பேரா.முனைவர்
பூ.மு.அன்புசிவா
149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர்
- 641 007
பேச:098438
74545.
பண்பாடும் மொழியும்
ஆணுலகைக் களமாகக் கொண்டிருப்பதால், பெண் தனது மனதையும் சிந்தனையையும் கவிதையில் முன்னிலைப்படுத்தும்
போது இதுவரை வந்த ஆண் மொழி உடைபடுகிறது. காதலின் எதிர்பார்ப்பும், காமத்தின் தகிப்பும்
கலைத்துப் போடப் படுகின்றன. இருப்பும் உறவும் அர்த்தப்படும் முயற்சிதான் பெண் அடையாளமாகும்.
குறிப்பாக, பெண் கவிஞர்கள் தங்கள் அனுபவங்களை எழுதுவதன் மூலம் தங்களது இருப்பை, வெளியைத்
தீர்மானிக்கிறார்கள். மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஓர் இடைவெளியைக் கோடிட்டுக்
காட்டுகிறது பெண்மொழி. ஆணுக்கு எதிரான புதுவரலாறு, மாற்று வரலாறு கட்டமைக்கப்படுகிறது.
பெண்மொழி கவிதையின் பாடுபொருளில் மட்டும் மாற்றத்தைத் தரவில்லை. மாறாக, திறனாய்வையும்
உள்ளடக்கியே பெண்மொழி வெளிப்படுகிறது.
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும்பான்மையாக ஆண்களின் எழுத்தே ஓங்கி
ஒலித்திருக்கிறது. விதிவிலக்காக அல்லது தவிர்க்க
முடியாத நிலையில் அவ்வையார், வெள்ளி வீதியார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், உத்திரகோச
மங்கை, ஆவுடையக்காள் எனப் பெண் கவிஞர்கள் தங்கள் குரலை உரக்க வெளிப்படுத்தியிருந்தாலும்கூட, ஆண் கவிஞர்களுக்கு இருந்த செல்வாக்கான இடம் என்பது
பெண் கவிஞர்களுக்கு இல்லாமலே இருந்தது. அந்தச்சூழல்
தற்காலத்தில் மாறியிருக்கிறது. பெண்கள் தங்களுக்கான
அடையாளத்தைத் தேடியெடுக்கப் புறப்பட்டு விட்டார்கள். பெண்களை ஆண்கள் பார்த்து வந்த நிலை மாறி பெண்கள்
தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். அவ்வாறு பெண்கள் மொழிப்படுத்துகின்ற எழுத்துகளைப்
பெண்மொழி எழுத்துகள் எனலாம்.
பெண்மொழி எழுத்துக்கள்,
ஆண்மொழி எழுத்துக்களிலிருந்து பாடுபொருளில் மட்டும் அல்லாமல் உணர்வு நிலைகளிலும் வேறுபாடுகளைக்
கொண்டிருப்பதைக் காணலாம். பெண்ணைச் சுற்றி பெண்ணின் மனதில் நிகழும் உணர்வுகளைத் தங்கள்
மொழியிலேயே வெளிப்படுத்துகிறார்கள். அந்த வகையில்,
பெண்மொழித் தளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர் சல்மா. இவருடைய ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்கிற கவிதைத் தொகுப்பு பெண் கவிதை மொழியில் இயங்கும் தன்மையைப்
பெற்றிருக்கிறது.
சல்மாவின் கவிதை
வெளி என்பதே தனிமைதான். தனிமை வெளிக்குள் நிகழ்கின்ற
உணர்வுகளே மொழியாகப் பதிவு செய்யப்படுகின்றன.
மனித உறவுகள் தந்த புறக்கணிப்புகளின் மூலம் நேர்ந்து விடுகின்ற வெறுமையான தனிமைக்குள்
பெண் அடைந்து கொள்கிறபோது ஏற்படுகின்ற மனதின் பாய்ச்சல்கள், ஏதோ ஒருவகையான உறவைத் தேடித்
தேடியே அலைவுறுகின்றன.
எண்ணற்ற உயிர்களும்,
எண்ணற்ற மனித உறவுகளும் நிரம்பியிருக்கின்ற இந்த உலகத்தில் மிகக் கொடூரமான ஒன்று தனிமை. தனிமையே வாழ்க்கையாகிப் போகும்போது தனிமை நிலையினையே
தனக்கான உலகமாக ஆக்கிக்கொள்ளும் முயற்சிகள் இவரின் கவிதைகளில் தென்படுகின்றன.
“எனதிந்தத் தனிமையை
யாருமறியாத
வண்ணம்
என்னுள்
ஒளித்து வைத்திருப்பதாய்
நம்பிக்
கொண்டிருந்த வேளையொன்றில்
நீ
கேட்கிறாய்
எப்போதும்
ஏன் தனிமையிலிருக்கிறாய் என்று.
உனக்கு
ஒரு பதிலை
உனக்காகவேனும்
சொல்ல
முடியாத நிலையில்
நானில்லை
யென்றாலும்,
முடிவுறாத
குழப்பத்தினூடே சொல்கிறேன்
யாருமேயில்லாத
இடத்தில்
தனியாகத்தானிருக்க
முடியுமென்று.
என்னை
மீறித் தீர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை.
தீரவே
தீராத தனிமையுடன்
நான்
இங்கேதான் இருந்து வருகிறேன்” (ப.56)
தனக்குள்ளே
வசிக்க நேர்ந்துவிட்ட நீண்ட தனிமை – அதனால் ஏற்படுகின்ற எண்ண ஓட்டங்கள் கவிதையாகப்
பதிவாகின்றது. உலகில் தான் மட்டும் தனிமை நிலையில்
இல்லை என்பதை உணர்ந்திருப்பதால், தன்னைப்போலவே தனிமையில் எதுவெல்லாம் இருக்கின்றதோ
– அவற்றையெல்லாம் தன் வெளிக்குள் கொண்டு வருகிறார்.
“ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு
அழைத்துப்போக நினைக்கிறேன்.
எப்போதும்
யாராலும் விரும்ப இயலாத
கள்ளிச்
செடிகள் மட்டும்தான்
நம்
வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச்
செண்டுகளாய் அனுப்பப்படுகின்றன” (ப.11)
தன்னைப் போலவே
தனிமை நிலையில் நின்று கொண்டிருக்கும் ஒற்றைத் தனி மரமும், நிலத்தின் எல்லைக் கோடுகளில் காத்துக் கிடக்கும்
கள்ளிச் செடிகளும்தான் இவரின் பார்வைக்குப் படுகின்றன.
“கூடு தேடிச் செல்லும்
பறவைக்
கூட்டம்
பொருட்படுத்துவதேயில்லை
எனது
வீட்டுத் தோட்டத்தின்
ஒற்றை
மரத்தினை” (ப.44)
பறவைக் கூட்டத்தை
மனித உறவுகளின் மனிதக் கூட்டங்களின் குறியீடாகவும், ஒற்றை மரத்தினைத் தனிமை நிலையில்
நிற்கும் தன்னையே குறியீடாகவும் ஆக்கிப் படிமப் படுத்தியிருக்கும் இக்கவிதையில், தம்மைப் புறக்கணிக்கும் மனித உறவுகளைச்
சொல்கிறது.
நவீன
இலக்கியத்தின் முக்கியத்துவங்களில் ஒன்று குறியீடு. பெண் கவிஞர்கள் குறியீடாயும் பெண்ணிய
பிரச்சனையை முன் வைத்துள்ளனர். ‘கற்பாவை’ தொகுப்பில் கவிஞர்
உமா மகேஸ்வரி எழுதியது
“சமையலறையிலிருந்து
பார்த்துக்
கொண்டிருந்தேன்
சுவரோடு
பந்து விளையாடுகிறவனை
பந்தை
எறிய எறிய
திருப்பியடித்தது
சுவர் உற்சாகமாக
ஒரேயொரு
முறையாவது பந்து வீச
சுவருக்கும்
வாய்ப்புத் தந்திருந்தால்
இப்படி
மூர்க்கமாய் உடைத்திருக்காது”
எதிரே பிரதிபலித்த
நிலைக் கண்ணாடியை இதில் சுவரைக் குறியீடாக பயன்படுத்தியுள்ளார். பெண்ணை சுவராக பாவித்து
கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனிமை நிகழ்வதற்குக்
குடும்பப் பின்புலமோ அல்லது சூழலோ அல்லது சமூக வழக்காறுகளோ காரணமாக இருக்கலாம். இவருடைய கவிதைகளில் காணப்படும் தனிமை நிலைக்கான
காரணம் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே நடைபெறும் புரிதலற்ற வாழ்க்கையாகக்கூட இருக்கலாம்.
“என்னைத் தழுவிச் செல்லும்
தென்றல்
அறியும் எனது மென்மை.
என்னைச்
சிதைத்து அழிக்கும்
வாழ்க்கை
அறியும்
எனது
உறுதி.
நான்
அணைத்து வளர்க்கும்
குழந்தை
அறியும்
எனது
நேசம்.
என்றாவது
வரும்
மழை
அறியும்
எனக்குள்
இருக்கும் கவிதை.
பனி
படர்ந்த
புற்கள்
அறியும்
எனது
காதல்.
எனது
கவிதைகள் அறியும்
எனது
பூகம்பங்கள் அறியும்
என்னை
எப்போதும்
அறிந்ததில்லை
நீ
எனக்கு
நேர்ந்த
எதையுமே” (ப.13)
பெண்ணுக்கும்
ஆணுக்குமான உறவு என்பது வெறும் பாலியல் நுகர்வுகளைத் துய்த்துக் கொள்வதற்கும் – குழந்தைகளை
உற்பத்தி செய்து கொள்வதற்கும் மட்டுமல்ல. வாழ்க்கை
பகிர்தலுக்கானது. பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படுகின்ற உணர்வுகளை – கனவுகளை – அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்வதற்கான களம்தான் அது. அந்தப்
பகிர்தலையே எதிர்பார்க்கும் பெண்ணின் உணர்வாகக் கவிதை வெளிப்படுகிறது.
“எனது இதயம்
நிரம்பி
உள்ளது
உனதும்
அப்படியே
உங்களதும்
அப்படியே
ஏதொன்றினால்
இதயம்
நிரம்பும் என்பதை
நானறிவேன்.
நீயும்
அறிவாய்
யாவரும்
அறிவோம்
நிரம்பிய
இதயத்தைப்
பகிர்தலின்றி
வேறென்ன
வேண்டும்
உனக்கும்
எனக்கும்” (ப.16)
என அறிதலும்
புரிதலும் வாழ்க்கைக்கு அவசியம் என்கிறார். அறிதலோடும் புரிதலோடும் நகர்கின்ற வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. பெண்ணைப் பற்றிய அறிதலையும் புரிதலையும் ஏற்படுத்திக்
கொள்ளாத ஆண்களிடமிருந்து விலகிச் செல்லவே பெண் விரும்புகின்றாள்.
“எண்ணற்ற ஜடப் பொருட்களுடனும்
ஒரு
மனிதனோடும்
தொடரவியலா
வாழ்க்கை
தொடர்கிறது
அதே அறையில்” (ப.21)
நிர்பந்தங்கள்
ஏற்படுத்தும் வாழ்க்கையில் கசப்புகள் மேலோங்கிடும். தன்னை – தன் மனதைப் புரிந்து கொள்ளாத
ஆண்களைப் பிற உயிரற்ற பொருட்களுடன் ஒப்பிடும் மனநிலையில் எழுந்தது இக்கவிதை. சமூகத்தில் அதிகாரம் என்பது ஆணின் பிடிக்குள்ளே
இருக்கிறது. அதனால் அதிகாரத்தின் குறியீடாக
ஆணுடலையும், அடிமைத்தனத்தின் குறியீடாகப் பெண்ணுடலையும்
சமூக மனம் பதிவு செய்திருக்கிறது. ஆணுடலுக்கும் பெண்ணுடலுக்கும் இடையிலான முரண்பாடுகளை
முன்வைக்கும் விதமாக,
“குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய
நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்றுத்
தேடுகிறாய்
என்
அழகின் களங்கமின்மையை.
பெருத்த
உடலும்
பிரசவக்
கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான்
அருவருப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்.
இன்றும்
இனியும்
எப்போதும்
மாறுவதில்லை எனது உடலென்றும்
உண்மைதான்
என்
உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்
கொள்வதில்
வெளிப்படையாக
இருப்பதில” (ப.72)
என, ஆணுடலின்
அதிகார முகத்தைக் கிழிக்கிறது. ஆணுடல் செலுத்துகின்ற
அதிகாரத்தில் தாக்குண்ட பெண்ணுடல், ஆணுடலின் மீதான சலிப்புகளையும் அச்சத்தையும் கொண்டிருக்கின்றது. செயற்கையான வலுக்கட்டாயமாக ஆணின் இச்சைகளை மட்டுமே
தீர்க்கின்ற பாலியல் உறவு, பெண்ணை வெறும் நுகர்வுப் பண்டமாகவே கருதுகின்றது என்பதை
அம்பலப்படுத்தும் வகையில்,
“எந்தக் கதகதப்பையும் தருவதில்லை
நமது
படுக்கை விரிப்புகள்
உடல்களுக்குகிடையேயான
மர்மம்
தீர்ந்துவிட்ட
பிறகும்
மிச்சமிருக்கும்
பாவனைகளுடன்
நீளும்
புணர்ச்சி
இந்த
அறையெங்கும்
இந்தப்
படுக்கையெங்கும்
அத்துமீறி
நுழைந்த கால்களின்
சுவடுகள்” (ப.30)
என ஆணின் பாலியல் நுகர்வு வெறியை குணத்தை
வெளிப்படுத்துகிறது.
அதிகாரம் உள்ளவை
எல்லாம் அதிகாரமற்றவைகளை ஒடுக்கிக் கொண்டேயிருக்கும். பெண் அதிகாரம் இழந்தவர் – ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருப்பவர். பெண் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்ற முதல் நிலையே உடல்தான். பெண் உடலின் மீதே ஆணின் அதிகாரம் செலுத்தப்படுகிறது. ஆக, ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண், அந்த ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு, ஒடுக்குமுறைக்கு
உள்ளான உடலையே எதிர்ப்புக்கான களங்களில் ஒன்றாகப் பயன்படுத்துகிறார். இரண்டு உடல்களுக்கு இடையிலான அரசியலைப் பேசும்விதமாக,
“உன்னிடமிருந்து
கலங்கலானதே
எனினும்
சிறிது
அன்பைப் பெற
உனது
குழந்தையின்
தாய்
என்னும் பொறுப்பை
நிறைவேற்ற
வெளியுலகில்
இருந்து
சானிட்டரி
நாப்கின்களையும்
கருத்தடைச்
சாதனங்களையும் பெற
இன்னும்
சிறு சிறு உதவிகள் வேண்டி.
முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான்
சிறிதளவு அதிகாரத்தை
ஸ்திரப்படுத்திக்
கொள்ள
எல்லா
அறிதல்களுடனும்
விரிகிறதென்
யோனி” (ப.23)
என, எந்திரமயமான பாலியலுக்கு மட்டுமல்ல
யோனி; உளவியல் சார்ந்த புரிதலுக்கும் சேர்த்துதான்
என்ற கருத்தை முன் வைக்கிறது இக்கவிதை.
பெண்ணைச் சுற்றி
உருவாக்கப்பட்டுள்ள புனைவுகள் யாவும் பெண்ணைக் குறுகிய எல்லைக்குள்ளே வைத்திருக்கின்றன.
பெண்களுக்கான உலகம் என்பதே வீட்டைச் சுற்றியிருக்கும் மிகக் குறுகிய வெளிதான் என்று வரையறை செய்திருக்கின்றன. பிறப்பிலிருந்து வளர்ப்பு வரைக்கும் நீளுகின்ற பெண்
மீதான பார்வைகள் பெண்ணைக் கண்காணிப்பதிலும், கட்டுக்குள் வைத்திருக்கவும் விரும்புகின்றன. வீட்டுச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்களுக்கு
எப்போதாவது ஆறுதல் தருவது வெளியூருக்கோ ஃ வேறு எங்கோ செல்ல நேர்ந்து விடுகிற பயணம்தான். அதனால்தான், பயணத்தைப் பெண்கள் விரும்புகிறார்கள்.
பயணத்தில்தான் இதுவரை கண்டிராதவற்றைக் காண முடிகிறது. பரந்து விரிந்த வேற்று உலகத்திற்கு வந்ததைப் போன்ற
உணர்வு ஏற்படுகின்றது. சல்மாவின் கவிதைகளில்
அதிகமானவை பயணம் குறித்தவை.
“பயணத்தில்
இந்தமுறை
வழக்கமான
மரங்களின் நிழல் தவிர்த்து
கூட
அழைத்துச் செல்கிறேன்
பாதையோரம்
சயனித்திருக்கும்
கல்லறைகளில்
சிலவற்றை” (ப.25)
பயணத்தில் எதுவெல்லாமோ
தெரிவதற்கு வாய்ப்பிருக்கிறது. அவற்றைத் தவிர்த்துவிட்டு
இக் கல்லறையை மட்டும் அழைத்துச் செல்வதற்கான காரணம், யாரும் செல்ல விரும்பாத ஆள் நடமாட்டம் இல்லாத –
தனியே இருக்கின்ற ஓரிடம் கல்லறைதான். தன்னைப் போலத் தனித்திருக்கும் கல்லறையை, வாழ்வின்
முடிவை – வாழ்வின் அமைதியைக் குறிக்கின்ற குறியீடாக அக்கவிதை குறிக்கிறது.
“தொலைதூரப் பயணத்திற்குப் பின்
திரும்பும்
வீடு எதிர்கொண்டு வரவேற்கிறது.
சென்று
வந்த நகரத்தின்
வன்முறையுடனும்
சூழ்ச்சியுடனும்” (ப.38).
“தொலைதூரப் பயணத்திலிருந்து
வீடு
திரும்புவேனென்பதில்
இல்லை
ஏதொரு சந்தேகமும்
தவறாது
துணை வந்து வீடு சேர்க்கும்
என்
துர்தேவதைகள்” (ப.70)
வெளி உலகப்
பயணம் தந்த சுகத்தினைப் பறித்துக் கொள்கிற வீட்டின் மீது ஏற்படுகின்ற சலிப்புகளையும்
மேற்காண் கவிதைகளில் காணலாம்.
இவ்வாறாக, சல்மாவின்
கவிதைகள் தனிமை ஏற்படுத்தித் தந்த உணர்வுகளின் பதிவாக அமைந்திருக்கின்றன. மனித உறவுகள் தந்த புறக்கணிப்பின் மூலம் நேர்ந்துவிட்ட
தனிமையே அவருக்கான உலகமாகத் தென்படுகிறது.
பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவில் புரிதலை வேண்டி நிற்கின்றன. செயற்கையான உறவில்
போலியாக வாழவேண்டியதன் நிர்பந்தத்தை வெளிப்படுத்துகின்றன. வீட்டுச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்காமல் ஆணைப்போல
வெளி உலகத்தைப் பார்க்கத் துடிக்கிற மனதின் பதிவுகளாக அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன.
இன்னும் கூடுதலான வாசிப்புகளுக்கும் அனுபவங்களுக்கும் வாய்ப்பளிக்கிற வகையில் சல்மாவின்
கவிதைகள் அமைந்திருக்கின்றன.
சல்மாவின் கவிதைகள்
புலப்படுத்தும் மொழியானது, சல்மாவின் தனிப்பட்ட வெளியை மட்டுமல்ல நடுத்தர வாழ்நிலைப்பட்ட
பெருவாரியான பெண்களின் வெளிகளைக் குறிப்பதாகவும் அமைந்திருக்கிறது.
வழக்கமான வாழ்க்கை சூழல்களில் இருந்து சிறிதேனும் விலகி, தனக்கு பிடித்த ஒரு வெளியை, வழியை அடைய விரும்பும் பெண்ணின் மனதை வெளிப்படுத்தியது பயணம் குறித்த கவிதை.. எப்படியும் வீடு சேர்த்து விடும் துர்தேவதைகள் என்று சொல்வதில் உள்ள வலி புரிந்து கொள்ள முடிகிறது.
ReplyDelete