Friday, September 16, 2016

கவிஞர் சக்திஜோதியின் கவிதைகளின் பெண்ணியம்

 
சி.ஆர்.மஞ்சுளா,
 தமிழ் விரிவுரையாளர்,
 இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  படூர்
 பழங்காலச் சமுதாயத்தில் ‘குடும்பம்’என்ற அமைப்பு காணப்படவில்லை.அன்று பெண் சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறாள்.
ஆனால் இடைக்காலத்தில் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்  இன்றும் அதிலிருந்து விடுபட  தனக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். அதற்கான அவளின் முயற்சி கவிதையாகவும்  உருப்பெற்றது. ‘இலக்கிய  வீதி ‘   என்ற அமைப்பு தமிழகத்திலேயே  முதன்முதலாக பெண்  கவிஞர்களின் கவிதை நூலைத்  தொகுத்துத்  தரும் முயற்சியில் ஈடுபட்டது  இங்குக் குறிப்பிடத்தக்கது. இனி கவிஞர் சக்திஜோதியின்  படைப்புகளில்  காணப்படும் பெண்ணியப்போக்கு ஆய்விற்கு  உட்படுத்தப்படுகிறது.
 அறிமுகம்

           ஜோதி என்ற இயற்பெயருடைய  பெண்  கவிஞர் தமிழ்நாட்டில் உள்ள  தேனி மாவட்டத்தில்
 15 .03 .1972       ஆம்    ஆண்டு பிறந்தவர்.’ஆய்வியல் நிறைஞர்’ என்ற பட்டம்  பெற்றத்தோடு  யோகக்கலையும் பயின்றவர். கவிஞர் ,எழுத்தாளர்,பேச்சாளர் ,சமூகசேவகி,தொழில்நிர்வாகி ,ஓவியர்,அன்புமனைவி,நல்லதாய்,எனப்
பன்முகப்பார்வை கொண்டவர் .கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காக  2001 ஆம் ஆண்டு  ஸ்ரீசக்தி அறக்கட்டளையை  நிறுவியவர் .தற்பொழுது அது திண்டுக்கல்  மற்றும் தேனி மாவட்டங்களில் 15  கிளைகளுடன்  மொத்தம் 3880 சுய உதவிக்குழுக்களாக 780  கிராமங்களில்  இயங்கி வருகிறது .சிறந்த  நேரு யுவ கேந்திராவின் சமூக பணியாளர்  விருது , தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் சிறந்த இளைஞருக்கான மாநில   விருது , பசுமை   விருது, லயோலா கல்லூரியின் லைவ் விருது , நபார்ட் வங்கி விருது  முதலிய பல விருதுகளைப் பெற்றவர்.
          இயற்கை வளங்களை மேம்படுத்துதலில் மண் அரிப்பைத் தடுக்கவும் நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் நீர்வடிப் பகுதிகளை அமைப்பதும், விவசாயிகளின் மேம்பாட்டில் கவனம் செழுத்துதலும் ,  மருத்துவமுகாம்,மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல்  , விழிப்புணர்வு  நிகழ்ச்சி , கிராமப் புற பெண்களுக்காக  தொழில் பயிற்சிகள் , மாணவர்களுக்கான பயிற்சிகள்  என்று இயங்கிவரும்  இக்கவிஞருக்கு ‘கவிதைப்படைப்பு’ ஒன்றே பேரின்பமாகும். இவரின் ‘நிலம்புகும் சொற்கள் ‘என்ற கவிதை நூலும்,’கடலோடு இசைத்தல்’ என்ற கவிதை நூலும் இங்கு ஆராயப்படுகின்றன .
பெண்ணின் ஏழு வகைப்பருவம்:

     தமிழ் இலக்கிய மரபில் பெண்மையை ஏழு பருவங்களாக வகுத்துச்  சொல்லுவது மரபு .அவை பேதை-7 ,பெதும்பை-11 ,மங்கை-13 ,மடந்தை-19 ,அறிவை-25 ,தெரிவை-31 பேரிளம்பெண்-40 ,என்பதாகும்.”சக்திஜோதியின் ‘பெண்மை’பற்றிச்  சில கவிதைகள்  ‘பெண்மையின் பருவங்களை  நிறங்களாகக் காண்கிறது. ஊதா,நீலம்,பச்சை,வயலட் ,மஞ்சள் ,ஆரஞ்சு,சிவப்பு என தமிழ்க்கவிதையுலகில்  இதுபோன்ற மற்றொருவரும்  பார்த்ததாக எனக்கு  நினைவில்லை” என்று நாஞ்சில் நாடன் போற்றுகிறார் .(கடலோடு இசைத்தல்,அணிந்துரை) இதன்மூலம் பெண்ணின் பெருமையும்,தாய்மையும் உணர்த்தப்படுகிறது.
பெண் சிசுக்கொலை ‘பெண்சிசுக்கொலை’ நடக்கிறது என்று சொல்லும் பொழுது இதற்குப் பெண்களும்தான் காரணம்  என்று நகரத்து ஆண்கள் பலரும் குரல் கொடுக்கின்றனர்.தான் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தை பெண்ணாக இருந்தால் கொன்றுவிடலாம் பரவாயில்லை என்கிற உளவியலை அவளுள் விதைத்ததற்கு இந்தச் சமுதாயம் நிச்சயம் பொறுப்பேற்கத் தான்  வேண்டும் .
“கள்ளிப் பாலுக்குத் தப்பிய
பெண் ஜென்மமெனக் கலங்கும் பிரசவித்த தாய்
பால்புகட்டுகிறாள்  வேதனை கூடி 
நஞ்சிட்டுக் கொன்றிட  யோசித்தவள்
பனிபொழியும் அதிகாலையில்
ஊதாநிறத்தில்
முளைவிட்டு வேன்னரம்போடிய பயிர்களால்
மீண்டெழுகிறாள்  “(கடலோடு இசைத்தல்;ப -74 )
 என்ற   வரிகளில்  பெண்சிசுக்கொலை எவ்வாறெல்லாம்  நடக்கிறது  என்ற தகவல் அதிர்ச்சி தருகிறது.இதில் ஏதோ தப்பிப்  பிழைத்த பெண்கள் இன்று உலவ நேர்ந்துள்ள  அவலமும்  விளக்கப்பட்டுள்ளது.
அடையாளம் :

இறைவன்  ஒவ்வொரு  பொருளுக்கும் ஒவ்வொரு தனித்தன்மையை  அடையாளமாகக் கொடுத்துள்ளான் .சான்றாக  வெப்பம்  கதிரவனுக்கான அடையாளம்;சிறகு என்பது பறவைக்கான  அடையாளம்  முதலியவையாகும் .ஆனால் பெண்களுக்கு மட்டும் எப்பொழுதும் சொந்த அடையாளம் இருப்பதில்லை  என்று  கவிஞர்  குமுறுகிறார்.
            தான் இன்னாரின்  மனைவி,இன்னாரின் மகள்  அல்லது  மருமகள்,இன்னாரின் அம்மா என்று சொல்லிக் கொள்வதைத் தனக்கான  அடையாளமாகக் கொண்டு வாழ்கிறது  இந்தச் சமுதாயம். இதற்கு (எ -டு ) ஓர் ஓவியநிகழ்ச்சியைக்  கவிஞர் சக்திஜோதி  காண்பிக்கிறார் .ஒரு பெண்ணை மாதிரியாக  வைத்து ஒருவர் ஓவியம் தீட்டுகிறார்.அங்கு அப்பெண்  பேசுவது ஒட்டுமொத்த  பெண் சமுதாயத்தின் குரலாக  அமைகிறது.’நான் எத்தனையோ  முறை பலருக்குச் சித்திரமாக வரையத் தேவைப்பட்டுள்ளேன் .இப்பொழுது நீயும் என்னைச் சித்திரமாக  வரைந்து   கொண்டிருக்கிறாய்’ , என்று அந்தப் பெண் பேசத் தொடங்குகிறாள்.

நான்
யார் யாருக்கோ  அடையாளமாக
இருக்கையில்
உன் நினைவில்
என்னிருப்பை  உணர்கின்றேன்
நீயும்
ஒரு சித்திரத்தை வரைந்து விடாதே”(நிலம் புகும் சொற்கள்;ப -49 )
   என்று கவிஞர்  சொல்லும் பொழுது நம்மையும்  மீறி  அழுகை  பீறிடுகிறது .ஓர்  ஆடவனைத்  தனக்கான துணையாகத் தேர்ந்தெடுக்கிறாள்  ஒரு பெண் .அவனும் அவனுக்கான அடையாளத்தை  அவள் மீது திணித்து விடக்கூடாது  என்பதைக் கவிதை ஆழமாகச் சொல்லிவிடுகிறது.அடையாளங்கள் மீது கவிஞருக்கு  எந்த வெறுப்பும் இல்லை.ஆனால் அவை அந்தப் பெண்ணினுடைய  அடையாளமாக இல்லை  என்பதில் கவிஞரின் ஆதங்கம் அமைந்துவிடுகிறது.அதனால் அந்த அடையாளத்தையே  துறக்கத் துணியும் ஆர்வம் கவிதை வரிகளில் தோன்றுகிறது .
“அடையாளங்களோடு மட்டுமே 
வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றொருத்தி
தன்னை மறைத்தபடி
பார்வையிடுகிறாள் சித்திரத்தை
ஆயிரம் வாசல்களில்
ஏதேனும் ஒன்றிற்குள்  சென்றால்
அடையாளங்களைத் துறந்து விடலாமென
அறிவிப்பு ஏதுமில்லை அவ்விடத்தில் ,”(கடலோடு இசைத்தல்  ப -67 )
என்ற வரிகள் கவிஞரின் விருப்பத்தை  விளக்கிவிடுகிறன.
 பெண் விடுதலை;
நிலம்,நீர்,ஆகாயம்,காற்று,நெருப்பு  ஆகிய அனைத்தும் பெண்ணின் வடிவங்கள்  என்று  கவிஞர் நம்புகின்றார்.ஆனால்  இயற்கையைப் போல ஆற்றல் படைத்த பெண்ணை இச்சமுதாயத்தில்  இயற்கையாய்  இருக்க விடுவதில்லை. எனவே அவளுக்கு காற்றைப் பார்த்தாலும், நிலத்தைப் பார்த்தாலும்,சந்திரனைப் பார்த்தாலும்,கடலைப் பார்த்தாலும், பொறாமை ஏற்படுகிறது. அவளிடத்திலும்  குளிர்ச்சியும்,வெப்பமும் உண்டாகிறது.ஆனால் அதை வெளிப்படுத்த உரிமையில்லை. தன் குழந்தையைக்  கொண்டாடவோ  அவளுக்கு உரிமையில்லை.
 “நான் கூட இயற்கை தான்
ஒன்றும் இயலவில்லை
குளிர்கிறேன்
வெப்பமுறுகிறேன்
சொல்ல உரிமையில்லை
பெற்றெடுக்கிறேன்
கொண்டாட உரிமையில்லை
இந்த பஞ்ச பூதங்களாய் இருக்கிறேன்
 எனக்கென
சொல்லிக் கொள்ளும்படி  ஒன்றும்மில்லை”,(கடலோடு இசைத்தல்;ப -65 )
என்ற வரிகள் பெண்களின்  உண்மைநிலையைப் படம்பிடிக்கின்றன.
தனக்கான உடைமைகளையும்  தன்னிடத்தில்  தராத இந்தச் சமுதாயத்தில் தன் சிறகுகளால்  உயரத்தில்  பறக்க  வேண்டும் என்ற எண்ணம் ஒருத்திக்குத் தோன்றுகிறது. அதனால் விமானம் ஏறிப் புறப்பட்டாள்.அதில் சலிப்பு உண்டானது தவிர மகிழ்ச்சி  பிறக்கவில்லை. பறவையைப்  போலத் தன் சொந்தச் சிறகுகளால்  பறக்க வேண்டும்  என்ற ஆசை அவளுள் வளரத் தொடங்குகியது.ஆனால் அப்படி  எந்த அதிசயமும்  அவளும் நடக்காது என்று உணர்ந்து கொண்டாள்.அவளின் ஆசை கனவாக  மலர்ந்தது.
‘உறக்கத்திலோ
கனவிலோ
சிறகுகளை அசைத்து
பறந்து கொண்டிருக்கிறாள்
வானில்’. (கடலோடு இசைத்தல் ; ப -25 )
    என்ற  கவிதை முடிகிறது.ஒரு மனிதனுக்கு  உறக்கம் மட்டும் இல்லை
என்றால் நிறைவேறாத ஆசைகளுடன் -தாங்கமுடியாத  அவமானங்களுடன்  அவன்  என்றோ இறந்திருப்பான்.
அவனை இன்னும் உயிர்ப்போடு இருக்கச் செய்வதில் உறக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு .இதனை “பெண்ணியப் பார்வையில் படைத்தது  பாராட்டுதற்குரியது.
                ஓர்  இடத்தில் ஆசிரியர் பெண்ணைக் கிளியாக உருவகிக்கிறார்.ஒரு பெண் எவ்வளவு அறிவு பெற்றிருந்த பொழுதும் ‘குடும்பம் ‘என்ற  அமைப்பிற்குள்   செக்குமாடு  போன்று கழல வேண்டிய நிலை உள்ளது . ஆனால்,அவளை எந்த கூட்டிலும் போட்டுப் பூட்டி வைக்கவில்லை  என்ற ஏளனத் தொனி நம்மைச் சிந்திக்க  வைக்கிறது. அந்தக் கிளி (பெண் )வீட்டைச்
சுற்றி  வருவதிலேயே  அதன் வாழ்நாள்  கழிந்துவிடுகிறது.அவளுக்கும்  ஆலயங்களில்  ஆண்டவர்  அருகில் காணப்படும் கிளிகளுக்கும்  பெரிய வேறுபாடு இல்லை.ஒருவேளை  இந்தக் குடும்பக்  கிளியை விடுவித்துவிட்டால்  அது அகன்ற வானில் பறந்து விடுதலையாய் வாழுமோ என்ற எண்ணமும்  கவிஞருக்கு எழுகிறது.
“பேரூந்துகளில் கூண்டோடு பயணிக்கும்
பல கிளிகள்
தம் பயணத்தை அறியாதவை” (கடலோடு இசைத்தல் ; ப -30  )
இது  ஒருபுறம் இருக்க பெண்களுக்குத் தான் தியாக உணர்வு தேவைப்படுகிறது  என்ற உணர்வும் தோற்றுவிக்கப்படுகிறது. விட்டுக் கொடுத்து  வாழ்தலைச்  சிலர் அடிமைத்தனம் என்று சித்தரித்து   விடுகின்றனர்.ஆனால் அது தவறு.
            வாழ்க்கை என்பது புரிதலிலும்,சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதலிலும் வாழ்ந்து  கொண்டிருக்கிறது.சூழ்நிலைக்கு  ஏற்ப மாறுவதை விட்டுக்கொடுத்தலை அடிமைத்தனம் என்று வருணிப்பதும் பிழையாகும்.கரப்பான்பூச்சி  இந்தப் பூமிக்கு வந்த காலத்தில்,வாழ்ந்த எத்தனையோ  உயிரினங்கள் இன்று இல்லை.காரணம்  கரப்பான்பூச்சியின்   சூழ்நிலைக்கு
 ஏற்ப  மாறும். விட்டுக் கொடுக்கும்  தன்மையால்  அது இன்னும் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம்.இந்தக் குடும்பங்களில் பெயரளவில் தலைவன் இருந்தாலும் ஆட்சியில் இருப்பது தலைவி தான்  என்பது அனைவரும் அறிந்த உண்மை .இதனை ,
  “சுதந்திரத்தின்
இசையை இசைக்கும் போது
அறிவதில்லை
தியாகத்தின் மொழியை”(நிலம் புகும் சொற்கள்;ப 41 )
என்ற வரிகள் உணர்த்திவிடுகின்றன”.
தாய்மை ;
    
அறிவியல் எவ்வளவு வளர்ந்த பொழுதும்,ஆணின் விந்துவைத் தனியே  பலநாள்கள் எடுத்து வைத்துப் பத்திரப்படுத்தும் அதற்குக் கருவறை இல்லாமல்  குழந்தையைப்  பிரசவிக்க  இதுவரை தெரியவில்லை .
“அவளது தொடுதலில்
பறவையாக உருமாறிப் பறக்கப் போகிறது
மேலும் சில பறவைகள்”(கடலோடு இசைத்தல்;ப -78 )
 என்ற வரிகள் எத்தனை நூற்றண்டுகள்  ஆனாலும் பெண்மை போற்றப்பட வேண்டியது என்பதை இச்சமுதாயத்திற்கு உணர்த்துகின்றன.
  
கவிஞருக்கு நிலவின் மேல் என்ன கோபமோ  தெரியவில்லை!அது  சூரியனின்  ஒளியில் ,இரவல் ஒளியில் அல்லவா ஒளிர்ந்து  கொண்டிருக்கிறது  என்று சாடுகிறார். எனவே,நிலவைப்  பெண்களுக்கு  உவமையாகச் சொல்லக்கூடாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார் .பெண் உயிர்ப்பில்லாத  ஒரு நிலவாக இருக்க  விரும்பமாட்டாள் .
“நான்
உயிர்ப்புடனிருப்பவள்
நிலவல்ல
ஆயிரம் ஆயிரம் சூரியன்களைப் பெற்றெடுக்கும் பெண்
நிலவல்ல ,”(கடலோடு இசைத்தல்;ப -41 )
என்ற வரிகள் பல  நூற்றண்டுகளைத்  தன் தாய்மையால் வாழ்வித்துக் கொண்டிருக்கும் பெண்மையை வணங்காமல் இருக்கமுடியவில்லை .
   
 தாய்க்குத் தன் மகன் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் அவன் குழந்தையோ, ஆனால் விடலைப் பருவ மகனுக்குத்  தாயின் தொடுதல் கூச்சத்தைத் தருகிறது .
“பால் சுரக்காத
மார்பின் தவிப்பை உணரவியலாமல்
முலைப்பால் அருந்தி வளர்ந்தவன்
என்னை விலக்கி நகர்கின்றான்
ஒரு பெண்ணைத் தீண்டிய  கூச்சத்தோடு  ,”(கடலோடு இசைத்தல்;ப -43 )
என்ற கவிதை வரிகள் ஆண்மகன் என்ற ஒரு தகுதி இருந்தாலே  பெண்ணின்  மனவுணர்வுகள்  புரியாது  போலும் என்ற எண்ணம் தோன்றுகிறது.ஆனால்  அது விடலைப் பருவத்தின்  வெளிப்பாடு .எனவே,அப்பருவத்திற்குரிய  உணர்வு மறுக்கப்படுவதற்கில்லை .
சமத்துவப்பார்வை
     விண்வெளிக்குச் செல்லும் அளவு பெண்கள் சாதனை படைத்தபோளுதும்  பெண்குழந்தைக்கு  ஆண் உடைகள் உடுத்தி அழகுபார்ப்பதும் ,ஆண்மகனைப் போல வளர்ப்பேன்  என்று சொல்லுவதும்  நின்றபாடில்லை .பெண்கள் அதிகமான மதிப்பெண்களைத்  தேர்வுகளில்  எடுக்கும் பொழுது ஆணையும் ,விஞ்சும் பெண் என்று பாராட்டப்படுகிறாள்.
ஆனால் அவளாக இருக்கும் பொழுது புறக்கணிக்கப்படுகிறாள்.பெண்ணின் விருப்பம் ஆணுக்குப் பிடிக்காத பொழுதும் ஆணின் ஆசையைப்  பெண்  விரும்பாத  பொழுதும் குழந்தைப்  பிறப்பிற்கு மட்டும்  குறைவில்லை . இது வழக்கமாகிவிட்டது.
இந்நிலை மாறிச் சமத்துவம் நிலவ வேண்டும்  என்பதை.
“பெண் உயர்வல்ல  ஆணும்  உயர்வல்ல
மேலும்
ஆணின்றி பெண்ணும்
பெண்ணின்றி ஆணும் வாழ இயலுமோ ,” (கடலோடு இசைத்தல்;ப -72 )
என்ற வரிகள் விளக்கிவிடுகின்றன.
  
பூமியைப்   பெண்ணாகக் கருதிப் போற்றும் பண்பு நம் நாட்டில் உள்ளது.தமிழ்த்தாய் வாழ்த்தில்
பேராசிரியர் மனோண்மணியம் சுந்தரனார் பூமியை ‘நிலமடந்தை’ என்று உருவகப்படுத்தியிருப்பார். இங்கும் அந்த உருவகம் சுட்டப்பட்டுள்ளது . மழையை      ஆணாகவும்,நிலத்தைப் பெண்ணாகவும் பாவித்துக் கவிஞர் பாடியுள்ளார். மழையான ஆணின் தீண்டுதல் நிலமான பெண்ணின் மீது நிகழ்கிறது . பெண்மை மணக்கிறது . அந்த அற்புதம்  தாவரங்களாக விளைகின்றன .அதற்கு ஈடு ,இணை  இல்லை.
“அவள்
தன் உடல்  திறந்து பருகுவாள்
மழையென்னும்  பேராண்மையை
பின்பு
மழையே தானாகிறாள்”(   கடலோடு இசைத்தல் ப-72 )
என்ற கவிவரிகள் கலவியைச் சொல்கிறது .”பெண் தன் விடுதலையைக் கண்டடைவதன்  மூலம் ஆணுக்கான விடுதலைக்கும் கிரியா  ஊக்கி ஆகிறாள்.தானே நிலமும் மழையும் ஆகும் விந்தை அது “(கடலோடு இசைத்தல் ,அணிந்துரை )என்று  குறிப்பிட்டுள்ளார்  நாஞ்சில் நாடன் .
      பகலில்  கதிரவனையும் இரவில் நிலவையும் மலராகச் சூடியிருக்கும்  பெண் தன் மலரின் தேனைப்  பருகியவர்களை அவர்களாக மாறமுடியாமல்  செய்யும் வல்லமை படைத்தவள். எனவே ,ஆணிலிருந்து பெண்ணை வேறுபடுத்துவதும், பெண்ணிலிருந்து ஆணை வேறுபடுத்துவதும் தேவையற்ற இயற்கைக்கு  மாறான செயல் என்பதை ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.
நிறைவுரை:
   இந்த நூற்றாண்டிலும்  பெண்களை  ஆசைத்துணையாக மட்டும் கருதும் ஆடவர்கள் இருக்கின்றனர்.தலைவன் தரும் முத்தத்தை  அன்பின் அடையாளமாகத் தலைவி எண்ணுகிறாள்.ஆனால்  அது கடைசியில் வெறும் கூடலோடு
முடிந்துவிடும்பொழுது அதில் ஆனந்தமோ ,அழகோ , அன்போ  பிறப்பதில்லை  என்பது நிதர்சனமான  உண்மை .
இந்நிலை  மாற வேண்டும்  என்பதற்காக “நிலம்புகும் சொற்கள்”மற்றும் “கடலோடு இசைத்தல் ” ஆகிய கவிதை நூல்கள் பாடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...