பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்.
முன்னுரை
தனித்துவம் இழந்து எல்லாப் பொருட்களும், எல்லாக் கருத்தியல்களும் உலகமயமாகி வரும் இன்றைய சூழலில் கவிதைகளும்
அப்புயலில் சிக்கித் தவிக்கின்றன. பொருள் தேடி ஓடும் ஓட்டமே வாழ்க்கை என்றாகிவிட்டது. இலக்கியத்திலும் அத்தன்மை வலுவாகத்
தெரியத் தொடங்கி உள்ளது. சிக்கல்களை ஆழ்ந்து நோக்காது மேலோட்டமாக அணுகி வெகுசன ஊடகங்களில்
பரபரப்பாக இடம் பெறுவதே பல படைப்பாளிகளின் நோக்கமாகத் திகழ்கிறது. விருதுகளை நோக்கிய விரைவு
ஓட்டமும், குழுச்சண்டைகளும் அதிகமாகி விட்டன. மதிப்பீடுகளே இழந்த, மண்வாசனை துறந்த, மேலோட்டமான கவிதைகளை இன்று
பெரும்பாலும் பிரபலத்தன்மை பெறுகின்றன.
வெகுசன இதழ்களின் இடைவெளி நிரப்பியாகத் தமிழ்க்கவிதைகள்
மாற்றப்பட்டு விட்டன. குழு சார்ந்த பார்வையோடு வெவ்வேறு தளங்களில் இயங்கும் சிறு பத்திரிகைகளால்
சுதந்திரமாய் சிந்திக்கும் புதிய கவிஞர்களைச் சமூகத்திற்குதர இயலவில்லை. “சொல் புதிது, சுவை புதிது“ எனப் பாரதியால் தொடங்கப் பெற்று,
ந. பிச்சமூர்த்தி,
கு.ப.ராஜகோபாலன், வல்லிக்கண்ணன் போன்றோரால் வளர்க்கப்பட்ட புதுக்கவிதை, தற்போது நம்பிக்கை வறட்சி, ஆங்கிலக் கலப்பு, தரமற்ற கருத்து போன்ற சுனாமிகளில் சிக்கித் தவிப்பதைக் காணமுடிகிறது. இந்தச் சூழலில் சிக்காமல் தனித்துவமான கவிதைத் திறனால் கவிதை படைத்து வரும் கல்யாண்ஜியின் கவிதை மொழியைக் கண்டறிவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். அழகியலை மையமி்ட்டு இக்கட்டுரை அமைகிறது.
கு.ப.ராஜகோபாலன், வல்லிக்கண்ணன் போன்றோரால் வளர்க்கப்பட்ட புதுக்கவிதை, தற்போது நம்பிக்கை வறட்சி, ஆங்கிலக் கலப்பு, தரமற்ற கருத்து போன்ற சுனாமிகளில் சிக்கித் தவிப்பதைக் காணமுடிகிறது. இந்தச் சூழலில் சிக்காமல் தனித்துவமான கவிதைத் திறனால் கவிதை படைத்து வரும் கல்யாண்ஜியின் கவிதை மொழியைக் கண்டறிவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். அழகியலை மையமி்ட்டு இக்கட்டுரை அமைகிறது.
முதுபெரும் தமிழிலக்கியத் திறனாய்வாளரான தி.க.
சிவசங்கரன் அவர்களின் மகனாகத் தோன்றியவர் வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி எனும் (சி.
கல்யாணசுந்தரம்). அறுபதுகளில்
எழுதத் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருபவர். 170 சிறுகதைகள் 186 புதுக் கவிதைகள். “சின்னு முதல் சின்னுவரை“ என்ற குறுநாவல், என ஆயிரத்து இருநூறு பக்கங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் இவர். வண்ணங்களின் தாசனாக நிறைய ஓவியங்களையும்
வரைந்துள்ள இவரது கடிதங்களும் தொகுக்கப்பெற்றுப் புத்தக வடிவில் வெளியாகி உள்ளன.
திருநெல்வேலியில் வசிக்கும் இவரது
படைப்பிலக்கியங்களில் திருநெல்வேலி மண்வாசனையை உணர முடிகிறது. இவரது படைப்பிலக்கியங்களின்
ஊடாகத் தாமிரபரணி ஓடிக்கொண்டே இருப்பதையும் காணமுடிகிறது. “கல்யாண்ஜி கவிதைகள்“ நூலுக்கு முன்னுரை தரும் பதிப்பாசிரியர் சந்தியா நடராஜன் “தாமிரபரணி நதியோர மக்களின் எளிய வாழ்வாலும் அவர்களின் உள் உணர்வுகளாலும்
ஆனது இவரின் கவிதை வரிகள்“ என்கிறார்.
கல்யாண்ஜியின் அழகியல் உலகம்
கல்யாண்ஜியின்
கவிதை உலகம் அன்பு மயமானது. மென்மையான சொற்களால் அனைத்து
உயிரினங்கள் மீதும் அன்புமழை பொழியும் இயல்புடையது. அவரால் பூக்களோடு பேச முடிகிறது. வண்டினங்களின் ரீங்காரத்தைக் கூட
இசையாய் ஏற்க முடிகிறது. வண்ணத்துப் பூச்சியோடு வானில் வலம் வர முடிகிறது. மொத்தத்தில் இயற்கையோடு இயைந்த
அன்பு வாழ்வே கல்யாண்ஜியின் கவிதை வாழ்வு.
எதுகை, மோனை, சந்தம்,
சொல் விளையாட்டு ஏதுமற்ற பாசாங்கில்லாத தன் உணர்ச்சிக் கவிதைகள்
அவருடையன.
வறட்சியான
சிந்தனைகளோடு “வாழ்வே வீண்“ என்று
வேதாந்தம் பேசாமல், “வாழ்க்கை தேன்” என்று
அள்ளிப்பருக முயலும் நம்பிக்கைக் சுடர்கள் அவருடைய கவிதைகள்.
கல்மண்டபம், பேராச்சி அம்மன் கோவில் படித்துறை, நெல்லையப்பர் கோவில், அம்பாசமுத்திரம் சிவசைலம் என
அவரது கவிதை உலகம் திருநெல்வேலியைச் சுற்றியே அமைகிறது.
வழக்கமான
கோணத்தில் பார்க்காமல் தனித்துவம் மிக்க கோணத்தில் யாவற்றையும் கண்டு கவிதை
படைத்துள்ளதால், அவருக்குப் பாறை கூடச் சிலைகளைவிட அழகாகத்
தெரிகிறது.
கவிதைக் கரு
மக்கள் சார்ந்தே அமைவதால் அவரது கவிதை உலகம் உயிரோட்டம் மிக்கதாய் அமைகிறது.
தாம்
உணர்ந்து வாழ்வியல் அனுபவங்களைத் தம்முடைய மொழியில் தனித்துவத்தோடு உணர்த்துகிறார்.
தம் கவிதைகள் பற்றிக் கல்யாண்ஜி கூறுகிறார் இப்படி “என்னுடைய கதைகளையும் சரி, கவிதைகளையும் சரி, அந்தந்தத் துறைகளில் ஒரு அலை யெழுப்புகிறதாகவோ வலிமைமிக்க ஒரு உந்து
சக்தியாகவோ, சுவடுகளைப் பதித்துப் செல்ல வேண்டிய
அவசியமுடையவை என்றோ நான் கருதியதில்லை.
அப்படியெல்லாம் கருதாமலும் இல்லாமலுமே நான் இவைகளை எழுதிக்
கொண்டு வருகிறேன். வாழ்வு
குறித்தும் வாழ்வின் அந்தரங்கம் குறித்தும் எந்தத் தீவிரமான கேள்விகளும்
எழுப்பாமல் அதே சமயத்தில் சிறுமைகளுடனும் சமரசம் செய்துகொள்ளத் தோன்றாமல், எப்படி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ, அதுபோல என்
கவிதைகளும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் எவ்வளவு நிஜமோ அவ்வளவு
நிஜம், நான் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இந்தக் கவிதைகள்“
கல்யாண்ஜியின் கவிதை மொழி
கல்யாண்ஜியின் கவிதை மொழி அழகியல் சார்ந்து
அமைகிறது. எதையும்
இனிய இரசனையால் உற்று நோக்கி மென்மையான சொற்களால் கவிதையாகப் பதிவு செய்கிறார்
கல்யாண்ஜி; “உற்சவங்கள் வந்தும் ஒடாமல்/ வடமின்றி ரதவீதி
வலமின்றி தகரக் / கொட்டகையும் தானிழந்த / தேர்சுமக்கும் சிற்பத்தை / போம் வழியில் / நின்று ரசிக்கும் / மஞ்சள் வெளியில்“ என்று எழுதுகிறார்.
கல்யாண்ஜியின் கவிதை மொழி திருநெல்வேலி சார்ந்து அமைகிறது. இருப்புக்கும் இழப்புக்கும் இடைப்பட்ட ஏக்கம்
அவருக்கும் கவிதைமொழியாய் உருவெடுக்கிறது.
“சிக்கிலிங்
கிராமத்துத்
தண்டவாளங்களையும்
எருக்கலம் புதர்களையும்
இழந்து, என்
எல்.ஜி. பெருங்காய டப்பாவில்
வளர்ந்தது ஒரு
ஆரஞ்சு வண்ணத்துப்பூச்சி“ என்கிறார்.
கல்யாண்ஜியின் தாத்தா அவருக்குக் காட்டியது பாபநாசத்து ஆற்று
மீன்கள் முதல் நெல்லையப்பர் கோவில் யானை வரை.
பொருட்காட்சியும் தசராச் சப்பரமும், ஆனித்திருவிழாத்
தேரும் அம்மா காட்டியவை என்று வரிசையாகப் பட்டியலிட்டவர் தாம் தம் மக்களுக்குக்
காட்டியதைக் கூறுகிறார்.
“மூத்த
பெண்ணுக்கு
மலைகளை காட்டினோம்
இவன் பார்க்க
இப்போது
திராட்சைத் தோட்டம்“
என்று கவிதை படைத்தவர்
இறுதியில் ஒரு தத்துவத்தோடு நிறைவு செய்கிறார் அக்கவிதையை,
“கட்டுபடியாவதைக்
காட்டும் வாழ்க்கை
விட்டு விடுதலையாவது
அவரவர் வேட்கை
சிக்கனமான சொற்களால் மிகப்பெரிய செய்திகளை மிக எளிமையாகப்
படைத்துக்காட்டும் தன்மை கல்யாண்ஜியினுடையது.
“சிலைகளை விட
மலைகளை விடப்
பாறைகள்
அழகானவை
கூழாங்கற்களும்
கூடு“
மனத்தில் தோன்றும் மென்மையான உணர்ச்சிகளைத் தெள்ளத் தெளிவாக
நிழற்படம் எடுத்துத்தருவது போன்ற நடையில் தருகிறார் கல்யாண்ஜி
“முன்னிருக்கையில்
யாரோ
முகம்
தெரியவில்லை
தலையில்
இருந்து
உதிர்ந்து
கொண்டிருந்தது பூ
தாங்க
முடியவில்லை“
5. மரபின் தோளில் நின்று கல்யாண்ஜி புதுமை பற்றிப் பேசுகிறார். தமக்குச் சுடலை மாடன் தெரு வேராக இருப்பது போல, தம் மகனுக்குச் சிந்திக்கிறார், முகவரி ஏதுமில்லை. வாழ்வுப் போராட்டத்தில்
ஒவ்வொரு ஊராக மாற்றல் பெற்று அலையும் போது வேர் எப்படி இருக்கும் என்பதை.
“புல்வெளித்தேடி
புறப்பட்டு வந்தபின்
வேர்களைப்பற்றி
விசனப்பட நாக்கு இல்லை“
என்று கூறுகிறார்.
6. வெற்றுக் கவிதையோடு முடிவதன்று வாழ்வு. கவிதையின் கருப்பொருட்களைச் செயல்படுத்திப்
பார்ப்பதுதான் வாழ்வு எனக் கருதிய கல்யாண்ஜி அதிர்ச்சியூட்டும் உவமை ஒன்றை
எடுத்துரைக்கிறார்...
“இந்தக் கவிதை
எழுதுகிறவன்
பீங்கான்
கழிப்பறைகளில்
பிளாஸ்டிக்
குவளைகளில்
கொட்டிய
தண்ணீரில்
கோடியில் ஒரு
பங்காவது
ஊற்றியிருப்பானா
ஒரே ஒரு செடி
வேரடி
மண்ணில்“
முரண் வாசகனை உலுப்புகிறது.
7. வக்கிரமான மனத்தின் வெளிப்பாடு எதுவாக மாறும்?
என்ற உணர்வோடு ஒரு கவிதை படைத்துள்ளார் உளவியல் நோக்கோடு
“கரும்பு வளையல்
கையுடன்
ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கிப்
போனாள்
வாசல்
சுத்தமாச்சு
மனம்
குப்பையாச்சு“
வெளியில் கிடந்து குப்பை மனத்திற்குள்
போனதைக் காட்டுகிறது. இக்கவிதை.
ஆய்வுமுடிவுரை
1. அம்மை, ஐ. அணி, எழில், ஏர், திரு, மா, முருகு, கவின், காமர், பொற்பு, பொலிவு,
வனப்பு என்று பல பெயர்களில் அழைக்கப்படும் அழகியல் குறித்த பதிவுகள்
தொல்காப்பியர் காலம் முதலே (தொல். செய். சூ. 1) இருந்து வருகின்றன.
2. ஜெர்மானிய அறிஞர் கான்ட்டின் கருத்துப்படி, “தனித்த அழகியல் தன்மை வாய்ந்ததே கவிதை, அதை உணர்ந்து
திளைப்பதே கவிதையின் பயன்“ என்ற கோட்பாடு கல்யாண்ஜிக்குப்
பொருந்துகிறது.
3. “நான் கவிதையை அழகின் உறைவிடமாகக் கருதுகிறேன்.“
என்றார் எட்கர் ஆலன்போ, கல்யாண்ஜியின்
கவிதைகள் சொற் சிக்கனத்தோடு அழகியலை மையமிட்டே அமைகின்றன.
4. “கலை செம்மைப்படுத்திக் கொள்வதிலேயே தன்னை
ஈடுபடுத்திக் கொள்கிறது. அதற்குக் கற்பிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அஃது எல்லா நிலைகளில் எல்லாக் காலங்களிலும்
அழகைக் தேடிக் கண்டுபிடிப்பதையே தன் செயலாகக் கருதுகிறது“ என்ற
வில்சரின் கூற்றுக்குச் சான்றாகக் கல்யாண்ஜியின் கவிதைகள் அமைகிறது என்றாலும்
அவரது கவிதைகள் இயற்கையை நேசிக்கக் கற்றுத்தருகின்றன.
No comments:
Post a Comment