Saturday, April 09, 2016

ஒரு பெண் காத்திருக்கிறாள்..

தமிழர் வாழ்வில் இன்று நாம் காண்கின்ற பலவகையான வாழ்வியல்  சார்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்ட பாடல்களை சங்க இலக்கியங்களில் காணலாம் . அகம் புறம் என்ற இருவகையான வாழ்வை காதல் வீரம் என்கிற அழியாத் தன்மை கொண்ட அடையாளங்களாக தமிழர்கள் தங்கள்மேல் தரித்துக் கொண்டுள்ளனர் . நமது சங்க இலக்கியம் நோக்கிய பயணம் நனவிலி மனதில் நம் மேல் ஆதிக்கம் கொள்ளும் மரபின் தொடர்ச்சியை உணர ஏதுவான களத்தை வெளிப்படுத்துகிறது . பல நூறு புலவர்கள் பாடிய சங்க இலக்கியப் பாடல்களில் காலத்தை விஞ்சிய பெண்பாற்புலவர்களின் பாடல்களும் அடங்கும் . புலமையை ஆள்வது ஆண் என்கிற மேட்டிமைவாதத் தன்மையிலிருந்து ஒரு தகர்ப்பைச் செய்தவர்கள் பெண்பாற்புலவர்கள் . அகப்பாடல்களும் புறப்பாடல்களும் என பெண்களின் பங்களிப்பு சிலவாக இருந்த போதிலும் பெண்களின் பாடல்களில் சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் நம்முன் விரிகிறது .
நவீனச்சமூகமாக மாறிவிட்டபோதிலும் தீவிர இலக்கியப் பங்களிப்பைப் பெண்கள் செய்வது என்பதில் இருக்கும் இடர்பாடுகளை எண்ணும் பொழுது அக்காலத்தில் பெண்களின் இலக்கியச்செயல்பாடு என்பது மலைப்பைத் தரக்கூடியது . புலமை மரபு பெண்கள் வகைப்பட்டதாக மாறுகையில் படைப்பின் தன்மையானது சமூகத்தின் மனசாட்சியாக வெளிப்படும் . ஆண்களின் படைப்புக்களில் கூட பெண்களை எழுதிப்பார்க்க முனைவது வெளிப்படையாகத் தெரியும். பெண்களை அவர்களே எழுதும்பொழுது இருக்கும் வாழ்வின் ஊடுபாவு தோற்றம் என்பது தனிவகையானது. 
சங்க இலக்கியத்தில் பங்களிப்பைச் செய்த பெண்பாற் புலவர்களை அறிமுகம் செய்யும் விதமாக இத்தொடர் அமைகிறது என்றபோதிலும் ஆண்பாற் புலவர்களின் மனதையும் நவீன வாழ்வியலையும் பற்றிப் பேசவேண்டியது  அவசியமாகிறது .
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகச் செயல்பாடுகளில் பெருமளவு வேறுபாடு இருந்ததாகத் தெரியவில்லை . ராகுல சாங்கிருத்தியாயனின் “வால்காவிலிருந்து கங்கை வரை” நூலைப்  படிக்கும் பொழுது மனித சமூகத்தின் தொடக்க காலம் பற்றி யூகமாவும் புனைவாகவும் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது . வேட்டைச் சமூகப் பெண்களின் உடல் பற்றிய புரிதலும் மனம் பற்றிய உணர்தலும் ஏற்படுகிறது . நாடோடியாக வாழ்ந்த மக்கள் தங்களுக்கென ஒரு இடத்தைத் தேர்வு செய்து இனக்குழுச் சமூகமாக வேளாண் மக்களாக மாறியபொழுது பெண்ணின் உடலமைப்பு , இனவிருத்தி , வாரிசுகளைக் காப்பது போன்ற நிலைகளில் பெண் என்பவள் இல்லத்திற்கு இன்றியமையாதவளாக மாறிவிட்டாள் . நிலவுடைமைச் சமூகமாக நிலைபெற்ற இந்தக் காலத்திலேயே பெண் உடல் மீது ஆணுக்கு ஆதிக்கம் செய்ய எண்ணம் வந்தது . பொருளாதாரத் தேவைக்காக வேறு பலத் தொழில்களைச் செய்யவும் அதற்காகக் குடும்பத்தை விட்டு ஒரு ஆண் பிரிந்து செல்லவும் அவசியம் ஏற்பட்டது போலவே அவனுடைய வாரிசுகளைக் காத்து குடும்பத்தை நிலைபடுத்தும் செயலை ஒரு பெண் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு பெண் தன்னுடைய கணவனுக்காக காத்திருக்கும் நிலை  ஏற்படுகிறது .
காத்திருப்பு என்று சொல்லும் பொழுதே பிரிவு என்கிற ஒரு செயலை நினைவுபடுத்தும் விதமாக இருக்கிறது . ஒரு ஆணுக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் என்பதே ஆணின் இருப்பைக் காட்டும் விதமாக இருக்கிறது . தகப்பனுக்காகவோ கணவனுக்காகவோ மகனுக்காகவோ ஒரு பெண் தன்னை அர்ப்பணித்துக் காத்திருக்கிறாள் என்பதே இன்றைக்கும் நாம் காண்கிற உண்மையான நிகழ்வு . பொதுவாக மணமுறிவு ஏற்படுகிற எத்தனையோ குடும்பங்களில் சட்டரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெண்ணிடமே அந்தக் குழந்தை வளர்கிறது . அல்லது பெண்ணே அந்தக் குழந்தைக்கான பொறுப்பை ஏற்றுகொள்கிறாள் .
மக்கள் நீதிமன்றத்தின் உறுப்பினராக நான் இருந்தபொழுது விவாகரத்து பெற வந்த ஒரு பெண்ணுடன் தனித்துப் பேசினேன் . அந்த ஆண் அவளை சந்தேகித்து பிறப்புறுப்பில் அடித்ததாகக் காட்டி அழுதாள். .  அதனால் கணவனுடன் வாழ விரும்பவில்லை என்றும் அவரைப் பிரிந்துவிட  விரும்புவதாகவும்  சொன்னார் . ஆனால் குழந்தையை என்னிடமே விட்டு விடுங்கள் , இவன் தான் இனி என்னுடைய எல்லாமும் என்று சொன்னார் . இதே போல சமீபத்தில் நான் பார்த்த “குயின் “ என்கிற ஹிந்தி படத்தில் பிரான்ஸ் நாட்டில் ஆண் துணை அற்ற ஒரு பெண் தன்னுடைய மகனைக்  காட்டி இவன் தான் தன் உலகம் என்பார் . பொதுவாகவே  குடும்ப அமைப்பில் கணவன் மனைவிக்குள்  பிரிவு ஏற்படுகிற பொழுது ஆண் என்பவன் அந்தப் பிரிவை எளிதில் கடந்துவிடுகிறான் . பெண் என்பவள் அந்த பிரிவிற்குப் பிறகும் கணவனுக்கு முந்தைய தன்னுடைய பழைய வாழ்விற்குத் திரும்பவே முடியாத நிலையை அடைகிறாள் . தன் குழந்தை வளர்ந்து தன் இயல்பில் தானே இயங்கும் வரை  இந்த நிலையிலிருக்கும்  பெண்கள் அவர்களுக்குத் துணையாக காத்திருக்கவேண்டும் . ஆக பெண்கள் உலகமானது தங்களை ஆண்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு ஒப்புகொடுத்து காத்திருக்கிறது .
இது போன்ற சூழல்களில் இன்றைக்கு பத்திரிக்கைகளும் , ஊடகங்களும், சட்டமும் பெண்களுக்குத் துணையாக வருவது போலக் காட்சியளிக்கிறது. உண்மையில் ஒரு ஆண் இன்றைக்கு ஒரு பெண்ணைப் பிரிந்து செல்வதற்கான காரணங்கள் பல்வேறு வகையினதாக இருந்தாலும் அதனுடைய எல்லைகள் விரிவடைந்திருந்தாலும் நிகழ்வுகளின் முடிவில் அந்தப் பெண் காத்திருப்பவளாக மாறுகிறாள் என்பதே மறுக்கமுடியாத உண்மை .
இதனடிப்படையில் சங்கப் பெண்பாற் புலவர் வெள்ளிவீதியாரின் ஒரு பாடலை அறிமுகம் செய்ய நினைக்கிறேன் .
தலைவன் பிரிந்து சென்றபின்பு வருந்தியிருக்கும் தலைவிக்கு தோழி ஆற்றுப்படுத்திச் சொல்வதாக அமைந்திருக்கும் பாடல் இது . .
“நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே.”
தலைவன் நிலத்தைத் தோண்டி அதில் புகுந்துகொள்ளவில்லை. வானத்தில் ஏறி பறந்து எட்டாத நிலையில் சென்றுவிடவில்லை. . கடலின் ஆழத்தில் சென்று விடவும்  இல்லை. ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஓர் ஊரில் இருக்கிறார். வீடு வீடாகத் தேடினால் கண்டுபிடித்துவிடலாம் என்கிறாள் தோழி .அப்படிக் கண்டுபிடித்த அவன் இருப்பிடத்துக்கே தூது அனுப்பித் தலைவனைக் கொண்டுவருகிறேன். கவலைப்படாதே என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள். நேரிடியாக இப்படிப் பொருள் எடுத்துக் கொண்டாலும் அந்தக் காலகட்டத்தை மனதில் கொண்டு இந்தப் பாடலின் வழியாக உணர்கிற பிரிவு நிலையைப் பார்த்தால் இந்தத் தலைவன் பொருள் தேடியோ , போருக்காகவோ தலைவியைப் பிரிந்து செல்லவில்லை என்பதை உணர முடிகிறது . நிலத்தின் ஆழத்தில் நாக கன்னியர் இருப்பதாக ஒரு நம்பிக்கை , அவர்களைத் தேடி தலைவன் சென்றிருக்க முடியாது .வானலோகத்தில் தேவகன்னியர் இருப்பார்கள் , அவர்களையும் தேடி தலைவன் சென்றிருக்க முடியாது . ஆற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீரும் சேரக்கூடிய கடலின் மேல் காலால் நடந்து சென்றிருக்க மாட்டான் . நிலத்தில் புகுதலும் வானத்தின் மேலே பறந்து செல்லுதலும் நீரின் மேல் நடப்பதுமான சித்திகள்  கைவரபெற்ற சாரணர் போல அல்ல நம் காதலர் , சாதாரண மானுடர் தான். அப்படியான சாதாரணனுக்கே உரிய குறைவுபட்ட இயல்புடையவர். வேறு ஒரு நாட்டில் வேறு ஒரு ஊரில் வேறு ஒரு வீட்டில் வேறு ஒரு பெண்ணிடம் தன் காமத்தைத் தீர்த்துக் கொள்ள சென்றிருப்பான் . காதலை பெரும்பாலும் உடலாக உணர்கிற ஆண்களைத் தான் காலம் காலமாக அறிந்துகொண்டிருக்கிறோம் . ஆண் பரத்தையர் பிரிவில் விட்டுச் சென்றான் என்றாலும் பெண் பொறுமையுடன் இருக்க ஆண்பாற் கவிஞர்களின் பாடல்களில்  வலியுறுத்தப் படுகிறாள். மாறாக வெள்ளிவீதியின் பாடல்களில், “எங்கே போய்விடுவான் தலைவன் , வந்துவிடுவான்” என்கிற தன்னிலை சார்ந்த உணர்வு மேலோங்கி இருக்கும் .
இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறாள் . எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத் தேடித் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாள் . எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணுக்காகக் காத்திருக்கிறாள் .

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...