Tuesday, March 15, 2016

தமிழ் மொழிக் கல்வியில் பண்பாடும் மதிப்புகளும் ...




 இன்றைய உலகின் மிக அடிப்படையான உண்மையாக பல்லினக் கலாச்சாரச் சூழல் அமைந்திருக்கிறது. இந்த உண்மை உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய எதார்த்தமாக உள்ளது. ஆசிய நாடுகள், குறிப்பாகத் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகள் அடர்ந்த காடுகள், மீதுயர்ந்த மலைகள், ஆழமான நதிகள் நிறைந்த இயற்கைச் சூழல்களைக் கொண்டவையாக அமைந்துள்ளன. இவற்றின் இயல்பான விளைவாக மிகச் செழுமையான உயிரினங்களின் பன்மீயப் பெருக்கத்தை (Bio-Diversity) இப்புவியியல் பிரதேசம் கொண்டமைந்துள்ளது. அதுபோலவே இந்நாடுகள் பல வகையான பண்பாட்டு வகையினங்களைக் கொண்டவையாகவும் விளங்குகின்றன. மொழி, பிரதேசம், சமயம், பண்பாடு என்ற பல்வேறு அடையாளங்களைக் கொண்டு அணுகும்போது தெற்காசிய நாடுகளின் தொன்மையும் செழுமையும் வியப்பினை ஏற்படுத்துவதாக நம் கண் முன் விரிகின்றன.
 தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரலாற்றின் எல்லாக்கட்டத்திலும், மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரை, எப்போதுமே இவ்வகையான பண்பாட்டுச் செழுமையைக் கொண்டிருந்தன என நாம் அறுதியிட்டுச் சொல்லமுடியும். பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம், தமிழ், சீனம் போன்ற பல மொழிகளை இந்நாடுகளில் நாம் காணமுடிகிறது. ஒவ்வொரு மொழியும் அடுத்து வந்த வரலாற்றுக் காலங்களில் கிளை பிரிந்து பல நூறு மொழிகளாகச் செழித்தன என்பதையும் காணுகிறோம். சமணம், பௌத்தம், வைதீகம், தாந்திரிகம், தாவோயிசம், கன்பூசியனிசம், சாக்தம், சைவம், வைணவம், இஸ்லாம் போன்ற பல சமய நிறுவனங்களையும், இவற்றை ஏதோ ஒருவகையில் ஊடுருவி நிற்கும் இயற்கை நெறிகளையும் இந்நாடுகளில் நாம் தரிசிக்க முடியும். இத்தனை வேறுபட்ட பண்பாட்டுப் பரப்புக்களைக் கொண்டிருந்த போதிலும், இப்பண்பாடுகளுக்கிடையில் ஆசியப் பெரும்பரப்பு சார்ந்த ஒரு பொதுமையும் நிலவுகிறது என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய உண்மையாகும். மிகப் பழங்காலந்தொட்டே கடல் வழியாகவும் நில வழியாகவும் மிகச் செழுமையான கொடுக்கல், வாங்கல்களைச் செயல்படுத்தி வந்த மக்களாக ஆசிய மக்கள் விளங்கி வந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய விடயமாகும். வித்தியாசமான சமூகத் தகவுகளைக் கொண்டவர்களாக நாம் விளங்கிய போதிலும்யாதும் ஊரே, யாவரும் கேளிர்என்ற பொதுமை மரபும் நம்மில் முகிழ்த்திருக்கிறது என்பதையே இங்கு நான் வலியுறுத்த விழைகிறேன். ஒவ்வொரு பண்பாட்டின் தனித்தன்மைகளைப் பாதுகாத்துக் கொண்டு ஒன்றுபட்ட ஆசியப் பண்பை நேசிப்பவர்களாக நம்மால் வாழமுடிந்திருக்கிறது என்பதை நம் மக்களின் நீண்ட நெடிய வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
 காலனிய ஆட்சிக்காலம் ஆசிய நாடுகளின் வாழ்வில் சில தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆசிய ஒற்றுமை என்ற பண்பு சில புதிய வரவுகளை அக்காலத்தில் சந்தித்தது. ஐரோப்பியப் புதிய வரவுகளை நாம் எதிர்கொண்ட சூழல்களில் நமது பண்பாட்டுத் தன்னுணர்வுகள் கூர்மையடைந்தன என்ற நவீன நிகழ்வை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவை ஏன் அவ்வாறு கூர்மையடைந்தன? என்ற கேள்வியும் கூட மிக முக்கியமானதே. மிகப் பழமையான சமூகங்களைக் கொண்ட நமது நாடுகள் மேற்கத்திய சமூகத்தின் அனுபவங்களிலிருந்து வந்த புதிய வரவுகளைத் தமக்கே உரிய முறையில் உரசிப்பார்த்து, மதிப்பிட்டு உள்வாங்கும் ஒரு நிகழ்வுப் போக்கிலேயே, அத்தகைய உள்முகமான பண்பாட்டுத் தன்னுணர்வுகள் கூர்மையடைதல் என்பதுவும் நிகழ்ந்தது எனக் கூறலாம். ஆசிய நாடுகளின், பண்பாடுகளின் நவீனமாதல் என்ற நிகழ்வுப் போக்கின் ஊடாக அத்தகைய பண்பாட்டுத் தன்னுணர்வுகளின் கூர்மையடைதலும் நடந்தேறியது எனவும் இதனை மதிப்பிடலாம். நவீனகாலத்திய சுய பண்பாட்டுக் கூர்மையடைதல்கள் மேற்கத்திய வரவுகளோடு சந்தித்துப் பொருந்தி, நமக்கே உரிய நவீனமயமாக்கலைச் சாதித்தன என்றும் கூறலாம்.
 காலனிய ஆட்சிக்காலம் முடிந்து ஆசிய நாடுகள் சுதந்திரம் அடைந்தபோது நமது பிரச்சினைகள் இன்னொரு புதிய வடிவத்தை ஏற்றன. நவீனமயமாக்கம் என்ற சர்வதேசத் தொடர்புடைய நிகழ்வுப் போக்கு நமது பண்பாட்டுத் தனித்தன்மைகளையும் நம்மிடையிலான பண்பாட்டு ஊடாட்டங்களையும் மறுவரையறை செய்யுமாறு நிர்ப்பந்தித்தன. நவீனமயமாக்கம் நம்மிடையில் தீவிர தனிமனிதவாதப் போக்குகளை வளர்த்து வருகிறது என்ற உண்மையை மனதில் கொள்ளுவோமேயெனில், அவை சார்ந்து நமது பண்பாட்டுப் பரிமாற்றங்களின் சிக்கல்களையும் நம்மால் அவதானிக்க முடியும். எல்லா வேளைகளிலும் நம்மிடையிலான உறவுகள் நியாயமாக எதிர்கொள்ளப்படுகின்றன என்று சொல்லிவிட முடிவதில்லை. சமீப காலங்களில் தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நெருக்கடியான பல நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன என்பதை நாம் காணுகிறோம். அவை எத்தனை நெருக்கடியானவையாக இருப்பினும் பல்லினக் கலாச்சாரச் சூழலுக்கு மரியாதை கொடுக்கும் ஆசிய மரபை மீட்டெடுக்கும் கடப்பாடு நமக்கு உள்ளது என்ற உணர்வோடு இப்பிரச்சினையை அணுக வேண்டியவர்களாக நாம் உள்ளோம். இப்படிப்பட்ட வரலாற்றுக் கடமையின் ஊடாகவே பண்பாட்டுக் கல்வி என்பது முதன்மையான ஒன்றாக, உயிரோட்டமான ஒன்றாக, செயலூக்கமான ஒன்றாக நம்மிடையே தொழில்பட்டு வருகிறது. பண்பாட்டுக் கல்வி என்பது நமது வாழ்வுரிமைகள் சார்ந்த ஒன்றாகவும், நமது சொந்த மரபுகளினின்றும் நமது படைப்பாற்றலை மறு உருவாக்கம் செய்து கொள்ளும் ஒன்றாகவும் நம்முன் நிற்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
மரபு, பாரம்பர்யம், பண்பாடு, கலாச்சாரம் என்ற சொற்களின் பொருள் விளக்கம்
 இவ்வுரையில் நான் மரபு, பாரம்பர்யம், பண்பாடு, கலாச்சாரம் என்பன போன்ற பல சொல்லாக்கங்களைப் பயன்படுத்துகிறேன். இக்கலைச் சொல்லாக்கங்கள் பற்றிய சில விளக்கங்களை வழங்கிவிட்டு நான் எனது உரைக்குள் செல்லுவது நியாயமாக இருக்கும் எனக் கருதுகிறேன். மரபு, பாரம்பர்யம், கலாச்சாரம், பண்பாடு ஆகிய சொற்கள் ஒன்றுக்குள் ஒன்றாகத் தொடர்புடைய சொற்கள். நாம் இங்கு பேசமுனைகின்ற பண்பாட்டுக் கல்வி எனும் தலைப்புடன் அவை அனைத்துமே நேரடி உறவு கொண்டவை. இவற்றில் மரபு என்ற சொல்லும் பாரம்பர்யம் என்ற சொல்லும் ஒரே பொருளுடையன. மரபு என்பது தூய தமிழ்ச் சொல். பாரம்பர்யம் என்பது வடமொழியிலிருந்து தமிழ் எடுத்தாண்டு பயன்படுத்தி வரும் சொல். இவ்வுரையில் பெரும்பாலும் மரபு என்னும் சொல்லையே நாம் பயன்படுத்த உள்ளோம். அதுபோலவே பண்பாடு எனும் சொல்லும் கலாச்சாரம் எனும் சொல்லும் ஒரு பொருளுடையன. Culture என்ற ஆங்கிலச் சொல்லை நாம் தமிழுக்கு மொழிபெயர்க்க முனைந்தபோது, வடமொழித் தொடர்பால் கலாச்சாரம் என்ற சொல்லையும் தூய தமிழ்ச் சொல்லாக பண்பாடு என்ற சொல்லையும் பயன்படுத்தினோம். நாம் இவ்வுரையில் பெரும்பாலும் பண்பாடு என்ற சொல்லையே அதிகம் பற்றி நிற்கப் போகின்றோம்.
 இனி மரபு என்ற சொல்லுக்கும் பண்பாடு என்ற சொல்லுக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளைத் தெளிவு படுத்துவோம். இவை இரண்டும் நெருக்கமான தொடர்புடைய சொற்கள் என்பதை முதலில் தெரிவித்து விடுவோம். மரபு என்ற சொல் ஆங்கிலச் சொல்லான Tradition என்ற சொல்லைப் பற்றி நிற்பது ஆகும். ஒரு சமூகம் கடந்த காலத்தில் பின்பற்றியொழுகிய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், தகவுகள், அவை சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவை மரபு என்ற சொல்லால் குறிக்கப்படும். ஒரு தலைமுறையின் வாழ்வியல் அனுபவங்களும் அபிலாசைகளும் மறு தலைமுறைக்கு கையளிக்கப்படும் போது அவை மரபு என்ற தொகுப்புச் சொல்லால் குறிக்கப்படுகின்றன. இதன் படி, கடந்த காலத்தினின்றும் இன்னொரு தலைமுறையை வந்து சேரும் சகல பழக்க வழக்கங்களையும் அவற்றின் ஊடாக அமைந்திருக்கும் தகவுகளையும் மரபு என்ற சொல் குறிக்குமாக இருக்கலாம்.
 மரபு என்ற சொல்லிலிருந்து பண்பாடு என்ற சொல் குறிப்பிடத்தக்க முறையில் வேறுபடுகிறது. குறிப்பிட்ட அச்சமூகம் கடந்த காலத்தைத் தாண்டி, சமகாலத்தினுள் நுழையும் போது, இன்னும் கூடுதலாக அது சமகாலத்தில் நின்று கொண்டு தனது எதிர்காலத்தை வரையறுத்துக் கொள்ளும்போது, தனது மரபை மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறது. சமகால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப அது தனது பழம் மரபை மறுவரையறை செய்து கொள்ளுகிறது. இதுவே பண்பாடு எனப்படும். இந்த வகையில் மரபு என்பது ஒரு பெரிய வட்டமாகவும் அதனுள்ளிருந்து தேர்வு செய்யப்பட்ட பழக்க வழக்கங்கள், தகவுகள் ஆகியவற்றின் தொகுதியான பண்பாடு ஓர் உள்வட்டமாகவும் குறிக்கப்படலாம். மரபு என்பது ஒரு பெருந்தொகுப்பு, அது மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டு, விவாதிக்கப்பட்டு, புதிய தேவைகளுக்கேற்ப தகவமைக்கப்படும்போது பண்பாடு உருவாகிறது. மரபு எனும் பெருந்தொகுப்பிலிருந்து பண்பாடு தன்னை எடுத்துரைக்கிறது. நாங்கள் இன்னவர்கள், இப்படிப்பட்டவர்கள் என்ற எடுத்துரைப்பே பண்பாடு எனப்படும். மரபை விட பண்பாடு நெகிழ்வானது. அது விவாதத்திற்கும் தேடலுக்கும் இடமளிப்பது. புதிய வரையறைகளை அது ஏற்றுக் கொள்வது.
தமிழர் பண்பாட்டின் தனித்துவங்கள்
1. தொன்மையும் தொடர்ச்சியும்: தமிழர் பண்பாடு அதன் தொன்மை, தொடர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது. தமிழ் அகழ்வாய்வாளர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு, கி.மு ஆறாம் நூற்றாண்டு ஆகிய வரலாற்றின் மூத்த அடுக்குகளிலிருந்து தமிழ்ப் பண்பாட்டின் பழமையை எடுத்துரைக்கிறார்கள். சங்க இலக்கியம் என அறியப்படுகின்ற செவ்வியல் இலக்கியங்கள் இக்காலப்பகுதியிலிருந்து தொடங்குகின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட இக்காலப்பகுதியையும் தாண்டி, பஃறுளி ஆறு, குமரிக் கண்டம், லெமூரியா, சிந்து வெளி நாகரீகம் ஆகிய மிகப் பழங்கால அடுக்குகளையும் நோக்கித் தமிழின் தொன்மை பயணப்பட்டு வருகிறது. தமிழர்கள் ஏன் பழமையைத் தேடுகிறார்கள்? என்பது ஒரு சுவையான கேள்வியாக இருக்கலாம்.
          தமிழர்கள் மட்டுமல்ல, சமகால வரலாற்றில் பல மக்கள் கூட்டத்தினர் கடந்த கால வரலாற்றின் பழம் அடுக்களில் ஒரு பொற்காலத்தைத் தேடி வருகின்றனர். இது ஏன்? என்பது ஒரு பொதுமைப்பட்ட கேள்வியாக நம் முன் நிற்கிறது எனலாம். மக்கள் கூட்டங்களின் இடைக்கால வீழ்ச்சிகள் பற்றிய தன்னுணர்வு பழங்காலத்தில் ஒரு தூய மரபைத் தேடுவதற்குக் காரணமாக அமைகிறது எனலாம். சமகால வாழ்வில் நாம் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகள், சிக்கல்கள் நம்மை அவையில்லாத ஒரு பழம்பெரும் வாழ்வைத் தேடச் செய்கின்றன. பிற மொழிக் கலப்புகள், பிற நாட்டவரின் படையெடுப்புகள், சொந்த சமூகத்திற்கு ஏற்பட்ட பண்பாட்டு நெருக்கடிகள் போன்றவை அத்தகைய ஒரு பூர்வ மரபைத் தேடுவதற்கான உந்துதலைத் தருகின்றன எனக் கூறலாம். இதே சூழல்களின்தான் தமிழர்களும் தமது தூய மரபைத் தேடி வரலாற்றின் இடுக்குகளின் ஊடாகப் பயணப்பட்டு வருகின்றனர் எனலாம். தொன்மை, நாம் விருப்புடன் காண விழையும் ஒரு கனவு போல நம்முடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கனவு என்பதால் அதன் முக்கியத்துவத்தை எந்த வகையிலும் குறைக்க விரும்புகிறேன் எனக் கருதிவிடாதீர்கள். நாம் வாழும் எதார்த்தத்தைவிட அதிக ஆற்றல் கொண்ட கனவு அது. 
 தமிழின் தொன்மையை விட தமிழின் தொடர்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என சில அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கருத்தில் உள்ள நியாயங்களைச் சற்றே நோக்குவோம். மிகப் பழமையான தமிழ் இலக்கியங்கள் நமக்கு தொகை நூல்களாகக் கிடைக்கின்றன. குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, நற்றிணை போன்ற அனைத்துப் பழம் நூல்களுமே தொகுக்கப்பட்ட பாடல் தொகைகளாக நம்மை வந்தடைந்துள்ளன. இன்னும் விரிவாக அந்நூல்களைச் சங்க இலக்கியம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றோம். இவற்றோடு தொடர்பு கொண்ட வகையில் மூன்று சங்கங்கள் இருந்தன என்றும் கூறுகின்றனர். பழம் தமிழின் நீதி நூல்களும் கூட நாலடியார் நானூறு, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, பழமொழி, ஆசாரக் கோவை எனத் தொகுப்பு நூல்களாகவே அமைந்துள்ளன. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற ஒரு மரபுக்கும் நாம் சொந்தக்காரர்களாக இருக்கின்றோம். இவை எல்லாவற்றிலும் தென்படும் நானூறு, ஐந்நூறு, நாற்பது போன்ற எண்ணிக்கை சார்ந்த தொகுப்புகள் நமது கவனத்தைக் கவருகின்றன. தனித்தனியாக எழுதப்பட்ட பாடல்கள் பொதுப்பண்புகளின் அடிப்படையில் அடுத்துவந்த காலத்தில் தொகுக்கப்பட்டு ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை வழங்குகின்றன என்பதைக் காணுகின்றோம்.
 இடைக்காலத் தமிழகத்திலும் இந்த மரபு தொடர்வதைக் காணுகிறோம். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களெல்லாம் அழகுறத் தொகுக்கப்பட்டு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்றும் தேவாரம் என்றும் பெயரிடப்படுகின்றன. பன்னிரு திருமுறைகள் என்றும் பதினான்கு சாத்திரங்கள் என்றும் சைவ இலக்கியங்கள் தொகுப்பு அடிப்படையிலான பெயர்களைப் பெற்றுள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது. பழைய நூல்களுக்கும் புதிய நூல்களுக்கும் விரிவான உரைகள் எழுதப்பட்டு ஓர் உரையாசிரியர் மரபு உருவாக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். இந்தத் தொகுப்புகளும் உரைகளும்தான் தமிழ்ப் பண்பாடு குறித்த அடையாளப்படுத்தலுக்கு இன்று வரை அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன என்பதைக் காணுகிறோம்.
 பழந்தமிழர்கள் தமது பாடல்களை ஏன் தொகுத்தார்கள்? ஏன் உரை எழுதினார்கள்? என்ற கேள்விகளும்கூட நமக்கு முக்கியமானவை. சமூக வரலாற்றின் ஒவ்வொரு நகர்வுக் கட்டத்திலும் முந்திய காலப் பாடல்களைத் தமிழர்கள் தொகுத்திருக்கின்றனர். முறைப்படுத்தியிருக்கின்றனர். உரை எழுதி விவாதித்துப் பார்த்திருக்கின்றனர். இது தான் பண்பாட்டின் இயங்கியல். முந்திய காலத்தின் மரபுகளில் புதிய சூழல்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தியபோது, பழைய மரபுகளை பழந்தமிழர்கள் தொகுத்தும் வகுத்தும் முறைப்படுத்தியிருக்கின்றனர். கடந்த காலத்தின் செல்வங்களை இழந்து போய் விடுவோமோ என்ற ஓர் அச்சம் அவர்களை வாட்டியிருக்கவேண்டும். நாம் வேரிழந்தவர்களாக ஆகிவிடுவோமோ என்ற பதற்றம் அவர்களைத் தொகுக்கச் செய்திருக்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகத்து இயற்கை என அவர்கள் புரிந்து வைத்திருந்தனர். இருப்பினும் தாம் வாழ்ந்த பழைய முறைமைகளை அவர்கள் இழந்துவிடத் தயாராகவில்லை. பழையவற்றை மீட்டுரைத்து புதிய சூழல்களுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ள அவர்கள் முயன்றிருக்கின்றனர். தொகுப்பு, தொடர்ச்சி, தகவமைத்தல் என்பவை தமிழர் வரலாற்றில் இணைந்து பயணம் செய்திருக்கின்றன. இன்றும் கூட தமிழர்கள் தமது எழுத்திலக்கியங்களை மட்டுமின்றி, நாட்டுப்புற வாய்மொழி இலக்கியங்களையும் தமிழர் திருவிழாக்கள், விளையாட்டுகள், உணவுவகைகள், ஆடைகள், மருந்து வகைகள், வீடுகள் கட்டும் முறைமைகள், நீரைச் சேமிக்கும் முறைகள் ஆகியவற்றையும் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்துப் பேணி வருகிறார்கள். இன்றைய கணினி, வலையகங்கள் போன்ற மிக நவீன அறிவியல் ஆதாரங்களும் நமது பண்பாட்டுச் சேமிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பண்பாட்டு ஞாபகம் அல்லது பண்பாட்டு நினைவுகள் (Cultural Memory) என்ற விடயம் குறித்து சமீப காலங்களில் அறிஞர்கள் பேசிவருகிறார்கள். பண்பாட்டு நினைவுகளே தமிழர்களின் தொன்மைக்கும் தொடர்ச்சிக்கும் துணையாக நிற்கின்றன.                  
2. உலகியல் வளமை யும் செழிப்பும்: தமிழ் இலக்கியங்களின் வழியாகவும் வாழ்நிலைகளின் வழியாகவும் நமக்குக் கிடைக்கும் மற்றுமொரு முக்கியமான பண்பு பழந்தமிழர்கள் உலகியல் செழிப்பைப் பாராட்டும் பாங்காகும். ஐங்குறுநூறு நூலின் தொடக்கத்தில் அமைந்துள்ள சில பாடல் வரிகளை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
 “நெற்பொலிக, பொன் பெரிது சிறக்க..
 விளைக வயலே..
 பால் பல ஊறுக, பகடு பல சிறக்க..
 பசியில்லாதாகுக, பிணி சேண் நீங்குக..
 மாரி வாய்க்க, வளம் பல சிறக்க..
பண்டைத் தமிழரின் இப்பாடல் வரிகள் தமிழர்களிடையில் இப்போதும் வழக்கிலுள்ள பொங்கள் திருநாள் கொண்டாட்டங்களை நினைவு படுத்துகின்றன. பொங்கல் திருநாளில் போற்றப்படும் மஞ்சளும் கரும்பும் புது அரிசியும் பாலும் சர்க்கரையும் வாழைக் குலைகளும் இப்பாடல்களின் ஊடாக நம் கண் முன் தோன்றுகின்றன. மாட்டுப் பொங்கலின்போது அலங்கரிக்கப்பட்டு தெருக்களில் அணிவகுக்கும் மாடுகள் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன.
 எல்லாப் பழைய சமூகங்களுமே செழிப்பையும் வளமையையும் கொண்டாடின. இதற்கு தமிழர்களும் விதி விலக்கல்ல. பல தமிழர் திருவிழாக்களிலும் சடங்குகளிலும் நீரும் நெல்லும் தானியங்களும் காய் கனிகளும் முன்வைத்து வணங்கப்பட்டன. முளைப்பாரி, பொங்கல், கூட்டு உணவு ஆகியவை தமிழரின் திருவிழாக்கள் அனைத்திலும் மையமான இடம் வகிக்கின்றன.
 செழிப்புக்கும் வளமைக்கும் எதிராக நிற்கும் பசிப் பிணியை நீக்கும் வழிகளைத் தமிழர்கள் பண்டைக்காலம் தொட்டே தேடித் தெரிந்து பாராட்டி வந்துள்ளனர். புலவர்களும் பாணர்களும் வறுமை நிலையை அடைந்தபோது அவர்களைப் பொருள் படைத்த மன்னர்களை நோக்கி ஆற்றுப்படுத்தும் பாடல்கள் தமிழில் மலிந்துள்ளன. பசிப்பிணி மருத்துவன் என்ற சொல் புறநானூற்றில் பயின்று வருகிறது. நீர், நிலம், உடல், உயிர், உணவு ஆகியவை மிக அற்புதமாக மற்றொரு புறநானூற்றுப் பாடலில் ஒன்றிணைக்கப்படுகின்றன.
 “நீரின்றி அமையா யாக்கைக்கெல்லாம்
 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
 உண்டி முதற்றே உணவின் பிண்டம்
 உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
 நீரும் நிலனும் புணரியோர்
 ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே
உடம்பையும் உயிரையும் ஒன்றாக்கிப் பேசும் வித்தையை தமிழின் எழுத்திலக்கணம் கூட பதிவு செய்துள்ளது. தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்த வந்த தொல்காப்பியர், அவற்றின் இரண்டு வகையினங்களை மெய் எழுத்து என்றும் உயிர் எழுத்து என்றும் பிரித்துக்காட்டி உயிருள்ள மொழிப் பயன்பாட்டில் அவை இரண்டும் எப்போதும் இணைந்தே தொழில்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையேஎன்று நூற்பா எழுதினார். இது மொழியிலக்கணமா? மெய்யியலா? வாழ்வியலா? என்று பிரித்துப் பார்க்க இயலா நிலையில் தொல்காப்பியர் பேசியிருப்பதைக் காண்கிறோம். 
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பசிப்பிணி நீக்குதலை எல்லா அறங்களிலும் மிக உயர்ந்த அறமாக எடுத்துக்காட்டுகின்றது. உலகை மறுத்துத் துறவு மேற்கொள்ளச் செல்லும் மணிமேகலையும் ஆபுத்திரனும் அமுதசுரபி எனும் அட்சயபாத்திரம் பெற்று வறியவரின் பசியை நீக்குகின்றனர். அறம் பேசும் நூல்களும் செய்க பொருளை..என்று கட்டளையிட மறக்கவில்லை. செல்வம் சேர்த்தவர் பழமரம் உள்ளூர் பழுத்தமை போல எல்லோருக்கும் பயன் தருபவராக வேண்டும் எனத் திருக்குறள் இயம்புகிறது.
வடுவிலா வையத்து மன்னிய மூன்றின்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்எனும் நாலடியாரின் பாடல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றில் நடுவணது, அதாவது பொருளீட்டல், முதன்மையானது என உரைக்கிறது.
3. இயற்கை நெறி: பண்டைத் தமிழர் பண்பாடு இயற்கையைச் சார்ந்ததாக அமைவு பெற்றுள்ளதைக் காணுகிறோம். இயற்கை, பண்டைத்தமிழருக்கு இன்று கூறப்படுவது போல சுற்றுச் சூழல் அல்ல. மனிதரோடு இரண்டறக் கலந்ததாக இயற்கை பழந்தமிழ் இலக்கியங்கள் எங்கணும் காட்சியளிக்கிறது. தொல்காப்பிய நூல்,
          “முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
            இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரேஎன்று தெளிவாகப் பேசுகிறது.  எது முதல் பொருள் என்ற கேள்வியை இன்று நாம் கேட்டால் முதற்பொருளாவது இறைவன் என்று பலர் பதில் கூறுவார்களாக இருக்கலாம். ஆயின் பண்டைத் தமிழரின் இலக்கணநூல் முதல் எனப்படுவது நிலமும் பொழுதும் என வரையறுக்கிறது. புராணங்களும் நம்பிக்கைகளும் நிறைந்ததாகக் கருதப்படும் பண்டைய உலகில் நிலமும் பொழுதுமே மானுடரின் முதற்பொருட்கள் என வரையறுத்திருப்பது ஓர் அதிசயம். இந்த அதிசயத்தைத் தமிழ் அன்று செய்திருக்கிறது. நிலங்களைப் பழந்தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்தனர். மலைகள், காடுகள், நதிகள், வயல்கள், கடல்கள் இவற்றைக் கொண்டே தமிழர்கள் தமது வாழ்விடங்களை, பண்பாட்டைக் கருதியிருக்கிறார்கள். மலர்களின் பெயர்களைக் கொண்டு தமிழர்கள் தமது வாழ்விடங்களையும் செயல்பாடுகளையும் அடையாளப்படுத்தியுள்ளனர். இயற்கை, இயல்பு ஆகியவற்றை ஒட்டி நின்றே தமிழர் அன்று சிந்தித்தனர் என்பதைக் காணமுடிகிறது.
பொழுது என்பதைக் காலம், நேரம் என அருவமாகத் தமிழர் வரையறுத்தாரில்லை. அல்லது அதனை அறிவியலாளர் போல புறவயப்படுத்தவுமில்லை. பொழுது ஓர் ஆண்டின் பருவ காலங்களாகவும் ஒவ்வொரு நாளின் சிறுபொழுதுகளாகவும் புலநெறித்தளத்தில் மிகவும் பிரத்தியட்சமாகத் தமிழர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நிலங்களிலிருந்தும் பொழுதுகளிலிருந்தும் தாவரங்களையும் உயிரினங்களையும் நம்பிக்கைகளையும் தமிழர்கள் அடையாளப்படுத்தியுள்ளார்கள். அவற்றைச் சார்ந்தே, அவற்றிலிருந்தே மானுடர்களின் உணர்வுகள் வருவிக்கப்பட்டுள்ளன. காதலும் பிரிவும் இருத்தலும் இரங்கலும் நிலம் சார்ந்து, பொழுதுகள் சார்ந்து வரையறை பெற்றுள்ள அற்புதத்தைத் தமிழில் காணமுடிகிறது. நிலம், பொழுது, பயிரினங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், அவர்தம் உணர்ச்சிகள் என்ற கோர்வையான, இடையீடற்ற தொடர்ச்சியைத் தமிழர்தம் பண்பாட்டில் காணமுடிகிறது.  
                    
4. அகமும் புறமும்: இயற்கையிலிருந்து, நிலமும் பொழுதும் என்ற முதற் பொருட்களிலிருந்து பண்டைத் தமிழர் படிப்படியாக சமூக வாழ்வை நோக்கி நகர்ந்து வருகின்றனர். திணை எனும் நிலவியல் பகுப்பு அகத்திணை, புறத்திணை எனும் போது சமூகப் பகுப்பாகிறது. அகத் திணை பெண்ணின் வாழ்விடமாகவும் பெண் சார்ந்த பண்பாட்டுப் பரப்பாகவும், புறத்திணை ஆணின் செயல்பாட்டுத் தளமாகவும் ஆண் சார்ந்த பண்பாட்டுப் பரப்பாகவும் உருவெடுக்கிறது. இங்கு பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழும் குடும்ப வாழ்வைப் பற்றியும் சமூக வாழ்வைப் பற்றியும்தான் பேசப்படுகின்றன. இருப்பினும் ஒவ்வொருவரின் நோக்கிலிருந்து அவரவரின் பிரத்தியேக வாழ்வியல் குறிப்பாகப் பேசப்படுகின்றது.
 “ஒன்றே வேறெ என்றிரு பால்வயின்
 ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
 ஒத்த கிழவனும் கிழத்தியும்..என்று தமிழ்க் காதலின், தமிழ்க் குடும்பத்தின் அடிப்படை தொல்காப்பிய நூலில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் வேறுபட்ட இருபாலார் ஆயினும், ஒன்றி உயர்ந்த பாலது ஆணை அவர்களை இணைவிக்கிறது என அந்த வரையறை கூறுகிறது. உலக வரலாற்றை ஆய்வு செய்யும் சமூகவியலாளர்கள் வரலாறின் மிகப் பழமையான, மிக அடிப்படையான வேலைப்பிரிவினை, வாழ்வியல் நோக்கு ஆண், பெண் ஆகியோருக்கிடையில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கின்றனர். தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் வரலாற்றின் அந்த முதன்மையான வாழ்வியல் நோக்குகளை மிக அற்புதமாகப் பதிவு செய்துள்ளன.
 அகமும் புறமும், பெண்ணும் ஆணும் வாழ்வின் தவிர்க்கவியலாத இணைகள் என்றாலும் கூட, அவற்றின் பரந்த அர்த்தத்தில், அவற்றிற்கிடையில் அகத்திணை முதன்மையானது என்பதைப் பண்டைத்தமிழரின் நூல்கள் வலியுறுத்தத் தவறவில்லை. பேராசிரியர் வ. சுப. மாணிக்கனாரின் தமிழ்க் காதல்என்ற நூலை இங்கு நான் நினைவுபடுத்த விழைகின்றேன். அன்னார், முன்பு நாம் பேசிய இயற்கை நெறியின் இடையீடற்ற தொடர்ச்சியாக அகத்திணை மரபைச் சுட்டிக்காட்டுகிறார். அகத்திணை என்பதை பேராசிரியர் வ.சு. மாணிக்கனார் காமம் என அடையாளப்படுத்துவதில் கூச்சப்படவில்லை. அஃது இயற்கையின் தொடர்ச்சி, அஃறிணை, உயர் திணை உயிர்களுக்கெல்லாம் அது பொதுவானது, உயிர்கள் பிறப்பதற்கும் பிறப்பிப்பதற்கும் அதுவே அடிப்படை, அது மெய்வேட்கை, அது உயிர் வளர்க்கும், அது பாலாற்றல் என்றெல்லாம் பலவாறாக பேராசிரியர் வ.சுப. அவர்களால் பாராட்டப்படுகிறது.
 “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
 தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாம்என்று தொல்காப்பியம் கூறுவதைப் பேராசிரியர் வ.சுப எடுத்துக்காட்டுகிறார். மிக இயற்கையான, ஆனால் உறுதியான அடிப்படைகளின் மீது தமிழ்ச் சமூகம் தனது பண்பாட்டு நிறுவனங்களைக் கட்டியெழுப்பியுள்ளது என்பதைக் காணுகிறோம்.
5. தமிழர் சமத்துவம்: தமிழர் வரலாறு ஒரு புராதன சமத்துவத்திலிருந்தே தொடங்குகிறது. பாடறிந்து ஒழுகும் பண்பினைக் கொண்ட சீறூர் மன்னர்களைக் கொண்டதாகவேப் பண்டைத்தமிழகம் வருணிக்கப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று பழம்நூல்கள் விதிக்கின்றன. இன்றும் தமிழ் நாட்டில்  நடைபெறும் கிராமக் கோயில் விழாக்கள் கொடை விழாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. கொடை எனில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் தானம் என்பதை விட, அனைவரும் ஒரே இடத்தில் கூடி உணவு சமைத்து ஒரே வரிசையில் அமர்ந்து உண்ணுதல் என்பதாகவே அர்த்தப்படுகிறது. பாரி, ஓரி, காரி, அதியமான், குமணன் போன்ற தமிழ் மன்னர்கள் அவர்தம் வள்ளற் குணத்துக்காக இன்றும் பாராட்டப்படுகிறார்கள்.
 “உண்டாயின் பதம் கொடுத்து
 இல்லாயின் உடன் உண்ணும்
 இல்லோர் ஒக்கல் தலைவன்என்று அவ்வையார் அதியமானைப் பாராட்டுகிறார். தமது பகுத்து உண்ணும் தண்நிழல் வாழ்நர்என்றே பழங்குடி மக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். புரவுக் கடன் பூண்ட வண்மையானேஎன்று மற்றொரு புறநானூற்றுக் கவிஞன் அரசனைப் பாடுகிறான். பழைய இலக்கியங்கள் காட்டும் புலவர்-அரசர் நட்புறவு, சமூக உறவுகளை முடிந்தமட்டில் சமத்துவமாக ர் ஆதிக்கமும் தமிழர் மாண்பைச் சிதைத்துவிடக் கூடாதென்பதில் பல புலவர்கள் தமது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள்.
 விருந்தினர் போற்றுதல், சுற்றம் ஓம்புதல், அன்புடமை போன்ற அற்புதமான தமிழ்ப் பண்பாட்டுத் தகவுகள் அன்றைய தமிழர்களின் புராதனச் சமத்துவத்திலிருந்தே முகிழ்த்து எழுந்ததாகச் சொல்ல முடியும். அடுத்து வந்த வரலாற்றுக் காலங்களில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகிய சந்தர்ப்பங்களிலெல்லாம் தமிழ்ப் பண்பாடு தனது பூர்வீக சமத்துவத்தைத் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருகிறது. தமிழில் மிகுந்துள்ள அற இலக்கியங்களின் அளவு தமிழர்களின் சமத்துவம் குறித்த நினைவுகளாலேயே ஊடுருவப்பட்டதாக உள்ளது. தன்க்கென வாழாப் பிறர்க்குரியாளன்என்ற சொற்களெல்லாம் தான், தனதுஎன்ற உணர்வைத் தாண்டி, சமூக முழுமையை நோக்கிப் பரவிச் செல்லும் மனோபாவங்களைத்தான் எடுத்துரைக்கின்றன. பின்னால் வந்த பக்தி இலக்கியங்களில் ஏராளமாகப் பேசப்படும் நெக்குருகி, நெஞ்சம் உருகி, அன்பு வயப்பட்டு, மனம் நெகிழ்ந்துஎன்பது போன்ற சொற்களெல்லாம், “யான், எனதுஎன்ற சுயதன்னிலை சார்ந்த உணர்வுகள் கரைந்து உலகை நோக்கி, எல்லா உயிர்களையும் நோக்கி விரிதலையே நோக்கமாகக் கொண்டிருந்தன எனலாம். உலகத்தோடு ஒட்ட ஒழுகி, இசைபட வாழ்வோர் இவ்வுலகில் புகழ் எனும் மதிப்பீட்டால் அங்கீகரிக்கப்படுகின்றனர். இசை என்ற சொல்லுக்கே தமிழில் புகழ் என்ற பொருண்மை உள்ளது. தனக்கென மட்டுமே வாழ்வோர் சமூகப் பழியைச் சுமப்பர் என்றும் சொல்லப்படுகிறது. புகழும் பழியுமே மானுட வாழ்வை மதிப்பிடும் பண்பாட்டு அளவுகோல்கள் என அன்றைய தமிழர்கள் வரையறுத்தனர் என்பதைக் காணுகின்றோம்.

முடிவுரை
 தமிழ்ப் பண்பாடு மிகத் தொன்மையானது, நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டது. அது பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில் தன்னை மீட்டு நோக்கி நெருக்கடிகளையும் மாற்றங்களையும் எதிர்கொண்டுள்ளது. அதன் தொன்மை எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு அதன் தொடர்ச்சியும் முக்கியமானது. தொகுப்புகள், தொடர்ச்சிகள், உரை வழங்குதல் ஆகியவற்றின் வழியாக அது காலரீதியாகவும் பரப்புரீதியாகவும் ஒரு தொடர்ந்த உரையாடலை நடத்தி வந்துள்ளது. வளமை, செழிப்பு ஆகியவற்றை மிகப்பழங்காலந்தொட்டே  சிறப்பித்துப் பாராட்டிய தமிழ்ப் பண்பாடு, தனது மிக அடிப்படையான அளவுகோல்களை இயற்கையினின்றே வருவித்துக் கொண்டிருக்கிறது. முதற்பொருளாவன நிலமும் பொழுதும் என்ற அதன் வரையறை வரலாற்றுச் சிறப்பு மிக்கது; தத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்வின் பரப்புகளை அது பெண் வெளி, ஆண்வெளி எனப் பகுத்துக் கொண்டு, அவற்றின் இயங்கியல் தொகுப்பாக வாழ்வை உள்வாங்கியுள்ளது. பழங்காலம் தொட்டே தமிழர் நேசித்த அவர்களது பூர்வீக சமத்துவமும் சமூக நீதியுணர்வும் அதன் வரலாறு முழுவதும் தொடர்ந்து பயணித்துள்ளது.
 தமிழர் பண்பாட்டின் தனித்துவங்களை முன்வைக்கும் இக்கட்டுரை எவ்வகையிலும் தமிழர் பண்பாட்டை பிற பண்பாடுகளினின்றும் ஆக உயர்வானது என்ற ஒற்றைப்படையான முடிவொன்றுக்கு இட்டுச் செல்லவில்லை. அத்தகைய முறையியலை இக்கட்டுரையாளர் கைக்கொள்ளவில்லை. ஒவ்வொரு பண்பாட்டையும் அதனதன் தனித்தன்மைகளோடு அடையாளப்படுத்துவோம் என்ற பல்லினக் கலாச்சாரச் சூழலில் நின்றே இக்கட்டுரை பேசுகிறது. தேர்தல் அரசியல் மூலமாக நமக்கு அறிமுகமாகியுள்ள பெரும்பான்மை, சிறுபான்மை என்ற கருத்தாக்கங்களின் வழியாகவோ, அறிவுவாதத் தத்துவங்களின் மூலமாக நாம் அறிந்துள்ள உயர்ந்தது, தாழ்ந்தது என்ற கருத்தாக்கங்களின் வழியாகவோ பண்பாடுகளுக்கிடையிலான உறவுகளை மதிப்பிடக் கூடாது என்பதை நாம் உணர்ந்து வருகிறோம். அதிகாரங்களும் ஆதிக்கங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு தளத்தில் பண்பாட்டு அடையாள அரசியலைக் கொண்டு செல்லவேண்டும் என்றே நாம் கருதுகிறோம். தெற்கு, தென் கிழக்கு நாடுகளின் பரஸ்பரப் பண்பாட்டுப் பரிவர்த்தனைகளை மீட்டெடுக்கும் ஒரு பக்குவமான வாழ்நிலையை நோக்கி நகரவே நாம் விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...