சமூகத்தை இயக்க மொழி தேவைப்படுகிறது. மொழி, சமூகச் செயற்பாடு சார்ந்தது. மொழி,
ஒவ்வொரு தனிநபருக்குமான வேட்கை அடிப்படையில் அமைந்தது. லக்கான்,
இதைச் சற்று விரிவாக ஆய்கிறார். அதாவது 'மனித
அகநிலையே ஆண்மைத்தனமானது” என உறுதியாகக் கூறுகிறார். இந்த
அகநிலை, எழுத்துகளில் ஆண் சமூகத் தகுதியை முதன்மைப்
படுத்துகிறது. உடல்/பெண் உடல் ஆணினுடை யதாகப் பார்க்கப்படுகிறது. அவள் உடல்
நுகர்வுக்குரியது. இதுதான் மொழி மூலம் ஆண் மொழி வழியாக உறுதிபடுத்தப்
பட்டிருக்கிறது. பெண் உடல் புனைவு முதன்மையாகி யிருக்கிறது. கலையும் இலக்கியமும்
இதை மரபாக்கி யிருக்கின்றன. அச்சமும் நாணமும் பெண்களுக்குரியன என மனித/
குறிப்பாகப் பெண்ணின் செல்களில் திணித் திருக்கிறது; பெண்ணை
அடிமையாக்கியிருக்கிறது.
மார்க்சிய, பெரியாரியச் சிந்தனைகள் பெண்ணின் வலியைக் கவனப்படுத்தியுள்ளன.
குடும்பப் பணி மற்றும் குடும்பச் சூழலில் அரசியல் முக்கியப்படுத்தப்பட்டன. அன்றாட வாழ்வில்
ஆண் செலுத்தும் ஆதிக்கம், குடும்ப வன்முறை பாலியல் வன்முறை,
மரபைப் பேணுவதற்குப் பெண் மீது திணிக்கப்படும் அடக்குமுறை, வரதட்சணை, பெண் சிசுக்கொலை, குழந்தைகள்
பலாத்காரம் யாவும் பின் காலனித்துவ அரசியலாகப் பார்க்கப்பட்டன. பின் காலனித்துவ
அரசியலானது பெண்ணின் தனித்த பிரச்சினைகளிலிருந்து தொடங்குகிறது. இதனால், பெண் காலனித்துவத்திலிருந்து விடுபட வேண்டிய தேவையைப் பெண்ணியம்
வலியுறுத்துகின்றது. பெண்கள், பெண் தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், விளிம்புநிலை பெண்கள்,
தலித் பெண்கள் ஆகியோரின் விடுதலையை மைய நீரோட்டமாக்குகிறது
பெண்ணியம்.
மொழியை ஆண்கள் கைக்கொண்டபோது ஆணின் பார்வைதான் பெண்ணுக்கும்
இருந்தது. அவர்கள் உலகத்திற்குள் பெண்கள் இயங்கவேண்டி இருந்தது. முலையிடை
முளைவிட்ட நோய் நெஞ்சில் வேர்விட்டு, அசைவுடை நெஞ்சத்து உயவுத்திரன் நீடி,
காதல் தளிர் பரப்பி, புலவர்கள் புகழும் நாணம்
இல்லாத பெரிய மரம் ஆகி நிலம் முழுவதும் பரவி அலரையும் அரும்பையும் பூத்தது.
எனினும் இந்நோய்க்கு மாற்று மருந்தான தலைவர் வரவில்லை. முன்பனிக் காலம் நம்மை
வருத்த நம் துயரத்தை அவர் அறியவில்லை என்றும், பெண்ணைப் போல
மென்மை உணர்வு இல்லாதவன் அதனால் பெண்ணின் தவிப்பு புரியவில்லை என்றும் (அகம்,
ஒளவை, 273) கூறுவதிலிருந்து பெண் உடல் பற்றிய
ஒளவையின் பதிவு பெண்ணியத் திற்கான நுட்பமான கூறு என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
ஆனால் சங்கப் பெண் கவிஞர்களின் அரசியல் நவீனப் பெண் கவிஞர்களின் அரசியலோடு
தொடர்புபடுத்த விடாதபடி காலனித்துவ அரசியல் இயங்குகிறது. இந்தக் காலனிய மரபை
எதிர்க்கிறது பின்காலனித்துவப் பெண்ணியம். இதனால் தந்தை அதிகாரம், நிறுவன - பொருளாதார - அரசியல் தத்துவங்களில் மாற்றம் நிகழ்கிறது.
இதன் தொடர் பயணம் பெண் இயக்கங்களில் பரிணமிக்கிறது. விலைவாசி ஏற்றம் தொடங்கி பாலியல்
வல்லுறவுவரை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர்/எதிர்க்கின்றனர் என்பது
பெண்ணியத்தின் தளத்தை விரிவுபடுத்துகின்றது. பெண் பிரச்சினைகள்மீது கவனம் ஏற்படத்
தொடங்கிய பிறகு, பெண்ணின்
ஆளுகையும், ஆளுமையும் பிரதானமாகின்றன. பெண்களுக்குள் சமூகம்
சார்ந்த விவாதங்கள் கிளர்ந்தெழு கின்றன. பெண்மீதான தொன்மங்களைக்
கட்டுடைக்கின்றனர். தன்னை உணர்த்துதலை, தன்னிலையை
மையமாக்குதலைப் பெண்மொழி மூலம் அடையாளப்படுத்துகின்றனர்.
பெண்மொழியும் அடையாளமும்
பண்பாடும் மொழியும் ஆணுலகைக் களமாகக்
கொண்டிருப் பதால், பெண் தனது மனதையும் சிந்தனையையும்
கவிதையில் முன்னிலைப்படுத்தும்போது இதுவரை வந்த ஆண் மொழி உடைபடுகிறது. காதலின்
எதிர்பார்ப்பும், காமத்தின் தகிப்பும் கலைத்துப் போடப்
படுகின்றன. இருப்பும் உறவும் அர்த்தப்படும் முயற்சிதான் பெண் அடையாளமாகும்.
குறிப்பாக, பெண் கவிஞர்கள் தங்கள் அனுபவங்களை எழுதுவதன் மூலம்
தங்களது இருப்பை, வெளியைத் தீர்மானிக்கிறார்கள். மரபுக்கும் புதுமைக்கும்
இடையிலான ஓர் இடைவெளியைக் கோடிட்டுக் காட்டுகிறது பெண்மொழி. ஆணுக்கு எதிரான
புதுவரலாறு, மாற்று வரலாறு கட்டமைக்கப்படுகிறது. பெண்மொழி கவிதையின்
பாடுபொருளில் மட்டும் மாற்றத்தைத் தரவில்லை. மாறாக, திறனாய்வையும்
உள்ளடக்கியே பெண்மொழி வெளிப்படுகிறது.
பெண்மொழி கலகமா? விவாதமா?
பொதுவாக பெண்மொழி, ஆண் கவர்ச்சிக்குரிய பெண் உறுப்புக்களை
அழகியல் சார்ந்ததாகப் பார்ப்பதைத் தவிர்க்கிறது. காதல் ஷ் காமம் சார்ந்த எதிர்வுச்
சிநதனையை மையப்படுத்துகிறது; அரசியலாக்குகிறது. கணவன் ஷ்
மனைவி இடையே நிலவும் ஆதிக்கத்தைத் தகர்க்கிறது. அதிகாரம் பெண் உடலை மையம்கொண்டது
என்ற ஆணின் புரிதலைத் தவிர்த்து பெண் தன்னுடல் மீதான வேட்கையைத் தானே அதிகாரத்தின்
மையமாக்கும் தொனியைக் கலகமாக்குகிறது.
பெண்ணுக்குள் திணிக்கப்பட்ட ஆண் மீதான, தந்தை மீதான பயம், சடங்குகளில் கட்டுறுவது, மூடப் பழக்க வழக்கங்களில்
முடங்குவது, காம உணர்வுகளை அடக்கிக் கொள்வது, தனிமைப் புலம்பல்களை அங்கீகரிப்பது, அகத்தைக்
கலைத்துப் போடுவது எல்லாம் பெண் மொழியில் அடையாளப்படுத்தப்படுகின்றன. கலையும்
இலக்கியமும் எதிர்க்கலாச்சாரத்தைப் பதிவு செய்கின்றன. கவிதையும் திறனாய்வும்
ஒன்றோடு ஒன்று கலந்ததாக இருக்கின்றன. 'நிஜமாய் இருக்கிறேன்;
முரணானவள் என முகம் சுளிக்கிறார்கள்” என்ற
இளம்பிறையின் அகநிலை/அகமொழி பெண்மொழியின் ஊடகமாகும். சுருக்கமாகச் சொல்வ தெனில்
பெண் உடல் பெண்ணின் கூடுதல் கவனத்தில் பெண்ணே நுகர்வதை/நகர்வுப் பொருளாவதை
எதிர்க்கும் பெண்ணின் வெளிதான்/சுதந்திரம்தான், புனிதங்கள்
கட்டுடைவதுதான் பெண்மொழி விவாதமாகிறது. இது கலகமல்ல என்ற புரிதலை பெண் கவிஞர்கள்
புரியவைக் கின்றனர். பெண்ணியம் பெண் கவிதைகளின் மூலம் பெண் அடையாளத்தை வலிமையாக்கியிருக்கிறது.
பெண்உடல்/பெண் அடையாளத்தைத் தாண்டி, இனம், மதம், வர்க்கம், சாதி
ஆகியவற்றிலும் புதைக்கப்பட்டிருப்பதை இவற்றின் மூலமாக ஆணின் ஆசை முலாம்பூசி
இருப்பதை விவாதப்படுத்துகிறது பெண்ணியம்.
இந்தப் போக்கு, சங்க
இலக்கிய மரபு, பக்தி இலக்கிய மரபு ஆகியவற்றில் பெண்களின் கவிதைகளிலிருந்து
முற்றாகச் செறித்துக்கொண்டு நவீனப் பெண் கவிஞர்களின் கவிதை களோடு தொடர்கிறது.
எனினும் பாரதிக்குப் பின் கவிதைத் தளத்தில் பெண்ணியம் இடம் வெற்றிடம்தான். ஏறத்தாழ,
1975-1985 பெண்கள் பத்தாண்டு ஐ.நா. சபையால் அறிவிக்கப் பட்ட
பிறகுதான் பெண்ணின் எழுதுகோல் கூர்மையடை கின்றது. எனினும் தொண்ணூறுகளில்தான்
உச்சம் பெறுகின்றது. பாரதிக்குப் பிறகு இரா. மீனாட்சி புதுக்கவிதைக் களத்தில் புது
நுழைவாகிறார். எனினும் பெண்ணியம் கைவரப் பெறவில்லை. கி. விஜயலட்சுமியின் 'காற்றின் சந்தேகம் (1982), எஸ். சுகந்தி
சுப்பிரமணியனின் 'புதையுண்ட வாழ்க்கை” (1988), உமா மகேசுவரியின் 'நட்சத்திரங்களின் நடுவே”
(1988), இளம்பிறையின் மௌனக்கூடு, நிசப்தம்,
முதல் மனுஷி, கனிமொழியின் கருவறை வாசனை (1995),
பெருந் தேவியின் தீயுறைத் தூக்கம், ப.
கல்பனாவின் பார்வையிலிருந்து சொல்லுக்கு (1998), க்ருஷாங்கனியின்
கானல் சதுரம் (1998), பெண் கவிஞர்களின் தொகுப்பான பறத்தல் அதன்
சுதந்திரம், சே. பிருந்தாவின் மழை பற்றிய பகிர்தல் (1999),
மாலதியின் வரிக்குதிரை (1999) வெண்ணிலாவின்
நீரில் அலையும் முகம், குட்டி ரேவதியின் முலைகள், தனிமையில் ஆயிரம் இறக்கைகள், சல்மாவின் பச்சை தேவதை,
ஒரு மாலையும் இன்னொரு மாலையும், சுகிர்தராணியின்
கைப்பற்றி என் கனவுகேள், இரவு மிருகம், சுபத்ராவின் எந்தன் தோழா, தாமரையின் ஒரு கதவும்
கொஞ்சம் கள்ளிப்பாலும், திலக பாமாவின் கூர் பச்சையம்கள்,
தேவமகளின் முரண், அரங்க மல்லிகாவின் நீர் கிழிக்கும்
மீன், தேன்மொழியின் இசையில்லாத இலைகள், பத்மாவதி விவேகானந்தன் கவிதைகள், பாலுமணிவண்ணனின்
பெண்ணியக் கவிதைகள், தேன்மொழியின் ஒளியறியா காட்டுக்குள்,
கவிதாவின் சந்தியாவின் முத்தம் எனும் படைப்புகளின் ஊடாக, பொதுவாகப் பெண்களின் எழுத்துகள் தன்னிலை உணர்த்தல், காமத்தைப்
பந்தியிடல், நீக்குதல், நீங்குதல்
பற்றித் தானே எடுக்கும் முடிவுகள், இருப்பின் அடையாளங்களைக்
கலைத்துப் போடுதல், அல்லது அடையாளத்தை அற்றுப் போக விடாது செய்தல்,
சமகால வாழ்வை எதிர் கொள்ளும்போது கடந்த கால வாழ்வை நினைவுபடுத்திக்
கொண்டே தன்னைத் தனித்த அடையாளத்திற்குள் நிறுத்திக் கொள்ளல், என நீள்கின்றன.
உக்கிரம் நிரம்பி வழியும் பெண் கவிதைகளும் பல
விவாதங்களை முன்னர் எழுப்பி யுள்ளன. பெண் கவிதைகளின் தரத்தைத் தீவிரமானதாகவும்,
சாதாரணமானதாகவும் எண்ணித் தரம் பிரிக்கும், தாழ்த்தும்
அரசியல் நிகழ்ந்துள்ளது. மண் விடுதலை, பெண் விடுதலை, ஈழப் பெண் கவிஞர்கள் புலம்பெயர்தலோடு வலுப்பெறுகிறது. ஈழப்பெண் கவிஞர்கள்
எழுதித் தொகுத்த 'மறையாத மறுபாதி” முக்கிய
கவனம் பெற்றது. ஆழியாளின் "உரத்துப்பேச” பெண் மொழியின்
உச்சமாகும். போர்க்களக் கவிச்சி, உறவுச் சிதைவு, புலப் பெயர்வு பெண்ணியக் கருத்தாக்கத்தினை விரிவுபடுத்தின. ஆண் அகநிலை
தவிர்த்த பெண்ணின் மாற்று வரலாறு கட்டமைக்கப்படுகிறது. ப்ரியதர்ஷினி, மைத்ரேயி, மல்லிகா, உமையாள்,
கருணா, நிருபா, கல்யாணி,
யாமினி, பஹீமா, கமலா,
வாசுகி போன்றோர் ''போர்களை நிறுத்திய பின்
கருக்களைப் பற்றிப் பேசுவோமாக!” என உக்கிரக்குரலில் முடிவு
கூறுகின்றனர். சொல்லாத சேதிகள் (1986) தொகுப்பின் அடுத்தகட்ட
நிகழ்வுதான்
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை (சிவரமணி)
என்ற பதிவாகும்.
தொண்ணூறுகளின் புதுப் பாய்ச்சலில் அம்பேத்கர்
நூற்றாண்டுக்குப் பிறகு, எழுந்த தலித் இலக்கியம்
இந்துத்துவத்தை வேர் அறுக்கும் பணியை பிரகடனப் படுத்தியது. சிறுகதை, நாவல், கவிதை என விரிந்த இந்தத் தளத்தில் வழக்கம்போல
ஆண்களின் கலகக்குரல் உச்சம் பெற்றுள்ளன. தலித் பெண் கவிஞர்களின் அழுத்தம் குறைவாக இருக்கின்றது.
சிவகாமி, பாமா, சுகிர்தராணி, அரங்கமல்லிகா, உமாதேவி ஆகியோரின் கவிதைகள்
பேசப்படுகின்றன. பாமாவின் ஒப்பாரி, சுகிர்தராணியின் பறக்கடவுள்
திரும்பத் திரும்ப நினைவுபடுத்தப்படுகின்றன. அரங்கமல்லிகாவின் கவிதைகளில் 'அக்குளுக்கல்ல இடைத்துண்டு, சிறுதொண்டமாதேவி,
கயர்லாஞ்சி போன்ற கவிதைகள் நிலம் - பெண் - பாலியல் வல்லுறவில்
வதைபடும் பெண் வாழ்வு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சாதி இந்துக்களின் கொடூர எதிர்ப்புதான் தலித் பெண் கவிதை அடையாளமாகும்.
காலந்தோறும் தமிழ்ச் சமுதாயத்தில் ஆண் மரபு காத்தலும் ஆதிக்கத்தை நிலைப்படுத்த
பெண்உடல் உடைமையாவதும் தொடர் போராட்டம்தான். பெண்ணுக்கென்று அதிகாரங் கொண்டாட,
தன் உடலை தனதாக்கும் முயற்சியில், சமூகத்தைக்
கேள்வி கேட்கும் மனம்/அகநிலை உறுதிபெற கலை, இலக்கிய வெளியை
விசாலப்படுத்தப் பெண்மொழி பயன்பட வேண்டும். பெண் அடையாளத்தை மீட்டெடுக்கும்
பணியில் உலகமயத் தாக்கத்தில் நிலமற்று, பணியற்று, உணவற்று, ஓரங்கட்டப்படும் தலித் பெண்ணின் அடையாளம்,
புலம் பெயர்தலில் மனப்புழுக்கம் உடலை நெருக்க வதைபடும் பெண்ணின்
அடையாளம் பெண் கவிதை அரசியலைக் கூர்மைப்படுத்த வேண்டும்.
நினைத்த பொழுதெல்லாம் வரும் மழை
வேண்டும் பொழுதெல்லாம்
கிடைக்கும் மழை
சோர்ந்த பொழுதெல்லாம் பெய்யும்
மழை
மகிழ்ந்த பொழுதெல்லாம் கொட்டும்
மழை
மனம் அறியும் மழை
உணரும் மனம் மழை
No comments:
Post a Comment