Tuesday, September 17, 2019

தமிழ் இலக்கியத்தில் சுற்றுப்புறச்சூழல்


முனைவர் பூ.மு.அன்புசிவா
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழ்த்துறை
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோயம்புத்தூர்- 641 035.
பேச:098424 95241.

முன்னுரை
   சங்க இலக்கியங்கள் காலக் கண்ணாடி போன்று எடுத்துரைக்கின்றன. சங்க இலக்கியங்கள் உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது சுற்றுச்சூழல்களையும் எடுத்துரைக்கும் காலப்பெட்டகங்களாக மிளிர்கின்றன.மனித வாழ்வு பிறரையும்   பிற பொருள்களையும் சூழ்ந்த வாழ்வாக அமைந்துள்ளது என்பது ஒரு உண்மை.
அந்தச் சூழலை இரண்டு பெரும் பிரிவாகப் பகுக்கலாம்:
1. குடும்பச் சூழல், சமூகச் சூழல், நாட்டுச் சூழல், வரலாற்றுச் சூழல், அரசியல் பண்பாட்டுச் சூழல் என்றவைகளும் மனித வாழ்வைப் பாதிக்கும்.
2. இயற்கைச் சூழல் கடல், மலை, காடு, ஆகியவை சிலருக்கு நேரடியாக அதாவது விருப்பக் கூறுகளாக அமைய நிலம், நீர் ஆகிய இரண்டும் எல்லோருக்கு உரிய அடிப்படைக் கூறுகளாக அமையும்.
சுற்றுச் சூழல் திறனாய்வு
    இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப காரணமாக உலகம் மாசு அடைவது வருங்காலத்துக்குப் பெரிய தீமை உண்டாக்கும் என்று கவலைப்பட்டு மலை, கடல், காடு ஆகியவை காப்பாற்றவும், தட்ப வெப்ப மாறுபாடுகளைத் தடுக்கவும்   உலகளாவிய நிலையில் இயக்கம் ஏற்பட்டுச் சுற்றுச் சூழலியல் ஆய்வு என்று   மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவார்ந்த சுற்றுச்சூழல் கல்வி, இலக்கியப் பகுப்பாய்வுக்கு இடம் அளிப்பதால், அது இலக்கியத் தளத்திலும் எதிரொலித்து சுற்றுச் சூழல் திறனாய்வு (நுஉழ உசவைiஉளைஅ) அல்லது பசுமைத் திறனாய்வு (புசநநn உசவைiஉளைஅ) என்று பெயரிட்டு ஆராயப்படுகிறது. அது,இலக்கியத்தில் உள்ள இயற்கையை ஆராயாமல், இயற்கை சார்ந்த உலகப் பார்வைளை விளக்கும். அதாவது இயற்கை சார்ந்த கோட்பாடுகளைப் பயன்படுத்துவது ஆகும். மேலும் தமிழில் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள் சிந்தனைகள் இன்றைய சுற்றுச் சூழல் திறனாய்விற்குப் பெரிதும் பயன்படலாம்” (மேலது.ப. 849) என்றும் குறிப்பிட்டுள்ளார். விசயராணியின் (2014 ) ‘சூழலியல் நோக்கில் ஐங்குறுறூறுஎன்ற கட்டுரையும் குறிப்பிடத்தகுந்தது.
இலக்கியம் எவ்வாறு இயற்கையை ஓர் அழகியல் பண்டமாகப் புனைந்து வந்துள்ளது என்கிற வரலாற்றை எடுத்துரைப்பதன் மூலம் விழிப்புணர்வை மேற்கொள்ளத் தூண்டுகிறது. எவ்வாறு பெண்ணியம் பாலின அணுகுமுறை மூலம் இந்த உலகத்தைப் புரிய முயலுகிறதோ அதுபோல, இத்திறனாய்வு, பூமியின் இயற்கைச் சூழலின் நிலைப்பாட்டிலிருந்து இலக்கியத்தையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முயலுகிறதுஎன்பார். அதாவது முன்னது இலக்கியத்திலிருந்து சுற்றுச் சூழலையும் பின்னது சுற்றுச் சூழலிருந்து இலக்கியத்தையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள உதவுவது ஆகும்.   மேலும் சுற்றுச் சூழல் திறனாய்வாளர்கள் எழுப்பும் வினாக்களை அவர் தொகுத்து கொடுத்துள்ளார்
சங்க இலக்கியத்தில் 1.முதல், கரு என்ற முறையில் இயற்கை முன்மொழியப்பட்டுள்ளது. 2.கதைப் பின்னலில் இயற்கைப் பொருட்கள் தொல்காப்பியர் கருத்துப்படி உள்ளுறை உவமமாகவும், ஏனை உவமமாகவும், இறைச்சியாகவும் வினைபுரிகின்றன என்றும் கொள்ளலாம். இந்த அடிப்படையில் சங்க இலக்கியத்தில் சுற்றுக் சூழல் ஆய்வை மேற்கொள்ளலாம். 3.நிலத்தைப் பொறுமையின் சின்னமாகவும்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை” (குறள். 158)
சுற்றுச் சூழல் மனிதனைப் பாதிக்கும் என்பதை
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தார்க்கு
இனத்தியல்பான் ஆகும் அறிவு’ (குறள், 452) 
என்றும், உவமைப்படுத்தியதோடு
மனத்து ளதுபோல் காட்டி ஒருவற்கு
 இனத்துள தாகும் அறிவு (குறள்,454)
என்றும் வள்ளுவர் கூறும் போது இனம் என்பதில் சுற்று சூழலும் அடங்குவதாகக் கொள்வதில் தவறு இல்லை.
சங்க இலக்கியத்தில் உள்ள இயற்கை வருணனை
             வாழ்வியல் உணர்வு
             கருத்தாடல் உணர்வு
             உளவியல் உணர்வு
             அழகியல் உணர்வு
என்று நாலு நிலையில் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது. அவை சுற்றுச் சூழலோடு தொடர்பு உடையதாக அமைந்துள்ளதைச் சங்க இலக்கியம் புலப்படுத்துகிறது. அதற்கு மேலாகச் சங்க இலக்கியத்தைக் கோட்பாட்டு நோக்கில் விளக்கும் தொல்காப்பியக் கருத்துகள் சுற்றுச் சூழல் ஆய்வோடு நேரடியாகத் தொடர்புள்ளதாக அமைந்துள்ளதால் அவை முதலில் எடுத்துக்காட்டப்படும்.
தொல்காப்பியர் நோக்கு
   தொல்காப்பியரே சுற்றுச்சூழல் திறனாய்வுக்கு முன்னோடி எனலாம். அது இரண்டு நிலையில் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.
1. பலரும் எடுத்துக் காட்டும் முதல்,கரு, உரி என்ற பாகுபாடு,
2. அவருடைய உள்ளுறை, இறைச்சி என்ற கருத்தமைவுகள் மூலம் புலனாகும் சுற்றுச் சூழல் திறனாய்வு கருத்துகள்.
முதல், கரு, உரி
முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறை சிறந்த னவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை
என்று தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் முதல் இயலான அகத்திணையியலில் (3) என்று குறிப்பிட்டுள்ளார்.   இங்குள்ள, முதல், கரு, உரி என்ற சொற்களின் பொருளும் அவைகளின் விளக்கமும் மட்டும் அல்லாமல் அவைகளின் வரிசை புலப்படுத்தும் வரலாற்று உண்மை சுற்றுச்சூழலியல் நோக்காக அமைந்து, அவை உலகத் தோற்றம், வளர்ச்சி பற்றிய குறிப்பாகவும் அமைந்துள்ளது அறியத் தகுந்தது.
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டு 
அகத்திணையியல்-4 விளக்கம். அது வரலாற்றுக் குறிப்புடையதாகத் தோன்றுகிறது.
     வான இயலார் சூரியன் சுழற்சி காரணமாகச் சூரியனின் ஒரு பகுதி சிதறியதே இந்த நிலப் பரப்பு என்றும், அது குளிர்ச்சி அடைந்த பிறகே தாவரங்கள், விலங்குகள், பறவைகள் தோன்றிய பிறகே மனிதன் தோன்றினான் என்றும் கூறுவார்கள்.   எனவே சூரியன், பொழுதோடு தொடர்பு உடைய நிலம், பொழுது ஆகிய இரண்டையும் தொல்காப்பியர் முதல்என்று கூறியது தொல் வரலாற்றைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
   இளம்பூரணர் அகத்திணை முதல் சூத்திர உரையில் முதல்பொருள், நிலம் எனவே, நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீருக்குக் காரணமாகிய தீயும், தீக்குக் காரணமாகிய காற்றும், காற்றிற்குக் காரணமாகிய ஆகாயமும் பெறுதும்என்று விளக்குவது முதல் என்பதே கூடுதலான சுற்றுச் சூழலை உள்ளடக்கியதாகிறது.
   தொல்காப்பியர் கரு என்பது தெய்வம், உணர்வே, மா (விலங்கு), மரம், புள் (பறவை), பறை, செய்தி (தொழில்), யாழ் அவ்வகை பிறவும்என்றும், அடுத்த சூத்திரத்தில் பூவும் உள்ளடங்கியதாகக் கூறியுள்ளதில் (அகத்திணை -18-19) மரம், பூ , விலங்கு, பறவை ஆகியவை சுற்றுச் சூழல் பொருள்கள்; தெய்வம், உணா, பறை, தொழில், யாழ் ஆகியவை மனித வாழ்வின் பண்பாட்டுச் சூழல் என்று கொள்ளலாம். அதாவது கருப்பொருள் வருணனையிலே மனிதனின் பண்பாட்டு வாழ்வும் இயற்கைச் சுற்றுச்சூழலோடு தொடர்பு உடையது என்று புலப்படுத்தப்பட்டுள்ளது எனலாம். இளம்பூரணர் அகத்திணை முதல் சூத்திர உரையில் கருப் பொருளாவது இடத்திலும், காலத்திலும் தோற்றும் பொருள். அது தேவர், மக்கள்,விலங்கு முதலாயினவும், உணவு, செயல் முதலாயினவும் பறை, யாழ் முதலாயினவும் இன்னவான பிறவும் ஆகிப் பல வகைப்படும்என்று கூறியுள்ளது அதன் பன்முகத்தன்மையைப் புலப்படுத்தும்.
சங்கக் காலத்தில்   கரு என்பது பல பொருள் ஒரு சொல்லாக கரிய, பெரிய என்ற பொருள்களோடு சூல் என்ற பொருளும் உடையது.  “(நீலத்தன்ன நீர்பொதி கருவின் மா விசும்பு” “நீல மணி போல நீருண்ட மேகம் கருக்கொண்டு பரந்த ஆகாயம்அகநானூறு. 314.1-2). எனவே நிலம் தோன்றி சூரிய ஆற்றலால் தட்ப வெப்ப நிலை மாறுபட, உயிர்கள் குறிப்பாக விலங்கு, பறவை, செடி, கொடிகள் தோன்றிய பின்னரே மனிதன் தோன்றுகிறான். ஆனால் இந்தச் சூத்திரம் மனிதப் பண்பாட்டை முதன்மைப்படுத்துவதாக அமைந்துள்ளதற்குத் தொல்காப்பியருடைய அடிப்படை நோக்கு, இலக்கியமே காரணமாகும்.
எனவே முதலும், கருப்பொருளில் சிலவும் ( மா, புள், பூ ) இயற்கைச் சுற்றுச் சூழல்களாகவும், ஏனையவையும் ( தெய்வம்,உணா, பறை முதலியன ) மனிதனின் பண்பாட்டுச் சூழலாகவும், உரி என்பது குடும்ப வாழ்க்கையாகவும் அமைகின்றன. ஆனால் தொல்காப்பியர் இங்கு மூன்றையும் ஒருங்கே கூறியுள்ளதால் அவை ஒத்த சிறப்பு உடையன என்று அவர் கருதுகிறார் என்றும் நாம் உணர வேண்டும்.
விசயராணி (2014) இன்றைய சுற்றுச் சூழல் ஆய்வு அடிப்படையில், சூழல் கட்டமைப்பு என்று உயிருள்ள காரணிகள், உயிரற்ற காரணிகள் என்று இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்து;  உயிருள்ள காரணிகளை மானிட உயிரினச் சூழல், மானிடப் பண்பாட்டு சூழல், அரசியல் அமைப்புகள் என்றும் மானிடற்ற உயிரினச் சூழல், தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நச்சுயிரி (எசைரள)இ நுண்ணுயிரி (டியஉவநசயை), என்றும் இரண்டு வகை சிறு கூறுகளாகவும்; உயிரில்லாக் காரணிகளை இயற்கைச்சூழல் நிலம், நீர், காற்று, விண்வெளி, தாதுப்பொருள்கள், வெப்பம் என்று உள் கூறுகளாகவும் பகுத்துள்ளார். இது விளக்க முறை நோக்கு ஆகும். மாறாகத் தொல்காப்பியர் வகைப்பாட்டில் கவிதைக்கூறும், வரலாறும்   அடங்கியுள்ளன.
     இன்னொரு நிலையில் சொற்களைப் பிரிக்கும்போது தொல்காப்பியர், மனிதன் உயர்திணை என்றும் “(உயர்திணை என்பது மக்கட் சுட்டே)என்றும், ஏனையவை அஃறிணை “(அஃறிணை என்மனார் அவரல பிறவே)என்றும் சொல்லதிகார முதல் சூத்திரத்தில் கூறியது இலக்கண நோக்கு என்றாலும், சுற்றுச் சூழலில் மனிதன் சூத்திரதாரியாகச் செயல்படுகிறான் என்றும் ஆகிறது.
தொல்காப்பியர் உரிப்பொருள்களை விளக்கும் சூத்திரத்திலேயே ( அகத்திணை. 14 ) அவற்றைத் திணைக்குரிப் பொருள்என்றும் குறிப்பிட்டு அதன் அடிப்படையில் அவற்றுக்குக் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம்   பெயரிட்டது அவற்றைச் சுற்றுச் சூழல் பொருள்களோடு இணைத்துக் காட்டியதாகும்.
புணர்தல் ஸ்ரீ குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), இருத்தல் ஸ்ரீ முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்), இரங்கல் ஸ்ரீ நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்), ஊடல் ஸ்ரீ மருதம் (வயலும் வயல் சார்ந்த இடமும்), பிரிதல் ஸ்ரீ பாலை (தனி நிலம் கிடையாது- அகத்திணை-5). எனவே, மனிதக் குடும்ப வாழ்வின் கூறுகளை நில அடிப்படையில்   குறுக்கி (புணர்ச்சி ஸ்ரீ குறிஞ்சி, இரங்கல் ஸ்ரீ நெய்தல் போன்று) இணைப்பது மனித வாழ்வைச் சுற்றுச்சூழலோடு இணைக்கும் கவித்துவ தீவிரநோக்கே தவிர, உண்மையான வாழ்வு நோக்கு அல்ல. ஏனெனில் அந்த ஐந்திணை ஒழுக்கமும் உலக வாழ்க்கையில் எல்லாத் திணை நிலத்திலும் நடைபெறுவதே. எனவே, தொல்காப்பியர் கருத்தைச் சூழலியல் நோக்கில் தீவிர வாதம்தான் என்று கொள்ள வேண்டும்.
முதல், கரு உரி ஆகிய மூன்றையும்
1. “பாடலில் பயின்றவை  என்றது ஒரு பாடலில் உள்ள கருத்தன் என்ற மூன்று பெருங் கூறுகள் என்ற முறையில் கருத்தாடல் நோக்கு ஆய்வுக்கும், சுற்றுச் சூழலியல் இலக்கியத் திறனாய்வுக்கும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் அமைந்துள்ளது.      முறை சிறந்தனேவேஎன்று கூறியதால்
1. “ஒரு செய்யுட்கண் முதற் பொருளும், கருப்பொருளும் வரின் முதற் பொருளால் திணையாகும் என்பதூஉம்,
2. முதல்பொருள் ஒழிய ஏனைய இரண்டும் வரின் கருப்பொருளால் திணையாகும் என்பதூஉம்.
3. உரிப்பொருள் தானே வரின் அதனால் திணை ஆகும் என்பதூஉம் ஆகும்என்று இளம்பூரணர் விளக்கத்தில், அவை கட்டாயக் கூறுகள் இல்லை, விருப்பக் கூறுகள் என்று பெறப்படுவதோடு   முதல் இரண்டு நிலைகளிலும் ( முதலும் கருவும் வருபவை,கருவும் உரியும் வருபவை) கருப்பொருள் திணை உணர உதவும் என்று கூறியது கருப்பொருளின் சிறப்பும், அதன் மூலம் சுற்றுச் சூழல் சிறப்பும் புலனாகும். அது தருக்கரீதியாகச் சிந்தனை அடிப்படை ஆகும். சங்கப் பாடல்களில் எப்படி அமைந்துள்ளது என்று ஆராய வேண்டும். எப்படியிருந்தாலும், பாடல்களில்...
1. முதல் கரு உரி ஆகிய மூன்றும் வருவனவும்
2.முதல், கரு மட்டும் வருவனவும்
3. கரு, உரியும் மட்டும் வருவனவும்
4. உரிப் பொருள் மட்டும் வருவனவும்
என்று நாலு வகை உள்ளதாக இளம்பூரணர் விளக்கம் புலப்படுத்துகிறது. அவைகளில் முதல் மூன்று வகையே சுற்றுச்சூழல் நோக்கில் அமைந்த பாடல்களாகக் கருதவேண்டும். இந்த வகைகளுக்கான சங்க இலக்கிய உதாரணங்களைக் கண்டு அதன் வன்மை மென்னமையும் மதிப்பிட வேண்டுவது ஆய்வாளர் கடமை.
தொகுப்புரை
சமூக இருப்பில் மனித உயிரானது தனது நினைவுகளையும் அனுபவங்களையும் பிறரிடம் பரிமாறிக் கொள்வதில் மொழி அடிப்படையாக விளங்குகிறது.
மொழி இல்லாவிடில் மனித உயிர்கள் இருக்கும் மனித சமுதாயங்கள் இருக்காது வரலாறு இருக்காது. முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற நிகழ்வுகள் அல்லது எதிர்கொண்ட அனுபவங்களின் நினைவாக மொழி இருப்பதனால், வரலாற்றை மனிதன் மீது சுமத்துவதன் மூலம், இடையறாத சமுதாய இயக்கத்தினைச் சாத்தியப்படுத்துகிறது.
இத்தகைய பின்புலத்தில் தமிழ்மொழி, தமிழ் நிலம், சங்க இலக்கியம் போன்ற கருத்தியல்களைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்என்று பனம்பாரனர் வரையறுத்துள்ள நிலப்பரப்பு அரசியல் நோக்கமுடையது. இங்குத் தமிழ் மொழியானது பரந்துபட்ட நிலப்பரப்புடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது; தமிழரின் புழங்கும் வெளி வரையறுக்கப்பட்டுள்ளது.

Monday, August 26, 2019

விருது வழங்கும் விழா


கன்னியகுமரி, தமிழ்நாடு கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக 25.08.2019 அன்று காலை 10.00 மணிக்கு நடந்த விருது வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குநர் பி.சி. அன்பழகன் அவர்களிடம் பேராசிரியர் மாமணி விருதை கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவா அவர்களுக்கு வழங்கிய போது எடுத்த படம்.

Thursday, August 08, 2019

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்


சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
முன்னுரை
காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்த போது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.
தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.
தொல்காப்பியர் கூறும் கதை மரபு
கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,

                            பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

    பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்என்று உரைப்பார்.
சிறுகதைக்கான இலக்கணம்
அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி.
சிறுகதை தோன்றிய சூழல்
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் பரமார்த்த குருவின் கதைஅதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.
தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள்
வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குரிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம். தமிழின் முதல் சிறுகதை படைத்த இவர் தமிழ்ச் சிறுகதை உலகின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது. ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர்.  இவரது குசிகர் குட்டிக்கதைகள்ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில்  கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.
சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது.சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.
மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்
இதழ்களால் வளர்ந்த சிறுகதை
தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம்,சி. சு. செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி,  தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகள்
இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதைப் போலவே சிறுகதை தொகுப்பு முயற்சிகளாலும் அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.
தொழில்நுட்பத்தில் சிறுகதை
இதழ்களால் வளர்ந்த சிறுகதை இணையத்தாலும் வளர்ச்சியினைப் பெற்றது. சிறுகதைக்கெனவே பல இணையதளங்களும் வலைப்பூக்களும் உயிர்ப்பெறுகின்றன. மேலும் அலைபேசியிலும் வாட்பேட், பிரதிலிபி போன்ற செயலிகளும் சிறுகதைகளைப் பதிப்பித்து சிறுகதை தேயாது வளம் பெறும் பங்கினைச் செவ்வனே செய்கின்றன.
முடிவுரை
காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை என தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு  இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம் என்றும் மறக்காது.