Wednesday, March 23, 2016

கலப்புத் திருமணம் என்பது தவறு

தந்தை பெரியார்

நான் பகுத்தறிவுவாதி, சமுதாயத் தொண்டு செய்பவன் என்பதால், உண்மையென்று எனக்குத் தோன்றிய கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு மனித சமுதாய முன்னேற்றத்தைக் கருதித் தொண்டாற்றி வருகின்றேன். மனித சமுதாய முன்னேற்றத்திற்கு -வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகின்றேன். அதில் ஒன்றுதான் இத்திருமண முறை மாற்றமுமாகும். முதலில் கலப்புத் திருமணம் என்று பேசியவர்கள், இது கலப்புத் திருமணம் அல்ல, கலப்புத் திருமணம் என்பது தவறு என்று குறிப்பிட்டார்கள்.

pநசலையச 332மனிதனுக்கு மனிதன் செய்து கொள்ளும் திருமணத்தில் கலப்பு என்ன வந்தது? கலப்புத் திருமணமென்பதே ஆரியர்கள் வந்ததிலிருந்து வந்தது தான். அவன் தான் ஆடு, மாடு, கழுதையைக் கட்டிக் கொண்டிருக்கின்றான் என்பதாக அவர்களுடைய புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் என்பவற்றில் காணப்படுகின்றன. இது அதுபோன்று மனித ஜீவனுக்கும், வேறு ஜீவனுக்கும் நடைபெறும் திருமணம் அல்ல. மனித ஜீவனுக்கும் மனித ஜீவனுக்கும் நடைபெறும் திருமணமேயாகும். இதில் கலப்பு என்று சொல்வதற்குப் பொருளே கிடையாது. பொதுவாக இந்நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வதன் கருத்து, ஜீவ சுபாவத்தை முன்னிட்டு ஆண்கள், பெண்களைத் தங்களின் அடிமை களாகக் கருதுவது கூடாது என்பதற்குத் தான். மனிதன் எப்படித் தன்னை இழிஜாதி, கீழ்ஜாதி என்றும், சூத்திரன் என்றும் கருதிக் கொண்டிருக்கின்றானோ, அதுபோலப் பெண்கள் தங்களை ஆண்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள், அடிமைப்பட்டவர்கள் என்று எண்ணி வருகின்றனர். இவை நம் வளர்ச்சிக்குக் கேடானதாகும்.

ஜாதியைப் பற்றியாவது, எவனாவது ஒருவன் இருவன் பேசி இருப்பான். எதற்காக உயர்ந்த ஜாதி, கீழ் ஜாதி இருக்க வேண்டுமென்று பேசி இருப்பான். ஆனால், பரிதாபத்திற்குரிய நம் பெண்களின் - தாய்மார்களின் இழிவை நீக்க வேண்டுமென்று எங்களைத் தவிர, வேறு எவரும் தோன்றித் தொண்டாற்றவில்லை. நாங்கள் தான் அவர்களின் இழிவினைப் போக்கப் பாடுபட்டு வருகின்றோம். நமது இலக்கியங்கள் யாவும் நம் பெண்களை அடிமைகளாக இருக்க வேண்டுமென்றே வலியுறுத்துகின்றன. வள்ளுவரை மிகப் பிரமாதப்படுத்தி, அவர் கருத்து முக்காலத்திற்கும் ஏற்றது, வெங்காயம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த வள்ளுவனே பெண்களைப் பற்றிச் சொல்லும் போது என்ன சொல்கிறான்? பெண்கள் தங்கள் கணவன்மாருக்கு அடிமையாக இருக்க வேண்டும். கணவனைத் தெய்வமாகக் கருதி, அவனைத் தொழ வேண்டும். அவன் மனம் கோணாதவாறு அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். அவன் என்ன செய்தாலும் அதைச் சகித்துக் கொண்டு அவனுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கின்றாரே ஒழிய, பெண்களுக்கு ஆண்கள் தொண்டு செய்ய வேண்டும், பெண்கள் சொல்கிறபடி ஆண்கள் நடந்து கொள்ளவேண்டுமென்று ஒரு வரி கூடச் சொல்லவில்லை. பகுத்தறிவாளர் என்று ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிற வள்ளுவனே இப்படியென்றால், மற்ற புலவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.'

'நமக்கு நீதி சொன்னவர்கள் அத்தனை பேரும் பெண்கள் ஒழுக்கமாகக் கற்போடு, அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அறிவுரை கூறி இருக்கின்றார்களே ஒழிய, ஆண்கள் கற்பைப் பற்றி எவனும் ஒரு வரி கூடச் சொன்னது கிடையாது. மனித ஜீவனில் ஆண், பெண் என்று பேதப்படுத்திக் காட்டும்படியாக இருப்பது சில உறுப்புகளே தவிர, மற்றப்படி ஆண் செய்கிற அத்தனை காரியங்களையும் பெண் செய்யக் கூடியவளாகவே இருக்கிறாள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பெண்களால் பிள்ளை பெறக் கூடும். ஆண்களால் அது முடியாது. இதைத் தவிர, ஆணுக்கும், பெண்ணுக்கும் எதிலும் வித்தியாசமே கிடையாது.'

மனித சமுதாயத்தில் சரிக்குச் சரியாக (பகுதியாக) இருக்கும் பெண் சமுதாயமானது, மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலும் பயன்படாத சமுதாயமாகவே இருப்பதால், நம் நாட்டில் நடைபெற வேண்டிய முன்னேற்றங்களில் பாதிக்கு மேல் நடைபெற முடியாமல் போனதோடு, அடைய வேண்டிய வளர்ச்சியடையாமல் உலக நாடுகளில் மிகவும் பின்தங்கிய நாடாக நம்நாடு இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்க வேண்டியதாயிற்று. நம் நாடு முன்னேற்றமடையவும், வளர்ச்சியடையவும் பெண்கள் சமுதாயமானது விடுதலை பெற்று ஆண்களைப் போலச் சகல துறைகளிலும் சுதந்திரமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் நம் நாடு முழு வளர்ச்சியினைப் பெற முடியும் என்பதால் தான் பெண் விடுதலையை முதன்மையாகக் கொண்டு இக்காரியத்தில் இறங்கி இருக்கின்றோம். நான் சொல்வது ஆண்களுக்குச் சற்று கஷ்டமாக இருக்கலாம். இனி பெண்கள் சோறாக்கக் கூடாது. ஆண்களைச் சோறாக்கச் சொல்ல வேண்டும். பெண்கள் சோறாக்க வேண்டியது தங்கள் கடமை என்று தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் நன்றாகப் படித்து உத்தியோகங்களுக்குப் போக வேண்டும்.

மற்ற நாடுகளில் உள்ள பெண்களை எல்லாம் பார்த்திருக் கின்றேன். அங்குள்ள பெண்கள் யாவரும் சோறு சமைப்பதில்லை. குழந்தைக் குட்டிகளோடு ரெஸ்டாரன்ட்டு (உணவு விடுதி)க்குப் போய், தங்கள் உணவினை முடித்துக் கொள்கின்றனர். அதனால் பெண்களுக்கு உணவு சமைக்க வேண்டிய நேரம் மிச்சமாவதோடு உணவிற்காக ஆகும் செலவும் மிச்சமாகின்றது. ஆண்களைப் போல அவர்களும் வேலைக்குச் செல்கின்றனர், சம்பாதிக்கின்றனர். மகிழ்ச்சி யோடு வாழ்வை நடத்துகின்றனர். அதுபோன்று நம் பெண்களும் வாழ வேண்டுமென்பது தான் எங்களுடைய ஆசை.

தாய்மார்கள் தங்கள் பெண்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். தாங்கள் பட்டினிக் கிடந்தாவது அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். பெரிய வித்வானாக்காவிட்டாலும், அது வாழ்க்கைக்கு சம்பாதித்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு அதைப் படிக்க வைக்க வேண்டும். பிறத்தியார் கையை எதிர்பார்த்துப் பெண்கள் வாழக் கூடாது. கணவன் நம்மைத் தள்ளி விட்டால் என்ன செய்வது என்கிற பயம் பெண்களுக்கு இருக்கக் கூடாது. மேல்நாடுகளில் எல்லாம் பெண்கள் பிறர் கையை எதிர்பார்த்து வாழ்வது கிடையாது என்பதோடு, அப்படி வாழ்வதை மிகக் கேவலமாகவும் கருதுகின்றனர். அதுபோன்று நம் பெண்களும் கருதும்படியான நிலை நம் நாட்டிற்கு வந்தால் தான் நம் சமுதாயம் முன்னேற்றமடையும்.

இந்தத் திருமண முறையே தேவை இல்லை என்பது எனது கருத்து. யோக்கியமான அரசாங்கமாக இருந்தால், இதைக் கிரிமினல் குற்றமாக்கி இருக்கும். என்ன காரணத்திற்காக ஒரு பெண்ணானவள் ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டும்? இந்தத் திருமண முறையே ஆரியன் நம் நாட்டிற்கு வந்த பின் தான் ஏற்பட்டது. ஆரியன் இங்கு வரும்போது பெண்களோடு வரவில்லை. இங்குள்ள பெண்களைச் சரிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருந்தான். பெண்கள் அவனுக்கு அடங்காமல் போகவே, அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டி, தனது உரிமைப் பொருளாக்க வேண்டி, சடங்குகள் சம்பிரதாயங்களை ஏற்படுத்தினான். இதைத் தொல் காப்பியத்திலேயே சொல்லி இருக்கிறான். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப என்று பார்ப்பனரிடையே ஒழுக்கம் கெட்ட பின் பார்ப்பனர்களால் செய்யப்பட்டது தான் இந்தச் சடங்காகும்.

நம் புலவர்கள் அயோக்கியர்களானதால் அய்யர் என்றால் நம் புலவர்கள் பெரியவர்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். அதற்காகவே வேறொரு சூத்திரத்தில், மேலோர் மூவர்க்கும் யாத்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே. பார்ப்பனர்களான மேல்ஜாதிக்காரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள் கீழ் ஜாதிக்காரர்களுக்கு (சூத்திரர்களுக்கு) ஆன காலமும் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்; நம் புலவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக எதையும் விற்கக் கூடியவர்களாக இருப்பதாலும், மானமற்றவர்களாக இருப்பதாலும் இந்த உண்மைகளையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வது கிடையாது.

                        -----------------------

13.6.1968 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை- "விடுதலை" 4.7.1968.

Tuesday, March 22, 2016

அண்மைக்கால சிறுகதைகள் – ஒரு பார்வை

இமையம்

மொழி என்ற தொடர்பு சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும். மனித சமூகம் பல்வேறு நிலைகளை கடந்து படிப்படியாக பல வளர்ச்சிகளை பெற்று இன்றும் பெரும் நம்பிக்கையுடன் பூமியில் காலூன்றி நிற்பதற்கு கற்பனையும் கதை சொல்லும் முறையும் முக்கியமான பங்காற்றி இருக்கின்றன. கதையில்லை என்றால் கற்பனை இல்லை. கற்பனை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. வாழ்க்கைக்கு உயிர்ச்சத்தாக இருப்பது கற்பனையும் கதையும்.
ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான கதைகள் உருவாகியிருக்கின்றன. பல கதைகள் தேச எல்லைகள் கடந்து உலக பொது கதையாகவும் பேசப்படுகிறது. எழுத்து மரபில் பேசப்பட்ட கதைகளைவிட வாய்மொழி மரபில் பரவிய கதைகளே இன்றும் பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதாக இருக்கிறது. வாழ்க்கை நெறியாக மேற்கொள்ளப்படுகிறது. வாய்மொழி மரபு கதைகளை விஞ்சும் வகையில் எழுத்தில் கதைகள் உருவாக்கப்படவில்லை என்பது நம் கவனத்திற்குரியது. தமிழ் மரபு காவியங்களை அடிப்படையாக்கக்கொண்டது. அதுவும் பதினாறாம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் தமிழில் உரை நடை இலக்கியம் அறிமுகமாகிறது. குறிப்பாக சிறுகதை வடிவம். அதற்கு முன் தமிழில் சிறுகதை வடிவமே இல்லையா என்றால் இருந்தது. அதுவும் சிறந்த வகையில் இருந்தது. “ஒரு ஊருல ஒரு நரி, கதை அதோட சரி”. “ஒரு ஊருல ஒரு சிங்கம், அந்த கதைய சொன்னா அசிங்கம்”. “ஒரு ஊருல ஒரு பரி, கதை அதோட சரி” என்று ஒரே ஒரு வாக்கியத்திலேயே கதை சொன்னது தமிழ் மரபு.
வாய்மொழி மரபையும் ஆங்கில இலக்கியத்தின் வழியாக பெறப்பட்ட வடிவத்தையும் கொண்டு உருவானதுதான் நவீன சிறுகதை வடிவம். கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் சிறுகதை என்ற வடிவம் பெற்றுள்ள மாற்றம், செழுமை, வளர்ச்சி, வடிவசோதனைகள், பரிசோதனை முயற்சிகள் போன்றவை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன. தமிழில் இவ்வடிவத்தின் முன்னோடியாக வ.வெ.சு.ஐயரைக் குறிப்பிடலாம். அவரைத் தொடர்ந்து பி.எஸ். இராமையா, கு.ப.இராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கா.சிவத்தம்பி, பி.எம்.கண்ணன், இளங்கோவன், சிதம்பர சுப்ரமணியன், மௌனி போன்றவர்கள் சிறுகதை வடிவத்தை பயன்படுத்தி பல்வேறு ஆக்கங்களை உருவாக்கியதோடு இவ்வடிவம் தமிழில் பரவலாகவும், ஆழமாகவும் வேர் ஊன்ற செய்ததோடு பல முன்மாதிரிகளையும் உருவாக்கிக்காட்டினார்கள். இவர்களையடுத்துவந்த கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், த.ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்றவர்கள் தமிழ் சிறுகதையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தினார்கள். உருவம், உள்ளடக்கம், மொழி, செய்நேர்த்தி போன்றவற்றில் இவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினர். இவர்களுடைய எழுத்து அகவுலக தேடல் எனலாம். இவர்கள்தான் தனிமனித வாழ்க்கையின் வழியே, தனிமனித சிக்கல்களினூடே சமூகத்தை உற்று நோக்கியவர்கள். இவர்களையடுத்தும் இவர்களோடு சேர்ந்தும் வந்த அசோகமித்திரன், ந.முத்துசாமி, கி.ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், அம்பை, பூமணி, தோப்பில் முகமது மீரான் போன்றவர்கள் தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கித்தந்தார்கள். இந்த மறுமலர்ச்சியை வளர்த்தெடுக்கும் விதமாக தற்காலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் திலிப்குமார், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, பெருமாள் முருகன், தேவிபாரதி, சு.வேணுகோபால், பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், பிரேம் ரமேஷ், சோ.தர்மன், கௌதம சித்தார்த்தன், எம்.ஜி.சுரேஷ், ச.தமிழ்ச்செல்வன், கண்மணி குணசேகரன், பாமா, சிவகாமி, அழகியபெரியவன், ஆதவன் தீட்சண்யா, யுவன்சந்திரசேகர், அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன், ஜீ.முருகன், காலபைரவன், சு.தமிழ்ச்செல்வி, சல்மா, உமா மகேஸ்வரி, அ.வெண்ணிலா, சந்திரா, புகழ், ஜே.பி.சாணக்யா, எஸ்.செந்தில்குமார், கே.என்.செந்தில் … என்று இன்னும் பலர் தமிழ் சிறுகதைக்கு தங்களுடைய பங்களிப்பின் வழியே வளம் சேர்த்து வருகின்றனர்.
1980-90 -களுக்குப் பிறகு படைப்பு சார்ந்தும், படைப்பு மொழி சார்ந்தும், தமிழ்ச்சிறுகதையில் பெரியமாற்றம் நிகழ்ந்தது. அடித்தட்டு மக்களும், விளிம்புநிலை மக்களும், அவர்களுடைய மொழியும் இலக்கியமாக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் சமூகத்தின் பலதரப்பு வாழ்க்கை முறையும் இலக்கியமாயின. பழைய எழுத்தாளர்களிடம் காணப்பட்ட உத்தி சார்ந்த மயக்கங்கள், பிரமைகள், உதிர்ந்து போயின, கதை பரப்பும், அனுபவமும் விரிந்த தளத்தில் இருந்தது. புதியபுதிய கதைக் களன்களைத் தேடி எழுத்தாளர்கள் நகர்ந்தவாறே இருக்கின்றனர். வாய்மொழி மரபும், வட்டார வழக்கும், இனக்குழு வரலாறுகளும் கூடுதல் கவனம் பெற்றதோடு அதிகமாக எழுதவும்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தலித்தியம், பெண்ணியம் என்ற கோட்பாடுகளால் எழுச்சிப்பெற்று எழுந்த இலக்கியங்கள் தமிழ் சிறுகதைக்கு புதிய முகத்தை கொடுத்துள்ளது. தற்காலத்தில் தமிழ்ச் சிறுகதை வடிவம் காட்டாறு வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு ஓடுகிற வெள்ளத்தில் ஒரு கையளவு நீரை மட்டுமே அள்ளி உதாரணம் காட்ட விரும்புகிறேன். அதுவும் கடந்த பத்தாண்டுகளில் வந்த சிறுகதையின் வழியே மொத்த தமிழ்ச் சிறுகதைகளைப்பற்றிய சித்திரத்தை அறிய முடியும்.
தற்காலத்தில் தமிழில் எழுதப்படும் சிறுகதைகளை ஐந்து வகையாகப் பரிக்கலாம். 1.பொதுவான சிறுகதைகள், 2.புதுவகை சிறுகதைகள், 3.தலித்திய சிறுகதைகள், 4.பெண்ணிய சிறுகதைகள், 5. வாய்மொழி மரபுச் சிறுகதைகள்.

பொதுவான கதைகள்

‘ஒரு மனிதனைப்பற்றிய வெள்ளை அறிக்கை’ (உயிர்மை பிப். 2010) என்ற பிரபஞ்சனின் சிறுகதை பல விதங்களில் முக்கியமானது. கதை எலிகளைப் பற்றிப்பேசுகிறது. உண்மையில் எலிகளைப்பற்றி அல்ல மனிதர்களைப்பற்றிதான் பேசுகிறது. எலிகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்ன, ஏன் அவர்களுக்கிடையே ஓயாமல் போராட்டம் நிகழ்கிறது, அந்தப் போரட்டத்தில் வெற்றி பெறுவது யார், மனிதர்களால் அழிக்கப்பட்ட, அழிக்கப்பட்டுவரும் உயிரினங்களில் எண்ணிக்கை எவ்வளவு என்று சூசகமாக பல ஆழமான கேள்விகளைக் கேட்கிறது கதை. அப்படி கேட்கப்படுகிற கேள்விகளில் ஒன்று: “மனிதர் சங்கதியும், எலிகளின் சங்கதியும் ஒன்றா என்ன?”
“பொதுவாக என் மீது ஒரு புகார் இருக்கிறது. ஏதாவது ஒன்றைச் சொல்ல ஆரம்பித்துவிட்டு எங்கெங்கோ அலைந்து திரிய ஆரம்பித்துவிடுகிறேன். இந்தமுறை அந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளப் போகிறேன்” என்று ஆரம்பிக்கிற யுவன் சந்திரசேகரனின் ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ (உயிர்எழுத்து – டிசம்பர் – 09) என்ற கதை ரயில் பயணத்தில் தொடங்குகிறது. பயணம் முடியும்போது கதையும் முடிந்துவிடுகிறது. கதையை எழுதுகிற எழுத்தாளருடைய நண்பரைப்பற்றிய கதை. கதையில் வரும் நாயகனும் எழுத்தாளரே. அதிக பிரபலமில்லாத, அதிகம் எழுதாத எழுத்தாளர். காரணமின்றி பலருக்கு வாழ்க்கை தொடர்ந்து நெருக்கடிகளையும் சங்கடங்களையும் தந்துகொண்டிருக்கிறது. ஓயாமல் நெருக்கடிக்குள்ளாகிற மனிதனைப்பற்றி விவரிக்கிறது ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்ற கதை. ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னையே உணரலாம் இக்கதையில். தன்னுடைய அனுபவத்தை வாசக அனுபவமாக மாற்றம் செய்வதுதானே கலைப்படைப்பின் நோக்கம்.
ஜி.முருகனின் ‘கள்ளத்துப்பாக்களின் கதை’ (அடவி மாத இதழ் பிப். 2010) என்ற கதை சுப்ரமணியன் என்ற மனிதனுடைய மொத்த வாழ்க்கையுமே சொல்கிறது. தர்மாபுரத்தில் வசிக்கிற ஆசாரியின் இரண்டாம் தாரத்து மகன் சுப்ரமணியன். முதல் தாரத்து நான்கு மகன்களாலும் ஓயாமல் விரட்டப்படுகிற சுப்ரமணியன் ஒரு கட்டத்தில் ஊரைவிட்டே போகிறான். பல ஆண்டுகள் கழித்து ஒரு பெண்ணுடன் ஊருக்கு வந்து ஊரின் ஒதுக்குப்புறமாக வாழ்கிறான். பறவைகளை வேட்டையாடுவது அவனது தொழிலாகிறது. அவனை காவல்துறை தேடுகிறது. பிறந்தது முதல் இறக்கும்வரை அவன் ஓடிக்கொண்டேயிருக்கிறான் என்பதை மிகுந்த வலியுடன் சொல்கிறது கதை. கதாநாயகன் இறந்தாலும் அவன் உருவாக்கிய துப்பாக்கிகள் சாகவில்லை என்பதை கதையின் கடைசி வரிகள் காட்டுகின்றன. “கள்ளத்துப்பாக்கிகளோ அவன் பெயரை உச்சரித்தப்படி இன்னும் காடுகளுக்குள் இரைச்சலிட்டுக்கொண்டேயிருக்கிறது.”
எஸ்.ராமகிருஷ்ணனின் பி.விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள் (உயிர்மை – ஆக. – 06) என்ற சிறுகதை திருமணமான குறைந்த காலத்திலேயே சித்திரவதைக்குட்பட்டு மனச்சிதைவுக்கு உள்ளான பெண்ணினுடைய கதையைச் சொல்கிறது. மொத்த குடும்பமே ஒரு இளம் பெண்ணின் மீது துவேசத்தை கக்குகிறது. சிறு தவறு செய்தாலும் அடிக்கிறது. கணவனே மனைவியை வன்புணர்ச்சி செய்கிறான். இச்செயல் தொடர் நிகழ்வாக நடக்கிறது. வேலைக்குச் செல்வதற்கும், மேல் படிப்பு படிப்பதற்கும் மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு கணவனும் எதிர்க்கிறான். சான்றிதழ்களை கிழித்தெறிகிறான். இப்படியான ஒரு சூழலில் மனச்சிதைவு ஏற்படாமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். ஆனால் விஜயலட்சுமியின் மனச்சிதைவுக்கு அவனுடைய கணவனும், மாமனார் மாமியார் கூறும் காரணங்கள் விநோதமானது.
“மூளக்கோளாறு ரொம்ப நாளாகவே இருந்திருக்கனும். நம்ம தலையில் கெட்டி வச்சிட்டாங்க. இனிமே இவ செத்தாலும், பிழைச்சாலும் நமக்கென்ன? விடு.”
பெருமாள் முருகனின் ‘வெள்ளி மீன்கள்’ (காலச்சுவடு அக் – 07) என்ற கதை ஆடு திருடனைப்பற்றியது. ஆடு திருடப்போய் மாட்டிக்கொண்டு ஒரு இரவு முழுவதும் மோசமான புதருக்குள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிற பசுபதி என்கிற திருடனுடைய மனஉலகையும், படுகிற துன்பத்தையும் விவரிக்கிறது. மற்றவர்களுக்கு வேண்டுமானால் அவன் திருடனாக இருக்கலாம். அவனுக்கு வயிற்றுப் பிழைப்புக்கான வழி அது. ஒரு மனிதனை சாப்பிடாமல் இரு என்று எப்படி சொல்வது. பிறருக்கு கஷ்டம்தான். திருட்டு அவனுக்கு சோற்றுக்கான வழி. அதை செய்யாதே என்று எப்படி சொல்வது என்று மிக அழகாகக் கேட்கிறது இக்கதை:
“பூபதிக்கு ஆடு திருடுவதை பழக்கிவிட்டவர் அவன் அப்பன்தான். அவரோடு ஒப்பிட்டால் தன் திருட்டு ஒன்றுமேயில்லை என்றுபடும். அவர் ஒருநாளும் இப்படி மாட்டிக்கொண்டதில்லை. அவர் அழைத்துப்போக ஓராள் வண்டியில் காத்திருக்கவில்லை. எவ்வளவு தூரமானாலும் தோல்மீது போட்ட ஆடு சிறு சத்தமும் இல்லாமல் வரும். ஆடு திருட தோதான நேரத்தை அவர்தான் அவனுக்குச் சொல்லித்தந்தார்.”
ஊமை செந்நாய் (உயிர்மை நவ – 08) என்ற ஜெயமோகனின் கதை சென்ற நூற்றாண்டில் நடக்கிறது. ஒரு வெள்ளக்கார துரைக்கும் நாய் மாதிரி நடத்தப்படுகிற இந்தியனுக்கும் இடையே நடக்கிற கதை இது. துரைக்கு வேட்டையாடுதல்தான் பொழுதுபோக்கு. வேட்டைக்கு உதவியாளமான வழிகாட்டியாக இருக்கிறவனின் மன உளைச்சல் என்ன என்பதையும் அவன்படுகிற அவஸ்தைகளையும் தத்ரூபமாக விவரிக்கிறது. அவன் துரையின் தொல்லைத் தாங்கமுடியாமல் கடைசியில் மலையிலிருந்து விழுந்து சாவதையும் உயிரோட்டமாக விவரிக்கிறது கதை. வேலக்காரனை செந்நாய் என்று அழைக்கிற வெள்ளக்கார துரையின் நிறவெறி எப்படி என்பதை இவ்வரிகள் காட்டுகின்றன :
“நீ வெள்ளைப் பெண்ணை எப்போதாவது புணர்ந்தாயா? நான் ஒன்றும் சொல்லவில்லை. சொல்லித்தொலை ஊமை செந்நாயே. உன்னை கொல்லும்படி செய்யாதே. நான் இல்லை என்றேன். உன் கண்களைப் பார்த்தால் அவர்கள் கூப்பிடுவார்கள். நீ எப்போதாவது வெள்ளைப் பெண்ணுடன் படுத்தாய் என்று தெரிந்தால் நான் உன்னை தேடிவந்து கொல்வேன்.”

பெண்ணிய சிறுகதைகள்:

1980 -க்குப் பிறகு தமிழில் ஏற்பட்ட பெண்ணிய சிந்தனையால் ஊக்கம் பெற்று பலர் மரபார்ந்த முறைக்கு எதிரான சிந்தனையோடும், புதிய எழுச்சியோடும், பெண்மொழி, பெண் உடல்மொழி, பெண் புழங்கும் வெளி என்ற முழக்கங்களோடும் புரிதலோடும் எழுதினர். அச்சு ஊடகம் ஒரு ஜனநாயகத் தன்மையை உருவாக்கிற்று. யார்வேண்டுமானாலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்கான சுதந்திரத்தையும் ஊக்கத்தையும் அது அளித்தது. அதன் அடிப்படையில் எங்களுக்கும் சொல்வதற்கு கதை உண்டு என்று எழுத ஆரம்பித்தனர். உக்கிரமான மொழியில் பெண்கள் தங்களை வெளிப்படுத்தினர். போன நூற்றாண்டில் வை.மு.கோதநாயகி அம்மாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மாள், ஆர்.சுடாமணி, ராஜம் கிருஷ்ணன் என்று ஆரம்பித்த பட்டியல் சிவகாமி, ஆண்டாள் பிரியதர்ஷினி, பாமா, தமயந்தி, உமா மகேஸ்வரி, இந்திரா அ.வெண்ணிலா, சு.தமிழ்ச்செல்வி, அம்பை, கிருஷாங்கினி, சல்மா என்று பட்டியல் நீள்கிறது.
அம்பையின் ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (பனிக்குடம் – ஏப்-ஜீன் 07) கதை முக்கியமானது. இளம் வயதிலேயே தாயை இழந்துவிட்டு தங்குவதற்காக – வாழ்வதற்காகப் பாதுகாப்பான இடம்தேடி மாறிமாறி இடம் பெயர்கிற ஒரு இளம்பெண், இடம் பெயர்ந்ததால் ஏற்படுகிற மன அவஸ்தைகளை, நெருக்கடிகளை மிகுந்த வலியோடு சொல்கிறது இக்கதை. பெண்ணியம் என்பதை அதன் உண்மையான பொருளில் புரிந்துகொண்டவர் அம்பை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது இக்கதை. இந்த வரிகளே கதை என்ன என்பதை வாசகருக்கு கூறும்.
“பயணங்கள் அவளுடைய வாழ்க்கையின் குறியீடாகிவிட்டன. இலக்குள்ள பயணங்கள். இலக்கில்லாப் பயணங்கள், அர்த்தமுள்ள பயணங்கள், நிர்ப்பந்தப் பயணங்கள், திட்டமிட்டு உருவாக்காத பயணங்கள், திட்டங்களை உடைத்த பயணங்கள், சடங்காகிப்போன பயணங்கள்”.
“இந்தக்குட்டி பாப்பாவை நன்றாகத் தேய்த்து வெள்ளை ஆக்குங்கள், வெள்ளை ஆக்குங்கள், என் சின்ன பாப்பாவை சுத்தமாகக்கழுவி வாசனையாக்குங்கள், வாசனையாக்குங்கள்” என்று உமா மகேஸ்வரி ‘ரணகள்ளி’ (மரப்பாச்சி தொகுப்பு – 02) என்ற சிறுகதையில் எழுதுகிறார். போற்றி வளர்க்கப்படுகிற பெண் குழந்தை பிற்காலத்தில் என்னவாக மாறுகிறாள், பெண்கள் ஏன் ஓயாமால் ஏக்கத்துடனேயே வாழ்கிறார்கள் என்பதை மிக அழகாக சொல்லும் கதை இது. பெண், வீடு இதுதான் இவருடைய எழுத்துலகம். இவருடைய எழுத்தில் வரும் பெண்கள் நாம் தினந்தோறும் சந்திக்கிறப்பெண்கள்தான்.
அ.வெண்ணிலாவின் கதைகள் மிகவும் எளிமையானவை. நேரடியாகப் பேசுபவை. சமூகத்தின் மொத்த குரலாகவும் ஒலிப்பவை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது அவருடைய ‘பூமிக்குச் சற்றுமேலே’ (ஆனந்தவிகடன் 22-02-02) என்ற கதை. இந்த உரையால் கதையின் மொத்த சாரத்தையும் சமூகத்தின் மனப்போக்கையும் அப்படியே காட்டுகிறது.
“இவளக் கட்டிக்கிட்டுப் போனா குடும்பத்துக்குச் சரிபடாது. எம்புள்ளய கையில போட்டுக்குவா”
“காலப்பாரு வீச்சு வீச்சா, சொழட்டிப் போட்டுருவா எல்லாத்தையும்”
“ஆம்பள காலுள்ளவ, வாத்தியார் மாதிரிதான் இருப்பா, வணக்கமே இல்லாம”
“வரன்கள் நிராகரித்தன. அம்மாவுக்குச் சிரிப்பு தொலைந்துப் போயிற்று”
சு.தமிழ்ச்செல்வி, ‘சாமுண்டி’ (சாமுண்டி-தொகுப்பு-2006) என்ற கதையில் விவரிக்கிற உலகம் மண் சார்ந்தது. கிராமப்புறங்களில் வாழ்கிற மக்களுடைய நம்பிக்கைகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. கனகம் என்ற பெண்ணின் உடம்புக்குள் சாமுண்டி என்ற பாம்பு குடிப்புகுந்துள்ளது. அதனால் அப்பெண் படுகிற துன்பம் சொல்லிமாளாது. ஆனால் கனகம் அதை மரியாதையாக, கௌரவமாக கருதுகிறாள். அவள் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறாள். நம்முடைய சமூகத்தினுடைய விருப்பமும் அதுதான். பல நேரங்களில் நாம் வாழ்வை – வாழ்க்கையின் வழியாகவே தான் பார்க்க வேண்டும். விஞ்ஞானத்தின் வழியாக அல்ல என்று சொல்கிறது சாமுண்டி கதை.
“ கனகத்தின் உடம்புக்குள் புகுந்திருந்த சாமுண்டிப் பாம்பு தன்
சட்டையை உரிக்க ஆரம்பித்தது” (ப-44)
“என் இருப்பை நீ உணராதது போல் இருந்தாலும் உன் உணர்வுகளில் என் இருப்பு பதியப்பட்டுள்ளது. எனது இருப்பை அங்கீகரிக்கும் உனது செயல்பாடுகள்தான் என்னை உன்னுடனான இந்த வாழ்க்கையில் நிலைப்பெறச் செய்கிறது. இருப்பினும் அங்கீகரிப்பது வாழ்க்கையில் கிடைக்கும் பெறும் ஏற்பு ஆகிவிடுமா” (நெற்குஞ்சம் தொகுதி-டிச – 09) என்று கேட்கிற தேன்மொழி அதே ‘கடல்கோள்’ என்ற கதையில் “எல்லாம் விடுதலைக்கான இசைபோல் ஒலிக்கிறது. யாருக்கான விடுதலை, யாருக்கு வேண்டிய விடுதலை?” (ப-22) என்று கேட்கிறார். இக்கேள்விகள் கதையிலிருந்தும் உருவாகவில்லை. வாழ்க்கையிலிருந்தும் உருவாகவில்லை. கேள்விகள் கதையாவதில்லை. வாழ்க்கைதான் கதையாகும், கேள்வியாகும். மிகச்சிறந்த கதை மதிப்பு வாய்ந்த கேள்விகளை எழுப்பும்.
கிருஷாங்கினியின் ‘வெள்ளை யானையும் குளிர்சாதனப் பெட்டியும்’ என்ற கதை, ஆண்டாள் பிரியதர்ஷினியின் ‘கழிவு’, தமயந்தியின் ‘மழையும் தொலைவும்’, சந்திராவின் ‘பூனைகள் இல்லாதவீடு’ போன்ற கதைகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை.

தலித் சிறுகதைகள்

அம்பேத்கார் நூற்றாண்டை ஒட்டி எழுந்த தலித் அரசியல் என்ற செயல்பாட்டால் இலக்கியத்திலும் தலித் இலக்கியம் என்ற ஒருவகை உருவாயிற்று. 1980-க்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் முகம் தலித் இலக்கியத்தின் முகமாகத்தான் இருக்கிறது. இதை உருவாக்கியவர்கள், பூமணி, சிவகாமி, பாமா, அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, சோ.தர்மன், ஸ்ரீதரகணேசன், அபிமானி, ஜே.பி.சாணக்யா, புதிய மாதவி, அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன், பாப்லோ அறிவுக்குயில், என்.டி.ராஜ்குமார், மு.ஹரிகிருஷ்ணன், வெ.வெங்கடாசலம், பிரதிபா ஜெயச்சந்திரன், சந்ரு, ரவிக்குமார் என்று பலரையும் சொல்லலாம். இவர்கள் இல்லையென்றால் தமிழில் தலித் இலக்கியம் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்த, நாள்தோறும் சந்தித்துவரும் சாதிய கொடுமைகளுக்கு, இழிவுகளுக்கு, புறக்கணிப்புகளுக்கு எதிர்ச் செயலாக தலித் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. சூழலை பிரதிபலிக்கக்கூடிய நடைமுறை வாழ்க்கையை, உண்மையை வாழ்வின் முரண்களை செரிவான மொழியில் எழுதுவதைவிட கதையே முக்கியம் என்று எழுதுவதுதான் இவர்களுடைய கொள்கை. இலக்கியம் வாழ்க்கையிருந்து மட்டுமே உருவாக்கப்பட முடியும். கற்பனையிலிருந்து அல்ல. அவ்வாறு உருவாக்கப்படுவது இலக்கியம் அல்ல. பரிதாப உணர்வு இலக்கியமாகாது.
தமிழ்நாட்டில் தலித்களுக்கென்று உள்ளாட்சி நிர்வாகத்தில் இடஒதுக்கீடு தந்தாலும் அதில் போட்டியிடமுடியாத நிலையையே இன்றும் காண்கிறோம். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் நடந்த மோதல்களை நாம் அறிவோம். அதேமாதிரி லிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பொதுத்தொகுதியில் தலித் ஒருவர் வேட்புமனு செய்ததால் கலவரம் ஏற்படுகிறது. அந்த கலவரத்தை “எகத்தாளம்” (வல்லினம் மாத இதழ்-மே-ஜீன்-02) என்ற பெயரில் கதையாக்கிருக்கிறார் பாமா. கதையில் வரக்கூடிய இந்த வரிகளே கதையின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
“அங்கங்க தனித்தொகுதிக்குள்ளேயே இவஞ்சாதிக்காரனுங்க நிக்க முடியாம கெடக்கயிலெ….. இவனுங்களுக்கு எம்புட்டுக் கொழுப்புன்னா பொதுத்தொகுதியில, அதுவும் நம்பளுக்குப் போட்டியா நிப்பானுங்க”.
விழி.பா.இதயவேந்தனுடைய சிறுகதை ‘பறை’ (புதிய கோடாங்கி மாத இதழ்-ஆக.-02) “சாவு வீட்டில் ஒரே களேபரமாக இருந்தது. அழுகையும் கூச்சலுமாக இருந்தது. அதிகாலையில் இறந்துபோன நாட்டாமைக்கு சுற்றுவட்டாரம் முழுக்கப் போய் தகவல் சொல்லிவர கோல்க்காரனை அனுப்பியிருத்தார்கள்” என்று ஆரம்பிக்கிற கதை, ஒரு சாவின் வழியே, சாவு நிகழ்ந்த இடம், அங்குள்ள மக்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை, சடங்குகள் என்று விரிகிறது. சாவைப்பற்றி சொல்வதைவிட அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றியே சொல்கிறது ‘பறை’ கதை.
மு.ஹரிகிருஷ்ணன் எழுதிய ‘பாதரவு’ (மணல் வீடு – ஜன., பிப்.-09) என்ற சிறுகதை தெருக்கூத்து கலைஞர்களின் அன்றாட வாழ்வை சித்தரிப்பது. இவருடைய எழுத்து வாய்மொழி மரபு கதைச் சொல்லும் முறையைப் பின்பற்றுவது. இவருடைய எல்லாக்கதைகளுமே இந்த அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. வட்டார வழக்கும், பேச்சு வழக்கும் எந்த பிசிறுமின்றி அப்படியே இவருடைய கதைகளில் பதிவாகின்றன என்பதற்கு ‘பாதரவு’ கதையில் வரும் இந்த வரிகளே சிறந்த உதாரணம்.
“ஆட்டத்துக்குப் போவலன்னாச் சோத்துக்கு ஆரு கொடுப்பா? அதும் போவ ஆடுன காலும் அவுசாரி போனப் பொச்சும் சும்மாயிருக்குமா? கெடயில காலுத் தங்காம நத்தமேடு குளுவமூட்டாரோட நாலு ராத்திரிக் கூத்துக்குப்போனான்”
“ஈனச்சாதி பயலே – திருட்டு அயோக்கிய ராஸ்கல். எவ்வளவு தைரியமிருந்தா ரெட்டியார் லாரி டிப்போவுக்குள்ளார நுழைவே” என்று “நாளும் தொடரும்” என்ற கதையில் ப.சிவகாமி எழுதியிருக்கிறார். அந்தநிலைதான் இன்றும் தொடர்கிறது. சமூகத்தில் மாற்றம் இல்லை என்று இக்கதை சொல்கிறது. சிறுவன் ஒருவன் ரெட்டியார் வீட்டு லாரி நிறுத்துகிற இடத்தில் நுழைந்ததற்காக அடித்து துரத்தப்படுகின்றான். லாரி நிற்கிற இடத்திற்கு மனிதன் ஏன் குழந்தைக்கூட போக முடியாத நிலைதான் தீட்டு என்ற பெயரில் இன்றும் நம் சமூகத்தில் இருக்கிறது.
அழகிய பெரியவனின் ‘கறி’, அபிமானியின் ‘முரண்’ சோ.தர்மனின் ‘தழும்பு’, அன்பாதவனின் ‘சர்டிபிகேட்’, ஆதவன் தீட்சண்யாவின் ‘கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்’ போன்றவை தலித் சிறுகதைகளின் மிகச்சிறந்த கதைகளாக மதிக்கப்படுகின்றன.
வாய்மொழி மரபுச் சிறுகதைகள்
எழுத்துவடிவ சிறுகதைக்கு வாய்மொழி மரபுச் சிறுகதைகள்தான் முன்னோடி. அந்தமரபு தற்போது தமிழில் குறைந்துவிட்டது. அனால் புகழ், அமலநாயகம். மு.ஹரிகிருஷ்ணன், கண்மணி குணசேரகன் போன்ற ஒரு சிலர் வாய்மொழி மரபுச் சிறுகதைகளையே இன்றும் எழுதிவருகின்றனர். அதனுடைய செழுமை குன்றாமல்.
‘முக்தி’, ‘மாங்கொட்டசாமி’ என்ற இரண்டு சிறுகதை தொகுப்புகளிலுமே புகழ் வாய்மொழி மரபுச் சிறுகதைகளைத்தான் எழுதியுள்ளார். இந்த முறையைப் பின்பற்றி எழுதுகிற ஒரே எழுத்தாளரும் இவர்தான்! ‘உறமுறை’ (மாங்கொட்டசாமி – டிச-09) என்ற கதையில் வாய்மொழி மரபுச் சிறுகதையின் உச்சப்பட்ச எல்லையை தொட்டிருப்பதைக் காண முடியும். “உழுத காடு வெள்ளாம போட ஆளில்லாமக் கெடக்கிறது தெரிஞ்சு வாரத்துக்கொருக்க வர்ற பய தெனம்வந்து நின்னுப்பாக்க ஆரம்பிச்சிட்டான். லேசா சாடமாடயா ஆரம்பிச்ச பேச்சுப் பழக்கம் காலப்போக்குல ஆளு இல்லாத நேரம்பாத்து வூட்டுக்குள்ளேயே போயிப் புழங்குற அளவுக்கு வந்துடுச்சி (ப.55)
அமலநாயகத்தின் ‘ஓட்ட மண்டயன்’ (பழஞ்சோறு-தொகுப்பு டிச.-08) என்ற சிறுகதை வாசக கவனத்திற்குரியது. அதிகம் அறியப்படாதவர். ஆனால் அறியப்பட வேண்டியவர் என்பதற்கு ‘ஓட்ட மண்டயன்’ சிறுகதையில் வரக்கூடிய இந்த வரிகளே காட்டும்.
“வூருல எப்ப எந்தப் பொருள் திருட்டுப் போனாலும் மொதல்ல சனங்க சந்தேகப்படுகிறது ஓட்ட மண்டயனத்தான். ஏன்னா, அவன் அந்த மாதிரி ஆளு. ஏதோ நகய காணும், நட்டக்காணும்ன்னா அவன நெனக்க மாட்டாங்க, அண்டாவக் காணும், குண்டானக் காணுமின்னா அவன்பேருதான் மொதல்ல வரும்”.
கண்மணி குணசேகரன் வாய்மொழி மரபு கதை சொல் முறையையும், எழுத்து மரபையும் இணைத்து எழுதக் கூடியவர். எழுத்து வடிவத்திற்கும், வாய்மொழி மரபுக்குமான இடைவெளியை அவர் அறிந்தால் நல்லது. பேச்சு வழக்கு இவருடைய எழுத்தின் பலம் என்பதற்கு அவருடைய ‘சாட்டை’ (மணல் வீடு இதழ் – செப். – அக்.-08) கதையே உதாரணம்.
“பின்னம் நாலு கீத்தப்போட்டு கட்டி, ஒரு வண்டி வெறுவ வாங்கியாந்து போடுறதுக்கு ஓக்கித இல்லெ. இதுல கிண்டல் கீவூட்டு மசுருவேற. நா, சூத்து வாய கழுவாத வந்து அடுப்ப பத்த வைக்கிறேன். இவுரு மூணு வேள குளியலு, ஆறு வேள பூச இட்டுக்கிட்டு வந்து கமகமன்னு நிக்குறாரு, த்தூ… கையத்தூக்குனா எட்டூரு கத்தாழ நாத்தம் கொடலப்புடுங்குது. நான்னத்தொட்டு ஒங்கிட்டெ படுத்து எந்திரிக்கிறேன். இந்த லட்சண மயிருல வந்து கீலாங்கிணம் பொளக்கிறாரு”

புதியவகை சிறுகதைகள்

இவ்வகையான சிறுகதைகள் கிட்டத்தட்ட கவிதை நடையிலேயே எழுதப்படுகிறது. கதையை நேரடியாக சொல்லாமல் புதிய அதே நேரத்தில் குழப்பமான முறையில் சொல்வது, ஒருவகையில் புரியாத மொழியில், அடுக்கடுக்கான வாக்கியங்களைகொண்டு சொல்லப்படுவது ஒரு புதிய போக்காக இருக்கிறது. இவ்வகையான எழுத்துக்கு ஆங்கில வழி படிப்பும், வெளிநாடுகளில் பின்பற்றப்படும் முறையை அப்படியே பின்பற்றுவதும்தான் காரணம். இந்தவகை எழுத்துதான் தற்போது தமிழ் சிறுகதை உலகில் புகழ்பெற்றுள்ளது. இதற்கு வித்திட்டவர் மௌனி, கோணங்கி. இவர்களைத் தொடர்ந்து பா.வெங்கடேசன், ச.முருகபூபதி, க.சீ.சிவக்குமார், பிரேம்-ரமேஷ் ஜே.பி.சாணக்யா, தேவி பாரதி, சுரேஷ்குமார் இந்திரஜித், அரவிந்தன், போன்ற எழுத்தாளர்களும் இந்தப் போக்கில் எழுதிவருகின்றனர். இவர்களுடைய நோக்கமே சிடுக்குகள் உள்ள மொழியில் எழுதுவது. இவர்களுக்கு கதை முக்கியமல்ல. வாசகன் முக்கியமல்ல. அலங்காரமான வார்த்தைகளே முக்கியம். கதையைவிட மொழியே முக்கியம்.
‘பிறகொரு இரவு’ (காலச்சுவடு – ஜனவரி – 08) என்ற கதையை எழுதியுள்ள தேவிபாரதி வரலாற்றை கதையின் வழியே மீட்டுருவாக்கம் செய்து காந்தியைப்பற்றி புதிய சித்திரத்தை வாசகருக்கு தந்துள்ளார். இந்தக் கதையில் நாம் இதுவரை அறியாத காந்தியை சந்திக்கிறோம். கடந்தகாலம் நிகழ்கால அரசியலுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. காந்தியை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது, அவருடைய ஆளுமை என்ன, நாம் தெரிந்து வைத்திருக்கிற காந்தி என்பவர் யார் என்று பல அரிய கேள்விகளை இக்கதை வாசகனுக்குள் எழுப்புகிறது. அதற்கு இந்த வரிகளே உதராணம்.
“தங்களுக்கு என்றுமே மரணமில்லை பாபுஜீ, இந்த தேசத்தின் எதிர்காலம் கருணை மிகுந்த தங்கள் கரங்களில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது”.
கோணங்கி – யின் ‘நாடோடி ரயில் கள்ளன் சேக்கு’ (கல்குதிரை – ஜன. 2010) என்ற கதை எங்கு தொடங்குகிறது, எங்கு முடிகிறது? கதை நிகழும் காலம் எது? பரசுராமன் – என்பவரின் வழியாக விரிகிறது கதை. எல்லைகள் கடந்து கதைக்குள் பழைய காலம் பதியப்படுகிறது. புதியகாலம் பதியப்படுகிறது. கோணங்கியின் மனம் பின்னோக்கி மட்டுமே பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பழைய காலம் குறித்த சித்திரங்கள் அடுக்கடுக்காக கொட்டப்படுகின்றன. பலவாழ்க்கை முறைகள் இந்த கதையின் வழியே காட்சிப்படுத்தப்படுகின்றன. கதாசிரியர் கடக்கிற தூரம் நம்பத் தகுந்ததாக இல்லை. கதை தொடர்ந்து நமக்கு பல செய்திகளை சொல்லிக்கொண்டேயிருக்கின்றன. அவை தகவல்களாக மட்டுமே இருக்கின்றன என்பதற்கு இந்த வரிகளே சான்று.
“ தையல்காரர்கள் கையில் வறுமையும் கிழிந்த வாழ்வைத் தைக்கவும் இருட்டைக் கீறி முட்டுகிறார்கள். துவைத்தெடுத்த கல்லில் அடிப்பட்டு சாயம்போன பழய துணி. இறந்து ஒடியும் ஆடைகள் மூச்சுவிடும் கனவு”.
தலித்திய சிறுகதைகள், பெண்ணிய, நவீன, வாய்மொழி மரபுச் சிறுகதைகள் என்று பல பெயர்களில், பல அடையாளங்களில் எழுதப்பட்டாலும் எல்லா கதைகளுமே தமிழ் வாழ்வைத்தான் எழுதுகின்றன. மற்ற காலங்களைவிட இக்காலத்தில்தான் சிறுகதைக்கானக் கூறுகள், வடிவம் குறித்த, மொழி உள்ளடக்கம், எல்லை, கதாசிரியரின் நிலை குறித்த தெளிவு ஏற்பட்டுள்ளது. புதியவகை முயற்சிகள் இப்போது கூடுதலாக ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக பலதரப்பினரும் பலதரப்பு வாழ்க்கை குறித்தும் எழுதுகின்றனர். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கையும், பெண்களுடைய வாழ்க்கையும் அக்கறையுடன் எழுதப்படுகின்றன. இதுவரை சமூகம் அறியாத பல வாழ்க்கை முறைகள் இப்போதுதான் கதைகளாகின்றன. சிடுக்குகள் நிறைந்த மொழியில் எழுதப்படுகிற முறையும், எளிய சொற்களில், எளிய மொழியில் எழுதப்படுகிற முறையும் தற்போது உள்ளது. இதற்கு மேற்குறிப்பிட்ட பல கதைகளே மாதிரிகள். தமிழ்ச்சிறுகதைகள் என்ற பெரிய கடலில் அண்மைக்கால சிறுகதைகள் ஒரு பார்வை என்பது – ஒரு கைபிடி அளவு நீர்தான். அந்த கைப்பிடி அளவு நீரும் உண்மையாக மட்டுமல்ல காலத்தின் கண்ணாடியாகவும் இருக்கிறது. இதன் வழியே மொத்த தமிழ் சிறுகதையின் செழுமையை உணர முடியும். இன்றைய கதைகள் நாளைய கதைகளுக்கு வாசல்களை திறந்துவிடும்.

தலித் இலக்கியமும் இன்றைய சூழலும்...

இமையம்
சமூகச் சூழலும் வாழ்க்கைமுறையும்தாம் ஓர் இலக்கியப் படைப்பின் அடிப்படை ஆதாரங்கள். வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டதல்ல இலக்கியம். ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட காலகட்ட இயக்கத்தையும் வாழ்க்கை முறையையும் இலக்கியப் படைப்பாக மாற்றுவது என்பது சமூகச் செயல்பாடு. பல்வேறு சமூகங்களின் பல்வேறு காலகட்ட நடப்பியல்களையும் வாழ்க்கை முறைகளையும் இலக்கியங்கள்தாம் பதிவுசெய்கின்றன. பிறகு அவை வரலாறுகளாக மாற்றம் பெறுகின்றன. அப்படி உருவாக்கப்படும் இலக்கிய வரலாறுகளின் நம்பகத்தன்மையைக் குறிப்பிட்ட படைப்பாளிகளின் சமூக அக்கறை, சமூக ஈடுபாடு, வாழ்வனுபவம், சமூகத்தைப் பார்த்த விதம், பதிவுசெய்த விதம் ஆகியவற்றோடு படைப்பாளியின் படிப்பு, மொழி குறித்த அறிவு, எழுத்துப் பயிற்சி என்று பலவும் சேர்ந்து உருவாக்குகின்றன. இவைகளே ஒரு படைப்பு, காலம் கடந்து வாழ்வதற்கும் உருவான வேகத்திலேயே உயிரை விடுவதற்குமான காரணங்களாகவும் இருக்கின்றன.
தமிழ் மொழியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான, ஒவ்வொரு விதமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. நடைமுறைக் காலத்தில் தலித் இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன. மார்க்சியம், பெண்ணியம், இருத்தலியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல், கட்டுடைத்தல் என்று இயங்கிக்கொண்டிருந்த தமிழ் இலக்கியச் சூழலில், நிறப்பிரிகை பத்திரிகையைச் சேர்ந்த ரவிக்குமார், அ. மார்க்ஸ் போன்றவர்கள்தாம் முதன்முதலில் தலித் இலக்கியம் குறித்துப் பேசியவர்கள், எழுதியவர்கள். மார்க்சியவாதிகள், மார்க்சிய இயக்கங்கள் பொதுவாகத் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்; ஆனால் சாதிய உள் முரண்பாடுகள் குறித்துப் பேசுவதில்லை; சாதிய உள் முரண்பாடுகள் ஒழியாமல் சாதியம் ஒழியாது என்ற வாதத்தை அவர்கள் நிறப்பிரிகையில் தொடங்கிய அதே காலத்தில்தான் அரசே அம்பேத்கர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. அதே காலத்தில் தலித் இலக்கியம் கர்நாடகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. பணியின் காரணமாகக் கர்நாடகத்தில் வாழ்ந்த தமிழக எழுத்தாளர்கள் கர்நாடக இலக்கியப் போக்குகள் குறித்துத் தமிழகத்தில் பேசினர். அதே காலகட்டத்தில்தான் வட தமிழகத்தில் திருமாவளவனும் தென் தமிழகத்தில் கிருஷ்ணசாமியும் அரசியல் சக்திகளாக உருவெடுத்தனர். இப்படிப் பல காரணிகள் பல முனைகளிலிருந்து உருவாகித் தமிழ் மொழியில் தலித் இலக்கியத்தை உருவாக்கின. இந்தப் போக்கு உருவாவதற்கு முன்னமே தலித் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளைப் பூமணி, சிவகாமி போன்றவர்கள் உருவாக்கியிருந்தனர்.
தமிழில் தலித் இலக்கியம் உருவாக ஆரம்பித்த 1985-1992 காலகட்டத்தில், தலித் இலக்கியம் என்று ஒன்று உண்டா, தனியாக தலித் இலக்கியம் என்று ஒன்று தேவையா, தலித் இலக்கியத்தின் வரையறைகள் என்ன, தலித் இலக்கியத்தின் அடிப்படையான கருதுகோள்கள் எவையெவை, தலித் இலக்கியத்தை யாரெல்லாம் எழுதுவது, பிறப்பால் தலித்தாக இல்லாதவர்கள் தலித் வாழ்வை இலக்கியப் படைப்பாக எழுதினால் அந்தப் படைப்புக்குப் பெயர் என்ன, அரசியல் களத்தில் சாதிரீதியாகத் தமிழ்ச் சமூகம் சிதறுண்டு கிடக்கும் நிலையில் இலக்கியத்திலும் அந்நிலை வேண்டுமா என்று கேட்கப்பட்ட நூற்றுக்கணக்கான கேள்விகள் இன்றைக்குச் சாரமிழந்து போய்விட்டன. அதற்குக் காரணம் இன்றைய சமூகச் சூழல்தான்.
இன்றைய சூழலில் தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகளில் மட்டுமல்ல, உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைமுறைகள் இலக்கியமாக்கப்படுகின்றன. இவ்வகை இலக்கியங்களுக்குப் போதிய கவனமும் வரவேற்பும் கிடைக்கவே செய்கின்றன. அதே நேரத்தில் உலகெங்கும் ஒரே பண்பாடு, பொருளாதாரம், சந்தை, வாழ்க்கைமுறை என்ற வன்முறைக் கலாச்சாரத்தால் உலகெங்குமுள்ள சிறுசிறு இனக் குழுக்கள் தங்கள் பண்பாடு, அடையாளம், பூர்வ கலாச்சாரங்கள் ஆகியவை அழிக்கப்படுவதற்கு எதிராகக் குரலெழுப்பத் தொடங்கியுள்ள நிலையில் ஒடுக்கப்பட்டவர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைமுறைகள் இலக்கியப் படைப்புகளாக மாறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
தலித் வாழ்க்கை என்பதும் தலித் இலக்கியம் என்பதும் நவீனத்துவம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடோ தத்துவமோ அல்ல; தலித் இலக்கியம் என்பது ஒரு மனிதனின், ஒரு குடும்பத்தின் வாழ்க்கை அல்ல, கதை அல்ல; பெரும் திரளான ஓர் இனத்தின் பண்பாடு, ஒழுக்க நெறிகள், வரலாறு, மொழி, குறியீடு, அடையாளம் எனலாம். அதன் அடிப்படைக் கலாச்சார மீறல், கலக வெளிப்பாடு, சமூக, புராணிக மதிப்பீடுகளின் மீதான, சமூகக் கட்டுமானங்களின் மீதான எதிர்ப்பு எனலாம். தலித் இலக்கியம் என்பது அடிப் படையில் ஒரு வாழ்க்கை - வாழ்க்கை முறை.
தலித்துகளின் வாழ்க்கை, நிலம் சார்ந்தது; உழைப்புச் சார்ந்தது; கலைகள் சார்ந்தது. இன்றைக்கு உயிரோட்டமான மொழியைக் கொண்டிருப்பவர்கள் தலித்துகளே. நிகழ்த்துகலைகளின் பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் தலித்துகளே. தலித்துகளின் மொழி கலைக் குரிய மொழி. தங்களுடைய பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் நிலம் சார்ந்தும் நிலத்தோடு சேர்ந்த சூழல் சார்ந்தும் உருவாக்கியவர்கள். நிலத்தோடு வாழ்ந்து, அறிவும் நாகரிகமும் சாகசமும்செய்து வாழும் இனம் தலித் இனம். இந்த வாழ்க்கைமுறையிலிருந்துதான் தலித் இலக்கியம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்ந்தது வேறு.
எழுத்தாளனின், குறிப்பாக தலித் எழுத்தாளனின் கம்பீரம் எது, பலம் எது, பலவீனம் எது, கற்றுக்கொள்ள வேண்டியது எது, நிராகரிக்க வேண்டியது எது என்று அறிவித்துச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை இன்றைய சூழல் உருவாக்கியுள்ளது. இது எழுத்தாளனுக்குச் சூழல் தந்திருக்கும் சவால். இந்தச் சவாலைக் குறிப்பாக தலித் எழுத்தாளர்கள் எப்படி எதிர்கொண்டார்கள், எதிர்கொள்வார்கள்? இதுவரை தமிழில் வந்துள்ள படைப்புகளைப் பார்க்கும்போது எந்தச் சவாலையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் படைப்பு ரீதியான சவாலைக்கூட அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகும். இருபது, இருபத்தி ஐந்து ஆண்டுக் காலம் கடந்துவிட்ட நிலையில் சிறந்த தலித் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என்று பெரிய எண்ணிக்கையில் வராததே இதற்குச் சான்றாகும். தலித் வாழ்க்கையை ஆவணப்படுத்துவது மட்டுமே இலக்கியப் படைப்பாகாது. ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு பல கோட்பாடுகளை உருவாக்கலாம். ஆனால், எந்த ஒரு கோட்பாடும் சிறந்த ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்க முடியாது. சூழலுக்கேற்ப, சூழலைப் பயன்படுத்திக்கொள்ள எழுதப் படும் படைப்புகள், படைப்பாளிக்கு முன்னரே உயிரை விட்டுவிடும். இதுதான் தமிழில் நடந்துகொண்டிருக்கிறது. தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் மட்டுமே அது தலித் படைப்பாகிவிடுமா? தலித்துகள் பயன்படுத்தக்கூடிய வழக்குகளை ஒரு படைப்பில் ஆங்காங்கே பயன்படுத்தினால் அது தலித் படைப்பாகி விடுமா? தலித்தின் ஊளையும் முரட்டுத்தனமான கோபமும் மட்டுமே தலித் படைப்பா?
பொதுவாக மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொடுப்பவன் வியாபாரி; எழுத்தாளன் அல்ல - முக்கியமாக தலித் எழுத்தாளன் அல்ல. இன்று தமிழ்ச் சூழலில் மட்டுமின்றி இந்திய, உலகச் சூழலில் இலக்கியச் சந்தையில் விலைபோகக்கூடியதாக இருப்பது ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களே. நவீன இயந்திரத்தின் தேவைகளும் வியாபார நோக்கத்தின் தந்திரங்களும் இலக்கியப் புத்தக வெளியீட்டைப் பரவலாக்கியிருக்கின்றன. உலகச் சந்தையும் வியாபாரப் போட்டியும்தாம் இதற்கு முக்கியக் காரணங்கள். தலித் எழுத்தாளருக்கு வாய்ப்புகள் தேடிவருகின்றன. தலித் படைப்புகளை வெளியிடுவதில் போட்டியும் இருக்கிறது - தற்குறித்தனமாக, படைப்புக்குரிய ஒழுங்கோ அழகியலோ இல்லாமல் எழுதினால்கூட. இதற்குக் காரணம் தலித் இலக்கியத்தை வியாபாரப் பொருளாக மாற்றும் நுண் அரசியல்தான். இந்த அரசியலைப் புரிந்து கொள்ளாமல், எழுதப்பட்ட வேகத்திலேயே நூலாக்கம் பெறுவது தவறா, வாய்ப்புகளை தலித் எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு என்று கேட்பது சரியல்ல. தலித் எழுத்தாளர்கள் நிறைய எழுதலாம், அவை உடனுக்குடன் புத்தகமாகவும் வரலாம், விற்கவும் செய்யலாம். ஆனால், அதற்கு மேல் என்ன? தலித்துகளின் எழுத்துக்கள்மீது அறிவுபூர்வமான விவாதங்கள், செயல்பாடுகள், பயிற்சிகள் இதுவரை தமிழில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா? தலித் படைப்புகள் உணர்ந்து படிக்கப்பட்டிருக்கின்றனவா? அவ்வாறு இல்லையெனில், தலித்துகளின் புத்தகங்கள் விற்பதால் என்ன பயன்? யாருக்கு லாபம்?
தலித்துகளின் வாழ்க்கை வெளிப்பாடு என்பது வலியும் ரணமும் கண்ணீரும் நிறைந்தது. இதைத்தான் இன்றைய சந்தைச் சூழல் கோருகிறது. தலித்துகளின் ஏக்கங்களை, இழிவுகளை, சில்லறைத்தனங்களை, காயத்தை, அசிங்கமான பகுதிகளை மட்டுமே இன்றைய சந்தை கோருவதேன்? தலித்துகளின் இப்படியான பகுதிகளை மட்டுமே தலித் எழுத்தாளர்கள் ஏன் உற்பத்திசெய்கிறார்கள்? இதுதான் அரிய வாய்ப்பு என்கிறார்களா? இதைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் தலித் எழுத்தாளர்கள் துடிக்கிறார்களா? வாழ்வின் சகல விஷயங்களையும் தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பது என்பது நோய்க்கூறு கொண்ட மனத்தின் செயல்பாடன்றி வேறென்ன? தேய்ந்துபோன பொது மொழியை, படிப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற சாரமற்ற மொழியை, ஊடகங்களின் செத்துப்போன மொழியை தலித்துகளின் மொழியாகக் கட்டமைப்பதும் மேட்டிமையோடும் மறுபுறம் இறைஞ்சும் தோரணையிலும் எழுதுவதும் தமிழில் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமா?
தலித்துகளின் படைப்புகளை வெளியிடுவதும் அதற்காகப் போட்டியிடுவதும் வெறும் வியாபாரத் தந்திரம் மட்டுமல்ல; நவீன இயந்திரத்தின் தேவை மட்டுமல்ல. தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமற்ற சமூகத்தின், படித்தவர் படிக்காதவர் என்ற வித்தியாசமற்ற சமூகத்தின், சிக்கலான முடிச்சுகளைக் கொண்ட உழைப்புச் சுரண்டலை, பொருளாதாரச் சுரண்டலைச் செய்கிற சமூகத்தின், தொழிலால் வாழிடத்தால், உணவுப் பழக்கத்தால் ஒதுக்கிவைத்த, ஒதுக்கிவைக்கும் நம் சமூகத்தின் இன்னொரு முகம் இது. இதற்குப் போட்டி போட்டுக்கொண்டு போவது என்பது தலித் எழுத்தாளர்கள் செய்யும் வரலாற்றுக் குற்றமாகும்.
தலித்துகளின் வாழ்க்கை என்பது கையேந்துதல், கூப்பாடு, ஒப்பாரி, அழுகை, அசிங்கம் மட்டும்தானா? தலித்துகளின் வாழ்க்கையில் சிரிப்பு, சந்தோஷம், விளையாட்டு, கலைகள் இல்லையா? தலித்துகளுக்கென்று பண்பாடு, வரலாறு, மொழி, ஒழுக்க நெறிகள், கூட்டு வாழ்வு எனச் செழுமையான பகுதிகளே இல்லையா? இப்பகுதிகளைத் தலித் எழுத்தாளர்கள் ஏன் எழுதுவதில்லை? இவற்றை ஏன் இன்றைய சந்தை கோருவதில்லை?
ஓர் இனத்தின் அடையாளம் அந்த இனத்தின் கலாச்சாரம்தான் என்றால், தலித் எழுத்தாளர்களின் நோக்கம் தலித் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதாகவும் அதன் செறிவான பகுதிகளை, கூறுகளைப் பூரணமாக உள்வாங்கி, அவற்றை இலக்கியப் படைப்பின் மூலம் அடுத்தடுத்த காலகட்டத்துக்குக் கடத்துவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் உலகத் தரத்துக்கு மட்டுமல்ல, இந்திய, தமிழ்த் தரத்துக்குக்கூடத் தலித் இலக்கியம் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதும் ஊளையையும் கோஷத்தையும் கோபத்தையும் பதிவுசெய்வதும் தமிழில் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவாது.

Tuesday, March 15, 2016

காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்...

பிரபஞ்சன்
பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. ‘கல்ச்சர்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் ‘கலாச்சாரம்’ எனக் கொண்டார்கள். இந்தக் ‘கல்ச்சர்’ என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். ‘கல்ச்சரை’ ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு.1
தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியிருக்கின்றன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது புறநானூறு. பண்பையும் பாட்டையும் இணைத்திருக்கிறார் டி. கே. சி. பண்பாட்டுக்கு மேத்யூ அர்னால்டு தந்த விளக்கம் மிகச் செறிவானது. தனிமனிதன் அறிவு, குணத்தை நிரப்பிக்கொண்டு தன்னை முழுமையாக்கிக்கொள்வதோடு, சமூக நலத்தை மேலும் பேணும் தன்மை. ஒரு இனம் அறிந்தவற்றுக்குள்ளேயே சிறந்ததும் சிந்தித்தவற்றுக்குள்ளேயே உயர்ந்ததும் பண்பாடு எனலாம் என்கிறார் அவர்.
o
நிறைந்த பல விழுமியங்களைக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய இருப்பாகக் காதலையும் திருமணத்தையும் குடும்பத்தையும் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் அழுத்தமாகவே சொல்கின்றன. சங்க இலக்கியங்கள் - பாட்டும் தொகையுமான அந்தப் பதினெட்டுத் தொகுப்புகளின் பாடல்கள் எழுதப்பட்ட காலம் கிறிஸ்து பிறப்புக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் பின்னால் இருநூறு வருஷங்கள் என்னும் அந்த ஐந்நூறு ஆண்டுக் காலகட்டத்துத் தமிழர் வாழ்க்கையை அச்சங்க இலக்கியப் பாடல்கள் சித்தரித்துள்ளன என்பதைப் பொதுவாகக் கருத்தில் கொள்ளலாம். தமிழ் ஆய்வுலகம் பெரும்பான்மை இந்தக் கால அளவை ஏற்றுக்கொள்கிறது.
இந்த ஐந்நூறு ஆண்டுக் காலப் படைப்புகள், தம் காலத்து யதார்த்தத்தைச் சித்தரித்தன என்று சொல்வதற்கில்லை. அவை ஒரு இலக்கிய மாதிரியை முன்வைத்தன; புனைவும் நாடகத்தன்மையும் யதார்த்தமும் கூடியவை அவை என்ற புரிதலோடு அப்பாடல்களைப் பயில்தல் வேண்டும். மற்றும் அவை தமக்கு முன்பிருந்த காலத்து வழக்கையும் மரபுகளையும் நினைவுகளையும் தம் சமகாலத்ததாகக் கொண்டும் புனையப்பட்ட பாடல்கள் என்பதையும் கவனத்தில் கொண்டே அக்காலத்துத் தமிழர்களின் -இந்து பண்பாடு என்னும் பெரும் தலைப்பில் அடக்கப்படும் காதல், ஒழுக்கம், திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
o
சங்க இலக்கியத்தில் காதலாகிய ‘அகம்’ சார்ந்த பாடல்களே, புறம் சார்ந்த பாடல்களைவிடவும் அதிகமாக இருக்கின்றன என்பது கொண்டே, சங்க காலம் காதலுக்கு இரு கதவுகளையும் திறந்துவைத்த சமூகமாகவே தோன்றும். அக்காலத்து அறிவாளர்களாகிய புலவர்கள், மிகவும் உற்சாகமாகவே காதலைப் பாடி, காதல் நிரம்பிய சமூகத்தை உருவாக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தில் சுமார் 89 இடங்களில் காதல் என்ற சொல் பயின்றுவந்துள்ளது என்கிறார் பெ. மாதையன்2. காதல் என்பதைக் குறிக்கக் காமம் என்னும் சொல் 91 இடங்களில் வந்துள்ளது. இதேபோல ‘நட்பு’ எனும் சொல்லும் கேண்மை எனும் சொல்லும் ‘தொடர்பு’ என்பதும் காதலைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன என்றும் கூறுகிறார் அவர்.
சில காதலர்களை நாம் சந்திக்கலாம். ஒருத்தி தன் காதலைத் தோழியிடம் இப்படிச் சொல்கிறாள்: (குறுந்தொகை)
first-row-erotic-sculptures.jpg
குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மலைத் தலைவனுடன் நான் கொண்ட நட்பு, நாம் வாழும் நிலத்தைக் காட்டிலும் அகலமானது. வானத்தை விடவும் உயர்ந்தது. கடலைவிடவும் ஆழமானது.
காதலின் தொடக்கத்தில் மிகப் பெரும் நம்பிக்கையும் உறுதியும் தங்கள் காதலர்மேல் காதலிகளுக்கு ஏற்படத்தான் செய்கின்றன. தலைவியின் காதல் உணர்வுக்குச் சற்றும் குறையாமல்தான் தலைவர்களின் நட்பின் மணம் இப்படி வீசுகிறது.
‘அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டே! பூக்கள் பலவற்றின் மணத்தையும் நுகர்ந்து, அவற்றின் தேனையும் உணவாகக் கொண்டு வாழும் இயல்பினைக் கொண்ட வண்டே. என்னோடு நட்பாக இருக்கும் மயில் போன்ற சாயலையும் அழகிய பற்களையும் கொண்டிருக்கிற என் இந்தச் சினேகிதியின் அழகிய கூந்தலைவிடவும் வாசனையுள்ள இன்னொரு பூவை நீ அறிந்திருக்கிறாயா? மாட்டாய். இருந்தால் எனக்கு அதைச் சொல்வாயாக’
- குறுந்தொகை
இது தலைவன் தலைவியின் நலம் பாராட்டிச் சொல்லும் வாசகம். தன் காதலியின் கூந்தலைக் காட்டிலும் மணம் கொண்ட வேறு ஒரு பொருள் பூக்களிலும்கூட இருக்க முடியாது என்பது அவன் தீர்மானம். அவனுக்கும் அவளுக்குமான புணர்ச்சி (உடல் புணர்ச்சிதான். இது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் விரும்பியதை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டார்கள்.) நடந்து முடிந்த பிறகு, தலைவியின் இன்ப நலத்தைச் சொல்லிச் சிலாகிக்கிற பாடல் இது. தலைவிக்கும் இது மகிழ்ச்சியாக இருக்கும்தான். இந்த இரண்டு பாடல்களையும் ஒப்புநோக்கும்போது, நமக்குப் பிடிபட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. தலைவி சொன்ன முதல் பாடலின் காதல் உக்கிரமும் அழகியல்ரீதியாக அதன் ஆழமும் திடநம்பிக்கையும் தெளிவும் தலைவன் நலம் பாராட்டலில் இருக்கின்றனவா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். தலைவன் பேச்சில் அனுபவித்த திருப்தியும் ஒருவகை எக்களிப்பும் இன்னும் கூடுதலாக ஓடும் நதியின் நீருக்குள் புரளும் கிளிஞ்சல்போல, சத்தம் எழுப்பாத ஆண்தன்மையைக்கூட உணரக் கூடும்.
சங்கக் காதலர்களின் பிரச்சினை இங்குதான் தொடங்குகிறது. தனிமையில் அவர்கள் சந்திக்க நேரும்போது, அக்காலத்தில் மக்கள்தொகைக் குறைவும் காடுகள் நிறைந்த நிலப்பகுதியையும் கணக்கில் கொண்டால், மெய்யுறு புணர்ச்சி ஏற்படுதல் இயல்பும் இயற்கையுமே ஆகும். தமிழ் இலக்கியமும் இலக்கணமும் மெய்ப்புணர்வை ஏற்கவுமே செய்கின்றன. புணர்ச்சிக்குப் பிறகு, தலைவன் நியாயமான காரணத்தாலோ நியாயமற்ற காரணத்தாலோ சந்திப்பைத் தவிர்க்க முனைந்தால் தலைவிக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடுகிறது. காதல் வண்டு மற்றொரு மலருக்குத் தாவிவிட்டதோ என்று தவித்துப்போகிறாள். மீண்டும் சந்திக்கும்போது அவன் அவளிடம் ஆயிரம் சத்தியம் செய்கிறான்.
‘குவளை மலரின் மணம் வீசுகின்ற, திரண்ட கரிய கூந்தலையும் ஆம்பல் மலரின் மணம் தரும் பவள வாயினையும் உடையவளே. அஞ்சாதே என்று நான் சொல்லிய சொல்லே உனக்கு அச்சமூட்டியதோ? உன்னைப் பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன் நட்பே எனக்குப் பெரிது . . .’
பெண்ணுக்கு அப்போதைக்குச் சமாதானம் ஏற்படுகிறது. தொடர்ந்து நிகழ்ந்த சந்திப்புகள் அவளிடம் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிறைய காதலர்கள் நிறைய காதலிகளிடம் செய்த சத்தியங்கள் வெடித்த பஞ்சுபோலக் காற்றில் பறப்பதையும் உதிர்த்த மதுமயக்கம் நனைந்த வார்த்தைகள் நீரில் மிதந்து செல்வதையும் காதல் செய்த பெண் திடுக்கிடலோடு பார்க்க நேர்கிறது. ‘பொய்யும் வழுவும் புகுந்த காலம்’ என்று இலக் கணக்காரர்கள் இக்காலத்தையே சொல்கிறார்கள். மேலும் பெண்ணின் காதல் உறவு மற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் ‘அலர்’ தூற்றப்படுகிறது. சங்க இலக்கியம் இந்த மற்றவர் வாழ்க்கையை மகிழ்ந்து புறம் பேசுகிற வழக்கத்தை ‘அம்பல்’ என்றும் ‘அலர்’ என்றும் குறிப்பிடுகிறது.
குறிப்பாகப் பெண்கள் அந்தரங்கம் பற்றிப் பிறர் பேசும் வழக்கத்துக்கு 2500 ஆண்டு வயது என்பதிலும் தமிழர் பெருமைப்படலாம். இப்படிப் பேசப்படும் அவர் பேச்சுக்கு மனம் நைந்துபோகிறாள் தலைவி. திருமணத்தை நோக்கிய அவளது நகர்வுக்கு ‘அலர்’ முக்கியக் காரணமாகிறது. புணர்ச்சி காரணமாகவும் கவலை காரணமாகவும் (தான் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற கவலை) உடல் இளைக்கிறது. உடம்பில் பசலை படர்கிறது. தாய் இதைக் கவனிக்கிறாள். பெண்ணுக்கு முருகு அல்லது அணங்கு போல ஏதோ காத்துகருப்பு தோஷம் என்று எண்ணி வேலனை (பூசாரியை) அழைத்துப் பூசை போட்டுக் (வெறியாட்டு) குறி கேட்கிறாள். தாய்மார்களுக்குத் தம் பெண்கள் காதலிக்கவும் காதலிக்கப்படவும்கூடும் என்கிற நம்பிக்கையே வருவதில்லை. தாய்மார்களுக்குத் தம் பெண்கள் என்றும் குழந்தைகள். கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரிபடுகிறது, தாய்மார்களுக்கும். தாய்மார்கள் சிலர் பெண்களைக் கோல் கொண்டு அடித்ததாகச் சங்கப் பாடல்கள் உண்டு. காதலனுக்குத் தன் உடம்பில் சுதந்திரம் கொடுத்த பெண்ணுக்குப் பல சந்தர்ப்பங்களில் அவன் முகவரிகூடத் தெரிவதில்லை. அதோ அந்த மலைக்கு அந்தப் பக்கம் என்று பொத்தாம்பொதுவாக அவன் சொல்வதை அவள் கேட்டு அமைதி அடைந்திருக்கிறாள். ‘அவனை நான் விட்டுவிடுவேனா என்ன, ஊர், நாடு எங்கும் போய் வீடு வீடாகத் தேடி அவனைக் கண்டுபிடித்து விடமாட்டேனா?’ என்கிறார் சங்கப் பெண்மணி ஒருவர். ‘அடக் கஷ்டகாலமே. என்னை அறிந்த அவன், நாளை உன்னை எனக்குத் தெரியாதே என்றால் என்ன செய்வது? எங்கள் உறவை அறிந்தவர்கள் யாரும் இல்லையே. ஆங். . நாங்கள் உரையாடிக் களித்த அந்தக் குளத்தருகே ஒரு நாரை நின்று கொண்டிருந்தது’ என்று பேதைத்தனமாக நினைக்கும் தலைவியையும் சங்கப் பாட்டில் காண முடிகிறது.
பெண்ணின் காதல் விவகாரம் தாய்க்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ ஆரம்பிக்கிறது. தேரில் (இன்று காரில்) வந்த இளைஞன் ஒருவன் ஊர்ப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த சிலர் சொல்கிறார்கள். வீட்டுக்கு எதிரே தெருவில் ஒருவன் நின்றதாகப் பார்த்தவர்கள் வந்து சொல்கிறார்கள். குளிக்கப்போன இடத்தில் தலைவி அருவியில் வழுக்கிவிழ, எங்கிருந்தோ வந்த இளைஞன் ஒருவன் அவளைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றியதையும் தோழிகள் தாய்க்குச் சொல்கிறார்கள். ‘அடடா, அவள் கூந்தல் மாறுபட்டும் முலை முகம் மாறுபட்டும் வளர்ந்தும் இருந்ததைப் பார்த்துச் சந்தேகித்த அன்றைக்கே அவளை வீட்டுக்குள் (இற்செரிப்பு) அடைத்துவைக்காமல் போனேனே’ என்று வருந்துவார் தாய். வீட்டுச் சூழல் மாறி அனலடிப்பதையும் தாயின் கண்களில் சினம் வழிவதையும் காண நேர்ந்த தலைவி தலைவனுடன் உடன்போக்கில் (இன்றைய தமிழ் - ஓடிப்போதல்) அவன் ஊருக்குச் செல்கிறாள். காதலின் ஆழத்தை அறிந்த பெற்றோர் அவளையும் அவனையும் அழைத்து வந்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
o
தமிழ்ப் பண்பாட்டின், சங்கத் தமிழர் வாழ்க்கை முறையில் மிக முக்கியமானதாக அறிஞர் உலகம் கருதிவரும் தமிழர் தம் ‘களவு’ வாழ்க்கையை அது திருமணத்தில் முடிவுற்றமையை மிகச் சுருக்கமாகக் கண்டோம். பெற்றோர் அறியாமல் பெண்ணும் ஆணும் ‘ஊழ்’ வலிமையது காரணமாக எதிர்ப்பட்டுக் காதலாகிக் கரந்து புணரும் வாழ்க்கை நெறியே களவு ஆகும். பத்துப்பாட்டில் ஒன்றாகிய, கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டை, ‘ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது’ என்று பின்வந்தோர் பரவலாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
இயற்கைப் புணர்ச்சியையும் அது பற்றிய செய்திகளையும் தோழி அன்னைக்குச் சொல்லிக் காதலர்களின் களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் பாட்டாகும் இது. இதைத் ‘தமிழ் அறிவித்தல்’ என்றே குறிப்பிட்டார்கள் என்றால், தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாகக் களவு வாழ்க்கை முறையைக்கொண்டிருந்தார்கள் என்பது விளங்கும். என்றாலும் இது குறித்து மேலும் விளங்கிக்கொள்ளச் சில புரிதல்களுக்கு நாம் வருதல் வேண்டும்.
1. சங்க இலக்கியங்களாகிய பாட்டும் தொகையும் (ஆக மொத்தம் 18 நூல்கள்) காதலை மிகுத்தும் மேல் வழியும் புளகாங்கிதத்தோடும் பாடினாலும் அக்காலச் சமூகம் காதலை முற்றும் ஏற்றுக்கொண்டதாகக் கருதுவதற்கில்லை.
2. இற்செரிப்பு எனும் பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவைத்துத் துன்பம் தருகிற துறை, அன்றைச் சமூகத்தில் நிலவிய வழக்கத்தையே சொல்கிறது எனில், பெற்றோர் பார்த்துவைக்கும் ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளும் முறையே நீடித்துக்கொண்டிருக்கும் சமூக நிலையாகச் சங்கச் சமூகம் இருக்க வேண்டும்.
3. களவுச் செய்தியை அறிந்த தாய்மார்கள் தம் பெண்களைக் கோல்களால் அடித்திருக்கிறார்கள். இது காதலுக்கு அவர் காட்டிய முகம்.
4. அலருக்கும் அம்பலுக்கும் பெண்கள் இவ்வளவு அச்சம்கொள்ள வேண்டி இருப்பது சமூகத்துக்குப் பயந்தல்ல. மாறாகத் தம் பெற்றோர்க்கும் சகோதரர்களுக்கும் இது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் என்றும் கருதலாம்.
5. உடன்போக்கு எனும் காதலர் வெளியேறுதல் திருமணம் நடக்கத் தடைவரும் என்று நிச்சயமான நிலையில்தான் நிகழ்ந்திருக்கிறது.
மாறிவரும் சமூகச் சூழலையே சங்கக் கவிதைகள் சித்தரிக்கின்றன எனத் தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் சங்க காலத்துக்கும் முன்னால் பெண்களை, இள மகளிரைப் பிறர் கவர்ந்து செல்லாமல் பாதுகாக்க அவளுடைய இடுப்பில் கயிற்றைக் கட்டி மறுபுறக் கயிற்றைத் தங்கள் கையில் வைத்துக் காத்திருக்கிறார்கள் தாயார்கள். இரவு நேரத்தில் அவர்கள் கால்களில் கயிறு கட்டிக் காத்திருக்கிறார்கள். நாகரிகம் முதிர்ந்த காலத்தில் இடுப்புக் கயிறு மேகலை (ஒட்டியாணம்) ஆகவும் கால் கயிறு சிலம்பாகவும் மாறியது. பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு பெண்ணின் கால் சிலம்புகளைக் கழற்றும் சடங்கு ஒன்று இருந்துள்ளது. அதற்குச் சிலம்புக் கழி நோன்பு என்று பெயர்3 என்று கூறுகிற பாலசுந்தரம் அவர்களின் கூற்றால் பழங்காலம் என்கிற காலத்திலிருந்து சங்க காலம் எனப்பட்ட காலத்துக்கும் முந்தைய, சம காலத்திய தமிழர் எண்ணங்கள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன என்று யூகிக்கலாம்.
பேராசிரியர் மாதையன் ஒரு குறிப்பை நல்குகிறார். குறுந்தொகையில் இரண்டு பாடல்களை அவர் எடுத்துக் காட்டுகிறார். அவற்றின் (136, 205) சாரம் இது.
‘காமம் காமம் என்று உலகத்தார் சிலர் அதை இழித்துப் பேசுகிறார்கள். அது அச்சமூட்டும் பேய், பிசாசு அல்ல. நோயும் இல்லை. அதி மதுரத் தழையைத் தின்ற யானைக்கு மதம் சிறிது சிறிதாகக் கூடுவதுபோல, மனம் விரும்புகிறவரைக் கண்டு அடைந்த பிறகு மனிதர்க்கு ஏற்படும் (மதம்போல) பரவச நீட்சியாகும் காமம்.
காமம் காமம் என்று அதனை அறியாதவர்கள் இகழ்ந்து பேசுகிறார்கள். காமம் அணங்கு (வருத்தும் சக்திகள்) இல்லை. நோயும் இல்லை. மேட்டு நிலத்து முளைத்த பசும் புல்லை ஏறிக் கடித்து (மென்று) சாப்பிட முடியாத முதிய பசு, புல்லைத் தன் நாவால் நக்கி இன்பம் அடைவதுபோல் காமம் அது கொண்டவர் ஆர்வத்தின் அளவுக்கு இன்பம் பயப்பதாக இருக்கும். அது விருந்தே ஆகும்.’
இந்த இரு குறுந்தொகைப் பாடல்களும் முக்கியமானவை. காமம் குறித்து அதாவது சமூகத்தில் பெருகிவரும் காதல் - காதல் திருமணம் குறித்து எதிர்மறையாக விமர்சித்தவர்கள் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வதே இப்பாடல்கள். தவிரவும் ‘விருந்து’ என்ற சொல், ‘புதியது’ என்று பொருள் தந்து சமூகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிற புதிய (பெண் ஆண் காதல் கொள்வது, பிறகு திருமணம் செய்துகொள்வது) பழக்கத்தையும் புதிய சமூக நடைமுறை ஒன்று உருவாகிவருவதையும் உணர்த்துவதாக இருக்கிறது என்பதாக மாதையன் கருதுகிறார்.
இது மேலும் ஆராயப்பட வேண்டிய கருத்து என்றாலும் ஏற்றுச் சிந்திக்கத் தக்கதாகவே இருக்கிறது. மனித சமூகம் அதன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டே வந்துள்ளது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை நாம் அறிவோம். அப்படி மாறிக்கொண்டே வந்த சமூகச் சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் புதிதாக வந்தது காதல். ஒரு காலத்தில் பாலுறவு அக்கணத்து மனம் விருப்பம் தேவை சார்ந்ததாக, உறவுமுறைகள் ஏதும் அற்றதாக, வரையறையற்ற புணர்ச்சிச் சுதந்திரமாக இருந்துள்ளது. புணர்ச்சிச் சுதந்திரம் சுருங்கிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் ஒருவன் ஒருத்தி என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்த ஒருவன் ஒருத்தி கருதுகோள் அப்போது புதிதாக அமைந்துகொண்டு வந்த அரசுகளுக்கும் அதிகாரப் பிரயோகத்துக்கும் வசதியாக இருந்தது. குடும்பங்கள், ஒரு சின்ன அளவு அரசாங்கம். அரசாங்கத்தில் அரசன் முதன்மை என்றால், ஆண் ஆதிக்கக் குடும்பத்தில் கணவன் அதிகாரி. அரசனுக்கு ஆளப்படுபவர் மக்கள் என்றால் கணவன் ஆட்சிக்கு உட்பட்டவர் மனைவி. அரசனுக்குட்பட்ட அதிகாரிகள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களை ஒடுக் குவதுபோல, தந்தைக்கும் தாய்க்கும் ஒடுக்குவதற்கு ஏற்றபடியாகப் பிள்ளைகள். தனிச் சொத்துரிமை வழக்கத்துக்கு வந்ததும் கற்பு என்கிற ஆண் இன்பக் களவுகளும் உருவெடுக்கின்றன. மன்னனின் அந்தப் புரங்கள், மனைவிகள், விருப்பப் பெண்கள், போரில் கொண்டுவந்த மகளிர்கள் என்று நிரம்பி வழிகிறது என்றால், குடும்பத் தந்தைக்கு அல்லது தலைவனுக்குப் பரத்தைகள். (ஒரு நல்ல விஷயம்: பரத்தைக்கு ஆண்பாலாகப் ‘பரத்தன்’ என்ற சொல்லும் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.)
தலைவனின் சொத்து அவன் வாரிசுகளுக்கே சென்று சேர்வதை ஒருவன் ஒருத்தி திருமணம் உறுதிப்படுத்தியது. பெண் தன் சுதந்திரத்தை உறுதிபட இழக்கிறாள் என்பதையும் அத்திருமண முறை உறுதிப்படுத்தியது.
o
சங்கத் திருமணங்கள் மிக எளிமையாகக் குறிப்பாகப் பிராமணச் சடங்குகள் இன்றி நடைபெற்றிருக்கிறது. அகநானூற்றில் இரண்டு திருமண விவரங்கள் பேசப்படுகின்றன.
காலையிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தோடுகூடிய நாளையே திருமணத்துக்கு நல்ல பொழுதாகத் தமிழர்கள் நம்பியிருக்கிறார்கள். நிறைய கால்களை நட்டுப் பெரிய பந்தல் போட்டு, மலர் மாலைகள் தொங்கவிட்டுத் தரையில் புதுமணல் பரப்பி இருக்கிறார்கள். ஒரு பக்கம் உளுந்தம் பருப்பு கூட்டிச் செய்த பொங்கலும் சோறும் விருந்தாகப் பரிமாறப்பட்டுள்ளது. மங்கள மகளிர் தலையில் நீர்க் குடத்தினை எடுத்துவந்து வைக்கிறார்கள். மகன்கள் பெற்ற நான்கு மகளிர் கூடிநின்று, ‘கற்பினின்று வழுவாது உன்னைக் கொண்ட கணவனைப் பேணிக் காப்பாற்றுவாயாக’ என்று வாழ்த்தி, பூக்கள் மிதக்கும் நீரை அப்பெண்ணின் மேல் தெளிக் கிறார்கள். சுற்றத்தார்கள் வந்து, பெரும் மனைக் கிழத்தி ஆவாயாக’ என்று வாழ்த்துகிறார்கள். அன்றே முதல்(?) இரவு நடைபெறுகிறது.
இன்னொரு வசதியான வீட்டுத் திருமணம் இது. நெய்மிக்க வெண்மையான சோற்றினை இறைச்சியுடன் சேர்த்து ஆக்கி எல்லோரையும் உண்பித்தார்கள். புள் (பறவை) நிமித்தம் பார்த்தார்கள். வளர்சந்திரன் ரோகிணியோடு கூடிய நாளில், மண இடத்தை அழகுபடுத்தினர். கடவுள் வழிபாடு நடந்தது. மண வாத்தியம், முரசுகள் முழங்கின. மங்கள மகளிர் மணப் பெண்ணை நீராட்டினர். மணமகனுக்கு வெள்ளை நூலால் காட்டி நூலை (பேய் பிசாசுகளிடம் இருந்து காக்கும் நூல்) அணிவித்துப் புதுப் புடவையால் சுற்றினார்கள். அணிகலன்கள் பூட்டினார்கள். பெண்ணுக்கு வியர்வை தோன்றியது. அதைத் துடைத்துவிட்டார்கள். அன்றே முதல் இரவு நடந்தது.
சங்கத் தமிழர் திருமணம் இவ்வளவுதான். ‘மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டும் காலம் வரவில்லை . . . ஆனால் கோவலன் கண்ணகி திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டவும் பிராமணச் சடங்கோடும்தான் நடந்தது. சங்க காலத்துக்குப் பிறகு சுமார் 200 ஆண்டுகளாவது பிராமண சாட்சியாகத் திருமணம் செய்துகொள்ளக் கோவலன் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் வைணவப் பிராமணக் கொழுந்தும் மாபெரும் கவியுமான ஆண்டாள் கண்ட திருமணக் கனவு சமூக வளர்சிதை மாற்றத்தை உணர்த்தும்.
வில்லிபுத்தூர் நகரத்தில் ஊர் முழுக்கத் தோரணங்கள் கட்டப்பட்டுப் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை வதுவை மணம் என்றுதான் குறிப்பிடப்பட்டு விட்டது. பாளையும் கமுகும் மற்றும் முத்துச் சரங்களும் தொங்கவிடப்பட்ட பந்தலில் அவர் அமர்ந்திருக்கிறார். இந்திரன் முதலான தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து நாரணன் நம்பி சார்பாக மணம் பேசுகிறார்கள். மந்திரிக்கிறார்கள். நால்திசைகளில் இருந்தும் புனித நீர்க் குடங்கள் வருகின்றன. பார்ப்பன சிஷ்டர்கள் அவனுக்குக் காட்டிக் கட்டுகிறார்கள். மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ், மதுசூதனன் வந்து அவளைக் கைப்பற்றுகிறான். வாய் நல்ல பிராமணர்கள் மறை ஓதுகிறார்கள். ‘நாங்கள்’ தீவலம் செய்கிறோம். நம்பி என் காலை எடுத்து அம்மிமேல் வைக்கிறான். என் கையையும் நாராயணன் கையையும் என் தாய் மற்றும் சுற்றத்தார் இணைத்துவைக்கிறார்கள் . . .
ஆண்டாள் தன் சாதிக்குரிய சடங்குகளோடு கூடிய திருமணத்தைப் பார்த்து இருக்கக்கூடும். அப்படியே கனவும் காண்கிறாள். சில கற்பிதங்கள் இருந்தாலும் அவள் விரும்பிய திருமணம் இது.
o
தமிழர் திருமணத்தில் தாலியும் தீவலம் வருதலும் இல்லை என்பதையும் முக்கியமாகப் பார்ப்பனப் புரோகிதர் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே உறங்கி எழுந்ததும் தலைவிமார்கள் தங்கள் தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்கள். தாலியின் மகிமையைப் பற்றியும் பேசிமாயும் நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.
காதல் வாழ்க்கை களவு என்றதுபோல் திருமண வாழ்க்கை கற்பு எனப்பட்டது. தொடக்கத்தில் கற்பு என்பதன் பொருள் தாயும் தந்தையும் கற்பித்தபடி நடத்தல் என்றுதான் இருந்தது. ஒருதாரக் குடும்ப அமைப்பு இறுகியபோது, ஆண் தலைமைத்துவம் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, கற்பு என்பதன் பொருள் கணவனுடன் மட்டும் உடல் உறவு கொள்ளுதல் என்று ஆனது. பெண்ணின் பெருந்தகைமையை அவளது உடலுக்குள் பிரவேசித்த அதிகாரபூர்வமான கணவனின் உறுப்பு மட்டுமே தீர்மானித்தது. பெண் என்கிற மனுஷியின் மனமோ விருப்பமோ தேர்வோ தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் எப்போதும் உரையாடலுக்குட்படுத்தப்படவில்லை.
திருமணத்துக்குப் பிந்தைய தலைவிகள் தங்கள் கணவர்கள்மேல் காட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கப்பட்ட விசுவாசத்தில் வெகுகுறைவான சதமானமே கணவர்மார்களால் தங்கள் தலைவிகள் மேல் காட்டப்பட்டது என்பதற்கே நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன. களவுக் காலத்தில் காதலன் தன்னைப் புறக்கணித்துவிடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்பட்ட பெண் கற்புக் காலத்தில் கணவன் தன்னைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந்து விடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்படுவது தான் நம் சங்கப் பெண்களின் பேரவலம். குறுநில மன்னனும் பெரும் வள்ளலுமான பேகன், மனைவி கண்ணகி என்பவளைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந் தான். இதைக் கண்டிக்கும் (மிக மிக மென்மையாக) முகமாகக் கபிலர், பரணர், பெருங்குன்றூர் கிழார், அரிசில் கிழார் என்று அக்காலத்திய பெரும்புலவர்கள் பஞ்சாயத்து பண்ணிப் பேகனைக் கண்ணகியிடம் கொண்டு சேர்க்கிறார்கள். பரத்தையர் பிரிவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்காகவே சமூகத்தில் இருந்துள்ளது. அறிவாளர்களாகிய புலவர்கள் தலைவியர்கள் பால் கரிசனம் கொண்டார்களே தவிர, பரத்தையரின் அவலத்தைப் பாடவில்லை என்பது கருதத்தக்க ஒன்று. இன்னொன்றையும் கூடவே சொல்ல வேண்டும். இன்னல்களுக்குரிய வாழ்க்கையைக் கொண்டவர்களேனும் பரத்தையர், தலைவிகளைக் காட்டிலும் கூடுதலான சுதந்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
கற்பு வேடம் பூண்ட பெண்டிர் சற்றேறக்குறைய தெய்வங்களாகவே புனையப்பட்டுள்ளார்கள். தாய் வீட்டில் தேனும் பாலும் பருகி வளர்ந்த பெண், கணவன் வீடு வறுமையுற்றதால், மான் கலக்கிய கலங்கல் நீரைக் குடித்துப் பசியை ஆற்றுகிறாள் என்கிறது ஒரு சங்கக் கவிதை. அடுப்புப் புகையால் கண் சிவந்து, நீர் சொரிந்தாலும் தான் சமைத்த உணவைக் கணவன் மிக விரும்பிச் சாப்பிடுவதைக் கண்டு பேருவகை அடைகிறாள் ஒரு கற்புக்கரசி. கணவன் பரத்தையர் வீடு சென்று திரும்பிவந்தால் மனைவி கோபப்படக் கூடாது, ஊடல் கொள்ளலாம். அதற்கு மேல் தம் கோபத்தை வெளியிடப் பெண்களுக்கு அனுமதி இல்லை. போர் காரணமாகவோ கல்வி மற்றும் பொருள் சேர்க்கவோ கணவன் 12 மாதங்கள்வரை பிரியலாம். மனைவிகளுக்கு இந்த மூன்று உரிமைகள் இல்லை. மனைவி வீட்டுக்கு விலக்காக (கலம் தொடா மகளிர் என்று பெயர் இவர்களுக்கு) இருக்கும்போது, கணவன் பரத்தையரிடம் போகலாம். ஆனால் மனைவி குளித்து முழுகித் தயாராகிக் கணவன் என்னும் தெய்வத்தை வரவேற்கத் தயார் ஆக வேண்டும். வெறும் டி.எம்.டி. கம்பிகளுக்கு இருக்கிற மரியாதைகூடப் பெண்களுக்கு அக்காலத்திலும் இல்லை. எக்காலத்திலும் இல்லை.
ஆண் குழந்தை பெறும்போது பெண்ணுக்குக் குடும்பத்தில் ஓரளவு கவனிப்பு கிடைக்கிறது. ஆண் குழந்தை பெற்றவரே மங்கள மடந்தையர். மற்றவர்கள் அமங்களர்கள்.
கணவனை இழந்த பெண்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு பாடல் - புறம் 146.
“சான்றோர்களே! உன் கணவன் இறந்துவிட்டான். நீ அவனது சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறு என்று சொல்லாமல் என்னைத் தடுக்கின்ற சான்றோர்களே! நான் என் கணவனுடன் எரிந்து போகவே விரும்புகிறேன். வெள்ளரிக்காய் விதையைப் போல, விரைத்த, தண்ணீர் பிழிந்த சோற்றைக் கீரைக் குழம்போடு, எள் துவையலுடன், சமைத்த வேளைக் கீரையைத் தின்று கொண்டு பாய்கூட இல்லாமல் பருக்கைக் கல் மேல் படுத்துக் கைம்மை நோன்பு இயற்றி வருந்தும் பெண்களைப் போல நான் இல்லை. என் கணவனை எரிக்கத் தயாராகும் இந்தத் தீ, எனக்குத் தாமரைப் பொய்கையைப் போன்றது. . . என்னைச் சாகவிடுங்கள். . .”
கைம்மை நோன்புக்கு அஞ்சி உயிரையே கொடுக்கச் சித்தமான இந்தப் பெண் சராசரிப் பெண் அல்ல. மன்னன் பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு! மன்னனின் மனைவிக்கே கைம்மை நோன்பு இத்தனை கொடுமை தரும் எனில் பிறபெண்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்?
o
1. பல்வேறு மணங்களைக் கால வளர்ச்சியில் கண்ட தமிழ்ச் சமூகம் ஒருதார மண நிலையை எய்தியது சங்க காலத்துக்குச் சற்று முன்னர்தான். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் காதலிக்கும் சுதந்திரத்தை ஓரளவாவது பெற்றார்கள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காதல் திருமணத்தை விரும்பவில்லை.
2. சங்க இலக்கியக் கதாபாத்திரங்கள்- தலைவர், தலைவி இருவரும் உயர்குடும்பத்தினர். உழைக்கும் வர்க்கத்தினர் இழிசனர்கள் என்றும் புலையர்கள் என்றும் வினைவளர்கள் என்றும் அடியோர்கள் என்றும் இழிக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் பற்றிப் பாடினால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற உயர்காதல் ஒழுக்கத்தை வைத்துப் பாடும் ஐந்திணைகளில் பாடாமல் கைக்கிளை, பெருந்திணை போன்றவற்றில் வைத்துப் பாடலாம். அந்த இழிசனர்களுக்குக் காதலின் நுணுக்கம் தெரியாது. அதோடு காதலை முழுமையாக எடுத்துச் சென்று பயிலத் தகுதி இல்லாதவர்கள் அவர்கள் என்கிறது, திட்டவட்டமாக இலக்கணம்.
3. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்பதே தமிழ் இலக்கணம்.
4. வைதீக இந்து மதத்தின் வருணாஸ்ரமக் கருத்துகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் அதிகம் கலக்காத, மிகவும் அரிதாகக் கலந்த இலக்கியமே சங்க இலக்கியம். அந்த வகையில் அது ஆரோக்கியமானது.
5. சமண சித்தாந்தங்களும் பௌத்தக் கருத்தாடல்களும் விரவிவருகிற காரணத்தால், சங்க இலக்கியம் உயர்தன்மையைப் பெற்றுள்ளது.
6. சங்க இலக்கியம் சுமார் 500 ஆண்டுக் காலப் படிநிலை வளர்ச்சியைப் பெற்றது. மக்கள் சார் சிந்தனையும் மன்னர் சார் சிந்தனையும் விரவிவருகிற இலக்கியமாகவும் இருப்பதற்கு அதுவே காரணம்.
7. 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டின் சில பகுதிகள் குறித்த சங்க இலக்கியம் இப்படியாக நமக்குச் சில தெளிவுகளைத் தருகிறது.
o
1. தமிழர் பண்பாடு, வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், பதிப்பு 1949, பக். 51, 55.
2. சங்க இலக்கியத்தில் குடும்பம், என்.சி.பி.எச். பதிப்பு 2010.
3. தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகை உரை, பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம், பதிப்பு 1989.

தமிழ் மொழிக் கல்வியில் பண்பாடும் மதிப்புகளும் ...




 இன்றைய உலகின் மிக அடிப்படையான உண்மையாக பல்லினக் கலாச்சாரச் சூழல் அமைந்திருக்கிறது. இந்த உண்மை உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய எதார்த்தமாக உள்ளது. ஆசிய நாடுகள், குறிப்பாகத் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகள் அடர்ந்த காடுகள், மீதுயர்ந்த மலைகள், ஆழமான நதிகள் நிறைந்த இயற்கைச் சூழல்களைக் கொண்டவையாக அமைந்துள்ளன. இவற்றின் இயல்பான விளைவாக மிகச் செழுமையான உயிரினங்களின் பன்மீயப் பெருக்கத்தை (Bio-Diversity) இப்புவியியல் பிரதேசம் கொண்டமைந்துள்ளது. அதுபோலவே இந்நாடுகள் பல வகையான பண்பாட்டு வகையினங்களைக் கொண்டவையாகவும் விளங்குகின்றன. மொழி, பிரதேசம், சமயம், பண்பாடு என்ற பல்வேறு அடையாளங்களைக் கொண்டு அணுகும்போது தெற்காசிய நாடுகளின் தொன்மையும் செழுமையும் வியப்பினை ஏற்படுத்துவதாக நம் கண் முன் விரிகின்றன.
 தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரலாற்றின் எல்லாக்கட்டத்திலும், மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரை, எப்போதுமே இவ்வகையான பண்பாட்டுச் செழுமையைக் கொண்டிருந்தன என நாம் அறுதியிட்டுச் சொல்லமுடியும். பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம், தமிழ், சீனம் போன்ற பல மொழிகளை இந்நாடுகளில் நாம் காணமுடிகிறது. ஒவ்வொரு மொழியும் அடுத்து வந்த வரலாற்றுக் காலங்களில் கிளை பிரிந்து பல நூறு மொழிகளாகச் செழித்தன என்பதையும் காணுகிறோம். சமணம், பௌத்தம், வைதீகம், தாந்திரிகம், தாவோயிசம், கன்பூசியனிசம், சாக்தம், சைவம், வைணவம், இஸ்லாம் போன்ற பல சமய நிறுவனங்களையும், இவற்றை ஏதோ ஒருவகையில் ஊடுருவி நிற்கும் இயற்கை நெறிகளையும் இந்நாடுகளில் நாம் தரிசிக்க முடியும். இத்தனை வேறுபட்ட பண்பாட்டுப் பரப்புக்களைக் கொண்டிருந்த போதிலும், இப்பண்பாடுகளுக்கிடையில் ஆசியப் பெரும்பரப்பு சார்ந்த ஒரு பொதுமையும் நிலவுகிறது என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய உண்மையாகும். மிகப் பழங்காலந்தொட்டே கடல் வழியாகவும் நில வழியாகவும் மிகச் செழுமையான கொடுக்கல், வாங்கல்களைச் செயல்படுத்தி வந்த மக்களாக ஆசிய மக்கள் விளங்கி வந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய விடயமாகும். வித்தியாசமான சமூகத் தகவுகளைக் கொண்டவர்களாக நாம் விளங்கிய போதிலும்யாதும் ஊரே, யாவரும் கேளிர்என்ற பொதுமை மரபும் நம்மில் முகிழ்த்திருக்கிறது என்பதையே இங்கு நான் வலியுறுத்த விழைகிறேன். ஒவ்வொரு பண்பாட்டின் தனித்தன்மைகளைப் பாதுகாத்துக் கொண்டு ஒன்றுபட்ட ஆசியப் பண்பை நேசிப்பவர்களாக நம்மால் வாழமுடிந்திருக்கிறது என்பதை நம் மக்களின் நீண்ட நெடிய வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
 காலனிய ஆட்சிக்காலம் ஆசிய நாடுகளின் வாழ்வில் சில தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆசிய ஒற்றுமை என்ற பண்பு சில புதிய வரவுகளை அக்காலத்தில் சந்தித்தது. ஐரோப்பியப் புதிய வரவுகளை நாம் எதிர்கொண்ட சூழல்களில் நமது பண்பாட்டுத் தன்னுணர்வுகள் கூர்மையடைந்தன என்ற நவீன நிகழ்வை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவை ஏன் அவ்வாறு கூர்மையடைந்தன? என்ற கேள்வியும் கூட மிக முக்கியமானதே. மிகப் பழமையான சமூகங்களைக் கொண்ட நமது நாடுகள் மேற்கத்திய சமூகத்தின் அனுபவங்களிலிருந்து வந்த புதிய வரவுகளைத் தமக்கே உரிய முறையில் உரசிப்பார்த்து, மதிப்பிட்டு உள்வாங்கும் ஒரு நிகழ்வுப் போக்கிலேயே, அத்தகைய உள்முகமான பண்பாட்டுத் தன்னுணர்வுகள் கூர்மையடைதல் என்பதுவும் நிகழ்ந்தது எனக் கூறலாம். ஆசிய நாடுகளின், பண்பாடுகளின் நவீனமாதல் என்ற நிகழ்வுப் போக்கின் ஊடாக அத்தகைய பண்பாட்டுத் தன்னுணர்வுகளின் கூர்மையடைதலும் நடந்தேறியது எனவும் இதனை மதிப்பிடலாம். நவீனகாலத்திய சுய பண்பாட்டுக் கூர்மையடைதல்கள் மேற்கத்திய வரவுகளோடு சந்தித்துப் பொருந்தி, நமக்கே உரிய நவீனமயமாக்கலைச் சாதித்தன என்றும் கூறலாம்.
 காலனிய ஆட்சிக்காலம் முடிந்து ஆசிய நாடுகள் சுதந்திரம் அடைந்தபோது நமது பிரச்சினைகள் இன்னொரு புதிய வடிவத்தை ஏற்றன. நவீனமயமாக்கம் என்ற சர்வதேசத் தொடர்புடைய நிகழ்வுப் போக்கு நமது பண்பாட்டுத் தனித்தன்மைகளையும் நம்மிடையிலான பண்பாட்டு ஊடாட்டங்களையும் மறுவரையறை செய்யுமாறு நிர்ப்பந்தித்தன. நவீனமயமாக்கம் நம்மிடையில் தீவிர தனிமனிதவாதப் போக்குகளை வளர்த்து வருகிறது என்ற உண்மையை மனதில் கொள்ளுவோமேயெனில், அவை சார்ந்து நமது பண்பாட்டுப் பரிமாற்றங்களின் சிக்கல்களையும் நம்மால் அவதானிக்க முடியும். எல்லா வேளைகளிலும் நம்மிடையிலான உறவுகள் நியாயமாக எதிர்கொள்ளப்படுகின்றன என்று சொல்லிவிட முடிவதில்லை. சமீப காலங்களில் தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நெருக்கடியான பல நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன என்பதை நாம் காணுகிறோம். அவை எத்தனை நெருக்கடியானவையாக இருப்பினும் பல்லினக் கலாச்சாரச் சூழலுக்கு மரியாதை கொடுக்கும் ஆசிய மரபை மீட்டெடுக்கும் கடப்பாடு நமக்கு உள்ளது என்ற உணர்வோடு இப்பிரச்சினையை அணுக வேண்டியவர்களாக நாம் உள்ளோம். இப்படிப்பட்ட வரலாற்றுக் கடமையின் ஊடாகவே பண்பாட்டுக் கல்வி என்பது முதன்மையான ஒன்றாக, உயிரோட்டமான ஒன்றாக, செயலூக்கமான ஒன்றாக நம்மிடையே தொழில்பட்டு வருகிறது. பண்பாட்டுக் கல்வி என்பது நமது வாழ்வுரிமைகள் சார்ந்த ஒன்றாகவும், நமது சொந்த மரபுகளினின்றும் நமது படைப்பாற்றலை மறு உருவாக்கம் செய்து கொள்ளும் ஒன்றாகவும் நம்முன் நிற்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
மரபு, பாரம்பர்யம், பண்பாடு, கலாச்சாரம் என்ற சொற்களின் பொருள் விளக்கம்
 இவ்வுரையில் நான் மரபு, பாரம்பர்யம், பண்பாடு, கலாச்சாரம் என்பன போன்ற பல சொல்லாக்கங்களைப் பயன்படுத்துகிறேன். இக்கலைச் சொல்லாக்கங்கள் பற்றிய சில விளக்கங்களை வழங்கிவிட்டு நான் எனது உரைக்குள் செல்லுவது நியாயமாக இருக்கும் எனக் கருதுகிறேன். மரபு, பாரம்பர்யம், கலாச்சாரம், பண்பாடு ஆகிய சொற்கள் ஒன்றுக்குள் ஒன்றாகத் தொடர்புடைய சொற்கள். நாம் இங்கு பேசமுனைகின்ற பண்பாட்டுக் கல்வி எனும் தலைப்புடன் அவை அனைத்துமே நேரடி உறவு கொண்டவை. இவற்றில் மரபு என்ற சொல்லும் பாரம்பர்யம் என்ற சொல்லும் ஒரே பொருளுடையன. மரபு என்பது தூய தமிழ்ச் சொல். பாரம்பர்யம் என்பது வடமொழியிலிருந்து தமிழ் எடுத்தாண்டு பயன்படுத்தி வரும் சொல். இவ்வுரையில் பெரும்பாலும் மரபு என்னும் சொல்லையே நாம் பயன்படுத்த உள்ளோம். அதுபோலவே பண்பாடு எனும் சொல்லும் கலாச்சாரம் எனும் சொல்லும் ஒரு பொருளுடையன. Culture என்ற ஆங்கிலச் சொல்லை நாம் தமிழுக்கு மொழிபெயர்க்க முனைந்தபோது, வடமொழித் தொடர்பால் கலாச்சாரம் என்ற சொல்லையும் தூய தமிழ்ச் சொல்லாக பண்பாடு என்ற சொல்லையும் பயன்படுத்தினோம். நாம் இவ்வுரையில் பெரும்பாலும் பண்பாடு என்ற சொல்லையே அதிகம் பற்றி நிற்கப் போகின்றோம்.
 இனி மரபு என்ற சொல்லுக்கும் பண்பாடு என்ற சொல்லுக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளைத் தெளிவு படுத்துவோம். இவை இரண்டும் நெருக்கமான தொடர்புடைய சொற்கள் என்பதை முதலில் தெரிவித்து விடுவோம். மரபு என்ற சொல் ஆங்கிலச் சொல்லான Tradition என்ற சொல்லைப் பற்றி நிற்பது ஆகும். ஒரு சமூகம் கடந்த காலத்தில் பின்பற்றியொழுகிய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், தகவுகள், அவை சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவை மரபு என்ற சொல்லால் குறிக்கப்படும். ஒரு தலைமுறையின் வாழ்வியல் அனுபவங்களும் அபிலாசைகளும் மறு தலைமுறைக்கு கையளிக்கப்படும் போது அவை மரபு என்ற தொகுப்புச் சொல்லால் குறிக்கப்படுகின்றன. இதன் படி, கடந்த காலத்தினின்றும் இன்னொரு தலைமுறையை வந்து சேரும் சகல பழக்க வழக்கங்களையும் அவற்றின் ஊடாக அமைந்திருக்கும் தகவுகளையும் மரபு என்ற சொல் குறிக்குமாக இருக்கலாம்.
 மரபு என்ற சொல்லிலிருந்து பண்பாடு என்ற சொல் குறிப்பிடத்தக்க முறையில் வேறுபடுகிறது. குறிப்பிட்ட அச்சமூகம் கடந்த காலத்தைத் தாண்டி, சமகாலத்தினுள் நுழையும் போது, இன்னும் கூடுதலாக அது சமகாலத்தில் நின்று கொண்டு தனது எதிர்காலத்தை வரையறுத்துக் கொள்ளும்போது, தனது மரபை மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறது. சமகால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப அது தனது பழம் மரபை மறுவரையறை செய்து கொள்ளுகிறது. இதுவே பண்பாடு எனப்படும். இந்த வகையில் மரபு என்பது ஒரு பெரிய வட்டமாகவும் அதனுள்ளிருந்து தேர்வு செய்யப்பட்ட பழக்க வழக்கங்கள், தகவுகள் ஆகியவற்றின் தொகுதியான பண்பாடு ஓர் உள்வட்டமாகவும் குறிக்கப்படலாம். மரபு என்பது ஒரு பெருந்தொகுப்பு, அது மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டு, விவாதிக்கப்பட்டு, புதிய தேவைகளுக்கேற்ப தகவமைக்கப்படும்போது பண்பாடு உருவாகிறது. மரபு எனும் பெருந்தொகுப்பிலிருந்து பண்பாடு தன்னை எடுத்துரைக்கிறது. நாங்கள் இன்னவர்கள், இப்படிப்பட்டவர்கள் என்ற எடுத்துரைப்பே பண்பாடு எனப்படும். மரபை விட பண்பாடு நெகிழ்வானது. அது விவாதத்திற்கும் தேடலுக்கும் இடமளிப்பது. புதிய வரையறைகளை அது ஏற்றுக் கொள்வது.
தமிழர் பண்பாட்டின் தனித்துவங்கள்
1. தொன்மையும் தொடர்ச்சியும்: தமிழர் பண்பாடு அதன் தொன்மை, தொடர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது. தமிழ் அகழ்வாய்வாளர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு, கி.மு ஆறாம் நூற்றாண்டு ஆகிய வரலாற்றின் மூத்த அடுக்குகளிலிருந்து தமிழ்ப் பண்பாட்டின் பழமையை எடுத்துரைக்கிறார்கள். சங்க இலக்கியம் என அறியப்படுகின்ற செவ்வியல் இலக்கியங்கள் இக்காலப்பகுதியிலிருந்து தொடங்குகின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட இக்காலப்பகுதியையும் தாண்டி, பஃறுளி ஆறு, குமரிக் கண்டம், லெமூரியா, சிந்து வெளி நாகரீகம் ஆகிய மிகப் பழங்கால அடுக்குகளையும் நோக்கித் தமிழின் தொன்மை பயணப்பட்டு வருகிறது. தமிழர்கள் ஏன் பழமையைத் தேடுகிறார்கள்? என்பது ஒரு சுவையான கேள்வியாக இருக்கலாம்.
          தமிழர்கள் மட்டுமல்ல, சமகால வரலாற்றில் பல மக்கள் கூட்டத்தினர் கடந்த கால வரலாற்றின் பழம் அடுக்களில் ஒரு பொற்காலத்தைத் தேடி வருகின்றனர். இது ஏன்? என்பது ஒரு பொதுமைப்பட்ட கேள்வியாக நம் முன் நிற்கிறது எனலாம். மக்கள் கூட்டங்களின் இடைக்கால வீழ்ச்சிகள் பற்றிய தன்னுணர்வு பழங்காலத்தில் ஒரு தூய மரபைத் தேடுவதற்குக் காரணமாக அமைகிறது எனலாம். சமகால வாழ்வில் நாம் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகள், சிக்கல்கள் நம்மை அவையில்லாத ஒரு பழம்பெரும் வாழ்வைத் தேடச் செய்கின்றன. பிற மொழிக் கலப்புகள், பிற நாட்டவரின் படையெடுப்புகள், சொந்த சமூகத்திற்கு ஏற்பட்ட பண்பாட்டு நெருக்கடிகள் போன்றவை அத்தகைய ஒரு பூர்வ மரபைத் தேடுவதற்கான உந்துதலைத் தருகின்றன எனக் கூறலாம். இதே சூழல்களின்தான் தமிழர்களும் தமது தூய மரபைத் தேடி வரலாற்றின் இடுக்குகளின் ஊடாகப் பயணப்பட்டு வருகின்றனர் எனலாம். தொன்மை, நாம் விருப்புடன் காண விழையும் ஒரு கனவு போல நம்முடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கனவு என்பதால் அதன் முக்கியத்துவத்தை எந்த வகையிலும் குறைக்க விரும்புகிறேன் எனக் கருதிவிடாதீர்கள். நாம் வாழும் எதார்த்தத்தைவிட அதிக ஆற்றல் கொண்ட கனவு அது. 
 தமிழின் தொன்மையை விட தமிழின் தொடர்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என சில அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கருத்தில் உள்ள நியாயங்களைச் சற்றே நோக்குவோம். மிகப் பழமையான தமிழ் இலக்கியங்கள் நமக்கு தொகை நூல்களாகக் கிடைக்கின்றன. குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, நற்றிணை போன்ற அனைத்துப் பழம் நூல்களுமே தொகுக்கப்பட்ட பாடல் தொகைகளாக நம்மை வந்தடைந்துள்ளன. இன்னும் விரிவாக அந்நூல்களைச் சங்க இலக்கியம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றோம். இவற்றோடு தொடர்பு கொண்ட வகையில் மூன்று சங்கங்கள் இருந்தன என்றும் கூறுகின்றனர். பழம் தமிழின் நீதி நூல்களும் கூட நாலடியார் நானூறு, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, பழமொழி, ஆசாரக் கோவை எனத் தொகுப்பு நூல்களாகவே அமைந்துள்ளன. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற ஒரு மரபுக்கும் நாம் சொந்தக்காரர்களாக இருக்கின்றோம். இவை எல்லாவற்றிலும் தென்படும் நானூறு, ஐந்நூறு, நாற்பது போன்ற எண்ணிக்கை சார்ந்த தொகுப்புகள் நமது கவனத்தைக் கவருகின்றன. தனித்தனியாக எழுதப்பட்ட பாடல்கள் பொதுப்பண்புகளின் அடிப்படையில் அடுத்துவந்த காலத்தில் தொகுக்கப்பட்டு ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை வழங்குகின்றன என்பதைக் காணுகின்றோம்.
 இடைக்காலத் தமிழகத்திலும் இந்த மரபு தொடர்வதைக் காணுகிறோம். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களெல்லாம் அழகுறத் தொகுக்கப்பட்டு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்றும் தேவாரம் என்றும் பெயரிடப்படுகின்றன. பன்னிரு திருமுறைகள் என்றும் பதினான்கு சாத்திரங்கள் என்றும் சைவ இலக்கியங்கள் தொகுப்பு அடிப்படையிலான பெயர்களைப் பெற்றுள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது. பழைய நூல்களுக்கும் புதிய நூல்களுக்கும் விரிவான உரைகள் எழுதப்பட்டு ஓர் உரையாசிரியர் மரபு உருவாக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். இந்தத் தொகுப்புகளும் உரைகளும்தான் தமிழ்ப் பண்பாடு குறித்த அடையாளப்படுத்தலுக்கு இன்று வரை அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன என்பதைக் காணுகிறோம்.
 பழந்தமிழர்கள் தமது பாடல்களை ஏன் தொகுத்தார்கள்? ஏன் உரை எழுதினார்கள்? என்ற கேள்விகளும்கூட நமக்கு முக்கியமானவை. சமூக வரலாற்றின் ஒவ்வொரு நகர்வுக் கட்டத்திலும் முந்திய காலப் பாடல்களைத் தமிழர்கள் தொகுத்திருக்கின்றனர். முறைப்படுத்தியிருக்கின்றனர். உரை எழுதி விவாதித்துப் பார்த்திருக்கின்றனர். இது தான் பண்பாட்டின் இயங்கியல். முந்திய காலத்தின் மரபுகளில் புதிய சூழல்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தியபோது, பழைய மரபுகளை பழந்தமிழர்கள் தொகுத்தும் வகுத்தும் முறைப்படுத்தியிருக்கின்றனர். கடந்த காலத்தின் செல்வங்களை இழந்து போய் விடுவோமோ என்ற ஓர் அச்சம் அவர்களை வாட்டியிருக்கவேண்டும். நாம் வேரிழந்தவர்களாக ஆகிவிடுவோமோ என்ற பதற்றம் அவர்களைத் தொகுக்கச் செய்திருக்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகத்து இயற்கை என அவர்கள் புரிந்து வைத்திருந்தனர். இருப்பினும் தாம் வாழ்ந்த பழைய முறைமைகளை அவர்கள் இழந்துவிடத் தயாராகவில்லை. பழையவற்றை மீட்டுரைத்து புதிய சூழல்களுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ள அவர்கள் முயன்றிருக்கின்றனர். தொகுப்பு, தொடர்ச்சி, தகவமைத்தல் என்பவை தமிழர் வரலாற்றில் இணைந்து பயணம் செய்திருக்கின்றன. இன்றும் கூட தமிழர்கள் தமது எழுத்திலக்கியங்களை மட்டுமின்றி, நாட்டுப்புற வாய்மொழி இலக்கியங்களையும் தமிழர் திருவிழாக்கள், விளையாட்டுகள், உணவுவகைகள், ஆடைகள், மருந்து வகைகள், வீடுகள் கட்டும் முறைமைகள், நீரைச் சேமிக்கும் முறைகள் ஆகியவற்றையும் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்துப் பேணி வருகிறார்கள். இன்றைய கணினி, வலையகங்கள் போன்ற மிக நவீன அறிவியல் ஆதாரங்களும் நமது பண்பாட்டுச் சேமிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பண்பாட்டு ஞாபகம் அல்லது பண்பாட்டு நினைவுகள் (Cultural Memory) என்ற விடயம் குறித்து சமீப காலங்களில் அறிஞர்கள் பேசிவருகிறார்கள். பண்பாட்டு நினைவுகளே தமிழர்களின் தொன்மைக்கும் தொடர்ச்சிக்கும் துணையாக நிற்கின்றன.                  
2. உலகியல் வளமை யும் செழிப்பும்: தமிழ் இலக்கியங்களின் வழியாகவும் வாழ்நிலைகளின் வழியாகவும் நமக்குக் கிடைக்கும் மற்றுமொரு முக்கியமான பண்பு பழந்தமிழர்கள் உலகியல் செழிப்பைப் பாராட்டும் பாங்காகும். ஐங்குறுநூறு நூலின் தொடக்கத்தில் அமைந்துள்ள சில பாடல் வரிகளை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
 “நெற்பொலிக, பொன் பெரிது சிறக்க..
 விளைக வயலே..
 பால் பல ஊறுக, பகடு பல சிறக்க..
 பசியில்லாதாகுக, பிணி சேண் நீங்குக..
 மாரி வாய்க்க, வளம் பல சிறக்க..
பண்டைத் தமிழரின் இப்பாடல் வரிகள் தமிழர்களிடையில் இப்போதும் வழக்கிலுள்ள பொங்கள் திருநாள் கொண்டாட்டங்களை நினைவு படுத்துகின்றன. பொங்கல் திருநாளில் போற்றப்படும் மஞ்சளும் கரும்பும் புது அரிசியும் பாலும் சர்க்கரையும் வாழைக் குலைகளும் இப்பாடல்களின் ஊடாக நம் கண் முன் தோன்றுகின்றன. மாட்டுப் பொங்கலின்போது அலங்கரிக்கப்பட்டு தெருக்களில் அணிவகுக்கும் மாடுகள் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன.
 எல்லாப் பழைய சமூகங்களுமே செழிப்பையும் வளமையையும் கொண்டாடின. இதற்கு தமிழர்களும் விதி விலக்கல்ல. பல தமிழர் திருவிழாக்களிலும் சடங்குகளிலும் நீரும் நெல்லும் தானியங்களும் காய் கனிகளும் முன்வைத்து வணங்கப்பட்டன. முளைப்பாரி, பொங்கல், கூட்டு உணவு ஆகியவை தமிழரின் திருவிழாக்கள் அனைத்திலும் மையமான இடம் வகிக்கின்றன.
 செழிப்புக்கும் வளமைக்கும் எதிராக நிற்கும் பசிப் பிணியை நீக்கும் வழிகளைத் தமிழர்கள் பண்டைக்காலம் தொட்டே தேடித் தெரிந்து பாராட்டி வந்துள்ளனர். புலவர்களும் பாணர்களும் வறுமை நிலையை அடைந்தபோது அவர்களைப் பொருள் படைத்த மன்னர்களை நோக்கி ஆற்றுப்படுத்தும் பாடல்கள் தமிழில் மலிந்துள்ளன. பசிப்பிணி மருத்துவன் என்ற சொல் புறநானூற்றில் பயின்று வருகிறது. நீர், நிலம், உடல், உயிர், உணவு ஆகியவை மிக அற்புதமாக மற்றொரு புறநானூற்றுப் பாடலில் ஒன்றிணைக்கப்படுகின்றன.
 “நீரின்றி அமையா யாக்கைக்கெல்லாம்
 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
 உண்டி முதற்றே உணவின் பிண்டம்
 உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
 நீரும் நிலனும் புணரியோர்
 ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே
உடம்பையும் உயிரையும் ஒன்றாக்கிப் பேசும் வித்தையை தமிழின் எழுத்திலக்கணம் கூட பதிவு செய்துள்ளது. தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்த வந்த தொல்காப்பியர், அவற்றின் இரண்டு வகையினங்களை மெய் எழுத்து என்றும் உயிர் எழுத்து என்றும் பிரித்துக்காட்டி உயிருள்ள மொழிப் பயன்பாட்டில் அவை இரண்டும் எப்போதும் இணைந்தே தொழில்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையேஎன்று நூற்பா எழுதினார். இது மொழியிலக்கணமா? மெய்யியலா? வாழ்வியலா? என்று பிரித்துப் பார்க்க இயலா நிலையில் தொல்காப்பியர் பேசியிருப்பதைக் காண்கிறோம். 
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பசிப்பிணி நீக்குதலை எல்லா அறங்களிலும் மிக உயர்ந்த அறமாக எடுத்துக்காட்டுகின்றது. உலகை மறுத்துத் துறவு மேற்கொள்ளச் செல்லும் மணிமேகலையும் ஆபுத்திரனும் அமுதசுரபி எனும் அட்சயபாத்திரம் பெற்று வறியவரின் பசியை நீக்குகின்றனர். அறம் பேசும் நூல்களும் செய்க பொருளை..என்று கட்டளையிட மறக்கவில்லை. செல்வம் சேர்த்தவர் பழமரம் உள்ளூர் பழுத்தமை போல எல்லோருக்கும் பயன் தருபவராக வேண்டும் எனத் திருக்குறள் இயம்புகிறது.
வடுவிலா வையத்து மன்னிய மூன்றின்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்எனும் நாலடியாரின் பாடல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றில் நடுவணது, அதாவது பொருளீட்டல், முதன்மையானது என உரைக்கிறது.
3. இயற்கை நெறி: பண்டைத் தமிழர் பண்பாடு இயற்கையைச் சார்ந்ததாக அமைவு பெற்றுள்ளதைக் காணுகிறோம். இயற்கை, பண்டைத்தமிழருக்கு இன்று கூறப்படுவது போல சுற்றுச் சூழல் அல்ல. மனிதரோடு இரண்டறக் கலந்ததாக இயற்கை பழந்தமிழ் இலக்கியங்கள் எங்கணும் காட்சியளிக்கிறது. தொல்காப்பிய நூல்,
          “முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
            இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரேஎன்று தெளிவாகப் பேசுகிறது.  எது முதல் பொருள் என்ற கேள்வியை இன்று நாம் கேட்டால் முதற்பொருளாவது இறைவன் என்று பலர் பதில் கூறுவார்களாக இருக்கலாம். ஆயின் பண்டைத் தமிழரின் இலக்கணநூல் முதல் எனப்படுவது நிலமும் பொழுதும் என வரையறுக்கிறது. புராணங்களும் நம்பிக்கைகளும் நிறைந்ததாகக் கருதப்படும் பண்டைய உலகில் நிலமும் பொழுதுமே மானுடரின் முதற்பொருட்கள் என வரையறுத்திருப்பது ஓர் அதிசயம். இந்த அதிசயத்தைத் தமிழ் அன்று செய்திருக்கிறது. நிலங்களைப் பழந்தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்தனர். மலைகள், காடுகள், நதிகள், வயல்கள், கடல்கள் இவற்றைக் கொண்டே தமிழர்கள் தமது வாழ்விடங்களை, பண்பாட்டைக் கருதியிருக்கிறார்கள். மலர்களின் பெயர்களைக் கொண்டு தமிழர்கள் தமது வாழ்விடங்களையும் செயல்பாடுகளையும் அடையாளப்படுத்தியுள்ளனர். இயற்கை, இயல்பு ஆகியவற்றை ஒட்டி நின்றே தமிழர் அன்று சிந்தித்தனர் என்பதைக் காணமுடிகிறது.
பொழுது என்பதைக் காலம், நேரம் என அருவமாகத் தமிழர் வரையறுத்தாரில்லை. அல்லது அதனை அறிவியலாளர் போல புறவயப்படுத்தவுமில்லை. பொழுது ஓர் ஆண்டின் பருவ காலங்களாகவும் ஒவ்வொரு நாளின் சிறுபொழுதுகளாகவும் புலநெறித்தளத்தில் மிகவும் பிரத்தியட்சமாகத் தமிழர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நிலங்களிலிருந்தும் பொழுதுகளிலிருந்தும் தாவரங்களையும் உயிரினங்களையும் நம்பிக்கைகளையும் தமிழர்கள் அடையாளப்படுத்தியுள்ளார்கள். அவற்றைச் சார்ந்தே, அவற்றிலிருந்தே மானுடர்களின் உணர்வுகள் வருவிக்கப்பட்டுள்ளன. காதலும் பிரிவும் இருத்தலும் இரங்கலும் நிலம் சார்ந்து, பொழுதுகள் சார்ந்து வரையறை பெற்றுள்ள அற்புதத்தைத் தமிழில் காணமுடிகிறது. நிலம், பொழுது, பயிரினங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், அவர்தம் உணர்ச்சிகள் என்ற கோர்வையான, இடையீடற்ற தொடர்ச்சியைத் தமிழர்தம் பண்பாட்டில் காணமுடிகிறது.  
                    
4. அகமும் புறமும்: இயற்கையிலிருந்து, நிலமும் பொழுதும் என்ற முதற் பொருட்களிலிருந்து பண்டைத் தமிழர் படிப்படியாக சமூக வாழ்வை நோக்கி நகர்ந்து வருகின்றனர். திணை எனும் நிலவியல் பகுப்பு அகத்திணை, புறத்திணை எனும் போது சமூகப் பகுப்பாகிறது. அகத் திணை பெண்ணின் வாழ்விடமாகவும் பெண் சார்ந்த பண்பாட்டுப் பரப்பாகவும், புறத்திணை ஆணின் செயல்பாட்டுத் தளமாகவும் ஆண் சார்ந்த பண்பாட்டுப் பரப்பாகவும் உருவெடுக்கிறது. இங்கு பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழும் குடும்ப வாழ்வைப் பற்றியும் சமூக வாழ்வைப் பற்றியும்தான் பேசப்படுகின்றன. இருப்பினும் ஒவ்வொருவரின் நோக்கிலிருந்து அவரவரின் பிரத்தியேக வாழ்வியல் குறிப்பாகப் பேசப்படுகின்றது.
 “ஒன்றே வேறெ என்றிரு பால்வயின்
 ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
 ஒத்த கிழவனும் கிழத்தியும்..என்று தமிழ்க் காதலின், தமிழ்க் குடும்பத்தின் அடிப்படை தொல்காப்பிய நூலில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் வேறுபட்ட இருபாலார் ஆயினும், ஒன்றி உயர்ந்த பாலது ஆணை அவர்களை இணைவிக்கிறது என அந்த வரையறை கூறுகிறது. உலக வரலாற்றை ஆய்வு செய்யும் சமூகவியலாளர்கள் வரலாறின் மிகப் பழமையான, மிக அடிப்படையான வேலைப்பிரிவினை, வாழ்வியல் நோக்கு ஆண், பெண் ஆகியோருக்கிடையில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கின்றனர். தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் வரலாற்றின் அந்த முதன்மையான வாழ்வியல் நோக்குகளை மிக அற்புதமாகப் பதிவு செய்துள்ளன.
 அகமும் புறமும், பெண்ணும் ஆணும் வாழ்வின் தவிர்க்கவியலாத இணைகள் என்றாலும் கூட, அவற்றின் பரந்த அர்த்தத்தில், அவற்றிற்கிடையில் அகத்திணை முதன்மையானது என்பதைப் பண்டைத்தமிழரின் நூல்கள் வலியுறுத்தத் தவறவில்லை. பேராசிரியர் வ. சுப. மாணிக்கனாரின் தமிழ்க் காதல்என்ற நூலை இங்கு நான் நினைவுபடுத்த விழைகின்றேன். அன்னார், முன்பு நாம் பேசிய இயற்கை நெறியின் இடையீடற்ற தொடர்ச்சியாக அகத்திணை மரபைச் சுட்டிக்காட்டுகிறார். அகத்திணை என்பதை பேராசிரியர் வ.சு. மாணிக்கனார் காமம் என அடையாளப்படுத்துவதில் கூச்சப்படவில்லை. அஃது இயற்கையின் தொடர்ச்சி, அஃறிணை, உயர் திணை உயிர்களுக்கெல்லாம் அது பொதுவானது, உயிர்கள் பிறப்பதற்கும் பிறப்பிப்பதற்கும் அதுவே அடிப்படை, அது மெய்வேட்கை, அது உயிர் வளர்க்கும், அது பாலாற்றல் என்றெல்லாம் பலவாறாக பேராசிரியர் வ.சுப. அவர்களால் பாராட்டப்படுகிறது.
 “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
 தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாம்என்று தொல்காப்பியம் கூறுவதைப் பேராசிரியர் வ.சுப எடுத்துக்காட்டுகிறார். மிக இயற்கையான, ஆனால் உறுதியான அடிப்படைகளின் மீது தமிழ்ச் சமூகம் தனது பண்பாட்டு நிறுவனங்களைக் கட்டியெழுப்பியுள்ளது என்பதைக் காணுகிறோம்.
5. தமிழர் சமத்துவம்: தமிழர் வரலாறு ஒரு புராதன சமத்துவத்திலிருந்தே தொடங்குகிறது. பாடறிந்து ஒழுகும் பண்பினைக் கொண்ட சீறூர் மன்னர்களைக் கொண்டதாகவேப் பண்டைத்தமிழகம் வருணிக்கப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று பழம்நூல்கள் விதிக்கின்றன. இன்றும் தமிழ் நாட்டில்  நடைபெறும் கிராமக் கோயில் விழாக்கள் கொடை விழாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. கொடை எனில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் தானம் என்பதை விட, அனைவரும் ஒரே இடத்தில் கூடி உணவு சமைத்து ஒரே வரிசையில் அமர்ந்து உண்ணுதல் என்பதாகவே அர்த்தப்படுகிறது. பாரி, ஓரி, காரி, அதியமான், குமணன் போன்ற தமிழ் மன்னர்கள் அவர்தம் வள்ளற் குணத்துக்காக இன்றும் பாராட்டப்படுகிறார்கள்.
 “உண்டாயின் பதம் கொடுத்து
 இல்லாயின் உடன் உண்ணும்
 இல்லோர் ஒக்கல் தலைவன்என்று அவ்வையார் அதியமானைப் பாராட்டுகிறார். தமது பகுத்து உண்ணும் தண்நிழல் வாழ்நர்என்றே பழங்குடி மக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். புரவுக் கடன் பூண்ட வண்மையானேஎன்று மற்றொரு புறநானூற்றுக் கவிஞன் அரசனைப் பாடுகிறான். பழைய இலக்கியங்கள் காட்டும் புலவர்-அரசர் நட்புறவு, சமூக உறவுகளை முடிந்தமட்டில் சமத்துவமாக ர் ஆதிக்கமும் தமிழர் மாண்பைச் சிதைத்துவிடக் கூடாதென்பதில் பல புலவர்கள் தமது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள்.
 விருந்தினர் போற்றுதல், சுற்றம் ஓம்புதல், அன்புடமை போன்ற அற்புதமான தமிழ்ப் பண்பாட்டுத் தகவுகள் அன்றைய தமிழர்களின் புராதனச் சமத்துவத்திலிருந்தே முகிழ்த்து எழுந்ததாகச் சொல்ல முடியும். அடுத்து வந்த வரலாற்றுக் காலங்களில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகிய சந்தர்ப்பங்களிலெல்லாம் தமிழ்ப் பண்பாடு தனது பூர்வீக சமத்துவத்தைத் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருகிறது. தமிழில் மிகுந்துள்ள அற இலக்கியங்களின் அளவு தமிழர்களின் சமத்துவம் குறித்த நினைவுகளாலேயே ஊடுருவப்பட்டதாக உள்ளது. தன்க்கென வாழாப் பிறர்க்குரியாளன்என்ற சொற்களெல்லாம் தான், தனதுஎன்ற உணர்வைத் தாண்டி, சமூக முழுமையை நோக்கிப் பரவிச் செல்லும் மனோபாவங்களைத்தான் எடுத்துரைக்கின்றன. பின்னால் வந்த பக்தி இலக்கியங்களில் ஏராளமாகப் பேசப்படும் நெக்குருகி, நெஞ்சம் உருகி, அன்பு வயப்பட்டு, மனம் நெகிழ்ந்துஎன்பது போன்ற சொற்களெல்லாம், “யான், எனதுஎன்ற சுயதன்னிலை சார்ந்த உணர்வுகள் கரைந்து உலகை நோக்கி, எல்லா உயிர்களையும் நோக்கி விரிதலையே நோக்கமாகக் கொண்டிருந்தன எனலாம். உலகத்தோடு ஒட்ட ஒழுகி, இசைபட வாழ்வோர் இவ்வுலகில் புகழ் எனும் மதிப்பீட்டால் அங்கீகரிக்கப்படுகின்றனர். இசை என்ற சொல்லுக்கே தமிழில் புகழ் என்ற பொருண்மை உள்ளது. தனக்கென மட்டுமே வாழ்வோர் சமூகப் பழியைச் சுமப்பர் என்றும் சொல்லப்படுகிறது. புகழும் பழியுமே மானுட வாழ்வை மதிப்பிடும் பண்பாட்டு அளவுகோல்கள் என அன்றைய தமிழர்கள் வரையறுத்தனர் என்பதைக் காணுகின்றோம்.

முடிவுரை
 தமிழ்ப் பண்பாடு மிகத் தொன்மையானது, நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டது. அது பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில் தன்னை மீட்டு நோக்கி நெருக்கடிகளையும் மாற்றங்களையும் எதிர்கொண்டுள்ளது. அதன் தொன்மை எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு அதன் தொடர்ச்சியும் முக்கியமானது. தொகுப்புகள், தொடர்ச்சிகள், உரை வழங்குதல் ஆகியவற்றின் வழியாக அது காலரீதியாகவும் பரப்புரீதியாகவும் ஒரு தொடர்ந்த உரையாடலை நடத்தி வந்துள்ளது. வளமை, செழிப்பு ஆகியவற்றை மிகப்பழங்காலந்தொட்டே  சிறப்பித்துப் பாராட்டிய தமிழ்ப் பண்பாடு, தனது மிக அடிப்படையான அளவுகோல்களை இயற்கையினின்றே வருவித்துக் கொண்டிருக்கிறது. முதற்பொருளாவன நிலமும் பொழுதும் என்ற அதன் வரையறை வரலாற்றுச் சிறப்பு மிக்கது; தத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்வின் பரப்புகளை அது பெண் வெளி, ஆண்வெளி எனப் பகுத்துக் கொண்டு, அவற்றின் இயங்கியல் தொகுப்பாக வாழ்வை உள்வாங்கியுள்ளது. பழங்காலம் தொட்டே தமிழர் நேசித்த அவர்களது பூர்வீக சமத்துவமும் சமூக நீதியுணர்வும் அதன் வரலாறு முழுவதும் தொடர்ந்து பயணித்துள்ளது.
 தமிழர் பண்பாட்டின் தனித்துவங்களை முன்வைக்கும் இக்கட்டுரை எவ்வகையிலும் தமிழர் பண்பாட்டை பிற பண்பாடுகளினின்றும் ஆக உயர்வானது என்ற ஒற்றைப்படையான முடிவொன்றுக்கு இட்டுச் செல்லவில்லை. அத்தகைய முறையியலை இக்கட்டுரையாளர் கைக்கொள்ளவில்லை. ஒவ்வொரு பண்பாட்டையும் அதனதன் தனித்தன்மைகளோடு அடையாளப்படுத்துவோம் என்ற பல்லினக் கலாச்சாரச் சூழலில் நின்றே இக்கட்டுரை பேசுகிறது. தேர்தல் அரசியல் மூலமாக நமக்கு அறிமுகமாகியுள்ள பெரும்பான்மை, சிறுபான்மை என்ற கருத்தாக்கங்களின் வழியாகவோ, அறிவுவாதத் தத்துவங்களின் மூலமாக நாம் அறிந்துள்ள உயர்ந்தது, தாழ்ந்தது என்ற கருத்தாக்கங்களின் வழியாகவோ பண்பாடுகளுக்கிடையிலான உறவுகளை மதிப்பிடக் கூடாது என்பதை நாம் உணர்ந்து வருகிறோம். அதிகாரங்களும் ஆதிக்கங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு தளத்தில் பண்பாட்டு அடையாள அரசியலைக் கொண்டு செல்லவேண்டும் என்றே நாம் கருதுகிறோம். தெற்கு, தென் கிழக்கு நாடுகளின் பரஸ்பரப் பண்பாட்டுப் பரிவர்த்தனைகளை மீட்டெடுக்கும் ஒரு பக்குவமான வாழ்நிலையை நோக்கி நகரவே நாம் விரும்புகின்றோம்.