தூக்கத்தின்
கால அளவானது, உயிரினங்களை பொருத்து மாறுபடுகிறது. சில விலங்குகள் நீண்ட நேரம் தூங்குபவையாக
இருக்கின்றன. உதாரணமாக, கோலா கரடிகளை சொல்லலாம். நாளொன்றுக்கு, சுமார் இருபத்திரெண்டு
மணி நேரம், இக்கரடிகள் தூங்குகின்றன. பழுப்பு நிற வவ்வாலோ பத்தொன்பது மணி நேரத்திற்கும்
குறையாமல் தூங்குகிறது. வலிமையான புலி சுமார் பதினாறு மணி நேரம் உறங்குகிறது. இவைகளின்
மத்தியில், சில வகை பிராணிகள், மிக குறைந்த நேரமே, தூங்குகின்றன. இதற்கு, ஒட்டக சிவிங்கியை
சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஆம், இவைகள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே
தூங்குகின்றன. பசுக்களின் உறக்க கால அளவு, சுமார் நான்கு மணி நேரம்.
சரி,
மனித இனமாகிய நம்முடைய தூக்க கால அளவு எவ்வளவு? பொதுவாக, வயது, பணிச்சூழல் முதலியவற்றை
பொருத்து தூக்கத்தின் கால அளவு மாறுபடுகிறது. இருப்பினும், குறைந்தது ஆறு மணி நேரமாகிலும்
கட்டாய தூக்கம் அவசியம் என்கின்றனர் இத்துறை நிபுணர்கள். அதேசமயத்தில், தற்கால சூழ்நிலையின்
காரணமாக, ஏழிலிருந்து ஒன்பது மணி நேரம் வரையிலும் தூங்கலாம் என்ற கருத்தும் ஒருசில
ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது.
இந்நவீன
காலத்தில், பற்பல கருவிகள் கண்டறியப்பட்டு, நடைமுறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அக்காலத்தில் செய்யப்பட்ட பல வேலைகளை, இக்கருவிகளை கொண்டு, தற்காலத்தில், நொடி பொழுதில்
செய்திட இயலும். இருப்பினும், வேலை சுமை மட்டும் குறைந்த பாடில்லை! சில நேரங்களில்,
கால வரையறைக்கு உட்பட்ட வேலை பளுவின் நிமித்தம், உறக்கத்தையும் உதாசீனப்படுத்த வேண்டிய
கட்டாயம். இதனால், உறக்க கால அளவு குறைகிறது.
இதற்கிடையில்,
வேலையின் தன்மையை பொருத்து, உறக்கத்தின் காலமும் (இரவுக்கு பதில் பகல் பொழுதில்) மாறுபடுகிறது.
இயற்கை
எல்லாவற்றையும் தெளிவாக வகுத்து, படைத்து, இயக்கி வருகிறது. இயற்கையை (அளவோடு!) பயன்படுத்தலாம்.
ஆனால் மாற்ற முடியாது அல்லவா? மாற்ற முற்படும் பொழுது, அது பல இன்னல்களை கொண்டுவந்து
சேர்த்துவிடும். இதன் அடிப்படையில், தூங்கும் நேரம் மற்றும் காலத்தில் ஏற்படும் மாற்றம்
பல வகையான உடல் உபாதைகளை உண்டுபன்னுகிறது. இவைகளை எல்லாம், தற்கால அறிவியல் உலகம் ஆராய்ந்து
வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், நவீன அறிவியல் வளர்ச்சி அடியாத காலமாக கருதப்படும் பனிரெண்டாம்
நூற்றாண்டிலேயே, தற்கால ஆய்வு முடிவினை நம் முன்னோர்கள் தீர்க்கமாக நமக்கு அறிவுறுத்தியிருப்பது
வியப்பளிக்கிறது அல்லவா? ஆம், தூக்கத்தின் காலத்தை பற்றி ஒளவை பாட்டி,
வைகறைத்
துயில் எழு (ஆத்திச்சூடி, வகர வருக்கம் 107) என்று நமக்கு சொல்லியிருக்கிறாரே!
அதாவது,
’நாள் தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு’ என்பது ஒளவையின் அறிவுரை.
சூரியன்
உதிக்கும் முன்னமே எழுவதால் என்ன பயன்? இதனை பற்றி ஆராய்ச்சி செய்த அறிவியல் அறிஞர்களின்
முடிவுகளை கீழ்வருமாறு காண்போம்.
நேரத்திற்கு
உறங்க செல்வதும், சூரிய உதயத்திற்கு முன்பே எழுவதும், உடலின் நோய் எதிர்ப்பு திறனை
அதிகரிக்குமாம். மேலும், தூக்க குறைவால் வரும் நேய்களும் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
மன
அழுத்தம் குறைந்து மன மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. அதிகாலை பொழுதில் இரைச்சலின் அளவு
மிகமிக குறைவு என்பதால், தியானம் போன்ற ஆரோக்கியம் தரும் செயல்முறைகளை தடையின்றி மேற்கொள்ள
முடியும். இதன் மூலமும் உடல் ஆரோக்கியம் பெருகும் வாய்ப்பு உள்ளது.
அதிகாலை
பொழுதில் எழுந்திருப்பவர்களின் செயல்பாடுகள் நன்றாகவும், அதிக பயன் தருபவையாகவும் இருப்பதாக
ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
பாரதியும்,
’காலை எழுந்தவுடன் படிப்பு’ (பாரதியார் பாடல் – ஓடி விளையாடு
பாப்பா) என்று பாடியுள்ளாரே!
எல்லா
தலைச்சிறந்த ஆளுமைகளும், அதிகாலையிலே எழுந்திருப்பவர்களாக இருந்தனர்/இருக்கின்றனர்
என்பதை அவர்களை பற்றி அறியும் பொழுது தெரியவருகிறது அல்லவா?
நேர்மறையான
என்னம் அதிகரித்து, மனம் செழுமை அடைகிறதாம். இதன் மூலம், நல்ல பழக்க வழக்கமும் உண்டாவதாக
அறிஞர்கள் கூறுகின்றனர்.
இன்றைய
சூழலில், காலம் தாழ்ந்து எழுவதால் உண்டாகும் பிரச்சனைகளை நன்கு அறிவோம்! ஆம், நேரமின்மையால்
(?), அவசர அவசரமாக வேலைக்கு கிளம்புவதும், காலை சிற்றுண்டியை தவிர்ப்பதும் வாடிக்கை
ஆகிவிட்டதே! இதனால், பலவகையான உடல் உபாதைகள் நம்மை வந்து சேர்கின்றன. அதிகாலமே எழுவதல்
இதுபோன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.
அதிகாலை
எழுவதால், மன அமைதி, சமாளிக்கும் திறன், சிந்தனை ஆற்றல் போன்றவை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
சரி,
ஒருவேளை சூரியன் உதித்த பின் எழுந்தால் என்னவாகும்? அதாவது, அதிக நேரம் உறங்குவதால்
என்ன தீய விளைவுகள் ஏற்படும்? என்ற கேள்விக்கான விடையை பல ஆய்வுகளின் மூலம் விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர். அதன் சாராம்சத்தை தற்போது பார்க்கலாம்.
உடலில்
சுரக்கும் மெலடொனின் என்ற ஹார்மோனே, நமக்கு தூக்கத்தை வரவழைப்பாதாக மருத்துவர்கள் சொல்கின்றனர்.
சூரியன் உதித்த பின்பு, இயற்கையாகவே, மெலடொனின் அளவு குறைந்து விடுகிறது. ஒருவேளை,
பகல் பொழுதிலும், தொடர்ந்து தூங்க, இந்த ஹார்மோனின் சமநிலை பாதிக்கப்படும் என்கின்றனர்
இத்துறை நிபுணர்கள். இதன் காரணமாக, நீரிழிவு நோய், மன அழுத்தம், உடல் வலி, உடல் எடை
கூடுதல், உள்ளிட்ட கோலாருகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச
அளவில், ஏராளாமான ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ’தூக்கதை’ பற்றி
ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களது ஆய்வு முடிவுகளின் மூலம், நாம் அறிவது என்னவெனில்,
சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே! சூரிய உதயத்திற்கு
பின்பு எழுவோமாயின், உபாதைகளை சந்திக்க நேரிடும். இதனையே, ’வைகறைத் துயில் எழு’ என்று ஒளவை பாட்டி நமக்கு அன்றே சொல்லியிருக்கிறார்.
மேலும்,
ஒளவையின் இவ்வறிவுரையில், மறைமுகமான மற்றொரு அறிவுரையும் இருக்கிறது. அது என்னவெனில்,
பகல் பொழுதில் தூங்குதல் கூடாது! என்பது தான். ஆம், சூரியன் உதிக்கும் முன்பே எழு என்பதன்
மூலம், தூங்கும் காலம் இரவு பொழுது தான் என்பதை கட்டாயப்படுத்துகிறார்.
ஒருவேளை
இரவு பொழுதில் கண்விழித்து, பகல் பொழுதில் தூங்கினால் என்னவாகும்? இதற்கான பதிலாக நவீன
அறிவியல் என்ன சொல்கிறது? வாருங்கள் பார்போம்.
தொடர்ந்து
பகல் நேரத்தில் மட்டுமே தூங்குவதன் காரணமாக, நாளடைவில் தூக்கமின்மை நோய் வரலாம். தூக்கமின்மையால்,
உடற் சோர்வு, நினைவாற்றல் குறைவு உள்ளிட்ட பல கடுமையான உபாதைகள் வருவதற்கும் வாய்ப்பு
இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுருங்க
சொன்னால், வைகறைத் துயில் எழு என்ற ஆத்திச்சூடி அறிவியல் உண்மையின் விளக்கங்களை ஆராய்ந்து
அறிந்துள்ளோம். நம் மூதாதயர்கள் அருளிய நீதி நூல்கள், நம் வாழ்வை நெறிபடுத்தி ஆரோக்கியத்துடன்
வாழவைப்பதுடன் உண்மையான வாழ்வை அடையவும் துணை செய்பவை. அவற்றில் இயற்கை அறிவியலின்
சித்தாந்தங்கள் இருப்பதும் இயற்கையே!
No comments:
Post a Comment