேரத்தில் தமிழின் உண்மையானப் பண்பினை அறிவிப்பதாகவும் இவ்வறிப்பு விளங்குகின்றது.
இவ்வகையில் தமிழின் செம்மொழித்தகுதி என்பது உலக அளவில் நிலைப் படுத்தப் பெற்று அதன் வழியாக  உலக அளவில் நாட்டளவில் தமிழ் வளர வழி வகை செய்யப் பெற்றுள்ளது. தமிழ் செம்மொழியாவதற்கு தமிழ் இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் முன்நின்றன என்ற போதிலும் அதற்கு மிக்க காலந் தள்ளியே இந்த நிலைப்பாடு தரப்பெற்றுள்ளது என்பது உணரத்தக்கது. தமிழச் செம்மொழியானதன் காரணமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு பொருளாதார வளமை ஆகியனவற்றைப் பயன்படுத்தி நேரிய நிலையில் செம்மொழித்தமிழைக் காத்துச் செல்லவேண்டியது உலகத்தமிழர்கள் அனைவரின் கடமையாகும்.
செம்மொழிக்கான தகுதிப்பாடுகளைக் கொண்ட தமிழ் மொழியை ஏன் இப்போதுதான் இந்திய மத்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்திருக்கின்றமைக்கு முக்கியமாக அரசியல் ரீதியான காரணங்களே அன்றி வேறில்லை எனக்கொள்ளலாம். துமிழைச் செம்மொழியாக அறிவித்தால் ஏனைய இந்திய மொழிகளும் செம்மொழி அந்தஸ்துக்கான கோரிக்கையை விடுக்கலாம் என்ற பயமே இந்தக் கால தாமதத்திற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழ் மொழியை செம்மொழி என அறிவித்தபோது இன்னுமொரு பிரச்சினையையும் மத்திய அரசு ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது செம்மொழியின் தொன்மைக்கு நிர்ணயம் செய்திருக்கிற கால அளவு என்பது ஆயிரம் ஆண்டுகள்தான். இதுதான் அந்தப் பிரச்சினை. அதாவது வடமொழிபோல அல்லாமல் தமிழ் சற்றே தாழ்வாக வைக்கப்பட்டே செம்மொழி அங்கீகாரமும் வந்துள்ளதாகவேபடுகிறது. அதனால்தான் தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள மொழியினரும் தங்கள் மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து தரப்படவேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கினர்.

Tuesday, March 05, 2019

கற்றலின் புதுமைகளும் மதிப்புக் கல்வியின் சவால்களும்

முனைவர் பூ.மு.அன்புசிவா 
தமிழ்த்துறைத்தலைவர், 
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி,
சரவணம்பட்டி, 
கோயம்புத்தூர் - 641 035.
பேச : 098424 95241.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு கற்பித்தலில் புதிய முறைகள் தோன்றின.   கற்பித்தலைச் சிறப்பாக்குவதற்கும் வெற்றிகரமாக முடிப்பதற்கும் முக்கியக் காரணியாக இருப்பது பாடங்களை முறையாகத் திட்டமிடுதலாகும்.  எவற்றைக் கற்பிப்பது எவ்வாறு கற்பிப்பது என்பதையும் ஆசிரியர் முன்கூட்டியே தெளிவுபெற்றிருக்கவேண்டும்.   கால மாற்றத்தால் கற்பித்தல் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு மொழிக்கு எற்றவாறும் நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறும் மொழிக் கற்பித்தலின் போக்கு மாற்றம்பெற்றுவருகிறது. புதிய கற்பித்தல் முறைகளாக விளையாட்டு முறை, நடிப்பு முறை,   செயல்திட்ட முறை,   தனிப்பயிற்சி முறை போன்றவற்றைக் கல்வியாளர்கள் குறிப்பிடுவர். இவ்வகையில் புதிய கற்பித்தல் முறைகளைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதையும் பார்ப்போம்.

கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். இக்காரணிகள் கற்பவர் தன் இலக்கு நோக்கி செல்லும் போதும், விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போதும், பழக்கவழக்கங்கள், கல்வி கற்றல் மூலம் அடையும் திறன்கள் முதலியவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது.
கடந்த நூற்றாண்டுகளில் கல்வி பற்றி பல்வேறு வித பார்வைகள் இருந்தன. கல்வி என்பது அறிவு சார்ந்தது (கற்றல் மூளையின் செயல்திறனால் நிகழ்கிறது) அல்லது வளர்ச்சி சார்ந்தது (கற்கும் அனுபவத்தால் அறிவு ஏற்படுகிறது) என்ற இருவேறுவித பார்வைகள் இருந்தது. இவ்விரு கொள்கைகளை பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்து பார்த்தோமானால் கற்றல் முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை உணரலாம். இவற்றை ஒருங்கிணைக்கும் போது பல்வேறு பிற காரணிகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் சில - அறிவுத்திறன், கற்கும் முறை, பலதரப்பட்ட தனித்திறன்கள், சிறப்பு தேவை உள்ளவர்கள் மற்றும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்களின் கல்வி கற்கும் முறை.

கண்ணோட்டம்
ப்ரூனரின் கோட்பாடுகளின்படி கற்றல் என்பது ஒரு சுறுசுறுப்பான நிகழ்வு. மாணவர்கள் தான் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளில் இருந்து புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர் என்பது தான் இக்கொள்கையின் சாராம்சம். கொடுக்கப்பட்ட தகவலை அலசி, ஆராய்ந்து, கோட்பாடுகளை உருவாக்கி அறிவுசார் முடிவுகளை மாணவர்கள் எடுக்கின்றனர். தகவலின் அர்த்தம் புரிந்து அதை வகைப்படுத்துகின்றனர். இது கொடுக்கப்பட்ட தகவலுக்கு அடுத்த நிலையை சிந்திக்க வாய்ப்பளிக்கிறது.
பயிற்று முறையைப் பொறுத்தவரையில் மாணவர்கள் அவர்களாகவே கொள்கைகளைக் கண்டுபிடிக்கும்படி பயிற்சியாளர் ஊக்கப்படுத்த வேண்டும். இருவரும் ஆக்கப்பூர்வ உரையாடல்களில் அதிகம் ஈடுபடவேண்டும்
  • இங்கு ஆசிரியரின் பணி என்பது பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படி மாற்றம் செய்வதுதான். பாடத்திட்டம் ஒரு சுருள் போல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளிலிருந்து புதியவற்றை அறிவார்கள்.
  • பயிற்று முறை கீழ்கண்ட நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
கற்றல் முறை பற்றிய பார்வை.
  • பாடத்திட்டம் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.
  • எந்த வரிசையில் கொடுத்தால் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் என்பதை அறிதல்
  • பாராட்டுதல்கள் & தண்டனைகளின் தன்மை மற்றும் அவற்றிற்கிடையேயான கால இடைவெளி எளிமை, புதிய கோணத்தில் வழங்குதல் அதிக தகவல்களை உள்ளடக்குதல்.

பயன்பாடு
ப்ரூனரின் இந்த பயிற்று முறைக்கான கோட்பாடு தனிமனித அறிவுத்திறனை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியுடன் இக்கொள்கை தொடர்புடையது. ப்ரூனரின் இக்கருத்துகள் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் முறை தொடர்பான கருத்தரங்கு மூலம் பெறப்பட்டது. சிறு குழந்தைகளுக்கான கணித, சமூக அறிவியல் பாடங்கள் வாயிலாக ப்ரூனர் தன் கொள்கைகளை விளக்குகிறார். ப்ரூனர், குட்நவ், ஆஸ்டின் (1951) ஆகியோர் எழுதிய புத்தகத்தில் பகுத்தறியும் திறன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மொழியைக் கற்றுக்கொள்ளுதல் பற்றியும் ப்ரூனர் குறிப்பிடுகிறார்.

அறிவார்ந்த கண்ணோட்டம்

எதையும் கற்றுக் கொள்ளதாவரை அதைக் கற்பிக்க முடியாது என சொல்லப்பட்டது. ஆகையால் அறிவியல் விஞ்ஞானிகள், கற்பித்தல் என்பது எப்படி நடக்கிறது என்பதில் கவனம் செலுத்தினார்கள்.  நடைமுறையில் பாரம்பரியமான சொற்பொழிவு முறை கற்பித்தலுக்கு பயனற்றது எனபதுடன், செய்துகாட்டுதல், கலந்துரையாடல் மற்றும் “செய்தல்” போன்றவைகள் தான் சிறப்பாக கற்றுக் கொள்வதற்கு சக்தி வாய்ந்த சாதனமாகும் என்பதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள “கற்றல் பிரமிடு” (டுநயசniபெ Pலசயஅனை) தெளிவாகக் காண்பிக்கிறது.   
பண்புகளைக் கற்பிப்பதற்கு நான் கலந்துரையாடலைக் காட்டிலும் செய்து காட்டுதலைத்தான் (ஒரு கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது) தேர்வு செய்வேன். இருப்பினும், அடுத்தவர்களுக்குக் கற்பிப்பதுதான் சிறந்த கற்றலாகக் கருதவேண்டும் என்பதையும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். இது பண்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பாலனோர் பயன் பெற வழிவகுக்கும். ஆகையால் முறைப்படி விருப்பம் மற்றும் திறமை உள்ள ஆசிரியர்களை குறிப்பாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்த பிறகு, அவர்கள் மூலம் பண்புகளை சிறந்த வழிமுறையில் கற்பித்தால், அது நிரந்தரமான நன்மைகளை ஏற்படுத்தும். மாணவர்கள் கற்றுக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் இதனால் பயன் பெறுவார்கள். இதனால் கூடுதலான தொடர் விளைவு (னழஅiழெ நககநஉவ) ஏற்படக்கூடும். 



கீழ்க்கண்ட நிலைகளில் கல்வி கற்றலிற்கு ஏற்ற சூழல் அமையும்:
மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்கிறார்கள் மற்றும் அதன் போக்கிலும் அமைப்பிலும் அவர்களின் பங்களிப்பு உண்டு.
செயல்முறை, சமூக, தனிமனித மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பிரச்சனைகளுக்கு இடையே நேரடி முரண்பாட்டின் அடிப்படையில் இம்முறை அமைந்துள்ளது.
சுய-மதிப்பீடு தான் இங்கு பிரதான மதிப்பிட்டு முறை. கற்றலின் முக்கியத்துவத்தையும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ரோஜெர் குறிப்பிடுகிறார்.
பகுத்துணர்ந்து கற்றல்
கவனித்தல், குறிப்பெடுத்தல் மற்றும் பிறர் போலச் செய்வது மூலமாக மனிதர்கள் சிறப்பாக கல்வி பெற இயலும். பகுத்துணர்ந்து கற்றல் என்பது கேட்டல், கவனித்தல், தொடுதல் அல்லது சோதனை வழி அறிதல் மூலம் நிகழ்கிறது. இம்முறையில் பிறர் செய்வது போல தானும் செய்வது மட்டுமல்லாமல் பல வழிகளில் அறிவு பெற வாய்ப்புள்ளது. இதைப்பற்றி இணையதளங்களில் படிப்பதால் மட்டும் இதன் முக்கியத்துவத்தை உணரமுடியாது. பகுத்துணர்ந்து கற்றல் என்பது மூளை அல்லது புலன் உறுப்புகள் வாயிலாக கல்வி அறிவு பெறுவதைக் குறிக்கிறது. ஒருபொருளைப் பற்றிய மனக் கண்ணோட்டமும் தகவல் பரிமாற்றமும் பகுத்துணர்ந்து கற்றல் முறையின் அங்கங்களாகும்.

பகுத்துணர்ந்து கற்றல் எவ்வாறு நிகழ்கிறது?
புலன் வழி கற்றல் முறையில் மாணவர்கள் கேட்டல், கவனித்தல், தொடுதல், வாசித்தல் அல்லது சோதனை மூலம் அறிதல், பின்னர் அவற்றை நினைவுபடுத்தி பார்த்தல் முதலியவை வாயிலாக கல்வி பெறுகிறார்கள். பெற்ற தகவலை பகுத்தறிதல், புதியவற்றை நினைவு படுத்துதல் என கற்பவர் புலன் அளவில் சுறுசுறுப்பாக உள்ளார்.
புலன் வழிக் கல்வி குறியீடுகள், எண் மதிப்புகள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட கலாச்சாரக் கூறுகளை உருவாக்கி அவற்றை மாணவர்களுக்கு அளிக்கிறது. இவ்வகை பகுத்துணர்ந்து கற்றல் மனிதர்களிடம் மட்டுமே நிகழ்வதல்ல. பிற விலங்கினங்களும் காட்சி வழியே இவற்றைப் பெறுகின்றன. விலங்குகள் காப்பகத்தில் ஒரு குரங்கு மனிதனைப் போலவோ பிற குரங்கைப் போலவோ செய்வதை நாம் காணலாம்.

கற்பித்தல் மற்றும் கற்றல் வழிமுறைகள் 
ஈடுபாடு, ஆராய்ந்து அறிதல், விளக்கமளித்தல்,  விவரித்தல், மதிப்பிடல், விரிவாக்குதல் மற்றும் தரம்) அமைப்பு சார்ந்த கல்விமுறை அடிப்படையில் கல்வியியல் பேராசியர்களின் ஆலோசனைகளைப் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு சார்ந்த முறையில்  கல்விக்கான பாடத்திட்டமும் செயல் முறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தாம் ஏற்கனவே பெற்ற கல்வியுடன் மேலும் பல புதிய தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்கின்றனர்.
இந்த ஒவ்வொன்றும் கற்றலின் ஒவ்வொரு கட்டத்தைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர் இருவரும் ஈடுபடும் பொதுவான செயலைக் குறிக்கிறது. முன்பு பெற்ற அறிவை பயன்படுத்தவும், அதை மேம்படுத்தவும், புதியவற்றைக் கற்றுகொள்ளவும் அதனை தொடர்ந்து மதிப்பீட்டுக்கு உட்படுத்துதலும் இங்கு நிகழ்கிறது.
ஈடுபடுதல்
'ஈடுபடும்” செயல் முன்பு கற்றவைக்கும், இன்று கற்கப்போவதற்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்; புதிய செயல்களை உருவாக்க வேண்டும்; மாணவர்களின் சிந்தனைகள் செயல்முடிவுகளை குறித்து இருக்குமாறு செய்ய வேண்டும். மனதளவில் அவர்கள் பாடத்திலும், செயல்முறையிலும் அல்லது பயிற்றுவிக்கப்படும் திறனில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பர். ஒவ்வொரு பாடமும் சிந்தனையைத் தூண்டும் ஒரு முக்கியமான கேள்வியைக் கொண்டிருக்கும். ஆராய்ந்து அறிதல் பகுதியில் உள்ளவற்றை அறியும் வண்ணம் சில கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

ஆராய்ந்து அறிதல்
இந்த கட்டத்தில் மாணவர்கள் பாடத்தை ஆழமாகப் படிக்கின்றனர். இங்கு அதிக வழிகாட்டுதல்களின்றி பாட புத்தகங்களை அவர்களாகவே படித்தறியும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் தேவைப்படும். ஆசிரியர்கள் சுழற்சி முறையில் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டு அவர்களின் உரையாடல்களை கவனித்து அவர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
விளக்கமளித்தல்
இக்கட்டத்தில் மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை விளக்கிக் கூற உதவுகிறது. தாம் புரிந்துகொண்டதை வார்த்தைகளில் விளக்கிக் கூறவோ அல்லது தங்களின் திறமைகளை வெளிக்காட்டவோ வாய்ப்பு அமைகிறது. இக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் புதிய கலைச்சொற்கள், வரையறைகளைக் குறிப்பிடவும் திறன்களையும் பண்புகளையும் விளக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.

விவரித்தல்
இங்குதான் மாணவர்கள் ஒரு பயிற்சியில் நேரடியாக ஈடுபடுகிறார்கள். தாம் புதிதாக கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்தவும் அதில் தான் பெற்ற அனுபவங்களையும் சோதனை முடிவுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. மாணவர்கள் தங்களின் பரிசோதனை முடிவுகளை மதிப்பீட்டுக்கு வைக்கவும், முடிவுகளை சமர்ப்பிக்கவும் செய்கிறார்கள்.

மதிப்பிடுதல்
மாணவர்களுக்கு கல்வி சென்று சேர்ந்திருக்கிறதா என்று ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் மதிப்பிடுகிறார். இக்கட்டத்தில் மாணவர்கள் சுய மதிப்பீடு, குழு மதிப்பீடு செய்யவும் மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகளையும் சாதனங்களையும் உருவாக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

விரிவாக்குதல்
இப்பகுதியில் பாடதிட்டத்திற்கு வெளியே உள்ளவற்றை அறிந்து கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாம் கற்றுக்கொண்டவற்றை பல புதிய விசயங்களுக்கும் புதிய சூழலுக்கும் பயன்படுத்த உதவுகிறது. எனினும் இச்செயல் மாணவர்களின் உற்சாகத்தால் விளைவதாகும். இது முழுக்க முழுக்க மாணவர்கள் தாங்களாகவே செய்யும் செயல். எனினும் ஆசிரியர்கள் சில ஆலோசனைகள் வழங்கலாம்.

தரங்கள்
ஒவ்வொரு பாடத்திட்டம் வாரியாக தரம் நிர்ணயிக்கப்பட்டு வரப்படுகிறது. தரம் நிர்ணயம் தேசிய, மாநில அல்லது பகுதிவாரியான தரத்திற்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. இது பள்ளி அல்லது வட்டார அளவில் பாடத்திட்டதில் என்னென்ன பாடங்கள் சேர்க்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது மற்றும் ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான வழிமுறைகளை அளிக்கிறது.

மற்றவர்களைப்போல் உருவகப்படுத்தி நடித்தல்

கலந்துரையாடல்
கற்பித்தல் முறையின் ஒரு பகுதியான உருவகப்படுத்தி நடித்தல் மூலம் மாணவர்களுக்கு அதிக பலன் கிட்டும் (உதாரணமாக பகத்சிங் போல பாவனை செய்து கருத்துக்களை விளக்குதல்). இந்த முறையை சிறப்பாக செயல் படுத்த முழுமையான தயாரிப்பு திட்ட வரையறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் பயிற்சிக்குப் பின் விளக்கிக் கூற கால அவகாசம் ஆகிய அனைத்தும் மிக அவசியம். இதன் மூலம் மாணவர்களின் சமயோஜித அறிவு மற்றும் குழு வழிகற்றல் ஊக்குவிக்கப்படுகிறது. இப்பயிற்சி மாணவர்கள் பலவித தகவல்களில் தெளிவு பெறவும் தான் படித்தவற்றிலிருந்து அன்றாட வாழ்வில் நடப்பவற்றை ஒப்பிட்டு பார்க்கவும் வழி செய்கிறது.

பல்வேறு வயது உடைய மாணவர்கள் கொண்ட வகுப்பில் கற்பித்தல்

பல வயது மாணவர்கள் கொண்ட வகுப்பில் கற்பித்தல் கற்போரின் பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கிறது. பாடங்கள் ஒவ்வொரு தலைப்பு வாரியாக பல்வேறு தரத்தில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு தரத்திற்கு தனித்தனி பயிற்சி வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் தங்களுக்குள் உதவி செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொருவரின் வயதிற்கேற்ப உள்ள திறன்களை அறிந்து கொள்ள முடிகிறது  இந்த கூட்டு முயற்சியில் மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு ரோல்-மாடல்களாகவும் (முன் மாதிரி) வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.
இவ்வகை வகுப்புகளில் பல்வகையான கற்பித்தல் முறைகளையும் மதிப்பீட்டு முறைகளையும் கையாளலாம். குழு அமைப்பதில் கடுமையான விதிமுறைகளில் தளர்வு, தனிப்பட்ட கற்றல் முறைகள், அனைவரின் பங்களிப்பு, பிறரை மதித்து நடத்தல் எனப் பல்வேறு வகையில் பயனுள்ளதாக உள்ளது.

குழுவழிக் கற்றல்
குழுவழிக் கற்றல் முறைதான் பிற முறைகளைக் காட்டிலும்  அதிக அளவில் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் குழுவாக செயல்படும் வாய்ப்பு, வேகமாகவும் செம்மையாகவும் கற்றுக்கொள்ளல், அதிகம் தக்கவைத்துக்கொள்ளும் திறன், கல்வி பயில்தல் பற்றி நேர்மறையான எண்ணம் கொண்டுள்ளார்கள் என முடிவுகள் தெரிவிக்கின்றன.  மாணவர்களை குழுக்களாக அமைத்து ஒரு செயலை முடிக்குமாறு பணித்தல் மட்டுமே இம்முறையில் நிகழ்வதில்லை. இம்முறையில் வெற்றி அடைய குறிப்பிட்ட வழிமுறைகள் பல உள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் அவற்றை அறிந்திருத்தல் அவசியம். சமீபத்தில் இம்முறை தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பல புகார்கள் வந்துள்ளன. மாணவர்கள் குழுவாக செயல்படும்போது ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட பிற வேலைகளில் ஈடுபடுதல் கூடாது. நன்கு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து குழுத்தலைவனாக நியமித்து அவற்றை கவனிக்க பணிக்கப்படுவதால் அவர்களுக்கு இத்திட்டம் ஏற்றதல்ல. இன்று பணியிடங்களில் அதிக எதிர்பார்க்கப்படும் பிறருடன் இணைந்து செயல்படுதல், கூட்டாக செயல்படுதல் முதலிய குணங்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது. ரிப்போர்ட்டர், பதிவுசெய்பவர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளார் முதலிய பல்வேறு பாத்திரங்களில் பணி செய்ய குழுவழிக் கற்றல் வாய்ப்பளிக்கிறது. குழுவில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்; அவர்களுக்குத் தனித்தனி பணிகள் உள்ளன. யாரும் இதில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட முடியாது. ஒரு குழுவின் வெற்றி ஒவ்வொரு தனிநபரின் உழைப்பில்தான் உள்ளது
மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் சிறுசிறு குழுக்களாக செயல்படுவது அவர்களுக்கும் தங்கள் குழு நண்பர்களுக்கும் உதவியாக இருக்கிறது. குழுவழிக் கற்றல் முறை கீழ்க்கண்ட ஐந்து பண்புகளைக் கொண்டுள்ளது.

குழுவாக செயல்படுவதன் மூலம் சிறப்பாக செய்யக்கூடிய செயல்களை மாணவர்கள் குழுக்களாக இணைந்து செய்து முடிக்கிறார்கள்.
இரண்டு முதல் ஐந்து நபர்கள் கொண்ட குழுவாக செயல்படுகிறார்கள்.
பொதுவான பணிகளை  செய்து முடிக்க தங்களின் கூட்டுறவு மற்றும் சமுதாய குணங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஒவ்வொருவரும் குழுவின் மற்ற உறுப்பினர்களை சார்ந்திருக்கின்றனர். செயல்திட்டம் அதற்கு ஏற்றது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு மாணவனுக்கும் தன் செயலில் முழு பொறுப்பு உண்டு.

கற்கும் முறைகள்
கற்கும் முறைகள் என்பது கல்வி கற்க பயன்படுத்தும் வெவ்வேறு வகையான உத்திகள் மற்றும் செயல்முறைகள் ஆகும்

காட்சி வழி கற்போர் : காட்சி வழி கற்றல்
இவ்வகை கற்போர் ஆசிரியரின் உடலசைவு மொழிகள் மற்றும் முகபாவனைகளைக் காணும்போதுதான் பாடத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். கவனிக்கும்போது எதுவும் கண்ணை மறைக்காமல் இருக்க இவர்கள் வகுப்பறையில் முன் வரிசையில் அமர விரும்புவர். இவ்வகை கற்போர்கள் காட்சி வழியாகவே சிந்திக்கிறார்கள். படங்கள், சார்ட்டுகள், படங்களுடன் கூடிய பாடப்புத்தகங்கள், வீடியோ மற்றும் கையடக்க குறிப்புகள் மூலம் நன்றாக புரிந்துகொள்வர். வகுப்பில் பாடம் நடத்தும்போதோ ஆசிரியர் கலந்துரையாடும்போதோ இவ்வகை கற்போர் முழுதும் குறிப்பு எடுக்க விரும்புவர்.


கேட்டல் வழி கற்போர் : செவி வழி கற்றல்
இவ்வகைக் கற்போர் லெக்ச்சர்கள், கலந்துரையாடல்கள், பாடத்தில் உள்ளவற்றைப் பற்றி பிறரிடம் விவாதித்தல் மற்றும் அவர்களின் கருத்துகளைக் கேட்டல் மூலம் சிறப்பாகப் பயில்வர். சொற்களில் பொதிந்திருக்கும் பொருளை ஆசிரியர் குரலின் பேச்சு சுருதி, வேகம் முதலியவற்றைக் கொண்டு அறிய முற்படுவர். இவர்களைப் பொறுத்தவரையில் எழுத்து வடிவில் உள்ளதைக் காட்டிலும் பேச்சு வடிவில் உள்ளது அதிக பயன்தரும். பாடத்தை சத்தமாகப் படிப்பதும்  டேப் ரெக்கார்டர் மூலம் பாடத்தினை கேட்பதும் அதிக பயன்தரும்.
உடல் அசைவு ஃ தொடுதல் வழி: அசைவுகள், தொடுதல் வழி கற்றல்.
இவ்வகை கற்போர் சுற்றுப்புற உலகில் உள்ளதை தாங்கள் நேரில் அறிந்து, ஆராய்ந்து கற்க விரும்புவர். ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். ஆராய்ச்சி செய்யும் எண்ணம் அவர்களின் கவனத்தை அடிக்கடி சிதைக்கும்.

தத்துவக் கண்ணோட்டம்–கற்பிப்பது பற்றி பெரிய விஞ்ஞானிகளும், தத்துவஞானிகளும் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்பொழுது பார்ப்போம். 

ஸ்ரீஅரவிந்தர்
“கற்பித்தலின் முதல் கொள்கை என்னவெனில் எதையும் கற்பிக்க முடியாது”

சுவாமி விவேகானந்தர்
“ஒருவருக்கு மற்றவர் உண்மையிலேயே கற்றுக் கொடுக்க முடியாது. ஒவ்வொருவரும் அவர்களாகவே கற்றுக் கொள்ள வேண்டும். வெளியிலுள்ள ஆசிரியர் ஆலோசனையை மட்டும் தான் தருவார். அது உள்ளுக்குள் இருக்கக்கூடிய ஆசிரியரை வேலை செய்யத் தூண்டி விஷயங்களைப் புரிந்து கொள்ளச் செய்யும்” 
சாக்ரடீஸ்
“நான் யாருக்கும் எதுவும் கற்றுக் கொடுக்க முடியாது. நான் அவர்களை சிந்திக்க வைக்கத்தான் முடியும்”

கலிலியோ 
“நீங்கள் மக்களுக்கு எதையும் கற்பிக்க முடியாது. அதை அவர்கள் அவர்களாகவே கண்டுபிடித்துக் கொள்ள மட்டும் தான் உங்களால் உதவி செய்ய முடியும்”

ஐன்ஸ்டீன்
“நான் என் மாணவர்களுக்கு ஒருபோதும் கற்றுக் கொடுத்தது இல்லை. நான் நிலைமைகளை மட்டும் தான் அவர்களுக்கு அளிக்க முயல்கிறேன். அவர்கள் அதிலிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.”

ஆக, இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தத்துவஞானிகள் போன்ற பெரியவர்கள், “எதையும் கற்றுக் கொடுக்க முடியாது கற்றுக் கொள்ளத்தான் முடியும்” என்கிறார்கள். என்றாலும், கற்றுக் கொள்வதற்கான செயல்முறைகளை ஆசிரியர்கள்தான் செய்து கொடுக்க வேண்டும். கணக்கு, அறிவியல், ஆங்கிலம், இசை அல்லது பண்புகள் எதுவாக இருந்தாலும் வகைமுறைகள் ஒன்றுதான். ஆசிரியகளுடைய பொறுப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் நல்ல முன்மாதிரியான ஆசிரியர்களின் தேவை மிகவும் அவசியமான ஒன்றாகிறது.  


ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக தமிழ் மன்ற நிறைவு விழாவும், மகளிர் தின விழாவும்  04.03.2019 காலை 10.00 மணிக்கு கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றன. விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் பேரா. என். மஞ்சுளா அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரி தலைவர் திரு. ஆ. கார்த்திகேயன் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு. முத்துசாமி அவர்கள், கல்லூரி ஆலோசகர் முனைவர் ந. கந்தசாமி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்கள். கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவா அவர்கள், “பெண் பெண்ணியம் ஆளுமை” என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஜெ. வித்யா நன்றியுறையாற்றினார். 300க்கு மேற்பட்ட மாணவிகளும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். 

Monday, February 25, 2019

நூல் வெளியீட்டு விழா

கோவை:இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, மொழித்துறை வாசிப்பு முற்றம், கோவை இலக்கிய சந்திப்பு, 100வது நிகழ்வு இணைந்து, காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. நவீன தமிழ் இலக்கிய விழாவை நேற்று நடத்தியது.கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், கவிஞர் வெங்கடேசனின் "புலன்” எனும் நூலை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் பூ.மு.அன்புசிவா வெளியிட, ஆராய்ச்சி மாணவி நித்யாதேவி பெற்றுக்கொண்டார்.மூத்த எழுத்தாளர் ரவீந்திரன் பேசுகையில், 'தமிழில் எழுதப்படும் இலக்கியம் அனைத்துமே, இலக்கியம் ஆகாது. மண் சார்ந்த இலக்கியமே உண்மையான இலக்கியமாக கருதப்படுகிறது. திறமை, முயற்சி இருந்தும், அவற்றை சரியான தருணத்தில் வெளிப்படுத்தினால் மட்டுமே வானளாவிய சிந்தனை திறனை மேம்படுத்த முடியும்'' என்றார்.தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் இடம்பெற்றன. இந்துஸ்தான் கல்லூரி மொழித் துறைத்தலைவர் திலீப்குமார் எழுத்தாளர் நடராஜன்கவிஞர் அவைநாயகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Wednesday, February 06, 2019

பற்களும் பாதுகாப்பு முறைகளும்!

முத்துப் போன்ற பற்கள்... முகத்தை அழகாக்கும்.  'பல் போனால் சொல் போச்சு’ போன்ற பற்களைப் பற்றிய பளிச் பழமொழிகள் ஏராளம். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களும் நம்மை எட்டிப்பார்க்கும். பற்கள்தான் ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன என்கிறது மருத்துவ உலகம். பற்களை ஆரோக்கியமாகப் பாதுகாத்தாலே போதும், பெரும்பாலான நோய்களுக்கு, நோ என்ட்ரிதான். 
மிகப் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரியாகப் பணிபுரிபவர் 55 வயதான கமலேஷ்.  யாருடனும் அதிகம் பேச மாட்டார். வெளியிடங்களுக்கு அதிகம் செல்ல மாட்டார். நண்பர்கள், உடன்பணிபுரிபவர்கள் விருந்துக்கு அழைத்தால்கூட போகமாட்டார். வார்த்தைகளை அளந்து பேசுவார். இதனால் மற்றவர்கள் மத்தியில். 'மனுஷன் வாயைத் திறக்கிறாரா பாரு... கல்லூளி மங்கன், அழுத்தக்காரன், திமிர் பிடித்தவன்’ என்றெல்லாம் பட்டப் பெயர்கள் இருந்தன.
ஆனால் உண்மையில் அவர் மிகவும் எளிமையான நபர். பல்லில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு அனைத்துப் பற்களையும் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பல் செட் போட்டுக்கொண்டார். மற்றவர்களுடன் பேசும்போது, எங்கே... பல் செட் கழன்றுவிடுமோ? என்ற பயம்.  சாப்பிடும்போது விழுந்து விடுமோ என்ற தயக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்.  பல் செட் போட்டது முதல், தன்னம்பிக்கை இழந்து அவர்பட்ட அவஸ்தைகள் ஏராளம். கடைசியில், கைகொடுத்தது நவீன முறையில், விழாத செயற்கைப் பல் கட்டும் (இம்பிளான்ட்) சிகிச்சை. தற்போது தன்னம்பிக்கையுடன் மற்றவர்களை எதிர்கொள்கிறார். அனைவருடனும் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருக்கிறார்.'' இப்படி எவ்வளவு பெரிய அந்தஸ்தில் ஒருவர் இருந்தாலும் அவரது தன்னம்பிக்கையையே தரைமட்டமாக்கக்கூடியது பற்கள்.
பற்களில்  ஏற்படும் பாதிப்பு கள், தீர்வுகள், பராமரிப்புகள், சிகிச்சைகள் என ஒட்டுமொத்த பல் பாதுகாப்பு குறித்தும் விரிவாய் தந்துள்ளனர் டாக்டர்கள் எம்.எஸ்.ரவி, சுனிதா ரவி, அஸ்வினி, சௌமியா.  பற்களைப் பற்றி விரிவாக வரிசையாகத் தொடுக் கப்பட்டுள்ள இந்த கையேடு உங்கள் பல் ஆரோக்கியத்திற்கான பளிச் கைடு!  
பராமரிப்பும்/பாதுகாப்பும்
பிரஷ்: ஹார்டு, மீடியம், சாஃப்ட் என மூன்று வகைகளில் பிரஷ்கள் கிடைக்கின்றன. பொதுவாக பல் மருத்துவர்கள் ஹார்டு பிரஷ்களை பரிந்துரைப்பது இல்லை. பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பிரஷின் தலைப் பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே அது நல்ல பிரஷ். அப்போதுதான் பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.  கைப்பிடி நன்றாக சௌகரியமாக இருக்க வேண்டும்.
பிரஷில் உள்ள இழைகள், பூ காம்புகளைப் போன்று வளைய ஆரம்பித்தால், உடனே பிரஷை மாற்றிவிட வேண்டும். பொதுவாக, இந்த இழைகள் 60 நாட்களில் வளைய ஆரம்பிக்கும். எனவே, 60 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது.  
பற்பசை: ஃப்ளோரைட், உப்பு, ஜெல் எனப் பல்வேறு பற்பசைகள் உள்ளன. ஃப்ளோரைட் உள்ள பற்பசையானது பற்களுக்கு வலிமை சேர்க்கும். அதுவும் 10 லட்சத்துக்கு ஒன்று என்ற அளவில் ஃப்ளோரைட் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ட்ரைக்ளோசான் உள்ள பற்பசைகள் ஈறுக்கு வலிமை சேர்க்கும். ஜெல் உள்ள பற்பசைகளைத் தவிர்க்கலாம்.
குழந்தைகள் பற்பசையை விழுங்கிவிடக்கூடும். இதனால் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, பிரத்யேகப் பற்பசைகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.  எவ்வளவு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் என்பதைவிட, பற்பசையால் எப்படி பிரஷ் செய்கிறோம் என்பதில்தான் சூட்சுமமே இருக்கிறது. ஒரு பட்டாணி அளவுக்கு பற்பசை இருந்தால் போதும்.  அதைக்கொண்டே பற்களைத் துலக்கலாம். இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் பல் துலக்கிவிட வேண்டும்.
பற்களை எப்படித் துலக்கலாம்?
பெரும்பாலும் பல் துலக்கும்போது பிரஷை இட வலமாக பற்களின் மேல் அழுத்தித் தேய்ப்பார்கள். இப்படி செய்வதால் எந்த பலனும் இல்லை. அழுத்தித் தேய்ப்பதால் பற்களின் மேல் இருக்கும் கிருமிகள், உணவுத் துகள்கள் பல் இடுக்கில் தங்கிவிடும். இதனால் பற்கள் தேயவும் வாய்ப்பு உள்ளது. டூத் ப்ரெஷ்ஷை 45 டிகிரி சாய்த்து மெதுவாக ஒவ்வொரு பல்லிலும், உங்கள் ஈரும், பல்லும் சந்திக்கும் இடத்தில் இருந்து மென்மையாக துலக்க வேண்டும். இதேபோன்றே முன்பக்கம், பின்பக்கப் பற்களை துலக்க வேண்டும். உணவு மெல்லும் பகுதியில் மட்டும் பிரெஷைக்கொண்டு ஒரு சுற்று சுற்றுவது போல துலக்க வேண்டும். ஒவ்வொரு பல்லுக்கும் செய்ய இரண்டு முதல் மூன்று நொடிகள் போதுமானது. இப்படி செய்வதன் மூலம் ஈறுகளில் ஒளிந்திருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் கிருமிகள் வெளியேற்றப்பட்டு பற்கள் பளிச்சிடும். பல் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பல் துலக்குவது நல்லது. பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்வது அவசியம். நாக்கை வேகமாக இழுக்காமல் மென்மையாக இழுத்து, நாக்கின் மேல் படிந்துள்ளவற்றை அகற்றலாம்.
இருமுறை பல் துலக்குங்கள்:
பல் துலக்கும் நுட்பத்தைத் தெரிந்து மிகச் சிறப்பாக பல் துலக்கினாலும்கூட,  90 சதவிகிதம் அளவுக்குத்தான் கிருமிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகித கிருமிகள் பெருக்கம் அடைந்து, பற்களைத் தாக்க 12 மணி நேரம் போதுமானது. அப்படி இருக்கும்போது பல் துலக்கும் நுட்பம் தெரியாமல் பல் துலக்குப்பவர்களுக்கு அதன் மூலம் கிருமிகள் அகற்றம் என்பது மிகக் குறைவாகவே இருக்கும். இந்த கிருமிகள் பற்களைத் தாக்கும் அளவுக்கு பெருக்கம் அடைய சில மணி நேரங்களே போதுமானது. எனவே, ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பல் துலக்கிய பிறகு ஈறுகளை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். நாக்கில் உள்ள பசையை அகற்ற வேண்டும்.
ஃபிளாஸ்ஸிங்:
பல் துலக்குவதன் மூலம் பல்லின் முன்புறம், மேல் புறம், பின்புறத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால், இரண்டு பற்களுக்கு இடையே உள்ள பகுதிக்கு பிரஷ் செல்ல முடியாது. இங்குதான் உணவுத் துகள்கள் சிக்கிக்கொள்கின்றன. தினமும் ஃபிளாஸ்ஸிங் செய்வதன் மூலம் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை அகற்றலாம். இரு பற்களுக்கு இடையில் மெழுகு தடவப்பட்ட மெல்லிய நூலை செலுத்தி மேலும் கீழுமாக மெதுவாக இழுக்கும்போது அங்குள்ள உணவுத் துகள்கள், அழுக்குகள் வெளியேற்றப்படும். இதற்கென உள்ள டென்டல் ஃபிளாஸ்ஸிங் கயிறுகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
இயற்கை பிரஷ்ஷிங்:
இயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட்கள் நம்முடைய பற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது. அதிக அளவில் நார்ச் சத்து உள்ள பச்சைக் காய்கறி போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது உடலுக்கும், பற்களுக்கும் ஆரோக்கியமானது. சுத்திகரிக்கப்பட்ட மைதா, சர்க்கரை போன்றவை பற்களைப் பாதிக்கக்கூடியவை. கொத்தமல்லித் தழையை லேசாகக் கழுவிவிட்டு சமைக்காமலேயே பயன்படுத்துகிறோம்.  மேலும், பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடும்போது, உணவுகளில் கிருமிகள் இருக்கலாம். இவை பற்களையும் பதம் பார்க்கும். காய்கறிகளை வெந்நீரில் போட்டு லேசாக வெந்ததும் சாப்பிடுவது நல்லது.
பளீர் பற்கள்
காபி, தேநீர் போன்றவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பைக்கு மேல் குடிக்கக் கூடாது. புகைத்தல், மது அருந்துதல், கோலா கலந்த குளிர்பானங்கள் அருந்துவது, பாக்கு போடுதல் போன்றவற்றால் பற்களில் கறை ஏற்படுவதுடன், பல்லின் ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைக்கும். பல்லில் அடிபடுவதாலும் பழுப்பு நிறம் ஏற்படலாம்.
கர்ப்பக்காலத்தில் டெட்ராசைக்ளின் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்பவர்களின் சிசுவுக்கு பற்களின் நிறம் மஞ்சளாக இருக்கலாம். பொதுவாக டாக்டர்கள் கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரைகளைப் பரிந்துரைப்பது இல்லை. சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளும்போது இந்தப் பிரச்னை வரலாம் என்பதால் ஜாக்கிரதை.  பளிச்சென்ற பற்கள் கிடைக்க, பல் மருத்துவர்கள் ப்ளீச்சிங் என்ற சிகிச்சை அளிப்பார்கள். வீட்டிலேயேகூட டாக்டரின் ஆலோசனையின் பேரில் பற்களுக்கு ப்ளீச்சிங் செய்துகொள்ளலாம்.
மவுத் வாஷ்
மவுத் வாஷ் பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. பற்களை வலுவாக்க, ஈறுகளை வலுவாக்க, பல் கூச்சத்தைப் போக்க என மூன்று வகையான மவுத் வாஷ்கள் வருகின்றன. பற்களை வலுவாக்கும் மவுத் வாஷில் ஃப்ளோரைட் கலந்திருக்கும். புத்துணர்வு தரக்கூடிய மவுத் வாஷ்கள் ஈறுகளைப் பலப்படுத்தும். நம் வாயில், கெடுதலை விளைவிக்கும்  நுண் உயிரிகள் இருப்பதுபோல், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளும் உள்ளன. மவுத் வாஷ் செய்யும்போது இந்த கெடுதலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுடன், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் அழிந்துவிடும். இதனால் வாய் உலர்ந்துபோகும் தன்மை போன்ற பிரச்னை ஏற்படலாம். எனவே, டாக்டரின் பரிந்துரையின்றி மவுத் வாஷ்களைப் பயன்படுத்த வேண்டாம்.  
பாதிப்பும் / தீர்வும்
ஈறு: ஈறுகள்தான் நம் பற்களைப் பாதுகாக்கும் அமைப்பு. பல் நேரடியாக தாடை எலும்புடன் இணையவில்லை. நார் போன்ற அமைப்புகளே பல்லையும் எலும்பையும் இணைக்கின்றன. இந்த எலும்பை போர்வை போன்று மூடிப் பாதுகாக்கிறது ஈறு. பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் 1.2 மி.மீ. ஆழம் உள்ளது. இங்குதான் பற்களைப் பாதுகாக்க ஒரு வகையான திரவம் சுரக்கிறது. பற்களில் உணவுத் துகள்கள், காரை படியும்போது ஈறு பாதிக்கப்பட்டு, பல்லையும் எலும்பையும் இணைக்கும் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இந்த ஆழமானது 3 முதல் 4 மி.மீ. அளவுக்கு செல்வதை 'கம் பாக்கெட்’ என்று சொல்வோம். உணவுத் துகள்கள் அதிக அளவில் உள்ளே போய் உட்கார்ந்துகொள்ளும். உணவுத் துகள்களில் கிருமிகள் வளரும். இதை வெளியேற்ற உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள் போராடும். இந்த போராட்டத்தில் உடல் பாதுகாப்பு அமைப்பு தோல்வியுறும்போது கிருமி வேகமாக வளர்ந்து எலும்பை அரிக்கத் தொடங்கும். 50 சதவிகிதம் அளவுக்கு ஈறுகள் ஆழம் அதிகரிக்கும்போது பல் வலுவிழக்கிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்தலாம். பிரச்னையின் தீவிரத்தை பொருத்து சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.
ஈறுகளில் வீக்கம் ஏற்படும்போது அதை சரிப்படுத்த நம் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டியே குழந்தை பிறப்பதற்கு, இந்த ஹார்மோன் காரணமாகிவிடுகிறது. மேலும், இந்த ஹார்மோன் இதய நோயையும் உண்டுபண்ணலாம்.  எனவே, கர்ப்பிணிகள் ஈறுகளில் ரத்தக் கசிவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறவேண்டும்.
வாய் துர்நாற்றம்:
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொண்டு வாய் கொப்பளிக்கும்போதோ அல்லது பல் துலக்கும்போதோ வெளியேறவில்லை என்றால் அழுகிப்போய் கெட்ட வாடை வீசலாம். தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசலாம். ஈறு நோய், சொத்தைப் பல், வயிறு தொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் அடிக்கலாம். இதுபோன்று இன்னும் வேறு பல காரணங்கள் உள்ளன. வாயில் துற்நாற்றம் எதனால் வீசுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பது மட்டுமே இந்த பிரச்னைக்குத் தீர்வு. வெறும் மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது பிரச்னையைத் தற்காலிகமாக ஒத்திப்போடுமே தவிர, முழுமையான தீர்வைத் தராது.
பற்கூச்சம்:
பற்களின் எனாமலை அடுத்துள்ள டென்டைன் என்ற பகுதியில் குளிர்ந்த அல்லது சூடான பானங்கள் நேரடியாகப் படும்போது பற்கூச்சம் ஏற்படும். டென்டைன் பகுதியில் நிறைய மெல்லிய குழாய்கள் போன்ற அமைப்பு இருக்கும். இதன் மூலம் வெப்பம், குளிர் போன்றவை ரத்தநாளங்கள், நரம்புகள் கொண்ட பகுதியான பற்குழிக்குக் கடத்தப்படுவதால் இந்த பற்கூச்சம் ஏற்படுகிறது. முறையற்ற வகையில் பற்களைத் தேய்ப்பது, நீண்ட நேரம் பல் தேய்ப்பது போன்றவற்றால் எனாமல் தேயவும்,  ஈறுகளும் பற்களில் இருந்து விலகிச் செல்லவும் வாய்ப்புள்ளது. ஈறுநோய்கள் ஏற்படும்போது ஈறுகளில் வீக்கம், பல் உடைதல், தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கம் போன்றவற்றாலும் கூச்சம் ஏற்படலாம். எதனால் பற்கூச்சம் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும்.
ஆயில் புல்லிங் அவசியமா?
இயற்கையான நல்லெண்ணெயில் மட்டுமே வாய் கொப்பளிப்பு செய்யப்படுகிறது. 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டியது இல்லை. ஆனால், ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு பிரஷ் செய்வதும், வாயை நன்றாக சுத்தம் செய்வதும் அவசியம். ஆயில் புல்லிங் செய்வதால் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த் தொற்று, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற பிரச்னைகள் நீங்குவதாகக் கூறப்படுகிறது. உடலுக்கு கெடுதல் இல்லாதது என்பதால், ஆயில் புல்லிங் செய்வதில் தவறு இல்லை.
 வரிசையும்/அமைப்பும் ஞானப்பல்:
விவரம் தெரிந்த 17-18 வயதில் ஒருவருக்கு கடைவாயில் முளைக்கும் பல்லுக்கு ஞானப்பல் என்று பெயர். ஒருகாலத்தில் மனிதனுக்கு 44 பற்கள் இருந்தது. அப்போது வேட்டையாடுவது, எதையும் பச்சையாகவே சாப்பிடுவது என இருந்ததால் அத்தனைப் பற்கள் தேவைப்பட்டன. இன்று பற்களால் மென்று சாப்பிடும் பழக்கம் குறைந்துகொண்டே வருவதால், தற்போது இருக்கும் 32 பற்கள் வரும் காலத்தில் 28 பற்களாக குறைந்துவிடலாம். இந்த ஞானப் பற்கள் வளரப் போதுமான இடம் இல்லாததால் மற்ற பற்களில் முட்டிக்கொண்டு பற்களின் வரிசையையே பாதிக்கச் செய்துவிடுகிறது. இதனால் உணவு மெல்லுதல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பிரச்னை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஞானப் பற்களை அகற்றிவிடுவது நல்லது.
தற்போது தூக்க நிலையில் ஞானப் பற்களை அகற்றும் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. பற்களைப் பிடுங்க வேண்டிய நபருக்கு, மயக்க மருந்து நிபுணர் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தப்படும். நன்கு தூக்க நிலையில் இருக்கும்போது, உணர்வு நீக்க ஊசியை செலுத்தி பற்கள் பிடுங்கப்படுகின்றன. இதனால் பல் பிடுங்கும்போது வலி இருக்காது. விழிப்பு நிலைக்கு வரும்போது, வலி குறைவாகவே இருக்கும்.
'கிளிப்’ பற்றி கிளிக்!
பற்கள் தூக்கலாகவோ, உள்ளடங்கியோ, முன்னும் பின்னுமாகவோ இருந்தால் கிளிப் போட்டு சரிசெய்யலாம். கிளிப் போடுவது என்பது பற்களின் அமைப்பில் உள்ள பிரச்னையைப் பொருத்தது. வளரும் குழந்தைகளுக்கு பால் பற்கள் அனைத்தும் விழுந்து நிலையான பற்கள் தோன்றும் நேரத்திலேயே தேவைப்படலாம். சிலருக்கு அதற்கு முன்பாகவே செய்ய வேண்டியிருக்கலாம். முன்பக்கமாக போடுவதால் முக அழகு குறையும் என்று நினைப்பவர்களுக்கு, மறைவாக பல்லுக்கு பின் பக்கமாகவும் போடக்கூடிய கிளிப் வகைகள் வந்துவிட்டன.  யாருக்கு எந்த மாதிரியான கிளிப் போடலாம் என்பது அவரது பற்களைப் பரிசோதித்த பின்னரே தெரியவரும். கிளிப் அணிந்திருக்கும் காலத்தில் பற்கள் பராமரிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கிளிப் இடுக்குகளில் உணவுத் துகள்கள் தங்க வாய்ப்பு உண்டு. இதற்கென உள்ள பிரத்யேக பிரஷ் கொண்டு துணுக்குகளை அகற்றவேண்டும்.
கிளிப் போடும் சிகிச்சை முடிய ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம். கிளிப் போட்ட பிறகு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒரு முறை டாக்டரை சென்று சந்திக்க வேண்டும்.
அவரது ஆலோசனைப்படி, உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாடையின் அளவு சிலருக்கு அதிகமாக இருந்தால், முதலில் அதை சரிசெய்ய வேண்டும். பிறகு, அறுவைசிகிச்சை தேவைப் பட்டால், பல் மற்றும் தாடையின் அளவை எக்ஸ்ரே மூலம்  கண்டறிந்து, அதற்கேற்ப பல் மருத்துவரால் முடிவு செய்யப்படும்.
ஸ்லீப் ஆப்னியா:
தூக்கம் தொடர்பான பிரச்னை ஏற்படுவதற்கு தாடை மற்றும் பற்களின் அமைப்பும் ஒரு காரணம். குறட்டை விடுவதற்கும் இது ஒரு காரணம். ஒருவருக்குப் பற்கள் தேய்வதால் தாடையின் உயரம் குறைந்து, தூங்கும்போது நாக்குக்கு போதுமான இடமும் குறைந்து, நாக்கு தொண்டைக்கு சென்று மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்திவிடும். இந்த பிரச்னையை சரிசெய்ய முடியும். தாடையின் உயரத்தைக் கூட்டி, சில வகை கிளிப் போடுவதன் மூலம் குறிப்பிட்ட வகை 'ஸ்லீப் ஆப்னியா’வை சரி செய்யலாம்.
சிகிச்சை முறைகள்
பல்சொத்தை:
  பல் சொத்தை எந்த அளவுக்குப் பரவியுள்ளது, அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொருத்து சிகிச்சை முறைகள் மாறும். பல்லில் எனமாமல், டென்டின், பற்கூழ் என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் பற்கூழ் பகுதிதான் பற்களின் இதயம் என்று சொல்லும் அளவுக்கு முக்கியமானது. பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பல் சொத்தை உள்ளது என்பதைப் பொருத்து ஃபில்லிங் செய்ய வேண்டுமா அல்லது ரூட் கெனால் செய்ய வேண்டியிருக்குமா என்று முடிவு செய்யப்படும்.  
  பல் சொத்தை உள்ளதா, எந்த நிலையில் பாதிப்பு உள்ளது என்பதை சாதாரணப் பரிசோதனை மூலமாகவும், பிறகு எக்ஸ்ரே மூலமாகவும் கண்டறியப்படும். சொத்தையானது எனாமல் வரை மட்டுமே இருந்தால் அதற்கு சாதாரண ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் போதுமானது. டென்டின் வரை பாதிப்பு இருந்தால் பல் கூச்சம் இருக்கும். அதைத் தொடர்ந்து பல் வலி வரும். பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்து ந்பில்லிங் செய்யப்படும்.
 சொத்தையானது பற்கூழுக்கு அருகில் அல்லது பற்கூழ் வரை சென்றுவிட்டது என்றால் ரூட் கெனால் மட்டுமே தீர்வு. ஒரு காலத்தில் இப்படிப்பட்ட பாதிப்புக்கு பல்லைப் பிடுங்குவது மட்டுமே தீர்வாக இருந்தது. அதற்கு மாற்றாக வந்ததுதான் ரூட் கெனால்.
 பல்லின் உள்ளே வேர்ப் பகுதி உள்ளது. இந்த வேர் வழியாகத்தான் ரத்தமானது பல்லின் மையப் பகுதிக்கு வருகிறது. சொத்தையானது இந்த மையப் பகுதியைத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சொத்தை வந்த வழியாக கிருமித் தொற்றை சுத்தம்செய்து, பற்கூழை அகற்றிவிட்டு, வந்த பாதையை சுத்தம்செய்து, பிரத்யேகமான எதற்கும் பாதிப்பை ஏற்படுத்தாத, பாதிக்கப்படாத பொருளைக்கொண்டு மூடுவதுதான் ரூட் கெனால்.
 ரூட் கெனால் செய்த பிறகு, 15 நாட்களுக்குப் பிறகு அந்த பல்லுக்கு கேப் போடப்படும்.
மரம் பச்சையாக இருக்கும்போதுதான் கிளைகளை வளைக்க முடியும். காய்ந்துவிட்டால், வளைக்கும்போது ஒடிந்துவிடும். ரூட் கெனால் செய்து, பற்கூழ் பகுதியை அகற்றிவிடுவதால் பல்லுக்கு ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் பல் காய்ந்துபோய் நொறுங்கிவிடும். இதைத் தவிர்க்க கேப் போடுவது மிகவும் அவசியம். செராமிக், தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் என அவரவர் வசதிக்கு ஏற்ப இதைப் போட்டுக்கொள்ளலாம்.
  சிலருக்கு ரூட் கெனால் சிகிச்சைகூட செய்ய முடியாத அளவுக்கு சில பற்கள் மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய பற்களை அகற்றிவிடுவது மட்டுமே ஒரே வழி. பல் மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளியில் சந்திப்பதன் மூலம் பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்திவிட முடியும்.
செயற்கை பல்:
ஒரு பல் எடுத்தால், அதன் அருகில் உள்ள மற்ற பற்கள் அந்த இடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். மேல் பகுதியில் உள்ள பல் கிட்டத்தட்ட பயனற்ற பல் போலத்தான். அதுவும் பல் இல்லாத இடம் நோக்கி நகர ஆரம்பிக்கும் (விவீரீக்ஷீணீtவீஷீஸீ ஷீயீ tமீமீtலீ). இதைத் தவிர்க்க, அந்த இடத்தில் பொய் பல் கட்ட வேண்டியது மிகவும் அவசியம். முன்பு பிரிட்ஜ் என்ற முறையில் இடைவெளி உள்ள இடத்தில் செயற்கைப் பல் கட்டப்பட்டது. ஆனால் இந்த முறையில் நன்றாக இருக்கும் இரண்டு பற்களையும் செதுக்க வேண்டியிருந்தது. அந்த இரண்டு பற்களின் ஆதரவுடன் எளிதில் கழன்றுவிடாதபடியான செயற்கைப் பல் கட்டப்பட்டது.
பக்கத்தில் உள்ள இரண்டு பற்களின் ஆதரவில் இந்த செயற்கைப் பல் இருப்பதால், அந்த பற்களில் ஒன்றில் பாதிப்பு வந்தாலும் இதைப் பொருத்தமுடியாது. இது போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும், பல பற்கள் மாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படும்படி வந்ததுதான் இம்பிளான்ட். அதாவது செயற்கையாக பல்லின் வேர் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல் கட்டும் தொழில்நுட்பம்.
இம்ப்ளான்ட்:
இயற்கையாக எப்படி வேர் போன்ற அமைப்புடன் பல் உள்ளதோ அதே போன்று செயற்கையாக ஸ்கூரு போடும் அமைப்பு இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை மூலம் உருவாக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதன் மேல் செயற்கைப் பல் கட்டப்படும். கழன்றுவிடும் என்ற பயம் இந்தத் தொழில்நுட்பத்தில் இல்லை. ஒரு பல் முதல் அனைத்துப் பற்களுக்கும் இம்பிளான்ட் சிகிச்சை செய்யலாம்.
அச்சு அசலாக, இயற்கைப் பல் போன்று தோற்றம் அளிக்கும் செராமிக் பற்களைக் கட்டிக்கொள்ளலாம்.  
தற்போது சிபிசிடி என்கிற டென்டல் சிடி ஸ்கேன் கருவி வந்துள்ளது. இதன்மூலம், எலும்பின் அடர்த்தி, ஆழம், இம்பிளான்ட் போடும் இடத்தில் நரம்புகள், ரத்தக் குழாய்கள் செல்கிறதா, நரம்பு ரத்தக்குழாய்க்குப் பாதிப்பின்றி எப்படி இம்பிளான்ட் போடலாம் என்பது போன்ற முடிவுகள் எடுக்க இந்த டென்டல் சிடி ஸ்கேன் உதவும்.
ஒரே நாளில் பல் கட்டும் நவீன முறைகளும் உள்ளன. இதற்கு டாக்டரை அணுகி எந்த மாதிரியான பல் வேண்டும் என்பது உள்பட சில ஆலோசனைகள், பரிசோதனைகள், வடிவமைப்பு போன்றவற்றை முடிவு செய்துவிட வேண்டும். அறுவைசிகிச்சை நடக்கும் தினத்தில் இம்பிளான்ட் பொருத்தப்பட்டு, ஏற்கனவே தயாராக உள்ள பல் செட் அதில் பொருத்தப்படும்.
டூத் லேமினேட்:

திருமணத்துக்குத் தயாராக இருப்பவர்கள் கடைசி நேரத்தில் நிறம் மாறிய பல், பல் இடைவெளியே அகற்ற நினைப்பார்கள். குறுகிய காலத்தில் இதை சரிசெய்ய வந்ததுதான் டூத் லேமினேட் சிகிச்சை. செராமிக் கொண்டு இந்த சிகிச்சை செய்யப்படும். குறுகிய காலத்தில் செய்தாலும் இது நிரந்தர அமைப்புதான்.
லேசர் சிகிச்சைகள்:
ஈறுகளில் அறுவைசிகிச்சை செய்ய, சொத்தைப் பல்லில் உள்ள கிருமித் தொற்றை அழிக்க, பற்களை வென்மையாக்க எனப் பல வகைகளில் லேசர் கருவி பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு ஈறுகள் மிகவும் கருப்பாக இருக்கும். இவர்களுக்கு லேசர் சிகிச்சையின் மூலம் பிங்க் நிறத்துக்கு ஈறுகளைக் கொண்டுவர முடியும்.
எலும்பு கிராஃப்ட்டிங்:
சிலருக்கு பற்கள் எல்லாம் விழுந்து போயிருக்கும். அல்லது விழும் நிலையில் இருக்கும். அவர்களுக்கு இம்பிளான்ட் செய்யலாம் என்றால், தாடையின் அடர்த்தி மற்றும் உயரம் குறைவாக இருக்கும். இதனால் இம்பிளான்ட் செய்ய முடியாது என்று டாக்டர்கள் தெரிவிப்பார்கள். இவர்களுக்கு செயற்கைப் பல் கட்டும் வகையில் அளிக்கப்படுவதுதான் எலும்பு கிராஃப்ட்டிங் சிகிச்சை. முகத்தின் மேல் தாடையில் சைனஸ் என்ற ஒரு அமைப்பு உள்ளது. மேல்தாடைக்கும் சைனஸ் அமைப்புக்கும் இடையே உள்ள எலும்பின் தடிமன் மற்றும் உயரம் எவ்வளவு உள்ளது என்பதை ஓ.பி.ஜி. எக்ஸ் ரே மூலம் கண்டறியலாம். 8-10 மி.மீ. அளவுக்கு தடிமன் இருந்தால், அவர்களுக்கு இம்பிளான்ட் செய்ய முடியும். 5-6 மி.மீ. அளவுக்கு எலும்பு இருந்தால் சைனஸ் லிஃப்ட் என்ற சிகிச்சை முறையில் இம்பிளான்ட் செய்யப்படுகிறது. அதாவது உடலின் வேறு பகுதியில் இருந்து எலும்பை எடுத்து அறுவைசிகிச்சை மூலம் தாடையில் பொருத்தி, பின்னர் இம்பிளான்ட் செய்யப்படும். இதேபோன்று ஈறுக்கும் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.
அவசியம் பார்க்க வேண்டும் பல் மருத்துவரை...
  குழந்தைக்கு ஆறு மாதம் ஆனதும், முதன் முறையாகப் பல் மருத்துவரிடம் குழந்தையை கொண்டுசென்று காண்பிக்க வேண்டும். இது அந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் பல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்க உதவும்.
  பல் முளைக்கும்போது ஏதேனும் பிரச்னை இருந்தாலும் அதைக் கண்டறிந்து சரிப்படுத்தலாம். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட இடைவெளியில் பல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம், சொத்தைப் பல், ஈறு நோய்கள் வராமல் தடுப்பதுடன், ஆரம்ப நிலையிலேயே அதை சரிப்படுத்திவிட முடியும்.
பற்களின் அமைப்பு, வரிசை போன்றவற்றில் குறைபாடு இருந்தாலும் சரி செய்துவிடலாம்.
 சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறு தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி முழுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
  சர்க்கரை நோயாளிகள் இரவு படுக்கும் முன்பு பால் மற்றும் இனிப்புப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கூர்மையான பற்களினால், ஈறுகளிலோ, நாக்கிலோ புண் ஏற்பட்டால், உடனடியாக பல் மருத்துவரிடம் காண்பித்து சரிசெய்துகொள்ள வேண்டும்.
  லேசான வலி மற்றும் வீக்கம் இருந்தாலே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
பற்களின் பகைவன்
புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் பி.பிரகாஷ் விளக்குகிறார்:
  இன்று உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் அதிகமானதற்கு புகையிலைப் பழக்கம் மிக முக்கியக் காரணம். புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை மெல்லுவதாலும் வாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
  புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயின் வெப்பநிலை அதிகரிக்கும்.  வாயில் உள்ள திசுக்கள் மாற்றம் ஏற்பட்டு உலர்ந்து போய் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் மிக எளிதில் பூஞ்ஜை மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்படலாம்.
  புகைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகரிக்கும்.
 புகைபிடிப்பவர்களுக்கு ஈறு நோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம். ஈறு வீக்கம், பல் ஆடுவது, ஈறுகளில் சீழ், ரத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். புகைப்பிடிப்பதால் பற்களில் கறை ஏற்படும்.
செய்யக்கூடியவை:
 சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து, அவசியம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்
 தூங்கச் செல்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டும்
 புகைத்தல், மது அருந்துதல் கைவிடுங்கள்.
 போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள்.
 உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பி டுங்கள்.
 ஜூஸ் செய்து குடிப்பதற்குப் பதிலாக பழங்களைக் கடித்து சாப் பிடுங்கள்.
 ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 குளிர்பானம் குடிப் பதைத் தவிருங்கள். இல்லையெனில், ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்.
குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தியுங்கள்.
செய்யக் கூடாதவை:
 எவ்வளவு கோபமாக் இருந்தாலும் 'நறநற’வெனப் பல்லைக் கடிக்காதீர்கள்
 நகத்தைக் கடிக்கக்கூடாது.  அதன் மூலம் கிருமிகள் வாய்க்கு சென்று வியாதிகளைப் பரப்பிவிடும்.
 பல்லை அழுத்தித் தேய்க்காதீர்கள்.
 பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்துத் திறக்க முயற்சிக்காதீர்கள். பற்களுக்கு சேதம் ஏற்படுத்துவதுடன், உதடுகளிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம்.
மேற்சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம்.
தவிர்க்க வேண்டியவை:
கார்பனேட்டட் கோலா குளிர்பானங்களில் உள்ள அமிலத்தன்மையானது பல்லின் எனாமலைப் பாதிக்கும்..
நொறுங்க தின்றால்... பல்லுக்கு ஆயுசு!
பல் வலி, பல் ஆடும் பிரச்னை உள்ளவர்கள் காய்கறி, பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடும்போது, பல்லில் விரிசலை ஏற்படுத்தி,  விழவும் செய்துவிடும். எனவே, கடிக்க ஏற்ற வகையில் சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
'ஷாக்’லெட்
பல்லில் ஒட்டிக்கொள்ளக் கூடிய கடினமான சாக்லெட்களில் உள்ள இனிப்பு நீண்ட நேரத்துக்கு நம் பல் இடுக்குகளில்  ஒட்டிக்கொள்ளும். இதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பற்கள் பாதிக்கப்படுவதால், இவற்றை தவிர்ப்பது நல்லது.
உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பாப்கார்ன்: சிப்ஸ் துகள்கள் பல் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. பாப்கார்ன் கவரின் அடியில் பொரியாத சில சோள விதைகள் இருக்கும். மிகக் கடினமான இந்த விதைகளைக் கடிக்கும்போது, பல்லுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
உலர் பழங்கள்: திராட்சை, பேரீட்சை போன்ற உலர் பழங்களை சாப்பிட்டதும் பல்லின் இடுக்குகளில் நன்கு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இவற்றை, சாப்பிட்டதும் பல்லைச் சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது.

Sunday, February 03, 2019

உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன்


ஓட்டப்பந்தயத்தில் 

ஓடிவந்து 
முதல் பரிசை 
வாங்கிப்போனவள் நீ...!
நீ ஓடிவந்த 
ஓட்டப்பந்தயத்தில் 

உன் மூச்சுக்காற்றை 
இரண்டாவது பரிசாக 
வாங்கிப்போனவன் 
நான்...!
- அன்புசிவா

Tuesday, January 29, 2019

கோவை இலக்கிய சந்திப்பு 100வது நிகழ்வு

கோவை இலக்கிய சந்திப்பு
நடத்தும்
இலக்கியக் கொண்டாட்டம்
நாள் : 24.02.2019 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்:
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவை.
கவிஞர் வெங்கடேசனின் “புலன்” கவிதை நூல் வெளியீட்டுச் சிறப்புரை
முனைவர் பூ.மு. அன்புசிவா
தமிழ்த்;துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி.
சரவணம்பட்டி, கோயம்புத்தூர் - 641 035.
தொடர்புக்கு : 9842495241