Wednesday, July 05, 2023

மாமன்னன் திரை விமரிசனம் -முனைவர் அரங்கமல்லிகா

   இயக்குநர் ரஞ்சித், இயக்குநர் மாரி.செல்வராஜ் இரண்டு பேருமே எப்படியாவது என்னை வலுக்கட்டாயமாக திரையரங்கிற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள் . காலதாமதமாகத் தான் படம் பார்ப்பது வழக்கம். எல்லோரும் பார்த்து விமரிசனம் எழுதிய பிறகு படத்தைப் பார்ப்பதற்கு நான் ஆர்வம் காட்டுவது பொதுவாக இல்லை. ஆனால் இந்த முறை எல்லோரும் சொல்லுகிறார்களே என்பதற்காக மாமன்னன் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தேன் .மாரி செல்வராஜ் படம் இயக்குவதில்  மாமன்னன் தான் . பல படங்களில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தாலும் கூட காலம் காலமாக புரையோடி போயிருக்கக் கூடிய சாதிய ஆதிக்க மனம் ஆதிக்க அரசியல் இந்த சமூகத்திலே ஒரு சாராரை எப்படி அடக்கி ஒடுக்கிவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மிக நன்றாகப் புரிந்து கொண்டு நடித்திருக்கிறார். உண்மையிலேயே பன்றி குட்டிக்கு உணவுக் காய்ச்சுவதில் இருந்து பன்றி குட்டியை எடுத்து கொஞ்சுவதிலிருந்து காட்சிப்படுத்திய மாரி செல்வராஜ் ஆதிக்க  எதிர் கதா பாத்திரம் ஃபாசில் பன்றியைக் கொன்று போட்ட காட்சிவரை வீராவாக உதயநிதியின் நடிப்பில் ஓர் அழுத்தம் தெரிகிறது. உதயநிதியின் நடிப்பில் மெருகேற்றி இருக்கிறார். மிக நன்றாகக்காட்சிப்படுத்தி இருக்கிறார் மாரி.  தான்      வளர்த்தப்பன்றிகளைக் கொன்று போட்ட ஆதிக்க மனநிலையை வேரறுக்க எழும் ஆவேசம் தான் படத்தின் நகர்வில் மையப்புள்ளி.அதை வெளிக்காட்டக்கூடிய உதயநிதியினுடைய  நடிப்பு உண்மையிலேயே பாராட்டுதற்குரியது .

ஆர்ப்பரித்துக் கலவரம் செய்யாமல் நிதானமாக உணர்ந்து எதிர் தாக்குதலை நடத்தக்கூடிய விதத்தில் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைத்திருப்பது ஒரு கூர்மையான தலித் அரசியலினுடைய அறிவார்ந்த முன்னெடுப்பு..

1957 இல் மாவீரன்இம்மானுவேலுக்கு நிகராக சாதித்தலைவன்  உட்காருவதா? என்ற ஆதிக்க மனதின் கொடூர அரசியல் அந்த வேட்டைக்குப்பலியான மாவீரன் இம்மனுவேல் மாமன்னன் படத்தில் வடிவேலுவை உட்காரச்சொல்லுவதும் அவர் மறுப்பதும்  அதன் பின்னால் ஃபாசில் பேசும் வசனத்தில் நினைவுபடுத்தப்படுகிறது. அது  இந்த தலைமுறை கவனத்திற்கானதுதான். திரையரங்கை விட்டு வெளிவரும் இளைஞர்கள் கேட்கிறார்கள் ஏன் வடிவேலு நாற்காலியில் உட்காரத்தயங்கினார். ? இதை ஒவ்வொரு வரும் கேட்கிறார்கள். கேள்வி கேட்டால்தான் பதில் கிடைக்கும் . அந்த காட்சியில் ஓர் ஆதிக்க சாதி முன்னால் ஒரு பட்டியல்சாதிக்காரர் ல் உட்காருவதா என்ற ஒரு கேள்வியை முன்வைத்து நடந்த  அந்த வசனத்திலே இம்மானுவேல்  நினைவுக்கு வருகிறார். மாமன்னாக வெற்றிப் பெற்று சபாநாயகராக சட்டசபையில் அமரக்கூடிய வடிவேலுவை அருந்ததியர் சமூகத்தினுடைய பிரதிநிதியாக தமிழக வரலாற்றில் எதிர்கட்சி அரசியலானதையும்  பொருத்திக்காட்டி இருப்பது அபாரம் .

ஒற்றை நட்சத்திரமாக சனாதன எதிர்ப்பை மிகக் காத்திரமாக அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் இருவருடைய கருத்தியலோடு வலுவான எதிர் வாதத்தை பல மேடைகளிலும் சொல்லி தமிழ்நாட்டிலே சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் தன்னுடைய தொண்டை தண்ணி வற்றவற்ற பேச்சின் மூலமாக இந்த சமூகத்திற்குக்கடத்திக்கொண்டிருக்கும்  பெரிய எழுச்சி தந்து கொண்டிருக்க கூடிய மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் மதிப்பிற்குரிய முனைவர் தொல். திருமாவளவனுடைய அரசியல் பயணம் எதிர்காலத்திலே அது ஒற்றை நட்சத்திரமாக ஜொலிக்கும் என்பதைச் சொல்லுவதாகவும் படத்தில் பல காட்சிகள் அழகியலோடு சொல்லப்பட்டுள்ளன. 

ஒடுக்கப்பட்ட சமூகத்துத் தெருவில் வாழக்கூடிய நாய்கள் மேலத்தெருவில் வாழும்  நாய்களோடு புணர்வதையே ஏற்றுக்கொள்ள மனம் பக்குவப்படாத நோயாளிகளுக்கு மத்தியில் "நம்ம நிலைமை நல்லா இல்லன்னா நாய் கூட மதிக்காது" என்பதை எதிர்நிலைக் கதாபத்திரமாக நடித்திருக்கும்  ஃபாசில் தோற்றுப் போன பிறகு  அவர் வளர்த்த  நாய்களே அவனைக் கடந்து செல்லுவதாக காட்டக்கூடிய அந்த காட்சி  அற்புதம். 

செல்லப்பிராணியாக நாய்களை வளர்க்கக்கூடிய மேட்டுக்குடித்தன மக்கள் மத்தியிலே பன்றியைப் படுக்கையறையில் பக்கத்தில்  வைத்துக் கொண்டு பாசத்தைக் காட்டுவதாக காட்சிப்படுத்தி இருக்கக் கூடிய மாரி. செல்வராஜ் கற்பனை என்பது நாங்கள் மலம் தின்னும் பன்றிகள் அல்ல ; அதிகாரத்தை வென்றெடுக்கும் பன்றிகள் .எத்தனைமுறை குத்திக்கிழித்துக் கொன்றுபோட்டாலும் மீண்டெழுவோம் என்று  சொல்லுவதாகவே இருக்கிறது.

 குதிரை பலம் என்பது நேர்மறை எண்ணங்களுக்குச் சொல்லுவது வழக்கம் . குதிரையில் பயணப்படக்கூடிய ஃபாசில் இறுதிக்காட்சியில் அரசியலில் தோற்றுப் போன பிறகு குதிரையிலிருந்து இறங்கி குதிரை தனியாக ஃபாசில் தனியாக நிற்கக்கூடிய காட்சியைப் பார்க்கும் பொழுது இனி அதிகாரத்தை நாங்கள் கையில் எடுக்கிறோம் : உன் சாதி ஆதிக்க அதிகாரம் தோற்றுப் போய்விடும், தோற்றுப் போய் இருக்கிறது என்று சொல்லுவதாகவே படுகிறது. தமிழகத்தினுடைய  எல்லைப் பகுதியை வரையறுக்கும் பொழுது திருச்சி -தூத்துக்குடி வரையிலான பகுதிகளில் பள்ளர் சமூகம் அவர்கள் படும்  இன்னல்கள், சாதிக்கலவரங்கள்  அதை எதிர்த்து களப்போராளிகளாகக் களம் காணும் பள்ளர்கள், மேற்கு மண்டலத்திலே  ஆதிக்கச்சாதிக்காரன்களின் அடாவடித்தனத்தால் நொந்து  போன வாழ்க்கையை  வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அருந்ததியர்களின் அவலம், அதிகாரத்தை வென்றெடுக்கும் தூரம் தொலைந்து போனதில் இல்லை ,அருகில் இருக்கிறது என்று சொல்லுவதாகவே இருக்கிறது. எங்கெல்லாம் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் சாதிய வன்மம் தலைவிரித்து ஆடக்கூடிய வடஆற்காடு மாவட்டங்களில் ஆதிதிராவிடர்களின் குரல்வலையை நசுக்கக் கூடிய அதிகாரமையமாக வாழ்ந்து கொண்டிருக்கக்  கூடிய ஆதிக்கத்தினரின்  திமிரை எதிர்த்துக் கலகக்குரல் கொடுக்கும் ஒற்றை நட்சத்திரமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமாவளவன் அவர்களுடைய எதிர்நீச்சல் எல்லாம் இந்த படத்தின் மைய அரசியல். இதுதான்  மாமன்னன் என்ற இந்த படத்தின் செய்தி.இழந்த வரலாற்றை மீட்டெடுக்கவேண்டிய காலத்தின் நெருக்கடி.  அதற்குப் பின்னால் இயங்கக்கூடிய தீய சக்திகளை வேரறுக்கக் கூடிய ஒரு வேலையை அரசியல் மூலமாகத்தான் செயல்படுத்த முடியும். திமுக அரசு தலித்துகளுக்கு இந்த அரசியல் அதிகாரப்பகிர்வை அளிக்கவில்லை  தரவில்லை என்று சொல்லக்கூடிய எதிர் கருத்தை  உள்வாங்கி உதயநிதி  மிகக் காத்திரமாக நடித்திருக்கிறார். அதில் அவர்  வெற்றியும் பெற்றிருக்கிறார். வரும் காலம் அவருடைய அரசியல் பயணத்திலே இந்த மாமன்னன் திரைப்படம் அவரையும் மாமன்னனாகவே பார்க்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன காட்சிகள். 

 தீண்டாமையை காட்சிப்படுத்தக்கூடிய காட்சிகள் நுண்ணரசியாலனவை. கிணற்றிலே குழந்தைகளைக் கல்லால் அடித்துக் கொல்லுவது என்பது கொஞ்சமும் ஈரம்  இரக்கமில்லாதவர்களுடைய வக்கிரமான செயலல். 

இன்குலாப் அவர்கள் *மனுஷங்கடா*என்ற பாடலில்...


 "உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட

எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க

இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்?

கிணத்துத் தண்ணியும் சாதி எழவ எழுதிக் காட்டுமா?-

எங்க குழந்தைக்கெல்லாம் உங்க சாதி விவரம் எட்டுமா?

குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது

தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த

ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது…?

சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க

சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது

எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க

எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க? — டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா


நாங்கள் மனுஷங்கடா என்ற பாட்டிலே  கிணற்றிலே ஒடுக்கப்பட்ட சமூகத்தினுடைய குழந்தைகள் குளித்த பொழுது மின்சாரம் பாய்ச்சி இறந்து போனதை நினைவுப்படுத்தி அவர் எழுதியிருப்பார்.  இந்த கலவரம் தான் ஒரு விடுதலைக்கான கலகக் குரலாக மாறியிருக்கிறது . உரிமைகள் மறுக்கப்படும் பொழுதெல்லாம் கிளர்ந்து எழ வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறது. தீண்டாமை என்பது பாவம் என்று சட்டம் சொன்னாலும்  அதை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையிலே "உன்னுடைய அப்பாவை நிற்கச் சொல்லுவது எங்களுடைய அடையாளம் :உன்னை உட்காரச் சொல்லுவது என்னுடைய அரசியல்" என்று சொல்லக்கூடிய அந்த ஒற்றை வசனம் திரைப்படத் துறையிலே மிகுந்த உயிரோட்டம் உள்ள ஒரு வசனமாக அமைந்திருக்கிறது. இதை மாற்றுவது தான் ஒரு விடுதலை  அரசியலாக இருக்க முடியும். இந்த மாற்றத்தைக்கொண்டுவர  சாதிப்பற்றாளர்கள் விடமாட்டார்கள். விடுதலையை வென்றெடுப்பதுதான் அரசியல் அதிகாரம்.அதற்குச்சமூக அதிகாரம் தேவை.அதற்குத்  இளைய தலையினரின் அரசியல் புரிதல்  அவசியம்.அப்பாவாக நடித்திருக்கக்கூடிய வடிவேலு ஒவ்வொரு படத்திலும் ஒரு கேலிச் சித்திரமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு  அடி வாங்கி பிறரை மகிழ்வித்த  அந்த வடிவேலு இனி வரக்கூடிய காலங்களில் ஒரு நாயகனாக விஸ்வரூபம் எடுப்பதற்கான விதையை மிகநேர்த்தியாக இந்தப்படத்தில் தடம் பதித்திருக்கிறார். மாமன்னனாக நடித்திருக்கும் வடிவேலு அவருடன் இணைந்த உதயநிதி ஆகிய இருவரின் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அவர்களுக்குத்திருப்புமுனைதான்.  இந்தப்படத்தின் திரைக்குப்பின் உழைத்த  ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.மாரி.செல்வராஜுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

கவிஞர் யுகபாரதி காலத்தின் மருந்து.வாழ்த்துக்கள்.

முதுமுனைவர் இறையன்பு அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு மடல்!

 அலுவலக உதவியாளர் முதல் நீதியரசர்கள் வரை

அனைவருடனும் அன்புடன் பழகிடும் பண்பாளர்!


எளிமையின் சிகரம் ஏழ்மையின் தோழன்

எழுத்து சொல் செயல் வேறுபாடில்லாத எளியவர்!


திருக்குறளில் மனிதவள மேம்பாடு தலைப்பில்

திருக்குறளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்!


திருவள்ளுவரையும் சேக்‌ஸ்பியரையும் ஒப்பிட்டு

தன்னிகரில்லா முனைவர் பட்டம் பெற்றவர்!


கம்ப இராமாயணத்தில் சொல்லாட்சி என்று

கம்ப இராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்!


பல்வேறு பட்டங்கள் பெற்றிட்டப் போதும்

பண்பில் உயர்ந்த குன்றாக என்றும் நிற்பவர்!


தலைக்கனம் செருக்கு திமிர் என்றால் என்னவென்றே

தெரியாத இனிமையின் இமயம் இனியவர்!


ஏழை எளியவர்களின் துன்பம் உணர்ந்து

எளிதில் நீக்கிட உதவிகள் பல புரிபவர்!


நிலவொளி பள்ளி தொடங்கி வைத்து

நின்றுபோன கல்வியைத் தொடர வைத்தவர்!


முப்பத்திஐந்து ஆண்டுகள் அரசுப்பணியில்

முத்திரைப் பதித்து எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்!


அப்துல்கலாமிற்கு அடுத்தபடியாக மாணவர்களை

ஆயிரக்கணக்கான கூட்டங்களில் சந்தித்தவர்!


நேர்மையான அரசு அலுவலராக வென்றவர்

நல்ல நெறியை பண்பை நாளும் போதிப்பவர்!


எழுத்து பேச்சு இரண்டு வெவ்வேறு துறையிலும்

எண்ணிலடங்காத சாதனைகள் நிகழ்த்துபவர்!


நூற்றி ஐம்பது நூல்களுக்கு மேல் வடித்தவர்

நூற்றாண்டு சாதனைகளை அறுபதிலேயே நிகழ்த்தியவர்!


நட்புக்கு இலக்கணமாக என்றும் வாழ்பவர்

நண்பர்களின் கண்ணீர் துடைக்கும் கரங்கள் படைத்தவர்!


ஓய்வு என்பது உங்களுக்கு அரசுப்பணிக்குத்தான்

ஓய்வு என்றும் இல்லை உங்களின் இலக்கியப்பணிக்கு!

Wednesday, May 31, 2023

மனோபலமும் மன உறுதியும்

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும் .

இன்பமோ துன்பமோ அனுபவம் நம்மைப் பலப்படுத்துகிறது,

காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது. முடிவில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.

சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா. என்றால் அதுதான் இல்லை. மேலும் குழம்பி தற்கொலையால் வாழ்வைப் பறிக்கிறான்.

இவ்வுலகில் உள்ள மற்ற உயிரினங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை.

காரணம், அவைகளின் வாழ்க்கையின் முடிவைப் பற்றிய பயமில்லை. அந்த வகையில் அவைகளுக்கு அறியாமை ஒரு வரம்.

தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது, அறிவு மட்டும் வாழ்க்கைக்குப் போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது.

அது என்ன

தன்னம்பிக்கை, மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.

அப்படி ஒன்று இருக்கிறதா

என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையைப் பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லை, வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மன உறுதியொன்று மட்டுமே தீர்வாக அமைகிறது.

*ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிக் கற்றுக் கொண்டவன் வெற்றி கொள்கிறான், கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்...*

ஒரு ஜெர்மனியப் பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ள மாட்டான்” என்கிறது. அப்படிக் கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளைத் தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்லை.

ஆனால், தோல்விக்குப் பின்பு வெற்றிக்காக காத்திருக்க அவனுக்குப் பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்குச் சோகமான முடிவைத் தேடிக் கொள்கிறான்.

*இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். இன்பமும், துன்பமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்...*

பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறது.

சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

ஆனால், இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகம் இல்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, தற்கொலைகள், இப்போதுதான் அதிகமாக வருகிறது.

*வாழ்க்கை என்பதே ஒரு போராட்டமே.போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றிபெறுவது குதிரைக் கொம்பே.*

*வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு. அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கடமை, அதை நிறைவேற்றுங்கள்.*

*வாழ்க்கை என்பது, ஓர் குறிக்கோள், அதைச் சாதியுங்கள். வாழ்க்கை என்பது ஒரு சோகம், அதைத் தாங்கிக் கொள்ளுங்கள்.*

*அதை வென்று காட்டுங்கள். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதை நடத்தி முடிக்கவும்.*

சொந்தக் காலில் நிற்க வேண்டும்

நம்மில் பெரும்பாலனோர் எதற்கெடுத்தாலும் அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படி அடிக்கடி ஆலோசனை கேட்பதால் அவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் குறைந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது.

முன்னேற்றம் என்பது சுயமாக இருக்க வேண்டும். அதாவது சொந்தமாக ஆலோசிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும்.

அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். தவறில்லை. ஆனால், அதனை அப்படியே நகலெடுத்தது போலக் கடைப்பிடித்தல் கூடாது.

அந்த ஆலோசனைகளை உங்கள் மனதில் ஊறப்போட வேண்டும். அதில் எதை எடுத்துக் கொள்ளலாம், எதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஆலோசிக்க வேண்டும்.

சில ஆலோசனைகள் உங்கள் வாழ்க்கைக்கும், உங்கள் மனநிலைக்கும், உங்கள் நடவடிக்கைக்கும், உங்கள் பழகும் விதத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும்.

அவற்றைத் துணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு சில ஆலோசனைகள் நல்லதாகவும், கடைப்பிடிக்க வேண்டியதாகவும் இருக்கலாம்.

ஆனாலும், உங்கள் மனோபாவத்திற்கு பொருந்தாததாக இருக்கும். எனவே அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

எல்லோரையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்தல் என்பது இயலாத செயல். 'எடுப்பார் கைப்பிள்ளையாக' இருக்காமல் நாமாகவே நல்லது எது, கெட்டது எது என்று சுயமாக சிந்தித்து ஒரு செயலில் இறங்க வேண்டும்.

*உங்கள் சுயத்தை தொலைக்காமல் நீங்கள், நீங்களாக இருங்கள். தைரியமாக உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அல்லது கூற முயற்சி செய்யுங்கள்.*

*மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று நினைத்தால் நம் கருத்தை என்றுமே கூற முடியாது, நம் கருத்தை முன்வைப்பதன் மூலமே மேலும் மாற்றும் கருத்துகளை நம் தவறுகளை நாம் இனம் காண முடியும், அப்போது தான் நம் எண்ணங்களை, தவறுகளை சரி செய்து நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும்.*

*உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல, மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஆனால், முடிவு எடுப்பது என்னவோ நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.*

*எதையும் சுயமாகச் சிந்தியுங்கள்.! ஆரோக்கியமாக வாழுங்கள்.*

Tuesday, May 23, 2023

குறுந்தொகை வழி அறியலாகும் தமிழரின் வானிலை நுண்ணறிவு

முன்னுரை

பழந்தமிழரின் வானிலை அறிவுநுட்பத்தை எடுத்துரைக்கும்நூல்களுள் ஒன்று குறுந்தொகை. இயற்கையோடு இயைந்த வாழ்வியல் இன்பத்தை அகப்பாடல்கள் வழி எடுத்துரைக்கும் குறுந்தொகைப் புலவர்கள் அவற்றில் தம் அறிவியல் நுண்ணறிவையும் பதிவுசெய்தனர்.  தாம் வாழும் உலகத்தின் சூழல்களையும் இயற்கை நிகழ்வுகளையும் எந்தவிதத் தொழில் நுட்பக் கருவிகளும் இன்றித் தம் கண்களாலும் அனுபவத்தாலும் உணர்ந்து அவற்றைத் தகுந்த தமிழ்ச்சொற்களால் வெளிப்படுத்தியிருக்கும் அவர்தம்அறிவு நுட்பம் வியந்து போற்றற்குரியது. இக்கட்டுரை பழந்தமிழரின் வானிலை அறிவியல் அறிவைக் குறுந்தொகைப் பாடல்கள் வழி ஆராய முற்படுகிறது.


வானிலைஅறிவியல்


இன்று வளர்ந்து வரும் அறிவியல் துறைகளுள் ஒன்று Meterology எனப்படும் வானிலை அறிவியல் ஆகும். வானிலையும் காலநிலையும் இன்று மனிதர்கள் அன்றாடம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத் தேவையாக மாறியுள்ள சூழலில் வானிலை அறிவியல் முக்கியமான துறையாகக் கருதப்படுகிறது. இன்றைய வானிலை அறிவியல் குறித்த செய்திகளோடு குறுந்தொகைச் செய்திகளும் ஒப்பிட்டு நோக்கப்பட்டு இங்கே விவரிக்கப்படுகின்றன.


குறுந்தொகையில் மேகம், இடி, மின்னல், மழை போன்ற வானிலை தொடர்பான பல குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன.


மேகங்கள்


தற்கால வானிலை அறிவியல் மேகங்களைப் பலவகைகளாகப் பிரிக்கிறது. அவை,1. கீற்றுமுகில் (Cirrus), 2. கார்முகில் (Nimbo stratus), 3. படர்முகில் (Alto stratus), 4. திரள்முகில் (Cumulus) என்பனவாகும். குறுந்தொகைப் பாடல் வருணனைகளில் இத்தகைய மேகங்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.


வெண்மையான தோற்றத்தைக் கொண்டவையும் மிக உயரமான மலைப்பகுதிகளில் உருவாகி ʻஉயர்மேகங்கள்’ (high clouds)  என்று கூறப்படுபவையும் ஆகிய கீற்றுமுகில்கள்  ʻஉறையறு மை’ (339) என்று மழைத்துளிகளற்ற வெண்மையான  மேகங்களாகக் குறுந்தொகையில் கூறப்படுகின்றன.அதிக அடர்த்தியோடும் கறுத்த சாம்பல் நிறத்தோடும் எப்போதும் மழை பெய்து கொண்டிருக்கும் கார்முகில்களைப் பற்றி,



ʻகறிவளர் அடுக்கத்து இரவில் முழங்கிய

மங்குல் மாமழை வீழ்ந்தென’    (90)            


என்று கூறுகிறது குறுந்தொகை. இலேசான மழைத் துளிகளைப் பெய்து கொண்டிருக்கும் நீர்த் திவலைகளால் ஆன படர்முகில்கள் ʻதளி தரு தண்கார்’  (65) என்றும், புயல், இடி, பெருமழையை உருவாக்கும் திரள்முகில்கள்,


ʻசேய் உயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்

தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்

பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலை’   (314)


என்றும் குறுந்தொகைப் புலவர்களால் குறிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். தமிழகம் வெப்ப மண்டல நாடாகும். எனவே, பிற பருவங்களில் காணப்படும் மேகங்களை விட மிகுந்த மழையைத் தரும் கார்காலத்தின் திரள்முகில் இனங்களே குறுந்தொகைப் புலவர்களால் பெரிதும் விரும்பி அதிகமாகப் பாடப்பட்டுள்ளன.



ʻகழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்

புதுநீர் கொளீஇய உகுத்தரும்

நொதுமல் வானத்து முழங்கு குரல்  கேட்டே’  (251)           என்னும் இடைக்காடனாரின் பாடல் நீர்மேலாண்மைக்கு மிகச் சிறந்த சான்றாகும். ʻநீர் சுமந்த மேகங்கள் மழையாகப் பொழிந்தால் மட்டுமே மீண்டும் கடல்நீரை முகந்து நீர் சுமந்து மழையாகப் பொழிய முடியும்’ என்னும் செய்தி அறிவியல் நுட்பத்தோடும் வாழ்வியல் சிறப்போடும் கூறப்பட்டிருப்பது ஆய்ந்து உணரத்தக்கது.


இடி


ʻவெடி ஒலி உரும் கோ விண்ணேறு அசனி

செல் இகுளி இடியேறு மடங்கலும் ஆகும்’


என்று இடியின் பல்வேறு பெயர்களைப் பிங்கல நிகண்டு பட்டியலிடுகிறது. குறுந்தொகைப் பாடல்களில் இடியின் தன்மை குறித்துப் பாடும் செய்திகள் நுட்பமானவை. இடியின் வேகத்தைக் கணக்கிட்டு வருணிக்கும் திறம் இன்றைய வானிலை ஆய்வுக்கு இடம் தருவதாகும்.



குறுந்தொகைப் பாடல்கள் வழி இடியின் தன்மைகளை 1. ஆரவாரத்தை உடைய இடி, 2.முரசு போல் முழங்கும் இடி, 3. பாம்பைத் துணிக்கும் இடி என மூன்றாகப் பிரிக்கலாம்.


ஆரவாரத்தை உடைய இடியைக் குறுந்தொகை ʻஇடியேறு’ என்றும் ʻஆர்கலி ஏறு’ என்றும் குறிப்பிடுகிறது. மிகப் பெரிய மின்னலுக்குப் பிறகோ, மேகங்களிலும் மலைத்தொடர்களிலும் பட்டு எதிரொலிப்பதாலோ தொடர்ந்து நெடுநேரம்ʻகிடுகிடு’வெனக் கேட்கும் இடியோசையைக் குறுந்தொகை ஆரவாரிக்கும் இடியோசையாகக் குறிப்பிடுகிறது. 


ʻகருவி மாமழைச் சிலை தரும் குரலே’         (94)


ʻஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த’     (186)                      


என்று குறிப்பிடும் குறுந்தொகை, முரசு போல் முழங்கும் இடியை,


ʻவென்று எறி முரசின் நன் பல முழங்கி

பெயல் ஆனாதே  வானம்’     (380)



எனக் கூறுகிறது. இவ்விரு இடிகளின் தன்மையுடன் மேலும் கடுமையாக முழங்கும் இடியைப் ʻபாம்பைத் துணிக்கும் இடி’ என்று குறுந்தொகை கூறுவது சிறப்பிற்குரியது. இத்தகைய இடி பற்றி நான்கு பாடல்கள் நூலில் உள்ளன.


ʻநெடு விசை மருங்கின் பாம்புபட இடிக்கும்

கடுவிசை உரும்’                                                                 (158)


ʻவெஞ்சின அரவின் பைந்தலை துமிய

நரை உரும் உரரும்’                                                                          (190)


ʻ……………………………பாம்பின்

பையுடை இருந்தலை துமிக்கும் ஏறு’                          (268)


என்று கூறுவது நோக்கத்தக்கது. சங்கப் புலவர்கள் வானிலைச் செயல்பாடுகளை உற்று நோக்கி அவற்றின் தன்மையைத் தம்மால் இயன்றவரையில் பாடல்களில் பதிவு செய்துள்ளமை வியப்பிற்குரியதாகும்.


மின்னல்


மின்னலுடனும் இடியுடனும் பெய்யும் மழையைக் குறுந்தொகை ʻகருவி மாமழை’ என்று  குறிப்பிடுகிறது.


……………………..மாமழை

இன்னும் பெய்யும் முழங்கி

மின்னும் தோழி’                     (216)


என்னும் காஞ்சிக் கொற்றனின் குறுந்தொகைப் பாடல் ‘தோழி! கரிய பெரிய மேகங்கள் இன்னும் மழையைப் பெய்ய மேலும் முழங்கி மின்னுகின்றன’ என்னும் வானிலை முன்னறிவிப்பை எடுத்துரைக்கின்றது எனலாம்.


மழை


பழங்காலத்தில் மழை பற்றிய அறிவியல் உணர்வு தமிழர்களிடம் இருந்ததைப் போல பிற நாட்டாரிடம் இல்லை எனலாம். பிற நாட்டினர் மழையைக் கண்டு அஞ்சி அதனைக் கடவுள் தந்த தண்டனையாகக் கருதிய காலகட்டத்திற்கு முன்னரே பழந்தமிழர் மழை எவ்வாறு பெய்கிறது என்பது பற்றிய அறிவியல் உண்மையை உணர்ந்திருந்தனர்.


குறுந்தொகைப் பாடல்கள் வழி பழந்தமிழர் மழையை,1.தூறல் மழை, 2.விடாமழை, 3.புயல்மழை, 4.பெருமழை என்று பகுத்துணர்ந்த அறிவு நுட்பத்தை அறியலாம். இவற்றுடன் ‘வம்பமாரி’ என்ற ஒன்றையும் பதிவு செய்தனர்.



வானம் மங்கலாக இருக்கும் போதும், மூடுபனி இருக்கும் போதும் பூமியில் மிகச் சிறு திவலைகளாக விழும் தூறல் மழையை,


ʻஊதை தூற்றும் கூதிர் யாமத்து’                                         (86)

ʻவந்த வாடைச் சில் பெயல் கடைநாள்’                      (332)                      


என்னும் குறுந்தொகை வரிகள் எடுத்துரைக்கின்றன.


ʻபெரும்பெயல்’, ʻமாமழை’,ʻபடுமழை’,ʻகலிமழை’ என்னும் அடைமொழிகளால் பெருமழையைக் குறுந்தொகைப் புலவர்கள் குறிப்பிட்டு மகிழ்ந்தனர். பழந்தமிழர் நீர்வளம் நிரம்பப் பெற்று வாழ்க்கை நடத்தியவர்கள் ஆவர். அதனால் பெருமழை பொழியும் கார்காலத்தைப் புனைந்து பாடுவதில் புலவர்கள் பெரும் விருப்பம் கொண்டிருந்தனர்.  


ʻபெரும் பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்’   (13)

ʻபடுமழை பொழிந்த சாரல்’                         (249)

ʻகலிமழை கெழீஇய கான்யாற்று இடுகரை’     (264)    


என்பன போன்ற பாடல் வரிகள் குறுந்தொகையுள் மிகுதி.


பெருங்காற்றோடு பெய்த பெருமழையைப் புயல்மழை என்று குறுந்தொகையில் பதிவு செய்கிறார் பெண்பாற் புலவரான ஔவையார்.


ʻநெடுவரை மருங்கின் பாம்புபட இடிக்கும்

கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்

காலொடு வந்த கமஞ்சூல் மாமழை!

ஆர் அளி இலையோ நீயே? பேரிசை

இமயமும் துளக்கும் பண்பினை!’                      (158)



என்ற பாடல் இமயமலையையும் அசைக்கும் ஆற்றலுடைய காற்றோடு வரும் பெருமழை குறித்த செய்தியைக் கூறுகிறது. வானிலை ஆய்வாளர்களின் கருத்தோடு ஒப்பிட்டால் இதனைப் புயல் மழையாகக் கருதலாம்.


இடைவிடாது பெய்யும் அடைமழையைக் குறுந்தொகை,


ʻபொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது

கழுது கண்பனிப்ப வீசும்’              (161)

ʻபெயல் ஆனாதே வானம்’           (380)                           


என்று குறிப்பிடுகிறது. குறுந்தொகையுள் காணப்படும் பாடல் ஒன்று கோடைமழை பற்றிக் கூறுகிறது.


ʻஉவரி ஒருத்தல் உழாஅது மடியப்

புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்

கடிது இடி உருமின் பாம்பு பை அவிய

இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே’   (391)


ʻபசுக்களும் மான்களும் வெம்மையால் புழுங்கி துன்புறும்படியாக, மேகம் மழைபெய்தலை நீங்கிய காட்டில் கடுமையாக இடிக்கும் இடியினால் பாம்புகள் படம் அடங்கிக் கிடந்தன. கரிய மேகங்கள், பெய்யும் பருவமறியாது இடியோடு கலந்து இனிதாகத் தாழ்ந்தன’ என்னும் செய்தி கோடை மழையைக் குறிப்பதாகும்.


பழந்தமிழரின் வானிலை அறிவு நுட்பத்துக்கு,  அவர்கள் காலமழைக்குச் சூட்டிய பெயர்களே சான்றாகும். உரிய பருவத்தில் பெய்யும் மழையைக் ʻகாலமாரி’ என்னும் பெயராலும் காலமல்லாத காலத்தில் பெய்த மழையை ʻவம்பமாரி’ என்னும் பெயராலும் அழைத்த அறிவு நுட்பம் வியந்து போற்றற்குரியது.


ʻகாலமாரி மாலை மாமழை’                                                  (200)

ʻகாலமாரி பெய்தென’                                                                     (251)


 


எனப் பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யும் மழையைக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.


ʻவம்பமாரி’ என்னும் சொற்றொடர் பழந்தமிழரின் அறிவுக்கூர்மைக்கும் அறிவியல் நுட்பத்துக்கும் சொல்லாட்சித் திறனுக்கும் தக்க சான்றாகும்.


ʻ வம்பு நிலையின்மை’                 (தொல்.உரி.31)


என்று வம்பு என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுகிறது தொல்காப்பியம். பருவமல்லாத காலத்தில் பெய்து பின் மாறி விடுகின்ற நிலையில்லாத மழையே வம்பமாரியாகும்.


ʻபருவம் வாரா அளவை நெரிதரக்

கொம்பு சேர் கொடியிணர் ஊழ்த்த

வம்பமாரியைக் காரென மதித்தே’                                              (66)

ʻவம்பு பெய்யுமால் மழையே வம்பன்று

காரிது பருவம் ஆயின்

வாராரே நம் காதலரே!’ 



கார்காலம் வந்தும் தலைவன் வராததால் வருந்தியிருக்கும் தலைவியை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி ʻஇது காலமாரி அன்று, வம்பமாரி’  என்று கூறுவதாக அமைந்த சங்க இலக்கியப் பாடல்கள் மிகுதி. இச்செய்திகள் காலம் தவறிப் பெய்யும் மழை குறித்தும் அம்மழையைப் பொருள் மாறாது அழகிய சொல்லால் குறித்த தமிழர்களின் வானிலை நுட்பத்தையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன.


முடிவுரை


தற்கால வானிலை ஆய்வாளர்களால் பகுத்துரைக்கப்படும் பல செய்திகளைச் சங்க இலக்கியங்கள் அன்றே பதிவு செய்து வைத்துள்ளமைக்குக் குறுந்தொகை மிகச் சிறந்த சான்று நூலாகும். குறுந்தொகையுள் கூறப்படும் திரள்முகில் இனங்களும் பாம்பையும் துண்டிக்கும் இடிகளும் பெருமழையும் வம்பமாரியும் தமிழர் தம் கூர்த்த நுண்ணறிவைப் புலப்படுத்துவன. இதனால் தொழில்நுட்பக் கருவிகள் ஏதுமில்லாமலேயே பழந்தமிழர் வானிலை அறிவியலில் சிறந்து விளங்கியமையை அறியலாம்.

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்

பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம்வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன. இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்தது என்றால் மிகையில்லை. இதனைப் பல தமிழ் இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன.

இயற்கை அறிவியல் ஔவை திருக்குறளின் பெருமையை உரைக்கும்போது,

அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி

குறுகத் தெறித்த குறள்.

என்கிறார். அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஔவை அதனை அறிந்திருந்ததும் அணுவைப் பிளப்பது குறித்து பாடலில் கூறியிருப்பதும் வியப்பிற்குரியது.

இடையின்றி அணுக்களெல்லாம் சுற்றுமென இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்

என்று பாரதி அணுக்களின் அசைவுகள் குறித்து அழகு தமிழ் படைக்கின்றார்.

உலகத்தின் தோற்றம்

ஐம்பூதங்களால் உருவானது இவ்வுலகமெனில் அது எவ்விதம் என்ற கேள்வி அறிவியலுக்கு சவாலாக அமைந்தது ஒரு காலத்தில். ஆனால் பரிபாடலில் ஒரு பாடலில்,

கருவளர் வானத்திசை யிற் தோன்றி

உருவறிவாரா ஒன்றன் ஊழியும்

உந்து வளி கிளர்ந்த உளமுழ் ஊழியும்

சென்தீச் சுடரிய ஊழியும் பணியொடு

தன்பெயல் தலை இய ஊழியும் அவையிற்

நுண்முறை வெள்ள முழ்கியார் தருபு

உள்ளிபிகிய இருநிலத் தூழியும் (பரி.2:5- 12)

என்று கூறப்பட்டுள்ளது. இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைக் கூறியுள்ளார். இவை மட்டும் இன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது காலப்போக்கில் சிறிது சிறிதாக குளிர்ந்து பனிப்படலமாக மாறி, பின் நெடுநாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்றும் உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது. அறிவியல் தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் தமிழரின் அண்டம் குறித்த அறிவு எண்ண எண்ண வியப்பிலாழ்த்துகிறது.

மழை பெய்யும் முறை

மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. இது ஒரு நாள் ஆய்வின் முடிவல்ல. பல்லாண்டுகளின் பலன். ஆனால் இதனை விளக்கும்முகமாக,

நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும் தன்

பொறை தவிர்பு அசைவிட (பரி. 6:1 - 2)

என்று பாரிபாடலில் முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின்கண் முழுகுவிக்க முயன்றது போல் மழை பெய்தது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இவை ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள்.

மருத்துவ அறிவியல்

இன்றைய மருத்துவ உலகம் மனிதனைக் காப்பாற்ற மரணத்தின் வாயில் வரை செல்கிறது. குளோனிங் முறையென்று உயிரின் மாதிரிகளாக புதிய உயிர்களை உருவாக்கும் அளவு வளர்ந்துவிட்டது. ஆனால் மருத்துவ படிப்புகளோ, செயல்முறை பயிற்சிகளோ இல்லாத அந்தக் காலகட்டத்திலும் சித்தர்களும், சிறந்த வைத்தியர்களும் வாழ்ந்துள்ளதை அவர்கள் படைத்த இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.

மாதா உதிரம் மலமிகில் மந்தனாம்

மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை

மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே (திருமந்திரம்)

என்று திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடலைக் கேட்கும்போது தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழுந்தை மந்தபுத்தி உடையதாகவும் நீர் மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம், நீர் இரண்டும் மிகுதியாக இருந்தால் குழந்தை குருடாகப் பிறக்கும் என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. இக்கருத்துக்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளிலும் அமைந்திருப்பதை அறிய முடிகிறது.

மாற்றுருப்பு பொருத்துதல்

பழுதுபட்ட ஒரு உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை, இதனைப் பற்றிய குறிப்பொன்று சிலப்பில் காணப்படுகின்றது.

நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்

ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த

பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் (சிலப்பு)

கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக, தன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான் பாண்டியன். அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக் கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான். என்கிறது அச்செய்தி, உறுப்பினை இழந்த ஒருவன் செயற்கை உறுப்பினைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தியதை இப்பாடலில் உணரலாம்.

பெரியபுராணத்திலும் இதைப் போன்றே ஒரு நிகழ்வினைக் காண முடிகிறது. சிவன் மீது மிகுந்த பற்று கொண்ட கண்ணப்பர் ஒரு நாள் இறைவன் கண்ணிலிருந்து குருதி வழிவதைக் கண்டார். பதறினார் உடனே மூலிகைகளை பறித்துக் கொண்டு வந்து பிழிந்து அதைக் அக்கண்ணில் விடுகிறார். குருதி நிற்கவில்லை. எனவே சற்றும் தாமதிக்காது தனது கண்ணைத் தோண்டி அவ்விடத்தில் அப்புகின்றார். அங்கு குருதி வழிவது நிற்கிறது. இதனை,

இதற்கினி என்கண் அம்பால் இடந்தப்பின் எந்தையார்கண்

அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று

மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்துமுன் இருந்து தங்கண்

முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப (பெ.பு.2)

என்ற அடிகளில் கூறுகின்றார். இன்று கண்பார்வையற்றவர்க்கு பிறருடைய கண்ணினை வைத்து அறுவை சிகிச்சை செய்து பார்வை பெற வைக்கும் மருத்துவ அறிவினை மிக எளிமையாக கண்ணப்பர் கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சேக்கிழார். மேலும்,

அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினை பதிற்றுப்பத்தில்,

மீன்றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி

நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்

அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது

தும்பை சூடாது மலைந்த மாட்சி (பதிற்றுப்பத்து 42: 2 - 6)

என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடியில் போரில் வெட்டுண்ட உடலை வெள்ளுசி கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன. மேலும், இத்தகைய நிகழ்வு ஒன்று புறப்பாடலிலும் காணப்படுகிறது.

செருவா யுழக்கிக் குருதி யோட்டிக்

கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு

பஞ்சியுங் களையாப் புண்ணர் (புறம். 353)

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரின் பாடல் வரிகளில் வெட்டுண்டு கிழிந்த உடல் தசையினைத் தைத்து மருந்தூட்டி அப்புண்ணின் மேல் பஞ்சினை வைத்து சிகிச்சை அளித்தமையை உணர்த்துகின்றன. இவை அனைத்தையும் பார்க்கும் போது இன்றைய மருத்துவ முறையின் நவீனமான சிகிக்சைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழரால் கையாளப்பட்டு வந்துள்ளன என்பது பெருமை கொள்ளச் செய்கின்றன.

இயற்பியல் அறிவு

தமிழரின் மருத்துவம் குறித்த அறிவு மட்டுமன்றி அவர்களின் இயற்பியல் அறிவும் நம்மை வியக்க வைக்கிறது. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில் ஊசற் பருவத்தில், அமுதாம்பிகை ஊசலாடும் நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவர்,

மகரக் குழைகளும் ஊசலாட

பங்கய மடமாதர் நோக்கி இருவேம்

ஆட்ட - அவ்வூசலில் பாய்ந்திலது

இவ்வூசல் என - நனி ஆட்டுதோறும்

நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்

திங்கள் சாய (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் - ஊசல் பருவம்)

என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார். இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில் ‘‘ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும்’’ என்றும் கூறியுள்ளார். இவ்வாறு ஆய்வுகளின் மூலமாக அறியப்பட்ட பல அறிவியல் உண்மைகள் வெறும் அனுபவத்தின் மூலமாகவும், பண்டைய தமிழர்களின் அறிவுத் தேடலின் விளைவுகளாகவும் பெறப்பட்டதை உணரலாம்.

அன்றைய மனிதன் கண்ட கனவை இன்றைய அறிவியல் முன்னேற்றம் நிஜமாக்கியது. தேடல் இருக்கும் இடத்தில்தான் வெற்றி கிடைக்கிறது. பறவையைக் கண்ட மனிதன் தானும் பறக்க நினைத்தான். இறக்கைகள் இல்லாதபோதும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. விளைவு விமானத்தின் துணையோடு விண்ணில் பறந்தான். இவ்விமானங்கள் பற்றிய பல குறிப்புகள் சங்கப் பாடல்களிலேயே பயின்று வந்துள்ளமையைக் காண முடிகிறது.

வலவன் ஏவ வானவூர்தி (புறம் 27)

எனும் பாடல் அடியில் வானவூர்தி என்ற அற்புதமான சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். இதைப்போலவே சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக ஒரு காட்சி இதனை இளங்கோ,

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு

அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்

கோநகர் பிழைத்த கோவலன் தன்னோடு

வானவூர்தி ஏறினள் மாதோ

கானமலர் புரிகுழல் கண்ணகி தானென் (3:196 - 200 )

என்ற வரிகளில் வாடாத பெரிய மலர்களை மழையாகப் சொரிந்து அமரர்களின் அரசனான இந்திரனும் வானோரும் வந்து வாழ்த்த தன் கணவன் கோவலனோடு கண்ணகி தேவ விமானத்தில் ஏறிச் சென்றாள் என்று கூறப்பட்டுள்ளது.

சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி, கட்டியங்காரன் போருக்கு வந்ததால் சச்சந்தன் தன் மனைவியை காப்பாற்ற அவளை மயிற்பொறியில் ஏற்றி அனுப்பினான் என்பது செய்தி. கட்டியங்காரனின் வெற்றி முழக்கத்தை வான் வழியே கேட்டு விசயை மயங்கி வீழ்ந்தாள். மயிற்பொறி இடப்புறமாகத் திரும்பி ஒரு சுடுகாட்டில் இறங்கி கால் ஊன்றி நின்றது என்பதாக அமைந்துள்ளது. இதனை,

எஃகு என விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்

அஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்

வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப

எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள் (நா.இ., பா. 299)

என்றும்,

பல் பொறி நெற்றிக்

குஞ்சிமா மஞ்சை வீழ்ந்து கால்குவித்து இருந்து (நா.இ., பா,30)

போன்ற வரிகளிலும் வானவூர்தி பற்றிய செய்திகளைக் காண முடிகிறது. மேலும் இதன் தொழில் நுட்பம் குறித்து கூறும்போதும், அதன் பொறியினை வலஞ்சுழி, இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அவ்வூர்தி வான் மேகங்களிடையே பறக்கவோ, தரையில் இறங்கவோ செய்ய முடியும் என்ற கற்பனை வியப்பிலாழ்த்துவதாக உள்ளது. இதனை,

பண்தவழ் விரலில் பாவை

பொறிவலந் திரிப்பப் பொங்கி

விண்தவழ் மேகம் போழ்ந்து

விசும்பிடைப் பிறக்கும்: வெய்ய

புண்தவழ் வேல்கண் பாவை

பொறி இடந் திரிப்பத் தோகை

கண்டவர் மருள் வீழ்ந்து

கால் குவித் திருக்கும் அன்றே (நா.பா.239)

இவை மட்டும் அல்லாமல் பல இலக்கியங்களில் இத்தகைய வானவூர்திகளைப் பற்றிப் பல பாடல்கள் காணப்படுகின்றன. பெருங்கதையிலும் இருப்பாலான விமானம் பறக்க பயன்படுத்தப்பட்டமை குறித்த குறிப்பு காணப்படுகின்றது. மனிதனின் பறக்க வேண்டும் என்ற ஆசை கற்பனையாக, இலக்கியமாக, தேடலாக தொடர்ந்து இன்று நிறைவேறியது.

இத்தகைய இலக்கியங்களை நோக்கும்போது தொகையும் பாட்டுமாக, சித்தர்களின் அரிய பொக்கிஷமாக, நாட்டுப்புற இலக்கியமாக இன்னும் எண்ணற்ற அறிவியல் உண்மைகள் இவற்றுள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உணர முடிகிறது. இவற்றுள் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம் மனித இனத்திற்குத் தேவையான பல மகத்தான அறிவியல் அறிவும் பல மருத்துவத் தீர்வுகளும் கிடைக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

Sunday, May 21, 2023

வளர் தமிழ் ஆய்வு மன்றம்-பன்னாட்டுக் கருத்தரங்கம்

திண்டுக்கல் வளர் தமிழ் ஆய்வு மன்றமும், சென்னைப் பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையம்(20.05.2023) இணைந்து நடத்திய 19வது ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் "திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய போது எடுத்த படம்.