தமிழுக்கொரு பெருங்கொடை
எட்டுத்தொகையில் ஆற்றுப்படை பாடல் கள் உண்டு. பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை நூல்கள். பிற்காலத்தில் ஆற்றுப்படை நூல்கள் சிற்றிலக்கிய வகையில் சேர்க்கப் பட்டன. கவிஞர் வைரமுத்து தன்னுடைய தமிழாற்றுப் படை நூலின் மூலம் ஆற்றுப்படை வகையை பேரிலக்கியமாக மாற்றியுள்ளார் என்பது பெருமைக்குரியது. ஒரே மாதத்தில் பல பதிப்புகள் கண்டுவிற்பனையில் சாதனை படைத்து வருகிறது தமிழாற்றுப்படை. இதற்கான சத்தும் சாரமும் இந்த நூலில் உண்டு.
பரிசு பெறச் செல்லும் புலவர்களுக்கு வழி சொல்லி ஆற்றுப்படுத்துவதாகவே ஆற்றுப்படை நூல்கள் அமைந்தன. பின்னர் கடவுளிடம் ஆற்றுப்படுத்தும் நூல்களும் வந்தன. தமிழ் கற்றபுலவர்களின் வறுமையைப் போக்க சொல்லப்பட்டபா வகையை தமிழே ஒரு பெருஞ்செல்வம் என்றுஆற்றுப்படுத்துகிறார் கவிஞர் வைரமுத்து. தொல் காப்பியம் துவங்கி கவிக்கோ அப்துல் ரகுமான் வரை 24 தமிழறிஞர்களின் சிந்தனைகளை சிறப்பாகப் பந்தி வைக்கிறது இந்த நூல். முன்னுரையில் தமிழுக்கு ஆதி உண்டு. அந்தம் இல்லை என்றுதமிழின் தொன்மையையும் வன்மையையும் வளமையையும் விவரிக்கிறார்.
தமிழுக்குள் உலகம், உலகுக்குள் தமிழ் என்றஇரண்டு பேரியக்கங்கள் நாட்டில் நடைபெற வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளியிடும் கவிஞர் தன் வாழ்நாளில் 4 ஆண்டுகளை உறிஞ்சிக் கொண்ட ஒரே நூல் இதுதான் என்றும் கூறுகிறார்.இந்நூலில் ஒவ்வொரு வரியிலும் அவரது உழைப்புதெரிகிறது. காலத்தோடு சேர்ந்து ஓடி களைத்துப்போகாத தமிழுக்கு திரைத்துறையில் இடையறாதுஓடினாலும் இளைத்துப் போகாத கவிஞன் சூட்டியுள்ள மணிமகுடம் இது.
கவிஞர் வைரமுத்துவின் மொழியைப் படிப்பது வாசகனுக்கு திருவிழா போன்றது. அவரது வசீகரமான மொழிநடை தனித்துவமானது. சொல்லுக்குள்வாக்கியத்தை சுருக்கி வைக்கும் சூத்திரதாரி என்றுமகாகவி பாரதியாருக்கு இவர் தந்த பாராட்டுரையை இவருக்கும் அப்படியே தந்து விடலாம். தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல்.ஆனால் அதையும்ஒரு இலக்கியமாக எழுதிக் காட்டுகிறார் இவர்.
ஆதித் தமிழ்ப் புலவர் கபிலரைப் பேசும் போது,‘மனிதராகிய உயர்திணைக்கும், மனிதரல்லாத அஃறிணைகளுக்கும் இயற்கை விட்டுக் கொடுத்தஉயிர் ஒப்பந்தத்தின் மூலப்படியை முற்றிலும் உணர்ந்து கொண்ட முதற்றமிழ்க்கவி இவரே என்றுமுன்மொழிவதில் எனக்கொரு தயக்கம் இல்லைஎன்கிறார் கவிஞர். முடிக்கும்போது ‘தமிழ்நாட்டு மலைமரங்களில் கடைசி இலை துடிக்கும் வரை,விலங்குகளும் பறவைகளும் விரையும் வரை,இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொப்பூழ்க்கொடி முடிச்சு தொடரும் வரை, கடைசி மனிதனின்திசுக்களில் ஆதி மனிதனின் மரபணுக்கள் அதிரும்வரை கபிலர் இருப்பார்’ என்கிறார். ஒரு கவிஞனைஇதைவிட எப்படி பெருமைப்படுத்த முடியும். அந்தஆதிக் கவிஞனின் மரபணு இவரிடம் இருப்பதால்தான் வாழும் தலைமுறைக்கும் வருகிற தலைமுறைக்கும் வாடாத தமிழை கொண்டு சேர்த்துவிடவேண்டும் என்கிற துடிப்பு இவரிடம் இருக்கிறது.
அவ்வை என்பவர் ஒருத்தி அல்ல, கள்ளுண்டஅவ்வை, நெல்லிக்கனி அவ்வை, சுட்ட பழம் சுடாதபழம் கேட்ட அவ்வை, சிவபெருமான் குடும்பத்துச்சிக்கலை சீர்செய்ய போந்த அவ்வை, கூழுக்குப் பாடிய அவ்வை, கபிலரோடும் வள்ளுவரோடும் உடன்பிறந்த அவ்வை, தன்னை ஏளனம் செய்தோருக்கு ‘எறும்பும் தன் கையால் எண் சாண்’ என்று எதிர்வினையாற்றிய அவ்வை என அவ்வைகளை பட்டியல் போடுவதோடு அவர்களது தமிழையும் காலத்தையும் நிரல்பட கூறிவிட்டு, அவ்வை சொன்னதெல்லாம் நல்லதென்றாலும் நன்று; நல்லது சொன்னவளெல்லாம் அவ்வை என்றாலும் நன்று என்று முடிக்கிறார் கவிஞர். தமிழ்ப் பரப்பில் முதல் கலகக்காரர் வள்ளுவர்என்று வரையறுக்கும் கவிஞர், அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் அறிஞராக இருப்பவர் காமத்துப்பாலில் கவிஞராகிறார் என்கிறார்.
அப்பர் குறித்த சித்தரிப்பு அருமையானது. அவரின் தோற்றமே பெருஞ்சித்திரம் என்று கூறுவதோடு, சாதி தாண்டிய சமத்துவத்தை சைவத்தால்சமைக்க முயன்றவர் அப்பர் என்கிறார். எச்.ராஜா, ஜீயர் வகையறாக்களுக்கு எரிச்சலைஉண்டாக்கிய ஆண்டாள் குறித்த ஆய்வை படிக்கிறமூளை வேலை செய்கிற யாரும் கவிஞரை ஆரத்தழுவிக் கொள்வார்கள். சர்ச்சைக்கு உள்ளாக்கப் பட்ட அந்த வரிகளையும்கூட கவிஞர் நெருப்பைக் கையாள்வது போல மிக கவனமாகவே கையாண்டிருக்கிறார். ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது என்று வியந்துரைக்கிறார் வைரமுத்து. தமிழ் என்றாலே அக்கினித்திராவகமாக எரிச்சல் படுபவர்களுக்கு வைரமுத்துவின் தமிழ் அனைத்து அங்கங்களிலும் எரிச்சலைஏற்படுத்துவது இயல்பே.வள்ளலார் குறித்த கட்டுரையில் பாரதியார், பெரியார் ஆகிய இரு ஆளுமைகள் மீதும் ஆளுமைசெலுத்தியவர் வள்ளலார் என்கிறார். வைதீகத் திற்கு எதிராக வள்ளலார் முன்வைத்த சன்மார்க்கநெறியை சரியாக இனங்கண்டு இந்த கட்டுரை பேசுகிறது.பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டதாக இப்போதும் அவர் மீது கண்டனக் கற்களை வீசுபவர்கள் உண்டு. பெரியாரின் பெருங்கோபம் தமிழ் மீது அல்ல. அதை அறிவியல் உலகிற்கேற்ப தகவமைக்கவே பெருங்
குரலெடுத்து பேசினார் என்று சரியாகவே கணித்துச்சொல்கிறார்.
பாவேந்தர் பாரதிதாசன், கவிச்சக்கரவர்த்தி கம்பர், இளங்கோவடிகள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசர் கண்ணதாசன், கவிக்கோ அப்துல் ரகுமான் என கவிஞர்களை கண்டு சொல்லும்போது கவிஞர் வைரமுத்துவின் எழுதுகோல் சலங்கை கட்டி ஆடுகிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டு எழுதிக் கொண்டிருந்த நேரத்தில், பிற மொழிகளில்திரைப்பட பாடலாசிரியர்கள் என்ன எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதை ஒப்பிட்டு, பாட்டாளியைப் பாடிய பட்டுக்கோட்டை பாடல்களை கேட்டுதமிழர்கள் திரையரங்க கீற்றுக் கொட்டகையை மொய்த்துக் கிடந்தார்கள் என்கிறார்.புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என சிறுகதையை சிகரத்தில் ஏற்றியவர்களை வைரமுத்துவின் எழுதுகோல் சிகரத்தில் ஏற்றி அழகு பார்க்கிறார்.அண்ணா, கலைஞர் போன்ற பேராளுமைகளை உள்ளும் புறமுமாகக் கண்டறிந்து வருங்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி இருக்கும்அழகுத் தமிழ் இனிது.இந்தக் கட்டுரைகளின் ஊடாக தமிழ்ச் சமூகத்தின், தமிழின் வரலாறு பேசப்படுகிறது. முரண்கள்முட்டிக் கொண்ட இடங்களையும் கூட காய்தல் உவத்தலின்றி கண்ணியமாகவே சொல்லிச் செல்கிறது வைரமுத்துவின் தமிழ்.
நூலின் வடிவமைப்பும், அச்சு வடிவமும் வாசிப்பை சுகமாக்குகிறது.தமிழை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள் எனதமிழர்களை ஆற்றுப்படுத்தும் இந்த நூல் காலம்என்னை ஆற்றுப்படுத்தினால், இன்னும் பல தகுதிமிக்க ஆளுமைகளை ஆற்றுப்படுத்த இருப்பதாககூறியுள்ளார் வைரமுத்து. அதற்கான வலிமையைஅவருக்கு தமிழ் தரும் என்பது உறுதி.
வெளியீடு - சூர்யா லிட்டரேச்சர் பி.லிட்,
சென்னை - 24.
பக்கம்: 360, விலை: ரூ.500
கிடைக்குமிடம் : திருமகள் நிலையம், தி.நகர், சென்னை.
தொலைபேசி:044 2432 7696
No comments:
Post a Comment